கன்னத்தில் காதல் முத்தம் 8

 காதல் 8


மணப்பெண் அழைப்புக்கான நேரம் நெருங்க, ஆராத்யாவை முழுதாக தயார் படுத்திவிட்டிருந்தனர் அழகு நிலையத்தில் இருந்து வந்திருந்த பெண்கள்.


ஆராத்யா அருகில் வந்த ஷிவானி அவள் முகத்தை கண்கள் விரிய பார்த்தவள், "வாவ் ஆரா! பாக்க செம்ம அழகா இருக்கடி, எனக்கே உன்னை கல்யாணம் கட்டிக்கணும்னு ஆச எல்லாம் வருதே" என்று அவள் கன்னத்தில் சட்டென ஒரு முத்தம் வைக்க, ஆராத்யாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து விட்டது.


"ச்சீ போடி லூசு… எப்பபாரு உனக்கு கிண்டல் தான்." என்று அழகாய் வெட்கப்பட்டு அவள் தலையை குனிந்து கொள்ள, அந்த அழகிய வெட்கத்தின் காட்சியை தன் கைப்பேசியில் புகைப்படமா சிறைப் பிடித்திருந்தாள் ஷிவானி.


"நீங்க ரொம்ப அழகாக மேக்கப் பண்ணி இருக்கீங்க சிஸ்டர். சிம்ப்ளி சூப்பர்." என்று அந்த கலைஞர்களை மனதார பாராட்டிய ஷிவானி, "ஒகே ரொம்ப நேரமா நின்னுட்டே இருக்கீங்க, வெளிய போய் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு அப்டியே போய் டிபன் சாப்டு வாங்க." என்றதும் ஆராத்யா,


"ஹான்… சொல்ல மறந்துட்டேன், நீங்க ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்கீங்க, பங்க்ஷன் முடிய எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியல, சோ நைட் டைம் நீங்க டிராவல் பண்ண வேணாம். உங்க ரெண்டு பேருக்கும் மேல ரூம் ரெடி பண்ண சொல்லி இருக்கு, நைட் இங்கயே தங்கிடுங்க." என்றதும் அந்த ரெண்டு பெண்களுக்கும் அத்தனை மகிழ்ச்சி, "ரொம்ப தேங்க்ஸ் மேடம்… யூ ஆர் சோ ஸ்வீட். ஹாப்பி மேரிட் லைஃப்" என்று மனதார வாழ்த்தியபடியே அங்கிருந்து சென்றனர்.


ஆராத்யா, "ஷிவி ரொம்ப பசிக்குதுடா, சாப்ட எதாவது வேணும்" குழந்தைப் போல் சொல்ல, "இரு நான் போய் சாப்ட டிபன் எடுத்திட்டு வரேன்" என்று சமையலறைக்கு சென்றவள், கையில் டிபனுடன் சேர்த்து அவளுக்கு குடிக்க, சூடான காஃபியும் கொண்டு வந்திருக்க, ஆராத்யா கையில் எதையே வைத்து பார்த்துக் கொண்டிருந்தவள் கண்கள் லேசாக கலங்கி இருந்தது.


"ஏய் ஆரா! என்னாச்சு எதுக்கு உன் கண்ணு கலங்கி இருக்கு? என்றபடி ஆரா அருகில் வேகமாக வந்தவள், கையில் இருந்ததை எல்லாம் அருகில் இந்த மேஜையில் வைத்துவிட்டு ஆரா பக்கத்தில் உட்கார்ந்தவள், ஆரா கையை பார்க்க, அதில் ஒரு தாலிக்கொடி இருந்தது.


ஷிவானி புருவம் சுருக்கி அதைப் பார்த்தவள், "ஆரா இ… இது…?" என்று இழுக்க, "ம்ம்ம்… நீ நினைக்குறது சரிதான் ஷிவி… இது அம்மா எனக்காக செஞ்ச தாலி தான்." என்று சொல்லும் போதே அவள் கண்களில் இருந்த கண்ணீர் துளிகள் அவள் கன்னத்தில் இறங்கிவிட்டது.


