கன்னத்தில் காதல் முத்தம் 19
காதல் 19
அந்த வீடே அழுகை சத்தத்தில் மூழ்கி இருக்க, நடுவீட்டில் உறங்கும் அம்மன் சிலை போல், தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டு அமைதியாக படுத்திருந்தார் ஆராவின் தாய் பவித்ரா.
ஆரா தாய் முகத்தையே வெறித்து பார்த்தபடி இருக்க, அவள் தந்தையோ தன் உலகமே இருண்டு விட்டது, இனி எனக்கு என்ன இருக்கிறது என்பது போல் ஒரு மூலையில் ஓய்ந்து போய் நின்றார்.
ஆராத்யாவின் தாய்க்கு தீடிரென்று நெஞ்சுவலி எடுக்க, உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டிருக்க மருத்துவர்களால் எதுவும் செய்யமுடியாது போனது.
தன் மகளின் கையைப் பிடித்தபடி, அந்த வலியிலும் அவளைப் பார்த்து மென்மையாக சிரித்தவர், "அம்மா எப்பவும் உன்னோடவே இருப்பேன்டா" என்றவர் உயிர், அடுத்த வினாடி இறைவனடி சேர்ந்திருந்தது.
பவித்ரா நிலையை சொல்லாமல் ஆராவை மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஆதிக்கு, தன் முன் உறங்குவது போல படுத்திருந்த மாமியை பார்த்ததும் கண்களில் கண்ணீர் வழிய அவர் காலைக் கட்டிக்கொண்டு கதறிவிட, உயிர் இல்லாத தாயின் உடலை பார்த்த ஆரா அடுத்த நொடி அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
அந்த நேரம் ஒரு வேலையாக டெல்லி வந்திருந்த ஷிவானி, விஷயம் தெரிந்த அடுத்த நிமிடமே அடித்து பிடித்து அடுத்த விமானத்தில் கிளம்பி சென்னை வந்துவிட்டாள்.
காரில் இருந்து வேகமாக இறங்கி ஓடி வந்தவள், உயிரற்ற பவித்ராவின் உடலை பார்த்து அப்படியே மண்டியிட்டு அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு, "அம்மா" என்று கதறி அழ, ஆரா ஓடிவந்து "ஷிவி" என்று அவளை அணைத்துக் கொண்டாள்.
பவித்ரா எந்த அளவு ஆரா மீது அன்பு வைத்திருந்தாரோ, அதே அளவு ஷிவானியையும் நேசித்தார். ஷிவானியை அவர் தன் மகள் போல் தான் பார்த்தார். அதேபோல் ஷிவானியும் பவித்ராவை தனக்கு கிடைத்த இன்னொரு அன்னையாக தான் பார்த்தாள். அவரின் இந்த பிரிவு ஆராவை எந்த அளவு பாதித்ததோ அதே அளவு ஷிவானியையும் புரட்டி போட்டது.
ஆயிற்று இன்றோடு பவித்ரா இந்த உலகத்தை விட்டு சென்று பத்து நாட்கள் வேகமாக ஓடி இருந்தது.
இந்த பத்து நாளும் ஷிவானி தான் ஆராவை பார்த்துக்கொண்டாள். அவளுக்கு உணவு கொடுப்பதில் இருந்து தூங்கவைப்பது வரை எல்லாமே அவள் தான் செய்தாள். சிலநேரம் தாயின் நினைவில் தூக்கம் வராமல் தவிக்கும் தோழியை, குழந்தை போல் தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டு தட்டி தூங்க வைப்பாள்.
