இதயம் 17

 இதயம் 17


தர்ஷினியின் கடிதத்தைப் படித்த ஆதர்ஷனுக்கு ஒரு நிமிடம் உலகமே நின்று போனது போல் ஆனது. 


எதுவும் வேண்டாம் என்று விலகி, ஒதுங்கி ஓடி ஒளிந்தவனைத் தேடிப் பிடித்து, உண்மையாகக் காதலித்து, விடாமல் அவனுக்காக அவனுடனே போராடி இன்று அவன் மனதை முழுவதும் தன் வசப்படுத்தி விட்டு, இனி அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலையில் தன்னை நிறுத்திவிட்டு, இப்படி விட்டுச் சென்றவளை நினைக்க நினைக்க ஆதர்ஷனுக்கு நெஞ்சமெல்லாம் கசந்தது.


’நான் அப்படியே இருந்திருப்பேனேடி… என்னை அப்படியே விட்டிருக்கலாம் இல்ல? நான் விலகி விலகித் தானேடி போனேன்… என்னை துரத்தித் துரத்தி வந்து காதலிச்சது, என்னையும் உன்னைக் காதலிக்க வச்சது, இப்படி என்னைப் பாதியில் விட்டுட்டுப் போகத் தானா..‌.‌.?’ என்றவன் அவளின் கையெழுத்து இருந்த அந்தக் காகிதத்தைத் தன் நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டவனின் உள்ளம் கத்திக் கதறும் ஓசையில் அந்த அறையே அதிர்ந்தது.



தர்ஷினி அவனை விட்டுச் சென்ற தினம், இரவு வரை தர்ஷினியைத் தேடி தெருத் தெருவாக அலைந்தான் ஆதர்ஷ். ஒருவேளை தன்வியிடம் தர்ஷினி, அவள் எங்கு செல்கிறாள் என்று சொல்லி இருப்பாளோ என்று தோன்ற நேராகத் தன்வி, அதீஷனிடம் வந்தவன், தர்ஷினி அவனை விட்டுச் சென்று விட்டதாகச் சொன்னவன், அவள் தன்வியிடம் ஏதாவது சொன்னாளா? என்று கேட்க அதைக் கேட்ட தன்வி கொதித்து விட்டாள்.


“என்ன? தர்ஷினி ஊரை விட்டுப் போயிட்டாங்களா?” என்று கேட்டவள் அதிர்ந்து தான் போனாள்.


“ஆமா தன்வி… அவ எங்க போனான்னு தெரியல… நான் அவளுக்கு கால் பண்ணேன். ஆனா அவ ஃபோன் சுவிட்ச் ஆஃப்னு வருது‌. எனக்கு என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியல…” என்றவன் கண்களில் அத்தனை பரிதவிப்பு.


அதீஷன், தன்வி இருவருக்கும் ஆதர்ஷ் முகத்திலேயே நன்கு தெரிந்தது காலையில் இருந்து அவளைத் தேடித் தேடி எத்தனை தூரம் அவன் களைத்துப் போயிருக்கிறான் என்று. 


ஆதர்ஷனின் சோர்ந்த முகத்தை ஒரு கணம் பொறுமையாகப் பார்த்த தன்வி, இகழ்ச்சியாகச் சிரித்தபடி, “ம்ம்ம்… ஒருவழியா உங்களுக்கு இருந்த ஒரு பெரிய பிரச்சனை முடிஞ்சு போச்சு ஆது… இனிமே என்ன? நீங்க சந்தோஷமா இருக்கலாம். அதான் தர்ஷினி போயிட்டாங்களே… இனிமே நீங்க நிம்மதியா இருங்க. இனிமே நானும் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ம்ம்ம் போங்க, போய் இந்த சந்தோஷத்தை என்ஜாய் பண்ணுங்க…” என்று வெற்றுக் குரலில் சொன்னவளைப் பார்த்து ஆதர்ஷன் அதிர்ந்து நின்றான்.


“குட்டி பாப்பா, நீ… நீயா இப்படிப் பேசுற?” என்றவனுக்கு அப்படிப் பேசியது தன் தன்வி தானா என்று கிஞ்சித்தும் நம்ப முடியவில்லை.