"ஏய் ஆரா… நோ மா. இந்த டைம்ல நீ அழக்கூடாது" என்று அவள் கண்களை ஒப்பனை கலையாமல் 'டிஷ்யூ' கொண்டு துடைத்துவிட, அவளைத் திரும்பிப் பார்த்த ஆரா, "உனக்கு தெரியுமா ஷிவி? இந்த தாலி அம்மா எனக்காக பாத்து பாத்து செஞ்சது‌. இதுல இருக்க தங்கம் எல்லாம் காசு குடுத்து வாங்கினது இல்ல தெரியுமா… எங்கப்பாவோட அம்மா, எங்கம்மாவோட அம்மா ரெண்டு பேரும் தொண்ணூறு வயசு வரைக்கும் சுமங்கலியா வாழ்ந்து போனவங்கலாம். அதனால எங்கம்மா அவங்க ரெண்டு பேர் தாலிக்கொடியில் இருந்த தங்கத்தை உருக்கி எனக்காக இதைப் பண்ணாங்க… இது என் கல்யாணத்தில் என் கழுத்துல ஏறணும்னு ரொம்ப ஆசைப் பட்டாங்க. ஆனா…" என்றவள் தலையை குனிந்துகொள்ள‍, "ஆனா? என்ன ஆரா?"


"அத்தை இந்த தாலிய எங்க கல்யாணத்தில் கட்டக்கூடாதுன்னு முடிவா சொல்லிட்டாங்க…" என்று சோகமாக சொல்ல, "ஏன்?" என்று கேட்டாள் ஷிவானி.


"கல்யாணத்துக்கு அவங்க தான் தாலி செய்யணுமாம். இது எங்க கௌரவப் பிரச்சனை, இதுல எல்லாம் விட்டுக்கொடுக்க முடியாதுன்னனு சொல்லிட்டாங்க…"


"இதுல என்னடி கௌரவம் கெட்டுபோக இருக்கு? உங்கப்பா கூடப்பொறந்த தங்கச்சி தானா இவங்க… அப்றம் என்னவாம்?"


"அதுதான் ஷிவி எனக்கு புரியல. இதுல அப்பா, அம்மாக்கு கூட வருத்தம் தான்… அவரும் தாலி உங்கண்ணி செஞ்சிருந்தாலும் அது உன் வீட்டுக்காரங்க வழக்க முறைப்படி செஞ்ச தாலி தானனு எவ்ளவோ சொல்லி பாத்தாரு ஆனா, அத்தை ஒத்துக்கவே இல்ல" என்று பெருமூச்சு விட்டவள், "அத்தைக்கு அப்பாமேல, என்மேல எல்லாம் ரொம்ப பாசம் தான், ஆனா என்னமோ இது மாதிரி சில விஷயத்தில் அவங்க ரொம்ப பிடிவாதமா இருக்காங்க" என்றவள் கைகள் அந்த தாலிக்கொடியை வருடிக் கொண்டது.


"அப்டி பிடிவாதமா இருந்தவங்க, அன்னைக்கு மட்டும் எப்டி இந்த தாலி வச்சு உங்க கல்யாணத்தை நடத்த சம்மதிச்சாங்க ஆரா? எனக்கு புரிலயே?" என்று கேள்வியாக புருவம் உயர்த்தி ஆராவைப் பார்க்க,


"இதுல தெரிய என்ன இருக்கு ஷிவி? அந்த டைம்ல எங்கப்பா உயிர் போற நேரத்துல வேற வழி இல்லாம இந்த தாலிய என் கழுத்தில் கட்ட சம்மதம் சொல்லியிருப்பாங்க, வேறென்ன? எப்படியோ எங்கம்மா ஆசை ஏதோ ஒரு வகையில் நிறைவேறிருச்சு, அதுவரை எனக்கு சந்தோஷம் தான்" என்றாள் நிம்மதியாக.


"அப்ப இப்ப இந்த கல்யாணதில் இந்த தாலிய கட்டப்போறது இல்லயா?" என்றாள் ஷிவானி.


"இல்ல ஷிவி, அத்தை அவங்க குடும்ப வழக்கப்படி புதுத்தாலி செஞ்சிருக்காங்க…" என்று சோகமாக சொல்ல, ஷிவானி ஏதோ சொல்ல வாயெடுக்க, "ஆரு நீ ரெடியா?" என்று கேட்டபடி உள்ளே வந்தனர் பல்லவியும், ஆதியும்.


"ம்ம்ம் நான் ரெடி அத்தை" என்றவளை பார்த்து பல்லவி முகம் மலர்ந்து சிரித்தவர், அருகில் இருந்த ஷிவானியைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொள்ள, ஆதியே ஆரா அழகில் சிலையென உறைந்து நின்றான்.


