கன்னத்தில் காதல் முத்தம் 18
காதல் 18
நிச்சயதார்த்தம் நல்லமுறையில் முடிந்து ஆதி, ஆராவின் வாழ்க்கை இயல்புக்கு திரும்பி இருந்தது.
அடுத்த நாள் ஆதியிடம் வந்த ஆரா, "மாமா நேத்து எங்கேஜ்மென்ட்டுக்கு வந்திருந்த என்னோட சில ப்ரண்ட்ஸ் எல்லாம் என்ன சொன்னாங்க தெரியுமா?" என்று அவள் இழுக்க, "என்ன சொன்னாங்க ஆரா?" என்று கேட்டான் ஆதி.
"சொன்னா நீங்க கோச்சிக்க கூடாது சரியா… இத நானா சொல்லல அவங்கதான் சொன்னாங்க…" என்று முகத்தை பாவம்போல் வைத்து அவள் சொல்ல, ஆதி அழகாய் சிரித்தவன், "நீ இன்னும் மேட்டர் என்னன்னு சொல்லல ஆரா." என்றான்.
"அது மாமா என் ப்ரண்ட்ஸ் சொல்றாங்க நீ… நீங்க என்னை லவ் பண்றீங்கன்னு…" என்று வார்த்தைகளை மென்று தின்றபடி அவள் சொல்லிவிட்டு ஆதி முகத்தைப் பார்க்க, அவன் அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
அதில் தான் சொன்னதைக் கேட்டு அவனுக்கு கோவம் வந்துவிட்டது போல என்று பயந்த ஆரா, "அய்யோ நான் அப்டி சொல்லல மாமா. அந்த லூசுங்க தான் அப்டி சொல்லுச்சு. நான் தெளிவா அதுங்ககிட்ட சொல்லிட்டேன், இது ப்யூர்லி அரேஞ்ச்டு மேரேஜ் தான்...
லவ்வு ஜவ்வு ஒன்னும் இல்ல… எங்க மாமா ஒன்னும் அப்டி இல்லன்னு சொல்லிட்டேன் மாமா. நீங்க கோச்சிக்காதீங்க" என்று படபடவென்று பொரிந்தவள், "ஆரா… ஆரா" என்று ஆதி அழைத்ததை கூட காதில் வாங்காமல் அங்கிருந்து ஓடியே விட்டாள்.
இங்கு ஆதியோ, "இவளுக்கு என்னைப் புடிச்சிருக்கு ஆனா, என் மனசு தான் புரிய மாட்டேங்குது… ம்ம்ம்… அவளை சொல்லியும் தப்பில்ல... வீட்ல எல்லாரும் அவளை பொத்தி பொத்தி குழந்தை மாதிரி வளர்த்திட்டோம். அதான் இப்டி இருக்கா... இப்ப தான் ஸ்கூல் முடிச்சு காலேஜ்ல சேந்திருக்கா, என்ன பெருசா விவரம் தெரிஞ்சிட போகுது? நாமும் இப்ப நம்ம லவ்வை சொல்லி அவளை டைவர்ட் பண்ண வேணாம். அவ நல்லபடி படிச்சு முடிக்கட்டும். அதுவரை அவளை லவ் அது…இதுன்னு சலனப்படுத்த வேணாம்" என்று நினைத்தவன் அதன் பின் அவளுக்கு அன்பு மாமனாக மட்டும் இருந்தேனே தவிர, ஆசை காதலனாக மாற எந்த முயற்சியும் செய்யவில்லை.
வழக்கம் போல் ஆதி அவன் தொழிலை கவனிக்க, ஆரா தன் படிப்பைத் தொடர, ஷிவானி தன் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றுவிட்டாள்.
பொதுவாக ஆரா அவள் தோழிகளுடன் தான் கல்லூரிக்குச் செல்வாள். ஒரு சிலநேரங்களில் ஆதிக்கு நேரம் இருந்தால் அவளை கல்லூரியில் இருந்து அழைத்து வருவான். அப்படிப்பட்ட நாட்களில் ஆராவை அவள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் சென்று வருவது அவனுக்கு வழக்கம்.
