அழகிய தமிழ் மகள் 24

அழகி 24


ஆதித், யுக்தா கல்யாணம் முடிந்து அனைவரும் கிளம்பிவிட, யுக்தா எதுவும் பேசாமல் ராம் வீட்டிற்குச் சென்று அமைதியாகப் படுத்துக் கொண்டாள்.


ஹாலில் உட்கார்ந்து சிவகாமி பாட்டி எதையோ படு சீரியஸாக யோசித்துக் கொண்டிருக்க, அதை பார்த்து வீட்டில் இருந்த அனைவருக்கும் வயிற்றில் மீண்டும் புளி கரைத்து, ரசம் கொதித்து.


"இப்ப வரை இந்தக் கெழவி செஞ்சதுக்கே என்னோட பொண்டாட்டி திமிரழகி ரியாக்ஷன் என்னன்னு தெரியல? இதுல இந்தக் கெழவி யோசிக்கிற ஸ்டைல பாத்தா, ஏதோ பெருசா ப்ளான் பண்ணுது போலயே! கயல், மது அக்காவை கூப்பிட்டு காதுல ஏதோ ரகசியம் வேற பேசுது…" என்று ஆதித் பேய் முழி முழிக்க ஜீவா, ராம், வினய், வெற்றி, விஷ்ணு நிலையும் அதே தான்.


"டேய் அண்ணாஸ்… டேய் அண்ணாஸ்…" என்று ஜீவா வெற்றியையும், ராமையும் ஹாஸ்கி வாய்ஸில் கூப்பிட,


"டேய் என்ன டா? எதுக்கு எங்க சிந்தனைய கெடுக்குற?" என்று எரிந்து விழுந்தான் வெற்றி.


"ஆமா பெரிய சிந்தனை சிற்பி இவரு… மூஞ்சப்பாரு… டேய் அண்ணா நம்ம தாய் கெழவி மறுபடி ஏதோ ப்ளான் பண்ற மாதிரி தெரியுது.‌ ஐ திங் கயல் அண்ணி, மது அண்ணியும் இதுல கூட்டுன்னு நெனைக்கிறேன். நீயும், ராம் அண்ணாவும் ஒரு எட்டு போய் உங்க பொண்டாட்டிங்க கிட்ட என்ன மேட்டர்னு, ஒரு வார்த்தை கேட்டு வந்து சொல்லுங்களேன்."


"ஆமா பாஸ். இந்தப் பாட்டி யோசிக்கிற ஸ்டைல்லே சரியில்ல. உங்க தங்கச்சி வேற என்ன நடந்தாலும் அமைதியாவே இருக்கா. எனக்கு ரொம்பப் பயந்து பயந்து வருது பாஸ். ப்ளீஸ் உங்க பொண்டாட்டிங்க கிட்ட என்ன விஷயம்னு கேட்டு சொன்னீங்கன்னா, நான் கொஞ்சம் நெஞ்ச திடப்படுத்திப்பேன்‌. ப்ளீஸ் பாஸ், ப்ளீஸ் வெற்றி மாமா…" என்று ஆதித் மூஞ்சை பாவமாக வைத்துக் கொள்ள,


"டேய் டேய் நடிக்காத டா. உன்னை பத்தி எனக்குத் தெரியும் டா. நீ பேக் ப்ளான் இல்லாம எதுவும் செய்ய மாட்டேன்னு எனக்குத் தெரியாத என்ன? நீ ஏதோ முடிவு பண்ணிட்டு தான் சாம் கழுத்துல தாலியே கட்டி இருப்ப… என்னமோ சாம்க்கு அப்படியே பயப்படுற மாதிரி இல்ல நடிக்கிற… போடா போ… போய் நீ போட்ட ப்ளானை எக்ஸிகியூட் பண்ணு டா…" என்ற ராம்,


"அப்பறம் இன்னொன்னு இனிமே நீ என்னைப் பாஸ்னு கூப்பிட கூடாது. ஒழுங்கா தங்கச்சி புருஷனா லட்சணமா மச்சான்னு கூப்டு…" என்றவன்,


"பாவம் என் தங்கச்சி… இவனை நம்பி அவளைப் புடிச்சி குடுத்தாச்சு. இந்த ரவுடி பய என் தங்கச்சியை என்ன பாடுபடுத்த போறானோ?" என்று சிரித்தபடியே செல்ல,


"என் பொண்டாட்டிய விட, நீங்க தான் பாஸ் என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க…" என்று புன்னகைத்தபடியே தன் அறைக்குச் சென்றான் ஆதித்.


