இதயம் 15
இதயம் 15
அன்று காலை விடிந்தது முதல் அதீஷன் பதட்டமாகவே சுற்றிக் கொண்டிருந்ததைக் கவனித்துக் கொண்டு இருந்தார் அமிர்தா.
“டேய் அதீ… என்னாச்சு உனக்கு? காலையில் இருந்து பார்க்குறேன், நீ ரொம்பப் பதட்டமாவே இருக்க? என்ன ஆச்சு உனக்கு? ஆமா தன்வி எங்கடா? மணி பத்தாச்சு, இன்னும் ஒண்ணும் சாப்பிடாம ரூம்லயே இருக்கா? வயித்துல குழந்தை இருக்கேன்னு ரெண்டு பேருக்கும் எங்கயாச்சும் பொறுப்பு இருக்கா… இந்த மாதிரி நேரத்தில் ஒழுங்கா டைமுக்குச் சாப்பிட வேணாமா?” என்று அக்கறையுடன் கேட்டார்.
அதீஷன் அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் இருக்க, அவன் அருகில் சென்று மகனின் முகத்தைப் பார்த்தவர், “டேய் என்னடா ஆச்சு? ஏன் உன் முகம் இப்படி பதட்டமா இருக்கு? எதுவும் பிரச்சனையா?” என்று கேட்க, தாயைத் தாவி அணைத்துக் கொண்டவன், “எனக்குப் பயமா இருக்கு மா… எதோ பெருசா நடக்கப் போற மாதிரி மனசுக்குத் தோணுது…” என்று புலம்ப அமிர்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“டேய், இப்படி மொட்டையா சொன்னா எப்படிடா? என்ன பிரச்சனைனு கொஞ்சம் தெளிவாச் சொல்லுடா” என்ற தாயின் அணைப்பில் இருந்து விலகி வந்தவன், “அது வந்து ம்மா… நேத்து…” என்று ஆரம்பித்தவன் தர்ஷினி, தன்விடம் கேட்ட விஷயத்தை மட்டும் மறைத்துவிட்டு மீதி நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, அமிர்தா கால்கள் தொய்ந்து பொத்தென்று கீழே அமர்ந்தவர் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
“ஏன்டா… ஏன் அவனுக்கு மட்டும் இப்படி நடக்குது? தர்ஷினி மாதிரி ஒரு நல்ல பொண்ணு இவன் வாழ்க்கையில் வந்திருக்காளேன்னு நான் அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு இருக்கேன். இங்க இவன் எல்லாத்தையும் இப்படி போட்டுக் கெடுத்து வச்சிருக்கானே?” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க, அன்னையின் கண்ணீரைப் பார்த்த அதீஷனுக்கும் கண்கள் கலங்கியது.
“இதுக்கே நீங்க இப்படி கதறுறீங்களே, இதுல இன்னும் நடந்த எல்லாத்தையும் சொன்னா நீங்க என்னம்மா பண்ணுவீங்க…” என்று இயலாமையுடன் பேசிய மகனை நிமிர்ந்து பார்த்த அமிர்தா, “இதுக்கு மேல இன்னும் என்னடா நடக்கணும்? அதான் எல்லாத்தையும் உன் அண்ணன் கெடுத்து வச்சிட்டானே… இன்னும் என்ன இருக்கு?” என்று கேட்க, “இப்பப் பிரச்சனை தர்ஷன் பண்ணது இல்ல, உங்க மருமக இனிமேல் பண்ணப் போறது தான்.” என்றான் ஆற்றாமையாக.
“தன்வியா? அவ என்னடா செஞ்சா?” என்று கேட்டார் அமிர்தா.
“செஞ்சா இல்லம்மா… இனிமே தான் செய்யப் போறா” என்றபடியே அங்கு வந்தாள் தன்வி.
தன்வியின் இறுகிப் போயிருந்த முகத்தைப் பார்க்கப் பார்க்க அதீஷனுக்கு உள்ளுக்குள் மனம் பதற ஆரம்பித்தது.
