நிஜம் 22
நிஜம் 22
அனைவரும் கவலையில் கலங்கி இருக்க, அந்த நேரம் அங்கு வந்த விக்ரமை பார்த்த ஆஷாவுக்குப் பக்கென்று இருந்தது.
'அய்யோ கடவுளே இந்த நேரத்துல இந்த மனுஷன் இங்க என்ன பண்றாரு? இப்ப மட்டும் த்வனி இவரைப் பாத்தா… அவ்ளோ தான், என்ன பண்ணுவானே தெரியதே' என்று உள்ளுக்குள் உதறி நிற்க,
"என்ன ஆஷா மேடம் வீட்டு வந்தவங்களை இப்படி வெளிய நிக்க வச்சு வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க? நான் உங்க புருஷனோட ஃப்ரண்ட், அதோட உங்க நாத்தனாருக்கு புருஷன் வேற, மரியாதைக்குக் கூட உள்ள வாங்கனு கூப்புட மாட்டிங்களா?" என்று கேட்டவனை ஒரு பார்வையும், யாரு வந்ததென்று கதவு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த த்வனியை ஒரு பார்வையும் மாறிமாறி பார்த்த ஆஷாவுக்குத் தலை சுற்றியது.
"ம்ம்ம் நீங்க உள்ளவான்னு சொல்லாம இருந்தாலும் நாங்க வருவோம்" என்ற விக்ரம், "வா வருண்" என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல, வருணை பார்த்த ஆஷா, 'என்னாச்சு?' என்று கண்களாலேயே கேட்க, வருண் இதழ் பிதுங்கி 'எனக்கு ஒன்னும் தெரியாது' என்று சைகை செய்தான்.
விக்ரம் உள்ளே வந்ததைப் பார்த்த த்வனி தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவள், "டேய் எதுக்குடா இங்க வந்த? உனக்கு எவ்ளோ தைரியம் இருந்திருந்தால் என் வீட்டுக்கு வந்திருப்பா?" என்று கத்திக்கொண்டே அவனை நோக்கி செல்ல, அவள் கால்கள் அவளுக்குத் துணை செய்யாமல் துவண்டு போக, அப்படியே மெத்தென்று சோஃபாவில் விழுந்தாள்.
சௌந்தர்யா த்வனி அருகில் சென்று அவளைத் தோளோடு சேர்த்து அனைத்துக் கொண்டு, "ப்ளீஸ் த்வனி நீ டென்ஷன் ஆகாதம்மா… டாக்டர் சொன்னாங்க இல்ல, நீ அமைதியா இரும்மா" என்று விட்டு வருணிடம் திரும்பி, "டேய் வருண் எதுக்குடா இவனை இங்க கூட்டி வந்த? மரியாதைய உடனே ரெண்டு பேரும் இங்க இருந்து கெளம்புங்க, இங்க இப்ப இருக்கப் பிரச்சனையே போதும். புதுசா இவன் எதையும் இழுத்துவிட்டு மறுபடியும் எங்க உயிரை வாங்க வேணாம்னு சொல்லு, முதல்ல இங்கிருந்து போங்க" என்று விக்ரமை பார்க்காது வருணை சத்தம் போட, விக்ரம் சௌந்தர்யாவை பார்த்து நக்கலாகச் சிரித்தான்.
"அவன் என்னை இங்க கூட்டி வர்ல, நான் ஒரு டைம்ல சந்தோஷமா இருந்ததைப் பார்த்த ஒரே ஆள் இவன் தான். அவன் இங்க இப்ப நடக்குறதையும் வேடிக்கை பாக்கணும்னு நான் தான் இவனை இழுத்துட்டு வந்தேன். அதுவும் புதுசா யார் உயிரையும் எடுக்க இல்ல, ஏற்கனவே போன உயிருக்குத் துக்கம் விசாரிக்க வந்தேன்" என்றவன் கண்ணிலும், வார்த்தையிலும் அத்தனை குரூரம்.
அவன் சொன்னதான் அர்த்தம் புரியாமல் அனைவரும் குழம்பி நிற்க, த்வனிக்கு மட்டும் அவன் தன் விஷயத்தில் ஏதோ பெரிய வேலையைச் செய்திருக்கிறான் என்று புரிந்து அவனையே கண்கள் சுருக்கி உற்றுப் பார்க்க,
விக்ரம் மெதுவாக த்வனி அருகில் வந்தான்.
