இதயம் 14
இதயம் 14
தர்ஷியைப் பார்க்க ஆதர்ஷ் வரச் சொல்லியது பற்றி அதீஷனிடம் சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டு இருந்தாள் தன்வி.
“இன்னேரம் ஆது அவர் மனசுல இருக்கிறதை தர்ஷினி அக்காகிட்டச் சொல்லி இருப்பாரு இல்ல?” என்று கணவனிடம் கேள்வி கேட்டவள், “ஆமா, சொல்லாம என்ன செய்வாரு… கொஞ்ச நாள் அக்காவைப் பார்க்காமல் இருந்ததுக்கே சாரு வாடிப் போயிட்டாரு… இனியும் அவரால் அக்காவை விட்டுப் பிரிஞ்சு இருக்க முடியாது… கண்டிப்பா இன்னேரம் அவர் மனசுல இருக்கிறது எல்லாம் சொல்லி இருப்பாரு” என்று கேள்வியும் அவளே கேட்டு பதிலையும் அவளே சொல்லிக் கொண்டாள்.
அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து, “என்ன தஷ், நான் பாட்டுக்கு இங்க பேசிட்டு இருக்கேன்… நீங்க அமைதியா ஏதையே யோசிச்சிட்டு இருக்கீங்க? அப்படி என்னதான் யோசிச்சிட்டு இருக்கீங்க?” என்றபடியே தன் கணவன் அருகில் வந்து அமர்ந்தாள்.
தன்னருகில் வந்து அமர்ந்தவள் முகத்தைப் பார்த்து இழுத்து மூச்செடுத்தவன், “நான் நேத்து தர்ஷன்கிட்டப் பேசினேன்.” என்றான் எந்த முகாந்திரமும் இல்லாமல்.
“இப்படித் தலையும் புரியாம வாலும் புரியாம, ஆதுகிட்டப் பேசினேன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் தன்வி.
“அன்னைக்கு பார்ட்டி முடிஞ்ச அன்னைக்கு தர்ஷினியை ட்ராப் பண்ணிட்டு வரும்போது, ஆதர்ஷ்கிட்ட ஒரு விஷயத்தைப் பத்திக் கேக்கணும்னு முடிவு பண்ணோமே… அந்த விஷயம் தான்” என்றதும் தான் தன்விக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.
“பே..பேசிட்டீங்களா? ஆது எ..என்ன சொன்னாரு?” என்று தட்டுத் தடுமாறிக் கேட்டவளுக்கு உள்ளுக்குள் அத்தனை பதட்டம்.
தன்வியின் பதட்டத்தைப் புரிந்து அவளைத் தன் தோளோடு சேர்த்து பக்கவாட்டாக அணைத்துக் கொண்டவன், “நம்ம நினைச்சது கரெக்ட் தன்வி.” என்றான் கலங்கிய குரலில்.
அதைக் கேட்டுச் சட்டென அவனைவிட்டு விலகி வந்தவள், “இ..இல்ல. நீங்க பொய் சொல்றீங்க.” என்றவள் தன் பயத்தை மறைத்துக் கொண்டு, “சும்மா என்னை பிராங்க் பண்ணத் தானே இப்படிச் சொல்றீங்க?” என்றாள் குரல் கரகரக்க.
அதற்கு இடவலமாக இல்லை என்பது போல் தலையாட்டிய அதீஷன், “அதுதான் தன்வி உண்மை. தர்ஷன் அப்படி தான் நினைக்கிறான். அவனால எந்தப் பொண்ணு கூடவும் பிஸிக்கல் ரிலேசன்ஷிப் வச்சிக்க முடியாதுன்னு அவன் பயப்படுறான். இதுவரை பொண்ணுங்களைப் பார்க்கும்போது எனக்குள்ள எந்த உணர்வும் வரலயே… இனியும் நான் அப்படியே இருந்துட்டால் என்ன பண்றது? தர்ஷினி என்மேல வச்சிருக்கற காதலை அட்வான்டேஜா எடுத்துட்டு அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டால் அது நான் அவளுக்குச் செய்யும் துரோகம். என்னால வினி வாழ்க்கையே நாசமாய் போயிடும்னு சொல்றான்.” என்று ஆதர்ஷ் சொன்னதைச் சொன்னவன், கூடுதல் தகவலாக அஜய் இங்கு வந்திருக்கும் விஷயத்தையும் சொல்ல, பதறி எழுந்தாள் தன்வி.