ஆராவும் என்நேரமும் ஷிவானியைத் தான் தேடினாள். பொருத்து பொருத்து பார்த்த பல்லவி, ஆராவை தனியாக அழைத்தவர், "இப்டியே இருந்தா எப்டி ஆரும்மா? அண்ணி போனது எங்களுக்கும் வருத்தம் தான். ஆனா, போனவங்களை நெனச்சிட்டு, இருக்க நம்ம வாழ்க்கையை தொலச்சிட கூடாதுடா… நீ இப்டியே இருந்த உங்கப்பாவை யாரு பாக்குறது? சொல்லு… அவருக்காகவாது கொஞ்சம் பாரும்மா…" என்றவர், "நேத்து ஷிவானி அம்மாவை பாத்தேன், இன்னும் ரெண்டு நாள்ல ஷிவானி அமெரிக்கால இருந்தாகனுமாம். ஆனா, உன்னைவிட்டு போக மனமில்லாமல் அவ இங்கயே இருக்கப்போறேன்னு சொல்லிட்டு இருக்கா. நீயே யோசி, உனக்காக அவ படிப்பு கெட்டு போகணுமா?" என்று கேட்டதும் சற்று தெளிந்த ஆரா,
"இல்ல அத்தை… அப்டி எதுவும் நடக்கக் கூடாது. அவளுக்கு நிறைய லட்சியம் இருக்கு. அதுக்கு அவ கண்டிப்பா யுஎஸ் போய்தான் ஆகணும்" என்று கண்களை துடைத்துக் கொண்டு ஷிவானியின் தந்தைக்கு அழைத்தவள், ஷிவானி கிளம்புவதற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்ய சொன்னாள்.
"நோ ஆரா… என்னால முடியாது. நான் உன்னைவிட்டு போகமாட்டேன்" என்று ஷிவானி கத்திக் கொண்டிருக்க, "நோ வே ஷிவி யூ ஹவ் டு கோ. ஒழுங்கா யுஎஸ் கிளம்புற வழிய பாரு" என்று ஆராவும் பதிலுக்கு கத்தினாள். இருவரும் கத்தும் சத்தம் வாசல் வரை கேட்க, பல்லவி ஆதியோடு சேர்த்து ஷிவானியின் பெற்றோரும் காதை மூடிக்கொண்டு இருந்தனர்.
இப்டியே இவர்கள் சண்டை நேரம் கடந்த செல்ல, "இப்ப நீ கடைசியா என்னதான்டி சொல்ற? உன்னால யுஎஸ் போக முடியுமா முடியாதா?" என்று ஆரா இடுப்பில் கை வைத்து தோழியை முறைக்க, ஷிவானியும் வீம்மபாக, "முடியாது" என்றாள்.
அவளை ஒருநிமிடம் உறுத்துவிழித்த ஆரா, "அத்தை இவள இங்க இருந்து போகச் சொல்லுங்க. என் பேச்சை கேக்காத இவ, இனிமே என் கண்ணு முன்னாடி இருக்கக்கூடாது. இனி இவ யாரோ நான் யாரோ…" என்று சொல்ல, அவள் அருகில் வந்த ஷிவானி,
"எங்க உனக்கு தைரியம் இருந்தா, நீ இப்ப சொன்னதை திருப்பி சொல்லு பாப்போம்" என்று சொல்ல, ஆரா வாய்திறக்கும் முன், ஷிவானியின் கை ஆராவின் கன்னத்தில் பதிந்திருந்தது.
"ஷிவானி…" "ஷிவி என்ன பண்ற நீ? " "ஏய்…" என்று அதட்டியபடி அங்கிருந்தவர்கள் எழுந்து வர, அவர்களை பார்த்து கைகாட்டி நிறுத்திய ஆரா, "இது எங்க பிரச்சனை குறுக்க யாரும் வரவேணாம்" என்றவள், "முடிவா நீ என்னதான்டி சொல்ற?" என்று கேட்டாள் ஆராத்யா.
அவள் முகத்தை பார்த்து இழுத்து மூச்சுவிட்ட ஷிவானி, "ஓகே நீ சொல்றதை நான் செய்றேன்…" என்றதும் ஆரா முகத்தில் சிரிப்பு வர, "பட், ஒன் கண்டிஷன்.." என்று சொல்லி தன் கைப்பையில் இருந்து ஒரு கவரை எடுத்து ஆரா முன் நீட்டினாள்.