"என்ன த்வனி மேடம்... நேந்து நீங்க ரொம்பச் சந்தோஷமா இருந்தீங்கலாம். உங்க முகம் அப்படியே ஜொலிச்சிதுன்னு உங்க மாமியார் அப்படியே பூரிச்சு போய் லட்சுமிகிட்ட சொல்லிட்டு இருந்தாங்க…" என்றவன் முகம் அடுத்த நிமிடம் இறுக்கமாக மாற,
"அதைக் கேக்கும் போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமாடி? வாவ்… அந்த நிமிஷம் அப்படியே உன்ன கொண்டு போய் ஆசிட் தொட்டியில முழுசா முக்கணும் போல இருந்துச்சு, நீ அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வெந்து, துடிதுடிச்சு சாகுறதை பாக்கணும்னு அவ்ளோ ஆசைய இருந்துச்சு… ஆனா, அது என்னால முடியாது. அது ஏன்னு உனக்கும் தெரியும். உன்னை எதுவும் செஞ்ச என்னோட லயா, இந்தத் தேவ்வோட லயாவள தங்கிக்க முடியாது… அவளுக்கு நீன்னா அவ்ளோ உயிரு, அந்த ஒரே காரணத்துக்காகத் தான் இன்னும் உன்னை உயிரோட சுத்த விட்டிருக்கேன். நீ உயிரோட மட்டும் தான் இருக்கலாமே தவிர, உயிர்ப்போட இருக்கக்கூடாது. அதுக்கு ஒரு நாளுக்கு இந்த விக்ரம் தேவ் விடமாட்டான். அதுக்குத் தான் உன்னைக் கல்யாணம் பண்ணி என் வீட்ல, என் கண் பார்வையில் உன்னை வச்சேன். அதுக்காகத் தான் இப்பவும்" என்று நிறுத்தியவனை த்வனி ஒரு மிரட்சியோடு லேசாகப் பயம் கலந்த பார்வை பார்த்திருக்க, விக்ரம் அவள் கண்களில் முதல் முதலில் பயத்தைப் பார்த்து திருப்தி அடைந்தான்.
"என்ன த்வனி மேடம் நான் என்ன செய்யப் போறேன்னு யோசிக்கிற போல? ப்ச்... அதுக்கு எந்த அவசியமும் இல்ல, பிகாஸ் நான் செய்யவேண்டியதை ஏற்கனவே சிறப்ப செஞ்சு முடிச்சிட்டேன். அதுவும் உன் ஆச மாமியார் கையாலயே அதைச் செஞ்சிட்டேன்." என்றவன் சட்டெனக் குனிந்து த்வனி தாடையை இறுக்கி பிடித்து, "அதெப்படிடி… என்னைக் காலம் பூரா அழவச்சிட்டு, நீ மட்டும் சந்தோஷமா, நிம்மதியா இருப்ப, அதைப் பாத்துட்டு நான் சும்மா இருக்கணும் இல்ல..." என்ற கண்கள் வன்மத்தில் சிவக்க, த்வனி உட்பட அனைவருக்கு அடி வயிற்றில் பயப்பந்து கண்டபடி உருண்டது.
"என்ன இன்னும் நான் என்ன செஞ்சேன்னு உனக்குப் புரியலயா?... கொன்னுட்டேன்டி… கொன்னுட்டேன். உன்னோட சந்தோஷத்துக்காக ரீசன்… உன்னோட உயிருக்கு உயிரான உன்னோட உயிர். உனக்குள்ள இருந்த உயிர்... அதைக் கொன்னுட்டேன்" என்று சத்தமாகச் சிரிக்க, த்வனி உட்பட அனைவருக்கும் உயிரே ஒரு நிமிடம் நின்று விட்டது.
"டேய் விக்ரம் என்னடா சொல்ற? என்ன உலறிட்டு இருக்க நீ? என்ன கர்மத்தை செஞ்சு தெலச்ச சொல்லுடா? என்ன செஞ்ச?" என்று சௌந்தர்யா அவனைச் சட்டை கலரை பிடித்து உலுக்க, விக்ரம் அவரைப் பார்த்து அசட்டையாகச் சிரித்து, "நான் என்ன செஞ்சேன். எல்லாம் நீங்க தான் செஞ்சிங்க. நான் வெறும் அபாஷன் டேப்லெட்சை பாயசத்துல கலந்ததேன், அவ்ளோதான். நீங்க தான் அதை இவ்ளோ தூரம் உங்க கையல எடுத்துட்டு வந்து உங்க மருமகளும் தந்திருக்கீங்க" என்றதும் சௌந்தர்யாவுக்கு உயிரே போய்விட்டது.
விக்ரம் சொன்னதைக் கேட்ட ஒரு நிமிடம் உயிர உறைந்து கிடந்த த்வனி பிறகு, அவனின் அரக்க செயலில், கோவத்தில் எல்லைக்கே சென்றவள், அங்கிருந்த பழங்கள் வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு விக்ரம் மீது பாய்ந்தாள்.
