கன்னத்தில் காதல் முத்தம் 6

 காதல் 6


இரவு முழுவதும் அக்னி பற்றிய சிந்தனையிலேயே இருந்த ஆராத்யா, விடிந்த பின்பு தான் உறங்க தொடங்கி இருந்தாள்.


மணி ஏழைக் கடந்த பிறகும் ஆராத்யா கீழே இறங்கு வராமல் இருக்க, பல்லவி மகனிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார்.


"டேய் இன்னும் பத்து நாளில் கல்யாணம். ஆனா, இவ இன்னும் இப்டி பொறுப்பில்லாம பொழுது விடிஞ்சு இவ்ளோ நேரம் ஆகுது, இன்னும் தூங்கிட்டு இருக்காளே… இதெல்லாம் நல்லாவ இருக்கு? இப்டி இருந்தா குடும்பம் எப்டி வெளங்கும்?" என்று வழக்கம் போல் தன் அர்ச்சனையை ஆரம்பிக்க, வழக்கம் போல் ஆதியும், "அம்மா அவ சின்ன பொண்ணும்மா… சும்மா அவளை எதாவது சொல்லிட்டே இருக்காதீங்க… விடுங்கம்மா. இன்னும் பத்து நாள் தான், கல்யாணம் முடிஞ்சா அவளும் ஒழுங்காகிடுவா, நீங்களும் சரியாகிடுவீங்க. அதுவரை அவளை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க…" என்றவனை முறைக்க மட்டுமே முடிந்தது பல்லவியால்.


ஆராத்யா மேல் வைத்திருக்கும் கண்மூடித்தனமான அன்பு ஆதியை அவளை தவிர, எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் செய்து விடுகிறது என்று நன்கு புரிந்து வைத்திருந்தவர் அமைதியாகி விட்டார்.


"ம்ம்ம் சரி ஆதி, எனக்கு கொஞ்சம் கல்யாண வேலை இருக்கு, நான் இப்ப போனா நைட் போல தான் வருவேன். இன்னைக்கு பத்து மணிக்கு மேரேஜ் இன்விடேஷனை வீட்டுக்கு கொண்டு வந்து தரேன்னு அந்த பிரஸ் ஓனர் சொல்லி இருந்தாரு. நீ அதை வாங்கி எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துடு… அப்டியே ஆருவை இன்விடேஷன் லிஸ்ட் ரெடி பண்ண சொல்லி சொல்லு… நாளையிலிருந்து நம்ம இன்விடேஷன் குடுக்க ஆரம்பிச்சிடலாம்" என்றவர் அங்கிருந்து சென்றார்.


மணி காலை எட்டைத் தொடும் போது, குளித்து முடித்து தயாராகி கீழே இறங்கி வந்து சோஃபாவில் அமர்ந்தாள் ஆராத்யா.


ஆவி பறக்கும் பில்டர் காபியுடன் சிரித்த முகத்துடன், "குட் மார்னிங் ஆரா" என்றபடி அவள் முன் வந்து நின்ற ஆதியை பார்த்து சின்னதாக சிரித்தவள், "தேங்க்ஸ் மாமா, இப்ப தான் காஃபி வேணும்னு நினச்சேன். உடனே கொண்டு வந்துட்டீங்க." என்றபடி கப்பை கையில் வாங்கியவள்,


காஃபியின் வாசனையை ஒருமுறை ஆழ்ந்து நுகர்ந்து விட்டு, அதன் மணத்தை ரசித்தபடி கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக் கொண்டிருக்க, அதை இமைக்காமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிஷ்வரன்.


"ம்…ம்ம்… இப்ப சொல்லு ஆரா, உனக்கு என்ன ப்ராப்ளம்? என்று கேட்க, ஆராவுக்கு குடித்துக் கொண்டிருந்த காஃபி தொண்டையில் அடைத்துப் புரையேறிக் கொண்டது.


அவள் இருமுவதை பாத்து அவள் தலையில் தட்டிய ஆதி, "மெதுவடா… ஏன் இவ்ளோ அவசரம்? கொஞ்சம் மெதுவா குடி" என்க, அவன் அன்பில் அவள் இதயம் கனிந்தது.


