இதயம் 16

 இதயம் 16


ஆதர்ஷன் தனது அறையில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டு இருந்தவன் மனதில் புயல் வீசிக்கொண்டு இருந்தது. 


தன்வி வீட்டை விட்டுச் செல்லும் அளவுக்கு வந்தது அவனை வெகுவாகப் பயமுறுத்தியது. அவனுக்கு நன்கு தெரியும், தன்வியும் அதீஷனும் இரு கூட்டில் வாழும் ஒற்றை உயிர் என்று. இருவரும் அந்த அளவு ஒருவரை ஒருவர் நேசிக்கும் போது, தன்னால் அவர்கள் இருவரின் மணவாழ்க்கையில் எதுவும் பிரச்சனை வந்து விடுமோ என்று யோசித்தவன், உடனே தர்ஷினியைப் பார்த்து இதற்கு ஒரு நல்ல முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்துத் தன் கைபேசியில் இருந்து அவளுக்கு அழைக்க, அதுவோ அவள் அலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாகச் சொன்னது.


கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த ஆதர்ஷ், அவளை நேரில் சென்று பார்ப்பது என்று முடிவு செய்து தர்ஷினியின் வீட்டுக்குக் கிளம்பினான்.


கால் மணி நேரப் பயணத்திற்குப் பிறகு தர்ஷினியின் வீட்டை அடைந்தவன், அழைப்பு மணியை அடிக்கக் கையை உயர்த்த, உள்ளுக்குள் ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. 


அன்றைய நாளுக்குப் பிறகு இன்று தான் அவளைப் பார்க்கப் போகிறான். அவள் என்ன சொல்லுவாளோ என்ற பயத்துடன் சேர்த்து, அவள் இப்போது எப்படி இருக்கிறாள் என்ற பதட்டமும் அவனை உள்ளுக்குள் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது. 


‘எவ்ளோ மனசு கஷ்டப்பட்டு இருந்தா, அவ தன்விகிட்ட அப்படி ஒரு வார்த்தை சொல்லி இருப்பா? எல்லாம் என்னால தான்… நான் மட்டும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது. தேவையில்லாமல் அந்த அஜயை வேற கூட்டி வந்து எல்லாத்தையும் இன்னும் கெடுத்து வச்சிட்டேன். அதீ சொல்றது சரிதான், எனக்குக் கொஞ்சம் கூட பொறுமையே இல்ல’ என்று மனதிற்குள் புலம்பியவன், இப்படியே நின்றால் வேலைக்காகாது என்று நினைத்துத் தர்ஷினி வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு அவள் வருகைக்காகக் காத்திருந்தவன் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது. தன் கையை நெஞ்சில் வைத்து அழுத்தியவன், ‘எல்லாம் சரியாகிடும்… எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்…’ என்று தனக்குத் தானே மந்திரம் போல் தைரியம் சொல்லிக் கொண்டு இருந்தான்.


அழைப்பு மணி அடித்துச் சில நிமிடங்கள் கழிந்த பிறகும், தர்ஷினி கதவைத் திற்ககாமல் இருக்க, ஆதர்ஷனுக்கு உள்ளுக்குள் பயம் பற்றிக் கொண்டது. 


உடனே, “வினி… வினி…” என்று கதவைத் தட்டிப் பார்த்தான்.


அந்தப் பக்கத்தில் இருந்து எந்தவிதச் சத்தமும் இல்லாமல் போக, அவள் கைப்பேசிக்கு மீண்டும் அழைத்தான். அது இன்னமும் சுவிட்ச் ஆஃப்பில் இருக்க‍, தர்ஷினிக்கு என்னவோ ஏதோ என்று பதற ஆரம்பித்த ஆதர்ஷன்என்ன செய்வது என்று தெரியாமல் வேக வேகமாகக் கதவைத் தட்டியவன்,


“வினி…”


“வினி…”


“கதவைத் திற வினி… என்னாச்சு உனக்கு?” என்று பயத்தில் கத்த ஆரம்பித்தான். 