அதன்படி அன்று மாலைப் பொழுதில் ஆராவை கல்லூரியில் இருந்து அழைத்துக் கொண்டு, அவளுக்கு மிகவும் பிடித்த இடமான கடற்கரைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கிருந்த குழந்தைகளோடு குழந்தையாக ஆரா தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்க அவளை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.
'இன்னும் சின்ன குழந்தையாவே தான் இருக்கா, இவ காலேஜ் படிக்கிறான்னு சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க…' என்று நினைத்து சிரித்தவனுக்கு, 'மாமி சொன்னாங்கன்னு அவசரப்பட்டு ரொம்ப சீக்கிரம் நிச்சயத்தை வச்சிட்டோமா? இவ இன்னும் உலகமே தெரியாம இருக்காளே.!" என்று யோசித்தவனுக்கு, 'அவளுக்கு தான் நான் இருக்கேனே, அப்றம் என்ன? என் ஆராவை என் கண்ணுக்குள் வச்சு நான் பாத்துக்குவேன்' என்ற நினைத்தவன் இதழ்களில் மெல்லிய புன்னகை.
குழந்தைகளுடன் விளையாடி விட்டு முழுவதும் கடல் தண்ணீரில் நனைந்து வந்த ஆராவைப் பார்த்து முறைத்த ஆதி, "என்ன ஆரா இது? நீ என்ன இன்னும் சின்ன குழந்தையா? இப்டி முழுக்க நனஞ்சு வந்திருக்கீயே? பாரு டிரஸ் உடம்போட ஒட்டிட்டு இருக்கு? பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?" என்று பேசியபடியே காரில் இருந்த துண்டு எடுத்து அவளிடம் கொடுத்தவன்,
"இத மேல போத்திக்கோ" என்று கொடுக்க, அவள் அவனிடம் இருந்து வாங்கிய துண்டைக் கொண்டு முதலில் தன் தலையை துவட்டிவிட, "ஆரா..." என்று பல்லைக் கடித்தபடி, "தலையை அப்றம் துடைக்கலாம். முதல்ல டவலை மேல போட்டுக்கிட்டு காருக்குள்ள உக்காரு" என்று அதட்ட, ஆரா மூக்கை சுருக்கி அவனை முறைத்தபடியே காரில் ஏறி உட்காந்தாள்.
"ம்ம்ம் இப்ப தலையை துவட்டு…" என்றவன் கையில் டவலைக் கொடுத்தவள், "கை வலிக்கிது மாமா, கொஞ்சம் தொடச்சிவிடு…" என்று சொல்ல,
"ஆரா என்ன இது புதுப் பழக்கம்? ஒழுங்கா நீயே நல்லா தலையை துவட்டிவிடு, சளிபுடிக்க போகுது" என்றவன் காரை எடுக்க, ஆரா அவனுக்கு உதட்டை சுழித்து ஒழுங்கு காட்டிவிட்டு தலையை துடைத்தவள், "பசிக்கிது மாமா" என்றாள் மெல்லிய குரலில்.
அவ்வளவு நேரம் அவள் மேல் கடுப்பாக இருந்த ஆதி, அவள் 'பசி' என்றதும் உருகிவிட்டான்.
கடற்கரை அருகில் இருந்த ஒரு சின்ன ரெஸ்டாரன்ட்டுக்கு அவளை அழைத்துச் சென்றான் ஆதி.
ஆரா அவளுக்கு இஷ்டமான பூரியை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஆதியின் பார்வை அங்கிருந்த அழகிய பெண்ணின் மீது படிந்தது. 'இந்த பொண்ணு போட்டிருக்க டிரஸ் ரொம்ப நல்லா இருக்கே, இதே மாதிரி ஆராக்கும் வாங்கனும். இவளுக்கு இந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்கும்' என்று அவன் யோசிக்க, அவன் பார்வை போன திசையை பார்த்த ஆரா, "என்ன மாமா அந்த பொண்ணு செம்ம அழகா இருக்கா இல்ல?" என்று நமுட்டு சிரிப்புடன் கேட்க, அவள் கேட்டதின் அர்த்தம் புரியாத ஆதி, "ம்ம்ம்… ஆரா, அந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு." என்றான் இயல்பாக.
"டிரஸ் மட்டும் தானா மாமா?" என்று அவள் இழுக்க, சட்டென அவளைத் நிமிர்ந்து பார்த்தவன், "நீ என்ன கேக்குறன்னு எனக்கு புரியல ஆரா…" என்றான் குழப்பமாக.