தன்வி அருகில் சென்ற அமிர்தா, “என்ன ஆச்சு தன்வி? ஏன் உன் முகம் இப்படி இருக்கு?” என்றவர், “தர்ஷனை நினைச்சுக் கவலைப் பட்டுட்டு இருக்கியா…” என்றவர், “ம்ம்ம்… அவன் வாழ்க்கையை அவனே நாசம் பண்ணிக்கும் போது நம்ம என்னம்மா செய்ய முடியும்?” என்றவரின் குரலில் தன் மகனின் நிலையை நினைத்து அத்தனை வருத்தம்.
“இல்லம்மா, இது உங்க மகனைப் பத்தி இல்ல… உங்க மகன் ஆதர்ஷ் தான் உலகம்னு நினைச்சுட்டு இப்ப அந்த உலகமே இருண்டு போயிடுச்சுன்னு உடஞ்சு போய் அழுதுட்டு இருக்க ஒரு அப்பாவிப் பொண்ணைப் பத்தியது” என்றாள் நிதானமாக.
“தர்ஷினி பத்திச் சொல்றியா தன்வி?” என்று கேட்டார் அமிர்தா.
அதற்கு ஆமாம் என்று தலையாட்டினாள் தன்வி.
“என்ன பண்ண தன்வி… அப்படி ஒரு நல்ல பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க இவனுக்குக் கொடுத்து வைக்கலயே… நம்ம என்ன பண்ண முடியும்?” என்றார் வருத்தமாக.
“முடியும்மா… உங்க பையன் நினைச்சா அது முடியும். தர்ஷினி உங்க பையன் கிட்ட இருந்து ஒண்ணு எதிர்பார்க்குறாங்க… அதைக் கொடுக்க உங்க மகன் சம்மதிச்சால் போதும். அவங்களை இங்க வரவழைச்சு நம்ம செஞ்ச தப்புக்கு, அதுதான் நம்ம செய்யும் சரியான பரிகாரமா இருக்கும்.” என்றாள் அதே நிதானத்தோடு.
“வினிக்கு என்கிட்ட இருந்து என்ன வேணும்னு சொல்லு தன்வி… அவளுக்காக எதையும் செய்ய நான் ரெடியா இருக்கேன்.” என்று சொன்னபடி அங்கு வந்தான் ஆதர்ஷன்.
“சொல்லு தன்வி… வினிக்கு என்கிட்ட இருந்து என்ன வேணும்?” என்று கேட்டவனை ஊடுருவும் பார்வை பார்த்தவள், “அவங்க என்ன கேட்டாலும் தருவீங்களா?“ என்று கேட்டாள் ஒற்றைப் புருவம் உயர்த்தி.
“அவ என் உயிரைக் கேட்டால் கூடத் தருவேன்” என்றவனைப் பார்த்துக் கோணலாகச் சிரித்தவள், “கரெக்ட்… அவங்களுக்கும் உங்க உயிர் தான் வேணுமாம் ஆது… தருவீங்களா?” என்று அழுத்தமாகக் கேட்க, அமிர்தா பதறி விட்டார்.
“தன்வி, என்ன பேசுற நீ…” என்று அதட்ட, ஆதர்ஷன் முகத்தில் புன்னகையுடன், “அவ சந்தோஷமா இருப்பான்னா… அதுக்காக எதையும் செய்ய நான் தயாரா இருக்கும்போது ஆப்ட்ரால் (after all) இந்த உயிர், அதைத் தரமாட்டேனா?” என்று சொல்ல அதீஷனுக்கு தான் தலை சுற்றியது.
”டேய் அறிவு கெட்டவனே, அவ என்ன சொல்றான்னு புரியாம… நீ பாட்டுக்குப் பேசிட்டு இருக்கியே…” என்றான் எரிச்சலாக.