“இதெல்லாம் ஆது உங்ககிட்ட எப்பச் சொன்னாரு? என்று கேட்டாள்.
“நேத்து மார்னிங் தான்டி சொன்னான்” என்றான் அதீஷன்.
“அந்த அஜய் எதுக்கு இங்க வந்திருக்காரு? எப்ப வந்தாரு?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் தன்வி.
“இன்னைக்கு தான் வந்திருக்கான். அவன் எதுக்கு வந்தான்னு தெரியலடி…” என்றவன் அவளைப் பார்க்க, அவளோ கண்கள் உருட்டி உருட்டி எதையோ யோசித்தபடி நின்றாள்.
“என்னாச்சு தன்வி?” என்றவனைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டவள், “என்ன ஆச்சா? எல்லாம் நாசமாய் போச்சு… அந்த அஜய் அவரா இங்க வந்திருக்க மாட்டாரு… உங்க அருமை அண்ணா தான் இங்க அவரை வர வச்சிருப்பாரு” என்றாள் கோபமாக.
“அவன் ஏன்டி அஜயை இங்க வர வைக்கணும்?” என்று பேசத் தொடங்கியவன் வார்த்தைகள் பாதியில் நிற்க, “ஓஓஓஓ ஷிட்…” என்று தலையில் அடித்துக் கொண்டவன், “இவனையெல்லாம் என்னடி பண்றது?” என்று இயலாமையுடன் கேட்க, “இப்ப அதைப்பத்தி யோசிக்க டைம் இல்ல… கிளம்புங்க, உடனே தர்ஷினி அக்கா வீட்டுக்குப் போகணும்.” என்றாள் பதட்டமாக.
இருவரும் அமிர்தாவிடம் சொல்லிவிட்டுத் தர்ஷினி வீட்டை நோக்கிச் சென்றனர்.
தர்ஷினி ஹோட்டலில் இருந்து எப்படி வீடுவந்து சேர்ந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.
அவளை ஹோட்டல் வாசல் வரை தொடர்ந்து வந்த ஆதர்ஷ், அவள் ஒரு டாக்ஸியில் ஏறிச் செல்வதைப் பார்த்துவிட்டுத் தன் காரில் அந்த டாக்ஸியைப் பின் தொடர்ந்து வந்தவன், அவள் காரில் இருந்து இறங்கியதும் அவளிடம் ஓடி வந்தான்.
டாக்ஸிக்கு உண்டான பணத்தைக் கொடுத்து டிரைவரை அனுப்பி வைத்தவன், அவளைத் திருப்பிப் பார்க்க, அப்படி ஒருவன் அங்கு இல்லவே இல்லை என்பதுபோல் அவனைக் கடந்து சென்ற தர்ஷினி வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
கொஞ்ச நேரம் அவள் வீட்டு வாசலில் நின்றிருந்த ஆதர்ஷன், அவள் கோவம் குறைந்ததும் பேசிக் கொள்ளலாம், மேலும் மேலும் அவளைக் காயப்படுத்த வேண்டாம் என்று நினைத்து அவன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
அழுதழுது கண்களில் கண்ணீர் வற்றிப் போயிருந்த தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தாள் தர்ஷினி. அவளின் ஆகாய வண்ணப் புடவை அவளைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது அவளுக்கு.
அவனுக்குப் பிடித்த நிறத்தில் தேடித் தேடி அந்தப் புடவையை எடுத்தவள், எத்தனை எத்தனை ஆசைகளுடன் அதை உடுத்திக் கொண்டு அவனைப் பார்க்கச் சென்றாள். ஆனால், அவனோ சிறிதும் யோசிக்காமல் என்ன காரியம் செய்து விட்டான் என்று நினைக்க நினைக்க அவள் நெஞ்சம் விம்மியது.
வெகு நேரம் கண்ணாடியில் தன் உருவத்தையே பார்த்தபடி நின்றவளின் கவனத்தைக் கலைத்தது அவள் வீட்டின் அழைப்பு மணியின் ஓசை.
