இதயம் 13
இதயம் 13
ஆதர்ஷன் அழைத்ததால் அவனைப் பின் தொடந்து சென்றாள் தர்ஷினி.
ஒரு அறையின் முன்னால் நின்ற ஆதர்ஷன், தர்ஷினியைத் திரும்பிப் பார்த்தவன், “இந்த ரூம் தான் வினி, உள்ள வா” என்று அவன் முன்னே செல்ல சிரித்த முகத்துடன் உள்ளே சென்றவள் அறியவில்லை, இன்னும் சற்று நேரத்தில் அவள் சிரிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துப் போகப் போகிறதென்று.
அந்த அறை பார்க்க மிகவும் நேர்த்தியாக அழகாக இருக்க, “ரூம் இன்டீரியர் ரொம்ப அழகாய் இருக்கில்ல வினி?” என்று கேட்டவனுக்கு எப்படித் தெரியும், அவள் கவனம் முழுவதும் அவன் ஒருவன் மீது மட்டும் தான் இவ்வளவு நேரமாக இருக்கிறதென்று.
அவன் கேள்வியில் சட்டென இமைகளைச் சிமிட்டியவள், “என்ன? என்ன கேட்டீங்க தர்ஷன்?” என்று கேட்க, அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தவன், “ரூம் இன்டீரியர் ரொம்ப நல்லா இருக்கில்லன்னு கேட்டான்” என்றான்.
தர்ஷினி ஒருமுறை அந்த அறையைச் சுற்றிப் பார்த்தவள், “ம்ம்ம் அழகா இருக்கு” என்றாள் பட்டுப் போன்ற மென் குரலில்.
அவள் நின்று கொண்டிருப்பதைக் கவனித்த ஆதர்ஷ், “உக்காரு வினி…” என்றவன் “என்ன குடிக்கிற?” என்று கேட்டவன் அவளுக்கு கோல்ட் காஃபி பிடிக்கும் என்பதால், “கோல்ட் காஃபி ஓகே வா?” என்று கேட்க, “ம்ம்ம்” என்றாள் அதே மென் குரலில்.
அவளின் அமைதியும், குரலில் இருந்த மென்மையுமே ஆதர்ஷனுக்கு உரைத்தது அவள் மனதில் என்ன எதிர்பார்த்து இங்கு வந்திருக்கிறாள் என்பதை.
கண்களை மூடி ஆழ்ந்து மூச்செடுத்த ஆதர்ஷன், ஹோட்டல் லாபிக்கு அழைத்து இரண்டு கோல்ட் காஃபிகளை ஆர்டர் செய்தான்.
“உங்களுக்கு தான் கோல்ட் காஃபி புடிக்காதே?” என்றவளை ஏறிட்டுப் பார்த்தவன், “ம்ம்ம்” என்றான் அவளைப் போலவே.
ஒரு சில நொடிகள் அமைதியாகக் கழிய, “வினி…” என்று அழைத்தான் ஆதர்ஷ்.
“சொல்லுங்க தர்ஷன்” என்றவள் வெட்கத்தில் தலை நிமிராமல், அந்த ஹோட்டல் அறையில் தரையில் விரிக்கப் பட்டிருந்த கார்பெட்டை பார்த்தபடியே இருந்தாள்.
“நா..நான் உன் விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் வினி. அதை உன்கிட்டச் சொல்லி உன்னோட முடிவைத் தெரிஞ்சிக்கலாம்னு தான், உன்னை இங்க வரச்சொன்னேன்” என்றான் தயங்கித் தயங்கி.
மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் அத்தனை எதிர்பார்ப்பும் ஏக்கமும் நிறைந்து வழிய, அதைப் பார்த்த ஆதர்ஷனுக்கு அடுத்த வார்த்தை பேச முடியாதபடி தொண்டை அடைத்தது. எச்சிலை விழுங்கியபடியே அவளைப் பார்த்தவன், “அது வினி... நா..நான் உனக்காக…” என்று பேசத் தொடங்கியவனின் அலைபேசி ஒலிக்க, திரையில் யார் அழைப்பது என்று பார்த்தவனுக்குப் பதட்டம் தொற்றிக் கொண்டது.
அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவன் தர்ஷினியைப் பார்த்து, “இதோ வந்திடுறேன்” என்றபடி அலைபேசியில் பேசியபடியே வெளியே சென்றான்.
