கன்னத்தில் காதல் முத்தம் 22
காதல் 22
அன்று மாலை ஆராவுக்கு கைபேசியில் அழைத்த அக்னி, "இன்னைக்கு என்ன ப்ளான் வச்சிருக்க? வீட்ல இழுத்துப் போர்த்திட்டு தூங்கப்போறீயா? இல்ல ஊர் சுத்தப்போறீயா?" என்று கேட்டவனிடம், "தூங்க எல்லாம் டைம் இல்ல தேவ், ஷாப்பிங் போகணும்" என்றாள்.
"ம்ம்ம் சரி, அப்ப ஷாப்பிங் முடிச்சிட்டா சொல்லு. நான் வந்து பிக் பண்ணிக்குறேன்" என்றதும், "ஹைய்யா ஜாலி… எனக்கு டாக்சி காசு மிச்சம்" என்று சொல்ல, "சரியான கஞ்ச பிசாசுடி நீ" என்று சிரித்தபடி அக்னி கைப்பேசியை வைத்தான்.
ஆரா தன் மொத்த 'ஷாப்பிங்கையும்' முடித்துவிட்டு அக்னிக்கு அழைத்து 'புட் கோர்ட்டில்' தான் இருப்பதாக சொல்லிவிட்டு திரும்பியவள், இன்பமாக அதிர்ந்தாள் தன் கல்லூரி தோழிகள் மூவரை பார்த்து. பலநாள் கழித்து தோழிகள் சந்தித்தால் சொல்லவும் வேணுமோ? அனைவரும் சேர்ந்து ஒரே அரட்டை தான்.
அதில் ஒருத்தி, "ஏய் ஆரா கேக்க மறந்துட்டேன்.உன் ஆதிமாமா எப்டி இருக்காரு? பாத்து ரொம்ப நாள் ஆச்சு" என்று ஏக்கப் பெருமூச்சோடு கண்ணடித்து கேட்டவளை பார்த்து முறைத்த ஆரா, "அவருக்கு என்ன நல்லா தான் இருக்காரு. ஒரு வேலையா ஆஸ்திரேலியா போயிருக்காரு. இந்த வீக் எண்ட் சென்னை வருவாரு." என்றாள் இயல்பாக.
"நான் கூட கொஞ்ச நாள் முன்ன அவரை ஒரு மீட்டிங் ஹால்ல பாத்தேன்டி, ஆள் செம்ம சூப்பரா இருந்தாரு…இவ நிச்சயதார்த்தம் அன்னைக்கு பாத்ததைவிட செம்ம ஹாண்ட்சம்மா இருந்தாரு." என்று ஏற்ற இறக்கங்களுடன் பெருமூச்சு விட்டபடி சொல்ல, "ஏய் இன்னும் நீ திருந்தலயா?" என்ற இன்னொருத்தி, ஆராவை பாத்து, "அவளும் திருந்தல, நீயும் மாறல ஆரா… இப்பவும் உன் மாமா பத்தி பேசுறா… நீ அப்டியே கோவப்படாம தான் இருக்க" என்று சொல்ல, "ப்ச் இதுல கோவப்பட என்னடி இருக்கு? நான் அப்ப சொன்னதுதான்.. என் மாமா அழகா இருக்காரு, சோ இவ ஜொல்லு விடுறா. இதுக்கு நான் ஏன் டென்ஷன் ஆகணும்?" என்றவளை நோக்கி அக்னி வந்துகொண்டு இருக்க,
"ஏய்… ஏய் அங்க பாருங்கடி, செம்ம அழகா, மேன்லியா ஒருத்தர் வராரு… பாக்க நம்ம தமிழ் பையன் மாதிரி இருக்கு." என்று ஒருத்தி சொல்ல, "ஆமாடி செம்ம ஹாண்ட்சம் தான். செம்ம ஹைட், அதுக்கேத்த வெய்ட், தாடி, மீசைனு பாக்க சூப்பரா தான் இருக்காரு" என்று அடுத்தவள் சொல்ல, எதேச்சையாக அந்த பக்கம் திரும்பி ஆராவுக்கு, அவர்கள் அக்னியை பற்றிதான் பேசுகிறார்கள் என்று தெரிந்து உள்ளுக்குள் மெல்லிய எரிச்சல்.
