விழி வழி காதல் நுழைந்ததடி 9
விழி 9
மூன்று மாதங்களுக்குப் பிறகு…
"ஆர் யூ ஷ்யூர் ஆஷ்!" என்று நூறாவது முறையாகக் கேட்ட ஆலனைப் பார்த்து, "எஸ்" என்றான் ஆதர்ஷ் உறுதியாக.
"இட்ஸ் நாட் ஃபேர் ஆஷ். இட்ஸ் அபௌட் ஹெர் லைப் மேன்." (It's not fair ash… it's about her life men.) என்றவனை அழுத்தமாகப் பார்த்த ஆதர்ஷ், "அவ எனக்கு வேற எந்த ஆப்ஷனையும் விட்டு வைக்கல ஆலன். மேரேஜ் பண்ணாட்டிச் செத்துடுவேன்னு மிரட்டிட்டு இருக்கா… வேற என்னை என்ன பண்ணச் சொல்ற? ஐ ஹேவ் டு டூ திஸ்" என்றவன் தன் உடமைகளை எடுத்து அடுக்கத் தொடங்கினான்.
"இந்த மேரேஜ் அவ லைஃபையே ஸ்பாயில் பண்ணச் சான்ஸ் இருக்கு ஆஷ். யூ நோ தட்" என்று ஆதங்கமாகச் சொன்ன ஆலனைத் திரும்பிப் பார்த்த ஆதர்ஷ், "நான் உயிரோட இருக்கற வரை அப்படி எதுவும் நடக்காது. நடக்கவும் நான் விடமாட்டேன், ட்ரஸ்ட் மீ" என்று அழுத்தமாகச் சொல்ல, அவனை ஆதரவாக அணைத்துக் கொண்ட ஆலன்,
"நான் உன் லைஃப்ல வராமல் போயிருந்தா இந்த மாதிரிப் பிராப்ளம் ஆகி இருக்காது இல்ல ஆஷ்… இட்ஸ் ஆல் பிகாஸ் ஆஃப் மீ. ஐ ஃபீல் கில்ட்டி" என்று கலங்கியவன் முதுகை மெதுவாகத் தடவிய ஆதர்ஷ், "ப்ளீஸ் டோண்ட் பிளேம் யுவர் செல்ப் ஆலன். எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட். சூன் ஐ வில் செட் எவ்ரிதிங்" என்றவன் அறையை விட்டு வெளியேற ஆலனும் அவனைத் தொடர்ந்து சென்றான்.
காரில் ஏறிக் கொண்டிருந்தவனையே பரிதவிப்போடு பார்த்துக் கொண்டிருந்த ஆலன், சட்டென்று அவன் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, "ஷீ இஸ் லைக் ஏ கிட், ப்ளீஸ் டேக் கேர் ஆஃப் ஹெர்…" என்ற ஆலன் தோளைத் தட்டிக் கொடுத்தவன், "ஐ வில் ட்ரை" என்றான் சிரித்துக் கொண்டே வெகு இயல்பாக.
சென்னை விமானநிலையம்...
இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்த தன்வியின் மனம் முழுவதும் ஆகாயத்தில் பறந்து வந்து கொண்டிருந்தவன் மேல் தான் இருந்தது.
அன்று அவர்களுக்கு இடையில் நடந்த சண்டைக்குப் பிறகு தன்வியின் முகத்தைக் கூடப் பார்க்காமல் இருந்தான் ஆதர்ஷ்.
அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு வீரராகவனிடம் வந்த ஆதர்ஷ், "தாத்தா என்னால மேரேஜ் பத்தி இப்ப யோசிக்க முடியாது. அதுவும் தன்வியை சத்தியமா அந்த இடத்தில் வச்சு நான் யோசிச்சது கூட இல்ல. தீடிர்னு நீங்க கல்யாணம்னு சொன்னால் இட்ஸ் நாட் பாசிபிள். ஐ நீட் சம் டைம்" என்றான்.