அவன் சென்ற பிறகே தர்ஷினிக்குச் சீராக மூச்சு வந்தது. மெல்லக் கண்களைச் சுழற்றி அந்த அறையைச் சுற்றிப் பார்த்தவள், ‘ம்ம்ம்… அவர் சொன்ன மாதிரி ரூம் ரொம்ப அழகா தான் இருக்கு…’ என்றபடியே எழுந்து அங்கிருந்த பெரிய கண்ணாடி ஜன்னல் அருகில் சென்றவள், இரவு நேரத்தில் வானத்தில் தெரிந்த நிலவினை ரசித்தபடியே நின்றாள்.
கொஞ்ச நேரம் கழித்துத் தன் பின்னால் யாரோ நடந்து வரும் காலடிச் சத்தம் கேட்டு, இதழ்கள் மலரச் சட்டெனத் திருப்பிப் பார்த்தவளின் முகத்தில் இருந்த புன்னகை, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போக அவள் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.
“நீங்க இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டாள்.
அங்கு என்ன நடக்கிறது என்று அவளுக்குத் தெளிவாகப் புரியாமல் இருந்தாலும் அவள் உள்ளுணர்வு ஏனோ, எதுவோ சரியில்லை என்பதை அவளுக்குத் தெளிவாக உணர்த்தியது.
புடவையில் தேவதை போல் இருந்தவளை விழி இமைக்காமல் ரசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்களோ, “பரவாயில்ல தர்ஷினி… எங்க என்னை மறந்திருப்பீங்களோன்னு நினைச்சேன்.” என்றவன் முகத்தில் அவள் இன்னும் தன்னை நினைவு வைத்திருக்கிறாள் என்ற மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.
“ப்ளீஸ் அஜய்… முதல்ல இங்க நீங்க என்ன பண்றீங்கன்னு சொல்லுங்க” என்றவள் குரலில் அத்தனை நடுக்கம். அவன் ஏன் வந்தான் என்று அவள் நினைத்த காரணத்தை, அவன் சொல்லி விடக் கூடாதென்று.
அஜய், “உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் தர்ஷினி…” என்றவன் ஒரு கணம் நிறுத்தி, “ஆதர்ஷ் உன்கிட்ட ஒண்ணும் சொல்லலியா?” என்று கேட்க, தர்ஷினிக்குள் ஏதோ ஒன்று உடைந்து சுக்கு நூறாகச் சிதறியது.
விழுந்து விடுவேன் என்று துடித்த கண்ணீரைக் கஷ்டப்பட்டு, உதட்டைக் கடித்து அடக்கி வைத்தவள், “தர்ஷனுக்கு நீங்க இங்க வரீங்கன்னு தெரியுமா?” என்று கேட்டாள் தொண்டை அடைக்க.
“தெரியுமாவா? அவர் தானே என்னை இங்க வர வச்சாரு…” என்று அலுங்காமல் ஒரு பேரிடியை அவள் தலையில் போட்டான்.
“அவ..அவரா?” என்றவளுக்கு வார்த்தைகள் கூட முழுதாக வராமல் தொண்டை உலர்ந்துவிட, எச்சிலை விழுங்கியபடி “தர்ஷனா உங்களை இங்க வரச் சொன்னார்?” என்று கேட்டாள் மீண்டும் அவன் சொன்னதை நம்ப முடியாமல்.
அவளைச் சற்று வித்தியாசமாகப் பார்த்த அஜய், “ஏன் திரும்பத் திரும்ப அதையே கேட்டுட்டு இருக்க தர்ஷினி.” என்றவன், “அப்ப அவர் உன்கிட்ட எதுவும் சொல்லலியா?” என்று கேட்டான்.
அதற்கு இல்லை என்று தலையாட்டியவள், “அவர் உங்ககிட்ட என்ன சொன்னாரு?” என்று கேட்டவள் குரலில் ஜீவனே இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அஜய்க்கு உள்ளுக்குள் ஏதோ உறுத்தியது.
“ரெண்டு நாள் முன்னாடி ஆதர்ஷ் எனக்கு கால் பண்ணாரு… அதீ சொல்லி, நான் உன்னை மேரேஜ் பண்ணிக்க ஆசைப்பட்ட விஷயம் அவருக்குத் தெரிஞ்சிருக்கும் போல… இன்னும் தர்ஷினியைக் கல்யாணம் பண்ணிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கான்னு கேட்டாரு… நானும் ஆமான்னு சொன்னேன். அப்ப உடனே இங்க வாங்க, நம்ம அடுத்து என்னன்னு பேசலாம்னு சொன்னாரு… நான் நீ இதுக்குச் சம்மதிப்பியான்னு கேட்டேன். அதை நான் பார்த்துக்குறேன்னு சொல்லிட்டாரு… நானும் இங்க கிளம்பி வந்துட்டேன். இந்த ரூம் கூட நம்ம ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரணும்னு ஆதர்ஷ் தான் புக் பண்ணாரு” என்று நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தான் அஜய்.