"அது ஒன்னும் இல்ல மாமா, டிரஸ் மட்டும் தான் புடிச்சிருக்கா? இல்ல அந்த பொண்ணையும் பிடிச்சிருக்கான்னு கேட்டேன்." என்று கண்ணடித்தவள், "ஒருவேளை டிரஸ்ஸோட அந்த பொண்ணையும் உங்களுக்கு பிடிச்சிருந்தா சொல்லுங்க மாமா, அப்பாகிட்ட சொல்லி நம்ம நிச்சயதார்த்தத்தை கேன்சல் பண்ண சொல்லிட்டு, அந்த பொண்ணையே உங்களுக்கு மேரேஜ் பண்ணி வச்சிடலாம்" என்று எப்போதும் ஆதியுடன் விளையாட்டாக வம்பிழுக்கும் நினைவில் பேசியவள், "ஷட் அப் ஆரா…" என்ற ஆதியின் கர்ஜனைக் குரலில் பயந்தேவிட்டாள்.
"மா... மாமா… நான் சும்மா விளையாட்டுக்கு" என்று ஏதோ சொல்ல வாய் திறந்தவள், ஆத்திரத்தில் சிவந்துவிட்ட அவன் கண்களை கண்டு முதுகுத்தண்டு சில்லிட்டுபோக வாயை மூடிக்கொண்டாள்.
"உனக்கு அறிவே இல்லயா ஆரா? எதுல விளையாடுறதுன்னு ஒரு லிமிட் இல்ல… நீ பேசினதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சி தான் சொன்னீயா நீ? ரொம்ப கேஷுவல்ல எங்கேஜ்மென்ட்ட பிரேக் பண்ணலாம்னு சொல்ற?" என்றவன் கண்கள் கலங்கிவிட,
"வலிக்குதுடி… இப்டி பேசாத, உன்னைவிட்டு வேற யார்கிட்டேயும் என் மனசு போகாதுடி, அதை புரிஞ்சிக்க முதல்ல. அதேமாதிரி நீயும் என்னை விட்டு போக முடியாது. உனக்கு நான் தான்… எனக்கு நீ தான், நீ மட்டும் தான்..." என்றவன் குரல் கரகரக்க, ஆராவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
'என்ன இது? நான் விளையாடினேன்னு தெரிஞ்சும் மாமா இவ்ளோ வருத்தப்படுறாரு… இவரு நம்ம மேல ரொம்ப பொசசிவ்வா இருக்காரு போல தோணுதே! ஒருவேளை எங்கேஜ்மென்ட் அன்னைக்கு நம்ம பிரண்ட்ஸ் சொன்னது நிஜமா இருக்குமா? மாமா என்னை லவ் பண்றாரா! அதான் நான் அப்டி சொன்னதும் கோவம் வந்திடுச்சோ? என் மரமண்டைக்கு தான் எதுவும் புரியலயா? ஆனா, மாமா என்னை லவ் பண்ணி இருந்தா அத என்கிட்ட சொல்லி இருப்பாரே? அவர் தான் எல்லா விஷயங்களையும் என்கிட்ட ஷேர் பண்ணுவாரே! அப்ப இது மட்டும் ஏன் சொல்லாம இருக்கணும்!" என்று அவள் குட்டி மூளை அதிவேகமாக யோசிக்க ஆதியோ,
"இனிமே இப்டி அறிவுகெட்ட தானாம பேசாத ஆரா. இத மாமா, மாமி இல்ல என் அம்மா கேட்டா எவ்ளோ கஷ்டப்பட்டுவாங்க தெரியுமா? எவ்ளோ ஆச ஆசையா நமக்கு கல்யாணம் பேசி, கிராண்ட்டா எங்கேஜ்மென்ட் எல்லாம் செஞ்சாங்க? இப்ப நீ இப்டி பேசினா அவங்களுக்கு எப்டி இருக்கும் யோசிச்சு பாரு. உனக்கு நான் எனக்கு நீன்னு முடிவு பண்ணி, நம்ம கல்யாணம் நடக்கும் நாளை ஆசையா எதிர்பார்த்துட்டு இருக்காங்க அவங்க. நீ என்னடான்னா கண்டபடி பேசிட்டு இருக்க… நீ இன்னும் சின்ன குழந்தை இல்ல, ட்ரை டூ குரோ-அப் ஆரா…" என்று தன் கைக்கு கிடைத்த நல்லா வாய்ப்பை காற்றில் கரைத்துவிட்டு அவன் செல்ல,
'ம்ம்ம்… அதான பாத்தேன். மாமா வீட்ல இருக்கவங்களுக்காக யோசிச்சு தான் என்னை திட்டி இருக்காரு... ஒரு நிமிஷம் நான் கூட மாமா நம்மள லவ் பண்ணி, நம்ம தான் அதை புரிஞ்சிக்கலயோன்னு நினைச்சிட்டேன்.