இங்கு ராம் வீட்டில் கயல்விழியும், மதுவும் யுக்தாவை விரட்டிக் கொண்டிருந்தனர்.


"ஏய் சமி இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க? எந்திரிச்சுக் கெளம்பு டி…" என்று கயல்விழி சொல்ல,


"ஏய் மது இப்ப அவள எங்க கெளம்பச் சொல்றீங்க நீங்க ரெண்டு பேரும்? அவ சும்மா தான உட்காந்திருக்கா…" என்று ராம் யுக்தாவிற்குப் பரிந்து கொண்டு வர,


"ம்ம்… எல்லாம் அவ புருஷன் வீட்டுக்கு தான். கல்யாணம் முடிஞ்சும், இன்னும் இங்க ஏன் உட்காந்திருக்கனும்? அதான் கழுத்துல தாலி ஏறிடுச்சு இல்ல. இன்னும் நம்ம வீட்லயே இருந்தா என்ன அர்த்தம்?" என்று மது சொல்ல, ராம், வெற்றி இருவருக்கும் கோவம் வந்து விட்டது.


"ஏய் மது… என்ன இது உன் வீடு, என் வீடுன்னு பிரிச்சு பேசிட்டு… எப்ப இருந்து இந்தப் பழக்கம் வந்துது?" என்று ராம் குதிக்க, வெற்றியும் கயல்விழியைத் திட்டிக் கொண்டிருந்தான்.


கயல், மது இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, ‘இதுங்களுக்கு எப்ப தான் மூளை வளரப் போகுதோ?’ என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவர்கள், தன் இணைகளின் அருகில் சென்று அவர்கள் காதை பிடித்து இழுத்து,


"டேய் லூசு பசங்களா… உங்களுக்கு ஒரு மருமகனோ, இல்ல மருமகளோ பாக்கணும்ற ஆசயே இல்லயா டா?" என்று அவர்கள் காதை கடித்துத் துப்ப,


"ஏன் இல்லாம? எங்களுக்கும் சீக்கிரம் தாய்மாமன் ஆகணும்ற ஆச நெறய இருக்கு டி…"


"ம்ம் இருக்கில்ல.‌ அப்ப வாய மூடிட்டு கம்முன்னு கெடங்க. சமி இங்கேயே இருந்த அப்பறம் குழந்தை எங்க இருந்து வருமாம்? பாட்டி இன்னைக்கு அவங்க ரெண்டு பேருக்கும், வெற்றி அண்ணா வீட்ல சாந்தி மூகூர்த்தம் ஏற்பாடு செஞ்சிருக்காங்க. அதான் அவளை இங்கிருந்து விரட்டிட்டு இருக்கோம். நீங்க ரெண்டு பேரும் உங்க திருவாய மூடிட்டு, கொஞ்ச நேரம் உங்க பாசமலர் படத்தை நிப்பாட்டிட்டு கம்முன்னு இருங்க. இன்னும் கொஞ்ச நேரம் நாங்க எங்க நாத்தனார் பவரை தாறுமாறா யூஸ் பண்ணுவோம். நீங்க எதையும் கண்டுக்காத மாதிரியே இருக்கணும் புரியுதா?" என்று அவர்கள் மண்டையில் கொட்டிய பெண்கள் இருவரும்,


"ஏய் சமி நீ இன்னும் கெளம்பலயா? எழுந்து போய்க் குளிச்சுட்டு வாடி…" என்று மீண்டும் விரட்ட,


யுக்தா அவர்கள் இருவரையும் முறைக்க, "என்னாடி முறைப்பு? இவ்ளோ நாள் நீ எங்களுக்கு நாத்தனார். அதனால நீ சொல்றத நாங்க கேட்டோம். இன்னைக்கு நீ எங்க தம்பி பொண்டாட்டி. சோ அஸ் பர் தி நாத்தனார் ருல்ஸ், நாங்க சொல்றத நீ கேட்டே ஆகணும். மரியாதையா எழுந்து போய்க் குளிச்சிட்டு, உன் ரூம்ல பாட்டி புதுப் புடவை வச்சிருக்கு.‌ அதைக் கட்டிடு வாடி…" என்று விரட்ட,


"ஓ இதெல்லாம் அந்தக் கெழவி வேலையா? வர வர அது தொல்ல தாங்க முடியல. முதல்ல கிரைண்டர் கல்ல தூக்கி போட்டு அது சோலிய முடிக்கணும்…" என்று முணங்கியபடியே யுக்தா எழுந்து குளிக்கச் செல்ல,


