விழி வழி காதல் நுழைந்ததடி 8

விழி 8


ஆதர்ஷ் அடித்த அடியில், வீங்கி இருந்த கன்னத்தைக் கையால் அழுத்திப் பிடித்தபடி தரையில் விழுந்து கிடந்தாள் தன்வி‌‌.


வீரராகவன் சொன்னதைக் கேட்டு, கோவத்தின் உச்ச நிலைக்கே சென்ற ஆதர்ஷ், அதே கோவத்தோடு வீட்டினுள் நுழைந்தவன் நேராகத் தன்வியின் அறைக்குச் சென்று மூடியிருந்த கதவைக் காலால் எட்டி உதைக்க, அது படார்… என்ற சத்தத்துடன் திறந்து கொண்டது.


ஜன்னல் வழியே வெளியே வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தன்வி‍, தீடிரென்று கேட்டச் சத்தத்தில் அதிர்ந்து, பயத்தில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு திரும்பிப் பார்க்க, அங்கு கண்கள் சிவந்து கழுத்து நரம்பு புடைக்க, ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டிருந்தான் ஆதர்ஷ்.


அவன் அழுத்தமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவள் அருகில் வர, தன்வியின் நெஞ்சில் நீர் வற்றிப் போனது. நெஞ்சைப் பிடித்தபடி மெல்ல அடியெடுத்து வைத்துப் பின்னால் சென்றவள், சுவற்றில் மோதிக் கொண்டு இனிச் செல்ல இடம் இல்லாமல் மிரட்சியோடு அவனைப் பார்த்தபடி விழிகள் விரிய நின்றாள்.


பயத்தில் மிரண்டு நின்றவளைத் துளைக்கும் பார்வை பார்த்த ஆதர்ஷ், அவள் சாய்ந்திருந்த சுவற்றில் கையை ஊன்றியபடி அவள் முகத்திற்கு அருகே சென்றவன், "தாத்தா கிட்ட என்னடி சொன்ன?" என்று அழுத்தமான குரலில் கேட்க, அந்தக் குரலே தன்வியைக் கதிகலங்க வைத்தது. 


பிறந்தது முதல் இதுவரை அவனின் அன்பை மட்டுமே பார்த்து வளர்ந்த பெண் அவள், இன்று முதல் முறையாக அவன் கோவத்தைப் பார்த்து மனம் பதைபதைக்க எச்சிலை விழுங்கியபடி நடுங்கிக் கொண்டு நின்றாள்.


"சொல்லுடி, தாத்தா கிட்ட என்ன சொன்ன?" என்று மீண்டும் சினம் நிறைந்த குரலில் கேட்க, சட்டென்று ஓரடி பக்கவாட்டில் விலகிச் சென்ற தன்வி, 


"அ…அது… அது வந்து?" என்று கோர்வையாக வார்த்தை வராமல் தவித்தவளின் கன்னத்தை அழுத்திப் பிடித்த ஆதர்ஷ், "கேக்குறேன் இல்ல… பதில் சொல்லுடி" என்று கர்ஜிக்க, அவன் பிடித்த பிடியில் வலி தாங்க முடியாமல் தன்வியின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்க, அதைப் பார்த்து அவள் கன்னத்தில் இருந்து கையை எடுத்தான் ஆதர்ஷ்.


"நா…நா… என…எனக்கு உங்களை மேரேஜ் பண்ணிக்கச் சம்மதம்னு தாத்தா கிட்டச் சொல்லிட்டேன்" என்று சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கும் முன் ஆதர்ஷ் அறைந்த அறையில் தரையில் விழுந்து கிடந்தாள் தன்வி‌‌. 


ஏற்கனவே அவன் அழுத்திப் பிடித்ததில் சிவந்திருந்த கன்னம், அவன் அறைந்த அறையில் தீப்பட்டது போல் எரிந்தது.