"அப்டியே உங்கம்மாவை பாக்குற மாதிரி இருக்கு ஆரும்மா" என்றபடி பல்லவி அவள் உச்சியில் முத்தம் வைக்க, ஷிவானியின் இதழோரம் இகழ்ச்சி புன்னகை.


ஆராத்யாவை மேலிருந்து கீழ் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தவர் கண்ணில் பட்டது ஆரா கையில் இருந்த தாலிக்கொடி.


"ஆரு என்ன இது? இத இன்னும் நீ கோயில் உண்டியல்ல போடலியா?" என்று கோவத்தில் கத்த தொடங்க, ஆதி அப்போது தான் இந்த உலகிற்கு வந்தவனும், அந்த தாலியை பார்த்தான்.


"நீ கோயிலுக்கு போன அன்னைக்கே உன்னை இதை நான் கோயில் உண்டியல்ல காணிக்கையா போடச் சொன்னேன் தானா? ஏன் காணிக்கையை செலுத்தாமா இன்னும் நீயே வச்சிருக்க…" என்றதும், ஆராத்யாவுக்கு கண்கள் கலங்கிவிட, "இ… இல்ல அத்தை இது அம்… அம்மா எனக்காக" என்று தொடங்கும்போதே, "போதும் ஆரு… இதைப்பத்தி நீ சொல்லிதான் எனக்கு தெரியணும்னு இல்ல…" என்று மேலும் கத்த, ஆராத்யா முகம் வாடுவதை கண்ட ஆதி, பல்லவி முன் வந்து நின்றவன்,


"ம்மா இப்ப என்ன? சாமிக்கு காணிக்கை தான? கல்யாணம் முடியட்டும், நானும் ஆராவும் சேர்ந்து போய் ஜோடியா ரெண்டு பேர் கையால இதை உண்டியல்ல போட்டுடுறோம் போதுமா? வெளிய கெஸ்ட் எல்லாம் இருக்காங்க நீங்க போங்க" என்று தாயை வெளியே அனுப்பியவன், ஆரா அருகில் வந்து தன் பெருவிரல் கொண்டு மென்மையாக அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவன், "ஒன்னும் இல்லடா… ஒன்னும் இல்ல. அழாத" என்று அவள் தலையை மெதுவாக வருடியவன், "கொஞ்சம் பாத்துக்க ஷிவானி, டிபனை சாப்ட வை" என்றுவிட்டு செல்ல, ஆரா மீது ஆதி வைத்திருக்கும் அன்பைப் பார்த்து ஷிவானிக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.


பெண் அழைப்பு நிகழ்வுகள் தொடங்க, ஆரா அறைக்கு வந்த பல்லவி, ஒரு மரப்பெட்டியை ஆரா கையில் கொடுத்தவர், இதுல அண்ணியோட நகை இருக்கு ஆரும்மா… அதை எல்லாம் போட்டுக்க, உங்கம்மா தான் இப்ப இல்ல, அவங்க நகையாது உன்னோட இருக்கட்டும்." என்றவருக்கு தன் அண்ணன் அண்ணியின் நினைவில் கண்கள் கலங்கிவிட,


நகைகளை எல்லாம் அவளுக்கு போட்டு விட்டு ஆராத்யாவை வெளியே அழைத்துச் செல்ல, பல்லவியின் நடவடிக்கைகளில் அர்த்தம் ஷிவானிக்கு நன்கு புரிய, அவள் இதழில் நக்கல் புன்னகை.


'நீங்க நினைக்கிற எதுவும் இங்க நடக்கப்போறது இல்ல அத்தை… நீ கவலைப்படாத ஆரா… உன் கல்யாணம் அந்த தாலி வச்சு தான் நடக்கும். ஆனா, அது ஆதி கையால் உன் கழுத்தில் ஏறாது… ஏறவும் நாங்க விடமாட்டோம்' என்று மனதில் நினைத்தவள் அந்த தாலியை எடுத்து, கொடுக்க வேண்டியவனிடம் கொடுத்து விட்டாள்.


மேடையில் ஆதி, ஆரா சிரித்தமுகமாக ஜோடியாக நிற்க, அதைப் பார்த்த ஷிவானிக்கு உள்ளம் கொதித்ததென்றால், அந்த மண்டபத்தில் யார் கண்ணும் படாத இடத்தில் நின்று அவர்கள் இருவரையும் பார்த்த அக்னியின் உள்ளமோ எரிமலையாக கொந்தளித்து கொண்டிருந்தது.


