நிஜம் 23
நிஜம் 23
விக்ரமும் வருணும் கடைசியாக லேடிஸ் ஹாஸ்டலில் லயா மற்றும் த்வனியிடம் திட்டு வாங்கிகொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடி இருக்க, த்வனி அங்கிருந்த டேபிளில் கைகளால் முகத்தை முழுதாக மூடியபடி அமர்ந்திருந்தாள்.
லயா மெதுவாக த்வனி அருகில் சென்று அவள் தோளில் கைவைத்து அழுத்த, த்வனி நிமிர்ந்து லயாவை பார்க்க, அவளை நேருக்கு நேர் பார்க்கமுடியாது தலைகுனிந்த லயா, த்வனி அருகில் அமர்ந்து, "சாரிடா… அந்த லூசு இப்டி செய்யும்னு நான் சத்தியமா நெனைக்கவே இல்ல, டிவில சின்ன தம்பி படம் பாத்திருக்கும் போல, அதான் எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்னு தாலி தூக்கிட்டு வந்திடுச்சு" என்றவளை த்வனி முறைத்தாள்.
"ஏய் ப்ளீஸ்பா அப்படி பாக்காத, அவனுக்கு எங்க நான் அவன் மேல உண்மையாகவே கோவமா இருக்கேனோன்னு பயம். அதான் கிறுக்கு மாதிரி இப்டி பண்ணிட்டான். மத்தபடி ஹிஸ் சோ ஸ்வீட்." என்று கெஞ்சிய லயாவை பார்க்காமல் த்வனி முகத்தை திருப்பிக்கொள்ள, லயாவின் கண்களில் இருந்த வைகை டாம் உடைந்து கன்னத்தில் இறங்கிவர, "நா தான் சாரி சொல்றேனில்ல" என்று விசும்ப, அவள் குரலில் தெரிந்த மாற்றத்தில் த்வனி திரும்பி லயாவை பார்த்தாள்.
"ஏய் இப்ப எதுக்கு அழுதுட்டு இருக்க நீ? நான் எதாவது சொன்னேனா? சொல்லுடி எதாவது சொன்னேனா?" என்று கத்த, லயா வேகமாக இல்லை என்று தலையாட்டினாள்.
"இல்ல இல்ல. அப்புறம் எதுக்கு கண்ணுல இப்ப ஒரு டி.எம்.சி தண்ணி வழியிது?" என்றதும் லயா இன்னும் சத்தமாக அழுதவள், "அந்த லூசு பக்கி பண்ணது தப்பு தான். அதுக்கு ஏன் நீ என்கிட்ட கத்ற, வேணும்னா போய் அந்த தேவ் பக்கிய திட்டு" என்று கன்னத்தில் வழிந்து கண்ணீரை துடைத்துபடி, "எப்பபாரு உங்க ரெண்டு பேருக்கு இதே வேலைய போச்சு, நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் அடிசாசிக்க வேண்டியது. அப்புறம் என் தலைய உருட்ட வேண்டியது. சரி இப்ப என்ன தேவ் கெட்ட பையன். அவன் சரியில்ல, உனக்கு அவன் வேணாம் அதான சொல்லப்போற? சரி, நீயா அவன்தான் எனக்கு சரின்னு புரிஞ்சு சம்மதம் சொல்றவரை... நான் வெய்ட் பண்றேன். நீ ஒகே சொல்லாம நான் அவனை கல்யாணம் பண்ணமாட்டேன்" என்றவளை த்வனி ஒரு பக்கம் புருவம் உயர்த்தி பார்க்க,
"என்ன நீ நான் சொன்னதை நம்பல, அப்படித்தான? சரி நீ ஒகே சொல்லாம நான் என் தேவ்வை கல்யாணம் செய்ய மாட்டேன். இது நான் உயிர நேசிக்கிற என் த்வனி மேல சத்தியம்" என்று லயா த்வனி தலையில் கைவைத்து சத்தியம் செய்ய, த்வனி அவளை உற்று பார்த்தாள்.
"அப்படின்னா நான் ஒகே சொல்லாம நீ அந்த பிசாசு விக்ரமை கல்யாணம் பண்ண மாட்ட… அப்படி தான?" என்று த்வனி கேட்க, லயா ஆமாம் என்று தலையாட்டினாள்.
