கன்னத்தில் காதல் முத்தம் 17

 காதல் 17


சில வருடங்களுக்கு முன்,


அந்த திருமண மண்டபம் முழு அலங்காரத்தில் ஜொலிக்க, மண்டபம் முழுவதும் கூடி இருந்த சொந்த பந்தங்கள் அனைவரும் மேடையில் நின்றிருந்த ஆதிஷ்வரன், ஆராத்யாவின் ஜோடிப் பொருத்தத்தைப் பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தார்கள்.


"என்ன பல்லவி பையன் நிச்சயதார்த்தத்தையே கல்யாணம் மாதிரி இவ்ளோ விமரிசையா பண்றீயே? அப்ப கல்யாணம் எப்டி இருக்கும்?" என்று வியப்பாக ஒருத்தி கேட்க, பல்லவி கர்வமாக சிரித்தவர்,


"எல்லாம் எம்புள்ள ஏற்பாடு தான்… உங்களுக்கு தான் தெரியுமேக்கா அவனுக்கு ஆருன்னா உயிரு. அதான் எல்லாம் அவளுக்கு புடிச்ச மாதிரி செய்யனும்னு எல்லாத்தையும் பாத்து பாத்து செஞ்சான்." என்று பெருமையாக சொல்ல,


"ரொம்ப சந்தோஷம் பல்லவி. நம்ம கண்ணு முன்னாடி நம்ம புள்ளைங்க சந்தோஷமா வாழ்றதை பாக்குறதை விட நமக்கு வேற என்ன சந்தோஷம் இருந்திட போகுது சொல்லு?" என்றவர், "சரி கல்யாணம் எப்ப வைக்கலாம்னு இருக்க?" என்று கேட்க,


"அது இப்போதைக்கு இல்லக்கா… ஆதி முடிவாக சொல்லிட்டான், ஆரு படிப்பு முடிஞ்ச அப்றம் தான் கல்யாணம்னு… இந்த நிச்சயம் கூட இப்ப வேணாம், அவ சின்ன பொண்ணுன்னு தான் சொன்னான்." என்றார் அவர்.


"ஏன் பல்லவி? ஏன் தம்பி அப்டி சொல்லுச்சு?" என்றவரை பார்த்து, "எல்லாம் ஆருக்காக தான் அக்கா. அவ இப்ப தான் காலேஜ்ல சேர்ந்திருக்கா,‌ அதுக்குள்ள இப்ப எதுக்கு இதெல்லாம்னு‌ தான் அவன் மறுத்தான். ஆனா, ஏன் தெரியல பவித்ரா அண்ணி தான் கல்யாணம் வேணும்னா அவ படிப்பு முடிஞ்சதும் பண்ணிக்கலாம்,


இப்ப சும்மா வீட்டோட நிச்சயதார்த்தம் வைக்கலாம் சொன்னாங்க, சரி பண்றது பண்றோம் நல்லா சிறப்பா செய்யலாம்னு தான் இந்த ஏற்பாடு." என்றவர் அங்கிருந்து சென்றார்.


பால்வண்ண நிறத்தில் இருந்த சட்டைக்கு மேல், ஒயின் நிற கோட்டும், அதே நிறத்தில் கால்சராயும் உடுத்தி இருந்த ஆதி அருகில், உடல் முழுவதும் வெள்ளி சரிகையால் இழைக்கப்பட்ட அழகிய சில்வர் நிற பட்டுப்புடவையில், சிரித்த முகத்துடன் சிம்பிளான வைர நகையில், கழுத்தில் உறுத்திக் கொண்டிருந்த மல்லிகை பூ மாலையை, மருதாணியில் சிவந்திருந்த கைகளால் அவள் அடிக்கடி சரிசெய்வதை கண்கொட்டாமல் கண்டு ரசித்துக்கொண்டு இருந்த ஆதியின் விழிகளில் அத்தனை காதல். அவளின் ஒவ்வொரு அசைவையும் அணுஅணுவாக மெய்மறந்து ரசித்துக்கொண்டு இருந்தான் அவன்.


பதின்ம வயதில் அவள் மீதிருந்த அன்பு ஈர்ப்பாக மாறியிருந்த வேளை, ஆரா வாழ்வில் நுழைந்தான் அக்னி. அவனோடு அவள் பேசுவதை, பழகுவதை,‌ சேர்ந்து சிரிப்பதை ஆதியால் இயல்பாக ஏற்கமுடியாது போனது அவனுக்கே வியப்பு தான்.