“ஆமா… நான் தான் பேசுறேன். நீங்க என்னை இப்படிப் பேச வச்சிட்டீங்க?” என்றவளின் குரல் உயர, அதீஷன் அவள் கையை அழுத்தினான்.


“வேணாம் தன்வி… ஏற்கனவே அவன் தர்ஷினி போன வருத்தத்தில் இருக்கான், இந்த நேரத்தில் நீ இப்படிப் பேசுறது தப்பு… உனக்கு நல்லாவே தெரியும் தர்ஷன் அவங்களை எவ்ளோ லவ் பண்றான்னு” என்றான் கண்டனக் குரலில்.


“ஓஓஓ அண்ணனைச் சொன்னதும் தம்பிக்குக் கோவம் வருதோ… ஹூம், என்ன இருந்தாலும் ஒரு ரத்தம் இல்ல… அப்படிதான் இருக்கும். ஆனா, தர்ஷினி யாரோ தான, அவங்க எப்படிப் போனால் என்ன? லவ் பண்றாராம் பெரிய லவ்வு… இதை அவங்ககிட்ட முன்னமே ஒழுங்கா சொல்லி இருந்தால் இப்ப இந்த நிலைமையே வந்திருக்கதே…” என்றதும் அதீஷன் ஏதோ சொல்ல வர, “நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு புரியுது. அவங்க நல்லா இருக்கனும்னு தான் இவரு லவ்வை மறைச்சாருன்னு சொல்வீங்க. அதானே? அதைப்பத்தி யோசிக்க வேண்டியது தர்ஷினி தானே தவிர இவரு இல்லயே… அவங்க என்ன செய்யணும்? எப்படி வாழணும்னு முடிவெடுக்கும் உரிமை அவங்களுக்கு மட்டும் தான் இருக்கு… இவருக்கு இல்ல. ஆனா, இவரு என்ன செஞ்சாரு? என்னை மாதிரி உத்தமன் யாரும் இல்லன்ற மாதிரி, அந்த அஜயைக் கூட்டிட்டு வந்தாரு…” என்றவள் திரும்பி ஆதர்ஷனைப் பார்த்து, “உண்மையா காதலிக்கும் எந்தப் பொண்ணால் தான் இதெல்லாம் தாங்கிக்க முடியும். அதான் போயிட்டாங்க” என்றாள் கோபமாக.


“நீ இப்பத் தேவையில்லாம டாபிக்கை மாத்துற தன்வி” என்றான் அதீஷன் எரிச்சலாக.


“நான் எல்லாம் சரியா தான் பேசிட்டு இருக்கேன். நீங்க பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப என்னைத் தப்பு சொல்றீங்க?” என்று அவளும் பதிலுக்கு பதில் பேச, அதற்கு அதீஷன் ஏதோ சொல்ல வர, “அய்யோ ப்ளீஸ்…‌ ரெண்டு பேரும் கொஞ்சம் இந்தச் சண்டையை நிறுத்துங்க…” என்று கத்திய ஆதர்ஷன் தன்வி அருகில் வந்தவன், 


“ப்ளீஸ் தன்வி… உனக்கு வினி எங்க போயிருப்பான்னு எதாவது ஐடியா இருந்தால் சொல்லு. அவ…அவ போய் ரொம்ப நேரம் ஆகுது. டைம் ஆக ஆக, எங்க அவளை இழந்துடுவேனோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு. தன்வி ப்ளீஸ்… என் வினி இப்ப எங்க இருப்பான்னு சொல்லு” என்று அவள் முன் கண் கலங்கி நின்றதைப் பார்க்க அவளுக்கும் உள்ளுக்குள் வலித்தது. என்ன இருந்தாலும் அவளின் ஆது கஷ்டப்படுவது அவளுக்குப் பொறுக்குமா என்ன? 


