கன்னத்தில் காதல் முத்தம் 24

 காதல் 24


மாலை வரை ஆராவும் ஆதியும் வெளியே சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்து இரவு உணவை முடித்துவிட்டு ஆரா எழுந்துக் கொள்ள, அந்த நேரம் அவள் கைப்பேசி சத்தம் போட்டது.


அந்த குறுஞ்செய்தி வந்த சத்தத்தைக் கேட்டவுடன் அவளுக்கு தெரிந்துவிட்டது அது யாரிடம் இருந்து வந்திருக்கும் என்று. அந்த சத்தம் கேட்டவுடன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றவள் அக்னி அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை படித்துவிட்டு அப்படியே வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அந்த செய்தியில், "உனக்கு எத்தனை தடவை செல்றது தியா, கார்ல ஏறும் போது துப்பட்டாவை எடுத்துவிட்டு கார் கதவை மூடுன்னு." என்ற வரிகளை படித்தவளுக்கு இன்று தன் துப்பட்டா காரின் கதவுக்கு வெளியே மாட்டி இருக்க, மோட்டர் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு ஆசாமி அவளை எச்சரிக்கை செய்தது, அவளுக்கு ஞாபகம் வந்த அடுத்த நொடி அவளுக்கு புரிந்துவிட்டது. அந்த ஹெல்மெட் ஆசாமி அவளின் தேவ் தான் என்று.


அவள் சென்ற அடுத்த ஒருமணி நேரம் கூட அவளை விட்டு பிரிந்திருக்க முடியாமல் தன் பைக்கை எடுத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டு இருந்தான் அக்னி.


ஆராத்யா இழுத்து மூச்சு விட்டவள், "வேணாம் தேவ். இவ்ளோ எல்லாம் என்மேல அன்பு காட்டாதடா..‌. என்னால அந்த கனத்தை தாங்க முடியல…" என்றவள் கண்கள் கலங்க, தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.


"அங்க தனியா யார்கிட்ட பேசிட்டு இருக்க ஆரா?" என்ற ஆதியின் குரல் கேட்டு அவசரமாக தன் கண்ணீரை துடைத்துவிட்டு, "சும்மா தான் மாமா… நிலாவை பாத்துட்டு இருந்தேன்" என்றாள் தன் மனதை மறைத்தபடி‌.


அவள் முகத்தை உற்றுப் பார்த்த ஆதி, "ஆர் யூ ஆல்ரைட்?" என்று கேட்க, "ஏன் மாமா அப்டி கேக்குறீங்க? நான் நல்லாத் தான் இருக்கேன்" என்றவளை பார்த்து இடவலமாக இல்லை என்று தலையாட்டியவன், "நானும் காலையில் இருந்து உன்னை பாத்துட்டு தான் இருக்கேன் ஆரா.


உன் முகமே சரியில்ல. ஏதோ மாதிரி இருக்கு," என்றவன், "பவித்ரா மாமி ஞாபகம் வந்திடுச்சா?" என்று கேட்டவுடன் அவள் கண்கள் தாயின் நினைவில் சட்டென கலங்கிவிட, "நெனச்சேன், காலையில் கோயில்ல அந்த அம்மாகிட்ட பேசும்போதே எனக்கு தோணுச்சு, உனக்கு உங்க அம்மா நெனப்பு வந்திடுச்சின்னு" என்றவன் அவள் கண்ணீரை துடைத்துவிட, அவள் அழுகை நின்ற பாடில்லை.


"ப்ச்ச ஆரா ப்ளீஸ்மா அழத… காம்டவுன்" என்றபடி அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்து, அவள் முகத்தை தன் நெஞ்சில் அழுத்திக் கொண்டான் ஆதிஷ்வரன்.


தாயின் நினைவில் முழ்கி இருந்த ஆராவுக்கு அவன் அவளை அணைத்திருப்பது வித்தியாசமாக தெரியவில்லை. சின்ன வயதில் இருந்து இதேபோல் அவள் கலங்கி நிற்கும் வேளையில் அவன் அன்போடு அவளை அணைத்து சமாதானம் செய்வது அவ்வப்போது அவர்கள் இடையில் நடக்கும் நிகழ்வு தான். அதனால் தான் அவளுக்கு அவன் அணைப்பில் எந்தவித உறுத்தலும் இல்லாமல் இருந்தது.