"உனக்கு எவ்ளோ திமிரு இருந்தால், இதை என்கிட்டயே இவ்ளோ தைரியமாச் சொல்வடி நீ…?. குழந்தைக்கு சொல்ற மாதிரி சொன்னேனேடி… என் நிலையை, அப்படி இருந்தும்… இப்படி ஒரு காரியத்தைப் பண்ணியிருக்க இல்ல நீ… எவ்ளோ நெஞ்சழுத்தம்டி உனக்கு? ஆலனைப் பத்தித் தெரிஞ்ச அப்புறம் கூட நீ இப்படி ஒரு முடிவெடுத்திருக்கியே, என்ன அர்த்தம்டி இதுக்கு" என்றபடி அவளை நெருங்கி வந்து அவள் முடியைக் கொத்தாகப் பிடித்து, தன் முகத்திற்கு அருகே இழுத்து அவள் கண்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே,


"எதுக்காக இப்படி செஞ்ச? ஏன் தாத்தாகிட்ட அப்படிச் சொன்ன? எதை மனசுல வச்சுக்கிட்டு இப்படி எல்லாம் பண்ற?" என்றவனின் இதயம் அவளின் கலங்கிய விழிகளைப் பார்த்து வலியில் துடிக்க, இழுத்து மூச்செடுத்து இதழ் குவித்துக் காற்றை வெளியே ஊதியவன், அவள் தலை முடியில் இருந்து கையை எடுத்து விட்டு, தரையில் அவள் அருகிலேயே தொய்ந்து அமர்ந்தான்.


"ஏன் குட்டிப் பாப்பா இப்படி செஞ்ச? எல்லாம் தெரிஞ்சும், நீயும் என்னை நோகடிக்குறயே" என்றவன் குரலில் அவ்வளவு வேதனை.


சில நொடிகள் அமைதியாக இருந்த ஆதர்ஷ் கண்களை அழுத்தித் துடைத்துக் கொண்டு திரும்பி தன்வியைப் பார்த்தவன், "சரி, எழுந்து வா… உடனே போய் தாத்தாகிட்ட, இந்தக் கல்யாணம் இப்ப வேணாம். நான் யோசிக்காம சம்மதம் சொல்லிட்டேன். எனக்கு யோசிக்கக் கொஞ்சம் டைம் வேணும்னு கேளு, வா…" என்று அவள் கையைப் பிடித்து இழுக்க, அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள்.


"ஏய்! உன்னைத் தான்டி… எழுந்து வா, வந்து தாத்தாகிட்ட நான் சொன்ன மாதிரிச் சொல்லு" என்று பொறுமையாகச் சொல்ல, தன்வி கலங்கிய விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள், தலையை இடவலமாக முடியாது எனும்படி ஆட்டினாள்.


அவள் செய்கையில் மீண்டும் ஆத்திரம் கொண்ட ஆதர்ஷ், "அப்படியே செவுள்ல ஒண்ணு விட்டேன்னு வை… பல் மொத்தமும் எகிறிடும். மரியாதையா எழுந்து வாடி" என்று அவள் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக அவன் இழுத்தான்.


அவன் கையை வேகமாகத் தட்டிவிட்ட தன்வி, "முடியாது முடியாது முடியாது… நீங்க சொல்லற மாதிரி எல்லாம் நான் தாத்தா கிட்டச் சொல்ல மாட்டேன். நான் சொன்னது சொன்னதுதான்." என்று கைகளால் காதை மூடிக் கொண்டு கத்திச் சொல்ல, ஆதர்ஷ் அவளைத் தீப்பார்வை பார்த்தபடி நின்றான்.


"கடைசியா நீ என்ன தான் சொல்ற தன்வி?" என்று அழுத்தமாகக் கேட்டான் அவளை முறைத்தபடி.


"அதான் சொன்னேனே… நான் சொன்னதுதான். இந்தக் கல்யாணம் நடக்கணும், நடக்கும்" என்று அவள் அழுத்தமாகச் சொல்ல, அவளை ஊடுருவும் பார்வை பார்த்த ஆதர்ஷ், "எதுக்காக நீ இப்படிப் பண்ற தன்வி? எனக்கு இப்பக் காரணம் தெரிஞ்சே ஆகணும்." என்றவனைக் கலங்கிய விழிகளோடு நிமிர்ந்து பார்த்த தன்வி, "எனக்கு வேற வழி தெரியல" என்றாள் பரிதவிப்போடு.


"புரியல" என்றான் அவன்.