"ஐ ஆம் ஓகே… மாமா." என்றவளை கனிவாக பார்த்த ஆதி, "இப்ப நீ ஓகேன்னு எனக்கு தெரியுது. அதோட நீ நார்மலா இல்லைன்னு எனக்கு புரியுது ஆரா. நேத்து ரொம்ப நேரம் உன் ரூம் சைடு மாடில நீ தனியா நின்னுட்டு இருந்ததை பாத்தேன், அப்பவே வந்து என்னான்னு கேக்க தான் நினைச்சேன். ஆனா, இன்கேஸ் அம்மா அதை பாத்து, என்ன ஏதுன்னு கேட்டு, எதாவது பேசி உன்னை மூட்-அவுட் பண்ணிடுவாங்களோன்னு பயந்து தான் நான் அப்ப அங்க வர்ல." என்ற மாமனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்த ஆரா,


"அதெல்லாம் ப்ராப்ளம் எதுவும் இல்ல மாமா. நான் நல்லாத்தான் இருக்கேன்" என்றவளை பார்த்து 'இல்ல' என்பது போல் இடவலமாக தலையாட்டிய ஆதி, "நீ பொய் சொல்ற ஆரா, நீ நைட் ஃபுல்லா தூங்கவே இல்லைன்னு சிவந்திருக்க உன் கண்ணே சொல்லுது. அதோட நேத்துல இருந்து உன் முகமே சரியில்ல, ரொம்ப வாடிப்போயிருக்க… என்னாச்சு ஆரா? என்ன பிரச்சனை?" என்று கேட்டான்.


"அதெல்லாம் பிரச்சனை எதும் ஒன்னும் இல்ல ஈஸ்வர், ஜஸ்ட் கல்யாணம் டென்ஷன் தான் அவளுக்கு. இது எல்லா பொண்ணுங்களுக்கும் நேச்சுரலா வர்ரது தான்" என்று குரல் வர, ஆதியும் ஆராவும் திரும்பிப் பார்க்க அங்கு வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள் ஷிவானி.


தோழியைப் பார்த்ததும் ஆராத்யா "யேய் வா ஷிவி… வா வா" என்று ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொண்டாள்.


"வா ஷிவானி… இப்ப தான் வீட்டுக்குள்ள வர வழி தெரிஞ்சிது போல.." என்ற ஈஸ்வரை பாத்து லேசாக புன்னகைத்தபடி ஆராத்யா அருகில் அமர்ந்த ஷிவானி, "வரக்கூடாதுன்னு எல்லாம் ஒன்னு இல்ல ஈஸ்வர். ஜஸ்ட் சும்மா தான்.." என்றாள்.


"இல்ல மாமா இவ பொய் சொல்றா… என்னை இவ பிக் பண்ண நம்ம வீட்டுக்கு வரும்போதெல்லாம் உள்ள வாடின்னு எத்தனை முறை கூப்பிட்டு இருக்கேன் தெரியுமா? பிடிவாதமா நோன்னு சொல்லிடுவா" என்று தோழியைப் போட்டு கொடுக்க ஆதியோ, "ம்ம்ம் இப்ப என்ன சொல்ற? என்று கேட்க, இழுத்து மூச்சு விட்ட ஷிவானி, "ஓகே கைஸ் நான் உண்மையை சொல்லிறேன். ஆமா, நான் இந்த வீட்டுக்குள்ள வர்ரதை வேணும்னு தான் அவாய்ட் பண்றேன்" என்றதும் ஆதியும் ஆராவும் ஒரே நேரத்தில், "ஏன்?" என்று கேட்டனர்.


"பிகாஸ் ஆஃப் யூவர் மாம். ஐ நோ, ஷீ வோண்ட் லைக் மீ. அதான் தேவையில்லாம அவங்க முன்னாடி வந்து, அவங்க மூடையும் கெடுத்து என் மூடையும் அப்செட் பண்ணிக்க நான் விரும்பல. இப்ப கூட அவங்க வீட்ல இல்ல. நைட்டு தான் வருவாங்கன்னு ஆரா சொன்னா. அதான் உள்ள வந்தேன்." என்க, அவள் சொல்வது உண்மை என்பதால் இருவராலும் எதுவும் பதில் பேச முடியவில்லை.


"அப்டி எல்லாம் ஒன்னு இல்ல ஷிவி. அத்த கொஞ்சம் ஸ்ரிக்ட் அதான்… மத்தபடி அவங்க ரொம்ப ஸ்வீட்" என்று ஆரா பல்லவிக்காக பரிந்து பேச,


ஷிவானியோ, 'உன் அந்த ஸ்வீட் அத்தையை பத்தி உன்னைவிட எனக்கு தான் நல்லா தெரியும் ஆரா. ஒரு நாள் வரும். அப்ப நான் இந்த வீட்டுக்குள்ள இருப்பேன். அந்த அத்தை அம்மா இந்த வீட்டுக்கு வெளிய நிப்பாங்க. அவங்க செஞ்ச எல்லாத்துக்கும் வட்டியும் முதலுமா திருப்பி தர நேரம் ரொம்ப தூரம் இல்ல. அதுக்கு தான் நாள் குறிச்சி காத்திட்டு இருக்கான் ஒருத்தன்.' என்று மனதோடு பேசியவளை, ஆராத்யா தோளைத் தொட்டு உசுப்ப, இயல்புக்கு திருப்பினாள் ஷிவானி.