அதனால் தான் அவளை அக்னியுடன் பேசக்கூடாது என்று பலமுறை ஆராவுடன் சண்டையும் போட்டிருக்கிறான் அவன். அவளின் சிரிப்பும் அழுகையும் தனக்கு மட்டுமே உரிமையானது, அவளின் எல்லாமுமாக தான் மட்டுமே இருக்கவேண்டும் என்ற உணர்வு அவனுக்குள் அழுத்தமாக எழ, அதில் உணர்ந்து கொண்டான் அவனுக்கு ஆரா மேல் இருப்பது வெறும் ஈர்ப்பு அல்ல உயிர் காதல் என்று.


அவன் காதலை உணர்ந்த தருணத்தில் இருந்து அவளை நெஞ்சில் சுகமாக, சுமக்க ஆரம்பித்தவன் ஏனோ அவன் காதலை அதற்கு உரியவளிடம் மட்டும் சொல்லாமல் இழுத்தடித்தான்.


சிறுவயதில் முடிவான உறவு இது. அவளுக்கும் தன்னை பிடிக்கும், தன்னை மட்டும் தான் பிடிக்கும் என்று தெரிந்த பிறகு, இதில் தனியாக காதலை சொல்ல என்ன இருக்கிறது? என்று அவளிடம் சொல்லாமலேயே, அவளுக்கும் சேர்ந்து இவன் ஒருவனே காதல் செய்தான்.


இன்று அந்த காதலுக்கு ஒரு அங்கீகாரமாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கிறது. இனி தன் வாழ்வில் எந்த குறையும் இல்லை என்ற நிம்மதியை உடைத்து, அவனுக்கு உரியவளை அதிரடியாக தூக்கிச் செல்ல எதிர்காலத்தில் ஒருவன் வருவான் என்பது பாவம் ஆதிக்கு அப்போது தெரியவில்லை.


நிச்சயதார்த்தம் நல்லபடியா நடந்து கொண்டிருக்க, ஷிவானி தான் ஆராவுடனேயே இருந்து அவளை கவனித்துக் கொண்டாள்.


"ஈஸ்வர் இந்த இந்த ஜூஸை குடி, பாக்கவே ரொம்ப டையர்ட்ட தெரியுற" என்று கண்ணாடி டம்ளரை அவன் முன் நீட்ட, "முதல்ல ஆராக்கு குடு ஷிவானி, அவதான் பாவம்" என்று சொல்ல, ஷிவானி இடுப்பில் கை வைத்து அவனை செல்லமாக முறைத்தவள்,‌


"கொஞ்சம் அப்டிக்கா திரும்பி உன்னோட வருங்காலத்தை கொஞ்சம் பாரு…" என்று நக்கலாகச் சொல்ல,‌ திரும்பி பார்த்த ஆதிக்கு இதழ்களில் மெல்லிய புன்னகை.


"ரெண்டு ஜூஸ் முடிஞ்சு இப்ப மூணாவது ஓடிட்டு இருக்கு" என்று கேலியாக சொல்ல, "ப்ச்ச் பாவம் ஷிவானி அவ சின்ன பொண்ணு… ரொம்ப நேரமா நிக்குறா, அவளுக்கு எனர்ஜி வேணும் இல்ல?" என்று அவளுக்காக வக்காலத்து வாங்க, "பேய் கூட கூட சேரலாம்டா… ஆனா இந்த 90's கிட்ஸ் பசங்க கூட மட்டும் சேரவே கூடாதுப்பா…


கல்யாணம்னா போதும் உடனே போண்டா டீக்கு (பொண்டாட்டி) சொம்பு தூக்க ஆரம்பிச்சிடுறீங்க... இதுல நீ சினியர் வேற… பல வருஷம் முன்னையே சொம்பை தூக்கிட்ட" என்றவள் சிரித்துக்கொண்டே அங்கிருந்த செல்ல, ஆதிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.


கொஞ்ச நேரம் கழித்து நிச்சயதார்த்தப் புடவையை கட்டிக்கொண்டு வரச் சொல்லி, ஆராத்யா கையில் புடவையை கொடுக்க, அவளும் தன் தோழிகளுடன் மணமகள் அறைக்கு சென்றாள்.