"எனக்குப் புரியது ஆதர்ஷ்… நானும் உன்னைக் கட்டாயப்படுத்தி இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வைக்க விரும்பல. தன்வி உன்னைப் புடிச்சிருக்குன்னு சொன்னாலும், இதுல உன்னோட முடிவும், சம்மதமும் எனக்கு ரொம்ப முக்கியம். சோ டேக் யுவர் ஓன் டைம். நல்லா யோசிச்சு உன் முடிவைச் சொல்லு, பட்… இந்த வருஷத்துக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தே ஆகணும், அது பைனல். அதையும் மனசுல வச்சிக்கோ" என்றார் வீரராகவன் முடிவாக.
ஆதர்ஷ் ஆழ்ந்து மூச்செடுத்து ஒரு நிமிடம் யோசித்தவன், "ஓகே தாத்தா… நீங்க மூணு மாசம் டைம் கொடுத்திருக்கீங்க இல்ல, அதுக்குள்ள நான் யோசிச்சு என் முடிவைச் சொல்லறேன்." என்றவன் ஒரு நிமிடம் பொறுத்து, "நான் யூ.எஸ் போறேன் தாத்தா" என்றான் அமைதியாக.
அதைக் கேட்டு, "வாட்" என்று கத்திய வீரராகவன், "இப்ப எதுக்கு நீ அங்கப் போகணும்?" என்று எரிச்சல் குரலில் கேட்க,
"கம் ஆன் தாத்தா… உங்களுக்கு நல்லாத் தெரியும் எனக்கு யூ.எஸ் ல செட்டிலாக தான் ஆசைன்னு… அதுக்கான ஏற்பாட்டைச் செய்யத்தான் அங்க போறேன். அங்க இருக்கற நம்ம பிஸ்னஸை இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணப் போறேன். பட், கண்டிப்பா நான் திரும்பி இங்க வருவேன். தென் கொஞ்ச வருஷம் கழிச்சு அங்கயே செட்டிலாகிடுவேன்." என்றவன் திரும்பித் தாத்தாவைப் பார்த்து, "உங்களோட" என்றான் அழுத்தமாக.
அவன் சொன்னதைக் கேட்டு கண்களை மூடித் திறந்த வீரராகவன், "இதுக்கு தன்வி சம்மதிப்பாளான்னு தெரியல ஆதர்ஷ். அவளுக்கு இந்த வீடுதான் உலகம். இதை விட்டுட்டு அவ வருவாளா?" என்று கவலையாகக் கேட்க, அவர் அருகில் சென்று அமர்ந்து அவர் கை மேல் தன் கையை வைத்து ஆதரவாக அழுத்திய ஆதர்ஷ், "வருவா தாத்தா, கண்டிப்பா வருவா… நம்ம ரெண்டு பேர் எங்க இருக்கமோ அதுதான் அவ உலகம். அவ கண்டிப்பா வருவா..." என்றவன் ஒரு கணம் நிறுத்தி, "அப்படி அவ வர மாட்டேன்னு அடம் புடிச்சால், கழுத்துல கயிறைக் கட்டினவனால பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா என்ன? உரிமையோட கட்டித் தூக்கி பிளைட்ல போட்டுட்டுப் போயிட்டே இருக்க வேண்டியது தான்." என்று சிரித்தபடி சொன்னவன், "ஏன்னா அதுதான் அவ எதிர்காலத்துக்கு நல்லது" என்றான் மெதுவாக, எங்கேயோ பார்த்துக் கொண்டு.
அவன் சொன்னதைக் கேட்டுச் சிரித்த வீரராகவன், "அதுவும் சரிதான்… புருஷன் கூப்பிட்டாப் பொண்டாட்டி போகாம இருக்க முடியுமா என்ன?" என்றதும் ஆதர்ஷ் முகம் கறுத்து விட்டது.