அதை எல்லாம் காதில் வாங்காத ஆதர்ஷ், “இப்பச் சொல்றேன் தன்வி, வினி சந்தோஷத்துக்காக என் உயிரைக் கொடுக்கணும்னு சொன்னாலும், அதுக்கும் நான் ரெடி…” என்றவனை அழுத்தமாகப் பார்த்த தன்வி, “சத்தியமா தான சொல்றீங்க? சொன்ன வார்த்தையை மீற மாட்டீங்களே?” என்று கேட்க, எதைப் பற்றியும் யோசிக்காமல் தன்வி தலையில் கை வைத்தவன்,
“உன்மேல சத்தியமாய் சொல்றேன். வினி என்ன கேட்டாலும் நான் செய்வேன்” என்று சொன்னது தான், அதீஷன் தலையில் கைவைத்துக் கொண்டு, “நாசமாப் போச்சு” என்று கத்த, அமிர்தா அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பமாக நின்றார்.
ஆதர்ஷ் அருகில் வந்த அதீஷன், “ஏன்டா டேய்… நீ எப்பவும் ஒரு விஷயம் பேசுறதுக்கு, செய்யறதுக்கு முன்ன அதோட விளைவுகளை யோசிக்கவே மாட்டியா? உன் இஷ்டத்துக்கு எல்லாத்தையும் செஞ்சிட்டு இருப்பியா” என்று கத்த, ஆதர்ஷ் அவனை நிமிர்ந்து பார்த்தவன், “வினிக்காக நான் எதையும் செய்வேன்டா” என்று சொல்ல அதில் கடுப்பான அதீஷன், “டேய் அறிவு கெட்டவனே… தர்ஷினி கேட்டது உன்னோட உயிரை இல்லடா… அவங்களுக்குள்ள உன்னோட உயிர் வேணும்னு கேட்டாங்க… இன் ஷாட் அவங்க உன் மூலமா அவங்களுக்கு ஒரு குழந்தை வேணும்னு கேட்டாங்கடா இடியட்... அதைதான் தன்வி உன்கிட்ட மறைமுகமாய் கேட்டா, அதுக்குதான் நீ அவ தலையில அடிச்சு சத்தியம் பண்ணிச் செய்யறேன்னு சொல்லி இருக்க. யூ ஸ்டுப்பிட்” என்று அனைத்தையும் சொல்லி முடிக்க, ஆதர்ஷன் கண்கள் அதிர்ச்சியில் விரித்துக் கொண்டது.
“என்..என்னடா சொல்ற நீ?” என்ற ஆதர்ஷனுக்கு வார்த்தைகள் வராமல் போக, “அவர் சொல்றது உண்மைதான். தர்ஷினி அக்கா வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வேணும். அதுக்கு அவங்களுக்குன்னு ஒரு துணை வேணும். அது புருஷனா இருக்கும்னு எதிர் பார்த்தாங்க, ப்ச்ச்… அதுதான் நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சே… அதான் தனக்கே தனக்குன்னு ஒரு குழந்தையாவது வேணும்னு கேக்குறாங்க.” என்றாள் நெஞ்சை நிமிர்த்தி.
அவள் சொன்னதில் எரிச்சலான ஆதர்ஷ், “ஏய் லூசு… என்னடி பேசிட்டு இருக்க நீ?” என்று ஆத்திரத்தில் கத்தியவனை நேருக்கு நேராகப் பார்த்தவள்,
“எனக்குத் தெரியும், நீங்க எதுக்குத் தயங்குறீங்கன்னு” என்றவள் திரும்பி அமிர்தாவைப் பார்த்து, “என்னை மன்னிச்சிடுங்க ம்மா… இப்ப நான் சொல்றதைக் கேட்டால் உங்களால தாங்கிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும், பட் எனக்கு வேற வழி இல்ல” என்றவள் திரும்பி ஆதர்ஷனைப் பார்த்து, “உங்க ப்ராப்ளம் என்னன்னு தஷ் சொன்னாரு… எனக்கு உங்க பிரச்சனை புரியுது. அதோட நீங்க நினைச்சதும் சரிதான்… வாழ்க்கையில் ரெண்டு