விழி வழி காதல் நுழைந்ததடி 7

விழி 7


அந்த அறையே ஊசி விழும் ஓசை கூடத் துல்லியமாய்க் கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது.


ஆதர்ஷ், தன்வி முன் மண்டியிட்டு தரையில் அமர்ந்து, அப்படியே அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.


அவன் கொடுத்த அதிர்ச்சியில் உறைந்து, உடல் இறுகி இருந்தவள் கைகள் அவளையும் அறியாமல் அவன் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தது.


"நீ… நீ என்னை வெறுத்திட மாட்ட இல்ல குட்டிப் பாப்பா? இதுக்கு அப்புறமும் நீ என்னை நேசிப்ப தானே? என்னை ஒதுக்கிட மாட்ட இல்ல" என்றவன் குரல் கமறிவிட‌, அவன் தலையைக் கோதியபடியே இருந்தவள் விரல்கள் சட்டென நின்றுவிட, மெல்ல நிமிர்ந்து ஆலன் முகத்தை ஒரு நிமிடம் ஆழமாகப் பார்த்தாள்.


 "இந்த ஜென்மத்தில் என்னோட ஆதுவை என்னால வெறுக்க முடியாது. நீங்க எப்படி இருந்தாலும் என்னோட ஆது தான். தப்பே செஞ்சிட்டு நீங்க என் முன்னால நின்றாலும் நான் உங்க பின்னால தான் நிப்பேன். அப்படி இருக்க… இதுல உங்க தப்பு எதுவும் இல்லயே பாஸ். அப்புறம் நான் எப்படி உங்களை வெறுக்கவோ, விலகவோ முடியும்" என்று அழுத்தமாகச் சொன்னவளை நிமிர்ந்து பார்த்த ஆதர்ஷின் கண்களில் கண்ணீர் துளித் துளியாக வழிய, அதைத் தன் பிஞ்சு விரல்களால் துடைத்து விட்டாள் தன்வி.


கொஞ்ச நேரத்திற்கு முன், ஆலன் தன்னைப் பார்த்துச் சிரித்ததில் கடுப்பான தன்வி, "பாஸ்…! உங்க மச்சான்கிட்டச் சொல்லி வைங்க, இப்படி என்னைக் கிண்டல் பண்ணிச் சிரிக்க வேணாம்னு… அப்புறம் அவங்க தங்கச்சி நம்ம வீட்டுக்கு வந்ததும் நான் அவங்களைக் கொடுமைப் படுத்துவேன்" என்று சொல்லிச் சிரிக்க, ஆதர்ஷனும் ஆலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


"ஆலனை எதுக்கு என் மச்சான்னு சொல்ற தன்வி?" என்ற ஆதர்ஷின் குரல் விம்மியது.


"பின்ன? மச்சான் தானே பாஸ். நீங்க அவங்க சிஸ்டரை மேரேஜ் பண்ணா அவங்க பிரதர் உங்களுக்கு மச்சான் முறைதான் வரும்." என்று அவன் தலையில் செல்லமாகக் கொட்டிய தன்வி, "யூ.எஸ் ல இருந்து, இருந்து உறவுமுறை கூட மறந்து போச்சு உங்களுக்கு?" என்று சிரித்தவளை வலியோடு பார்த்து இடவலமாகத் தலையாட்டியபடியே எழுந்து ஆலன் அருகில் போய் நின்ற ஆதர்ஷ், "எமி என்னோட லவ்வர் இல்ல, தன்வி" என்றான் உணர்ச்சி துடைத்த குரலில்.