அவன் அந்தக் கத்து கத்தியும் தர்ஷினியிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போக, என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டத்தில் தலையைப் பிடித்துக் கொண்டவன், கண்ணில் தெரிந்தது அந்தக் கதவின் நம்பர் லாக். உடனே அதைத் தடவிப் பார்த்த ஆதர்ஷன், ‘என்ன பாஸ்வேர்ட் வச்சிருப்பா?’ என்று வாய்விட்டுப் புலம்பியவன், சட்டென்று ஏதோ தோன்ற தன் பிறந்த தேதியைப் போட்டான். அந்த நம்பரைப் போட்டவுடனே கதவு தானாகத் திறந்து கொள்ள, ஆதர்ஷன் எதைப் பற்றியும் யோசிக்காமல் அடுத்த நொடி புயல் போல் வீட்டிற்குள் நுழைந்து தர்ஷினியைத் தேடினான்.


“வினி… வினி… நீ எங்க இருக்க?” என்று கத்தியபடி அவன் உள்ளே செல்ல, அவளோ அவளின் படுக்கையறையின் ஜன்னல் அருகே களையிழந்த ஒவியம் போல், வெளியில் எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தர்ஷினி.


அவளைப் பார்த்தபின் தான் ஆதர்ஷனுக்குப் போன உயிர் திரும்பி வந்ததுபோல் இருந்தது. மூச்சை இழுத்து வாய் வழியே வெளியே விட்டவன், நெஞ்சை அழுத்தியபடி அவள் அருகில் சென்றவன், “பெல் அடிச்சேன் இல்ல… காதுல விழல? கதவைத் திறந்திருக்கலாம் இல்ல… ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சு…” என்றவன் குரலே சொன்னது அவனின் பயத்தின் அளவை‌.


அவளோ, அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் வெளியே பார்த்தபடியே, “ஏன் செத்துப் போயிருப்பேன்னு நினைச்சீங்களா?” என்று கேட்க, ஆதர்ஷனுக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததென்று தெரியவில்லை, “ஏய்…” என்று கத்தியபடி அவளை அடிக்கக் கை ஓங்கியவன், கடைசி நொடியில் தன்னைச் சுதாரித்துக் கொண்டு தன் கோவத்தை அடக்கியவன், “இப்படி எல்லாம் பேசாதடி… எனக்கு ரொம்ப வலிக்கிது” என்றான் தழுதழுத்த குரலில்.


மெதுவாக அவனைத் திரும்பிப் பார்த்தவள், “கவலைப்படாதீங்க சார்… நான் சாக மாட்டேன்” என்றவள் ஒரு கணம் பொறுத்து, “பிகாஸ் ஒருத்தர் ரெண்டு முறை சாக முடியாது இல்ல. அன்னைக்கு ஹோட்டல் ரூம்லயே தர்ஷினி செத்துட்டா…” என்று அவனது கண்ணைப் பார்த்துச் சொன்னவளின் கையைப் பிடித்து இழுத்துத் தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்ட ஆதர்ஷன், அவள் தலையைத் தன் மார்போடு அழுத்திக் கொண்டான்.


“ப்ளீஸ்டி இப்படி எல்லாம் பேசாத… எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. மனசு ரொம்ப வலிக்கிது. எனக்குப் புரியுது, நீ கோவத்தில் தான் இப்படி எல்லாம் பேசுறேன்னு… ஆனாலும் எனக்கு வலிக்கிது வினி” என்றவனின் அணைப்பில் இருந்து மெல்ல வெளியே வந்தவள், அவன் முகம் பார்த்து, “நான் கோவத்தில் இல்ல தர்ஷன். ஐ அம் இன் பெயின்‌… எனக்கு வலிக்குது தர்ஷன், மனசு ரொம்ப வலிக்கிது‌.” என்றவள் தன் கண்ணீரைத் துடைத்தபடியே, அவனைப் பார்க்க அவன் கண்களிலும் கண்ணீர்த் துளிகள்.