மதுவும், கயலும் ஹை பை அடித்துக் கொண்டு, "நம்ம வேலை முடிஞ்சிது. இனி எல்லாம் ஆதி கையில தான் இருக்கு. கடவுளே காப்பாத்து…"


"ஏன் பாட்டி ஏற்கனவே அவ தீடிர்னு கல்யாணம் நடந்ததுல, ரொம்பக் குழம்பி போய் இருக்கா… இதுல இன்னைக்கே சாந்தி மூகூர்த்தம் ஏற்பாடு செய்யணுமா? பாவம் பாட்டி அவ. அவளுக்குக் கொஞ்சம் டைம் கொடுக்கலாமே பாட்டி" என்று நிஷா, யுக்தாவுக்காகப் பேச,


"கொஞ்ச டைம் இல்லடி… அவ ஆதித் கூடச் சேர்ந்து வாழ எத்தனை வருஷம் வேணும்னாலும் டைம் எடுத்துக்கட்டும். ஆனா அந்த டைம்மை அவ நம்ம சமியா இல்ல, ஆதி பொண்டாட்டியா அவன் கூடவே இருந்து எடுத்துக்கட்டும். அவ ஆதி கூட ஒரே வீட்ல இருந்தா தான், அவளுக்கு ஆதி அவ புருஷன், அவ அவனுக்குப் பொண்டாட்டின்ற நெனப்பு மனசுல நல்லா பதியும். அதுக்குத் தான் இந்தச் சாந்தி மூகூர்த்த ஏற்பாடு. 


சும்மா ஆதியோட ஒரே வீட்ல இருன்னு சொன்னா அவ மதிக்க மாட்டா. அதான் கயல், மதுவப் பேச சொன்னேன். நான் சொன்னா கேக்காத அந்தக் கழுத அண்ணிங்க சொன்னா மறு வார்த்தை பேசாம அவங்க சொன்னதச் செய்யும். நான் எது செஞ்சாலும் அவ நல்லதுக்காகத் தான் செய்வேன். அது சமிக்கும் நல்லா தெரியும். அதோட ஆதிய பத்தியும் எனக்குத் தெரியும். சமி விருப்பம் இல்லாம அவங்க கல்யாண வாழ்க்கையை அவன் தொடங்க மாட்டான். அவனுக்கு அவளோட உணர்வுகள் ரொம்ப முக்கியம்.


கல்யாண விஷயத்தில் அவளைக் காயப்படுத்திட்டேன்னு ஏற்கனவே அவன் கவலையில இருக்கான். அதனால சமி சம்மதம் இல்லாம எதுவும் தப்பா நடக்காது நிஷா. நீ இன்னமும் சமியையே நெனச்சிட்டு இருக்காம, உன்னைப் பத்தியும் உன் புருஷனை பத்தியும் யோசி. சீக்கிரம் எனக்குப் பேத்தியோ, பேரனோ பெத்து குடுக்குற வழிய பாருங்க…" என்க நிஷாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து விட்டது.


சிம்பிளான அலங்காரத்தில் அந்த அறை அழகாய் ஜொலிக்க, ஜன்னல் ஓரமாகத் தெரிந்த நிலவினை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் யுக்தா.


மெல்லிய ஜரிகை போட்ட சந்தன நிற பட்டுப் புடவையில் அழகு ஓவியம் போல் இருந்தவளை ரசிக்க, அவள் கணவனுக்குச் சத்தியமாக இரண்டு கண்கள் போதாது தான்.


பட்டு வேட்டி சட்டையில் ராஜகுமாரன் போல் நடந்து வந்த ஆதித் அந்த அறையின் கதவை திறக்க, சரியாக அவன் மண்டயை நோக்கி வந்தது காலியான பால் டம்ளர்.


அதை அழகாகக் கேட்ச் பிடித்த ஆதித், "ஏய் என்னடி இது மொத்த பாலையும் நீயே முழுங்கிட்டியா? அதுல பாதித் தான் டி உனக்கு, மீதிய எனக்குக் குடுக்கணும்…" என்று கிண்டலாகச் சொல்ல,


"டேய் நான் ஏற்கனவே உன்மேல கொலவெறியில இருக்கேன். மேல பேசி என் ஆத்திரத்தை கெளப்பாம வெளிய போய்டு டா…" என்று கத்த,


"ஏய் லூசு இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் டி… உனக்கு மறந்துப் போச்சா. நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சு டி. ஒன்னுக்கு இரண்டு தடவ நான் உனக்குத் தாலி கட்டி இருக்கேன்."