'இது எப்டி இவ கைக்கு கிடைச்சிது' என்று ஆரா அதிர்ந்து பார்க்க, "என்னடா இது எப்டி இவளுக்கு கிடைச்சுதுன்னு பாக்குறீயா? உன் கப்போர்ட்ல வேற ஒன்னு தேடும் போது, இது கிடைச்சிது." என்றவள், "நீ இதுக்கு ஒகே சொன்னா நானும் யுஎஸ் போக ரெடி." என்றாள் அழுத்தமாக.
"ஷிவி என்ன இது என் நிலைமை தெரிஞ்ச நீயே இப்டி பேசினா எப்டி டி? " என்றவள் கண்ணில் கண்ணீர் வழிய, அதை துடைத்த ஷிவானி, "நீ விரும்பி ஆசைப்பட்டது உன் கைக்கு கிடைச்சிருக்கு ஆரா… இத ஏன் வேணாம்னு சொல்ற நீ? ப்ளீஸ்… ஆரா இது உனக்கு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தரும்னு எனக்கு தோணுது…" என்றவள் கையில் இருந்த கவரை வாங்கிய ஆதி,
"இது என்ன ஷிவானி?" என்று கேட்க, ஷிவானியோ, "என்னை ஏன் கேக்குற ஈஸ்வர்? இதோ நிக்கிறாளே இவகிட்ட கேளு… இது என்னதுன்னு" என்றதும் ஆதி ஆராவைப் பார்க்க, அவள் தலையை குனிந்து கொண்டாள்.
ஆதி அந்த கவரை பிரித்துப் பார்த்தவன், "என்ன ஆரா இது? இது எப்ப வந்தது? ஏன் என்கிட்ட இது பத்தி சொல்லல?" என்றவன் அருகில் வந்த பல்லவி, "என்ன ஆதி அது?" என்று கேட்க, "நம்ம ஆரா எப்பவும் ஒரு ஃபேமஸ் டிசைனர் பத்தி சொல்லிட்டே இருப்பாளே, அவங்ககிட்ட இருந்து வந்திருக்குமா… ஒன் இயர் அவங்ககிட்ட இன்டர்ன்ஷிப் கிடைச்சிருக்கு இவளுக்கு... இது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா? இதை ஏன் ஆரா எங்ககிட்ட சொல்லல…" என்று தாயிடம் தொடங்கி ஆராவிடம் முடித்தான்.
"அது அம்மா இருக்கும் போது அப்ளை பண்ணது மாமா… இப்… இப்ப எனக்கு அதில் விரும்பம் இல்ல…" என்று சொல்ல, "ஓ…..ஓ அப்படியா மேடம்.? அப்ப உங்களுக்கு விருப்பம் இல்ல, சோ நீங்க பெங்களூர் போகல... அதே மாதிரி எனக்கு யு.எஸ் போகப்புடிக்கல, நானும் போகல" என்றவள் சோஃபாவில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொள்ள,
அவள் அருகே வந்த ஆரா, "ஏய் இதுவும் அதுவும் ஒன்னா? நான் இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்ல… பட் உன்னோட ரிசர்ச் பாதியில் இருக்கு, நீ போனாதான் அதை முடிக்க முடியும். இது உன்னோட பல வருஷ கனவு, உழைப்புடி" என்று கெஞ்ச, ஷிவானி மெதுவாக அவள் தலைமுடியை கோதி, "இதுவும் உன்னோட கனவுடி… அந்த டிசைனர் உன்னோட ரோல் மாடல், உனக்கு இன்ஸ்பிரேஷனே அவங்க தான், அவங்க கூட வேலை பாக்க சான்ஸ் கிடைக்கும் போது ஏன்டி வேணாம்னு சொல்ற? " என்றவள்,
அங்கு சுவரில் மாட்டி இருந்த பவித்ராவின் புகைப்படத்தை காட்டி, "அம்மா இல்லாதனால தான் நீ இந்த முடிவை எடுத்திருந்தா, நான் நிச்சயமா சொல்றேன் அவங்க ஆத்மா கண்டிப்பா உன் முடிவை நினைச்சு கஷ்டப்படும்" என்று சொல்ல, அந்த வார்த்தை சரியாக தன் இலக்கை தாக்கியது.