அவன் கண்ணீரைப் பார்த்தவள், “சாரி… என்னால உங்களுக்கு எப்பவும் பிரச்சனை தான்… நான் இங்க வந்திருக்கவே கூடாது. இங்க வாராமல் இருந்திருந்தால் எங்கயோ ஒரு மூலையில் கடைசி வரை உங்களை…” என்று ஆரம்பித்தவள் சற்று நிறுத்தி, “என்னோட காதலை மட்டும் நினைச்சிட்டே வாழ்ந்து முடிச்சிருப்பேன். ஆனா, இப்பப் பாருங்க… தன்வி சொன்னான்னு ஒரு நப்பாசையில் இங்க வந்து, உங்களோட சேர்ந்து வாழணும்னு ஆசைப்பட்டு இப்ப இப்படித் தேவையில்லாமல், மொத்தமா எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்குறேன். இங்க வராமல் இருந்திருந்தால் அட்லீஸ்ட் உங்களை நினைச்சிட்டு இருக்கற சந்தோஷமாச்சும் எனக்கு மிச்சம் இருந்திருக்கும். பட், இப்ப உன் காதலைத் துளியும் மதிக்காத மனுஷனை காலம் முழுமைக்கும் நினைச்சிட்டு இருக்கப் போறியா? உன் சந்தோஷம் மொத்தமும் போன அப்புறமும் அவனையே நினைச்சிட்டு வாழப் போறியான்னு என் மனசாட்சி என்னைக் கேள்வி கேக்குது.” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்து, “அது சொல்றதும் உண்மை தானே சார்… எனக்கிருந்த ஒரே சந்தோஷம் உங்க நினைவுகள் மட்டும் தான். அதையும் இங்க வந்து பறிகொடுத்துட்டேனே…” என்றவளைப் பார்க்கப் பார்க்க ஆதர்ஷனுக்கு இதயத்தை யாரோ வாள் கொண்டு அறுப்பது போல் ஒரு உணர்வு.


“வினி…” என்று அவன் கலங்கிய குரலில் அழைக்க, அவனைப் பார்த்து இடவலமாகத் தலையாட்டியபடி, “ப்ளீஸ் சார். இனி அப்படி கூப்பிடாதீங்க.‌‌ என் அம்மாவுக்கு அடுத்துப் பாசமா என்னை வினின்னு கூப்பிடறது நீங்க தான்.‌ ஒருவேளை, அதனால்தான் உங்களை எனக்குப் புடிச்சிதோ என்னமோ? புடிச்சது அந்த அளவோட நின்னிருந்தால் எவ்ளோ நல்லா இருந்திருக்கும்… இன்னைக்கு நீங்களும் நானும் இப்படி ஒரு நிலையில் நின்னிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காதே.‌‌..” என்றவளின் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர்த் துளிகள் வழியத் தொடங்க, “ஏன் எனக்கு உங்க மேல காதல் வந்துச்சு? ஏன் என்னை விரும்பாத ஒருத்தருக்காக எட்டு வருஷமாய் பைத்தியம் மாதிரி காத்திருந்தேன். உங்ககிட்ட இருந்து ஒரு அன்பான பார்வை, பாசமான வார்த்தைக்காக ஏன், லூசு மாதிரி ஏங்கி ஏங்கி உங்க பின்னாடியே அலைஞ்சேன்… ஏன், நீங்களே எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்த அப்புறமும், என் காதலைக் கேவலப்படுத்தின பிறகும்கூட உங்களை இன்னும் இன்னும் காதலிக்கிறேன்… ஏன்? ஏன்…? என்னால உங்களுக்கும் பிரச்சனை தான்… நான் ஏன் பொறந்தேன்? கடைசி வரை இப்படி அனாதையாவே வாழறதுதான் என் தல விதியா…” என்றவள் தன் கட்டுப்பாட்டையும் மீறித் தன் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதபடி கீழே சரிய, ஓடிச்சென்று அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் ஆதர்ஷ்.