"ஆரா நீ செம்ம லக்கீடி, உங்க மாமா பாக்க செம்ம ஹேண்ட்சமா இருக்காரு… நம்ம ப்ரண்ட்ஸ் எல்லாரும் வைச்ச கண்ணு வாங்காம அவரையே தான் உத்து உத்து பாத்திட்டு இருந்தாங்க தெரியுமா? நான் உட்பட…" என்று கண்ணடித்தபடி சொல்ல ஆராவோ, "போங்கடி உங்களுக்கு வேற வேலை இல்லை…" என்றவள் ஷிவானி உதவியோடு புடவையை கட்டிக்கொண்டு இருந்தாள்.


"ஏன்டி ஆரா நாங்க உங்க மாமாவை சைட் அடிப்சோம்னு சொல்றோம். உனக்கு கொஞ்சம் கூட கோவம் வர்லியா?" என்று கேட்டாள் ஒருத்தி.


"இதுல கோவம் வர என்னடி இருக்கு… என்னோட மாமா பார்க்க அழகா, ஹாண்ட்சமா இருக்காரு, சோ நீங்க சைட் அடிக்குறீங்க… இதுல என்ன இருக்கு?" என்று கேட்ட ஆராத்யாவை யோசனையாக பார்த்தாள் ஷிவானி.


"ம்ம் அது சரி… நீ மட்டும் இல்லடி, உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க அவரும் லக்கீ தான், உன்னை ப்ரண்ட்டா அடைந்த நாங்களும் லக்கீ தான்" என்று விஷமமாக கண்ணடிக்க, "ஏய்… என்ன இருந்தாலும் அவரு நம்ம ஆராவை கட்டிக்கிட்டு, நமக்கு பிற்காலத்தில் அண்ணா முறையில் வரப்போறவரு… உன் ஜொள்ளை கொஞ்சம் கன்ரோல் பண்ணு" என்று அடுத்தவள் சொல்ல அங்கு சிரிப்பலை பரவியது.


அந்த நேரம், "ஆனாலும் நீ சொன்னதும் உண்மை தான்டி. இவ உண்மையில் லக்கீ தான். லவ் பண்ணவரையே கட்டிக்கப்போறா, அதுவும் எந்த பிரச்சனையும் இல்லாம…" என்றவள், "பட், கூடவே கொஞ்சம் அன்லக்கீயும் தான், இல்லாட்டி கல்யாணத்தை இவ படிப்பு முடியும் வரை தள்ளி வச்சிருப்பாங்களா?" என்று ஒருத்தி கிண்டலடிக்க,


"அதுவும் நல்லதுக்கு தான்டி… அதுவரைக்கும் ஆரா ஆசை தீர அவ மாமாவை லவ் பண்ணட்டும். அப்றம் கல்யாணம் பண்ணிக்கலாம்.‌ இதுவும் ஒரு மாதிரி கிக்கா தான் இருக்கும்" என்ற‌ தோழி தலையில் நங்கென்று கொட்டினாள் ஆராத்யா.


"சும்மா வாய்க்கு வந்ததை உளறிட்டு இருக்காதீங்கடி…‌ இது ஒன்னும் லவ் மேரேஜ் இல்ல. இது ப்யூர்லி அரேஞ்ச்டு மேரேஜ் தான். அப்பா மாமாவை கட்டிக்க சொல்லி சொன்னாரு.


எனக்கும் மாமாவை புடிச்சிருந்துது. அவருக்கும் என்னை ரொம்ப புடிக்கும். சோ ரெண்டு பேரும் ஓகே சொல்லிட்டோம். பெரியவங்க மேரேஜ் பண்ண முடிவெடுத்தாங்க, அவ்ளோதான்… மத்தபடி நீங்க சொல்ற மாதிரி என் மாமா ஒன்னும் லவ்வு… அது… இதுன்னு அலையுற ஆள் இல்லை., தெரிஞ்சிக்க…" என்றவளின் வார்த்தைகள் ஷிவானியை புருவம் சுருக்க வைத்தது.