பேர் சேர்ந்து வாழ காதல், அன்பு, பாசம், நம்பிக்கை தாண்டி பிஸிக்கல் ரிலேசன்ஷிப் தேவைனு நீங்க நினைக்குறீங்க, ஓகே… அது உங்களோட தாட்ஸ்… பட், அதே மாதிரி தான் எல்லாரும் நினைப்பாங்கன்னு இல்லை இல்ல… தர்ஷினி உங்களை மாதிரி நினைக்கல. அவங்க நீங்க ஆலனை லவ் பண்றீங்கன்னு தெரிஞ்ச பிறகும் தான் உங்களை லவ் பண்ணிட்டு இருந்தாங்க. அப்ப அவங்க இதெல்லாம் யோசிச்சு இருக்க மாட்டாங்களா என்ன? அவங்களும் படிச்சவங்க தான், கண்டிப்பா இதெல்லாம் பத்தி யோசிச்சு இருப்பாங்க… உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கலாம்னு கூட அவங்களுக்குப் புரிஞ்சிருக்கலாம்.” என்றவள், ஆதர்ஷனைத் துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தபடியே,
“இருந்தும் அவங்க நீங்க தான் அவங்க வாழ்க்கைனு நினைச்சாங்க… அதுக்கு ஒரே காரணம், காதல். உண்மையான காதல்… அது மட்டும் தான் அவங்களுக்கு முக்கியமா இருந்துச்சு… அதான் முட்டாள் தனமா உங்க பின்னாடி திரிஞ்சிட்டு இருந்தாங்க… அதான் சார் நேத்து செருப்பால அடிச்ச மாதிரி அவங்களுக்கு புரிய வச்சிட்டீங்களே… வாழ்க்கைக்கு முக்கியம் காதல் மட்டும் இல்லனு” என்றவளை நிமிர்ந்து பார்க்கவே ஆதர்ஷனுக்கு உள்ளம் கூசியது.
நேற்றைய தினம் தர்ஷினி எந்தளவுக்கு மனம் நொந்து போயிருப்பாள் என்று இப்போது ஆதர்ஷனுக்கு நன்றாகப் புரிந்தது. அஜயை வரவைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று காலம் தவறிய பின்பு அவன் மண்டையில் உரைத்தது.
“தன்வி நான்...” என்று தொடங்கியவன் முன் கையைக் காட்டிப் போதும் என்பது போல் பார்த்தவள், “இப்ப நீங்க ஏன் தயங்குறீங்கன்னு எனக்குப் புரியுது. உங்க பிரச்சனை என்னான்னு எங்களுக்கு நல்லாவே புரியுது.” என்றவள் தொடர்ந்து, “நீங்க நினைக்குற மாதிரி அவங்க உங்ககிட்ட பிஸிக்கல் ரிலேசன்ஷிப் வச்சு அது மூலமாய் தனக்கு ஒரு குழந்தை வேணும்னு கேக்கல…” என்றவளை ஆதர்ஷ் புரியாமல் பார்க்க, அவன் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட தன்வி, கண்களை மூடி ஆழ்ந்து மூச்செடுத்தவள்,
“அவங்களுக்கு நீங்க புருஷனா இருக்க வேணாம். வெறும் (sperm donor) ஸ்பேம் டோனரா இருந்தால் மட்டும் போதும்” என்று ஒரு பெரிய இடியை ஆதர்ஷ் தலையில் இறக்க, அதில் நிலை குலைந்து போனவன், “தன்வி” என்று கத்த, அவள் சற்றும் அவனின் கத்தலைக் காதில் வாங்காமல், “உங்களுக்குப் புடிக்கிதோ இல்லயோ, இதை நீங்க செஞ்சு தான் ஆகணும்.” என்றவளை, “ஏய்…” என்று அடிக்கக் கை ஓங்கியவன், அவளின் நிலையறிந்து பல்லைக் கடித்து தன்னை நிதானித்துக் கொண்டு, “இதெல்லாம் சரியா வராது குட்டிப் பாப்பா… தர்ஷினி வாழ்க்கையே நாசமாகிடும்” என்றான் வலியோடு.