அவன் நெஞ்சில் சாய்ந்தபடி அவள் கதறிக் கதறி அழ, ஆதர்ஷன் கண்களை இறுக்கி மூடித் திறந்தவன், தன் கரம் கொண்டு அவள் முகத்தைத் தன் உள்ளங்கையில் தாங்கியபடி அவள் முகத்தை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தான்.


அடுத்த நொடி எதையும் யோசிக்காமல் அழுகையில் நனைந்து உவர்ப்புடன் இருந்த அவள் துடிக்கும் அதரங்களைத் தன் இதழ் கொண்டு மூடியிருந்தான்.


அவளை ஆறுதல் படுத்த நினைத்து அவள் இதழ்களை அடைந்த நொடி, அவனுக்குள் புதைந்திருந்த உணர்வுகள் மடை திறந்த வெள்ளம் போல் அவன் உடலெங்கும் பரவ ஆரம்பித்தது.


எதை நினைத்து தர்ஷினியை ஒதுக்கி வைத்தானோ, இன்று அவளிடமே தன் உணர்வுகள் உயிர் பெறுவதை அணுஅணுவாக உணர்ந்து கொண்டவனின் கைகள் அவள் உடலில் அத்து மீறத் தொடங்கியது.


எந்த உணர்வு தனக்கு இல்லவே இல்லை என்று இதுவரை நினைத்திருந்தானோ, இன்று அந்த உணர்வின் ஆதிக்கத்தில் தன்னை மொத்தமாக இழந்திருந்தான் ஆதர்ஷன். 


இதழில் ஆரம்பித்த முத்தம் அவளின் முகம், கழுத்து தாண்டி தொடந்து கொண்டே போக, அவன் கையில் பொம்மையாகிப் போனாள் தர்ஷினி.


என்ன நடக்கிறது என்று சிந்திக்கும் மனநிலையில் இருவரும் இல்லாமல் போக, தன்னிலை இழந்து ஒருவருக்குள் ஒருவர் அடங்கிப் போயினர் இருவரும்.


இதழ்களைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கான தேடலின் ஆர்வம் அவனுள் அதிகரிக்க, அவனுக்குத் தன்னையே கொடுக்கத் தயாராக இருந்தாள் அவனவள்.


தன்னுள் இத்தனை ஆசையும், வேட்கையும் இருக்கிறதா? என்று ஆதர்ஷனே வியக்கும் அளவுக்கு அவளிடம் மொத்தமாகத் தொலைந்திருந்தான் அவன். அந்த நொடி தன் வினியைத் தவிர வேறு எதுவும் அவன் நினைவில் இல்லாமல் போக, அவளை அணைத்தபடி கட்டிலில் சரிந்தான்.


மெல்ல அவளின் ஆடைகளுக்கு விடுதலை கொடுத்தவன், அவளின் ஆடையாகத் தானே மாறிப் போனான். எங்கு தொடங்கி எங்கு முடிக்க என்று தெரியாமல் விழித்தவனை, அவன் ஆண்மையின் உணர்வுகளே முன் நின்று வழி நடத்த, அவளுள் இரண்டறக் கலந்தான் ஆதர்ஷ்.


அவன் கொடுத்த காயத்திற்கு இன்று அவனே மருந்தாகிப் போனான். அவனின் ஒவ்வொரு தொடுகையும், பெண்ணவள் உள்ளத்தின் காயத்தை இதமாக வருட, அவனைத் தன் வெற்று மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் தர்ஷினி. 