"ஆமா பெரிய தாலி? நான் அசந்த நேரம் பார்த்து நீ தாலி கட்டிட்டா, நீ எனக்குப் புருஷனாகிடுவியா டா?"


"சரி நான் ஒத்துக்குறேன். அன்னைக்குக் கோயில்ல நீ அசந்த நேரம் பார்த்து தான் நான் தாலி கட்டினேன். ஓகே ஐ அக்செப்ட். ஆனா இன்னைக்குக் காலையில் நான் உன் கழுத்துல மறுபடி தாலி கட்ட போறேன்னு உனக்கு நல்லா தெரியுமே… ஏன் அப்ப நீ ஒன்னும் செய்யாம, சும்மா என் பக்கத்துல உக்காந்துட்டு இருந்தேன்னு சொல்லுடி? எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ண புடிக்கல போடான்னு சொல்லிட்டு, கோயில்ல நா கட்டுன தாலிய கழட்டி போட்டுட்டு போக வேண்டியது தானடி…" என்ற ஆதித்தை யுக்தா தீயாக முறைத்தவள்,


"டேய் தேவை இல்லாம பேசி என்னைக் காண்டாக்காத சொல்லிட்டேன். என்னால என் அண்ணனுங்களும், என்னோட ப்ரண்ட்சும் அவங்க வாழ்க்கையை வாழாம இருக்காங்களே. அட்லீஸ்ட் இந்தக் கல்யாணத்தாலயாவது, அவங்க பிரச்சனை ஒரு முடிவுக்கு வரட்டும்னு தான் நான் அமைதியா இருக்கேன். இல்லாட்டி நீ என் விருப்பம் இல்லாம தாலி கட்னதுக்கு இந்நேரம் உன்ன உரிச்சு உப்புக் கண்டம் போட்டிருப்பேன். நான் அமைதியா இருக்குறனால,நீ அட்வான்டேஜ் எடுத்துக்கலாம்னு பாக்காத… புரிஞ்சுதா?" என்றவள்,


"தாலிய கழட்டி போட்டுட்டு போகணும். அந்த வார்த்தைய சொல்ற அந்த வாயை அப்படியே ஒடைக்கணும். இதெல்லாம் இவனுக்கு வெளயாட்ட போச்சு போல…" என்று வாய்க்குள் முணங்கியவள்,


"இப்ப நீ மரியாதையா இந்த ரூம்மை விட்டு வெளிய போறியா இல்லயா டா?" என்று சத்தம் போட்டு கத்த,


"ஏய் கொஞ்சம் மெதுவா பேசு டி. எதுக்கு இப்படி நாலு தெருவுக்குக் கேக்குற மாதிரி கத்துற நீ?"


"அது என் இஷ்டம். நா அப்படித் தான் டா கத்துவேன். நீ என்ன டா செய்வ?" என்று சொல்ல வாயெடுத்தவள் இதழ்கள், அடுத்த நிமிடம் ஆதித் இதழில் சிறைப்பட்டுக் கைதியானது.


யுக்தாவின் விரிந்த விழிகள் வியந்தபடி பார்த்திருக்க, தன் மனைவியாகிய காதலிக்கு, தன் முதல் முத்தத்தைத் தன் திருமணப் பரிசாக வழங்கினான் ஆதித்.


யுக்தாவுக்கு மூச்சு திணற ஆரம்பிக்க, மனமே இல்லாமல் தன் மனைவியின் தேனூறும் இதழ்களுக்குத் தன் இதழ் சிறையில் இருந்து விடுதலை கொடுத்தான்.


"இனிமே நீ இப்படி வாலு வாலுன்னு கத்துனா, இது தான் டி உனக்குப் பனிஷ்மென்ட்!" என்று அவளை விட்டு நகர்ந்தான்.


"நீ இப்படி அடிக்கடி கத்தனும்னு நான் ஆசப்படுறேன் டி. ம்ம் அப்றம் உனக்குக் கிஸ் வேணும்னு தோணும் போது, என்கிட்ட கேக்க வெக்கமா இருந்தா, இப்படியே கத்து டி நான் புரிஞ்சுக்குவேன்…" என்று அவளைப் பார்த்து கண்ணடித்தவன், கட்டிலில் கால் நீட்டிப் படுத்துக் கொண்டான்.


யுக்தா அவன் கொடுத்த முத்தத்தில் திகைத்து நின்றவள், "டேய் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னைக் கிஸ் பண்ணுவ?" என்று மீண்டும் கத்த ஆரம்பிக்கும் போதே, மீண்டும் அவன் இதழ்களால் சிறை பிடிக்கபட்டது அவள் அதரங்கள்.