"என்னாச்சு ஷிவி? பேசிட்டே இருந்த… தீடிர்னு வேற உலகத்துக்கு போய்ட்ட?"


"ஒன்னும் இல்ல ஆரா, தீடிர்னு ஒரு வேலை நினைவுக்கு வந்திடுச்சு… அதான்" என்று சமாளிக்க, "அப்ப நீ இப்ப கிளம்பிடுவியா ஷிவானி?" என்று கேட்டான் ஆதி.


"ஏன் ஈஸ்வர்? எதுவும் ஹெல்ப் வேணுமா?"


"ஆமா ஷிவானி, எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு, ஐ ஹேவ் டு கோ. இன்னும் கொஞ்ச நேரத்தில் மேரேஜ் இன்விடேஷன் வரும். நீயும், ஆரா கூட இருந்து கொஞ்சம் கெஸ்ட் லிஸ்ட் ரெடி பண்ணா ஹெல்ப்பா இருக்கும்"


"அதுக்கென்ன ஈஸ்வர் செஞ்சிட்டா போச்சு… இப்ப இதை விட எனக்கு முக்கியமான வேலை எதுவும் இல்ல. நாங்க பாத்துக்குறேன்"


"தேங்யூ சோ மச் ஷிவானி… சரி எனக்கு டைமாச்சு. நான் கிளம்புறேன். ரெண்டு பேரும் பாத்தரமா இருங்க… ஆரா ஒன் ஹவர்க்கு ஒன்ஸ் எனக்கு கால் பண்ணனும் ஓகே. பை ஆரா, பை ஷிவானி…" என்று அவசரமாக கிளம்பிச் செல்லும் ஆதியையே பார்த்திருந்த ஷிவானியின் கண்களில் கோபம் நீர் பூத்த நெருப்பாக மறைந்து இருந்தது.


ஆதி கார் வீட்டைவிட்டு வெளியே சென்றதை பார்த்து தன் நெஞ்சில் கை வைத்துக்கொண்ட ஆராத்யா, "நல்லவேளை ஷிவி நீ சரியான டைம்கு வந்து ஏதோ சொல்லி மாமாவை சமாளிச்சிட்ட… அவர் தீடிர்னு உனக்கு எதும் ப்ராப்ளமான்னு கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப் போட்ருச்சு… இன்னும் ஒரு நிமிஷம் நீ லேட்டா வந்திருந்தாலும், நான் மாமாகிட்ட எதையாவது உளறி இருப்பேன்."


"அதுசரி தீடிர்னு உன்ற மாமாக்கு ஏன் இப்டி ஒரு டவுட்டு வந்துது? நீ எதுவும் சொன்னீயா என்ன?" என்று கேட்க,


"ம்க்கும்... இதுல நான் தனியா சொல்ல என்ன இருக்கு? நான் என்ன நினைக்குறேன்னு வாயத்திறந்து சொல்லனும்னு இல்ல, என் முகத்தை பாத்தே அவரு கண்டுபுடிச்சிடுவாரு…" என்று அவள் பெருமையாக சொல்ல, ஷிவானிக்கு உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வர அதை மறைத்துக் கொண்டு, "ம்ம்ம் அப்றம்" என்று எரிச்சலாக கேட்டாள்.


"நேத்து அந்த அக்னி சொன்னதை நினச்சு நினச்சு பயத்தில் எனக்கு தூக்கமே வர்ல ஷிவி. ரொம்ப நேரம் மாடிலயே நின்னுட்டு இருந்தேன்.


அதை மாமா பாத்திருக்காரு, அதோட நைட் சரியா தூங்காம இருந்ததால கண்ணு வேற சிவந்து போயிருக்கிறதை பாத்து எனக்கு ஏதோ ப்ராப்ளமான்னு கண்டுபுடிச்சிட்டாரு." என்றாள் சோகமாக.


"நீ அந்த அக்னி பத்தி எதுவும் சொல்லல இல்ல?" என்றதும் ஆரா, "மூச்சு" என்று வாயில் ஒற்றை விரலை வைத்து, "வாயே திறக்கல ஷிவி. இத சொன்னா கண்டிப்பா மாமா சும்மா இருக்கமாட்டாரு… தேவை இல்லாத ப்ராப்ளம் எல்லாம் வரும்.


இன்னும் பத்து நாள்ல கல்யாணத்தை வச்சிட்டு எதுக்கு வீண் பிரச்சனைன்னு தான் நான் எதுவும் சொல்லலை. நானும் இதோட வெளி எங்கேயும் போகப் போறது இல்ல. சோ இனிமே அந்த அக்னி தொல்லை இல்ல" என்று நிம்மதி பெருமூச்சு விட்டவளை, ஷிவானியோடு சேர்ந்து விதியும் பார்த்து சிரித்தது.