தன்வி அவனைப் புரியாமல் பார்த்தவள், "அவங்க இல்லன்னா என்ன அர்த்தம் பாஸ்? இங்க அவங்க மட்டும் ‌தான இருக்காங்க." என்று அந்த அறையைச் சுற்றிப் பார்த்தவள், "ஓஓஓ! ஒருவேளை அவங்க இன்னும் இங்க வரலயா? லேட்டா வருவாங்களா?" என்று புரியாமல் கேட்க, அதற்கு இல்லை என்று தலையாட்டிய ஆதர்ஷ், "என்னோட லவ்வர் இந்த ரூம்ல, என் பக்கத்தில் தான் தன்வி நிக்கிறான்." என்று கண்களை மூடியபடி அழுத்தமாகச் சொல்ல, தன்வி ஒரு நிமிடம் அவன் சொல்வது புரியாமல் விழித்தவள் ஆதர்ஷன் சொன்ன, "என் லவ்வர் இங்க தான் நிக்கிறான்" என்று சொன்ன வார்த்தை அவள் புத்தியில் மெதுவாக உரைக்க, அவள் கண்கள் பெரியதாக விரிந்துவிட, "பாஸ்…" என்று கத்தியபடி சட்டென எழுந்து நின்று விட்டாள் தன்வி.


கண்டிப்பாக அவள் அதிர்ச்சி அடைவாள் என்று ஆதர்ஷனுக்குத் தெரியும். ஆனால், அந்த அதிர்ச்சியால் அவளுக்கு வரப்போகும் கோவத்தின் அளவு? தன்னை விட்டு விலகி விடுவாளோ? உண்மை தெரிந்த பின் அவள் முடிவு என்னவாக இருக்கும் என்பது தான் அவன் பயமே…


"இப்ப சொல்லு தன்வி, என் காதலை சப்போர்ட் பண்ணி உன்னால தாத்தாகிட்டப் பேச முடியுமா?" என்று கேட்க தன்வியின் தலை தானாகவே இல்லை என்று ஆடியது.


"இப்ப தாத்தா என் காதலுக்கு ஒகே சொல்வாரா?" என்று கேட்க, மறுபடியும் இல்லை என்று வேகமாகத் தலையை ஆட்டியவள் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.


இதெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த எமிக்கு, அங்கு என்ன நடக்கிறது என்று தெளிவாக எதுவும் புரியாமல் இருந்தாலும் தன்வி அழுவதைப் பார்த்து மனம் கசிந்தவள் அவள் அருகில் நின்று மெல்ல அவளது தோளைத் தொட, நிமிர்ந்து அவளைப் பார்த்த தன்வி, மீண்டும் விம்மி விம்மி அழுதாள்.


எமிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் போக கருணையாகத் தன்வியின் முகத்தைப் பார்த்து, "ப்ளீஸ் டோன்ட் க்ரை…" என்று தவிப்பாகச் சொன்னபடி அவள் தோளில் கை வைத்து அழுத்த, அழுதபடியே தன் தோளில் இருந்த எமியின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் தன்வி.