"அப்ப நான் ஒகே சொன்னா நீ அவனை கல்யாணம் செஞ்சுக்குவ… அப்படி தான" என்றதும் லயா மீண்டும் ஆமாம் என்று தலையாட்ட,
"அப்ப நான் ஒகே சொன்ன தான் உங்க கல்யாணம், இல்லாட்டி கல்யாணம் இல்ல, அப்படிதான…" என்றவள் சற்று பொறுத்து, "ம்ம்ம் எனக்கு ஒகே" என்ற த்வனி குறும்பாக சிரிக்க,
"ஏய் எத்தனை முறை சொல்றது. நீ ஒகே சொன்னா தான் கல்யா..." என்ற லயாவின் வார்த்தைகள் பாதியில் நிற்க, சட்டென் திரும்பி த்வனியின் முகத்தை பார்த்து, "ஏய் இப்ப நீ என்ன சொன்ன… என்ன சொன்ன? திரும்ப சொல்லு திரும்ப சொல்லு?" என்ற லயா சந்தோஷத்தில் குதிக்க, த்வனி அவள் இரு கன்னத்தையும் பிடித்து கிள்ளி,
"ம்ம்ம் நீ அந்த பரதேசி விக்ரமயே கட்டிக்கோ, எனக்கு ஒகேன்னு சொன்னேன்" என்றது தான் லயா பாய்ந்து வந்து த்வனியின் தோளில் முகம் புதைத்து, அவளை இறுக்கி கட்டிக் கொள்ள, அவளின் ஆனந்த கண்ணீரில் த்வனி ஆடை நனைந்தது.
"ஏய் லயா என்னடி இது? எதுக்கு இப்ப அழுதுட்டு இருக்க, அதான் நான் ஒகே சொல்லிட்டேனே, அப்புறம் என்ன? என்று அவள் கன்னத்தை துடைத்துவிட, லயா த்வனியின் கைகளை பிடித்துக் கொண்டாள்.
"ஐ நோ த்வனி. உனக்கு அவனை இப்பவும் புடிக்கல. பட், எனக்காக நீ இதுக்கு ஓகே சொல்ற, அப்படி தான?" என்ற லயாவை தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்ட த்வனி,
"நீ சொன்னது உண்மைதான் லயா. எனக்கு அந்த விக்ரமை இத்துண்டு கூட பிடிக்காது. பிடிக்காதுன்றதை விட ஐ ஜஸ்ட் ஹேட் ஹிம்.," என்றவள் கையை லயா மெதுவாக அழுத்த, த்வனி அவள் தோளை மெதுவாக தட்டிக்கொடுத்து, "எனக்கு விக்ரமை புடிக்காது.பட், என்னோட லயாவோட தேவ்வை நான் வெறுக்கல, உன்னோட தேவ் நல்லவன் தான். உனக்கு மட்டும் தேவ் நல்லவன் தான்" என்று அந்த உனக்கு என்றதை அவள் அழுத்தி சொல்ல, அவள் சொல்வதின் அர்த்தம் லயாவுக்கு நன்றாக புரிந்தது.
"ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் த்வனி, விக்ரம் நம்மல மாதிரி இல்ல." என்று சற்று நிறுத்தி, "ஹீ இஸ் நாட் ஏ நார்மல் பர்சன் த்வனி" என்று தயங்கித் தயங்கி சொல்ல, த்வனி இழுத்து மூச்சு விட்டு, "ஐ நோ லயா, எனக்கு தெரியும். அதுக்கான எவிடன்ஸ் என் கையில் இருக்க இந்த தீக்காயம் தான்" என்றதும் லயா சட்டென த்வனியை விட்டு விலகி வந்து அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்தாள்.
"அப்ப உனக்கு விக்ரம் பத்தி ஏற்கனவே தெரியுமா த்வனி?" என்று கேட்ட லயாவுக்கு தலையே சுற்றியது.
த்வனி இழுத்து மூச்சு விட்டு தன்னை சமன் செய்து, "ம்ம்ம் தெரியும் லயா, நல்லாவே தெரியும். அவன் மெண்டலி அண்ட்ஸ்டேபிள்னும் தெரியும், என்னோட கைல இருக்க காயத்துக்கு காரணம் அவன் தான்னும் எனக்கு தெரியும். அதோட அவனை பத்தி இன்னொன்னு எனக்கு தெரியும்" என்று திரும்பி லயாவின் முகம் பார்த்து, "அவனோட நோய்க்கு மருந்து நீதான்னும் எனக்கு தெரியும்" என்ற த்வனியை லயா கண்ணீரோடு பார்க்க, த்வனி கண்களால் அவளை வா என்றழைக்க, லயா தாவி வந்து த்வனியை கட்டிக்கொண்டாள்.