"ஏய் வாய மூடுங்கடி, அவரு காதில் கேட்ட என்ன நினைப்பாரு?" என்று தோழிகளை அடக்கியவளுக்கு ஏனோ! அவர்கள் தேவ்வை ஆசையாக பார்ப்பது, அவனை வர்ணிப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.
"ஏய்! சும்மா சைட் தானாடி அடிச்சோம். இது நாங்க எப்பவும் பண்றது தானே?" என்றாள் ஒருத்தி. அது ஆராவுக்கும் புரிந்தது. தோழிகள் எப்போதும் இப்படி பேசிக்கொள்வது வழக்கம் தான். ஆனால், எந்த நிலையிலும் வரம்பு மீறி நடக்க மாட்டார்கள் என்று அவளுக்கும் தெரியும்…
அதனால் தான் அவர்கள் ஆதியை பற்றி பேசும் போது கூட, அதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஆனால், ஏனோ இன்று அவர்கள் அக்னியை பார்ப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. உள்ளுக்குள் "இன்னைக்கின்னு பாத்தா இவங்களை நான் பாக்கணும்? அட்லீஸ்ட் தேவ்வையாது இங்க வரச்சொல்லி இருக்கக்கூடாது" என்ற யோசித்தவளுக்கு அதற்கான காரணம் தான் புரியவில்லை.
அவள் தோழிகளை முறைத்தபடி இருக்க, "ஏய் இப்ப ஏன் நீ எங்களை இப்டி முறைச்சிட்டு இருக்க? நாங்க என்னமோ உன் லவ்வர் இல்ல ஹஸ்பெண்ட்டை சைட் அடிச்ச மாதிரி இல்ல மொறைக்கிற" என்று கேட்கும் போதே அவர்களை நெருங்கி இருந்த அக்னி,
"தியா எல்லாம் வாங்கிட்டியா, போலாமா?" என்று கேட்க, "ம்ம்ம் போலாம் தேவ்" என்றவள் தோழிகளை முறைத்தபடி, "இவங்க என்னோட காலேஜ் ப்ரண்ட்ஸ் தேவ்" என்று அறிமுகம் செய்து வைக்க, அக்னி சிரித்த முகமாக, "ஹாய்" என்றான்.
தோழிகளும், "ஹாய் சார்" என்றவர்கள் ஆராவை கேள்வியாக பார்க்க, "இது என்னோட சைல்ட் வுட் ஃபிரண்ட் தேவ்." என்றவள் அக்னியிடம், "டைம் ஆகுது தேவ் நம்ம கிளம்பலாம்." என்றவள், "பை காய்ஸ்… அப்றமா கால் பண்றேன்…" என்றபடி நகர அக்னியே,
"தியா பிரண்ட்ஸ்னு சொல்ற, நம்ம வேணும்னா அங்களை டிராப் பண்ணிடலாம்" என்றவனை திரும்பிப் பார்த்து முறைத்தவள், "வந்தவங்களுக்கு போகத் தெரியும் தேவ். நீ வா. நமக்கு டைமாச்சு." என்றாள் கடுப்பாக.
அவள் மெதுவாக தான் சொன்னாள். ஆனால், அது அவள் தோழிகள் காதில் தெளிவாக விழ, "இல்ல ப்ரோ…" என்றவள் அந்த "ப்ரோ"வை நன்கு அழுத்தி சொல்லி, "நாங்க ஆல்ரெடி கார் புக் பண்ணிட்டோம். இதோ நாங்களும் கிளம்புறோம்." என்றவர்கள் அக்னி, ஆராவுடன் கார் நிறுத்துமிடம் வந்தனர்.
அக்னி காரை எடுத்துவர சென்றுவிட, தோழிகள் மூவரும் ஆராவையே அழுத்தமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.