ஆதர்ஷ் கதறும் அவளைப் பார்த்து விரக்தியாக இழுத்து மூச்சு விட்டவன், "யூ.எஸ் ல நான், ஆலன், எமி, த…" என்று ஆரம்பித்தவன் சற்று நிதானித்து, "நாங்க எல்லாரும் கிளாஸ்மேட். முதல்ல எனக்கு ஆலன் மேல எந்த பீலிங்கும் இல்லாம தான் இருந்துச்சு… கூடவே தாத்தா நான் படிக்க அங்கப் போகும் போதே எந்த ஃபாரின் கேர்ளையும் லவ் பண்ணக் கூடாதுன்னு சொல்லிதான் அனுப்பினார். அதனாலயே நான் எந்தப் பொண்ணையும் நிமிர்ந்து கூடப் பார்க்காம தான் இருந்தேன். ஆனா, ஏன்னு தெரியல? போகப் போக எல்லாம் மெல்ல மெல்ல மாறுச்சு. ஆலன் கூட என்னோட தாட்ஸ் ஒத்துப் போய், எங்க ரெண்டு பேர்க்குள்ள நல்ல கம்பர்டபிளிட்டி வந்துச்சு. அப்பக் கூட நான் ஆலனை ஒரு நல்ல ஃபிரண்டா தான் பார்த்தேன். ஆனா, அதெல்லாம் ஆலன் வந்து என்கிட்ட அவன் மனசைச் சொல்லும் வரை தான். எப்ப அவன் என்னைப் புடிச்சிருக்குன்னு சொன்னானோ அப்பவே எனக்குள்ளும் ஒரு மாற்றம். அது ஏன் என்னன்னு எனக்குச் சொல்லத் தெரியல தன்வி… பட், அவன் கேட்டதும் நானும் ஓகே சொல்லிட்டேன்‌. இந்தியா மாதிரி, யூ.எஸ் ல ஒரு ஆணும், ஆணும் விரும்புறது பெரிய விஷயமோ? தப்போ இல்ல‌…! அதனால அப்ப எனக்கு ஆலனுக்கு ஓகே சொன்னது பெரிய பிராப்ளமாத் தெரியல. பட், எப்பத் தாத்தா என்னை இந்தியா திரும்பி வரச் சொன்னாரோ, அப்ப இருந்து எனக்குள்ள ஒரு பெரிய போராட்டமே நடந்துட்டு இருக்கு தன்வி. அதோட என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னப்போ சத்தியமா நான் பயந்துட்டேன்டி..‌. உயிரே போனாலும் என்னால் கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாதுடி. இதைத் தாத்தாகிட்டச் சொல்லவும் முடியாது. கண்டிப்பா இதைக் கேட்ட அடுத்த நிமிஷம் அவரு" என்று இவன் ஆரம்பிக்கும் போதே, "அவர் உயிரையே விட்ருவாரு" என்று பதறினாள் தன்வி.


"எஸ்… இந்த உண்மை அவருக்குத் தெரிஞ்சா, அ…அடு…அடுத்த நிமிஷம் அவர் உயிர் போயிடும் தன்வி…" என்றவன் தன்வியின் முகம் பார்க்கும் தைரியமின்றித் தரையைப் பார்த்திருக்க, அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்த் துளிகள் அவள் விழி இமைகளையும் கனக்கச் செய்தது.


அடுத்தடுத்த அதிர்ச்சியில் தொய்ந்து போய் அமர்ந்திருந்தாள் தன்வி.


அவள் மடியில் இருந்து தலையை உயர்த்தி, அவள் முகத்தைப் பார்த்த ஆதர்ஷ், "இப்ப சொல்லு தன்வி… நான் என்ன செய்யட்டும்? சத்தியமா என்னால கல்யாணம் எல்லாம் செஞ்சிக்கவே முடியாது. அது பரவாயில்ல, கடைசி வரை தனியாவே இருக்க நான் தயார். தாத்தாவும், நீயும் என் கூட இருந்தால் அதுவே எனக்குப் போதும். ஆனா, தாத்தா எடுத்திருக்க முடிவு… நா…நான்… உன்னை" என்று தடுமாறியவனுக்கு அவளோடு தனக்குத் திருமணம் என்று நினைக்கவே நெஞ்சம் பதறியது.


"நீ என் குட்டிப் பாப்பாடி… நீ குழந்தையா இருந்ததில் இருந்து உன்னைக் கண்ணுக்குள்ள வச்சு வளர்த்தவன் நான். நானே எப்படிடி உன் வாழ்க்கையை அழிக்க முடியும்? இந்த உயிரை விட்டாலும் விடுவனே தவிர ஒரு நாளும் தாத்தாவுக்காக உன்னைக் கல்யாணம் செய்யச் சம்மதிக்கவே மாட்டேன்." என்று உறுதியாகச் சொன்னவனை இமைகள் உயர்த்தி அழுத்தமாகப் பார்த்தவள், "எனக்கு வீட்டுக்குப் போகணும்" என்றாள் மெல்லிய குரலில்.


ஆதர்ஷனுக்கு அவள் மனநிலை புரிந்தது.


