அழகிய தமிழ் மகள் 18

 அழகி 18


யுக்தா காரில் வேகமாகச் சென்றவள் ஃபோன் மீண்டும் அடிக்க, போனை எடுத்துக் காதில் வைத்தவ,ள் "ஹலோ…" என்று சொல்லும் முன்னே,


"என்ன சம்யுக்தா மேடம் ஹாஸ்பிடல்ல இருந்து காணாம போன பொண்ணைத் தேடி ஓடறீங்க போல?" என்று நக்கலாக வந்த குரலில் சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தியவள்,


"யார்ரா நீ?" என்று அனல் தெறிக்கும் குரலில் கேட்க, 


"அது உனக்குத் தேவையில்ல மிசஸ்.சிபிஐ. நா சொல்றத மட்டும் கேளு. ஒழுங்கு மரியாதையா இந்தக் கேசை இத்தோட ஊத்தி மூடிட்டு, ஒழுங்கா உன் புருஷனோட வாழ்ற வழிய பாரு. அது தான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது. அதவிட்டு இந்தக் கேஸ் பத்தி நீ மேல மேல விசாரிச்சிட்டுருந்த, இன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருந்து கடத்துன அந்தப் பொண்ணுக்கு நடக்க போறது தான் நாளைக்கு உனக்கும் நடக்கும்." என்று எச்சரிக்க,


"அந்தப் பொண்ணை என்னடா செஞ்ச? எங்கடா அந்தப் பொண்ணு? நீ சரியான ஆம்பளையா இருந்தா, நேரா என்கிட்ட மோதுடா… அதவிட்டு ஏன்டா பொட்ட மாதிரி பொண்ணைத் தூக்குற? இப்ப எங்கடா அந்தப் பொண்ணு?" என்று கர்ஜிக்க,


"நான் இவ்ளோ சொல்றேன் நீ கேக்க மாட்டேன்றீயே சிபிஐ... போலிஸ் கஸ்டடில இருந்த ஒரு பொண்ணையே அசால்ட்டா தூக்கி இருக்கேன். அப்பவே என் பவர் பத்தி உனக்குத் தெரிய வேணாம்? இன்னும் திமிரா பேசுறீயே… ஒரு வேளை அந்தப் பொண்ணுக்கு நடக்கப் போறத நீ நேர்ல பாத்தா புரிஞ்சிக்குவ போல... ஓகே நேத்துப் போலிஸ் அந்தப் பொண்ணை எங்க கண்டு புடிச்சாங்களோ, அந்தப் பாலத்துக்குக் கீழ தான் அந்தப் பொண்ணும் நானும் இருக்கோம். இன்னு ஐஞ்சு நிமிஷம் வரை தான் இங்க இருப்போம். முடிஞ்ச புடி பாக்கலாம்…" என்றவுடன் ஃபோன் கட்டாகி விட, மறுபடியும் யுக்தா ஃபோன் அடித்தது, லைனில் உதய் தான்.


"உதய் பேச நேரமில்ல…" என்று நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னவள், உடனே ராம், நிஷாவுக்குத் தகவல் சொல்ல சொல்லிவிட்டு காரை வேகமாகச் செலுத்தினாள்.


ஃபோனில் சொன்ன அந்த இடத்தில் யாரும் இல்லாமல் போக கோபமானவள், ஃபோன் மீண்டும் அடிக்க அதை எடுத்தவள், "டேய் எங்கடா இருக்க? என்கிட்ட வெளயாடாத டா…" என்றாள்.


"கூல்.. கூல்.. என்ன சிபிஜ இப்டி கொதிக்கிற? ஐஞ்சு நிமிஷம் சொன்னா மூணு நிமிஷத்தில் வந்து நிக்குற. கார்ல வந்தியா? இல்ல பறந்து வந்தியா? சரி சரி… நான் இப்ப நீ இருக்குற இடத்துல இருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி, ஒரு சவுக்குத் தோப்பு இருக்கு இல்ல, உனக்குத் தெரியும்னு நெனைக்கிறேன். அங்க தான் இருக்கேன். சீக்கிரம் வா பாக்கலாம்…" என்று ஃபோன் கட்டாகிட, மறுபடியும் யுக்தாவை அழைத்தான் உதய்.