அஜய் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தர்ஷினியின் முகம் உணர்வுகள் துடைத்து, ஆள் நடமாட்டம் இல்லாத சாலைபோல் வெறுமையாகிப் போக, அஜய்க்கு அவளைப் பார்க்கவே ஒரு மாதிரி கஷ்டமாக இருந்தது.
தன் வருகையால் தான் அவளுக்கு இந்த நிலையோ என்று நினைத்து வருந்தியவன், “சாரி தர்ஷினி… நீங்க ஏற்கனவே என்னை விரும்பலன்னு சொல்லியும், நான் இங்க வந்தது என் தப்புதான். ஆதர்ஷ் ஃபோன் பண்ணும்போது ஒரு சின்ன எதிர்பார்ப்பு. எங்க நீங்க இப்ப ஓகே சொல்லிட மாட்டீங்களான்னு…” என்றவன் தன் நெற்றியை விரல் கொண்டு தேய்த்தபடியே, “என் தப்பு தான்… நான் இங்க வந்திருக்கக் கூடாது, சாரி” என்று உளமாரச் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் முன் கையெடுத்துக் கும்பிட்டபடி, “முடிஞ்சா என்னை மறந்திடுங்க…” என்றவள் அதற்கு மேல் நிற்க முடியாமல் வலுவிழந்து கால்களை மடக்கி அப்படியே தரையில் அமர்ந்துவிட, ஏமாற்றம் நிறைந்த கண்களுடன் அவளைப் பார்த்த அஜய், “சாரி தர்ஷினி.” என்றுவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.
அஜய் வெளியே வருவதைப் பார்த்ததும், ஆதர்ஷ் அவனை நோக்கி வேகமாக வந்தவன் அஜய்யின் முகத்தை பார்த்தான். அவனின் வாடி இருந்த முகமே அவனுக்கு உள்ளே என்ன நடந்திருக்கும் என்று அனைத்தையும் சொல்லிவிட, “என்ன ஆச்சு அஜய்?” என்று கேட்டான்.
ஆதர்ஷனை நிமிர்ந்து கூர்மையாகப் பார்த்த அஜய், “தர்ஷினி உங்களை லவ் பண்றாங்களா தர்ஷன்?” என்று நேரடியாகக் கேட்டுவிட, அவன் கேள்வியில் ஆதர்ஷ் தடுமாறி தான் போனான்.
“வி..வினி எதுவும் சொன்னாளா?” என்று கேட்டான் உள்ளே சென்ற குரலில்.
அஜய் இடவலமாகத் தலையாட்டியவன், “அவங்க எதுவும் சொல்லல… பட் அவங்க என்னைத் தவிப்பா பார்த்த பார்வையை வச்சே நான் புரிஞ்சிக்கிட்டேன். அவங்க யாரையோ டீப்பா லவ் பண்றாங்கன்னு… இப்ப உங்க முகத்தில் தெரிஞ்ச பரிதவிப்பைப் பார்த்து அவங்க லவ் பண்றது உங்களைன்னு புரிஞ்சிடுச்சு…” என்றவன் நிறுத்தி, “டோண்ட் வொரி ஆதர்ஷ், அவங்க என்னை ஏத்துக்கல…” என்றவனுக்கு ஆதர்ஷின் பரிதவிப்புக்கான காரணம் தெளிவாகப் புரிந்தது, ஆனால், பாவம் அது புரிய வேண்டியவனுக்கு இன்னும் புரியவில்லை.
“இந்த ஜென்மத்தில் தர்ஷினி உங்களைத் தவிர வேற யாரையும் மனசுல நினைக்க மாட்டாங்கன்னு தோனுது தர்ஷன். முடிஞ்சா உங்களுக்குள்ள இருக்கற பிரச்சனையை ஷார்ட் அவுட் பண்ணிட்டு அவங்களை மேரேஜ் பண்ணிக்கோங்க” என்ற அஜய் வேகமாக அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட, ஆதர்ஷ் தான் காட்டில் தொலைந்த பிள்ளைபோல் வழி தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றான்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்ற ஆதர்ஷன், தர்ஷினி இருந்த அறைக்குள் நுழைந்தான்.
தரையில் முட்டி போட்டுத் தொய்ந்து போய் அமர்ந்திருந்த தர்ஷினியின் கோலத்தைப் பார்க்கவே அவனுக்கு மனதிற்குள் பிசைந்தது.