"தாத்தாவோட உயிர், உங்களோட கௌரவம், இது ரெண்டையும் காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல பாஸ். ஒண்ணு நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் செய்யணும். இல்லாட்டி நம்ம ரெண்டு பேரும் வேற வேற‌ ஆளுங்களைக் கல்யாணம் செய்யணும். இது ரெண்டுல ஏதாவது ஒண்ணு நடந்தே ஆகணும். இல்லாட்டி தாத்தா சும்மா இருக்க மாட்டாரு. நமக்கு இன்னும் மூணு மாசம் தான் டைம் இருக்கு‌ பாஸ். டைம் முடிஞ்சதும் தாத்தா உங்ககிட்ட என்னைக் கல்யாணம் செய்துக்கச் சொன்னால், ஒரு ஸ்டேஜ்ல வேற வழி இல்லாம நீங்க உண்மையைத் தாத்தா கிட்டச் சொல்லிடுவீங்க… அப்படி ஒண்ணு நடந்தால் தாத்தா கண்டிப்பாக உயிரையே விட்ருவாரு. இல்ல கடைசி வாய்ப்புன்னு நீங்க உங்க உயிரை விட்ருவீங்க. உங்க ரெண்டு பேர்ல யாருக்கு எதுவானாலும் என்னால அதைத் தாங்கிக்க முடியாது பாஸ். அப்படி எதுவும் நடந்தால் நானும் உசுரோட இருக்க மாட்டேன். இதெல்லாம் நடக்கக் கூடாதுன்னா… இந்தக் கல்யாணம் நடந்தே ஆகணும்" என்றாள் அமைதியாக, அதே சமயம் உறுதியான குரலில்.


அவள் சொல்வது அத்தனையும் நிஜம். கல்யாணம் வேண்டாம் என்று ஆதர்ஷ் சொன்னால், தாத்தா கண்டிப்பாகக் காரணம் கேட்பார். ஒரு கட்டத்தில் வேறு வழி இல்லாமல் ஆதர்ஷ் உண்மையைச் சொன்னால் அடுத்த நொடி தாத்தாவின் உயிர் போய் விடும். அப்படி இல்லாத பட்சத்தில் தன்வியைக் காக்கத் தன் உயிரையும் விடக்கூட ஆதர்ஷ் தயங்க மாட்டான். இப்படி ஒரு அவிழ்க்க முடியாத சிக்கலில் ஆதர்ஷ் மற்றும் தன்வியைச் சிக்க வைத்து விட்டார் வீரராகவன்.


தன்வியையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷனுக்கு அவள் எடுத்திருக்கும் முடிவில் மிகவும் உறுதியாக இருக்கிறாள் என்று புரிந்தது.


அவளைப்பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பவனுக்கு அவளின் குரலே சொன்னது, எக்காரணம் கொண்டும் அவளின் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டாள் என்று…


"இது பைத்தியக்காரத்தனம்டி?" என்றான் ஆற்றாமையாக.


"அதுபத்தி எனக்குக் கவலையில்லை." என்றாள் அவளும் ரோஷமாக.


"தியாகம் பண்றதா நினைப்போ மேடமுக்கு?"


"உங்களைவிட இல்ல…" 


"இப்பக் கடைசியா என்னதான்டி சொல்ற நீ?"


"நம்ம கல்யாணம் நடக்கணும்னு சொல்றேன்." என்றாள் உறுதியாக.


அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் முகம் பார்த்த ஆதர்ஷ், "நீ ஒரு விஷயம் மறந்துட்ட குட்டிப் பாப்பா… கல்யாண விஷயத்தில் உன் முடிவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு என்னோட சம்மதமும் முக்கியம். தாத்தாகிட்ட உன்னை மேரேஜ் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லைனு சொன்னால் நீ என்ன பண்ணுவ?" என்று ஒரு பக்கப் புருவத்தை உயர்த்தி நக்கலாகக் கேட்டான்.


தன்வி வேகமாகத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "ஏன்? எதுக்கு அப்படிச் சொல்வீங்கலாம்? எனக்கு என்ன குறைச்சல்…" என்றவள், "நீங்க அப்படிச் சொன்னதும் தாத்தா அதைக் கேட்டிருவாரா என்ன? ஏன்னு காரணம் கேப்பாரு, ஆமாம்…" என்றாள் மூக்கை உறிஞ்சிக் கொண்டே…


"ஏன்னு கேட்டால் நான் லவ் பண்ற விஷயத்தைச் சொல்லுவேன்" என்று அவள் நெஞ்சில் இடியை இறக்கினான்‌ அவன்.


"நோ..‌. நோ… நீங்க அப்படி எல்லாம் செய்யக் கூடாது… அப்…அப்புறம் தா… தாத்தா நிலை" என்று அவள் இதயம் பதறியது.