"ஏய் சமி ப்ளீஸ் டி?? எங்கடி இருக்க? உனக்கு உடம்பு வேற சரியில்ல. இதுல தனியா வேற போயிருக்க… உனக்கு எதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்குடி, நீ எங்க இருக்கேன்னு சொல்லு… நான் இப்பவே அங்க வரேன்…" என்று உதய் பதற, அவனிடம் செல்லும் இடத்தைப் பற்றிய தகவலை சொல்லிவிட்டு மீண்டும் பறந்தாள் யுக்தா.


இரண்டாவதாகச் சென்ன இடத்திலும் யாரும் இல்லாமல் போக, யுக்தாவிற்குப் புரிந்தது. அவன் தன்னைக் குழப்பிச் சுத்த விடுகிறான் என்று.


மறுபடி அவள் ஃபோன் அடிக்க எடுத்து பேசியவள் "டேய் நீ தேவையில்லாம ஆபத்தோட வெளையாடுற… உன் சாவு உன்னை நெருங்கிடுச்சு டா…" என்றாள்.


"ஏன் சிபிஐ மேடம், இதுக்கே இப்படி டென்ஷனாகுறீங்க? நீ என்னைக் கொல்லனும்னா அதுக்கு நான் யார்னு உனக்குத் தெரியணுமே… அது தெரியாம உன்னால ஒன்னும் கழட்ட முடியதே சிபிஐ. சரி சரி அத பத்தி நாம அப்றம் பேசுவோம். இப்ப நான் அந்தச் சவுக்குத் தோப்புல இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கக் குடோன்ல தான் இருக்கேன். சீக்கிரம் வா…" என்று ஃபோனை கட் செய்ய, ஆத்திரத்தின் உச்சியில் இருந்த யுக்தா ஃபோனை தூக்கி அங்கிருந்த மரத்தில் அடிக்க, அது இரண்டு துண்டாக நொறுங்கி விழுந்தது.


மாலை நேரம், யுக்தா வீடே பரபரப்பாக இருந்தது. தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கிற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்க, ஆனந்தியும் கோதையும் புலம்பிக் கொண்டிருந்தனர்.


"சாரு இன்னும் இந்தச் சமிய காணோமே… டைம் வேற ஆகிட்டே போகுது?"


"சமி மட்டும் இல்ல ஆனந்தி, உதய் கூட இன்னும் வரல... நம்ம ராமும், நிஷாவும் கூட வீட்ல இல்ல. சமி ஃப்ரண்ட்டுங்க ஜானு, ராஷ்மியையும் கூட இன்னும் காணும். என்ன நடக்குதுன்னே புரியல… நல்லா நாளும் அதுவுமா எல்லாரும் எங்க போனாங்கன்னே தெரியல?" என்று சிவகாமி பாட்டி புலம்பிக் கொண்டிருந்தவர்,


"டேய் வினய் அந்த ராங்கிக்கும், மாப்பிள்ளைக்கும் ஃபோன் போட்டு எங்க இருக்காங்கன்னு கேளு…" என்று சொல்லும் போதே கதவு திறக்கும் சத்தம் கேட்டு எல்லோரும் வாசல் பக்கம் பார்க்க, இறுகிய முகத்துடன் பரதன் நின்றிருந்தார்.


"வாங்க அண்ணா… ஏன் அங்கயே நீக்குறீங்க?" என்று தொடங்கிய கோதையின் வார்த்தை அப்படியே அந்தரத்தில் நின்றது; ராம் தோளில் சாய்ந்தபடி, உடை முழுவதும் ரத்த கரையோடு, தலையில் பெரிய கட்டுபோட்டு, அலங்கோலமாகத் தட்டு தடுமாறி நடந்து வந்த யுக்தாவை பார்த்து.


வேகமாக யுக்தா அருகில் ஓடிவந்த சிவகாமி, "ஏய் என்னடி கோலம் இது? ஏன் இப்படி இருக்க? உடம்பெல்லாம் ஒரே ரத்தமா இருக்கு. என்ன ஆச்சு?" என்று பதற,


யுக்தா மெதுவாக நிமிர்ந்து அங்கிருந்த அனைவரையும் பார்த்தவள் மெல்ல ராமை விட்டு நகர்ந்து, டீவி ரிமோட்டை எடுத்து டீவியை உயிர்ப்பித்துச் செய்தி சேனலை ஓடவிட்டாள்.


