நிஜம் 24
நிஜம் 24
அனைவரும் அமெரிக்கா வந்தவுடனேயே, லயாவை தான் வேலை செய்யும் அதே ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து தன் கண்கானிப்பில் வைத்து பார்த்துக் கொண்டான் கதிர்.
த்வனி மிதமான சூட்டில் இருந்த வென்னீரில் டவலை முக்கி எடுத்து, லயாவின் உடல் முழுவதையும் துடைத்து விட்டுக் கொண்டிருக்க, லயா த்வனியையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
லயாவின் தாயை கூட அவள் அருகில் விடாமல் லயாவை தன் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் த்வனி.
"த்வனி" என்று மெதுவாக லயா அழைக்க, த்வனி அவளை நிமிர்ந்து பார்த்து, "என்னடா எதும் வேணுமா, இல்ல தண்ணி சூடு அதிகமாக இருக்க?" என்று வாஞ்சையாக கேட்க, லயாவின் கண்களில் ஒருவித கர்வம் தோன்றியது. கண்களால் த்வனியை தன் அருகில் வரும்படி சமிக்ஞை செய்ய, த்வனி அவள் அருகில் சென்றாள்.
"நான் ரொம்ப லக்கி த்வனி. உன்னை மாதிரி ஒரு ஃப்ரண்ட் கிடைக்க… இந்த உலகத்தில் யாருக்குடி கிடைக்கும் உன்னை மாதிரி ஒரு ஃப்ரண்ட். என் அம்மா கூட சிலசமயம் எனக்கு செய்ய சங்கடப்பட்ட எல்லா வேலையும் நீ கொஞ்சம் கூட தயங்காம, அறுவெறுப்பு பாக்காம எனக்கு செய்ற. எப்படிடி உன்னால இதெல்லாம் முடியுது" என்ற லயாவின் கண்ணில் கண்ணீர் முத்துக்கள் உருண்டு கன்னத்தில் இறங்கி வர, அது அவள் தாடையை தாண்டும் முன் தன் கை கொண்டு அதை துடைத்தாள் த்வனி.
"லூசு மாதிரி பேசாத லயா. அம்மா ஒன்னும் சங்கடப்பட்டு எல்லாம் இதெல்லாம் செய்யாம இல்ல, நான் தான் என் லயாவை தான் பாத்துக்குறேன். நீங்க ஒன்னு செய்ய வேணாம்னு சொன்னேன். நீயா எதும் நெனச்சிக்காத, அதோட நான் என்ன பெருச உனக்கு செஞ்சிட்டேன். நீ சொல்லலாம் நான் உன்னோட ஃப்ரண்டுன்னு, பட், என்னை பொருத்தவரை நீ எனக்கு குழந்தை மாதிரி தான். என்னோட குட்டி பாப்பாடி நீ, உனக்கு இதெல்லாம் செய்யுறதுல எனக்கு என்ன அருவெறுப்பு வந்துட போகுது" என்ற தோழியை பொறுமை பொங்க பார்த்தாள் லயா.
"த்வனி நான் ஒன்னு சொல்லுவேன், இல்ல இல்ல உன்கிட்ட ஒன்னு கேப்பேன் செய்வீய?" என்ற லயாவை முறைத்த த்வனி,
"அதென்ன செய்வீயான்னு கேள்வி, எனக்கு இது வேணும் செஞ்சு தாடினு கேளு… ம்ம்ம் சொல்லு என்ன வேணும் உனக்கு" என்றவள் லயா கேட்டதைக் நினைத்து பார்த்து ஒரு நிமிடம் உறைந்து நின்றாள்.
"ஏன்டி? இப்ப எதுக்… எதுக்குடி இப்படி எல்லாம்" என்றவளுக்கு வார்த்தை வராமல் தொண்டை அடைத்துக்கொண்டது.
"ப்ளீஸ்டா… எனக்காக... யார் கண்ட இதுவே என்னோட லாஸ்ட் விஷ்ஷா இருக்" என்று சொல்லும் போதே அவள் வாயை மூடிய த்வனி,
"நாளை மறுநாள் நீ சொன்னது நடக்கும். எல்லாத்தையும் நான் பாத்துக்குறன்" என்றவள் அங்கிருந்து அழுதுகொண்டே சென்றாள்.