தரையில் இருந்து எழுந்தவன், "வா" என்று அழைக்க, அமைதியாக எழுந்து அவன் பின்னால் சென்றவளை, "பேபி ஏஞ்சல்" என்று அழைத்தான் ஆலன்.


அவள் மெல்லத் திரும்பிப் பார்க்க, "அப்படியே போனா என்ன அர்த்தம்?" என்று ஆங்கிலத்தில் கேட்க எச்சில் விழுங்கியபடியே ஆலனைப் பார்த்தவள், "நா…நா… அது… அது" என்று தண்ணீர் விட்டு வெளியே வந்த மீன் சுவாசத்திற்குத் தவிப்பது போல் அவள் தவிக்க, 


ஆலன் மெல்லச் சிரித்தபடி அவள் அருகில் வந்தவன், "யூ  பார்காட் யுவர் ஹேண்ட் பேக் பேபி" என்று தன்வி மறந்துவிட்ட அவள் கைப்பையை எடுத்து அவள் முன் நீட்ட தயக்கத்தோடு அதை வாங்கிக் கொண்டவள், "தேங்க்ஸ் அண்ணா" என்றாள் அவளுக்கும் கேட்காத குரலில்.


அவளுக்கு தான் அந்தக் குரல் கேட்கவில்லையே தவிர, அவள் சொன்ன "அண்ணா" என்ற வார்த்தை தெளிவாக ஆதர்ஷ் மற்றும் ஆலன் காதில் விழுந்தது.


ஆலன் மெதுவாக அவள் தலை வருடியவன் ஆதர்ஷனனைப் பார்த்து, "டேக் கேர் ஆஃப் மை பேபி சிஸ்டர் ஆஷ்" என்றவனைப் பார்த்து வலியோடு சிரித்த ஆதர்ஷ், "அன்டில் மை லாஸ்ட் பிரீத்." (until my last breath) என்றபடி தன்வியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.


காரில் வரும் வழியெல்லாம் தன்வி எதையோ யோசித்தபடியே சாலையை வெறித்தபடி இருந்தவள், ஏதோ ஞாபகம் வர திரும்பி ஆதர்ஷனைப் பார்த்து, "உங்களுக்கு யூ.எஸ் லயே செட்டில் ஆகி, அங்க இருக்கற நம்ப பிசினஸைப் பார்த்துக்கிட்டு அங்கயே இருக்கணும், பிசினஸை அடுத்த ஸ்டேஜ்க்கு கொண்டு போக ஆசைனு, நீங்க அடிக்கடி சொல்வீங்களே பாஸ்… அது ஆலன்காக தானா?" என்று கேட்டாள்.


அவளைத் திரும்பிப் பார்த்து இல்லை என்று தலையாட்டிய ஆதர்ஷ், "ஆலன்காக இல்ல தன்வி. தாத்தாவுக்காக! உனக்காக! ஒரு நாள் இல்ல, ஒரு நாள் என்னைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிடும். அப்போ அதைக் கண்டிப்பா உங்களால் தாங்க முடியாது. அதோட இந்த சொசைட்டி…" என்றவன் கைகள் கார் ஸ்டேரிங்கை இறுக்கிப் பிடிக்க, "என்னைப் பத்தித் தப்பாப் பேசியே உங்க ரெண்டு பேரையும் நம்ம பிசினஸையும் அழிச்சிடுவாங்க. அதான் நான் யூ.எஸ் போக முடிவு பண்ணினேன்‌."


"யூ.எஸ் போன அப்புறம் ஆலனை… நீங்க..‌." என்று ஏதோ கேட்க வந்தவள், முழுதாக அதைக் கேட்க முடியாமல் தலையைக் குனிந்து கொள்ள, "ரொம்ப யோசிக்காத தன்வி, இன்னைக்கு ஒரே நாள்ல உனக்கு ஏகப்பட்ட டென்ஷன்.  சோ ப்ளீஸ், எதுவும் யோசிக்காத. ஜஸ்ட் ரிலாக்ஸ்." என்றவன் பாதையில் கவனத்தைச் செலுத்தினான்.