உடனே தன் கைபேசியை எடுத்து தர்ஷினிக்கு அழைத்தாள். ஆனால், இப்போதும் தர்ஷினியின் எண் உபயோகத்தில் இல்லை என்றே பதில் வர ஆதர்ஷனைப் பார்த்தவள், “அவங்க ஃபோன் இன்னும் சுவிட்ச் ஆஃப்ல தான் இருக்கு… எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க, என்னால என்ன செய்ய முடியும்னு பார்க்குறேன்.” என்றவள் தன்னறைக்குச் சென்று விட்டாள். 


தன்வியிடம் இருந்து ஏதாவது நல்ல தகவல் வருமா என்று காத்திருந்த ஆதர்ஷன், ஒருபுறம் தானும் தர்ஷினியை முடிந்த வரை தேடித் திரிய, அதீஷன் ஒரு பக்கம் தன்னால் முடிந்தவரை தர்ஷினியைத் தேடிப் பார்த்தான். மகனின் இந்த நிலையைக் காணச் சகிக்காத அமிர்தம், எந்நேரமும் தர்ஷினி திரும்பி வரவேண்டும் என்று வேண்டியபடி பூஜையறையிலேயே இருந்தார்.


நாட்கள் தான் சென்றதே தவிர தர்ஷினி பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.


அவள் சென்ற நாளில் இருந்து ஆதர்ஷனின் இரவுகள் தூங்கா இரவுகள் தான். 


சில நாட்களுக்குப் பிறகு…


இன்று…


தர்ஷினி இல்லாத நாட்களில் ஆதர்ஷனுக்குத் துணையாக இருந்தது, அவள் விட்டுச் சென்ற அந்தப் பறவைகள் தான். அவைகளின் சத்தம் தான் ஆதர்ஷனை ஏதோ கொஞ்சம் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்று சொல்லாம். என்றாவது தர்ஷினி திரும்பி வரும்போது, அவள் இல்லாமல் தான் பட்ட துயரத்தை இந்தப் பறவைகள் அவளுக்குச் சொல்லும் என்று நினைத்தானோ என்னவோ, ஒரு நாளில் பாதி நேரம் அந்த வாயில்லா ஜீவன்களுடனே தன் நேரத்தைச் செலவிட்டான்.


அவளின் இந்தப் போக்கு வீட்டில் இருந்த அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது. ஆனால், யாராலும் எதுவும் செய்ய இயலவில்லை. எதையாவது செய்வாள் என்று எதிர்பார்த்த தன்வியும் அமைதியாகவே இருந்தாள். 


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அதீஷன், ஒருநாள் தன்வியிடம் பொங்கி விட்டான்.


“வர வர நீ பண்றது எதுவும் எனக்கு சரியாப் படல தன்வி” என்றான் கடுப்பாக.


அதற்கு அவள் அமைதியாக இருக்க, “உன்கிட்ட தான்டி பேசிட்டு இருக்கேன்.” என்றான் சத்தமாக.


அந்தச் சத்தத்தில் திரும்பி அவனைப் பார்த்தவள், “இப்ப நான் என்ன செய்யணும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க?” என்று கேட்டாள் அமைதியாக.


“தர்ஷினி பத்தி நீ எதாவது சொல்வேன்னு தர்ஷன் காத்துட்டு இருக்கான். ஆனா, நீ என்னடான்னா புடிச்சு வச்ச புள்ளையார் மாதிரி கம்முன்னே இருக்க… உன் மனசுல என்ன தான்டி இருக்கு?” என்று கேட்டான்.


“ப்ச்ச்… இப்ப என் மனசுல இருக்கிறது ஒன்னே ஒன்னு தான். அது நீங்க சொன்னீங்களே புள்ளையார் மாதிரி இருக்கேன்னு.” என்று தன் வயிற்றைச் சுட்டிக் காட்டியவள், “இந்தப் புள்ளையார் வேஷம் எப்ப முடியும், எம்புள்ளையை எப்ப என் கண்ணால் பாப்பேன்ற எண்ணம் மட்டும் தான் என் மனசுல ஓடிட்டு இருக்கு” என்றவள் நிமிர்ந்து தன்னவனைக் கண்கள் சுருக்கி முறைத்துப் பார்த்தாள்.