பல்லவி சென்னையிலேயே ஆராத்யா வேலைப் பார்க்கட்டும் என்று எவ்வளவு சொல்லியும், ஆதியும், ஆராவின் தந்தையும் ஆராவை பெங்களூர் அனுப்ப முடிவு செய்தனர். இதற்கு முழுக்காரணம் ஷிவானி தான். இதனால் பல்லவிக்கு அவள் மீது கோவம்.
ஒருவழியாக ஷிவானியை பெட்டிகட்டி அமெரிக்காவுக்கு அனுப்பிய ஆரா, பெங்களூர் கிளம்ப தயாராக அந்த நேரத்தில் அவளுக்கு ஒரு சின்ன விபத்து நடந்து சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தவள், அதற்கு பிறகு பெங்களூர் புறப்பட்டாள்.
பெங்களூரில் ஷிவானியின் உறவில் இருக்கும் ஒருவர் வீட்டில் ஆரா பாதுகாப்பாக தங்க எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து வைத்த பிறகே விமானத்தில் காலடி எடுத்து வைத்திருந்தாள் ஷிவானி.
அங்கேயே ஆரா தங்கிக் கொண்டாள்.
அதே நேரம் ஆதியும் தன் தொழில் விஷயமாக ஒரு வருடகாலம் ஆஸ்திரேலியா செல்ல வேண்டி இருக்க, மூவரும் தங்களுக்காக காத்திருந்த விதியின் விளையாட்டில் முதல் அடியை எடுத்து வைத்தனர்.
ஆரா பெங்களூர் வந்து ஒரு மாதம் ஓடி இருந்தது. இந்த ஒரு மாதத்தில் வார இறுதி நாட்கள் கிளம்பி சென்னைக்கு வந்து விடுவாள். ரெண்டு நாட்கள் தந்தையுடன் இருந்துவிட்டு செல்வாள். பின் வேலை அதிகமாக அதிகமாக அவள் சென்னை வருவது குறைந்து போனது.
நாட்கள் மெதுவாக செல்ல, அன்று தோழி ஒருத்தியின் பிறந்தநாளுக்கு 'பப்புக்கு' அவளை அழைத்திருக்க, விருப்பமே இல்லாமல் 'அரைமணி நேரம் தான் இருப்பேன்' என்று நிபந்தனை போட்டுவிட்டு அங்கு சென்றாள் ஆராத்யா.
எல்லோரும் ஆட்டம் பாட்டம் என்று இருக்க, ஆரா மட்டும் இஞ்சி தின்ற குரங்கு போல் முகத்தை வைத்துக்கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தாள். தோழி அவளுக்கு குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க, "எனக்கு எதுவும் வேணாம்…" என்றாள்.
"ஏய் ஆரா… இதுல ஆல்கஹால் எதும் இல்ல, ஜஸ்ட் ஜூஸ் தான் குடி" என்று சொல்ல, "அய்யோ தாயே எனக்கு ஒன்னும் வேணாம், இந்த மாதிரி இடத்தில் மறந்து கூட நான் எதையும் குடிக்கத் தயாரா இல்ல… யார் கண்டா இங்க இருக்க காத்துல கூட போதை கலந்திருக்கும் போல… ஆணியே புடுங்க வேணாம். டைமாச்சு நான் கிளம்புறேன்" என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
அவள் வெளியே வரும் நேரம், திடீரென்று யாரோ அவள் முகத்தில் ஏதோ துணியை வைத்து அழுத்த ஆராத்யா தடுமாறி தான் போனாள்.
அவளும் அவர்களை தடுத்க பார்க்க, அவளால் கையை தூக்க கூட இயலவில்லை.