"ஆரா, நீ அவரை லவ் பண்றீயா?" என்று ஒருத்தி நேராகவே கேட்க, ஆரா அதிர்ந்து அவளைப் பார்த்தவள், "ஏய்! என்ன பேசற நீ? தேவ் என்னோட சின்ன வயசு ஃப்ரண்ட்… அவ்ளோதான், வேற எங்களுக்குள்ள நீ சொல்ற மாதிரி ல்வு கிவ்வு எதுவும் இல்ல" என்றவளை உற்று பார்த்த தோழி,
"இதை எங்களுக்கு சொல்றீயா? இல்ல உனக்கு நீயே சொல்லிக்குறீயா ஆரா?" என்று கேட்க, "நீங்க தேலையில்லாம பேசுறீங்க…" என்றாள் கடுப்பாக.
"இல்ல ஆரா… தேர் இஸ் சம்திங் ஸ்பெஷல் பிட்வின் யூ டூ... நாங்க உன்னோட மாமா பத்தி பேசும்போது கோவபபடாம கூலா இருந்த நீ, தேவ் சாரை பத்தி ஒரு வார்த்தை சொன்னதும் கொதிச்சிட்டியே… உன் கண்ணுல அவ்ளோ கோவம்… அவ்ளோ எரிச்சல்...
எப்படா எங்க கண்ணைவிட்டு அவரை தூரம் கூட்டிட்டு போறதுன்னு தவிச்சிட்டு இருந்தியே, அது ஏன் ஆரா? என்ன அர்த்தம் அதுக்கு?" என்று கேட்ட தோழிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றவளுக்கே, அதற்கான பதில் தெரியாத போது அவள் எங்கணம் பதில் சொல்ல முடியும்?
"நீ அவர் மேல ரொம்ப பொசசிவ்வா இருக்கன்னு எங்களுக்கு தோணுது ஆரா. அதான் நீ எங்ககிட்ட மேல அப்டி நடந்திட்டு இருக்க…" என்று சொல்ல, ஆரா 'இல்லை' என்று தலையாட்டியவள், "அப்டி ஒன்னும் இல்லடி" என்றாள் மெல்லிய குரலில்.
"உன் குரலே சொல்லுதுடி நீ எங்களுக்கு பதில் தான் சொல்ற, உண்மையை இல்லன்னு… அஃப்கோர்ஸ் நீ எங்களுக்கு உண்மைய சொல்லவேண்டாம்… எது உண்மைன்னு உனக்கு தெரிஞ்சா போதும்… உன் மனசு சொல்றதை கேளு.
அதுதான் தேவ் பத்திய உன்னோட உண்மையான நிலையை உனக்கு புரியவைக்கும். நாங்க கிளம்புறோம்… பை" என்றவர்கள் காரில் ஏறி செல்லவும், அக்னி காரை எடுத்துக்கொண்டு வரவும் சரியாக இருக்க, ஆரா அமைதியாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அவள் முகம் ஏதோ யோசனையில் இருப்பது புரிந்த அக்னி, "என்னாச்சு தியா? என்ன யோச்சிட்டு இருக்க?" என்று கேட்டவனை திருப்பிக் பார்த்து, "ஒன்னு இல்ல தேவ்" என்றவள், மண்டைக்குள் ஓராயிரம் கேள்விகள் வந்து அவளைக் குழப்பியது. அந்த குழப்பத்திலேயே திரும்பி அவன் முகம் பார்க்க, அவன் கவனம் முழுவதும் சாலை மீதே இருந்தது.
'தேவ் ரொம்ப நார்மலா நல்ல ஃப்ரண்டா தான் என் கூட பழகுறான்.நானும் அவனை அப்டி தான் நினைக்குறேன். தேவ் மனசுல என்மேல அப்டி எந்த அபிப்பிராயமும் இல்ல போல.' என்று அவள் உள்ளம் சொல்ல, 'அப்ப உனக்கு அப்டி ஒரு எண்ணம் இருக்கா?' என்று மூளை கேட்ட கேள்வியில் அதிர்ந்து போனாள் ஆரா.