“இப்ப எதுக்குடி அந்த முட்டைக் கண்ணை வச்சு என்னை முறைக்கிற?” என்றான் அதீஷன்.


“நீங்க நான் குண்டா இருக்கேன்னு இன்டைரக்டா கிண்டல் பண்றீங்க இல்ல…” என்று இடுப்பில் கை வைத்து அவனைப் பார்த்து மேலும் முறைத்தவள், “இருக்கட்டும்… இருக்கட்டும். மூணு பிள்ளை வேணும்னு சொன்னீங்க இல்ல… அதெல்லாம் என்னால பெத்துத் தர முடியாது. வேணும்னா வேற எவளையாவது கட்டி மீதி ரெண்டைப் பெத்துக்கோங்க… ஆனா ஒன்னு, அவளும் ப்ரெக்னன்டானா, அவளும் புள்ளையார் மாதிரி குண்டா தான் இருப்பா…” என்றவள் அவனைப் பார்த்து உதட்டைச் சுழித்து ஒழுங்கு காட்டி, முகவாயைத் தோள்களில் இடித்துக் கொண்டவளைப் பார்த்து அதீஷன் இதழ்களில் லேசாகப் புன்னகை மலர்ந்தது.


இந்தக் கொஞ்ச நாட்களாகத் தன்விக்கு தான் குண்டாகி விட்டோம் என்ற எண்ணம் வந்து விட்டது. அதை அவள் அவனிடம் அடிக்கடி பகிர்ந்திருக்கிறாள். அப்படி இருக்க, இன்று ஏதோ நினைவில் அவளை அப்படிப் பேசியது தவறு என்று அவனுக்குப் புரிந்தது. 


மென் சிரிப்புடன் அவள் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டவன், “எனக்கு மூணு இல்லடி… 300 புள்ள பொறந்தாலும் அது எல்லாத்துக்கும் அம்மா நீ ஒருத்தி மட்டும் தான். இந்த ஜென்மத்தில் என்னோட தன்வியைத் தவிர வேற எவளையும் இந்த அதீஷன் கண்ணு பாக்காது.” என்றான் காதலாக.


அவன் அணைப்பில் இருந்தபடியே நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “நான் குண்டா இருந்தாலும் உங்களுக்கு என்னைப் புடிக்குமா?” என்று கேட்டாள் உள்ளே சென்ற குரலில்.


அதைக்கேட்டு அவளைத் தன்னில் இருந்து சற்று விலக்கி, அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “நீ எப்படி இருந்தாலும் என் கண்ணுக்கு நீதான்டி உலக அழகி. நான் என் தன்வி மனசைக் காதலிக்கிறேன். இதோ என்னைக் குறுகுறுன்னு பார்க்கும் இந்தக் கண்ணைக் காதலிக்கிறேன். நான் சொல்லாமலே என் மனசைப் புரிஞ்சி நடக்கும் உன் புரிதலைக் காதலிக்கிறேன். என்னோட உயிரைச் சுமக்கும் என்னோட பொண்டாட்டியை நான் ரொம்ப ரொம்பக் காதலிக்கிறேன். இந்த அதீஷன் உயிரோட இருக்கற வரை இந்தத் தன்வியை மட்டும் தான் காதலிப்பான்.” என்றவனின் இதழ்களைச் சிறை பிடித்திருந்தாள் தன்வி‌.


அன்று தன்விக்கு மருத்துவப் பரிசோதனை இருக்க, அதீஷனுக்கு முக்கியமான மீட்டிங் இருந்ததால் அவனால் தன்வியுடன் செல்ல முடியாத சூழ்நிலை. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தவன், தன்வியின் பிரசவ நேரம் நெருங்குவதால் இங்கு வந்திருந்த அவனின் தாத்தா வீரராகவன் மற்றும் அமிர்தாவுடன் அவளை மருத்துவமனை அனுப்பலாமா என்று யோசித்தவன், தன்வியிடம் அதைப்பற்றிக் கேட்டான்.