"நான் இன்னும் ரெண்டு நாளில் கிளம்புறேன் தாத்தா, நான் திரும்பி வர்ற வரைக்கும் நம்ம இப்பப் பேசின எதுவும் தன்விக்குத் தெரிய வேணாம்." என்ற பேரனைப் பார்த்து ஆமாம் என்று தலையாட்டிய தாத்தா, "அதுவும் சரிதான், அவளுக்கு எதுவும் தெரியாது... இதுவரை நீயும் அவகிட்ட இதுபத்திச் சொன்னதில்ல, நானும் சொல்லல. இப்ப தீடிர்னு சொன்னா இதை அவ எப்படி எடுத்துப்பான்னு தெரியல... கண்டிப்பா அவளுக்கு கஷ்டமாத் தான் இருக்கும். பட் நம்மளும் வேணும்னு எதையும் மறைக்கல... ஏனோ சொல்லத் தோணல, அவ்ளோதான்… சோ, நீ சொன்ன மாதிரி இப்ப அவகிட்ட எதுவும் சொல்ல வேணாம். முதல்ல ரெண்டு பேருக்கும் கல்யாணம் நல்லபடியா முடியட்டும். அதுக்குப் பிறகு இதைப் பத்தி மெதுவா அவகிட்டச் சொல்லிக்கலாம்." என்றார்.
"சரி தாத்தா… நான் டிராவல் அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் பார்க்கணும், சோ இப்பக் கிளம்புறேன். தன்விகிட்ட வேற எதுவும் சொல்லாம, நான் வர்ற வரைக்கும் ஆபீஸைப் பார்த்துக்க மட்டும் சொல்லுங்க… டவுட் எதுவும் இருந்தா எனக்குக் கால் பண்ண வேணாம். மெயில் மட்டும் பண்ணச் சொல்லி சொல்லுங்க… நான் ஃப்ரீயா இருக்கும்போது ரிப்ளை பண்றேன்னு சொல்லிடுங்க…" என்றவன் கிளம்பிவிட, வீரராகவன் ஆதர்ஷ், தன்வியைத் திருமணம் செய்ய சம்மதிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டார்.
ஆதர்ஷ் அமெரிக்கா சென்ற இந்த மூன்று மாதத்தில் ஒரு முறை கூட தன்வியிடம் பேசவில்லை. அவள் எத்தனை முறை அழைத்தும் அவள் அழைப்பு ஒன்றைக்கூட அவன் ஏற்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அவன் தன் அழைப்பை ஏற்க மாட்டான் என்று தெரிந்து, ஆலனுக்கு அழைத்து அவன் நலனைத் தெரிந்து கொள்வாள் பெண்ணவள். இதில் என்றாவது அவன் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் வீடியோ காலில் அவள் ஆலனை அழைப்பாள். ஆலனும் ஆதர்ஷனுக்குத் தெரியாமல் அவனைத் தன்விக்குக் காட்டுவான். ஒரு சில நொடிகள் திரையில் தெரியும் அவன் உருவத்தைக் கண்ணீரோடு தடவிப் பார்ப்பவள், “எப்ப பாஸ் என் மேல இருக்க கோவம் உங்களுக்குக் குறையும். உங்க குட்டிப் பாப்பா பாவம் தான? ஒரு வார்த்தை பேசினா என்னவாம் உங்களுக்கு" என்று கலங்கிய குரலில் கேட்க, அதைப் பார்க்கும் ஆலனுக்கும் கண்கள் கலங்கி விடும்.
அவனை அழைத்து அழைத்துச் சோர்ந்து போனவள், அவனோடு சேர்த்து ஆலனுக்கு அழைப்பதையும் நிறுத்தி இருந்தாள்.
இப்படியே வேகமாக மூன்று மாதங்களும் முடிந்துவிட, இன்று ஆதர்ஷ் மீண்டும் சென்னைக்குத் திரும்ப வருகிறான். தன்வி அவனை அழைத்துச் செல்ல விமான நிலையம் வந்து காத்துக் கொண்டு இருந்தாள்.
நடந்ததை நினைத்தபடி தன்வி கண்களை மூடியபடி அமர்ந்திருக்க, அவள் அருகில் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டு அவள் திரும்பிப் பார்க்க, அங்கு காதில் இருந்த இயர்பட்ஸ் (earbuds) வழியே, "ம்ம்ம் நான் வந்துட்டேன். தன்வி தான் பிக்-அப் பண்ண வந்திருப்பா" என்று யாருடனோ பேசியபடியே வந்த ஆதர்ஷன், அவன் எதிரில் நின்ற அவள் முகத்தைப் பார்த்து அதிர்ந்து அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.