'ச்சீ அப்டி ஒன்னும் இல்ல, வீ ஆர் ஜஸ்ட் ப்ரண்ட்ஸ் அவ்ளோதான். அந்த லூசுங்க ஏதோ உலறிட்டு போகுதுங்க' என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு, அப்படி நினைத்துக் கொண்டவள், அமைதியாக பயணத்தை தொடர்ந்தாள்.
அவர்கள் பாதி வழி வரும்போதே, மழைப் பொழியத் தொடங்கிவிட்டது.
அக்னி அவள் வீட்டு வாசலில் காரை நிறுத்தியவன், "இறங்காத தியா, வெய்.ட்" என்றபடி காரில் இருந்த குடையை எடுத்துக் கொண்டு தன் பக்க கதவைத் திறந்து வெளியே வந்தவன், அவள் பக்கமிருந்த கதவைத் திறந்து, "ம்ம்ம்… வா தியா." என்றதும் அவனை பார்த்துக் கொண்டே கீழே இறங்கியவளை, அவள் மீது மழைத்துளிகள் படாதபடி உள்ளே அழைத்துச் சென்றவன்,
"தியா டைமாச்சு நீ போய் தூங்கு, நான் மழை நிக்கும்வரை இங்க இருக்கேன்." என்றவனை வேள்வியாக பார்த்தவள், "நீ கார்ல தானா தேவ் போகப்போற? அதுவும் உன் வீடு இங்க இருந்து வெறும் அஞ்சு நிமிஷம் தானா! அதோட மழையும் ஒன்னும் பெருசா இல்லயே…" என்றவள் குறும்பாக சிரித்தபடி,
"என்ன தேவ் உனக்கு மழைனா பயமா?" என்று சொல்லும்போதே பெரிய சத்தத்துடன் பெரிய இடி இடிக்க, ஆரா கண்களை இறுக்கி மூடி, காதுகளை தன் கைகளால் அழுத்தி மூடிக்கொண்டு "அம்மா"என்று அலற, அவளை இழுத்து தன் தோளோடு அணைத்துக் கொண்ட அக்னி,
"எனக்கு ஒன்னும் மழைனா பயம் இல்லடி…உனக்கு தான் இடின்னா பயம்… இடி இடிச்சாலே ஓடிப்போய் பவித்ரா அம்மா புடவை முந்தானைக்குள்ள மூஞ்ச மூடிப்பியே நீ…" என்று கிண்டலாக சொல்ல, ஆரா விரிந்த விழிகளோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், "உனக்கு இன்னும் அது ஞாபகம் இருக்கா தேவ்?" என்று நம்பமுடியாமல் கேட்க,
"உன் சம்பந்தப்பட்ட எந்த விஷயமும் எனக்கு மறக்காது தியா… எனக்கு இருக்க பெஸ்ட் மெமரீஸ்ல என் அம்மா, அப்பாக்கு அடுத்து இருக்க ஒரே ஆள் நீதான், உன் சம்பந்தப்பட்ட ஒன்னை நான் எப்டி மறப்பேன்னு நீ நினைச்ச?" என்று கேட்டவனை அதிர்ந்து பார்த்த பெண்ணிற்குள், ஏதோ ஒன்று உருகத் தொடங்கியது.
மணி காலை நான்கை கடந்திருக்க, ஆரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். மழை முழுவதும் நின்றிருக்க, போர்வையை அவள் கழுத்து வரை முழுதாக போர்த்திவிட்டவன், ஒருவேளை இடி இடித்தால் அவளுக்கு கேட்காத படி 'இயர் பிளக்ஸ்' ஐ அவள் காதில் பொருத்திவிட்டு, கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான் அக்னி.
காலை கண்விழித்த ஆரா, அக்னியை தேட, அங்கு அவன் எழுதி வைத்துச் சென்றிருந்த குறிப்பு தான் அவளுக்கு கிடைத்தது.
"குட் மார்னிங் தியா… காஃபி பிளாஸ்க் ல இருக்கு, பிரேக் பாஸ்ட் மைக்ரோவேவ்ல இருக்கு. கிளைமேட் சரியில்ல, சோ நீ டூவிலர்ல ஆஃபிஸ் போகாத. நான் கார் அனுப்புறேன். மதியம் புஃட் நான் ஆர்டர் பண்ணிடுறேன். ஒழுங்கா டைம்க்கு சாப்டு. டேக் கேர்" என்று எழுதி இருந்ததை பார்த்தவளுக்கு அவளை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது.
