கன்னத்தில் காதல் முத்தம் 7

 காதல் 7


அந்த பெரிய வரவேற்பு அறையின் நடுவில் இருந்த அந்த விலையுயர்ந்த 'கஃவுச்சில்', கால்மேல் கால் போட்டு கம்பீரமாக சாய்ந்தபடி அமர்ந்திருந்த அக்னியின் கையில் இருந்த அந்த திருமண பத்திரிகையில், ஆதிஷ்வரன் அருகில் சிரித்த முகத்துடன் நின்றிருந்த ஆராத்யாவின் புகைப்படத்தையே அவன் அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருக்க,‌ அக்னியை ஒருவித தவிப்போடு பார்த்துக்கொண்டு இருந்தான் அவன் நண்பன் கௌதம்.


"டேய் அக்னி, இதெல்லாம் சரியா வருமான்னு ஒரு தரம் யோச்சிக்கடா." என்ற கௌதமை பார்த்து அக்னி முறைத்த முறையில் கப்பென வாயை மூடிக்கொண்டான்.


"எனக்கு அவ வேணும்… அதுக்காக எந்த எல்லைக்கும் போக நான் தயங்க மாட்டேன். ஐ வான்ட் ஹர் அட் ஏனி காஸ்ட்" என்ற போது அக்னி முகத்தில் தெரிந்த தீவிரத்தை பார்த்து கௌதம் மண்டைக்குள் அபாய மணி அடிக்க, "டேய் என்ன இருந்தாலும் ஏற்கனவே கல்யாணம் பண்ண…" என்று ஆரம்பிக்கும் முதல் அக்னியின் சுட்டெரிக்கும் பார்வையில் கௌதம் பஸ்பம் ஆகும் வேளையில் வீட்டிற்குள் நுழைந்தாள் ஷிவானி.


'ம்ம்ம் வந்திட்டா ஃபாரின் சூனியக்காரி… ஏற்கனவே இவன் எரிஞ்சிட்டு இருக்கான். இதுல இவ பெட்ரோலை பேரல் பேரல்ல ஊத்தி, அவன் பேர் மாதிரி அவனையும் கொழுந்து விட்டு எரிய வைப்பா… மூஞ்சப்பாரு முட்டை போண்டா மாதிரி' என்று மனதில் அவளைத் திட்டியவனுக்கு அதை வார்த்தையாக வெளியில் செல்லும் தைரியம் இல்லை. (பின்ன அப்றம் அக்னி மிதிக்குற மிதிய யார் வாங்குறது?)


"ஆரா மேரேஜ் இன்விடேஷன் வந்திடுச்சு. அக்னி இங்க பாரு." என்று தன் கைப்பையில் இருந்த இன்விடேஷனை அவள் எடுக்கப் போக, அவளுக்கு முன் பத்திரிகை எடுத்து அவள் முகத்திற்கு முன் நீட்டினான் அக்னி.


"ஏய் எப்டி இது? உனக்கு எப்டி கிடைச்சிது? ஆரா வீட்டுக்கே இன்னைக்கு காலையில தான் பிரஸ்ல இருந்து வந்து குடுத்திட்டு போனாங்க!" என்று அவள் ஆச்சரியமாக கேட்க, அக்னி உதிர்த்த அந்த சின்ன சிரிப்பே சொன்னது, ஆராத்யா சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயமும் அவனைத் தாண்டி தான் வெளியே செல்ல முடியும் என்று.


