காதல் 9
காதல் 9
நாட்கள் அதன் போக்கில் நகர, மிருதுளா மேல் ஷரவனின் காதல் நாளுக்கு நாள் மண்ணை துளைத்து வெளிவரும் மரம்போல் வேர்விட்டு விருட்சமென பெரிதாக வளர்ந்து கொண்டிருந்தது.
மிருதுளாவும் இப்போதெல்லாம் ஷரவனை பார்த்து முன்போல் பயப்படுவது இல்லை, அவனால் தனக்கு எதுவும் ஆகாது என்ற நம்பிக்கை இருந்தாலும், அவனிடம் இருந்து சற்று ஒதுங்கி இருக்க நினைக்க, அதற்கு ஷரவன் விடவில்லை.
எப்போதும் அவளை தான் கண் பார்வையிலேயே வைத்திருந்தான். மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தும். மித்துவை விட்டு போக மனமின்றி, அதே காலேஜில் தான் மேல் படிப்பை தொடர்ந்தான். அவனின் காதலையும், அன்பையும் மிருதுளா மேல் அடைமழையாக பொழிந்தான். அவளுக்கு என் தேவையென்று அவள் அறியும் முன் ஷரவன் அதை செய்து முடித்திருந்தான். அதுவும் அவளே அறியாமல், ஒரு தாயைப்போல் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான் ஷரவன்.
பிறந்ததிலிருந்து அன்பு, பாசமென்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த மிருதுளாவுக்கு ஷரவனின் உண்மையான அன்பும், காதலும் கடைசி வரை புரியாமல் போனது தான் விதியோ… அவன் காதலுக்கு தான் சம்மதிக்க வேண்டும் என்று மட்டும் தான் அவன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறான் என்று நினைத்தவள், அவனை விட்டு விலகியே இருக்க, ஷரவனுக்கும் வேறு வழி தெரியாமல் பழையபடி மிருதுளாவை கட்டாயப்படுத்தி, மிரட்டி தன் அருகிலேயே வைத்துக் கொண்டான்.
"மிருது பிளைட் லோன்டாகிடுச்சு எந்திரி" என்ற தனுவின் குரலில் நிகழ்காலத்திற்கு வந்த மிருதுளா.
தன் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர் இருவரும்.
சென்னையில் ஒரு வேலை இருந்தால் ஒரு நாள் இங்கேயே தாங்கி வேலையை முடித்துவிட்டு போகலாமென்று, பக்கத்தில் இருந்த ஹோட்டலில் ரூம் எடுத்து தாங்கினார் இருவரும்.
ரூமிற்கு வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டு குளித்து தோழிகள் இருவரும் வெளியே சென்றவர்கள், முடிக்க வேண்டிய வேலையை முடித்துவிட்டு வரும் வழியில் மிருதுளா கால் தவறி கீழே விழுந்து அவள் தலையிலும், காலிலும் அடிபட்டு விட, பதறி தனு, மிருதுளாவை பக்கத்தில் இருந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றாள்.
ஹாஸ்பிடலில் டாக்டர் அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்ற தனுவுக்கு அங்கிருந்த டாக்டரை பார்த்து ஆனந்த அதிர்ச்சி என்றால், மிருதுள்வுக்கு மனதில் நிலநடுக்கமே வந்து உடல் நடுங்கியது.
அவளின் கடந்தகாலம் ஒரு நிமிடம் அவள் கண் முன் வந்து நின்றது. அவளையும் அறியாமல் அவள் உதடுகள் லட்சுமி ஆன்ட்டி என்று முனுமுனுக்க, அந்த டாக்டரும் மிருதுளாவை தான் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
மிருதுளாவும், தனுவும் பத்தாவது படிக்கும் போது அவர்கள் பள்ளியில் நடந்த மெடிக்கல் கேம்பில் தான் டாக்டர் லட்சுமி இவர்களுக்கு அறிமுகமானார்.
துறுதுறுவென இருந்த மிருதுவையும், தனுவையும் லட்சுமிக்கு பிடித்துவிட்டது. மிருதுளாவின் குடும்பத்தை பற்றி தெரிந்த பிறகு மிருதுளா மீது லட்சுமிக்கு தனி பாசம் வந்துவிட, வயது வித்தியாசத்தையும் தாண்டி அவர்களுக்குள் ஒரு ஆழமான நட்பு உருவானது. லட்சுமி, மிருதுளாவுக்கு ஒரு தாயாகவே இருந்தார். கணவர் இறந்த பிறகு தன் பிள்ளைகளை, பிள்ளை இல்லாத தன் தங்கையின் பொறுப்பில் விட்டு விட்டு, முழுவதும் தன்னை மருத்துவத்துறையில் அமர்த்திக்கொண்டார் லட்சுமி.