சில நிமிடங்கள் கழித்து, தன்னை அணைத்திருந்தவனின் அணைப்பு மெல்ல மெல்ல இறுகுவதை உணர்ந்தவள், நிமிர்ந்து ஆதி முகத்தைப் பார்க்க, அவன் பார்வையில் ஏதோ ஒரு மாற்றம்.


அவள் புருவம் சுருக்கி குழப்பமாக அவன் முகத்தை பார்த்தபடி இருக்க, மெல்ல அவள் முகம் நோக்கி குனிந்த ஆதி, அவள் இதழில் தன் இதழ்களை பதிக்க பார்த்த நேரம், ஆராவின் கண்களுக்கு அங்கு ஆதியின் முகம் மறைந்து தேவ்வின் முகம் அவள் கண்முன் தோன்ற, அதிர்ச்சியில் அவள் விழி இமைகள் விரிந்துக் கொள்ள, சட்டென பதறியடித்து ஆதியை பிடித்து தள்ளிவிட்டு பின்னால் நகர்ந்தவள், கண்கள் நடந்த நிகழ்வை நினைத்து, தன்னை நினைத்து அருவருத்தவள் கன்னத்தை, அவள் கண்ணீர் துளிகள் தொட்டு இறங்க,


அவள் கண்ணீரை பார்த்து வருந்திய ஆதி, "சாரி சாரி ஆரா… ஐம் ரியலி சாரி… ஏதோ ஒரு நினைப்புல… ஐம் சாரி…" என்று தன் தலைமுடியை அழுத்திகோதி தன்னை நிலைப்படுத்த முயல, ஆரா தன் அழுகையை இதழ்களை கடித்து கட்டுப்படுத்தியவள், அங்கிருந்து ஓடி தன் அறைக்குச் சென்று கதவை தாழிட்டவளுக்கு சத்தம் போட்டு கதறி அழவேண்டும் போல் இருந்தது. ஆனால், அவள் சத்தம் கேட்டு யாரும் வந்துவிடுவார்களே என்ற பயத்தில் அதைக்கூட அவளால் செய்யமுடியாமல் தவித்து போனாள்.


அந்த நேரம் மீண்டும் அவள் அலைப்பேசி சத்தம் போட, அவள் கண்கள் அலைபேசியின் திரையை பார்க்க, அது தேவ்வின் குறுஞ்செய்தி.


"தியா நீ நல்லா தானா இருக்க? ஒன்னும் பிரச்சினை இல்லயே? நீ நல்லா இருக்க தான? எனக்கு இங்க ஒரு மாதிரி இருக்குடி. உனக்கு ஒன்னும் இல்லயே?" என்று அடுத்தடுத்து செய்திகள் வந்துகொண்டே இருக்க, அவள் பதில் சொல்லும் வரை அவனுக்கு நிம்மதி இல்லை என்று உணர்ந்தவள், "ஐம் ஓகே" என்று பதில் அனுப்பிவிட்டு ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்தவள் வாயை கைகளால் இறுக்கி மூடி, சத்தம் வெளியில் கேட்காதபடி கதறி துடித்தாள்.


அவளின் மன உணர்வுகள் அவள் கட்டுப்பாட்டில் இல்லை என்பது அவளுக்கு தெளிவாக புரிந்தது. இது போல் அவள் தடுமாறும் நேரங்களில் அவளை சரியாக வழிநடத்த அவள் தாய் பவித்ராவுக்கு அடுத்து, அதை செய்யக்கூடிய ஒரே ஆள் ஷிவானி ஒருத்தி மட்டுமே.


ஆனால், இப்போது அவளின் உதவியையும் கோர முடியாத நிலை ஆராத்யாவுக்கு. அவளுக்கு தெரியும் ஷிவானி தன் மீது எவ்வளவு நேசம் வைத்திருக்கிறாளோ, அதே அளவுக்கு அவள் ஆதியை நேசிக்கிறாள் என்று. அப்படி இருக்க, ஆரா மனம் இப்படி தடுமாறுவது அவளுக்கு தெரிந்தால் கண்டிப்பா தன் மீது கோபம் கொள்வாள். அதனாலேயே அவளுக்கு ஷிவானியை தொடர்புகொள்ள பயமாக இருந்தது.