அன்று முழுவதும் தன்வி அவள் அறைக்குள்ளேயே தான் இருந்தாள். சாப்பிடக் கூட வெளியே வரவில்லை. வீரராகவன் கேட்ட போதும் உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டு அறைக்குள்ளேயே இருந்தாள். 


காலையில் ஆதர்ஷுடன் வெளியே சென்று வந்ததில் இருந்து தான் அவள் சரியில்லை என்று புரிந்து கொண்ட தாத்தா, ஆதர்ஷிடம் அதுபற்றிக் கேட்க, "அவளுக்கு ஒண்ணு இல்ல தாத்தா. நாளைக்குச் சரியாகிடுவா" என்று சொல்லிவிட, வீரராகவனுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றியது. ஆனால், அதுபற்றிச் சம்பந்தப்பட்ட இருவருமே வாய் திறக்காமல் இருந்தால், அவரும் என்ன தான் செய்வார்‌. ஆதர்ஷ் சொன்னது போல் நாளைக்கு தன்வி சரியாகி விடுவாள் என்று அவரும் அமைதியாகிவிட, நாளை தன்வி எடுக்கப் போகும் முடிவால் ஆதர்ஷின் அமைதி மொத்தமாகக் குலையப் போவதை யார் அவரிடம் சொல்வது?


மறுநாள் காலை மூடியிருந்த தன்வியின் அறைக் கதவைப் பார்த்துக் கண்களை மூடித் திறந்த ஆதர்ஷ், அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் வெளியே சென்று விட்டான்.


இதற்கு இடையில் பலமுறை ஆதர்ஷன் அலைபேசிக்கு அழைத்த ஆலன் கேட்ட ஒரே கேள்ளி, தன்வி இப்போது எப்படி இருக்கிறாள் என்பது தான். 


ஆதர்ஷனை முழுதாகத் தெரிந்த அனைவருக்கும் தன்வி பற்றியும் தெரிந்திருக்கும். ஆதர்ஷ் பத்து வார்த்தை பேசினால் அதில் எட்டு வார்த்தைகள் தன்வி பற்றி தான் இருக்கும். ஆதர்ஷ் வாழ்க்கையில் தன்வியின் இடம் மிகவும் முக்கியமானது. தன்வி பற்றி ஆதர்ஷ் பேசப் பேசக் கேட்டுப் பழகிய ஆலன், எமி இருவருக்கும் முகம் தெரியாத தன்வி மேல் ஒரு பிரம்மிப்பும் இனம் புரியாத ஒரு அன்பும் உருவானது. அதுவும் அவள் ஆலனை அண்ணா என்று அழைத்ததும் ஆலனுக்கு மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அதனாலேயே தன்வியின் நிலை பற்றி நினைக்க அவனுக்குக் கவலையாக இருந்தது. உண்மை தெரிந்த பின் அவளின் நிலை என்னவாக இருக்கும் என்று யோசிக்கவே அவனுக்குப் பயமாக இருந்தது.


அதற்காகவே மணிக்கு ஒருமுறை ஆதர்ஷனை அழைத்து அவளைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்.


தன்வி அறையை விட்டு வெளியே வரவில்லை என்று தெரிந்து அவனுக்கும் கவலையாகத் தான் இருந்தது.


சேரில் சாய்ந்து கண்களை மூடி இருந்த ஆதர்ஷ், எதையோ யோசித்துக் கொண்டிருந்தவன் அலைபேசியில் அழைப்பு மணி ஓசை கேட்க, தன்வி தான் அழைத்திருப்பாளோ என்று அவசரமாக அலைபேசியை எடுத்தவன், திரையில் தெரிந்த வீரராகவனின் எண்ணைப் பார்த்து முகம் வாடிப் போனான்.