நடப்பதின் விபரிதத்தை உணர்ந்த வருண் சட்டென வந்து த்வனியின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
ஆஷாவும் சௌந்தர்யாவும் சிலையாக நிற்க, ஷாலினி, ஆருஷி இருவரும் த்வனியை பின்னால் இருந்து பிடித்துக்கொள்ள, "ஏய் என்ன விடுங்கடி… எனக்குன்னு இந்த உலகத்தில் இருக்கக் கடைசிச் சந்தோஷத்தை, கடைசி நம்பிக்கையைக் கொல்ல பாத்த இவனை நான் உயிரோட விடமாட்டேன். லயா ஒருத்திக்காகத் தான் இவ்ளோ நாள் இவன் செஞ்ச எல்லாத்தையும் நான் பொறுத்துட்டு இருந்தேன். ஆனா, இன்னைக்கு இவன் அவனோட பார்டரை கர்ஸ் பண்ணிட்டான். நல்லவேள அந்தப் பாயசத்தை நான் குடிக்கல, தப்பித்தவறி நான் அதைச் சாப்டிருந்த" என்றவளுக்கு அதை நினைக்கவே உடல் நடுங்க, "என்னை விடு ஷாலு... இதுக்குமேல இவனை உயிரோட விட்ட, மறுபடியும் என் குழந்தைய கொல்ல ட்ரை பண்ணுவான். இவனை விடமாட்டேன்" என்று மீண்டும் விக்ரம் மீது பாய, அவள் சொன்னது கேட்ட விக்ரமிற்கு இன்னும் அவள் கரு கலையவில் என்பது புரிய…
"ஒஒஒ… இன்னு அது சாகலிய… பரவாயில்ல இப்ப... நானே என் கையல அதைக் கொன்னுடுறேன்" என்று அவன் முன்னனேற, அவன் கன்னத்தில் இடியென இறங்கியது சௌந்தர்யாவின் கை.
"வெறி புடிச்ச நாயே… என்ன காரியம்டா செய்யத் துணிஞ்ச… நீ மனுஷனே இல்ல, மிருகம்… வெறி புடிச்ச மிருகம். உன்னை மாதிரி ஒருத்தனை போய் அந்த அறிவு கெட்டவ லவ் பண்ணாளே அவளை முதல்ல செருப்பால அடிக்கணும். பாவி மக அதோட விட்டாளா அவ, உனக்காக உன்னை மாதிரி ஒரு பைத்தியக்காரனுக்காக, இவகிட்ட சத்தியம் வேற வாங்கிட்டு போனாளே அவளைச் சொல்லணும். அவ வாங்கின சத்தியம் தான் நீ இப்ப உயிரோட இருக்கவும் காரணம், உன்னை நெனச்சிட்டே உயிரை விட்ட அந்த அப்பாவி உயிர் மறுபடியும் இந்தப் பூமியில் வரவிடாமல் நீ கொல்ல துணியவும் காரணம்." என்று விக்ரம் கன்னத்தில் மாறிமாறி அறைய, த்வனியை தவிர அங்கிருந்த அனைவரும் சௌந்தர்யா சொல்வதின் அர்த்தம் புரியாமல் குழம்பி நின்றனர்.
விக்ரம் சௌந்தர்யாவை இமைக்காமல் பார்க்க, சௌந்தர்யா அவன் தலை முடியை பிடித்துத் தரதரவென த்வனி அருகில் இழுத்து வந்து த்வனியின் தாய்மை கொண்ட அவள் வயிற்றை நோக்கி விரல் நீட்டி, "இது சாதாரணக் குழந்தை இல்ல… நீயும் இவளும் யாருக்க இப்படி ஒருத்தரை ஒருத்தர் வெறுத்துட்டு இருக்கீங்களே, யாரை பைத்தியம் மாதிரி நேசிட்டு இருக்கீங்களே, யார் மேல நீங்க உயிரை வச்சிருக்கீங்களே… அந்த லயா… உன்னோட ரென்யா. உன்னோட... உங்களோட லாரண்யா தான் உங்களுக்குப் புள்ளைய பொறக்கப்போற..." என்று சொல்ல விக்ரம் அவர் சொல்வதின் அர்த்தம் புரிய, அவள் கையைத் தட்டி விட்டவன்,
"இல்ல... இல்ல… நீ… நீங்க பொய் சொல்றீங்க. என் ரென்யா… ரென்யா" என்றவன் தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்து விட, வருண் சௌந்தர்யா அருகில் வந்தான்.
தொண்டை அடைக்க, வார்த்தை வாயில் சிக்கிக்கொள்ள,
"ம்மா…"
"ம்மா நீங்க சொல்றது… அப்ப ல… லயா... இப்ப, லயா உயிரோட" என்றவனுக்கு அதற்கு மேல் எதுவும் கேட்க தைரியம் இல்லாமல் போனது.
சௌந்தர்யா வருணை பார்த்து இடவலமாகத் தலையாட்டி, " அவ இல்ல, லயா இல்ல… அவ போய்ட்டா, இந்த உலகத்தை விட்டு ஒரேயடியா போய்ட்டா" என்றவர் கண்களில் கண்ணீர் கூட வற்றிவிட, த்வனி அருகில் அமர்ந்து விட, த்வனி அவர் மடியில் முகம் புதைத்து, முழுவதும் உடைந்து கதறி அழ ஆரம்பித்தாள்.