அவள் முகர்ந்த போதைப் பொருள் அதன் வேலையை காட்டி அரை போதையில் தள்ளியபடி இருக்க, அந்த மூன்று பேரும் அவளை இழுத்துச் சென்று ஒரு காரில் தள்ள பார்க்க, அந்த அரை மயக்க நிலையிலும் அந்த மூன்று பேரில் ஒருவனை அவள் எட்டி உதைக்க, அவனும் போதையில் இருந்தவன் தடுமாறி கீழே விழந்தான். மீதி இருந்த ரெண்டு பேரும் அவளின் கை, காலை கட்ட பார்த்த சமயம், அந்த ரெண்டு பேரும் தரையில் விழுந்து கிடந்தனர்.
"ஏன்டா எவ்ளோ தைரியம் இருந்தா, விருப்பம் இல்லாத பொண்ணை கடத்தப் பாப்பீங்க" என்று கேட்டபடியே ஒருவன் அந்த மூன்று பேரையும் மாறிமாறி மிதிக்க, "ஏய் அப்டி தான் நல்ல மிதி… என் மூஞ்சில எதையே வச்சு அழுதிட்டானுங்க, என்னால நிக்க கூட முடியல, எனக்கு தலை சுத்துது, கண்ணுகூட சரியா தெரியமாட்டேங்கிது தெரியுமா?" என்று போதையில் உளறியவளை திரும்பிப் பார்த்த அந்த புதியவனுக்கு, இன்னும் கோவம் வர,
"இனிமே இது மாதிரி எந்த பொண்ணுகிட்டயாது தப்ப தடக்குறதை பாத்தேன், சாவடிச்சிடுவேன்" என்றவன் ஆராவை அந்த காரில் இருந்து வெளியே இழுத்துத் தூக்கிக் கொண்டவன் தன் காருக்கு சென்று, அவளை கார் இருக்கையில் உட்கார வைத்தவன், தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க, அவளுக்கு போதை தெளிவதாக இல்ல.
அவள் கன்னத்தைத் தட்டி, "ஏய் உங்க வீடு எங்க இருக்கு? அட்ரஸ் சொல்லுமா… உன்னை கூட்டிப் போய் ட்ராப் பண்றேன்." என்று கேட்க, அவள் அவனை மலங்க மலங்க விழித்து பார்த்தவள், "எ… என் வீடு அ… அத… அங்க இருக்கு, இப்டி... போய் அப்டி போய் அப்டிக்கா… போகனும்" என்று போதையில் காற்றில் கைகளை அசைத்து அசைத்து உளற, அவன் அவள் கைப்பையை எடுத்துப் பார்த்தான்.
அதில் அவளின் சென்னை வீட்டின் முகவரி தான் இருந்தது. "ஓ… இந்த பொண்ணு சென்னைப்பொண்ணா! கடவுளே இப்ப என்ன பண்றது? அவனுங்க என்னத்தை இவ மூஞ்சில போட்டானுங்கன்னு தெரியலயே? முழுசா மட்டையாகி இருக்கு இந்த பொண்ணு… இப்ப என்ன பண்றது? இப்டியே விட்டும் போக முடியாது." என்று யோசித்தவன், வேறு வழியில்லாமல் தன் வீட்டிற்கே அழைத்துச் சென்றான் அக்னிதேவ்.
காரில் செல்லும் வழியெங்கும் போதையில் அவள் ஏதோதோ உளறிக்கொண்டே வர, அவளின் உளறலில் அக்னிக்கு லேசாக சிரிப்பு வந்தது. "நீ யார்னு எனக்கு தெரியல… பட், ரொம்ப நாள் கழிச்சு… இல்ல இல்ல… ரொம்ப வருஷம் கழிச்சு உன்னால தான் எனக்கும் சிரிக்க தெரியும்குற விஷயம், எனக்கே ஞாபகம் வந்திருக்கு" என்றவன் அவன் வீட்டின் முன் காரை நிறுத்தி, அவளை மெதுவாக உள்ளே தூக்கிச் சென்றான்.