அழகிய தமிழ் மகள் 19

 அழகி 19


கயல்விழி சொன்ன அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் ஆதித்.


"இப்ப சொல்லு டா? அவளாடா கோழை? அவளா பயந்தாங்கோலி? அவளா சுயநலவாதி?" என்று ஆதித் சட்டை கலரை பிடித்து உலுக்கியவள்,


"எல்லாம் எங்க தப்பு டா… சரியா விசாரிக்காம அந்த உதய்யை நம்பி சமி வாழ்க்கையையே கெடுத்துட்டோம்…" என்றவள் முகத்தை மூடி கதறி அழ,


"இல்ல கயல் இல்ல… இது முழுக்க எங்க தப்பு தான். பரிதி மாமா எங்களை நம்பி சாம்மோட கல்யாண பொறுப்பை எங்ககிட்ட கொடுத்தாரு. எல்லாம் எங்ளால தான். நாங்க தான் சாம்மை கட்டாயப்படுத்தி இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சோம். எல்லாம் எங்க தப்பு தான்." என்று வினய் குற்றவுணர்வில் புலம்ப,


"நாங்க தான் சரியா விசாரிக்காம இப்படிப் பண்ணிட்டோம். போலிஸ்காரனா இருந்து என்ன பிரயோஜனம்? என் தங்கச்சி வாழ்க்கையை என்னால காப்பாத்த முடியலையே…" என்று ராம் ஒரு புறம் கதற,


"அடச்சே போதும் நிறுத்துங்க உங்க பொலம்பல…" என்று யுக்தா போட்ட சத்தத்தில் ராமும், வினய்யும் வாய் மூடிக் கொள்ள


யுக்தா கோவமாக இருவர் அருகில் வந்தவள், "இப்ப என்ன வந்துச்சுன்னு இரண்டு பேரும் இப்படிப் பொலம்பிட்டு இருக்கீங்க? அது நடந்து இரண்டு வருஷம் ஓடி போச்சு. இப்பவும் அதே புலம்பல் தானா? ஹலோ ஏசிபி சார் நீங்க போலிஸ்னா அப்ப நான் யாரு? ஒட்டகத்துக்குப் புல்லு புடிங்கி போட்டுட்டு இருந்தேனா? இதோ நிக்கிறாரே கமிஷ்னர் இவரு அதே ஒட்டகத்துக்கு ஆயா வேலை பாத்தாரா? சும்மா பொலம்பிட்டு, அந்தக் கேஸ்காகவே வந்த என்னாலயே கடைசி வரை அவனைப் பத்தி கண்டுபுடிக்க முடியல... கமிஷனர்…" என்று பரதனை கை காட்டியவள்,


"இவருக்கும் கூடத் தான் தெரியல. இதுல நீங்க ரெண்டு பேர் என்ன பண்ண முடியும்? சில சமயம் போலிஸ விடத் திருடன் உஷாரா தான் இருக்கான். அதுக்கு என்ன பண்ண முடியும்? நடந்தது நடந்துடுச்சு… அத விட்டு தள்ளிட்டு அடுத்த வேலைய பாருங்க. சும்மா எப்பபாரு எல்லாம் என்னால தான் ஆச்சு, யுக்தா வாழ்க்கை மண்ணா போச்சுன்னு டயலாக் பேசிட்டு இருந்தீங்க நான் கெளம்பி போய்டே இருப்பேன்…" என்றவள் நகர,


"ஐம் சாரி யுக்தா. நான் தெரியாம உங்களைப் பத்தி தப்பா பேசிட்டேன். ரியலி ஐம் வெரி சாரி…" என்ற ஆதித்தை நேராகப் பார்த்த யுக்தா, உங்களுக்குச் சரியா நடிக்க வர்ல ஆதித் என்றவள்,


"என்ன கமிஷனர் சார், உங்க புள்ளைக்கு சரியா டிரெய்னிங் கொடுக்கல போல… என்ன நீ போய் அவகிட்ட இப்படி எல்லாம் பேசு, உடனே அவளுக்குக் கோவம் வந்து மறுபடி போலிஸ்ல ஜாயின் பண்ணிடுவான்னு சொல்லி அனுப்பினீங்களா? வேஸ்ட் அங்கிள்… சிம்ப்ளி வேஸ்ட். நான் மறுபடி யூனிபார்ம் போட மாட்டேன்." என்று உறுதியாகச் சொல்லிவிட்டு சென்றாள்.