செய்தி வாசிக்கும் பெண் முக்கியச் செய்தி என்று சொல்லும்போது கவனிக்காதவர்கள், "சிபிஐ ஆபீஸர் சம்யுக்தாவின் கணவர் உதய் பிரதாப் மரணம்!" என்று கேட்ட அடுத்த நொடி, அனைவரின் தலையிலும் இடி விழுந்தது போல் இருக்க, டீவியில் பார்வையைப் பதித்தனர்.


"சென்னையில் இரண்டு வருடங்களாக ஊர் பேர் தெரியாத பலர் கடத்தப்பட்ட வழக்கின் விசாரணையில், முக்கியக் குற்றவாளி யார் என்று தெரிந்தது. பிரபல தொழிலதிபர் உதய் பிரதாப் தான் இந்தக் கடத்தலுக்குக் காரணமென்று சிபிஐ ஸ்பெஷல் ஆபீஸர் சம்யுக்தா கண்டு பிடித்துள்ளார். இன்று அவரைக் கைது செய்யப் போகும் போது அவர் சம்யுக்தாவை கொல்ல பார்க்க, சம்யுக்தாவும், அவர் அசிஸ்டென்ட் நிஷாவும் தற்காப்பிற்காகச் சுட்டதில் உதய் பிரதாப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உதய் பிரதாப், சிபிஐ ஆபீஸர் சம்யுக்தாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்குச் சில மாதம் முன்பு தான் திருமணம் நடந்தது." என்று சொல்லி முடிக்கும் முன் வினய் கையால் அந்த டீவி சுக்குநூறாக உடைந்து தெறித்தது.


"அடியேய் என்னடி இதெல்லாம்? என்னடி ஆச்சு? என்ன நடந்துச்சு?" என்று கதறித் துடித்த சிவகாமி பாட்டி மற்றும் குடும்பத்தாரின் வேதனை குரலைக் கூடக் காதில் வாங்காது, அமைதியாக அவள் அறைக்குச் சென்று கதவடைத்துக் கொண்டாள்.


சற்று முன்…


அந்த மர்ம ஆசாமியிடம் பேசிவிட்டுக் கோபத்தில் ஃபோனை போட்டு உடைத்த யுக்தா, அவன் ஃபோனில் சொன்ன குடோனிற்குச் சென்றாள்.


சுற்றி இருள் சூழ்ந்திருந்த அந்தக் குடோனில் அந்தப் பெண்ணையும், அவளைக் கடத்தி வந்தவனையும் தேடினாள்.


இருளில் எதுவும் அவளுக்குச் சரியாகத் தெரியாமல் போக, "ச்சே இந்த நேரம் பார்த்து ஃபோனை வேற ஒடச்சிட்டேனே. இப்ப டார்ச் கூட இல்லையே…" என்றவள் கண்ணில் திடிரென எதோ வெளிச்சம் விழ, வெளிச்சம் வந்த திசை நோக்கி ஓட, அங்குக் கடத்தப்பட்ட பெண்ணின் உடல் எரிய ஆரம்பித்தது கொண்டிருந்தது.


"அய்யோ!" என்று கத்திகொண்டே யுக்தா நெருப்பின் அருகில் செல்ல, சரியாக அந்த நேரம் அங்கு வந்த உதய் அவளை இழுத்துப் பிடித்துத் தன்னோடு சேர்த்து அணைத்தான்.


"ஏய் சமி என்ன செய்ற நீ? பைத்தியம் புடிச்சிடுச்சா உனக்கு?

நான் மட்டும் கொஞ்ச நேரம் லேட்டா வந்திருந்தா, என்ன ஆகியிருக்கும். இப்படியா நெருப்புகிட்ட ஓடுவ?" என்றவன் அவளை இழுந்து அருகில் இருந்த மூட்டை மேல் உட்கார வைக்க, யுக்தா எரிந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணின் உடலையே பார்தது கொண்டிருந்தாள்.