லயாவின் தாய், தந்தை இருவரும் இருண்ட முகத்துடன் அமரந்திருக்க, பட்டு வேட்டி சட்டையில் கதிர் அந்த ஹாலை அளந்தபடி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
பெட்ரூமின் கதவு திறக்கும் ஓசை கேட்டு மூவரும் திரும்பி பார்த்து, அப்படியே சிலையாக நின்றனர்.
அரக்கு நிற பட்டுப்புடவையில், அழகாய் தலைவாரி, கூந்தல் முழுவதும் மல்லிகை பூவால் சுற்றி இருக்க, லேசான மஞ்சள் பூசிய முகத்தில் கொஞ்சமாக மேக்கப் போட்டு, நெற்றியில் சின்ன மெரூன் நிற வட்ட பொட்டு வைத்து, தலைமுதல் கால் வரை முழுதாக தங்க நகையணிந்து கழுத்தில் இளஞ்சிவப்பு ஆர்கெட் பூவில் செய்த மாலையை போட்டு நிறைவான திருமண கோலத்தில் முழு மணப்பெண் அலங்காரத்தில் பெற்றவர் முன் வந்து நின்ற லயாவை பார்த்த அவளை பெற்றவர்களில் வயிறு எரிமலையாய் தகித்தது. நிஜத்தில் இப்படி ஒரு சுபகாரியம் தன் மகளுக்கு நடக்காது என்ற நிஜம் அந்த தாய், தந்தையோடு சேர்த்து த்வனி, கதிரையும் வதைத்தது.
அனைவரையும் பார்த்து லேசாக சிரித்த லயா, "நீ ரெடியா த்வனி?" என்று கேட்க, கலங்கிய விழிகளுடன் தலையை ஆம் என்று ஆட்டிய த்வனி, லயாவை அந்த திருமண கோலத்தில் கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்தாள்.
த்வனி முன் கையை நீட்டிய லயா, "அதை குடு த்வனி" என்றதும், த்வனி தான் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு மஞ்சள் கயிற்றறை எடுத்து அவள் கையில் கொடுக்க, அந்த மஞ்சள் கயிற்றை கையில் வாங்கி, கண்ணீரோடு பார்த்த லயா, ஒரு நிமிடம் கண்களை மூடி அவளின் தேவ்வை மனதில் நினைத்து பார்த்து, அந்த வெறும் மஞ்சள் கயிற்றை தன் கழுத்தில் கட்டிக்கொண்டாள்.
மகளின் ஒவ்வொரு செயலும் அவளை பெற்றவர்களில் நெஞ்சில் அவர்களின் இயலாமை அழுத்தமாக உணர்த்த, அதற்கு மேல் அங்கு நடப்பதை பார்க்க விரும்பாமல் அங்கிருந்து சென்றனர் லயாவின் தாய், தந்தை இருவரும்.
லயா மெதுவாக கதிர் அருகில் வந்து, "என்னால எப்பவும் உங்களுக்கு கஷ்டம் தான் இல்ல மாமா. முன்ன தேவ்வை லவ் பண்ணி உங்களை கஷ்டப்படுத்தினேன். இப்பவும் அதே தேவ் உயிரை காப்பாத்த உங்களை மிஸ்யூஸ் பண்றேன்… ஐ ஹம் சாரி மாமா, சாரி" என்று கை கூப்பி நிற்க, அவளை தோளோடு அணைத்த கதிர்,
"என்ன பேசுற நீ? சும்மா லூசு மாதிரி நீயா ஒன்னு நெனச்சிடு பேசிட்டு இருக்காத. நீ எப்பவும் என்னோட லயாகுட்டி தான். எப்பவும் நீ என் செல்லம் தான். உனக்காக நான் எதுவும் செய்வேன். நீ சும்மா கண்டதையும் யோசிக்காத" என்று அவள் கண்களை துடைத்தான்.