"கொஞ்ச நாள் முன்ன விக்ரம் அம்மா சௌந்தர்யா என்னை பாக்க வந்திருந்தாங்க லயா, அப்பதான் எனக்கு விக்ரம் பத்தி எல்லாம் தெரிஞ்சிது. அப்ப அவங்க சொன்னதை கேட்டு எனக்கு செம்ம கோவம் வந்திடுச்சு, அவங்களை திட்டு வெளி போகச் சொல்லிட்டேன். அதுக்கு பிறகு எக்காரணம் கொண்டும் விக்ரம்கிட்ட உன்ன குடுக்க கூடாதுனு முடிவு பண்ணினேன். ஆனா, நாளுக்கு நாள் நீ அவனை இன்னும் இன்னும் அதிகம நேசிக்க ஆரம்பிச்சிட்ட, அதோட விக்ரமும் உன்மேல உயிர இருக்கான்னு எனக்கு புரிஞ்சிது, இருந்தாலும் ஒரு அப்னார்மல் பர்சன்கிட்ட என்னோட லயா வாழ்க்கைய எப்படி நான் குடுக்குறதுனு ரொம்ப யோசனைய இருந்தது. கடைசிய ஒரு முடிவு பண்ணி விக்ரம் அம்மாவை போய் பாத்து, விக்ரம் பத்தி இன்னும் கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன், கூடவே அவனோட டாக்டர் யார்னு கேட்டு அவரையும் போய் பாத்தேன். அந்த டாக்டர் விக்ரம் பத்தி முழுசா சொல்லி, அவன் நோய்க்கு இந்த உலகத்தில் ஒரே மருந்து தான் இருக்கு, அது நீதான்னு சொன்னாரு, அதோட பலமுறை நானும் விக்ரமை கவனிச்சு இருக்கேன். அவன் உன்னை ரொம்பவே அளவுக்கு அதிகம விரும்புறான். உனக்கு அவன் மேல இருக்குறது காதல். ஆனா, அவனுக்கு உன் மேல இருக்குறது ஒரு வெறித்தனமான அன்பு, அந்த அன்பு தாய்பால் மாதிரி சுத்தமானதுனு எனக்கு புரிஞ்சிது. எக்காரணம் கொண்டும் அவனால உனக்கு ஒரு சின்ன கஷ்டம் கூட வராதுன்னு எனக்கு முழுசா நம்பிக்கை வந்தனால தான், நானும், கதிரும் உங்களை பத்தி அப்பா, அம்மாகிட்ட பேசி உங்க காதலுக்கு கிரீன் சிக்னல் வாங்கிட்டோம்" என்று சந்தோஷா அணுகுண்டை தூக்கிப்போட, அந்த சந்தோஷத்தின் ஆயுள் இன்னும் சில நிமிடங்கள் தான் என்று உணராமல் லயா துள்ளிக்குதித்து, லவ்யூ த்வனி டார்லிங், மை த்வனி எப்பவும் குட் கேர்ள்" என்று த்வனி கன்னத்தில் மாறிமாறி முத்தமிட்ட லயா சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் குதிக்க, அழகாய் சிரிக்கும் தோழியின் சிரிப்பில், மனதும், கண்களும் மலர சிரித்திருந்த த்வனியின் சிரிப்பு கொஞ்ச கொஞ்சமாக அணையும் விளக்காக ஒளி குறைய ஆரம்பிக்க, லயா" என்று கத்திகொண்டே அவள் ஓடவும், லயா மயங்கிச் சரியவும் சரியாக இருந்தது.
"லயா... ஏய் லயா... என்னடி இது? என்னடி ஆச்சு உனக்கு" என்று கதறியவள், லயாவின் மூக்கில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை பார்த்து உறைந்து நின்றாள்.
தரையில் காகிதங்கள் சிதறிக் கிடக்க, கைகள் வலிக்க, கதிரின் கன்னத்தில் மாறிமாறி அறைந்திருந்த த்வனி, "இது உண்மை இல்ல, நீ பொய் சொல்ற, லயாக்கு ஒன்னு இல்லன்னு சொல்லு கதிர். அவ சீக்கிரம் சரியாகிடுவான்னு சொல்லு, சொல்லு கதிர்" என்று அவன் சட்டை கலரை பிடித்துக் கொண்டு கதறி அழ, வெறுமை சூழ்ந்த கண்களில் கண்ணீர் தேங்கிய இருக்க, கண்களை இறுக்கி மூடிய கதிரின் கண்ணீர் துளி அவன் நெஞ்சில் எரியும் தீயை அனைக்க சக்தி இல்லாமல் சட்டையில் பட்டு தெறிக்க, அவன் தலை இடவலமாக ஆடி, த்வனியின் நம்பிக்கையில் நெருப்பை அள்ளிக்கொட்டியது. அவன் சட்டை இறுக்கி பிடித்திருந்த த்வனி கதறியபடி கீழே சரிய, கதிரின் சட்டை கிழிந்து அவள் கையோடு வந்தது.