"ஏன் உதய் இப்படி? பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்யலாமா? உயிருக்கு வேல்யூவே இல்லையா? இத்தனை பேரோட உயிரோட வெளயாட எப்படி மனசு வருது?" என்றவளை உற்று பார்த்த உதய்,


"என்ன செய்றது சமி? இப்படியும் சில பேர் இருக்கதான் செய்றாங்க… பணம் தான் பெருசுன்னு நெனைக்கிறாங்க. இதுல நான் சொல்ல என்ன இருக்கு? இந்தக் கேள்விய நீ இந்த வேலைய செய்தவன் கிட்ட தான் கேக்கணும்…"


யுக்தா மெதுவாக நிமிர்ந்து உதய்யை பார்த்தவள், "அதான் உதய் உன்னைக் கேக்குறேன். ஏன் இப்படிச் செஞ்ச?" என்றவள் குரலில் கோபத்தை விட ஆற்றாமை தான் அதிகம் இருந்தது.


உதய் எச்சில் விழுங்கியபடி யுக்தாவை பார்க்க அவள் கண்களில் அத்தனை குரோதம்! 


"ச… சமி, நீ சொல்றது எனக்குப் புரியல… நா.. நான் என்ன செஞ்சேன்? இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?" என்றவன் குரல் தடுமாறியது.



யுக்தா உணர்ச்சியற்று சிரித்தவள், "இன்னைக்கு நீ எனக்கு ஃபோன் பண்ணும்போது ராமண்ணா, நிஷாவை வர சொல்லிட்டு நான் போற முதல் இடத்தைப் பத்தி உன் கிட்ட சொன்னேன். அடுத்து நீ கால் பண்ணும்போது இரண்டாவது இடத்தைப் பத்தி சொன்னேன். அதுக்கு அப்பறம் நா ஃபோனையே ஒடச்சிட்டேன். அப்படி இருக்க நான் இங்க தான் இருக்கேன்னு உனக்கு எப்படித் தெரிஞ்சுது உதய்?" என்றவள் கண்ணில் கோபத்தைத் தாண்டி அதிக வலிதான் இருந்தது.


"எனக்குத் தெரியும் உதய். நீதான்னு எனக்கு நல்லாவே தெரியும். அந்த லாப்டாப்ல லாக் பண்ணி இருந்த போல்டர்ல, பின்னாடி மட்டுமே தெரிஞ்ச உன்னோட ஃபோட்டோ பார்க்கும் போது எனக்கு எதுவும் தோணலை. ஆனா அந்த ஃபோட்டோல இருந்தவன் கையில இருந்த டாட்டூவை பாத்தப்போ தான் எனக்கு லேசா டவுட் வந்துச்சு… அப்ப கூட அது உன்னை மாதிரியே டாட்டூ போட்ட வேற யாராவது இருக்கும்னு ஒரு நப்பாசை இருந்தது. அதைத் தெரிஞ்சுக்கத் தான்‌ என்னைப் பயமுறுத்த நீ அனுப்பிச்ச இந்தப் பொண்ணை வச்சே, உனக்கு வலை விரிச்சேன். எப்படியும் இன்னும் ரெண்டு, மூணு நாள்ல இந்தப் பொண்ணு நீ குடுத்த மருந்தால செத்துடுவான்னு தெரிஞ்சு தான் இவளை நீ கிட்னாப் பண்றத வேடிக்கை பாத்துட்டு இருந்தேன். இப்ப சொல்லு உதய் ஏன் இப்டி செஞ்ச?" என்று ஆரம்பிக்கும் போதே யுக்தா தலையில் தன் துப்பாக்கியால் ஒங்கி அடித்திருந்தான் உதய்.


மண்டை உடைந்து ரத்தம் கொட்ட மயங்கி சொருகும் கண்களால் உதய்யையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் யுக்தா.


"ஆமா டி… இதெல்லாம் செஞ்சது நான் தான். அதுக்கு இப்ப என்ன? எனக்குப் பணம் வேணும். அதுக்கான நான் என்ன வேணும்னாலும் செய்வேன். நான் இங்க வந்ததே இந்தக் கேஸ்க்காக வந்திருக்கச் சிபிஐ ஆபீஸர கொல்ல தான் டி. ஆனா அந்த ஆபீஸர் நீன்னு தெரிஞ்சப்போ தான், நான் கொஞ்சம் தடுமாறிட்டேன். பிக்காஸ் நா… நாஆனா உன்னை நெஜமாவே லவ் பண்ணிட்டேன் டி. நாஆனா பல பொண்ணுங்க கூடப் பழகி இருக்கேன். ஆனா யாரும் என் மனச உன் அளவுக்குப் பதிச்சது இல்ல. ஸ்கூல்ல இருந்து உன்னை எனக்கு ரொம்பப் புடிக்கும். இங்க வந்து உன்னைப் பார்த்ததும் மனசு தடுமாறிடுச்சு. நா உண்மையாவே உன்ன விரும்ப ஆரம்பிச்சிட்டேன். 