மெதுவாக அவள் அருகில் சென்றவன் மெல்லிய குரலில், “வினி” என்று அழைக்க, அவன் குரல் கேட்டதும் விருட்டென்று தலையை நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், சட்டென எழுந்து அவன் முன் நெஞ்சை நிமிர்த்தி நின்றவளின் கை, அடுத்த நொடி தன் ஐந்து விரல்களும் அவன் கன்னத்தில் பதியும்படி ஓங்கி அறைந்திருந்தாள்.
அவள் அடித்த அடியில் தீப்பற்றி எரிந்த தன் கன்னத்தைக் கை கொண்டு அழுத்திப் பிடித்தவன், அவள் முகத்தைப் பார்த்து ஒரு நிமிடம் பயந்து தான் போனான்.
இதுநாள் வரை மென்மையும், சிரிப்பும் தவழ்ந்து மிளிர்ந்த அவள் முகத்தில் இன்று ரௌத்திரம் எரிமலைக் குழம்பாக விழித்துக் கொண்டு இருந்தது. அக்னிப்பழம் போல் சிவந்திருந்த அவள் கண்களைப் பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவன், “வினி…” என்று தவிப்பாக அழைக்க, மீண்டும் பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்தவள், அவன் முன் தன் ஆள்காட்டி விரலை நீட்டி, “இனி என்னை அப்படிக் கூப்பிடாத… என் பேரைச் சொல்லும் உரிமையை நீ இழந்துட்ட. எப்ப இன்னொருத்தனை மாப்பிள்ளைன்னு நீ கூட்டி வந்தியோ… அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சு. இது வரைக்கும் உனக்கு என் காதல் புடிக்கலைன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, இப்ப தான் தெரியுது, உனக்கு என் காதல் புரியவே இல்லன்னு. நீ என்னை வேணாம்னு சொல்லி இருந்தால் கூட எனக்கு இவ்ளோ வலிச்சிருக்காது… ஆனா, இன்னொருத்தனைக் கூட்டி வந்த பாரு…” என்றவள் அவனை அருவருப்பாகப் பார்த்தவள், “இதுக்கு மேல நீ என் காதலையும், என்னையும் அசிங்கப் படுத்தவே முடியாது.” என்றாள் அழுத்தமாக.
“இல்ல வினி… நீ நினைக்கிற மாதிரி இல்ல. எனக்கு உன் காதல் புரியாமலோ, புடிக்காமலோ இல்லடி… உன்னை எனக்குப் புடிக்கும். ரொம்பவே புடிக்கும். அதான் உன்னை விட்டு விலகிப் போறேன்.” என்றவன் ஒரு கணம் நிறுத்தி, “நான் உனக்குப் பொருத்தமான ஆள் இல்ல வினி… என்னைக் கல்யாணம் பண்ணா உன் வாழ்க்கை நல்லா இருக்காது வினி. நான்… என்னால… உனக்கு ஒரு நல்ல புருஷனா இருக்க முடியும்னு தோணல” என்றவன் குரல் கரகரத்தது.
அவன் சொன்னதைக் கேட்டு கண்கள் இடுக்கி அவனை அழுத்தமாகப் பார்த்தாள் தர்ஷினி.
அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்த ஆதர்ஷ், “நான் ஆலனை லவ் பண்ணல தான். ஆனா, அவனை லவ் பண்றேன்ற நினைப்பில் தான் நான் இருந்தேன். என்னோட லைஃப் அவன் தான்னு நினைச்சிட்டு இருந்தேன். பட் அது நடக்கல… ஆனா, அதுல எனக்குப் பெரிய வருத்தம் எல்லாம் இல்ல. ஆலன் பிரிவை நினைச்சு எனக்கு வருத்தம் தான். ஆனா, அது ஒரு நல்ல நண்பனை இழந்த வருத்தம். அவ்ளோதான். பட், நீ அப்படி இல்ல வினி. உன்னைப் பார்க்காம இருந்த இந்த ஒரு வாரத்தில் நான் நானாவே இல்ல. பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிடுச்சு. உன்னைத் தாண்டி எதையும் என்னால் யோசிக்க முடியல…” என்றவனை அவள் நேருக்கு நேராகப் பார்க்க, அவளைப் பார்க்கத் தயங்கி எச்சில் விழுங்கித் தொண்டையை நனைத்துக் கொண்டவன், “எஸ் வினி… நானும் உன்னை விரும்புறேன். உயிருக்கு உயிராய் விருப்புறேன்.” என்றபடியே அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், “ஐ லவ் யூ வினி… ஐ லவ் யூ சோ மச்” என்றான் அடிமனதில் இருந்து.