பரதனை பாவமாகப் பார்த்த ஆதித், "அவ முதல்லயே நான் நடிக்கிறேன்னு கண்டுபுடிச்சிட்டா போலச் சித்தப்பு…" என்று உச்சு கொட்ட,


"அவ கண்டு புடிச்சிடுவான்னு எனக்குத் தெரியும் டா. அவ வேலையைத் தான் விட்டா, மூளைய இல்ல.‌ அவ மூளை இப்பவும் ஒரு சிபிஐயோட மூளை தான். அவகிட்ட மோத உனக்கு இன்னும் பயிற்சி வேணும் டா மகனே…" என்றவர் ஆதித் தோளை தட்டிக் கொடுத்து விட்டு சென்றார்.


"அப்ப ப்ரணவ் யாரு கயல்? என்று ஆதித் கேட்க, கயல்விழி இழுத்து மூச்சு விட்டவள், "ப்ரணவ் உதய்யோட பையன் டா…" என்று சொல்ல, ஆதித் அதிர்ந்து நின்றவன் "என்னது? உதய் பையனா? என்ன சொல்ற கயல்?" என்றான்.


கயல்விழி ப்ரணவ் பற்றிச் சொன்னதைக் கேட்டு ஆதிகத்திற்குப் பேச்சே வரவில்லை.


"நீ என்ன‌‌ சொல்ற கயல்? ப்ரணவ் உதய்யோட பையனா? நிஜமாவா?"


"ஆமா ஆதி… உதய்க்கு நம்ம சமி கூடக் கல்யாணம் ஆகுறதுக்கு முந்தியே இன்னொரு பொண்ணோட தொடர்பு இருந்திருக்கு. அந்தப் பொண்ணோட பையன் தான் ப்ரணவ். உதய் பத்திய எல்லா உண்மையும் தெரிஞ்ச அந்தப் பொண்ணு, ப்ரணவ் கண்ணு முன்னாலயே ஓடுற பஸ் முன்னாடி விழுந்துடுச்சு… அதைப் பார்த்த அதிர்ச்சியில் தான் குழந்தைக்குப் பேசுற சக்தி போய்டுச்சு. நானும், மதுவும் டெலிவரிக்கு ஹாஸ்பிடல்ல இருக்கும் போது தான் இது நடந்திருக்கு, அந்தப் பொண்ணையும் நாங்க இருந்த ஹாஸ்பிடலில் தான் அட்டமிட் பண்ணாங்க. 


ஜீவா தான் அந்தப் பொண்ணுக்கு டீரிட்மெண்ட் கொடுத்தான். அப்ப அவ வச்சிருந்த ஃபைல்ல இருந்த சில ஃபோட்டோசும், அவ டைரியும் படிச்சு தா ஜீவாக்கு அவ யாருன்னு தெரிஞ்சுது. அந்தப் பொண்ணு சாகுற நேரத்தில் ஜீவா யாருன்னு தெரியாம, அவன்கிட்ட சமிய பத்தி சொல்லி, அவளைப் பாக்கணும்னு சொல்லி இருக்கா… அந்த நேரம் சமியும் ஹாஸ்பிடல்ல தான் இருந்தா... ஜீவா அந்தப் பொண்ணைப் பத்தி சமிகிட்ட சொல்லி அவளைப் பாக்க கூட்டிப் போனான்."