எங்கு தேவ் பற்றி அவளிடம் சொன்னால, அது அவள் மூலம் ஆதிக்கு தெரிந்துவிடுமோ என்று இன்றுவரை அவள் தேவ்வை சந்தித்த விஷயத்தை கூட அவளிடம் இருந்து மறைத்து வைத்திருக்கிறாள். அப்படி இருக்க இப்போது ஷிவானியிடம் பேச முடியாது என்று அவளுக்கு புரிந்தாலும் அவள் மனம் அதிகம் தேடியது என்னவோ அவள் ஷிவியைத்தான்.


அதற்கு மேல் அங்கிருக்க முடியாது என்று உணர்ந்த ஆரா, அடுத்த நாள் காலையே முக்கிய வேலை இருப்பதாக சொல்லிவிட்டு பெங்களூர் கிளம்பிவிட்டாள். அவள் புறப்பட்ட அடுத்த வினாடி அக்னியும் சென்னை விட்டு கிளம்பி இருந்தான்.


அன்று மாலை அவள் வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டு, ஒருவேளை தேவ் தான் வந்திருக்கிறானோ என்று நினைத்தவளுக்கு ஏனோ அவனை நேருக்கு நேர் பார்க்கும் சக்தி இல்லாமல் போக, "தேவ் ப்ளீஸ் இது நீயா இருக்கக்கூடாது" என்று முணுமுணுத்தபடியே, மெல்ல நடந்து வந்து கதவைதிறந்தவளை அடுத்த நொடி இறுக்கிக் கட்டிக்கொண்டு, "சர்ப்ரைஸ்" என்று கத்தினாள் ஷிவானி.


தன் தோழி தன் கண்முன்னே நிற்பது கனவா? நிஜமா? என்று திகைத்து நின்றவள் கன்னத்தை பிடித்து கிள்ளிய ஷிவானி, "நம்புடி நீ ஒன்னும் கனவு காணல… நான் நிஜமா உன் முன்னாடி தான் நிக்கிறேன்" என்றவள் முகத்தை மெல்ல தொட்டுப் பாரத்த ஆரா, அவள் நிஜமாக தன்முன் இருக்கிறாள் என்று உணர்ந்து "ஷிவி" என்று கத்தியபடி அவளை இறுக்கி கட்டிபிடித்தவள், இத்தனை நாள் தனக்குள் அடைத்து வைத்த மொத்த பாரத்தையும் தன் தோழியின் தோளின் மீது இறக்கி வைத்தாள்.


அரைமணி நேரமாக ஏன் அழுகிறாள்? எதற்கு அழுகிறாள்? என்ற காரணம் தெரியாவிட்டாலும், அவளை அணைத்து ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தாள் ஷிவானி.


தோழியின் அரவணைப்பில் மெல்ல மெல்ல அவள் கதறல் குறைந்து விசும்பலுக்கு வர, அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள் ஆரா.


மெல்ல அவள் தலையை வருடிவிட்ட ஷிவானி, "ம்ம்ம் இப்ப சொல்லு ஆரா? என்ன குழப்பம் உனக்கு? எந்த விஷயம் உன்னை இப்டி போட்டு படுத்துது." என்ற ஷிவானியை தலை திருப்பிப் பார்த்த ஆரா, "உனக்கு என்னை ரொம்ப புடிக்குமா? இல்ல ஆதிமாமாவை புடிக்குமா?" என்று சிறுபிள்ளை போல் கேட்டவளை, புருவம் சுருக்கி பார்த்தவளுக்கு புரிந்துவிட்டது.


அவள் நினைத்ததை விட பிரச்சனை பெரிதென்று. அதுவும் அதில் சம்பந்தப்பட்டது ஆதி என்றும் புரிந்தது. இல்லையென்றால் அவள் இப்போது இந்த உரிமை பிரச்சனையை எடுத்திருக்கமாட்டாள் என்று ஷிவானிக்கு புரிய, முதல் முறை அவள் உள்ளம் நடுங்கியது.


ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப் படுத்திக் கொண்டு, "எனக்கு நீங்க ரெண்டு பேரும் முக்கியம் தான்டா… பட், ஆதியவிட எனக்கு என் ஆராவை தான் ரொம்ப புடிக்கும்" என்று சொல்ல, சட்டென அவள் மடியில் இருந்து எழுந்தவள், "அப்ப நான் உனக்கு புடிக்காத எதையும் செஞ்சா நீ என்மேல கோவப்பட மாட்டா தான… இல்ல இல்ல நீ கோவப்பட்டா கூட பரவாயில்ல… வேணும்னா என்னை நாலு அடிகூட அடிச்சிக்க… ஆனா, என்னை வெறுத்திட மாட்ட இல்ல" என்றவள் வார்த்தையில் ஷிவானிக்கு இன்னும் பதட்டம் கூடியது.


"இங்க பார் ஆரா… என்ன நடந்தாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன். யார்கிட்டயும் உன்னை விட்டுகொடுக்கவும் மாட்டேன். விட்டு போகவும் மாட்டேன். நீ தைரியமா உன் மனசுல இருக்குறத சொல்லு" என்று சொல்ல, மெல்ல அவள் முகம் பார்த்த ஆரா, "அதுக்கு முன்ன நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும்" என்றாள்.


"ம்ம்ம் கேளு ஆரா"


"காதல் பத்தி நீ என்ன நினைக்கிற ஷிவி?" என்றவளை பார்த்த ஷிவானியின் இதழோரம் லேசாக வளைய, " என்னை பொருத்தவரை காதல் ஒரு பைத்தியக்காரத்தனம்" என்றாள் விரக்தியாக.


"அப்ப உனக்கு காதல் மேல நம்பிக்கை இல்லயா ஷிவி"


"நம்பிக்கையா…" என்று சத்தமாக சிரித்த ஷிவானி, "அதெல்லாம் காதல் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு தான். அது எதுக்கு இப்ப? நீ கேக்க வந்ததை கேளு." என்றாள்.


"சப்போஸ் ஒருத்தருக்கு நிச்சயம் பண்ண பொண்ணையோ, பையனையோ காதலிச்சா அது தப்பா ஷிவி? இல்ல நிச்சயம் ஆனா, பிறகு வேற ஒருத்தங்க மேல லவ் வந்தா அது நம்ம அவங்களுக்கு பண்ற துரோகமா?" என்றவளை கண்கள் இடுக்கிப் பார்த்த ஷிவானி, "இதை நீ யாருக்காக கேக்குற ஆரா?" என்றாள் அழுத்தக் குரலில்.


"நீ முதல்ல பதில் சொல்லு ஷிவி" என்று அவள் பிடிவாதம் பிடிக்க, பெருமூச்சு விட்ட ஷிவானி, "லவ் எப்ப? யார் மேல வரும்னு நம்மால முன்னையே பிரடிக்ட் பண்ண முடியாது ஆரா… இன்பேக்ட் பல வருஷம் நம்ம கூடவே இந்தவங்க மேல வராத காதல், சிலநாள் பாத்து பழகினவாங்க மேல வந்திடும். அதே மாதிரி நம்மகூட இருக்கும் போது உணராத காதல் அவங்க நம்மை விட்டு தள்ளிப் போன பிறகு நமக்கு புரியும்.


இன்ஷாட் காதல் வர பெருசா ஒன்னும் தேவையில்ல ஆரா…. அக்கறையான ஒரு வார்த்தை, அன்பான ஒரு பார்வை, காமம் இல்லாத ஒரு ஸ்பரிசம், மனச அசைச்சு பார்க்கும் ஒரு பிரிவு, இதுல எதாவது ஒன்னு போதும், நீ சொன்ன அந்த காதல் வர" என்றவளை ஆச்சரியமாக பார்த்தாள் ஆராத்யா.


தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தோழியின் தாடையை பிடித்து அவள் கண்களை ஆழ்ந்து பார்த்த ஷிவானி, "இப்ப சொல்லு ஆரா, நீ யாரை லவ் பண்ற?" என்று கேட்க, ஆராவுக்கு தூக்கிவாரிப் போட்டது.