அதற்கு மேல் யுக்தா வாயே திறக்கவில்லை. அமைதியாகத் தன் படுக்கையை எடுத்துத் தரையில் விரிக்க, "ஏய் அழகி, என்ன டி பண்ற? என்ற ஆதித்தை முறைத்தவள்,


"நான் என்னமோ பண்றேன் உனக்கென்ன? உன்னோட வெட்டியா சண்டை போட எனக்கு இஷ்டமில்ல. எனக்குத் தூக்கம் வருது. நான் தூங்கப் போறேன்."


"உனக்குத் தூக்கம் வந்தா கட்டில்ல படுத்து தூங்கு. அதென்ன தரையில படுக்குற பழக்கம்?"


"என்னால உன் கூட எல்லாம் சேர்ந்து ஒரே கட்டில்ல படுக்க முடியாது…"


"ஏன்டி? உனக்கு என்னை ரேப் பண்ற ஐடியா எதும் இருக்கா என்ன? அதுக்குப் பயந்து தான் தரையில படுக்குறியா? நான் ஆணழகன் தான். அதனால உன் மனசு தடுமாறுது. இது ஜகஜம் தான். இருந்தாலும் இட்ஸ் ஓகே. நான் உன் புருஷன் தானே…" என்றவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தாள் யுக்தா.


"டேய் இது உனக்கே ஓவரா தெரியல. பேசாம மூடிட்டு படுடா…"


"இது பெரிய கட்டில் தான். நீ ஒழுங்கா வந்து கட்டில்ல படு.‌ இல்ல…” என்று ஆதித் மிரட்ட,


"அதெல்லாம் முடியாது போடா. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ…"


"ஓஓஓ அப்படியா? நான் இப்பவே வெளிய போய் எல்லார்கிட்டயும் உங்க பொண்ணுக்கு என்னைப் புடிக்கல. உங்க எல்லார்க்காகவும் தான் அவ என்னைக் கட்டிக்கிட்டன்னு சொல்றேன்."


"டேய்… டேய்… அப்படி எல்லாம் எதுவும் பண்ணி தொலச்சிடாதடா. அப்பறம் அவங்க எல்லாரும் கில்டி ஆ ஃபீல் பண்ணுவாங்க…"


"அப்ப ஒழுங்கா கட்டில்ல படு. ஐ ப்ராமிஸ் உன்னோட விருப்பம் இல்லாம நான் உன்னைத் தொட மாட்டேன். நீ அந்தப் பக்கம் படு. நான் இந்தப் பக்கம் படுத்துக்குறேன். உன் பக்கத்துல கூட நான் வரமாட்டேன் போதுமா?" என்றவனை அசடு வழிய பார்த்த யுக்தா,


"டேய் உனக்கு என்னைப் பத்தி தெரியாது டா. பேசாம என்னைக் கீழ படுக்க விடுடா…" என்று அவள் கெஞ்ச, ஆதித் காதில் எதுவும் விழவில்லை.


வேறு வழி இல்லாமல் யுக்தா கட்டிலின் மூலையில் படுத்துக் கொள்ள, ஆதித் மனதில் நின்றவள் மனைவியான சந்தோஷத்தில் நிம்மதியாக உறங்கினான்.


விடியல் காலையில் லேசாகத் தூக்கம் கலைந்த ஆதித் எழுந்திருக்கப் பார்க்க, அவனால் அசைய கூட முடியாதபடி அவன் மீது கால் போட்டு, ஆதித்தை இறுக்கி அணைத்த படி நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள் அவன் காதல் அழகி.


"ஓ மேடம்க்கு தூக்கத்துல கை, கால் தூக்கிப் போடுற பழக்கம் இருக்கா? அதான் நைட் கூடப் படுக்க அப்படி யோசிச்சாளா?" என்று சிரித்த ஆதித்,


"எப்படியோ வந்த வரை நமக்கு லாபம் தான்!" என்று நினைத்தவன் அவளைத் தன்னோடு இன்னும் இறுக்கிக் கொண்டான்.


சின்னச் சின்னச் சீண்டல், சின்னச் சின்னச் சண்டை, அத்திப்பூத்தார் போல் யுக்தா கன்னத்தில் பரவும் சிறு வெட்கம், ஆதித் தரும் முத்த பனிஷ்மென்ட் என்று யுக்தா, ஆதித் திருமண வாழ்க்கை டாம் அண்ட் ஜெர்ரி ஷோ போல் அனைவருக்கும் நல்லா என்டர்டெயின்மென்ட்டாக இருந்தது.