அவளோ, “தாத்தா நேத்து தானே இங்க வந்தாரு, இன்னும் ஜெட்லாக் கூடப் போயிருக்காது… அமிர்தா அம்மா எனக்காக எதோ வேண்டுதல் வச்சிருந்தாங்க போல, அதைப்பத்தியும், அப்படியே என் வளைகாப்பு பத்தியும் கேட்க கோயிலுக்குப் போயிருக்காங்க.” என்றாள்.


“ஓஓஓ…” என்று நெற்றியில் விரல் கொண்டு தேய்த்து யோசித்தவன், “ஓகே… அப்ப நானே உன்னைக் கூட்டிட்டுப் போறேன். மீட்டிங்கை கேன்சல் பண்ணச் சொல்லிடுறேன்.” என்றான் அதீஷன்.


அதற்குத் தன்வியோ, “நீங்க ஒன்னும் மீட்டிங்கை கேன்சல் பண்ண வேணாம். நீங்க மீட்டிங்கை பாருங்க. உங்க அருமை அண்ணனை என் கூட ஹாஸ்பிடலுக்கு வரச் சொல்லுங்க…” என்ற மனைவியை வியப்பாகப் பார்த்தான் அதீஷன்.


“இப்ப எதுக்கு என்னை அப்படி பார்க்குறீங்க…?” என்று கேட்டாள் தன்வி.


“இல்ல, கொஞ்ச நாளா மேடம் தர்ஷன்கிட்டப் பேசுறது கூட இல்ல… அவன் மேல கோவமா இருக்கேன்னு சொல்லிட்டுச் சுத்திட்டு இருந்தீங்க… இப்ப என்னடான்னா அவனைக் கூட கூட்டிப் போறேன்னு சொல்றீங்களே… அதான் இதுல என்ன உள்குத்து இருக்குன்னு யோசிக்கிறேன்.” என்றவன் கன்னத்தில் இடித்தவள், 


“உள்குத்தும் இல்ல வெளிக்குத்தும் இல்ல… உங்களுக்கு மீட்டிங் இருக்கேன்னு தான் சொல்றேன். நான் ஹாஸ்பிடல் போய் செக்கப், ஸ்கேன் எல்லாம் முடிக்கும்போது உங்க மீட்டிங் முடிஞ்சிருக்கும், அப்ப ஆபிஸ்ல இருந்து நேரா ஹாஸ்பிடல் வந்து என்னைப் பிக் பண்ணிக்கோங்க…” என்றவளை இப்போது புருவம் உயர்த்திச் சந்தேகமாகப் பார்த்தான் அவள்‌ கணவன்.


அதைப் பார்த்தவள், “இப்ப என்ன?” என்றாள் முறைப்பாக.


“இல்ல… அதான் உன்கூட தர்ஷன் வரப்போறான் இல்ல..‌. அப்புறம் எதுக்கு என்னை வந்து உன்னைப் பிக் பண்ணச் சொல்ற? கூட்டிட்டுப் போற அவனுக்குத் திரும்ப உன்னைக் கூட்டிட்டு வரத் தெரியாதா? எதுக்காக என்னை வரச்சொல்ற?” என்று அவளைக் கூர்ந்து பார்க்க, தன்வி அவன் தலையில் கொட்டியவள், “இன்னைக்கு ஸ்கேன் இருக்கு இல்ல? பாப்பாவைப் பார்க்கணும்னு உங்களுக்கு ஆசையா இல்லையா? டாக்டர்கிட்ட எங்களைப் பத்திக் கேக்க ஒன்னுமில்லையா உங்களுக்கு? அப்ப எங்க மேல இருக்கற அக்கறை அவ்ளோதான் இல்ல? ஹாஸ்பிடல் வந்தா என்ன கொறஞ்சு போய்டுவீங்க?” என்றாள் மூக்கு விடைக்க…


கண்கள் சுருக்கி அவளை மேலும் கீழும் பார்த்தவன், இடவலமாகத் தலையாட்டி, ‘இன்னைக்கு இவ ஆக்டிவிட்டீஸ் ஒன்னும் சரி இல்லையே… என்னவா இருக்கும்?’ என்று யோசிக்க, அவன் டையைப் பிடித்து இருந்தவள், “அப்பாயின்ட்மென்டுக்கு டைம் ஆச்சு… எவ்ளோ நேரம் இப்படியே யோசிச்சிட்டு இருப்பீங்க? சீக்கிரம் ஆதுகிட்ட என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க” என்றாள் அதிகாரமாக.