"ம்ம்ம்… செம்ம போ! சரி அக்னி இதெல்லாம் ஓகே தான். ஆனா, இன்னும் பத்து நாள்ல ஆரா கல்யாணம் வருது, அதுக்குள்ள உன்மேல ஆராவுக்கு லவ் வர வைக்கிறது எல்லாம் இம்பாஸிபிள்… அவ உள்மனசுல தனக்கு கல்யாணம் ஆகிடுச்சின்ற எண்ணம் ஆழமா ஊறிப் போயிருக்கு, சோ அவளுக்கு உன்மேல லவ் வர்ரது கொஞ்சம் கஷ்டம் இல்ல ரொம்ப கஷ்டம். இன் ஷாட் மிஷன் இம்பாஸிபிள்… அதோட அதுக்காக டைமும் இப்ப நம்மகிட்ட சுத்தமா இல்ல. கூடவே அவ இனிமே கல்யாணம் முடியும் வரை வீட்ட விட்டு வெளியவே வரமாட்டேன்னு வேற சொல்லிட்டா, தட் கிரெடிட்ஸ் கோஸ் டூ யூ மேன், நீ அன்னைக்கு அவளை மால்ல வச்சு மிரட்ன மிரட்ல அவ ரொம்ப பயந்துப் போயிருக்கா. இன்பேக்ட் உன் பேரை சொல்லவே அவ உடம்பு நடுக்குது தெரியுமா? எங்க உன்னால கல்யாணத்தில் எதுவும் ப்ராப்ளம் வந்திடுமோன்னு ரொம்ப பயந்திட்டு இருக்கா. உன் விஷயம் ஈஸ்வருக்கு தெரிஞ்சா பிரச்சனை பெருசாகும்னு நான் சொன்னதை நம்பி அவ இன்னும் உன்னைப் பத்தி எதுவும் அவ மாமன்கிட்ட சொல்லல. உன்னைப் பத்தி மட்டும் ஈஸ்வருக்கு தெரிஞ்சா நம்ம மொத்த ப்ளானும் ஊத்திக்கும். சோ… உன்னால இனிமே அவளை உன்னை லவ் பண்ண வைக்கிறது எல்லாம் யானைக்கு கோமணம் கட்ற மாதிரி முடியாத காரியம். சோ… நீ ஏதாவது புதுசா ப்ளான் தான் போடணும்" என்றவள் அக்னியைப் பார்க்க, அவன் முகத்தில் அத்தனை தெளிவு.


"ஏய் அக்னி! அப்ப நீ ஏற்கனவே ப்ளான் பண்ணிட்ட அப்டிதானா? என்று துள்ளிக் குதித்தவள், "சொல்லு மெயின் ப்ளான் என்ன? அதுக்கு தேவையானது எல்லாம் ரெடி தானா? அதுல நான் என்ன செய்யனும்? நீ என்னச் செய்யப்போற?" என்று ஆவலாக கேட்டவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்த கௌதம், "ஏன்டி சூனியக்காரி… நீ ஆரா ஃப்ரண்டு தானடி, அவ கூட இருந்துட்டே இப்டி பண்றியே, உனக்கு பாவமா இல்லயா?" என்றவனை நக்கலாக ஒரு பார்வை பார்த்த ஷிவானி, "இல்ல" என்றாள் ஒரே வார்த்தையில்.


"அக்னி உனக்கு ஆரா வேணும்னா… முதல்ல இந்த பன்னாடை ஃப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணு… எப்பபாரு எதாவது நெகட்டிவா சொல்லிட்டே இருக்கான்" என்றது தான் கௌதம், ஷிவானிக்கு இடையே சண்டை பற்றிக்கொள்ள இருவரும் 'பேரிங்' போன பழைய மின்விசிறி போல் கீச் மூச் என்று கத்திக்கொண்டே இருக்க, "வில் யூ காய்ஸ்‌ ஸ்டாப் இட்?" என்று அக்னி கத்திய சத்தத்தில் இருவர் வாயும் மூடிக்கொண்டது.


"லிசன் கௌதம்… உனக்கு என்னைச் சின்ன வயசில் இருந்து தெரியும் தான? எனக்கு ஒரு பொருள் வேணும்னா வேணும் தான். பொருளுக்கே அப்டின்னா… அவ நான் முதல் முதல்ல விரும்புனா பொண்ணுடா. அவள என்னால எப்டி விட முடியும்னு நீ நினைக்கிற? என்னால விடவும், விட்டுக் கொடுக்கவும் முடியாத ஒன்னு இந்த உலகத்தில் இருக்குன்னா அது அவ தான். அவ வாழ்ந்தாலும் என்னோட தான். செத்தாலும் என் கூட தான். அவ எனக்கு வேணும்… அவ எனக்கு தான்.. எனக்கு மட்டும்… தான். அதுக்கு அவளை தூக்குறது தவிர இப்ப எனக்கு வேற வழி இல்ல." என்றவனை என்ன சொல்வது என்று புரியவில்லை கௌதமுக்கு.