ஆதர்ஷ் தான் வந்திருக்கிறான் என்று நினைத்துக் கோவமாகக் கதவைத் திறந்து பார்த்தவள், அங்கு தன்வியும் அதீஷனும் நிற்பதைப் பார்த்தவள் அடுத்த நொடி, “தன்வி…” என்று அழுதபடியே தாவிச் சென்று அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள்.
அடுத்த சில கணங்கள் அமைதியாகப் போக, தன் மடியில் படுத்திருந்த தர்ஷினியின் தலையை ஆதரவாக வருடியபடி இருந்தாள் தன்வி.
அதீஷன், தர்ஷினியைப் பரிவோடு பார்த்தவன், “சாரி தர்ஷினி… அவன் செஞ்ச தப்புக்கு அவன் சார்பில் நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன்.” என்றவன் தொடர்ந்து, “ஆனா, இதை அவன் உங்களுக்கு நல்லதுன்னு நினைச்சுத்தான் செஞ்சிருக்கான். ஒரு பொண்ணை உண்மையா நேசிக்கும் எந்த ஒரு ஆணும் இந்த முடிவைத்தான் எடுப்பான். இதை நான் அவன் தம்பியா இருந்து சொல்லல, நானும் ஒரு ஆம்பளைன்ற முறையில, ஒரு பொண்ணை உயிருக்கு உயிரா நேசிக்கிறவன்ற இடத்தில் இருந்து சொல்றேன். ஒரு வேளை உங்களுக்கு அப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சா நீங்க அவனைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிப்பீங்களா? சொல்லுங்க. அப்ப உங்களால் அவன் லைஃப் பாதிக்கப்படக் கூடாதுன்னு தானே நினைப்பீங்க? அவனைவிட்டு விலகிப் போய் அவனுக்கு ஒரு நல்ல லைஃப் கிடைக்கணும்னு தானே யோசிப்பீங்க” என்றவனின் வார்த்தையில் தன்வி மடியில் இருந்து எழுந்து அமர்ந்த தர்ஷினியின் முகமே சொன்னது அவளின் பதிலை.
“அதே தாங்க அவனுக்கும். அவன் உங்களை விரும்பியும், எங்க அவனால் உங்க லைஃப் ஸ்பாயில் ஆகிடுமோ என்று பயந்து தான், ஒரு அவசரத்தில் யோசிக்காமல் இப்படி பண்ணிட்டான்.” என்று ஆதர்ஷனின் மனநிலையைத் தெளிவாகச் சொல்ல, அதைத் தர்ஷினியும் உணர்ந்துதான் இருந்தாள்.
“நீங்க சொல்றது சரிதான் அதீ. அவரு எல்லாத்தையும் எனக்காக, என் நல்லதுக்காக தான் செஞ்சாரு, நான் ஒத்துக்குறேன். ஆனா, ஒரு செண்ட் கூட அவர் செய்யப் போற இந்தக் காரியம் என்னை எந்த அளவுக்கு உடைச்சி நொறுக்கும்னு யோசிக்காமல் விட்டாரே… நான் அவர் மேல வச்சிருக்கிறது வெறும் காதல் மட்டும் இல்ல… அவர் மேல எனக்குப் பெரிய நம்பிக்கை இருந்தது. அவர் அடுத்தவங்களைக் காயப்படுத்த மாட்டார்னு… அந்த நம்பிக்கை இன்னைக்கு ஒடஞ்சு போச்சு அதீ… இதைச் செஞ்சா நான் மனசளவில் மரிச்சுப் போவேன்னு தெரிஞ்சும், என்னோட தர்ஷன் இப்படிப் பண்ணிட்டாரேன்றது தான் அதீ எனக்கு வலிக்கிது…” என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டியவள், “இங்க வலிக்குது.” என்று சொல்ல இருவருக்குமே அவளின் மனவேதனை புரிந்தது.