ஒவ்வொரு முறை முத்தமிடும் போது, “லவ் யூ வினி… லவ் யூ வினி…” என்று அவன் மந்திரம் போல் உச்சரித்தபடி, அவளின் தேகத்தில் அவன் இதழ்கள் முன்னேற, கண்ணீரில் ஆரம்பித்து காதலில் வேகமெடுத்து, காமத்தின் வாசலைத் தொட்டு அதில் மூழ்கிக் கரை கண்டிருந்தனர் இருவரும்.


அவளின் வாசம் தன்னுள் இன்னும் இன்னும் வேண்டும் என்று நினைத்தவன் அவளை மீண்டும் மீண்டும் நாட, இந்த ஜென்மத்தில் இந்த உடலும், உள்ளமும் அவன் ஒருவனுக்கு தான் என்று இருந்தவளும் விரும்பியே தன்னை முழுவதுமாக அவனிடம் அள்ளிக் கொடுத்தாள். பட்டப்பகல் வேளையை, இரவாக்கி இருவரும் கூடிக் களித்தனர். 


ஒருநாளில் பலமுறை அவளுடன் கலந்தவன், தன் உயிர் நீரை அவளுள் விதைத்திருக்க, அவளின் சிப்பி வயிற்றில் அவன் உயிர் நீர் முத்தாகச் சேர்ந்தது.


அவள் அவனிடம் யாசகமாகக் கேட்டதை, இப்போது விரும்பியே அவளுக்குக் கொடுத்திருந்தான் ஆதர்ஷ்.


ஊரறியத் தாலி கட்டித் தன்னவனுக்கு மனைவியாக வாழ ஆசைப்பட்டவள், இன்று தன்னவன் தன் மீது கொண்ட காதலை மட்டும் சாட்சியாக வைத்து அவனுக்கு மனைவியாகி அவனுடன் கலந்திருந்தாள் தர்ஷினி. 


களைப்பில் அசந்து போய், தன்னை முழுதாக அணைத்தபடி தன் மார்பில் தலை வைத்து உறங்குபவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷ். 


அவனால் நடந்ததை சற்றும் நம்ப முடியவில்லை. அவன் வாழ்வில் நடக்கும் என்று நினைத்துப் பார்க்காத அனைத்தும் கடந்த சில மணி நேரத்தில் நடந்து முடிந்திருந்தது.


மெல்ல உறங்கும் தர்ஷினியின் முகத்தில் புரண்ட முடிக்கற்றையை எடுத்து அவள் காதின் ஓரத்தில் தள்ளியவன், அவள் உறக்கத்தைக் கெடுக்காமல் மெதுவாக அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.


“எப்படிச் சொல்றதுன்னு தெரியல வினி… மனசுக்குள் அப்படி ஒரு நிறைவு. ஒவ்வொரு நாளும் உன்னை இழந்துட்டேன்னு நினைச்சு நினைச்சு மனசு அப்படித் தவிக்கும். சில நேரம் கடவுளைக் கூட திட்டி இருக்கேன், ஏன் வினி மாதிரி ஒரு நல்ல பொண்ணை என்னைக் காதலிக்க வச்சு அவ வாழ்க்கையோட விளையாடுறேன்னு… ஆனா, இப்ப தான் புரியுது, உன்னை மாதிரி ஒரு தேவதையை எனக்கே எனக்குன்னு எனக்காக மட்டும் அந்தக் கடவுள் அனுப்பி வச்சிருக்காருன்னு. இனி எப்பவும் உன்னை விட்டு நான் விலக மாட்டேன் வினி. சீக்கிரம் வீட்ல விஷயத்தைச் சொல்லி, நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொல்றேன். இனிமேலும் என்னால உன்னைவிட்டுப் பிரிஞ்சு இருக்க முடியாது. இத்தனை நாள் உன்னைவிட்டு இருந்ததே போதும். இனியும் அந்தக் கொடுமையை என்னால தாங்க முடியாது” என்று உறங்குபவளிடம் தன் மனதைச் சொன்னவன், அவளை அணைத்தபடி அவனும் களைப்பில் உறங்கத் தொடங்கியவனுக்குத் தெரியாது அவன் கண் விழிக்கும்போது அவனுக்காகக் காத்திருக்கும் அதிர்ச்சி.