"இதுக்கு வேற எதாவது வழி இருக்கும் அக்னி, நீ அத யோசி. அதவிட்டு நீ ஈஸ்வர் மேல இருக்க காண்டுல இப்டி செய்ற… ஊரே கூடி இருக்கும் போது அவனை அசிங்கப்படுத்த தான் நீ இப்டி பண்றீயோன்னு எனக்கு டவுட் இருக்கு… அதோட இது ஆராவையும் காயப்படுத்தும்னு மறந்துடாத… ஒன்னு மட்டும் புரிஞ்சிக்க அக்னி, நீ ஆசைப்பட்டு கூட வச்சிக்க அவ ஒன்னும் பொம்மை இல்ல… உயிர் உள்ள ஒரு பொண்ணு. இதுல அவ விருப்பம்னு ஒன்னு இருக்கு… அவகிட்ட பேசி பாக்கலாம்டா… அவ நிலைமையையும் கொஞ்சம் யோச்சிப் பாரு… அவ இப்ப இருக்க சிட்டிவேஷன்ல…" என்றவனை பார்த்து போதும் என்று கை காட்டி, அலட்சியமாக தோள்களை குலுக்கிய அக்னி, "ஐ டோண்ட் கேர்… அவளுக்கு அந்த ஈஸ்வர் கூட கல்யாணமே ஆகிட்டாலும் எனக்கு அத பத்தி எல்லாம் கவலை இல்லை கௌதம்.


அந்த ஈஸ்வரை கொன்னுட்டாவது அவளை நான் தூக்கிட்டு வருவேன். கல்யாணத்துக்கு முந்தின நாள் நம்ம ஆராவை மண்டபத்தில் இருந்து தூக்கப்போறோம்… தடஸ் ஃபைனல்" என்று சொல்லிவிட்டு சென்றவனை பார்த்து இப்போது ஷிவானிக்கு, உள்ளுக்குள் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்று உடைந்து சிதறியது.


"இப்ப உனக்கு சந்தோஷமாடி?" என்ற கௌதமை திரும்பிப் பார்த்து ஷிவானி முறைக்க, "என்ன முறைப்பு வேண்டி இருக்கு உனக்கு? இல்ல என்ன முறைப்புன்னு கேக்குறேன். ஏன்டி இப்டி பண்ற?" என்றவனை அழுத்தமாக பார்த்த ஷிவானி, "லிசன் கௌதம், என் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் நான் எப்பவும் என் மூளை சொல்றதை தான் கேப்பேன். இப்ப எனக்கு இதுதான் நல்லதுன்னு தோணுது. சோ நான் அக்னி கூட இருக்கேன்… தட்ஸ் ஆல். வாட்ஸ் ராங் இன் தட்?"


"நீ சொல்ற அந்த நல்லது… யாருக்குடி? அக்னிக்கா? ஆராக்கா? ஆதிக்கா? இல்ல உனக்கா?" என்று அவளை கூர்மையாக பார்த்துக்கொண்டே கேட்டவன் முகத்தை பார்க்காமலே, "எல்லாருக்கும்" என்றாள் ஒற்றை வார்த்தையில்.


"நான் உன்னை ஒன்னு கேப்பேன். அதுக்கு நீ உண்மையை சொல்வீயா?" என்க, "ம்ம்ம்" என்று தலையாட்டினாள் ஷிவானி.


"டூ யூ லவ் ஹீம்?" என்று கேட்க, ஷிவானி அவனை திருப்பிப் பார்த்து புருவத்தை உயர்த்தி, "வூ?(who)" என்க, "ஆதி" என்றான் கௌதம் சட்டென்று.


"நீ இதெல்லாம் பண்றதுக்கு காரணம் ஆதி மேல இருக்க லவ் தானா? எப்டியாது ஆரா, ஆதி கல்யாணத்தை நிறுத்தணும், அதை அக்னி பண்ணிடுவான். அப்றம் ஆதிய நீ கரெக்ட் பண்ணனும், அதுதானா உன் ப்ளான்.? என்றவனுக்கு பதில் சொல்லாமல் கௌதம் முகத்தையையே சில நிமிடங்கள் ஆழமாக பார்த்திருந்த ஷிவானி, "மே பீ" என்ற ஒரே வார்த்தையில் கௌதமின் வாயை அடைத்தவள், "ஃபுல் ப்ளான் ரெடியானதும், நான் என்ன செய்யணும்னு அக்னியை எனக்கு கால் பண்ண சொல்ல சொல்லு" என்று வாசலை நோக்கி நடந்தவள், திரும்பாமலே, "நீ நினைக்கிற மாதிரி எதுவும் இங்க நடக்காது கௌதம்… இங்க நான் நினைக்கிறது மட்டும் தான் நடக்கும். நடக்க வைப்பேன்" என்றவள் வெளியே சென்றுவிட கௌதமுக்கு தான் ஒன்னும் விளங்கவில்லை.