தன்வி கண்களில் கண்ணீரோடு தர்ஷினியைப் பார்த்தவள், “எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல… தேவையில்லாம உங்களை இங்க வரவச்சு உங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுத்துட்டேன்னு எனக்குத் தோணுதுக்கா… எங்க கடைசி வரை நீங்க ரெண்டு பேருமே இப்படித் தனியா இருந்திடக் கூடாதுன்னு தான் இப்படிச் செஞ்சேன். ஆனா, எல்லாம் வீணாகிடுச்சு. உங்களுக்காக என்னால ஒண்ணுமே செய்ய முடியாமல் போச்சே...” என்றவளின் வார்த்தையில் மெல்ல நிமிர்ந்து தன்வியின் முகத்தை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தாள் தர்ஷினி.
“உன்னால எனக்கு எதாவது செய்ய முடியும்னா, அதை நீ எனக்காகச் செய்வியா?” என்று கேட்டாள் அழுத்தமாக.
உடனே தன்வி, “கண்டிப்பாய் செய்வேன் க்கா…” என்றாள் தர்ஷினி என்ன கேட்கப் போகிறாள் என்று சிறிதும் யோசிக்காமல்.
“ஒரு நாள் நீ சொன்ன இல்ல… தர்ஷன் நீ என்ன கேட்டாலும் செய்வேன்னு உனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணி இருக்கார்னு?” என்று கேட்டாள் தர்ஷினி.
“ஆமா…” என்றாள் தன்வி.
“அந்தப் ப்ராமிஸை வச்சு நீ எனக்காக ஒண்ணு செய்யணும். செய்வியா?” என்று கேட்டாள் தாழ்ந்த குரலில்.
‘ஒருவேளை, தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி ஆதர்ஷனிடம் கேட்கச் சொல்லுவாளோ?’ என்று நினைத்த தன்வி, திரும்பி அதீஷனைப் பார்த்தாள்.
அவனுக்கும் தர்ஷினி கல்யாணம் பற்றிதான் கேட்கப் போகிறாள் என்று நினைத்து கண்களை மூடித் திறக்க, அதைப் புரிந்து கொண்ட தன்வி, “சொல்லுங்க நான் என்ன செய்யணும்?” என்று கேட்டவள், தர்ஷினி சொன்னதைக் கேட்டு தலையில் இடி விழுந்தது போல் அமர்ந்து விட்டாள்.
தன்வி இப்படி என்றால் அதீஷனோ, “ஆர் யூ மேட் தர்ஷினி. என்ன கேக்குறீங்கன்னு நல்லாப் புரிஞ்சு தான் கேக்குறீங்களா?” என்று கோவத்தில் கத்திவிட, அவனை நிமிர்ந்து பார்த்த தர்ஷினி, “எனக்கு என்ன வேணுமோ அதை நான் கேட்டேன். கொடுக்குறதும் மறுக்குறதும் தன்வி கையில் தான் இருக்கு…” என்றவள் தன்வியைப் பார்க்க, தன்வியோ இன்னும் தர்ஷினி கேட்டதின் அதிர்ச்சியில் இருந்து வெளியே வாராமல் உறைந்து இருந்தாள்.
அவளைப் பார்த்து, “சொல்லு தன்வி, நான் கேட்டதை உன்னால எனக்குத் தரமுடியுமா?” என்று மீண்டும் கேட்க,
அதீஷனோ, “வேணாம் தன்வி... இது வேணாம். இதனால யாருக்கும் எந்த நல்லதும் நடக்காது. ப்ளீஸ் வேணாம்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, “ஒகே… நீங்க கேட்டதை நான் செய்யறேன்.” என்றாள் உறுதியாக.
“தன்வி…” என்று கத்திய கணவனைப் பார்த்து, “உங்ககிட்ட வேற எதுவும் வழி இருக்கா தஷ்.” என்றவள் இடவலமாகத் தலையாட்டி, “இருந்த எல்லா வழியையும் உங்க அண்ணா அடைச்சிட்டாரு… சோ, எனக்கும் வேறவழி இல்ல. இவங்களை இங்க வரவச்சு நான் செஞ்ச தப்புக்கு இதுதான் நான் செய்யும் பரிகாரம்.” என்றவள், தர்ஷினியைப் பார்த்து, “ஒரு நாள் வெயிட் பண்ணுங்க…” என்றவள், அதீஷனைப் பார்த்து, “வீட்டுக்குப் போலாம் தஷ். என்னால முடியல. நான் இப்பத் தூங்கணும்.” என்றவள் தன் சூழ் கொண்ட வயிற்றைப் பிடித்தபடியே எழப் பார்க்க, அதீஷன் ஓடிவந்து அவளைத் தன் கை வளைவில் பிடித்துக் கொண்டான்.