ஒரு ஆழ்ந்த பெருமூச்செடுத்த அக்னி, ஷிவானிக்கு ஃபோன் செய்து தான் இருக்கும் இடத்திற்கு வரச்சொல்ல, அவளும் உடனே அங்கே சென்றாள். அக்னி அவள் என்ன செய்யவேண்டும் என்பதை அவளுக்கு தெளிவாக சொல்லி அனுப்பிவைக்க, ஷிவானி மீண்டும் கீழே வந்து மற்ற விருந்தினர்களுடன் கலந்துவிட்டாள்.


இரவு பத்து மணி தாண்டி விருந்தினர் கலந்து செல்ல தொடங்க, மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுமே அங்கு இருந்தனர்.


ஆரா, ஆதியும் இரவு உணவை முடித்துவிட்டு வந்துவிட, பல்லவி காலை அவர்கள் சீக்கிரம் எழ வேண்டும் என்று சீக்கிரம் தூங்க சொல்ல, இருவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றனர்.


ஷிவானி ஆராத்யாவுடன் பேசிக்கொண்டு இருக்க, அங்கு வந்த பல்லவி, "ஆரு உன் ஃப்ரண்டோட அப்பாவும் அம்மாவும் கிளம்புறாங்க, டைம் ஆகுது இவளையும் கிளம்பிச் சொல்லு… இவ உன்னோட இருந்தா ரெண்டு பேரும் பேசிட்டே இருப்பீங்க, தூங்க மாட்டீங்க, அப்றம் காலையில் நேரத்துல எழுந்திரிக்க முடியாது" என்று ஷிவானியை முறைத்தபடியே சொல்ல, ஆராத்யாவின் முகம் சட்டென்று வாடிவிட்டது.


"இல்ல அத்தை, அவ நைட் என்னோடவே ஸ்டே பண்ணட்டுமே… ப்ளீஸ் அத்தை" என்று கெஞ்ச, "சொல்றதை கேளு ஆரு, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்த நைட் ஃபுல்லா அரட்டை அடிச்சுட்டு இருப்பீங்க, அதோட இவ அப்பா வேற வெளிய வெய்ட் பண்றாரு… இவ இப்ப போய்ட்டு காலையில அவங்க கூடவே வரட்டும். நீ அமைதியா இரு" என்று கண்டிப்பாக சொல்லிவிட, ஆராத்யா தான் தவித்துப் போனாள்.


"இல்ல அத்தை" என்று ஆராத்யா தொடங்கும்போதே, "இட்ஸ் ஓகே ஆரா. எனக்காக நீ கெஞ்ச வேணாம்‌. நான் இப்ப கிளம்புறேன்‌. எர்லி மார்னிங் சீக்கிரமா வந்திடுறேன்" என்றவள், பல்லவியை பார்த்து நக்கலாக சிரித்தபடி, "கிளம்புறேன்." என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, அவளை அனுப்பியது எவ்வளவு பெரிய தவறு என்பது விடியும் பொழுது புரியும் பல்லவிக்கு.


ஆரா அருகில் அவளின் சொந்தத்தில் ஒரு பெண் துணையாக படுத்துக்கொள்ள, ஆராத்யாவுக்கு ஷிவானி இல்லாமல் ஏதோ போல் இருந்தது.


இரவு 12 மணிபோல் ஆராத்யா லேசான தூக்கத்தில் இருந்த சமயம் அவள் கைப்பேசி ஒலிக்கும் சத்தம் கேட்க, மெதுவாக கண்விழித்தவள் தன் கைப்பேசியை எடுத்துப் பார்க்க, அழைப்பு புது எண்ணில் இருந்து வந்திருந்தது.


அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், "ஹலோ யாரு?" என்று கேட்க, "ஏய் ஆரா நான் தான் ஷிவி பேசுறேன்…" என்று பதட்டமாக பதில் வர, ஆராத்யா ஒருநிமிடம் யோசித்தவள், "என்ன ஷிவி இந்த நேரத்தில், அதுவும் வேற நம்பர்ல இருந்து?" என்று கேட்க,


"என் ஃபோன் சார்ஜ் ஆவுட் ஆரா, அதான் அப்பா நம்பர்ல இருந்து கூப்பிடுறேன்" என்று படபடப்பாக பேச, "ஏய் ஷிவி ஏன் நீ இவ்ளோ பதட்டமா பேசுற? என்னாச்சு உனக்கு? ஆர் யூ ஓகே?" என்று தோழிக்கு எதுவும் பிரச்சனையோ என்ற பதட்டத்தில் ஆரா பேச,