சாகும் நிலையில் இருந்த ப்ரணவ்வின் அம்மா, யுக்தாவிடம் ப்ரணவ்வை ஒப்படைத்து, "எனக்கு உங்ககிட்ட இத கேட்க எந்த உரிமையும் இல்லை யுக்தா… ஆனா எனக்கு உங்ளை விட்ட வேற யாரும் இல்ல. முடிஞ்ச இவனை ஒரு ஆசிரமத்தில் விட்டு உங்க கண் பார்வையில் வச்சுக்கோங்க ப்ளீஸ்… ஒரு நாளும் இவன் உதய் மாதிரி ஆகிட கூடாது. இவன் ஒரு நல்லா மனுஷனா வளரணும். அதுக்காக இவனை உங்களை வளர்க்க சொல்லல, அந்தத் தகுதி எனக்கில்ல. நான் செத்த பிறகு என்னோட ப்ரணவ் நல்லபடி இருப்பான்ற நம்பிக்கையை எனக்குக் குடுங்க யுக்தா ப்ளீஸ். இது என்னோட கடைசி ஆசை யுக்தா ப்ளீஸ்!" என்று அவள் கண்ணீருடன் கெஞ்சிக் கேட்க, ஜீவா ஒரு ஸ்டாம் பேப்பரை யுக்தா கையில் கொடுத்தான்.


அதில் ப்ரணவ் சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமை யுக்தாவிற்கு மட்டுமே இருக்கிறது என்று எழுதி அதில் அந்தப் பெண் கையெழுத்திட்டிருந்தாள்.


அதைப் படித்த யுக்தா அவள் அருகிலிருந்த குட்டி சோபாவில் தூங்கிக் கொண்டிருந்த ப்ரணவை பார்த்தவள் ஒரு நிமிடம் கண்மூடி திறந்து, "இனி அவன் என்னோட பையன். ப்ரணவ் சன் ஆப் சம்யுக்தா போதுமா?" என்று அந்தப் பெண்ணின் கையில் தன் கைவைத்துச் சொல்ல, ப்ரணவ் தாயின் உயிர் யுக்தாவை நன்றியோடு பார்த்தபடியே நிம்மதியாக உடலை விட்டுச் சென்றது.


ஆதித் தற்சமயம் வெற்றி, கயல்விழியோடு, யுக்தா பிளாட்க்கு அடுத்தப் பிளாட்டில் தன் தங்கியிருந்தான். அவனுக்குக் கொடுக்கப்பட்ட அறையில் அமைதியாகப் படுத்திருந்தவன் மனதிலும், நினைவிலும் யுக்தா மட்டுமே வியாபித்து நின்றாள். அதுவும் ப்ரணவ் உதய்யின் குழந்தை என்று தெரிந்த பிறகு, அவனுக்கு இதுவரை யுக்தா மேல் இருந்த மரியாதை பன் மடங்காகப் பெருகியது.


அவளைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தவன் மனதில் அவள் முகமே வந்து வந்து போக மரியாதையைத் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு யுக்தா மேல் உண்டாவதை அவனால் தடுக்க முடியவில்லை. இது என்ன உணர்வு என்று குழம்பித் தவித்தவன், பின் அந்த உணர்வு தந்த சுகத்தில் அப்படியே உறங்கி விட்டான்.


அடுத்தடுத்த நாளில் ஆதித் குழப்பத்துக்கான விடையை அவன் மனது அவனுக்கு உரைக்க, ஆதித்தாக இருந்தவன், யுக்தாவை காதலிக்கும் காதலனாக மாறினான்.


யுக்தா வந்த செய்தி கேட்டு சிவகாமி பாட்டி உடனே சென்னைக்கு ஓடி வந்தவர், யுக்தாவிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஏன் அவள் முகத்தைப் பார்ப்பதை கூட அவர் தவிர்த்து விட, யுக்தாவிற்குத் தான் 'அய்யோ' என்றிருந்தது.