ஆதி சொன்னது போல் பத்து மணிக்கு கல்யாணப் பத்திரிகை வீடு தேடி வந்துவிட, ஆராவும் ஷிவானியும் ஆளுக்கு ஒரு பத்திரிகையை எடுத்து பார்த்தனர்.


"இன்விடேஷன் டிசைன் ரொம்ப நல்லா இருக்குல்ல ஷிவி?" என்ற ஆராவின் கேள்விக்கு, "ம்ம்ம் டிசைன் நல்லா தான் இருக்கு" என்றவள் மனதில், 'ஆனா இதுல இருக்க கல்யாணப் பொண்ணு, மாப்பிள்ளை பேரு தான் பொருத்தமா இல்ல' என்று நினைத்தவள் உள்ளம் கோபத்தில் கொதித்தது.


"ஏய் ஷிவி…" என்று அவளை உலுக்கியவள், "என்ன தான்டி ஆச்சு உனக்கு? இப்பெல்லாம் அடிக்கடி இப்டி பிரீஸ் ஆகிடுற?" என்றதும் தன் உணர்வை கட்டுப்படுத்திய ஷிவானி, "அதெல்லாம் ஒன்னு இல்ல ஆரா, சும்மா இந்த கல்யாணத்தை பத்தி யோச்சிட்டு இருந்தேன் அவ்ளோதான்" என்று சமாளித்தாள்.


"கல்யாணத்தை பத்தி யோசிக்க என்ன இருக்கு?" என்று கேட்க,


"அது ஒன்னும் இல்ல, ஏற்கனவே நடந்து முடிஞ்ச கல்யாணம் தான… இப்ப எதுக்கு உங்க அத்தை இதை இவ்ளோ கிராண்ட்டா பண்றாங்கன்னு தான்?"


"உனக்கு தான் தெரியும் இல்ல ஷிவி… சின்ன வயசிலயே‌ ஆதிமாமாக்கும் எனக்கும் தான் கல்யாணம்னு முடிவாகிடுச்சு… அப்ப இருந்தே அத்தைக்கும், அப்பாக்கும் எங்க கல்யாணத்தை ரொம்ப கிராண்ட்டா செய்யணும்னு ஆச… ஆனா, அந்த நேரம் அப்பா ரொம்ப சீரியஸா இருந்ததால, அவர் கண்ணு மூடும் முன்ன எங்க கல்யாணத்தை பார்க்க ஆசைப்பட்டு, வீட்ல அவர் முன்னாடி வச்சி எங்க கல்யாணம் நடந்தது. எங்க கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள்ல அப்பாவும்…" என்றவள் குரலே சொன்னது அவள் அழுகிறாள் என்று…


ஷிவானி ஆராத்யா கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு, "ஐ ஆம் சாரி ஆரா… நான் ஏதோ ஞாபகத்தில் பட்டுன்னு கேட்டேன். ஐ ஆம் சாரி ரியலி வெரி சாரிடி" என்றதும், கண்களை துடைத்துக் கொண்ட ஆராத்யா, "இல்ல ஷிவி இட்ஸ் ஓகே.‌ ஐ ஆம் ஆல்ரைட்." என்றவள் தொடர்ந்து, "இப்ப அப்பா தான் இல்ல, அவர் ஆசைப்படி கல்யாணத்தையாவது ஊர கூட்டி நல்ல கிராண்ட்டா பண்ணனும்னு அத்தை நினைக்கிறாங்க. உனக்கு தான் தெரியுமே, ஆதிமாமா எங்க எங்கேஜ்மென்ட் பங்க்ஷனை எவ்ளோ கிராண்ட்டா நடத்தினார்னு,


அப்ப கல்யாணத்தை பத்தி கேக்கணுமா என்ன? ஆதிமாமா பெரிய பெரிய ப்ளான் எல்லாம் போட்டாரு… நான் தான் அதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டேன். இல்லன்னு வை, அவரு பண்ற அலும்புக்கு அளவே இருக்காது." என்று முகம் முழுவதும் புன்னகை மின்ன பேசியவளை ஆழ்ந்து பார்த்த ஷிவானி, 'நடக்காத கல்யாணத்துக்கு இதெல்லாம் தேவையா… ம்ஹூம்… எப்டியும் அக்னி இந்த கல்யாணத்தை நடக்க விடமாட்டாரு, நிக்கப்போற கல்யாணத்துக்கு இன்னா பில்டாப்டா சாமி' என்று நினைத்தவள் இதழ்களில் எள்ளல் சிரிப்பு.


மாலை வரை ஆராத்யாவுடன் இருந்து விருந்தினர்களின் பட்டியலைத் தயார் செய்து முடித்த ஷிவானியின் வாகனம், ஆராத்யா வீட்டில் இருந்து நேராக சென்று நின்றது என்னவோ அக்னிதேவ் வீட்டின் முன்பு தான்.