இவர்கள் பேச்சுக்கு இடையில், ஆரா புடவைக் கட்டி தயாராகி இருக்க, அவளை மணமேடைக்கு அழைத்து வந்த ஷிவானி முகம் ஏதோ யோசனையில் இருக்க ஆதி, மெல்லிய குரலில், "என்னாச்சு ஷிவானி? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?" என்று கேட்க, அவனைச் பொய்யாக முறைத்தவள், "ம்ம்ம் இப்ப கேளுடா நல்லவனே… எங்கேஜ்மென்ட்… எங்கேஜ்மென்ட்னு சொல்லி ஒரு வாரம் நீயும் அவளும் கதற கதற ஷாப்பிங், பியூட்டி பார்லர், டிசைனர் வீடுன்னு என்னை விரட்டி விரட்டி வேல வேலையா வாங்கி என்னை தூங்கவிடாம பண்ணிட்டு… இப்ப ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி… ஏன் மூஞ்சு டல்லடிக்குதுன்னா கேக்குற நீ? நீங்க பண்ண இம்சைக்கு பின்ன மூஞ்சு என்ன நல்ல பளபளன்னு டால்லடிக்குமாக்கும்? மூஞ்சிய பாரு… மாப்பிள்ளைனு பாக்குறேன் இல்ல, கொடுக்கும் ஜூஸ்ல பேதி மாத்திரையை கலந்து குடுத்துடுவேன் பாத்துக்க…" என்று அவள் மிரட்ட,


"அய்யோ ஷிவி..‌.அப்ப எனக்கும் மாத்திரை இருக்கா?" என்று ஆரா அப்பாவி போல் கேட்க,


"ச்சீ… ச்சீ… நீ என்னோட செல்ல ஆராவாச்சே, உனக்கெல்லாம் அப்டி செய்யமாட்டேன்டா செல்லம்." என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ளி முத்தம் வைக்க, ஆதி இருவரையும் தீயாக முறைத்தவன், "ஓய் அவதான் செல்லம் வெல்லம்னா அப்ப நான் யாரு? அப்ப நானெல்லாம் ஆரோ தானா!" என்று அவன் பாவமாக கேட்க,


"இதுல கேக்க என்ன மாமா இருக்கு… என் ஷிவிக்கு எப்பவும் நான் தான் ரொம்ப இம்போர்ட்டண்ட், அவளுக்கு மட்டும் இல்ல… என்னோட செல்ல மாமாவுக்கு கூட நான் தான் ஃபர்ஸ்ட்… மத்ததெல்லாம் நெக்ஸ்ட் தான்." என்று பெருமையாக சொன்னவளை ஆதி காதலாகப் பார்க்க, ஷிவானி கடுப்பாக பார்த்தாள்.


"இந்த மரமண்டைக்கு இதெல்லாம் புரியுது… ஆனா, ஈஸ்வர் இவளை லவ் பண்றது மட்டும் புரியமாட்டேங்குது. இவளை தவிர மத்த எல்லாருக்கும் அவன் கண்ணுல இவ மேல வச்சிருக்க காதல் அப்பட்டமா தெரியுது…


இந்த அரைவேக்காடுக்கு மட்டும் அது பாசமா மட்டும் தான் தெரியுது… என்ன கொடுமை சரவணன் இது?" என்று தலையில் அடித்துக் கொண்டவளுக்கு புரிந்தது ஒன்று தான்.


சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்ததால் ஆராவுக்கு ஆதி மேல 'ஸ்பெஷல் ஃபீலிங்' என்னும் தனிபட்ட உணர்வுகளோ, அடுத்தவர் அவனை ரசிக்கும் போது இயல்பாக ஏற்படும் 'பொசசிவ்னஸ்' எனும் எந்த உணர்வும் ஏற்படவில்லை என்பது தான்.


அனைத்து நிகழ்வுகளும் அனைவரின் மனதிற்கு நிறைவாக முடிய, ஒவ்வொருவராய் மண்டபத்தை விட்டுக் கிளப்பிக்கொண்டு இருந்தனர்.


மணமகள் அறையில் ஆரா அலங்காரங்களை கலைந்துகொண்டு இருக்க, ஷிவானி ஆதி அறையை நோக்கிச் சென்றாள்.


அங்கு அப்போது தான் உடையை மாற்றியிருந்த ஆதி, "என்ன ஷிவானி எதுவும் வேணுமா?" என்றவன் முன் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தபடி, "நீ ஆராவை லவ் பண்ற விஷயத்தை, இன்னும் நீ அவகிட்ட சொல்லலயா ஈஸ்வர்?" என்று கேட்க, ஆதி அதிர்ந்து விழிவிரிய அவளைப் பார்த்தவன்,


"ஏய்… நான் ஆராவை லவ் பண்ற மேட்டர் உனக்கு எப்டி தெரியும்? நான் இன்னும் ஆராகிட்ட கூட இதே சொல்லலியே?" என்க,


"ம்க்கும்… நீ சொல்லித்தான் தெரியனுமாக்கும்… அதான் நீ அவளை பாக்கும் போதெல்லாம் உன் மூஞ்சில பல்ப் எரியுதே… அந்த ரியாக்ஷன் ஒன்னு போதாது நான் கண்டுபடிக்க? இதுக்கெல்லாம் என்ன சிபிஐ யா வருவாங்க…" என்றவளின் வார்த்தையில் ஆதியின் முகத்தில் லேசாக வெட்கம் எட்டிப்பார்த்தது.