இரவு விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்த சாலையையே வெறித்தபடி அமைதியாக அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்த அதீஷனுக்கு உள்ளுக்குள் அத்தனை கோவம். ஆனால், அவள் இருக்கும் நிலையில் அவளை எதுவும் சொல்ல முடியாது அமைதியாக இருந்தான்.
“தர்ஷினி கேட்டதை நிச்சயம் நீ செய்யத்தான் போறியா?” என்று கேட்டான் அழுத்தமாக.
அவன் கேள்விக்கு, அவள் தலையை மட்டும் “ஆமாம்” என்பது போல் ஆட்டினாள் அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல்.
“அவங்க தான் புத்தி கெட்டுப்போய் இப்படிக் கேட்டாங்க… நீ அதுக்குச் சரின்னு சொல்றது தப்புடி” என்றான் ஆற்றாமையாக.
அதற்குத் தன்வி அமைதியாக இருக்க, “இதுக்கு தர்ஷன் சம்மதிப்பான்னு நினைக்கிறயா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்.
உடனே தன்வி திரும்பி தன்னவனைப் பார்த்தவள், “அவரை எப்படிச் சம்மதிக்க வைக்கணும்னு எனக்குத் தெரியும்.” என்றாள் அழுத்தமாக.
அவளின் அழுத்தமே அவனுக்குச் சொன்னது அவள் தர்ஷனைப் பணிய வைக்க எதையும் செய்வாள் என்று. அதில் உள்ளுக்குள் அதிர்ந்த அதீஷன், “ப்ளீஸ்டி… எது செய்றதாய் இருந்தாலும் எல்லாத்தையும் யோசிச்சு முடிவெடு” என்றவனின் தவிப்பில் தன்விக்கும் உள்ளம் தகிக்கத்தான் செய்தது. ஆனால், இப்போதிருக்கும் சூழ்நிலையில், அவளால் தர்ஷினியைத் தவிர வேறு எதையும் யோசிக்க முடியாது போக அமைதியையே தன் ஆயுதமாக்கிக் கொண்டாள்.
இனி அவளிடம் இருந்து ஒரு வார்த்தையும் வராது என்று புரிந்து கொண்ட அதீஷன் தன் வீட்டின் முன் காரை நிறுத்தினான்.
தன்வியும் அதீஷனும் காரில் இருந்த இறங்கி உள்ளே வர, அங்கு ஹாலில் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருக்கும் தர்ஷனைப் பார்த்தனர்.
அவனைப் பார்த்ததும் அதீஷன் அவனை நோக்கிச் செல்லப் போக, அவன் கையைப் பிடித்து நிறுத்திய தன்வி, இடவலமாகத் தலையாட்டி, “இப்ப வேணாம்” என்று நிதானமாகச் சொன்னவள், தன் அறையை நோக்கிச் சென்றுவிட, அவள் அமைதிக்குப் பின் இருக்கும் முடிவை நினைத்து அதீஷனுக்கு உள்ளுக்குள் பதைபதைத்தது.
ஆதர்ஷைப் பார்த்து, ‘ஏன்டா இப்படி செஞ்ச?’ என்று மனதிற்குள் திட்டியவன் அவன் அறைக்குச் செல்ல, அங்கு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் தன்வி.
உறங்கும் மனைவியைப் பார்த்து ஆழ்ந்து மூச்செடுத்தவன், “நாளைக்கு என்ன இடியைத் தூக்கி என் தலையில் போடப் போறாளோ” என்று முணுமுணுதப்படியே அவள் அருகில் சென்று அவளை அணைத்தபடி படுத்துக் கொண்டவனின் தூக்கம் தொலைதூரம் தொலைந்து போனது.
அப்படி தர்ஷினி, தன்வியிடம் என்ன கேட்டாள்? அவள் கேட்டதை தன்வி அவளுக்குக் கொடுப்பாளா? இதில் ஆதர்ஷ், அதீஷன் நிலைமை என்னவாகும்?
பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வார்களா? இல்லை இணைந்தவர்கள் பிரிவைச் சந்திப்பார்களா?