அவள் தந்தை, ஆதி, பல்லவி என்று அனைவரும் அவள் மீது அன்பு வைத்திருக்கிறார்கள் தான். ஆனால், ஏனோ அக்னியிடம் கிடைக்கும் இந்த அன்பும், பரிவும் அவளை ஆழமாக சாய்த்தது. தனக்கு என்ன வேண்டுமென்று தானே அறியாத ஒன்றை சரியாக புரிந்துக் கொண்டு அவளை குழந்தைப்போல் தாங்குபவனை அவளுக்கு ரொம்பவும் அளவுக்கு அதிகமாக தான் பிடித்துப் போனது.
அவள் தாய்க்கு அடுத்து இப்படி அவளுக்கு பிடித்ததை அவள் மனதறிந்து செய்வது ஷிவானி ஒருத்தி மட்டும் தான். அவளுக்கு அடுத்து இப்போது அக்னி. 'எப்படி அவனுக்கு தன்னை இந்த அளவு புரிந்திருக்கிறது?' என்று யோசித்தவளுக்கு அதற்கான பதில் வரவில்லை, மாறாக கண்ணீர் தான் வந்தது, நாளுக்கு நாள் அவள் மனதில் அவள் தேவ்வின் ஆதிக்கம் அதிகமாவதை உணர்ந்து.
அதற்கு அடுத்தடுத்து வந்த நாட்களில் தேவ்வை பார்க்கும் தியாவின் பார்வை சற்று மாறியிருக்க, அது தேவ்வுக்கும் புரிந்தது. அவளின் ஒவ்வொரு அசைவையும் நன்கு புரிந்து வைத்திருப்பவனுக்கு இது தெரியாதா என்ன?
அன்று வெள்ளிக்கிழமை தந்தையைப் பார்க்கவும், ஆஸ்திரேலியாவில் இருந்து ஏதோ வேலையாக சென்னை வந்திருந்த ஆதியைப் பாரக்கவும், தியா அன்று மாலைப் போல் சென்னைக்கு கிளம்புவதாக இருந்தாள்.
அக்னியே அவளை விமான நிலையத்தில் இறக்கிவிடுவதாக சொல்ல, மதியம் போல் தன் வேலைகளை முடித்துக்கொண்டு அக்னி வீட்டிற்கு வந்துவிட்டாள் தியா.
"ஏய்! தியா என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட? உனக்கு நைட் தான பிளைட்?" என்று கேட்டவனை இடுப்பில் கை வைத்து முறைத்தவள், "ஏன்டி இவ்ளோ சீக்கிரம் வந்தேன்னு கேக்குறீயா? நான் வேணும்னா போய்டட்டுமா?" என்று கேட்க,
"ஏய் பச்ச மொளகா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டி… இது உன் வீடு நீ எப்ப வேணும்னாலும் வரலாம் உன்னை யாரும் கேக்கமுடியாது…" என்றவன், "மதியம் லன்ச் சாப்டியா?" என்று கேட்டான்.
"இல்ல தேவ். வேலையை முடிக்கவே டைம் ரெண்டாகிடுச்சு. அதுக்கு பிறகு போனா அந்த ஆபீஸ் கேன்டீன்ல வறண்டு போனா பிட்சாவும் பர்கர்ரும் தான் இருக்கும்... அதை திங்குறதுக்கு நான் பட்டினியாவே இருப்பேன்." என்றவளை பார்த்து சிரித்த தேவ், " நான் இருக்கும்போது என் பச்ச மொளகா ஏன் பட்டினியா இருக்கனும்? வா நான் எதாவது செஞ்சு தரேன்" என்று அவளை உணவு மேசையில் உட்கார வைத்து விட்டு சமையல் அறைக்குள் சென்றான்.
அக்னி வேக வேகமாக சமைக்க தொடங்க, "எங்க தேவ் அந்த குக் அக்காவை காணோம்?" என்று அங்கிருந்த படி கேட்டாள் ஆரா.