ஒரு நிமிடம் இமைக்க மறந்து ஆதியின் முகத்தை ரசித்து பார்த்தவள், "டேய் சான்சே இல்ல… வெட்கப்படும் போது செம்ம க்யூட்டா இருக்க," என்று அவன் கன்னத்தை ஆசையாக கிள்ளினாள்.


"ஏய் ஷிவா என்ன பண்ற நீ? வலிக்குது விடு" என்று கத்தியவன், காதைப் பிடித்து திருகியபடி, "முதல்ல ஆரா நல்ல மூடுல இருக்கும் போது அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணு ஈஸ்வர். அஃப்கோர்ஸ் யூ காய்ஸ் ஆர் எங்கேஜ்டு…


பட் இருந்தாலும் இதெல்லாம் லைப்ல ரொம்ப முக்கியமான மொமன்ட்… அதெல்லாம் மிஸ் பண்ணாம அனுபவிக்கனும். அப்பத்தான் உங்க பேரன், பேத்திங்க நாளைக்கு பெட் டைம் ஸ்டோரி கேட்டா சொல்ல நல்ல ஸ்கிரிப்ட் இருக்கும்…


சோ அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணு. அவமேல உனக்கு இருக்கிறது வெறும் அன்பு மட்டும் இல்ல. டன் கணக்கா லவ்வும் இருக்குன்னு சொல்லு" என்றவள் கை இன்னும் அவன் காதிலேயே இருக்க,


"ஏய் என்னடி இது விளையாட்டு, விடு என் பையன் காதை" என்ற பல்லவியின் குரலில் சட்டென ஆதி காதில் இருந்து கையை எடுத்தவளை பல்லவி முறைத்துப் பார்க்க, "ஈஸ்வர் மம்மி மொறைக்கிது… மீ எஸ்கேப்" என்றவள் அங்கிருந்து ஓடிவிட,


பல்லவி மகனை முறைத்தவள், "என்ன விளையாட்டு டா இதெல்லாம்… யாரும் பாத்த என்ன நினைப்பாங்க? அவளுக்கு தான் ஆள் வளர்ந்த அளவு அறிவு இல்லாம போச்சு… நீயாவது அவளை விலக்கி இருக்க வேணாம்." என்று கத்த,


"ம்மா அவ குழந்தை மாதிரிமா… கொஞ்சம் சேட்டை ஜாஸ்தி அவ்ளோதான் மத்தபடி ரொம்ப நல்ல பொண்ணு. இப்ப கூட வந்து மரியாதையா என் ஆராவை நல்லா பாத்தேக்கோன்னு சொல்லிட்டு போறாம்மா அவ. அவளைப் போய் நீங்க…" என்று சொல்ல,


"டேய் அவளைப் பத்தி நீ சொல்லிதான் எனக்கு தெரியனும்னு இல்ல..‌. சின்ன வயசில் இருந்து நானும் அவள பாத்துட்டு தானா இருக்கேன். அவ ஆருக்காக என்ன வேணும்னாலும் செய்வான்னு எனக்கும் தெரியும். நான் ஒன்னும் அவளை தப்பு சொல்லல. ஆனா, நம்மை மாதிரியே எல்லாரும் இருப்பாங்கன்னு சொல்லமுடியாது. நாளைக்கு இன்னொரு வீட்டுக்குப் போய் வாழப்போற பொண்ணு. யாரும் அவளை தப்ப பேசிடக்கூடாது அதுக்குதான் சொல்றேன்.


அவதான் சின்ன பொண்ணுன்னா நீயும் சரிக்குசரி அவகூட விளையாடிட்டு இருக்கீயேன்னு..‌." என்றதும் தான் ஆதிக்கும் புரிந்தது, தன் தாய் சொல்வது ஒருவிதத்தில் சரிதான் என்று. ஆனால், தாய் சொன்னதை கவனத்தில் வைத்து அதற்கு பின் ஷிவானியிடம் ஓரடி தள்ளி நின்றவன், ஷிவானி சொல்கேட்டு ஆராவிடம் அவன் காதலை சொல்லி இருந்திருந்தால் பின்னாளில் எல்லாம் சரியாக நடந்திருக்குமோ? என்னமோ!