அப்டி இருந்த மாமா கண்டிப்பா என்கிட்ட சொல்லி இருப்பாரு. என் ஆதிமாமா எதையும் என்கிட்ட மறைக்கமாட்டாரு, எல்லாம் என்னோட அந்த இம்சை பிரண்ட்ஸ்னால வர்றது. என்னையும் அதுங்க மாதிரி யோசிக்க வச்சிடுச்சிங்க' என்று மனதில் புலம்பியபடியே ஆதி பின்னால் சென்றாள்.
நாட்கள் வேகமாக நகர ஆராவின் இளங்கலைப் படிப்பு முடிந்திருந்த சமயம் அது. ஆரா படிப்பு முடிந்த உடனேயே, அவர்கள் திருமணத்திற்கு நாள் பார்க்க சென்ற பெரியவர்கள் ஜோசியர் சொன்னதைக் கேட்டு வாடிய முகத்துடன் வீடு திரும்பி இருந்தனர்.
"என்னாச்சு ஏன் மூணு பேர் முகமும் ஒரு மாதிரி இருக்கு?" என்ற ஆதியை நிமிர்ந்து பார்த்த பல்லவி, "ஆரா படிப்பு தான் முடிஞ்சு பேச்சே, உடனே உங்க கல்யாணத்தை நடத்தலாம்னு முடிவு பண்ணி நாள் குறிக்க ஜோசியர் கிட்ட போனோம் ஆதி… ஆனா, அவரு" என்று பல்லவி இழுக்க,
"என்னம்மா என்ன சொன்னாரு? ஏன் நாள் ரொம்ப பக்கத்துல குறிச்சு குடுத்துட்டாரா... மேரேஜ் அரேஞ்ச்மென்ட் எல்லாம் எப்டி சீக்கிரம் பண்றதுன்னு யோசிக்குறீங்களா?" என்று கேட்க, பல்லவி விரக்தியாக இழுத்து பெருமூச்சு விட்டபடி,
"அவரு நாள் குறிக்கவே இல்ல ஆதி. இப்ப உங்க ரெண்டு பேருக்கும் நேரம் சரியில்லையாம். இந்த கல்யாணதை இப்ப செய்றது நல்லது இல்ல. கொஞ்ச நாள் பொறுங்கன்னு சொல்லிடாரு.
அதுகூட பரவாயில்ல ஆதி ஆனா, கடைசியில் அண்ணிய பாத்து எல்லாம் விதிப்படி தான் நடக்கும் எதையும் ஏத்துக்க தயார இருங்கன்னு சொன்னாரு டா… அதுதான் மனசுக்கு உறுத்தலாவே இருக்கு" என்ற பல்லவியின் குரலில் கலக்கம்.
"ம்மா… ரொம்ப யோசிக்காதீங்க… எல்லாம் நம்ம மனசை பொருத்தது தான். நம்ம நல்லது நினைச்சா நல்லதுதான் நடக்கும். நமக்கு வசதியான ஒரு நாள்ல கல்யாணத்தை வைப்போம். ரொம்ப யோசிக்காதீங்க" என்றவன்,
"மாமா, மாமி இது உங்களுக்கும் தான்… எனக்கும் ஆராவுக்கும் இன்னும் ஒரு மாசத்தில கல்யாணம் நடக்கும். இதை யாராலும் மாத்த முடியாது." என்றவன் வார்த்தைகளை கேட்டு விதியோடு சேர்ந்து எமனும் சிரித்தான்.