“ம்ம்ம்… இன்னைக்கு என்னமோ நடக்கப் போகுது” என்று முணுமுணுத்த படியே ஆதர்ஷனை அழைத்தான் அதீஷன்.


ஓய்ந்து போய் உயிர்ப்பு இல்லாமல் இருந்த ஆதர்ஷனைப் பார்க்கப் பார்க்கத் தன்விக்குத் தொண்டை அடைத்தது.


“தர்ஷா, இன்னைக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு, நான் கண்டிப்பா போயே ஆகணும். நீ கொஞ்சம் தன்வி கூட ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வந்துருடா… அம்மாவும் வீட்ல இல்ல.” என்க, ஆதர்ஷனும் தன்வியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான்.


மருத்துவமனையில் பரிசோதனை அனைத்தும் முடிந்து ஸ்கேனிற்காகக் காத்திருந்தனர் இருவரும்.


அப்போது தன்வி, “இன்னும் எத்தனை நாள் இப்படியே தேவதாஸ் மாதிரி அலையறதா உத்தேசம்?” என்று கேட்டாள்.


அவளை உணர்வு துடைத்த பார்வை பார்த்தவன், “என் வினி திரும்பி வர வரைக்கும்…” என்றான் விரக்தியாக. 


‘உங்க வினி! ம்ம்ம்…’ என்று மனதில் நினைத்தவள், “வீட்ல அம்மா, தஷ் எல்லாம் நீங்க இப்படி இருக்கிறதைப் பார்த்து ரொம்ப வருத்தப்படுறாங்க… தாத்தாவும் ரொம்ப கவலையா பேசினாரு” என்றாள் தன்வி.


அதற்கு அவனிடம் எந்தப் பதிலும் இல்லாமல் போக, எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான்.


“சரி நான் ஒன்னு கேக்குறேன், பதில் சொல்றீங்களா?” என்று கேட்டாள்.


“ம்ம்ம்” என்று தலையாட்டினான் ஆதர்ஷ்.


“இப்ப தர்ஷினி அக்காவை இப்படி உயிரைக் கையில புடிச்சிட்டுத் தேடிட்டு இருக்கீங்களே… இன்னைக்கோ நாளைக்கோ, அவங்க கிடைச்சிட்டாங்கன்னு வைங்க… அடுத்து என்ன பண்ணுவீங்க? நீங்க தான் அவங்களை மேரேஜ் பண்ணிக்கப் போறது இல்லயே? அப்புறம் எதுக்கு அவங்களைத் தேவை இல்லாமல் தேடிட்டு இருக்கீங்க? போனவங்க எங்கோ அவங்க வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு நினைச்சுட்டு விட்டுற வேண்டியது தானே…” என்றவளைத் திரும்பிப் பார்த்தவன், “போனவ தனியாப் போகல தன்வி, அவ போகும் போது என்னோட சந்தோஷம், நிம்மதி, வாழ்க்கை, என்னோட காதல்னு எல்லாத்தையும் அவ கூடவே எடுத்திட்டுப் போயிட்டாடா” என்றவனின் குரல் கரகரத்தது.


“இதுக்கு என்ன அர்த்தம்?” என்று புருவம் உயர்த்திக் கேட்டாள் தன்வி.


அவள்‌ கேள்விக்கு விரக்தியாகச் சிரித்தவன், “என்ன அர்த்தம்? அவதான் என் வாழ்க்கைனு அர்த்தம்.” என்றவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் தன்வி.


சில நொடிகள் கழித்து, “இன்னும் கொஞ்ச நேரத்தில் தஷ் வந்திடுவாரு… மெசேஜ் பண்ணி இருக்காரு… உங்களுக்கு எங்கயாவது போகணும்னா போலாம்.” என்றாள் தன்வி.


அவளைப் புரியாமல் பார்த்தவன், “நான் எங்கப் போகணும்னு சொல்ற?” என்று கேட்டான்.