"நான் லவ் பண்றேன்னு ஆலனைக் கூட்டி வந்தால் தான தாத்தாக்கு எதாவது ஆகும். ஒரு பொண்ணைக் கூட்டி வந்து அவர் முன்ன நிறுத்தி இவளைத்தான் லவ் பண்றேன்னு சொன்னா… அவருக்கு ஒண்ணு ஆகாது இல்ல…" என்றான் இறுகிய குரலில்.


"பொ… பொண்ணா? யாரு அது? யாரைக் கூட்டி வரப் போறீங்க?" என்றாள் தன்வி பதட்டமாக.


"யாரோ ஒரு பொண்ணு… பணம் கொடுத்தா நடிக்க எத்தனையோ பேர் வருவாங்க" என்றவனின் வார்த்தையில் விழி விரிய அவனைப் பார்த்தவள், "தாத்தா அந்தப் பொண்ணை உங்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சொல்லுவாரு" என்றாள் நடுங்கும் குரலில்.


"சோ வாட், பண்ணிட்டுப் போறேன்" என்றான் அவனும் அலட்சியமாக.


"லூசு மாதிரிப் பேசாதீங்க பாஸ். அப்படிப் பணத்துக்கு நடிக்க வர்ற பொண்ணுக்கு உங்களைப் பத்திய உண்மை தெரிஞ்சால் அது எவ்ளோ பெரிய ரிஸ்க் தெரியுமா? அவ அதை வச்சு உங்களை பிளாக்மெயில் பண்ணக்கூட சான்ஸ் இருக்கு… கிறுக்கு மாதிரி அப்படி எதுவும் செஞ்சு வைக்காதீங்க" என்றாள் கண்டிப்பாக.


"நான் அப்படிச் செய்யாம இருக்கணும்னா…" என்று அவள் முன் ஒற்றை விரலை நீட்டியவன், "நீ தாத்தாகிட்ட இந்த மேரேஜ் வேண்டாம்னு சொல்லணும்" என்றான் அழுத்தமாக.


தன்வி ஒரு நிமிடம் அவனை ஆழந்து பார்த்தவள், தன் புறங்கையால் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, மூச்சை இழுத்து விட்டவள் அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவள், "அன்னைக்கு நீங்க எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணிங்க, ஞாபகம் இருக்கா பாஸ்?" என்று அருண் வந்து சென்ற அன்று ஆதர்ஷ் அவளுக்குக் கொடுத்த வாக்கை அவனுக்கு நினைவு படுத்தினாள்.


ஆதர்ஷ் கண்களைச் சுருக்கி யோசனையாக அவளைப் பார்த்தவன், "ஆம்" என்று தலையாட்ட, சட்டென அவனின் வலது கையை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொண்ட தன்வி, "அன்னைக்கு நீங்க சொன்னீங்க இல்ல, எனக்குப் புடிச்ச மாதிரி எனக்குக் கல்யாணம் செஞ்சு வைப்பீங்கன்னு… இப்பச் சொல்றேன், நான் பொறந்து வளர்ந்த இந்த வீட்டில் தான் நான் காலம் முழுக்க வாழணும்னு ஆசைப்படுறேன்‌. ஒண்ணு நான் இந்த வீட்டு மருமகளா இந்த வீட்டுக்குள்ள அடியெடுத்து வைக்கணும்… இல்ல, இன்னைக்கே இந்த வீட்டைவிட்டு உயிர் இல்லாத பொணமா என் உடம்பு இந்த வீட்டுப் படி தாண்டி வெளிய போகும். இது என்மேல சத்தியம். இனி உங்க இஷ்டம்" என்றவளைத் தலையில் இருந்து வெடுக்கென்று தன் கையை உருவிக் கொண்ட ஆதர்ஷ் அவளை எரித்து விடுவது போல் பார்க்க, தன்வி அவன் பார்வையின் தகிப்பைத் தாங்க முடியாமல் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.


"இல்ல… நீ என் தன்வி இல்ல. நீ என் பாப்பா இல்ல, என் தன்வி எக்காரணம் கொண்டும் என்னைக் கஷடப்படுத்த மாட்டா… அவ என்னைப் புரிஞ்சு நடந்துக்குவா, நீ என் தன்வி இல்ல. நீ யாரோ, நீ என் தன்வி இல்லை" என்றபடி அந்த அறைக் கதவை ஓங்கி அடித்துச் சாத்தியபடி அந்த அறையை விட்டு அவன் வேகமாக வெளியேறிவிட, தன்வி தன் கால்முட்டியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு தேற்றக்கூட ஆளின்றி கதறிக் கொண்டு இருந்தாள். 