"பாட்டி ப்ளீஸ் என்கிட்ட பேசு பாட்டி… அதான் நான் திரும்பி வந்துட்டேன் இல்ல…" என்று கண்களாலேயே கெஞ்ச பாட்டி மசிவதாய் இல்லை.


யுக்தா முகம் வாடி இருப்பதைப் பார்க்கப் பொறுக்காத சாருமதி, "பாவம் அத்தை அவ… நீங்க ஒரு வார்த்தை அவகிட்ட பேசமாட்டீங்களான்னு உங்க முகத்தையே பாத்திட்டு இருக்கா. ஒரு வார்த்தை அவகிட்ட பேசுங்க அத்தை…" என்ற சாருமதியை தீயாக முறைத்த சிவகாமி,


"ஏன்டி பேசணும்? நான் ஏன் அவகிட்ட பேசணும்? நம்ம யாரும் வேணாம்னு தான, கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டு நமக்கென்னன்னு கெளம்பி போய்ட்டா… அவகிட்ட நா ஏன்டி பேசணும்? பாவம் டி என் பேரனுகளும், பேத்திகளும். இவ திரும்பி வந்து, இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமஞ்ச பிறகு தான், எங்களுக்கு வாழ்க்கைன்னு இன்னும் தனித்தனியா கிடக்குதுங்க…

இதெல்லாம் நல்லாவா இருக்கு? சொல்லுடி நல்லா இருக்கா? எல்லாம் யாரால? இவ மட்டும் இங்க இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?" என்று கத்திய சிவகாமிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவித்த யுக்தா,


சிவகாமி அருகில் சென்றவள், "சாரி பாட்டி. அப்ப இருந்த சூழ்நிலையில் என்னை நானே தேத்திக்க எனக்குத் தனிமை தேவைப்பட்டுச்சு. உங்க கிட்ட சொன்னா நீங்க விடமாட்டீங்க. அதான் சொல்லாம போய்ட்டேன். இப்ப தான் நான் திரும்பி வந்துட்டேனே… என்கிட்ட பேசு பாட்டி…" என்று சிவகாமியின் தடாயைப் பிடித்து யுக்தா கெஞ்ச,


சிவகாமி அவளைத் திரும்பி பார்க்காமலே, "இந்தாடி சாருமதி, இவகிட்ட சொல்லு… நான் சொல்ற ரெண்டு விஷயத்தை இவ கேட்கறதா இருந்தா தான் நான் இவகிட்ட பேசுவேன். இல்லாட்டி இந்த ஜென்மத்துல இவளுக்கும் எனக்கும் பேச்சுவார்த்தை இல்ல… அவளுக்கு இந்த டீல் ஓகேவான்னு கேட்டு சொல்லு?"


"என்ன செய்யணும் சொல்லு பாட்டி" என்ற யுக்தாவை பார்த்த சிவகாமி பாட்டி‌,


"முதல்ல இவ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும். இரண்டு இவ மறுபடியும் போலிஸ் வேலையில சேரணும்" என்று அழுத்தமாகச் சொல்ல,


யுக்தா ஒருநிமிடம் பாட்டியை ஆழமாகப் பார்த்தவள், இல்லை என்று தலையை மட்டும் இட வலமாக ஆட்டிவிட்டு அமைதியாக எழுந்து சென்று விட,