அவளின் அழகுக் குழந்தை முகத்திற்கு அழகு சேர்க்கும் கொழு கொழுக் கன்னங்கள் ரெண்டும் எங்கோ காணாமல் போய், சமதளமாக இருந்தது. எப்போதும் சிரிப்பு மிளிரும் இதழ்கள் இன்று சிரிப்பை மறந்து உலர்ந்து இருந்தது. உடல் பாதிக்குப் பாதி மெலிந்து போயிருக்க, அன்பு வழியும் அவள் கண்களில் ஜீவன் இல்லாமல் கீழே இருண்ட வானம் போல் கருவளையம் அடர்ந்து கிடந்தது.
அவளைப் பார்த்த ஆதர்ஷன் கண்கள் விரிய அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தபடி நிற்க அவன் அருகில் வந்த தன்வி, "கார் பார்க்கிங்ல நிக்குது சார்… போலாம்." என்று வறண்ட குரலில் சொன்னவள், அவன் பயணப் பொதிகளை இழுத்துக்கொண்டு முன்னே செல்ல, ஆதர்ஷ் அவளைப் பார்த்த அதிர்ச்சியில் அப்படியே நின்றவன், அவளின் "சார்" என்ற அழைப்பில் இயல்புக்கு வந்தவன், அவள் பின்னாலே சென்றான்.
அவனின் பெரிய லக்கேஜை காரில் தூக்கி வைக்க முடியாமல் அவள் தடுமாற, அவள் கையில் இருந்த தன் பெட்டியைப் பிடுங்கி காரில் வைத்துவிட்டு, திரும்பி அவளைப் பார்த்து முறைத்தபடியே, காரின் பின் கதவை அடித்து மூடினான் ஆதர்ஷன்.
அந்தச் சத்தம் என்னை எதுவும் பாதிக்கவில்லை என்பது போல் தன்வி அவனது முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தவள், காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.
அவளின் செய்கைகளைப் பார்த்த ஆதர்ஷனுக்குக் கொஞ்ச கொஞ்சமாகப் பொறுமை போய்க்கொண்டு இருக்க, தலையைக் கோதியபடி இழுத்து மூச்சு விட்டு தன் உணர்வைக் கட்டுப்படுத்தியவன் அவள் அருகில் வந்து, "நீ இறங்கு… கொஞ்ச தூரம் நான் டிரைவ் பண்றேன்." என்று சொல்ல, அவள் எதுவும் பேசாமல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவள், அமைதியாகப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அவள் அமைதியாகச் சென்றதைப் பார்த்து ஆதர்ஷனுக்கு அதிர்ச்சி. எப்பொழுதும் "நான் தான் டிரைவ் பண்ணுவேன்" என்று அடம் பிடிப்பவள், இன்று அவன் சொன்னதும் மறு பேச்சின்றி அமைதியாகச் சென்றது அவனை உறுத்தியது.
'என்னாச்சு இவளுக்கு?' என்று யோசித்தபடியே அவன் வண்டியைக் கிளப்ப, தன்வி ஜன்னலில் சாய்ந்தபடி சாலையை வெறித்தபடி வந்தாள்.
வாய் ஓயாமல் நொடிக்கு நூறு வார்த்தை பேசுபவள் அமைதியே உருவாக வர, ஆதர்ஷன் அடிக்கடி அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வண்டியை இயங்கிக் கொண்டிருந்தான்.
"தாத்தா எப்படி இருக்காரு?" என்றான்.
"நல்லா இருக்காரு சார்" என்றாள் எந்த உணர்வும் இல்லாமல்.
"பிஸினஸ் எப்படிப் போகுது?" என்று அடுத்த கேள்வி.
"கோயிங் வெல் சார்" என்றாள் அதே உணர்ச்சி துடைத்த குரலில்.