மிருதுளா தான் காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருந்த லட்சுமியை பார்த்த பார்வையில் அத்தனை ஏக்கம், எதிர்பார்ப்பு, வேதனை, வலி என்று அனைத்து உணர்வுகளும் கலந்திருந்தது.
லட்சுமியும் அதை கவனித்துக் கொண்டு தான் இருந்தார். மருந்தை போட்டு விட்டவர், "உடம்பை பாத்துக்கோ மிருதுளா" என்று விட்டு அறையை விட்டு வெளியே செல்ல, மிருதுளா லட்சுமியின் கையை பிடித்தாள்.
"என்கிட்ட சொல்ல வேறொன்னும் இல்லைய ஆன்ட்டி?' என்று ஏக்கத்தோடும், வலி கலந்தும் வந்த மிருதுளாவின் குரலில் லட்சுமியும் கண் கலங்கி விட, திரும்பி அவளை பார்த்தார்.
"சாரி மிருது உன் வாழ்க்கையின் எல்லா முடிவும் நீ எடுத்த முடிவு தான். அதோட லாப நஷ்டத்தையும், விளைவுகளையும் நீதான் அனுபவிக்கணும். இப்ப நீ என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறேன்னு எனக்கு தெரியும். ஆனா, அத நான் சொல்ல மாட்டேன், சொல்லவும் முடியாது, சொல்லக்கூடாது, அது உனக்கே தெரியும். அப்ப நான் சொன்னதை நீ கேக்கல, இப்ப நீ சொல்றத என்னால் கேக்க முடியாது. ஐம் சாரி மா" என்றவர் அங்கிருந்து சென்றுவிட, மிருது மனதில் சொல்ல முடியாத வேதனை.
இவர்கள் பேசிய அனைத்தையும் வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த தனுவுக்கு மனதில் பெரும் குழப்பம். இந்த குழப்பத்திற்கு லட்சுமியிடம் மட்டுமே விடை கிடைக்கும் என்று எண்ணி லட்சுமியின் அறைக்கு சென்றாள். அங்கு அவளுக்காக காத்திருக்கும் விதியின் விளையாட்டை அறியாமல்...
லட்சுமியின் அறையில் இருந்து வெளியே வந்த தனுவுக்கு மிருதுளாவின் கடந்த காலம் பற்றி தெரிந்தது நிலத்தில் இடி விழுந்த உணர்வு என்றால், அடுத்து லட்சுமி யாரென்று தெரிந்த பிறகு நிலத்தில் விழுந்த இடி அவள் தலையில் விழுந்த உணர்வு. அந்த அதிர்ச்சியிலேயே அப்படியே மிருது இருந்த அறைக்கு வந்த தனு, கண்மூடி அமைதியாக படுத்திருந்த மிருதுளாவை உணர்ச்சி துடைத்த பார்வை பார்த்தாள்.
ஏனோ இன்று மிருது அவளுக்கு புதிதாக தெரிந்தாள். இந்த சின்ன வயசுல அவளுக்கு தான் எவ்வளவு கஷ்டம். இத்தனை வருஷம் தான் பார்த்து வந்த மிருதுளாவுக்கும் இன்று தான் பார்க்கும் மிருதுளாவுக்கும் நிறைய மாற்றம் இருந்தது. உயிர் தோழியாய், எந்தவித ஒளிமறைவும் இல்லாமல் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் தன் மிருது, அவள் வாழ்க்கையில் நடந்த இவ்வளவு பெரிய விஷயத்தை இத்தனை காலமும் தன்னிடம் மறைத்திருக்கிறாள் என்று ஒரு பக்கம் கோபம் வந்தாலும், அடுத்த நிமிடம், 'நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா, மிருதுளாகிட்ட நீ எதையும் மறைத்தது இல்லையா' என்று தன் மனசாட்சி தன்னிடம் கேட்ட கேள்வியில் வாயை மூடிக்கொண்டாள்.
மிருதுளாவின் கடந்தகாலம் முழுவதும் தன் பெற்றோருக்கு தெரியும் ஆனால், இதுவரை அவர்கள் தன்னிடம் இது பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்பது ஒருபுறம் அவளை குழப்பிவிட, ஏன் இவ்வளவு பெரிய விஷயத்தை தன்னிடம் சொல்லாமல் இருந்தனர். ஒருவேளை இதெல்லாம் முன்பே தெரிந்திருந்தால் மிருதுளாவின் வாழ்க்கையை அப்பவே சரி பண்ணி இருக்கலாமே என்று ஆதங்கம் அவளுக்கு.