"போடி போ நீ எப்படி என்கிட்ட இருந்து தப்பிக்குறேன்னு நானும் பாக்குறேன். நீ என்னைக்கு இங்க இருந்து போனியோ அப்பவே நான் எடுத்த முடிவு டி இது. உன் பேருக்கு பின்னாடி அந்த நாசமா போனவன் பேரு இருக்க வரை, நீ யூனிபார்ம் போடா மாட்ட… ஒரு குற்றவாளியோட பொண்டாட்டின்ற நெனப்பு உன் மனசுல இருந்து அழிஞ்சா தான், நீ பழையபடி மாறுவ! உனக்கு அந்தப் போலிஸ் வேலை எவ்வளவு புடிக்கும்னு எனக்குத் தெரியும் டி. மறுபடியும் அந்த உடுப்பை உன்னைப் போட வைக்காம நா ஓய மாட்டேன். நான் கொடுத்த வளையலை நீ என்கிட்டயே திருப்பிக் குடுத்துட்ட இல்ல. உனக்குக் கல்யாணம் பண்ணி உன்னோட‌ வளைகாப்புக்கு அதே வளையல நான் உனக்குப் போடல, என் பேரு சிவகாமி இல்ல டி…" என்று சபதமிட்டவர் அங்கிருந்து நகர,


இவ்வளவு நேரம் அங்கு நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதித், சிவகாமி அருகில் வந்தவன், "நீங்க சொல்றது நியாயம் தான் பாட்டி. ஆனா அவளும் பாவம் தான… இப்ப தான வீட்டுக்கு திரும்பி வந்திருக்கா… கொஞ்ச நாள் போகட்டும் பாட்டி, அவளுக்குக் கொஞ்சம் டைம் குடுங்களேன்." என்றவனை ஏற இறங்க பார்த்த சிவகாமி


"நீ யார் தம்பி?" என்று கேட்க, அவன் பரதனின் அண்ணன் மகன் என்றும் மற்றும் கூர்கில் யுக்தா, ப்ரணவ்வுடன் பழகியது அனைத்தையும் சொல்ல,


சிவகாமி மீண்டும் ஆதித்தை இன்னும் ஆழமாகப் பார்த்தவர், "ராமும், பரதனும் தான் உன்னைக் கூர்க் அனுப்பி வச்சாங்களா?" என்று கேட்டார்.


ஆதித் ஆமாம் என்று தலையாட்டினான். "ம்ம்ம்…" என்று இழுத்து மூச்சு விட்டவர், "ராமை பாத்தா என்னை வந்து பாக்க சொல்லுப்பா…" என்றவர் தன் அறைக்குச் சென்று விட, ஆதித்க்கு ஒன்னும் புரியவில்லை.


சிவகாமி ராமை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.


"சொல்லு ராம் இவ்ளோ சின்ன வேலைக்கு ஆதி மாதிரி பெரிய ஆபீஸரை நீயும், பரதன் தம்பியும் எதுக்கு அனுப்புனீங்க? அவனை வேலைக்காக அனுப்புனீங்களா இல்ல, அந்த ராங்கியை அவன் பாக்கணும்னு அனுப்பி வச்சீங்களா?"


"பாட்டி…" என்று ராம் இழுக்க‌, "எதுவாக இருந்தாலும் சொல்லு ராம்" என்று சிவகாமி சொல்ல,


"அந்த வேலைக்கு யாரை வேணும்னாலும் அனுப்பி இருக்கலாம் தான் பாட்டி. ஆனா பரதன் மாமா தான், ஆதியை அனுப்ப சொன்னாரு… அதோட பிரபுகிட்ட சொல்லி சாம்கிட்ட ஆதிய ஒரு பார்வை பாத்துக்கவும் சொல்லியிருந்தாரு. முதல்ல எனக்கு அவர் ப்ளான் புரியல, அப்பறம் தான் தெரிஞ்சிது, ஆதிய வச்சு அவர் சாம்மை மறுபடி போலிஸ்ல ஜாயின் பண்ண வைக்கத் தான் இப்படி பண்ணாருன்னு. இந்தக் கேஸ்ல எதும் பிரச்சனை வந்தா எனக்காக, பரதன் மாமாக்காக நம்ம சாம் கண்டிப்பா பழைய ஃபார்ம்க்கு இறங்கி வந்து ஆதிக்கு ஹெல்ப் பண்ணுவான்னு அவர் நெனச்சாரு… நானும் தான். ஆனா இப்பவரை ஒன்னும் நடக்கல… ஏதோ அவ வீட்டுக்கு திரும்பி வந்தவரை சந்தோஷம் தான் பாட்டி…" என்று ராம் சலித்துக் கொள்ள,