"ஷிவி" என்று அவள் அதிர,


"என்னடா நம்ம சொல்லாம இவளுக்கு எப்டி தெரிஞ்சிதுன்னு அதிர்ச்சியா?. ம்ஹும்… நீ சொல்லிதான் உன் மனசு எனக்கு புரியணும்னா, அப்றம் இத்தனை வருஷம் நம்ம பழகினதுக்கு அர்த்தமே இல்லடி… சொல்லு என்ன ஆச்சு? யாரை லவ் பண்ற?" என்றது தான் உடனே ஆரா, ஆதிமுதல் அந்தம் வரை அணைத்தையும் சொல்லி முடிக்க, ஷிவானிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதே சமயம் ஆரா செய்ததை அவளால் ஏற்கவும் முடியவில்லை.


ஒரு பெருமூச்சு விட்டபடி, "இப்ப என்ன பண்ணப்போற ஆரா?" என்று கேட்டாள் பொறுமையை இழுத்து பிடித்து.


"எனக்கு தெரியல ஷிவி, தேவ் என்கிட்ட லவ் சொல்லும்போது கூட, நான் என்னால என் ஆதிமாமாக்கு துரோகம் பண்ண முடியாதுன்னு தான்டி சொன்னேன். ஆனா, நேத்து… நேத்து நைட் மாமா… மாமா என்னை" என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை, அழுகை தான் வந்தது.


"ம்ம்ம்… அப்ப உன்னால ஈஸ்வருக்கு துரோகம் பண்ண முடியாதுன்னு தான் அந்த தேவ் கேட்டதுக்கு முடியாதுனு சொன்ன..‌. அப்ப நீயும் அவனை காதலிக்கிற அப்டி தான?... என்று நெற்றியில் விரல் வைத்து நீவியவள், "இதுக்கு ஒரே வழி தான் இருக்கு ஆரா, நீ ஈஸ்வர் கிட்ட பேசு… உன்னோட காதலை சொல்லி புரியவை. ஈஸ்வருக்கு எப்பவும் உன் சந்தோஷம் தான் முக்கியம். அவன் புரிஞ்சிக்குவான். "என்றவளை நிமிர்ந்து பார்த்த ஆரா, "மாமாவை பேஸ் பண்ற தைரியம் எனக்கில்லடி. சத்தியமா என்னால முடியாது" என்றாள் தவிப்பாக.


"அப்ப என்ன, நீ உன் ஆதிமாமாவையே கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்றீயா?" என்று கோவமாக கேட்க, அவளை அடிபட்ட பார்வை பார்த்தவள், இல்லை என்று தலையாட்டி,


"ஒருவேளை நீ சொன்ன மாதிரி நான் ஆதிமாமாவை கட்டிக்கிட்ட பிறகு, அவர் என்னை நெருங்கும் போது நேத்து நடந்த மாதிரி எனக்கு தேவ் முகம் ஞாபகம் வந்திடுச்சின்னா… சத்தியமா சொல்றேன் ஷிவி, அதுக்கு பிறகு ஒரு செகண்ட் கூட நான் உயிரோட இருக்க மாட்டேன்" என்று கதற…


"புரியுதில்ல..‌. உன்னால அந்த தேவ் தவிர வேற யார் கூடவும் வாழ முடியாதுடி‌.‌.. ஆதி உன்னை கிஸ் பண்ண வந்ததயே உன்னால தாங்க முடியல… அப்டி இருக்க நீ அவனை கல்யாணம் பண்ணா அது அசிங்கம்டி… இது நீ ஈஸ்வருக்கு பண்ற பெரிய துரோகம். சோ ஒழுங்கா அப்பாகிட்டயும் ஈஸ்டர் கிட்டயும் உன் காதலை சொல்லிடு. முதல்ல கத்துவாங்க தான். பட், போகப்போக புரிஞ்சிக்குவாங்க" என்ற தோழியின் வார்த்தையில் அவளுக்கு இருந்த உறுத்தலும் பயமும் கொஞ்ச கொஞ்சமாக விலகி ஒரு தெளிவுக்கு வந்தவள்,


"நீ… நீ எனக்காக ஆதிமாமாகிட்ட பேசுவியா ஷிவி" என்றவளுக்கு தெரியும் ஷிவானி அப்படி செய்யமாட்டாள் என்று.