"நீ சொல்றதை நான் செய்றேன். ஆனா, இது தேவையா லயாகுட்டி? எதுக்கு இந்த டிராமா? சரி மத்ததெல்லாம் ஓகே. ஆனா, இந்த மஞ்சள் கயிறு எல்லாம்" என்றவனுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியவில்லை.
"வேணும் மாமா, அவசியம் இந்த கயிறு வேணும். இது என்னோட கடைசி ஆசை மாமா. ஒருவேளை கடவுள் கண்திறந்து, எனக்கு சரியாகி, நான் பொழச்சு வந்தால், இன்னைக்கு மாதிரி த்வனி அவ கையால எனக்கு பேக்கப் போட்டு மணவறைக்கு கூட்டி போணும், இந்த வெறும் மஞ்சள் கயித்துல தங்க தாலிய கோர்த்து, அதை என் தேவ் கையால் என் கழுத்தில் கட்டணும், ஆயுசுக்கும் தேவ்வோட சந்தோஷமா வாழ்ந்து, புள்ளைய பெத்து அதை த்வனிகிட்ட குடுத்து, அவளை வளக்க சொல்லி அவ குழந்தைங்ககிட்ட மல்லுகட்றதை சிரிச்சுகிட்டே பாக்கணும், தேவ்வும் த்வனியும் எனக்காக சண்டை போடும் போது, ஐஸ்கிரீம் தின்னுட்டே ஜாலிய அதை வேடிக்கை பாக்கணும். அப்டி இப்டின்னு எனக்கு நெறய ஆசை இருக்கு மாமா... ஆனா, அதுக்கான ஆயுசு தான் எனக்கு இல்லாம போய்டுமோன்னு பயம்மா இருக்கு, இன்கேஸ் நான் பயப்புடுற மாதிரி நான் இல்லாம போய்ட்டா, இந்த கயிறு தான் மாமா என்னோட தேவ் உயிரை புடிச்சி நிறுத்தி வைக்கும்." என்றவள் கதிர் தோளில் சாய்ந்து கதற, த்வனி கண்களை இறுக்கி மூடி, உதட்டை அழுத்தி கடிக்க, அவள் மனதில் வலியின் அழுத்தத்தை தங்க முடியாமல் அவள் இதழ்கள் உதிரத்தை சிந்தி அழுதது.
"நான் இந்த உலகத்தில் இல்லைனு தெரிஞ்ச அடுத்த நிமிஷம் என்னோட தேவ் உயிரும் கண்டிப்பா போய்டும் மாமா. அவன் சந்தோசம இல்லாட்டி பரவாயில்ல, எனக்கு அவன் உயிரோட இருந்த மட்டும் போதும் மாமா. அதுக்கு நான் இருக்கணும். நான் எங்கயோ உயிரோட இருக்கேன்னு அவன் நம்பணும். அதுக்கு தான் இந்த டராமா. எனக்கு கல்யாணம் ஆகி நான் எங்கயோ நிம்மதியா இருக்கேன்னு தெரிஞ்ச, நான் வாழ்ற உலகத்தில் வாழ்றதே போதும்னு அவன் உயிரோட இருப்பான்."
"சரி லயா அதுக்கு வெறும் உன்னோட இந்த மேரேஜ் செட்டப் ஃபோட்டோ மட்டும் போதாதா? எதுக்கு நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்த மாதிரி ஃபோட்டோ எடுக்க சொல்ற, அதுவும் கழுத்துல அந்த கயிறோட?" என்றவனுக்கு பதில் த்வனியிடம் இருந்து வந்தது.