அழைப்பை எடுத்துக் காதில் வைத்து, "தன்வி எப்படி இருக்கா தாத்தா? சாப்பிட்டாளா? இப்ப எங்க இருக்கா அவ?" என்று பதட்டமாகக் கேட்க, 


"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆதர்ஷ். அவ மேல உனக்கு இருக்கும் இந்த அக்கறையைப் பார்க்கும்போது மனசுக்கு நிறைவா இருக்கு. இதே மாதிரிக் கல்யாணத்துக்குப் பிறகும் ஆயுசு முழுக்க நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கணும்.‌" என்று வீரராகவன் உணர்ச்சி மிகுதியில் பேசிவிட, அவர் பேசியது ஒன்றுமே ஆதர்ஷனுக்கு விளங்கவில்லை.


"தாத்தாஆஆஆ… நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்? நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க. இப்ப எதுக்குக் கல்யாணப் பேச்சு? எங்களுக்கு டைம் வேணும் தாத்தா. ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்" என்று பல்லைக் கடிக்க,


"இனி அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல ஆதர்ஷ். உடனே உங்க கல்யாணம் நடந்தே ஆகணும்" என்று தாத்தா குண்டைத் தூக்கிப் போட, ஆதர்ஷனுக்கு மயக்கம் வராத குறை.


"தாத்தா, சும்மா கண்டதையும் பேசிட்டு இருக்கதீங்க… நாங்க இன்னும் எங்க முடிவையே சொல்லல, அதுக்குள்ள என்ன அவசரம்? தன்விக்கும் ஒரு மனசு இருக்கு தாத்தா. அவளுக்கு இஷ்டமில்லாத ஒண்ணை, போர்ஸ் பண்ணி அவளைச் செய்ய வைக்காதீங்க."


"டேய்…" என்று அதட்டிய வீரராகவன், "அவமேல உன்னைவிட எனக்கு அக்கறை அதிகம்டா..‌. என்னமோ உனக்கு மட்டும் தான் அவமேல பாசம் இருக்கற மாதிரிப் பேசிட்டு இருக்க… அவளைக் கல்யாண விஷயத்தில் நான் கட்டாயப் படுத்துவேன்னு நீ நினைக்கறியா ஆதர்ஷ்… உன் தாத்தா ஒண்ணும் அவ்ளோ கல் நெஞ்சக்காரன் ஒண்ணும் இல்ல." என்று அழுத்தமாகச் சொல்ல, ஆதர்ஷனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.


"சாரி தாத்தா… நான் ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன். நீங்க கல்யாணம் பத்திப் பேசவும் சட்டுன்னு பேசிட்டேன், சாரி தாத்தா. ஆனா, ப்ளீஸ் இனிமே கல்யாணம் பத்திப் பேசாதீங்க. அவளுக்கு யோசிக்க டைம் கொடுங்க" என்றவனுக்குத் தாத்தா சொன்ன செய்தியைக் கேட்டு பூமியே இரண்டாகப் பிளந்தது போல் இருந்தது.


"எ… என்ன சொல்றீங்க தாத்தா?" என்று பதட்டமாகக் கேட்டான், அவர் சொன்னது சரியாகத் தான் அவன் காதில் விழுந்ததா என்ற சந்தேகத்தில்…


"தன்வி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா ஆதர்ஷ். அவளுக்கு உன்னைக் கட்டிக்க முழு சம்மதம்னு சொல்லிட்டா. எப்ப வேணும்னாலும் கல்யாணத்தை வைக்கச் சொல்லிட்டா" என்ற வீரராகவன் குரலில் அத்தனை மகிழ்ச்சி என்றால் அதற்கு நேர்மாறாக ஆதர்ஷ் முகம் ஆத்திரத்தில் சிவந்தது. 

உடனே தன் காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் பறந்தான் தன்வியைத் தேடி


இனி இருவரின் நிலையும் அடுத்து என்னாகும்?