உன்ன என்னால கொல்ல முடியல… அதான் ஒரு போலிஸ் உன்னை, கொலைகாரன் நான் கல்யாணம் பண்ணி கூடவே வச்சிக்கிட்டேன். உன்னைப் பயமுறுத்தி இந்தக் கேஸ்ல இருந்து விலக வைக்கச் சின்னதா ஒரு ஆக்சிடென்ட் ஏற்பாடு செஞ்சேன். ஆனா அதுல நிஷா மாட்டிக்கிட்டா. அதுக்கு அப்புறம் தான் இந்தப் பொண்ணை நானே அந்தப் பாலத்துகிட்ட போட்டுப் போலிஸ் கண்ணுல படுற மாதிரி செஞ்சேன். அப்பறம் இவளை கடத்தி உன் கண் முன்னால கொன்னுட்டா நீ பயந்து இந்தக் கேஸ்ல இருந்து வெலகிடுவன்னு நெனச்சேன். ஆனா இப்ப எல்லாம் கைமீறி போச்சு. இனி நீ உயிரோட இருக்கக் கூடாது. எனக்கு எதிரா இருந்த டாக்டர் வினோத்தை கொன்ன மாதிரி உன்னையும் இப்ப கொல்லப் போறேன். ஐம் சாரி சமி எனக்கு வேறவழி இல்ல… ஐ ரியாலி லவ் யூ டி…" என்று தன் துப்பாக்கியை எடுத்து யுக்தாவை குறி பார்க்க, கண்ணிமைக்கும் நேரத்தில் யுக்தா அவன் கையை இறுக்கி பிடித்து முறுக்கி கீழே தள்ளி அவன் கழுத்தில் கால்வைத்து அழுத்தி மிதித்தவள், உதய் கையில் இருந்த துப்பாக்கியை பிடிங்கி விட்டு


"நீ தப்புக்கணக்கு போட்டுட்ட உதய். உன் பொண்டாட்டி சமிய பத்தி முழுசா தெரிஞ்சு வச்சிருக்க நீ, அதே சம்யுக்தா ஐ.பி.எஸ் ஆக இருக்கும் போது எப்படி இருப்பான்னு தெரிஞ்சிக்காம விட்டுட்ட… நீ என்னோட வாழ்கையில் வந்திருக்கக் கூடாது உதய். அதுவும் என்னோட வேலையில் எனக்கு எதிரியா வந்தே இருக்கக் கூடாது. யு மேட் எ வெரி பிக் மிஸ்டேக் .ஐ ஹேட் யூ உதய். ஐ ஹேட் யூ!" என்று கத்திக் கொண்டே தன் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் இருந்து உதய், வினோத்தை கொல்ல பயன்படுத்திய அதே விஷம் நிறைந்த ஊசியை எடுத்தவள் சற்றும் தயங்காமல் உதய் கழுத்தில் அந்த ஊசியைக் குத்தினாள்.


யுக்தா கொடுத்த தகவலின் படி பரதன், ராம், நிஷா அங்கு வந்துவிட, ராம் யுக்தாவை கண் கொண்டு பார்க்க கூட முடியாமல், சிலை போல் நிற்க, பரதனுக்கும் அதே நிலைதான்.


யுக்தா அருகில் சென்று அவளை அணைத்த நிஷா கண்களில் கண்ணீர்பெருக, யுக்தாவை இன்னும் இன்னும் இறுக்கி அணைத்து கொண்டாள்.


"நீ ஏன் நிஷா அழற? அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே! அப்பறம் எதுக்கு இந்த அழுகை? விடு…" என்றவள் குரலில் அத்தனை வெறுமை.


"நீ போன வேலை என்ன ஆச்சு நிஷா?''