"அவன் நம்ப மாட்டான் கதிர். வெறும் லயா பிக்ஸ் மட்டும் அனுப்பினா கண்டிப்பா அவனுக்கு எதோ தப்ப இருக்குன்னு புரிஞ்சிடும். அப்புறம் அவன் நிச்சயம் லயாவை தேடி வருவான். அப்படி அவன் வராம இருக்கணும்னா, அதுக்கு லயாவுக்கு மேரேஜ் ஆகி இருக்கணும். அப்டி இருந்த மட்டும் தான் அவன் லயாவை தேடி வரமாட்டான். பிகாஸ் அப்டி அவன் இவளை தேடி வந்தால், இவளுக்கு எதுவும் பிரச்சனை வருமோன்னு அவன் பயப்படுவான். சோ நிச்சயம் அவன் லயாவை தேடி வரமாட்டான். மிஞ்சு போன இவளுக்கு ஃபோன் பண்ணுவான். அதுவும் இவ கூட பேச இல்ல. வெறும் இவ குரலை மட்டும் கேட்க தான் இருக்கும். அதுக்காக தான் இவ இதெல்லாம் ப்ளான் பண்ணி செட்சிட்டு இருக்க, இவ பேர்ல இங்க இவ, புது ஃபோன் நம்பர் வாங்கினது கூட விக்ரம்காக தான்" என்ற த்வனியை ஆழமாக பார்த்துக்கொண்டிருந்தாள் லயா.
கதிர், லயாவை திருமண ஜோடி போல் நிற்க வைத்து, லயாவின் கழுத்தில் புடவைக்குள் பட்டும் படாமல் மறைந்திருந்த அந்த மஞ்சள் கயிறு, பார்த்தால் தெளிவாக தெரியும்படி, த்வனி மேலும் சில புகைப்படங்களை எடுத்தாள்.
கேமராவில் அந்த ஃபோட்டோவை எல்லாம் நீர் கோர்த்த விழிகளுடன் பார்த்த லயா, "நான் பொழச்சி வந்த, இதையெல்லாம் டெலிட் பண்ணிடு, ஒருவேளை நான் வராம போய்ட்ட, இதை தேவ்கு அனுப்பிடு" என்றவள் த்வனி மடியில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
லயாவுக்கு கீமோ தெரபி ட்ரீட்மென்ட் தொடங்கி இருந்தான் கதிர். நோயை விட, அதற்காக வைத்தியம் ஏற்படுத்திய வலியை தாங்க முடியாமல் தவித்தாள் லயா.
உடல் கலைத்து, கண்கள் ஒலி இழந்து, ஓய்ந்து போய், வெட்டி பெயில் போட்ட வாழை நாராக கிடந்த லயாவை பார்க்க பார்க்க, அனைவருக்கும் இதயம் தணலாக தகித்தது.
"எனக்கு என்னோட முடிய எவ்ளோ புடிக்கும்னு உனக்கு தெரியுமில்ல த்வனி. தேவ்கு என்னோட ஹேர்ல விரல் கோதி விளையாடுறது ரொம்ப புடிக்கும் தெரியுமா? உனக்கு கூட எனக்கு தலைவாரி விடுறது ரொம்ப புடிக்குமில்ல. இப்ப பாரு த்வனி, இப்ப என்னை பாரு, என்னோட தலைய பாரு, நீ விதவிதமான தலைவாரி விடும் என்னோட தலைய பாரு த்வனி" என்று கதறியபடி முடி இல்லாத தன் தலை வேதனையோட தடவிக்கொண்டிருந்த லயாயை ஆரத்தழுவிக் கொண்டாள் த்வனி.
கதிர் லயாவுக்கு உணவை ஊட்டி மருந்தை கொடுத்து விட்டு நகர, "மாமா" என்ற லயாவின் அழைப்பில் நின்றான்.
"என்ன லயா?"
"த்வனி எங்க மாமா? முந்த நேத்து நைட்டு வீட்டுக்கு போய்ட்டு வரேன் சொல்லிட்டு போனா, நேத்து முழுக்க என்னை பாக்க வரவே இல்ல. எப்பவும் அவ தான் எனக்கு ஊட்டி விடுவா, நேத்து பூரா அவ வரவே இல்ல, அம்மா தான் ஊட்டி விட்டாங்க… எங்க மாமா அவ? அவ இல்லாம எனக்கு ஒரு மாதிரி இருக்கு" என்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் கதிர் அமைதியாக இருக்க, லயா அவனை லேசாக கண்கள் சுருக்கி பார்த்தாள்.