"அவங்க பொண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கு தியா, அவங்க லீவ்ல போயிருக்காங்க."
"ஹைய்! பாப்பா பொறந்திடுச்சா? என்ன பாப்பா?" என்று ஆர்வமாக கேட்க, வெளியே வந்து அவள் கன்னத்தை கிள்ளியவன், "உன்னை மாதிரி ஒரு ஏஞ்சல் பிறந்திருக்கு" என்றவன், "சாப்பாடு ரெடி, இரு எடுத்திட்டு வரேன்" என்றவன் அனைத்தயும் எடுத்து வந்து மேஜையில் வைத்தான்.
அவளுக்கு பரிமாறி விட்டு தனக்கும் வைத்துக்கொண்டு அவன் அமர, "நீயும் மதியம் சாப்டலயா தேவ்" என்று கேட்க, "ம்ம்ம் ஆமா… காலையில ஒரு மீட்டிங் இருந்துது. அதை முடிச்சிட்டு இப்ப தான் கெஞ்ச நேரம் முன்ன வந்தேன். ரொம்ப டயர்டா இருந்தது. எதுவும் செய்ய முடியல.. ஆர்டர் பண்ணலாம்னு யோச்சிட்டு இருந்தேன். கரெக்ட் நீ வந்த... இதோ உனக்கு குக் பண்ற சாக்கில் எனக்கும் லஞ்ச் ரெடி." என்றவனை வாஞ்சையாக பார்த்த ஆரா,
"ஏன்டா நீ டயர்டா இருக்குன்னு சொல்லி இருந்தா நான் குக் பண்ணி இருப்பேன்ல?" என்று அக்கறையுடன் கேட்க, "இட்ஸ் ஓகே மா… நீயும் தான வேலையில் இருந்து வந்திருக்க, உனக்கும் டயர்டு இருக்கும்ல?" என்றவன் "ம்ம்ம் சீக்கிரம் சாப்டு தியா, சூடு ஆறிடப்போகுது" என்றபடி தன் உணவை உண்ணத் தொடங்க, ஆராவும் ஒரு வாய் சாப்பட்டை எடுத்து வாயில் வைத்தவள் கண்கள், அதன் சுவையில் விரித்துக் கொண்டது.
"தேவ் இது செம்ம டேஸ்ட்டா இருக்குடா… சான்சே இல்ல, அப்டியே எங்கம்மா பண்ற மாதிரி இருக்கு…" என்று ஆச்சரியமாக கேட்டவளை நிமிர்ந்து பார்த்து சிரித்தவன், "புடிச்சிருக்குல்ல, நல்லா சாப்டு" என்றான்.
"தேவ் நீயா இத செஞ்ச, சத்தியமா என்னால நம்ப முடியலடா… உண்மையை சொல்லு, வெளிய ஆர்டர் பண்ணி வாங்கிட்டு, நீயே செஞ்ச மாதிரி ஆக்ட் தான பண்ற?" என்றவளை நிமிரந்து பார்த்தவன், "இல்ல தியா, இதை நான் தான் செஞ்சேன். ப்ராமிஸ்" என்றான்.
"எப்டி தேவ்?" என்று ஆச்சரியமாக கேட்டவளை பார்த்து சிரித்தபடி குனிந்து தட்டைப் பார்த்தவன்,"உனக்காக கத்துக்கிட்டேன்" என்று சொல்ல, ஆராவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
எவ்வளவு பெரிய பிசினஸ் மேன், கோடிகளில் புரள்பவன்... இன்றைய தேதியில் தொழிலில் உயர்ந்து நிற்கும் பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரன். அவன் கண் பார்க்கும் வேலையை கணநேரத்தில் செய்து முடிக்க ஆயிரம் ஆயிரம் பேர் காத்திருக்கும் போது, தனக்காக தன்னைப் போன்ற சாதாரண பெண்ணுக்காக சமைக்க கற்றுக்கொண்டவனை பார்த்தவளுக்கு, அவன் நேசத்தில் நெஞ்சடைத்து போனது.