"இப்ப பேச நேரம் இல்ல ஆரா, ப்ளீஸ் இப்ப உடனே நீ கொஞ்சம் கல்யாண மண்டபத்தின் பின் பக்கம் வாயேன்" என்று சொல்ல, தோழியின் பதட்டமாக குரல் ஆராவை பயமுறுத்த, எதைப்பற்றியும் யோசிக்காமல் அவள் உடனே அறையை விட்டு வெளியே வர, அவள் கெட்ட நேரமோ… இல்லை அவள் தலைவிதியோ அவள் அறை இருந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்க, அவள் செல்வதை யாரும் பார்க்கவில்லை. ஆரா வேக வேகமாக மண்டபத்தின் பின் பக்கம் சென்று சுற்றும் முற்றும் பார்க்க, அங்கும் ஷிவானி இல்லை.


"ஷிவி… ஷிவி… நீ எங்க இருக்க?" என்று அவள் பேசிய வார்த்தைகள் பாதியில் நிற்க, தன் மூக்கை மூடியிருந்த வலியகரத்தின் மீது தன் மெல்லிய விரல் கொண்டு போராடி தோற்றவள் அப்படி அவன் தோளிலேயே மயங்கிச் சரிந்தாள். மயக்கத்தில் விழிமூடி இருந்த ஆராவின் இமைகளில் மெல்ல இதழ் பதித்ததவன், "சாரி… எனக்கு வேற வழி இல்ல." என்றபடி அவளைத் தன் கைகளில் ஏந்தியவன், அங்கு தயார் நிலையில் இருந்த தன் காரில் அவளைப் படுக்கவைத்து விட்டு, தானும் அமர்ந்து ஆராவின் தலையை மெதுவாக எடுத்து தன் மடிமீது வைத்துக்கொண்ட அக்னி முன்னே பார்க்க, அங்கு கார் முன் சீட்டில் ஷிவானியும் கௌதமும் இருந்தனர்.


"காரை எடு கௌதம்." என்றதும் அந்த கார் இரவு நேர இருளைக் கிழித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று ஒரு இடத்தில் நிற்க, ஆராத்யாவை தோளில் தூக்கிக்கொண்டு காரில் இருந்து இறங்கிய அக்னி, ஒரு நிமிடம் ஷிவானியை ஆழ்ந்து பார்த்தவன், "தேங்க்ஸ்" என்றவன் கௌதமிடம், "ஷிவிய பாத்திரமா வீட்ல கொண்டு விட்டுடு…" என்க, கௌதம், "ம்ம்ம்…" என்றவன்,


"ஆராவை பத்திரமா பாத்துக்க, அன்ட் டேக் கேர் ஆஃப் யூவர் செல்ஃப் டூ" என்று அங்கிருந்து நகர, அக்னி தோளில் மயங்கிக்கிடந்த ஆரா கன்னத்தில் அழுத்தி முத்தமிட்ட ஷிவானி, "ஹாப்பி மேரிட் லைஃப் ஒன்ஸ் அகைன் மை டியர்…" என்றபடியே சென்று காரில் ஏறி சீட்டில் சாய்ந்தபடி கண்களை இறுக்கி மூடிக்கொண்டவள் கண்களில் இருந்து துளி துளியாக கண்ணீர் வெளியேற, அவளைப் பார்த்து இழுத்து மூச்சு விட்ட கௌதம் காரை உயிர்ப்பித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.


அவர்கள் சென்ற அடுத்த நிமிடம் அங்கிருந்த சாப்பர் என்று (air chopper) அழைக்கப்படும் சிறியரக விமானத்தில் ஆராத்யாவுடன் சென்னையை விட்டு கிளம்பி இருந்தான் அக்னி. .


இது எதுவும் தெரியாத ஆதிஷ்வரன், நாளை நடக்கப்போகும் திருமணத்தை எண்ணி கனவில் மிதந்து கொண்டிருந்தான். நாளை விடியல் அவனை வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப் போட இருப்பது அறியாமல்‌. ஆராத்யாவின் பிரிவை அவன் தாங்குவானா? தன் மாமனை மணக்கும் கனவை கலைத்து தன்னை களவாடி வந்த அக்னியிடம் இருக்கும் ஆராத்யாவின் நிலை?