“இல்ல இல்ல… எனக்குத் துணையா தஷ் வராரு… சோ, உங்களுக்கு ஏதாவது முக்கிய வேலை வந்தால் நீங்க தாராளமாய் போலாம்னு சொன்னேன்.” என்றவளின் முகத்தில் வந்து போன கண்ணுக்குத் தெரியாத குறுஞ்சிரிப்பைப் பார்த்துக் குழம்பியவன், ‘என்னாச்சு இவளுக்கு…’ என்று நினைத்தவன், “ம்ம்ம்” என்று மட்டுமே சொல்லி வைத்தான்.


சில நொடிகள் கழித்து ஆதர்ஷனிடம், “கொஞ்சம் போய் அந்த கைனகாலஜி டிபார்ட்மென்ட்ல (gynecology department) என்னோட ஸ்கேன் டைம் என்னன்னு கேட்டு வர்றீங்களா?” என்று கேட்டாள் தன்வி.


“இப்ப தானே கேட்டு வந்தோம். இன்னும் பத்து நிமிஷம் இருக்கு குட்டிப் பாப்பா” என்றான் அவன்.


அவனைச் சட்டெனத் திரும்பிப் பார்த்தவள் கண்கள், வெகு நாட்கள் கழித்து அவனின் குட்டிப் பாப்பா என்ற அழைப்பைக் கேட்டு லேசாகக் கலங்கி இருந்தது.


அதைப் பார்த்துப் பதறிய ஆதர்ஷ், “ஏய் என்னாச்சுமா? எதுவும் வலிக்கிதா” என்று பதற, மெல்லமாகத் தலையை இடவலமாக ஆட்டியவள், “ரொம்ப நாள் ஆகிடுச்சு, நீங்க என்னைக் குட்டிப் பாப்பான்னு கூப்பிட்டு… தர்ஷினி போனதில் இருந்து நீங்க என்கிட்டப் பேசுறது கூட இல்ல.” என்றாள் தழுதழுத்த குரலில்.


அப்போது தான் ஆதர்ஷனுக்கும் அது விளங்கியது. ‘தன் உயிருக்கு உயிரான தன் குட்டிப் பாப்பாவை மறக்கும் அளவுக்கு தர்ஷினி தன் மனதை ஆட்கொண்டிருக்கிறாளா?’ என்று யோசித்தவனுக்கு, தர்ஷின் சென்ற நாளில் இருந்து அவன் அவனாகவே இல்லை என்ற உண்மை புரிய, அப்போது தான் அவள் எந்த அளவுக்கு தன்னுள் நிறைந்திருக்கிறாள் என்று அவனுக்கும் புரிந்தது.


மெல்ல தன்வியைத் திரும்பிப் பார்த்தவன், “சாரி… சாரிடா குட்டிப்பாப்பா. நா… நான் வேணும்னு” என்று ஆரம்பிக்க, அவன் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டவள், “எனக்குப் புரியும்.‌ நீங்க எதுவும் சொல்ல வேணாம்.” என்றவளுக்கு ஆதர்ஷனின் மன உணர்வுகள் புரிந்தது. அவளும் தன்னவனை உயிராக நேசிப்பவளாயிற்றே… அவளுக்கு ஆதர்ஷின் வலியை உணர முடிந்தது.


“சரி சரி… போய் நான் சொன்னதைக் கேட்டுட்டு வாங்க” என்றாள் சூழ்நிலையை இலகுவாக்க.


அவனும், “இப்ப தான தன்வி கேட்டோம்” என்றான் மறுபடியும்.


“ப்ச்ச்… கேட்டு வரச் சொன்னால் போவீங்களா… பதிலுக்கு பதில் பேசிட்டு” என்றவளைப் புரியாமல் பார்த்தவன் அவள் சொன்னதைச் செய்யக் கிளம்பினான்.


அவள் சொன்னதை விசாரித்து விட்டுத் திரும்பியவன் பார்வை ஒரு இடத்தில் நங்கூரமிட்டது போல் அழுத்தமாகப் பதிந்தது.