"நீ நெனச்சது நடக்கல ராம். ஆனா பரதன் நெனச்சது நடந்திருக்கு…" என்று சொல்லி அர்த்தமாகச் சிரிக்க,


"என் பாட்டி சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல?"


"சீக்கிரம் எல்லாம் புரியும் டா, நீ போ டா…" என்றவர் தன் ஃபோனை எடுத்து பரதனுக்கு டயல் செய்தார்.


இரண்டு நாள் கழித்து யுக்தா மெதுவாக விஷ்ணு, ராஷ்மி கல்யாணம் பற்றிக் கேட்க,


சிவகாமி, "வினய், ஜீவா கல்யாணம் தான் சிம்பிளா நடந்திடுச்சு. விஷ்ணு கல்யாணத்தையாவது நல்லா பெருசா‌ சடங்கு, சம்பிரதாயப்படி செய்யணும்னு நான் நெனக்குறேன். ஆனா அதுதான் முடியாதே…" என்று சொல்ல,


உடனே யுக்தா, "ஏன் முடியாது? நம்ம எல்லாரும் தான் இருக்கோமே? நல்லா கிரண்டா கல்யாணத்தைச் செய்ய மாட்டோமா? அதுல என்ன பிரச்சனை?"


"பிரச்சனையே நீதான் டி.." என்ற சிவகாமி வார்த்தையில் குழம்பியவள், "என்னால என்ன பிரச்சனை வரப்போகுது பாட்டி?" என்று கேட்க,


"இந்தக் கல்யாணத்துல எல்லா சடங்கையும் நீ தான் செய்யணும்னு விஷ்ணுவும், ராஷ்மியும் ஆசப்பாடுறாங்க… அதுதான் பிரச்சனை…"


யுக்தா திரும்பி விஷ்ணுவை பார்க்க, விஷ்ணு திருதிருவென முழித்தவன் பாட்டியை பார்க்க, பாட்டி கண்ணடித்துச் சிக்னல் செய்ய அதைப் புரிந்து கொண்டவன்,


"ஆமா எங்க கல்யாணத்தில் எல்லாச் சடங்கையும் சாம் தான் செய்யணும்…" என்று மண்டையை ஆட்டியவன்,


"ஆமா தான ராஷ்மி?" என்று அவளையும் துணைக்கு அழைக்க, ராஷ்மியும் பாட்டி ஏதோ ப்ளான் பண்ணி இருக்காங்க என்று புரிந்து கொண்டு, "ஆமா யுகி இது நானும், விஷ்ணுவும் சேர்ந்து செஞ்ச முடிவு தான்." என, யுக்தாவிற்குப் புரிந்து விட்டது இது எதற்கான திட்டமென்று.


அவர்கள் குடும்பத்தில் கல்யாணத்திற்கு முந்தைய நாத்தனார் சடங்குகளைக் கல்யாணமான தம்பதிகள் சேர்ந்து செய்வது தான் அவர்கள் வழக்கம். அதை வைத்து யுக்தாவை மறுகல்யாணத்திற்குச் சம்மதிக்க வைக்கச் சிவகாமி திட்டம் போட்டிருந்தார்.


அது புரிந்த யுக்தா சிவகாமியை தீயாய் முறைத்தவள், "அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. நிஷா இல்ல ஜானுவை வச்சுச் சடங்கை எல்லாம் செய்யலாம். நீங்க கல்யாணத்துக்கு நாளை பாருங்க…" என்று அழுத்தமாகச் சொன்னாள்.