“இப்ப மட்டும் என்ன அவங்க நல்லாவா இருக்காங்க… எப்ப உங்களை அவங்க காதலிக்க ஆரம்பிச்சாங்களோ அப்பவே அவங்க வாழ்க்கை நாசமாப் போச்சு. இப்ப அதைச் சரி பண்ணி, இனி வாழப்போற தன்னோட வாழ்க்கைக்கு ஒரு ஆதாரமா தான் அவங்க இந்தக் குழந்தையைக் கேக்குறாங்க… அதைக்கூட உங்களால செய்ய முடியாதா?” என்று கேட்க, ஆதர்ஷனுக்கு அவளுக்கு தன் நிலையை எப்படிச் சொல்லிப் புரியவைப்பது என்று புரியவில்லை.
“தன்வி…” என்று அவன் ஏதோ சொல்ல வர, “நோ… நான் எதையும் கேக்கத் தயாரா இல்ல. உண்டு, இல்லைன்னு இப்பவே சொல்லுங்க” என்றாள் பிடிவாதமாக.
“என்னால முடியாது” என்றான் அவனும் முடிவாக.
இருவருக்கும் இடையே நடக்கும் இந்தச் சண்டையில், பாவம் அதீஷனும் அமிர்தாவும், தான் யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் தவிப்போடு கையைப் பிசைந்து கொண்டு இருந்தனர்.
ஆதர்ஷ் பதிலைக் கேட்டு அவனை அனல் தெறிக்கும் பார்வை பார்த்த தன்வி, “உங்க முடிவை நீங்க சொல்லிட்டீங்க இல்ல… இப்ப என்னோட முடிவை நீங்க தெரிஞ்சிக்கோங்க” என்றவள் வேகமாகத் தன் அறைக்குச் செல்ல, அதீஷனுக்கு நெஞ்சம் படபடக்க ஆரம்பித்தது.
ஆதர்ஷ் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி நின்ற கணம், தன்வி பெரிய சூட்கேஸை இழுத்துக் கொண்டு வந்தவள், “நான் இந்த வீட்டை விட்டுப் போறேன்” என்று சொல்ல, அந்த வார்த்தையில் அதீஷன் உறைந்து நிற்க அமிர்தாவோ, “தன்வி என்னம்மா இது?” என்று பதற, ஆதர்ஷனோ, “மரியாதையா பெட்டியை உள்ள கொண்டு போய் வை, குட்டிப் பாப்பா” என்று அதட்டினான்.
எதையும் காதில் வாங்காத தன்வி, “நான் நினைச்சது நடக்கல… அப்புறம் நான் இங்க இருந்தால் என்ன இல்லாட்டி என்ன? என்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்த என்னோட ஆது வாழ்க்கை, இப்படி வறண்டு கிடக்கும் போது எனக்கு மட்டும் எதுக்கு இந்த வாழ்க்கை, சந்தோஷம் எல்லாம்? நான் போறேன். உங்க தம்பிக்கு வேற பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வையுங்க” என்றவளை அதீஷன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தானே தவிர வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.
“டேய் அதீ… என்னடா சிலை மாதிரி நிக்குற… இவளுக்குக் கொஞ்சம் புரிய வைடா” என்று ஆதர்ஷ் கத்த, அதீஷனிடம் எந்த அசைவும் இல்லை. அவளைப் பார்த்தது பார்த்தபடி அமைதியாக நின்றான்.
அவனின் அந்த அமைதி தன்வியை உயிரோடு வதைக்க, கண்களைத் தாண்டி வரத் துடித்த கண்ணீரைக் கஷ்டப்பட்டு பல்லைக் கடித்து அடக்கியவள், திரும்பி ஆதர்ஷைப் பார்த்து, “இப்பவும் உங்களுக்கு உங்க முடிவு, உங்க உணர்வுகள் தான் முக்கியம் இல்ல” என்று நிமிர்ந்து அவனைப் பார்த்து, “என் தலையில் அடிச்சு சத்தியம் பண்ண பிறகும் நீங்க இப்படிப் பேசுறீங்கன்னா அதுக்கு என்ன அர்த்தம்? நானும் என் புள்ளையும் செத்தாலும் பரவாயில்லைன்னு தானே” என்று தொடங்கும் முன்பே அவள் வாயைப் பொத்தி இருந்தான் ஆதர்ஷன்.