கதிர் எதையே அவளிடம் மறைக்கிறான் என்று லயாவுக்கு புரிய,
"த்வனி எங்க மாமா… உங்களை தான் கேக்குறேன், எங்க அவ? எங்க போயிருக்க? உண்மைய சொல்லுங்க…" என்று கத்தி ஆர்பாட்டம் செய்ய, கதிர் என்ன சொல்லு அவளை சமாதானம் செய்வது என்று புரியாமல் விழித்தான்.
"த்வனிக்கு ஒன்னு இல்ல லயா, அவ… அவ ஒரு வேலைய வெளிய போயிருக்கா… அவ்ளோதான் இன்னைக்கு வந்துடுவா" என்று அவனும் முடிந்த வரை அவளை சமாதானம் செய்யப் பார்க்க, லயா அதையெல்லாம் கேட்பதாக இல்லை.
"நீங்க பொய் சொல்றீங்க, அவ எதுக்காகவும், என்னை விட்டு எங்கயும் போகமாட்டனு எனக்கு நல்லா தெரியும்… ஒழுங்க சொல்லுங்க எங்க அவ..." என்று லயா கத்த, அந்த நேரம் கதவு திறக்கும் ஓசை கேட்டு திரும்பிய லயா, அங்கு நின்ற த்வனியின் கோலத்தை பார்த்து கதறிவிட்டாள்.
த்வனியின் வயிற்றைக் கட்டிக்கொண்டு லயா கதறிக்கொண்டிருக்க, பொறுத்து பொறுத்து பார்த்த த்வனி,
"ஏய் ச்சை வாயமூடு, இப்ப என்ன ஏழவ விழுந்துடுச்சு இப்டி அழுதுட்டு இருக்க..." என்று அதட்ட, லயா த்வனியை தீயாக முறைத்தாள்.
"ஏன்டி… ஏன்டி இப்படி செஞ்ச? வயசு பொண்ணு செய்ற காரியமாடி இது? எதுக்குடி இப்படி செஞ்ச" என்று குலுங்கி அழுத லயாவை அணைத்துக் கொண்ட த்வனி,
"இப்ப என்ன ஆச்சின்னு நீ இப்டி ஓவர் ரியாக்ட் பண்ற? என்ன என்னோட உயிரா போச்சு, வெறும் மயிரு தானாடி போச்சு... விட்ட இன்னும் மூணு மாசத்தில் வளர்த்திட போகுது. அதுக்கு போய் தேவையில்லாம இப்டி ஃபீல் பண்ணிட்டு. ஃப்ரீய விடுவீயா" என்றவள் தன் கொண்டு வந்த பையில் இருந்த, அவள் முடியில் செய்த விக்கை எடுத்து லயா தலையில் மாட்டிவிட, லயா கண்ணீரோடு த்வனியின் முடி இல்லாத தலை வேதனையோடு பார்க்க, இவர்கள் இருவரின் அன்பை பார்த்து கதிர் நெகிழ்ந்து நின்றான்.
வருண் ஒரு மிரட்சியோடு த்வனியை பார்த்துக்கொண்டிருக்க, ஷாலினியும் ஆருஷியும் தங்களுக்கு எப்படி பட்ட தோழி கிடைத்திருக்கிறாள் என்று நினைத்து உள்ளம் பூரித்துப் இருந்தனர்.
ஆஷா த்வனியை பார்த்தபடியே, "ம்ம்ம்... எனக்கு என்ன சொல்றதுனே தெரியலமா… இவங்க மூணு பேர் பத்தியும் நினைக்கும் போது, கடவுள் எவ்ளோ பெரிய சாடிஸ்ட்னு தான் நினைக்க தோணுது." என்று இழுத்து மூச்சு விட்டவள்,
"இதெல்லாம் உங்களுக்கு எப்டிம்மா தெரியும்" என்று சௌந்தர்யாவை கேட்க, அவள் தன் மடியில் உறங்கும் த்வனியை பார்த்து, "இவளால தான் தெரியும்" என்க,
அனைவரும் மீண்டும் குழம்பி நின்றனர்.