"ம்ம்ம்" என்றவன், " அதுக்குப் பிறகு அந்த அருண் எதுவும் உன்னை டிஸ்டர்ப் பண்ணலயே?" என்று கேட்டான் அக்கறையாக.
"........"
"உன்னைத் தான் கேட்டேன். அருண் எதுவும் டிஸ்டர்ப் பண்ணல இல்ல?"
அவளிடம் பதில் இல்லை, மௌனம் மட்டுமே.
"ஏய்! உனக்கென்ன காது அவுட்டா என்ன? உன்னைத் தான் கேட்டுட்டு இருக்கேன்" என்று கத்த, "தட்ஸ் மை பெர்சனல் மேட்டர் சார். நீங்க தெரிஞ்சிக்க ஒண்ணும் இல்ல" என்றாள் அமைதியாக.
ஆதர்ஷ் காரில் சடன் பிரேக் போட, கீரிச்… என்ற சத்தத்துடன் வண்டியின் சக்கரம் சாலையைத் தேய்த்துக் கொண்டு நிற்க, தன்வியின் பார்வை இப்போதும் ஜன்னல் வழியே வெளியே வெறித்தபடி இருந்தது.
அவள் தாடையை அழுத்திப் பிடித்துத் திருப்பி தன் முகம் பார்க்க வைத்தவன், "வாட் டிட் யூ சே… கம் அகைன்?" என்றான் இறுகிய குரலில்.
தன்வி அவன் முகம் பார்க்காமல் விழிகளைத் தாழ்த்தி இருந்தவள், "அது என்னோட சொந்த விஷயம் சார். அதுபத்தி நீங்க ஏன் தெரிஞ்சிக்கணும்" என்று கேட்க, அப்போது தான் அவள் இவ்வளவு நேரமும் தன்னை "சார்" என அழைத்தது அவனுக்கு உரைத்தது.
வார்த்தைக்கு வார்த்தை "பாஸ்" என்று ஆர்வமாக, அன்பாக அழைக்கும் அவளின் அந்த அழைப்பு காணாமல் போய், அந்த இடத்தில் கடமைக்காக "சார்" என்ற வார்த்தை வந்து உட்கார்ந்து இருந்தது.
அந்த ஒரு வார்த்தையே ஆதர்ஷனை விட்டுத் தன்வி எந்த அளவுக்கு விலகிச் சென்றிருக்கிறாள் என்பதைத் தெளிவாக உணர்த்தியது.
"த… தன்வி" என்று மெல்லிய குரலில் அவளை அழைக்க, அவளிடம் எந்த அசைவும் இல்லை.
"ஏன் என்னை சார்னு கூப்பிடுற நீ? எப்பவும் ஆது இல்ல பாஸ்னு தானக் கூப்பிடுவ? இப்ப ஏன் இப்படிக் கூப்பிடுற?."
"ஆது, பாஸ்னு நான் உதட்டுல இருந்து சொல்லல சார். மனசுல இருந்து சொன்னேன். பட்… இப்ப அந்த மனசு செத்துப் போயிருச்சு சார். சோ அந்த அழைப்பும் செத்துப் போயிருச்சு" என்றவள் இப்போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால், அவள் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆதர்ஷனின் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.
மூன்று மாதம் ஆதர்ஷன் அவளுக்குக் கொடுத்த வேதனை அனைத்தையும், ஒரு அன்னியப் பார்வையில், ஒரே ஒரு வார்த்தையில் மொத்தமாக ஆதர்ஷனுக்குத் திருப்பிக் கொடுத்து விட்டாள் தன்வி.
சில நொடிகள் அவளை இமைக்காமல் பார்த்தவன், கண்களை மூடி இழுத்து மூச்செடுத்தவன், "நீ டிரைவ் பண்ணு" என்றபடி இறங்கிக் கொள்ள, தன்வி எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தாள்.
ஆதர்ஷ் தன் காதில் இருந்த இயர்பட்ஸைக் (earbuds) கழற்றி வைத்தவன், கார் சீட்டைப் பின்னால் தள்ளிவிட்டு, அதில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டான்.