இவ்வளவு நாள் எந்த வார்த்தையைக் கேட்பதற்காகத் தவமிருந்தாளோ அந்த வார்த்தைகளைக் கேட்டு விட்டாள். அவளவன் வாய்மொழியில் இருந்தே அவன் காதலை அறிந்து கொண்ட பிறகும், அவள் முகத்தில் ஒரு சிறு மாற்றம் கூட இல்லாமல் சிலை போல் அவனை இன்னும் முறைத்த படியே நின்றாள்.
அவள் பார்வையின் அர்த்தம் என்னவென்று உணர்ந்த ஆதர்ஷ், எழுந்து அவள் முன் நின்றவன், “நான் உன்னை உயிராகக் காதலிக்கும் போது உன்னை இன்னொருத்தனுக்கு விட்டுக் கொடுக்க எனக்கு எவ்ளோ மனசு வலிச்சிருக்கும்னு உனக்குப் புரியாது வினி… ஆனா, உன் நல்லதுக்காக அந்த மரணவலியைத் தாங்கிட்டு அஜய்யை இங்க வரவச்சேன். நீ நல்லா இருக்கணும்னு தான் அப்படி செஞ்சேன்.” என்றவன் ஒரு நிமிடம் நிறுத்தி, “ஏன்னா? என்..என்னால ஃபேமிலி லைஃப்ல உனக்கு நல்ல ஹஸ்பண்டா இருக்க முடியும்னு தோணல. எனக்கு உன்னைப் புடிக்கும், பட், உ..உன்னோட பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் வச்சிக்க முடியும்னு எனக்குத் தோணல. எனக்கு என்மேல நம்பிக்கை இல்ல. ஐ திங்க் ஐ ஆம் அன்பிட் ஃபார் ஃபேமிலி லைப்…” என்றவன் முகம் கூனிக் குறுகி விட, மீண்டும் அவன் கன்னத்தில் இன்னொரு அறை விழுந்தது.
“என்னை இவ்ளோ சீப்பா நினைச்சிட்ட இல்ல நீ… நான் உன்னைப் பத்தித் தெரியாம தான்டா முதல்ல உன்னை லவ் பண்ணேன். ஆனா, நீ ஆலனை லவ் பண்றேன்னு சொன்ன பிறகு தான்டா உன்னை இன்னும் இன்னும் விரும்ப ஆரம்பிச்சேன். ஆலன் உன் லைஃப்ல இருந்து போன அப்புறம் நான் உன் வாழ்க்கையில் வர நினைச்சதுக்கு ஒரே காரணம் என்னோட காதல் மட்டும் தான். பதிலுக்கு அந்தக் காதலைத் தான் உன்கிட்ட எதிர்பார்த்தேன். அதுக்கு நீ எனக்கு நல்ல மரியாதை கொடுத்துட்ட ஆதர்ஷ்…” என்றவள் கண்களில் அத்தனை ஏமாற்றம், தன்னவன் தன் காதலை இந்த அளவுக்கு கீழ் இறக்கிவிட்டானே என்று.
“இல்ல வினி… நான் உன் லைஃப் நல்லா இருக்கணும்னு தான்” என்றவனைப் போதும் என்பது போல் கையைக் காட்டி நின்றவள்,
“நீ என்னை வேணாம்னு சொல்லி இருந்தால் கூட உன்னை நெனச்சிட்டு நிம்மதியா வாழ்ந்திருப்பேன். ஆனா, இப்பச் சொன்னியே, ஒரு கேவலமான காரணம்” என்று கண்களை அழுத்தமாக மூடித் திறந்தவள், “இனிமே…” என்று இடவலமாக தலையாட்டியவள்,
“உனக்கு வேண்டியது, நான் உன் வாழ்க்கையை விட்டுப் போகனும் அதானே…” என்றவள் அவன் விழிகளை அழுத்தமாகப் பார்த்தபடி, “இனி என் வாழ்க்கையிலும் சரி, என் மனசுலயும் சரி நீ இல்ல…” என்றாள் கோபமாக.
“ப்ளீஸ் வினி… கொஞ்சம் நில்லு வினி”
அவன் கத்திக்கொண்டே அவள் பின்னோடு செல்ல, அவன் பின்னால் ஓடி வருவதைக் கூடப் பொருட்படுத்தாது அந்த இடத்தை விட்டுச் சென்றாள்.