"உதய் கடத்தி வச்சிருந்த எல்லாரையும் ரெஸ்க்யூ பண்ணியாச்சு யுகி. அதோட அங்க இருந்த இவனோட ஆளுங்க எல்லாரையும் முடிச்சாச்சு…" என்று நிஷா சொன்னதைக் கேட்டு பெருமூச்சு விட்டு எழுந்த யுக்தா, கடைசியாக விஷத்தின் வீரியத்தில் கை, கால் வெட்டி வெட்டி இழுக்க உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உதய்யை பார்த்தவள், இன்னும் மஞ்சள் நிறம் கூட மங்காத தன் தாலி கயிற்றைக் கழுத்தில் இருந்து அறுத்து எடுத்தவள், கீழேகிடந்த உதய் மீது தூக்கி எறிந்தாள்.


"கமிஷனர் சார் வழக்கம் போல இந்தக் கேசையும் என்கவுண்டர்னு க்ளோஸ் பண்ணிடுங்க… நான் வந்த வேலை முடிஞ்சிது. நான் மிசஸ் சம்யுக்தா உதய்பிரதாப்." என்று விரக்தியாகச் சிரித்தவள்,


"என்னோட வேலையை ரிசைன் பண்றேன். ஒரு குற்றவாளியோட பொண்டாட்டின்ற அடையாளத்தோட சிபிஐல இருக்க நான் விரும்பல. என்னால இனி இந்த அடையாளத்தோட வேலை செய்ய முடியாது…" என்று உறுதியாகச் சொல்லி விட்டாள்.


மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. சிவகாமி "ஒரு பக்கம் என் புள்ளை வாழ்க்கை போச்சே. கல்யாணம் முடிஞ்சு கயிறு கூட மாத்தல அதுக்குள்ள என் பேத்தி தாலி இறங்கிடுச்சு…" என்று வயிற்றில் அடித்துக்கொண்டு அழ, ராம், வினய் நிலைதான் இன்னும் மோசமாக இருந்தது. 


"சரியா விசாரிக்காம எங்க தங்கச்சி வாழ்க்கைய நாங்களே கெடுத்துட்டோமே…" என்று அழுது கரைந்தனர்.


ஒரு வாரம் இப்படியே போக, மதுராவிற்கு இடிப்பு வலி கண்டு கதறி துடிக்க, அந்த நேரம் பார்த்து வீட்டில் யாருமில்லாமல் போக, தன் சோகத்தில் தன்னை மறந்திருந்த யுக்தா, தன் அண்ணியின் வலியை பார்த்த அடுத்த நொடி தாமதிக்காமல் மதுவை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தாள்.


மதுவிற்கு அழகிய பெண் குழந்தை பிறக்க, அதை முதலில் தன் கையில் ஏந்திய யுக்தா முகத்தில் வெகு நாள் கழித்துச் சிறு குறுநகை மலர்ந்தது.


அதைப் பார்த்துக் குடும்பம் மொத்தமும் சற்று நிம்மதி கொண்டது. மதுவிற்குக் குழந்தை பிறந்த அடுத்த இரண்டு நாட்களில் கயல்விழி, வெற்றிக்கு ஆண் குழந்தை பிறந்தது.


மதுரா தன் மகளுக்குச் 'சமீரா' என்று பெயரிட, கயல்விழி தன் மகனுக்கு 'யுகன்' என்று பெயரிட்டாள்.


குழந்தைகள் பிறந்து அந்தக் குடும்பத்தில் சற்று மாறுதலை ஏற்படுத்தி இருந்தாலும், யுக்தாவை நினைத்து அனைவரும் கவலையில் தான் இருந்தனர்.