ஆராவை உற்று பார்த்தபடி இடவலமாக 'இல்லை' என்று தலையாட்டி ஷிவானி மனதில், 'உன்னை ஆதி விரும்புறான் உனக்கு தெரியாம இருக்கலாம் ஆரா. ஆனா, எனக்கு தெரியுமே... அப்டி இருக்க, இந்த விஷயம் அவனை முழுசா உடைச்சி நொறுக்கிடும்னு தெரிஞ்சு எப்டிடி நான் அவன்கிட்ட பேசுவேன்?' என்று நினைத்தவள்,


"இல்ல ஆரா… அது என்னால முடியாது. ஏற்கனவே நீ சொல்லப்போறதை கேட்டாலே அவன் உடஞ்சு போய்டுவான், இதுல இந்த விஷயமெல்லாம் எனக்கு தெரியும்னு தெரிஞ்சா கண்டிப்பா அவனால அதை தாங்க முடியாது… நீயும் அவன்கிட்ட இதெல்லாம் எனக்கு தெரியும்னு சொல்லாத..‌. நல்லவேளை உனக்கு சர்ப்ரைஸ் குடுக்க, நான் நேர இங்க வந்துட்டேன். நான் இந்தியா வந்த விஷயம் ஈஸ்வருக்கு தெரியாது. இனிமேலும் தெரியவேணாம்." என்றவளை கண்ணீரோடு பார்த்த ஆரா,


"நீ என்னை வெறுத்திட மாட்ட இல்ல ஷிவி" என்று மீண்டும் கேட்க, 'இல்லை' என்று தலையாட்டியபடி, அவள் தலையை வருடி, மெல்ல சிரித்தவள், "இத பத்தி இனி பேச வேணாம் ஆரா… அடுத்து நடக்கப்போறது பத்தி மட்டும் யோசி. உன்னை மாதிரியே ஈஸ்வருக்கும் அவனை, அவனுக்காகவே விரும்பும் பொண்ணு கிடைக்கணும். அதுக்கான வழியை பார்ப்போம்" என்று அவள் மனதில் இருந்து சொல்ல, ஆரா அவளை பக்கவாட்டில் திரும்பி பார்த்து, "அது ஏன் நீயா இருக்கக் கூடாது ஷிவி?" என்று தயங்கித் தயங்கி கேட்டாள்.


அவள் கேள்வியில் சத்தம் போட்டு சிரித்த ஷிவானி, "குழந்தை மாதிரி பேசாத ஆரா… நான் எப்டி ஈஸ்வர கல்யாணம் பண்ணிக்க முடியும்?" என்று கேட்க… "ஏன் முடியாது. மாமா உனக்கு நல்ல ஃப்ரெண்ட் தான?" என்று பதிலுக்கு பதில் கேட்டாள் ஆராத்யா.


"ஓஓஓ அப்டியா!!! அப்ப சரி வா நீயும் நானும் கல்யாணம் பண்ணலாம்?" என்றதும் அவளை அதிர்ந்து பார்த்த ஆரா, "ஏய் லூசு என்ன உளறுற நீ… நம்ம எப்டி கல்யாணம் பண்ண முடியும்.?"


"அதோ மாதிரி தான் ஆரா… நட்புக்கு ஆம்பளா, பொம்பளைன்ற பேதம் இல்ல… எப்டி நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்க முடியாதோ, அதே மாதிரி நானும் ஈஸ்வரை கல்யாணம் பண்ணிக்க முடியாது. அவன் எனக்கு ஃப்ரெண்ட்… ஃபரெண்டு மட்டும் தான். எப்டி எந்த சூழ்நிலையிலும் உனக்கு துணையா நான் இருப்பேனோ, அப்டி தான் ஈஸ்வருக்கு ஒன்னுன்னாலும் நான் துணையா நிப்பேன். ஆனா, வாழ்க்கை துணையா இல்ல." என்றாள் தெளிவாக.