"மதி அவகிட்ட சொல்லு… இங்க எல்லாம் அவ இஷ்டத்துக்கு மட்டுமே நடக்காதுன்னு… விஷ்ணும், ராஷ்மியும் ஆசப்படுறாங்க… முடிஞ்சா அதைச் செய்யச் சொல்லு. இல்லாட்டி அவள வாய மூடிட்டுப் போகச் சொல்லு. யாருக்குக் கல்யாணம் நடந்தா என்ன, நடக்காட்டி இவளுக்கு என்ன? இவளுக்குத் தான் நம்ம யாரும் வேணாமே…" என்றவர் கோவமாக அங்கிருந்து செல்ல யுக்தாவும் விறுவிறுவென அங்கிருந்து வெளியேறினாள்.


ஆதித் மெதுவாகச் சிவகாமி அருகில் வர, ஆதித்தை நிமிர்ந்து பார்த்தவர், "என்ன டா பேராண்டி பாட்டி ஆக்டிங் எப்படி?" என்று கேட்க,


"ம்ம் செம்ம பாட்டி தூள் கெளப்பிட்டீங்க…" என்று ஹைபை அடித்துக் கொண்டனர்.


"ஆனாலும் பாட்டி நீங்க என்னோட திமிரழகியை ரொம்பத் தான் படுத்துறீங்க… பாவம் அவ…" என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டான்.


"யாரு அவளா பாவம்? போடா நீ ஒருத்தன். அவலாம் லேசுபட்ட ஆள் கிடையாது. நம்ம பார்க்குற பார்வையை வைச்சே நம்ப மனசுல இருக்குறதை கண்டுபுடிச்சிடுவா… அவளோட ஒரே வீக்னஸ் இந்தக் குடும்பமும், அவ ப்ரண்ட்சும் தான். அதனால தான் அதை வச்சு நான் ப்ளான் பண்றேன். விஷ்ணு, ராஷ்மி கல்யாணத்தை வச்சே நான் அவளை ஒரு வழி பண்றேன் பாரு…"


"ஏன் பாட்டி யுக்தா அடுத்தவங்க பார்வையை வச்சே அவங்க மனசை புரிஞ்சுக்குவான்னு சொல்றீங்களே, அப்போ ஏன் பாட்டி நான் அவளை விரும்புற விஷயத்தை மட்டும் அவ இன்னும் கண்டுபிடிக்காம இருக்கா?" என்ற ஆதித்தை சிரிப்போடு பார்த்த பாட்டி,


"அவ கண்டுக்காம இருக்கான்னு வேணும்னா சொல்லு, ஆனா கண்டுபுடிக்கலைன்னு சொல்லாத. உன்னை முதல் தடவை பார்த்த அன்னைக்கு நீ அவளுக்காக என்கிட்ட பரிஞ்சு பேசுனியே, அப்ப உன் கண்ணுல அவ மேல உனக்கு இருக்கக் காதல் இந்த வயசான கெழவி எனக்கே தெரிஞ்சுது. அப்படி இருக்கப்போ அவ போலிஸ்காரி டா! அவளுக்குப் புரிஞ்சிருக்காதா என்ன?‌ எல்லாம் அவளுக்குத் தெரியும் ஆனா கண்டுக்க மாட்டா. 


உன்னோட சித்தப்பா அவளைப் பத்தியும், உன்னைப் பத்தியும் நல்லா தெரிஞ்சு தான் கூர்க்குக்கு உன்னை அனுப்பி வச்சு இருக்காரு… அவருக்குத் தெரிஞ்சிருக்கு உனக்கு சமியை புடிக்கும்னு… அதனால தான் உன்னை அவ இருக்க இடத்துக்கு அனுப்பி வச்சிருக்காரு…" என்று நேற்று பரதன் தன்னிடம் சொன்ன விஷயங்களை ஆதித்திடம் கூறினார்.