அன்று ஆதிக்கு அதிக வேலை இல்லாத காரணத்தால், ஆராவை வெளியே அழைத்து வந்திருந்தான்.
வழக்கம் போல் ஆராவுக்கு பிடித்த கடற்கரையில் ஆதி வண்டியை நிறுத்த, துள்ளிக்குதித்து காரில் இருந்து இறங்கியவள், கடல் நீரில் தன் கால்களை நனைத்த நொடி ஏற்பட்ட அந்த சில்லென்ற உணர்வை கண்மூடி ரசித்துக் கொண்டு இருந்தாள்.
அதைப் பார்த்த ஆதிக்கு இப்பயெல்லாம் ஆராவுக்கு வயசுக்கு தகுந்த முதிர்ச்சி வந்திருக்குது. முன்ன மாதிரி எல்லாம் சின்னபுள்ள தானா எதுவும் பண்றது இல்ல... அதேசமயம் குறும்புக்கும் கொறச்சல் இல்ல…" என்று யோசித்தவனுக்கு அப்போது தான் அந்த எண்ணம் தோன்றியது.
'ஆராவும் படிப்பை முடிச்சிட்டா, இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் வேற நடக்கப் போகுது. பேசாம இப்பவே நம்ம லவ்வை இவகிட்ட சொல்லிடலாமா? இப்ப விட்டா அப்றம் கல்யாணம் பண்ணிட்டு தான் என் காதலை சொல்ற மாதிரி ஆகிடும். அவளும் நல்ல மூட்ல இருக்கா. இப்போவே சொல்லிடலாம்.' என்று நினைத்த நொடி, "மாமா நீயும் வா…" என்று ஆரா கத்தி அழைக்க, அவளைப் பார்த்து சிரித்தபடியே, "ஆரா போதும் இங்க வா." என்று இவன் கூப்பிட மனசே இல்லாமல் கடல் நீரில் இருந்து வெளியே வந்து,
"என்ன மாமா எவ்ளோ நாள் கழிச்சு வந்திருக்கோம்? இன்னும் கொஞ்ச நேரம் தண்ணில இருக்கவிடலாம் இல்ல…" என்று கொஞ்சலாக கேட்க, அவளின் கொஞ்சல் மொழியில் மயங்கி நின்ற ஆதி,
"உனக்கு என்னை புடிக்குமா ஆரா?" என்று கேட்க, சட்டென திரும்பி அவன் முகத்தை பார்த்து ஒரு கேவலமான பார்வை பார்த்த ஆரா, "மாமா என்னாச்சு மாமா உனக்கு? கடல் காத்துல மண்டையில இருக்கிற மூளை எதுவும் உருகிபோச்சு என்ன?" என்று கிண்டலாக கேட்க, அவனை செல்லமாக முறைத்தவன், "கேட்டதுக்கு பதில் சொல்லு." என்றான்.
"பதில் தெரிஞ்சிட்டே கேள்வி கேட்ட நான் என்ன மாமா சொல்றது. எனக்கு உன்னை என் அப்பா, அம்மா அளவு புடிக்கும்… சொல்லப் போனா நீ எனக்கு இன்னொரு அப்பா மாதிரி மாமா." என்றதும் ஆதிக்கு மனமெல்லாம் நிறைந்து விட்டது.
தன்னை தன்னவள் இதைவிட பெருமைபடுத்த முடியாது என்று நினைத்தவனுக்கு உள்ளுக்குள் அத்தனை கர்வமாக இருந்தது. காதலை சொல்ல அவளை அழைத்தவன், அவள் மனதில் அவனுக்கான இடம் எவ்வளவு உயர்ந்தது என்று தெரிந்து மகிழ்ச்சியில் திளைத்து நின்ற நொடி அவன் அலைப்பேசி அடிக்க, அதை எடுத்து பார்த்தான்.
பல்லவி தான் அழைத்திருந்தார், அழைப்பை ஏற்று காதில் வைத்த ஆதி, அதில் வந்து செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றவன் பார்வை, அங்கு சிரித்த முகமாக இருந்த ஆராவின் மீது விழுந்தது. ஆதிக்கு தெரிந்த செய்தி ஆராவுக்கு தெரிந்தால் இதுவே ஆராவின் கடைசி சிரிப்பாக இருக்கும்.