"கடவுளே இதுங்க ரெண்டும் தான் புடிச்ச ராபிட்க்கு த்ரி லெக்ஸ்னு அலுச்சாட்டியம் பண்ணிட்டு இருக்குங்க… பாவம் அந்த ஆரா… அக்னி அவளை நல்லாத்தான் பாத்துப்பான், இருந்தாலும் அந்த பொண்ணும் பாவம் தான். சோ நீங்க தான் அவளை கொஞ்சம் பாத்துக்கணும்." என்று அவசரமாக ஆண்டவனிடம் ஒரு விண்ணப்பத்தைப் போட்டவன் அக்னியை காணச் சென்ற


கண்மூடித்திறப்பதற்குள் எட்டு நாட்கள் ஓடி விட்டது.


திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை வேளையில், அந்த அழகிய இளமஞ்சள் வண்ணப் பட்டுச்சேலை அவள் முழு உடலிலும் பாந்தமாக பொருந்தி இருக்க, அளவான நகைகளை அணிந்து, தலைநிறைய மலர் சூடிக்கொண்டு தன் வீட்டின் பூஜை அறையில் நின்று கண்மூடி கடவுளை மனமுருகி வேண்டிக் கொண்டு இருந்தாள் ஆராத்யா. அவள் அருகில் ஆதியும், பல்லவியும்.


நாளை காலை ஆராத்யாவுக்கு திருமணம். அது யாருடன் நடக்கும்?அக்னி கூடவா? இல்ல ஆதி கூடவா?


நாளை காலை திருமணம் இருக்க, அதற்கு முன் இன்று மாலையில் பெண் அழைப்பு ஏற்பாடு செய்திருக்க, ஆராவும்‌ மற்றவரும் கடவுளை மனதார வேண்டிக்கொண்டு திருமண மண்டபத்திற்கு கிளம்பினார்.


ஆராத்யா எவ்வளவு அழைத்தும் வீட்டுக்கு வரமாட்டேன் என்று முடிவாக சொல்லிவிட்ட ஷிவானி அவர்கள் வந்து சேரும் முன்பே மண்டபத்திற்கு வந்துவிட்டாள். அவளுக்கு மண்டபத்தில் செய்யவேண்டிய வேலைகள் சிலது இருக்க, அனைவருக்கும் முன்பே வந்து அனைத்தையும் கச்சிதமாக செய்து முடித்திருந்தாள் அவள்.


காரை விட்டு இறங்கிய ஆரா, சிரித்தமுகமாக வாசலில் கையில் பூங்கொத்துடன் நின்ற தோழியை பார்த்ததும், "ஷிவி" என்றபடி ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொண்டவள், "ஐ நோ, நீ எங்களுக்கு முன்ன இங்க வந்திடுவேன்னு எனக்கு தெரியும்… என் ஷிவின்னா ஷிவிதான்" என்று சத்தமாக சொல்ல, "ஆரா… என்ன இது? நீ கல்யாண பொண்ணு வாசல்ல நின்னு இப்டி சத்தமா பேசுறது நல்லா இல்ல… பாக்குறவங்க என்ன நினைப்பாங்க? வா… இப்டி வந்து நில்லு" என்ற பல்லவி, ஷிவானியை ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்த பெண்ணைப் பார்த்து, "நீங்க என்னம்மா அப்டியே நின்னுட்டு இருக்கீங்க? பொண்ணு, மாப்பிள்ளைக்கு ஆர்த்தி எடுங்க" என்றதும் அங்கிருந்த பெண்கள் இருவருக்கும் ஆரத்தி எடுக்க, அனைவரும் மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.


மணப்பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு ஆராத்யாவும் ஷிவானியும் சென்றுவிட, மணமகன் அறைக்குள் வந்த ஆதியின் முன்னே வந்து நின்றார் பல்லவி.