எல்லோரும் கவலையில் இருப்பதைப் பார்த்த யுக்தா, "இன்னும் எவ்ளோ நாள் இப்டியே இருக்கப் போறீங்க எல்லாரும்? எப்ப பாரு எழவு விழுந்த வீடு மாதிரி…" என்று ஆரம்பித்தவள் வார்த்தைகள் பாதியிலேயே நின்று விட,


"ம்ம்ம்ம்…" என்று இழுத்து மூச்சு விட்டவள்,‌ "சரி எழவு தான் விழுந்து போச்சு… அதுக்கு என்ன பண்ண முடியும். செத்தவனுக்காக உயிரோட இருக்க எல்லாரும் வருத்தப்பட்டே சாகனுமா என்ன?" என்று கத்தியவள் அருகில் வந்த கோதை,


"நாங்க செத்த அந்தக் கேடு கெட்டவனை நெனச்சு இப்படி இல்ல டி. ஆசை ஆசையா நாங்க வளர்த்த பெண்ணு.நீ இப்படி நீக்குறீயே?" என்றவர் சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் முந்தானையில் வாய் பொத்தி அழ,


"ஏய் முதல்ல அழறத நிறுத்து டி…" என்று அதிகாரமாக வந்த சிவகாமியின் குரலில் அனைவரும் அதிர்ந்து தான் போயினார்.


"இப்ப என்ன ஆகிப் ‌ போச்சுன்னு இப்படி ஒப்பாரி வைக்கிறீங்க. ஒரு கொலகார பயகிட்ட இருந்து நம்ம புள்ளைக்கு விடுதலை கெடச்சுதுன்னு சந்தோஷபடுங்க… நம்ம செஞ்ச புண்ணியம் நம்ம புள்ளை உசுரோட நம்ம கண்ணு முன்ன இருக்கு. அது போதும் நமக்கு. இனி யாரும் இந்த வீட்ல நடந்ததைப் பத்தி பேசுறது மட்டும் இல்ல, அத பத்தி நெனைக்கக் கூடக் கூடாது…" என்று உறுதியாகச் சொல்லி விட்டார்.


"பாட்டி நான் ஒன்னு சொன்ன செய்வீங்களா?"


"என்னடி கேள்வி இது? என் பேத்தி கேட்டு நான் செய்யாம இருந்திடுவேனா…? உனக்கு என்ன வேணும்னு சொல்லு டி…"


வினய், ஜீவா, விஷ்ணு அருகில் சென்றவள், நிஷா, ஜானு, ராஷ்மி மூவரையும் பார்த்து, "நான் சந்தோஷமா இருக்கணும்னு நீங்க நெனச்சா மூணு பேரும் என்னோட அண்ணனுங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்… பண்ணிப்பீங்களா?" என்று ஒரு எதிர்பார்ப்போடு கேட்க,


வினய், ஜீவா, விஷ்ணு மூவரும் "முடியாது, முடியாவே முடியாது. நீ இப்படி இருக்கும் போது எங்களுக்குக் கல்யாணமா? நடக்காது…" என்று மறுக்க,


"நான் சந்தோஷமா இருக்கணும்னு நீங்க எல்லாரும் நெனச்சா இதைச் செய்ங்க‌‌… உங்க மூணு பேர் கல்யாணம் தான் எனக்கு இப்ப இருக்க ஒரே ஆறுதல். அப்பறம் உங்க இஷ்டம்…" என்றவள் அமைதியாகச் சென்று விட, அதற்குப் பின் யார் கல்யாணத்தை மறுப்பது? 


விஷ்ணு பிஸ்னஸ் வேலையாக வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால் அவனுக்கும் ராஷ்மிக்கும் நிச்சயம் மட்டும் முடித்துவிட்டு, வினய், நிஷா. ஜீவா, ஜானு திருமணத்தை வீட்டோடு சிம்பிளாகச் செய்ய முடிவு செய்தனர்.


யுக்தா தான் தங்களுக்கு நாத்தனார் முடிச்சுப் போட வேண்டும் என்று நிஷாவும், ஜானுவும் முடிவாகச் சொல்லிவிட, மதுவும் அதே முடிவில் தான் இருந்தாள்.


யுக்தா எவ்வளவு சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை. வேறு வழி இல்லாமல் யுக்தா தாலியின் மூன்றாவது முடிச்சை போட்டு இரு ஜோடிகளின் ஏழு ஜென்ம உறவை தொடங்கி வைத்தாள்.


திருமணம் முடிந்த பத்து நாளில் யுக்தா யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயே சென்று விட, தவித்துப் போனது குடும்பம்.


பிரபு ஃபோன் செய்து அவள் கூர்க்கில் தன்னுடன் தான் இருக்கிறாள் என்று சொல்லிய பின் தான் நிம்மதி கொண்டது.