மாலை போல் தூக்கம் கலைந்து எழுந்த ஆதர்ஷனின் கைகள் மெல்லப் படுக்கையைத் தடவியது. அங்கு தர்ஷினி இருந்த இடம் வெறுமையாக இருக்க, கண்களைத் திறந்து பார்த்தான்.


அந்த அறையில் அவள் இல்லாமல் போக, எழுந்து சென்று குளியலறையைப் பார்த்தான்.


அங்கேயும் அவள் இல்லாமல் போக, வீடு முழுவதும் அவளைத் தேடிப் பார்த்தான். எங்கும் அவள் இல்லாமல் போக, ஆதர்ஷனுக்கு மனதில் ஏதோ சரியில்லை என்று பட, உடனே தர்ஷினியின் அறைக்கு வந்து மீண்டும் அந்த அறையைச் சுற்றிப் பார்க்க, அங்கு அவளின் உடைகள் வைத்திருந்த கப்போர்டு காலியாக இருந்தது. அதைப் பார்த்ததும் ஆதர்ஷனின் தவிப்பு அதிகமானது.


“இல்ல… இல்ல… வினி என்னை விட்டுப் போக மாட்டா. அவ என்னைவிட்டு எங்கேயும் போக மாட்டா” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், மீண்டும் அந்த அறையைப் பார்த்தான். படுக்கைக்கு அருகில் இருந்த சிறிய டேபிள் மேசை விளக்கின் கீழ் ஒரு காகிதம் காற்றில் படபடத்தது.


அதைப் பார்த்த ஆதர்ஷனின் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொள்ள, மெல்ல நடந்து அந்த டேபிள் அருகில் சென்றான். ஏனோ அவன் கால்கள் அந்த நொடி கல்லாகிப் போனதோ என்னவோ, அந்த மூன்றடி தூரத்தைக் கடக்கவே அவனுக்கு வெகு நேரம் பிடித்தது.


நடுங்கும் கைகளால் மெல்ல அந்தக் காகிதத்தை எடுத்துப் பார்த்தவனுக்கு அதில் இருந்த செய்தியைப் பார்த்ததும் உலகம் தட்டா மாலையாகச் சுற்றியது.


“அன்புள்ள தர்ஷனுக்கு,


நான் கேட்டதைக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. உங்களோட வாழ்ந்த இந்த ஒருநாள் போதும், ஆயுளுக்கும் நான் உயிரோட வாழ… நான் போறேன். இனிமே உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன். நான் எங்க இருந்தாலும் உங்களை நினைச்சிட்டுதான் இருப்பேன். கடைசியா உங்கிட்ட ஒரு ரிக்வெஸ்ட், என்னோட பறவைகள் என்னோட பிள்ளைங்க மாதிரி. அதைத் தனியா தவிக்க விட்டுப் போறேன். ப்ளீஸ், அதையெல்லாம் தன்விகிட்டக் கொடுத்துடுங்க… 


இப்படிக்கு,


உங்கள் வினி…” என்று அந்த கடிதம் முடிந்திருந்தது.


ஆதர்ஷ் கலங்கிய கண்களுடன் மெல்லத் திரும்பி அந்தப் பறவைகளின் கூண்டைப் பார்த்தவன் மனதில் ‘உங்களை மட்டும் இல்ல, என்னையும் தனியாத் தவிக்கவிட்டுப் போயிட்டா’ என்றவனுக்கு அதற்கு மேல் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் போக, அப்படியே மண்டியிட்டு அமர்ந்தவன் வாய்விட்டுக் கதறி அழுதான்.


அந்தக் காகிதத்தின் சில வரிகளில் அவன் வாழ்க்கையின் மொத்த சந்தோஷத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டுச் சென்றிருந்தாள் தர்ஷினி‌.