"ஆதி இந்த ஷிவானி எதுக்குடா இங்க வந்தா?" என்று கேட்க, ஆதி அவரை விசித்திரமாக பார்த்தவன், "என்ன கேள்விமா இது. அவ ஆராவோட க்ளோஸ் ஃப்ரெண்ட், அவ வராம எப்டி? அதோட அவ ஆராக்கு மட்டும் இல்ல, எனக்கும் சின்ன வயசில் இருந்து ஃப்ரெண்ட் தான்…


எங்க கல்யாணத்தில் அவ இல்லாம எப்டி? அதுவும் லாஸ்ட் ஃபியு இயர்ஸ்ஸா எங்க கான்டக்ட்லையே இல்லாம இருந்தவா. எங்க கல்யாண நேரம் அதுவுமா இந்தியா வந்திருக்கான்னு ஆரா எவ்ளோ சந்தோஷமா இருக்கா தெரியாமா?"


"தெரியும்டா நல்லா தெரியும். அதனால தான் எனக்கு பயமே… முந்தா நேத்து ஷிவானி அம்மாவை பாத்தேன். அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? அவ ஒன்னும் வெக்கேஷனுக்கு இந்தியா வர்லயாம்… அங்க படிச்சிட்டு இருந்த படிப்பை பதில க்விட் பண்ணிட்டு இங்க வந்திருக்கா, அவ அம்மா ஏன்டி இப்டி பண்ணேன்னு கேட்டதுக்கு, எனக்கு இந்தியா வரணும்னு தோணிச்சு, அதான் வந்திட்டேன். ஸ்டடிஸ் பத்தி எதுவும் இஸ்யூ இல்ல, இன்னும் ஆறுமாசம் கழிச்சு மறுபடியும் கண்டின்யூ பண்ணிக்குவேன்னு சொல்லிட்டாளாம், தெரியுமா?" என்றதை கேட்ட ஆதிக்கு இது புது சேதி தான்.


"ஏன் இப்டி பண்ணா? அப்டி உடனே இந்தியா வரவேண்டிய அவசியம் என்ன? அதுவும் படிப்பை விட்டுட்டு!" என்று ஆதி கேட்க,


"அவ இந்தியா வந்தது இப்ப பிரச்சனை இல்ல ஆதி… ஆனா, சரியா ஆராக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கப்போற சமயம் இங்க வந்திருக்காளே… அதுதான் இப்ப பிரச்சனை. தீடிர்னு ஏன் அவ இங்க வரணும்?"


"மே பீ யா கோ இன்சிடென்ட் மா"


"ஷட் ஆப் ஆதி. திரும்பத் திரும்ப அதையே செல்லாத… நீ சொன்னதே தான்… உன்னையும் ஆராவையும் அவளுக்கு சின்ன வயசில் இருந்து தெரியும்…" என்று அழுத்தமாக சொல்ல, ஆதி சட்டென்று அன்னையைத் திரும்பிப் பார்த்தவன்,


"ம்மா எனக்கு தெரிஞ்சு ஷிவானி ரொம்ப நல்ல பெண்… நீங்க தேவையில்லாம அவளை நினைச்சு குழப்பிக்காதீங்க… நீங்க நினைக்குற மாதிரி எதுவும் இருக்காது. எங்க எங்கேஜ்மென்ட் பங்க்ஷன்ல அவ எவ்ளோ எக்சைட்மென்ட்டா இருந்தான்னு நீங்களும் பாத்தீங்க தானா… அப்பவே எங்க ரெண்டு பேர் கல்யாணத்தில் ஆராக்கு நான் தான் மணப்பெண் தோழின்னு அவ்ளோ ஆசையா சொன்னவமா அவ… ஷிவானியால எந்த ப்ராப்ளமும் வராது. அதுக்கு நான் கேரண்டி போதுமா… இன்னைக்கு ஒரு நைட்… நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும் எல்லாம் சரியாகிடும்" என்று பல்லவியை சமாதானம் செய்தவனுக்கும் உள்ளுக்குள் ஷிவானி பற்றி சின்ன உறுத்தல் இருந்த போதும், அவர் சொன்னதைப் பற்றி கொஞ்சமாவது யோசித்து இருந்தால் நாளை

 அவனுக்கு ஏற்பட போகும் இழப்பில் இருந்து தப்பி இருக்கலாமோ? என்னவோ!