லயா மயங்கி விழுந்து அவள் மூக்கில் ரத்தம் வருவதை பார்த்த த்வனி உடனே அவளை ஹாஸ்பிடல் கூட்டி செல்ல, அந்த நேரம் ஒரு வேலை விஷயமாக இந்தியா வந்திருந்த கதிர் லயா பற்றி தெரிந்த அடுத்த நொடி ஓடி வந்துவிட்டான். அனைத்து பரிசோதனைகளும் முடிந்து அதான் ரிப்போர்ட் வர, கதிர் அதை பார்த்து நிலைகுலைந்து நின்றான்.
த்வனி கதிர் அருகில் ஓடி வந்து, "என்னச்சு கதிர்? லயாவுக்கு ஒன்னு இல்ல தான? அவ நல்லா தான இருக்க? நான் அவளை பாக்கலாமா?" என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க, கதிர் உயிரற்ற பொம்மையாக உடைந்து நின்றான்.
"ஏய் கதிர் நான் கேட்டுட்டே இருக்கேன். நீ ஒன்னு சொல்லாம இப்டி அமைதியா இருந்தா, என்ன அர்த்தம். என்னன்னு எதாவது சொல்லு," என்றவள் அவன் அமைதியில் பொறுமை இழந்து, "ஏய் அந்த ரிப்போர்ட்டை இப்டி குடு" என்று கதிரின் கையில் இருந்த ரிப்போர்ட்டை வாங்கிப் படித்தவளுக்கு ஒரு நிமிடம் உலகமே நின்றது போல் இருந்தது.
கதிரை திரும்பி விழிவிரிய பார்த்து, "இது பொய்னு சொல்லு கதிர். இது பொய்னு சொல்லு" என்று அடிவயிற்றில் இருந்து கத்திக் கதற,
கதிர் இதுதான் உண்மை என்று கண்களை மூடித்திறக்க, அவன் கன்னத்தில் அறைந்தாள் த்வனி.
"நீ என்ன அடிக்கிறதால் இனிமே எதுவும் இங்க மாறாது த்வனி. லயா நம்ம எல்லாரையும் விட்டு போகப்போற, ஷீ ஸ் கவுண்டிங் ஹர் டேஸ்." என்றவன் குரலின் ஜீவன் இறந்து இருந்தது.
லயாவின் தந்தை கதிர் அருகில் வந்து, "லயாவை நம்ம வெளிநாட்டுக்கு கூட்டிப்போலாமா கதிர். அங்க போய் ட்ரீட்மென்ட் பாத்த எம் பொண்ணு பொழச்சிக்குமா? என்று கடைசி நம்பிக்கையாக கேட்க,
"லயாக்கு அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுக்கிமியா மாமா, அதுவும் அட்வான்ஸ் ஸ்டேஜ். இந்த ஸ்டேஜ்ல" என்றவன் திரும்பி த்வனியை பார்த்து, "சரி மாமா." என்றான்.
அடுத்த ஒரு வாரத்தில் லயா, கதிர், த்வனியோடு லயாவின் தாய், தந்தையும் அமெரிக்கா புறப்பட்டனர்.
அழுதழுது த்வனி சௌந்தர்யா மடியிலேயே மயங்கி இருக்க, விக்ரம் செதுக்கிய கற்சிலையாக அதே இடத்தில் அமர்ந்திருந்தான்.
"அப்ப லயாக்கு கல்யாணம் ஆகிடுச்சனு இவ சொன்னதெல்லாம் பொய்யா? அப்ப இந்த ஃபோட்டோஸ்" என்று அங்கிருந்து லயாவின் கல்யாண ஃபோட்டோவை கைகாட்டிய ஆஷா,
"அப்ப நாங்க அன்னைக்கு ஃபோன்ல பேசினது யார் கூட, ட்ரீட்மென்ட்காக யூ.எஸ் போன லயாக்கு என்ன ஆச்சு? இதெல்லாம் உங்களுக்கு முன்னையே தெரியுமா? அப்படி என்ன தான் நடந்தது" என்ற ஆஷாவை உணர்ச்சியற்று பார்த்தார் சௌந்தர்யா.
"விதிப்படி எல்லாம் நடந்தது ஆஷா. ஆனா, நடந்தது எல்லாம் நம்ம நிம்மதிய ஒரேயடிய கொன்னுடுச்சு" என்றவர் யாருக்கும் தெரியாத, அவருக்கு மட்டும் தெரிந்த த்வனியின் வாழ்க்கையின் கசந்த பக்கத்தை படிக்கக் தொடங்கினார்.