அவள் முகத்தைப் பார்த்து இடவலமாகத் தலையாட்டியபடி, “சொல்லாதடி… அந்த வார்த்தையை மட்டும் சொல்லாத. அப்படி மட்டும் நீ சொல்லிட்ட, அதுக்குப் பிறகு உன் ஆது உயிரோட இருக்க மாட்டேன்.” என்றவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, ஆழ்ந்து மூச்செடுத்தவன், “எனக்கு ஒரு நாள் டைம் கொடு… என் முடிவைச் சொல்றேன். இப்ப உள்ள போ தன்வி” என்றான் இரு கைகளைக் கூப்பி.
அவனின் இந்தச் செயலில் உள்ளம் பதறிய தன்வி, அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், பெட்டியை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்று விட்டாள்.
ஆதர்ஷ் திரும்பி அதீஷனைப் பார்த்தவன், “போய் அவளைப் பாருடா…” என்று சொல்ல அதீஷன் தளர்ந்த நடையுடன் அவன் அறைக்குச் சென்றான்.
அங்கு தன்வி ஜன்னல் கம்பியை இறுக்கிப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தவள், கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பியவள், அவளவனைப் பார்த்ததும், “தஷ்…” என்ற கதறலுடன் ஓடிச் சென்று அவனை நெஞ்சோடு சேர்ந்து இறுக்கிக் கட்டிக் கொண்டவளின் விழி நீர் அவன் மார்பை நனைத்தது.
காற்றுக் கூட இடையில் நுழைந்து செல்ல முடியாத அளவுக்குத் தன்னை இறுக்கி அணைத்திருந்த மனைவியைப் பதிலுக்கு அணைக்காமல் கல் போல் நின்றவனின் காதில் அவள் விசும்பல் சத்தம் கேக்க, மெல்லக் குனிந்து தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளையும், அவள் கொண்டு வந்த சூட்கேஸையும் மாறி மாறிப் பார்த்தவன், “அந்..அந்த சூட்கேஸ்ல ஒண்..ஒண்ணும் இல்ல தானே தன்வி? நீ… நீ என்னைவிட்டுப் போக நினைக்கல தானே?” என்றவன் குரலில் அத்தனை நடுக்கம்.
அவன் நெஞ்சில் சாய்ந்தபடி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த தன்வி, “அதை நான் அவ்ளோ ஈசியாத் தூக்கிட்டு வந்ததிலேயே தெரியல, அது காலின்னு… நானாவது என் தஷ்ஷை விட்டுப் போறதாவது…” என்று அழுகையூடே சொன்னவளை எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு இறுக்கி அணைத்தவன் கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்டியது.
“நீ என்னை விட்டுப் போக மாட்டேன்னு தெரியும் தான். ஆனாலும் நீ பெட்டியோட வந்து நின்றதும் சத்தியமா பயந்துட்டேன்டி. எங்…எங்க நீ என்னை விட்டு…” என்று தொடங்கியவனின் மீதி வார்த்தைகள் அவள் இதழ்களில் சிக்கிக் கொண்டது.
இருவரின் இதழ்களைத் தாண்டி, உள்ளம் தொட்டு உயிரை நிறைத்தது அந்த நீண்ட இதழணைப்பு.
“இதுக்கு அப்புறம் என்ன ஆனாலும் சரி… என் தஷ்ஷை விட்டு நான் போக மாட்டேன். அப்படி உங்களை விட்டு நான் போறதாய் இருந்தால் அது என்னோட சாவாய் மட்டும் தான் இருக்கும்” என்று சொல்ல வந்தவள் வார்த்தைகளை, அவன் இதழ்களுக்குள் இழுத்துக் கொண்டான் அவளவன்.
இங்கு தன்வியின் முடிவைக் கேட்டு அதிர்ந்த ஆதர்ஷ், இதைப்பற்றி தர்ஷினியிடம் பேசி அனைத்தையும் சரி செய்யலாம் என்று கணக்குப் போட்டிருக்க, விதியோ வேறு ஒரு கணக்குப் போட்டுக் காத்திருந்தது.