அவளின் இந்த முடிவு ஆதர்ஷனுக்கு எத்தகைய வலியைக் கொடுக்கும் என்று அவளுக்கு நன்கு தெரியும் தான். ஆனால், இருக்கும் சூழ்நிலையில் அவளுக்கிருந்த அனைத்து வழிகளும் மூடிக்கொண்டு விட, இதைத் தவிர வேறு வழி எதுவும் தெரியாமல் தெரிந்தே ஆதர்ஷனை நோகடிக்க முடிவெடுத்து விட்டாள்.


இனி இவர்கள் இருவரின் வாழ்க்கையும் இவர்கள் கையில் இல்லை. 


நூல் ஒருவன் கையில் இருக்க, மேடையில் கை, கால்களை ஆட்டி ஆடும் பொம்மலாட்டப் பொம்மைகள் போல், இனி இவர்களின் அசைவு ஒவ்வொன்றும் அந்த ஆண்டவன் கையில் இருக்கும் நூலின் விசையில் தான் இருக்கிறது.


சென்னை விமான நிலையம்…


கண்களில் கண்ணீர் வழிய நின்ற தன்வியைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் நின்ற ஆதர்ஷனை மனதில் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாள் தன்வி.


மெல்ல ஆதர்ஷன் அருகில் வந்த தன்வி, "ப்ளீஸ் பாஸ்… இப்படிப் பண்ணாதீங்க. அவ்ளோ தூரம் போறீங்க, திரும்பி வர மூணு மாசம் ஆகும்னு வேறச் சொல்றீங்க. அட்லீஸ்ட் போய்ட்டு வரேன் குட்டிப் பாப்பான்னு ஒரு வார்த்தையாவது சொல்லிட்டுப் போங்க பாஸ். இல்ல, அதுகூட வேணாம் எதாவது திட்டி விட்டாக் கூடப் போதும்… இப்படிப் பேசாம மூஞ்சைத் திருப்பிட்டுப் போகாதீங்க… அ...அது எனக்கு உறுத்திட்டே இருக்கும்" என்றவள் இமைகள் தாண்டி வெளியே வரத் துடித்த கண்ணீரைக் கஷ்ப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டு, "ப்ளீஸ்" என்று மருகி நின்றவளைப் பார்த்து அவள் கண்ணீரைத் துடைக்கப் பரபரத்த கையைக் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான் ஆதர்ஷ்.


கண் கலங்க நின்ற தன்வியை எமி தன் தோளோடு அணைத்துக் கொண்டு சமாதானம் செய்ய, அவளைப் பார்த்து ஆலனுக்கு மனது பிசைந்தது.


ஆதர்ஷனைத் திரும்பிப் பார்த்த ஆலன், "ப்ளீஸ் ஆஷ்… ஷீ இஸ் க்ரையிங். சே சம்திங் மேன்…" என்று அவளுக்காகப் பரிந்து பேச, அவனைத் திரும்பிப் பார்த்த ஆதர்ஷ், ஃப்ளைட்க்கு டைமாச்சு… கம் லெட்ஸ் கோ" என்று தன் உடமைகளைத் தள்ளிக் கொண்டு போக, போகும் அவனையே வலியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் தன்வி.


ஆலன் மெதுவாகத் தன்வியின் தலையை வருடி, "சூன் எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட் பேபி. டோண்ட் வொர்ரி" என்றவன் கையைப் பிடித்துக் கொண்டவள், "பாஸை நல்லாப் பார்த்துக்கோங்க அண்ணா. அவருக்கு நான் இல்லாட்டி ஒழுங்கா எதுவும் செய்ய வராது… டைம்க்கு சாப்பிடக் கூட மாட்டாரு. கொஞ்சம் அவரைப் பார்த்துக்கோங்க." என்றவளை வியப்பாகப் பார்த்தவனுக்கு அப்போது புரிந்தது, ஆதர்ஷ் இவள் மேல் இத்தனை அன்பு வைத்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று.


அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்த ஆலன், "ஐ வில்…" என்றவன், "நான் பார்த்துக்குறேன்" என்று தமிழில் சொல்ல, தன்வி முகத்தில் ஒரு திருப்திப் புன்னகை.