மிருதுளா எடுத்த முடிவில் தனுவிற்கு வருத்தம் தான். என்ன சொல்லியும் அவள் செயலை நியாப்படுத்த முடியாத தான். ஆனால், அவளை இவ்வளவு பெரிய காரியத்தை துணிந்து செய்யும் அளவு கஷ்டப்படுத்திய மிருதுளாவின் அம்மா கவிதாவையும், அஜய், அனிதாவையும் நினைத்த தனுவிற்கு கொலைவெறி வந்தது.
இப்ப மட்டும் மிருதுளாவின் அம்மா கவிதா தனு கண்ணுக்கு முன்னாடி இருந்து இருந்த கவிதா சிக்கன் 65 தான். லட்சுமி சொன்னா அனைத்தையும் நினைத்து கொண்டிருந்த தனு, மிருதுளாவை திரும்பி பார்க்க அவள் கண் விழித்திருந்தாள்.
மிருதுளா அருகில் ஓடிய தனு, "இப்ப எப்படிடா இருக்கு? இப்ப ஓகே வா?" என்று அவள் தலையை தடவியபடி கேட்க, தோழியின் அன்பில் மகிழ்ந்தாள் மிருதுளா.
"இல்லடா இப்ப வலி இல்ல, ஐ அம் ஓகே நவ்" என்றவள் தயங்கி தயங்கி, "லட்சுமி ஆன்ட்டி" என்று இழுக்க, அவள் என்ன கேட்க வருகிறாள் என்று புரிந்த தனு,
"ஆன்ட்டி கிளம்பிட்டாங்க மிருது. இங்க ஒரு கான்பரன்ஸ்காக தான் வந்தாங்களாம். இங்க ஒரு டாக்டரை மீட் பண்ண வந்திருக்காங்க. நாம வந்தபோ வேற டாக்டர் யாரும் இங்க இல்ல போல, அதான் அவங்க உன்ன அட்டன் பண்ணாங்க. அவங்களுக்கு பிளைட்டுக்கு டைம் ஆச்சுன்னு உடனே கிளம்பிட்டாங்க" என்று சொல்ல, ஒரு பக்கம் லட்சுமி ஆன்ட்டி எதுவும் சொல்லாமல் சென்றது கஷ்டமாக இருந்தாலும், தன்னை பற்றி எதையும் தனுவிடம் சொல்லவில்லை என்ற நினைவு மிருதுளாவுக்கு நிம்மதியை தந்தது. ஆனால், லட்சுமி அனைத்து உண்மைகளையும் தனுவிடம் சொன்னது மிருதுளாவுக்கு தெரியவில்லை பாவம்)
தனுவுக்கு மிருதுளாவின் மனம் புரிய, அவள் மன நிம்மதிக்காக லட்சுமி அனைத்து உண்மைகளையும் அவளிடம் சொன்ன விஷயத்தை அவளிடம் மறைத்து விட்டாள்.
'இனி உன்னோட வாழ்க்கையை சரி பண்றது தான்டி என் முதல் வேலை' என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள் தன்யா.
மிருதுளாவின் காலில் போட்டிருந்த கட்டை மெதுவாக தடவி பார்த்தவள், "ஏய் மிருது உன் கால்ல கட்டை பாக்கும்போது, நம்ம காலேஜ் டைமில், இதே மாதிரி உன்னோட கால்ல அடிபட்டிருந்தப்பா ஷரவன் அண்ணா பண்ண கூத்து உனக்கு ஞாபகம் இருக்கா" என்ற தனுவின் வார்த்தைகளில் உண்மையில் மிருது அதிர்ந்து விட்டாள்.
தனு சொன்னது சரியாக தான் தன் காதில் விழுந்ததா என்று சந்தேகம் கூட வந்தது.
ஷரவனும், மிருதுளாவும் பிரிந்த இத்தனை நாளில் தனு தவறி கூட ஷரவன் பெயரை மிருதுளா முன்பு சொன்னதில்லை. இன்று அவள் ஷரவனை பற்றி பேசியது மட்டுமல்லாமல், ஷரவனை மறுபடியும் அண்ணா என்றழைப்பது அவளுக்கு சுத்தமாக விளங்கவில்லை.
தன்னையே வெறித்து பார்த்து கொண்டிருந்த மிருதுளாவின் பார்வையே அவள் மன ஓட்டத்தை சொல்ல, அதை கண்டும் காணாமல் தனு பேசிக்கொண்டே இருந்தாள்.
மிருதுவுக்கும் அந்த நாள் நினைவு மனதில் வந்தது போனது. தன் காலில் ஒரு சின்ன அடிபட்டதற்கு அன்று ஷரவன் பதறியது, துடியாய் துடித்தது அவள் கண் முன் வர, விழி மூடி அந்த நாட்களில் பக்கங்களை தன் நினைவடுக்கில் தேட தொடங்கினாள்.
அதேநேரம் தனுவும் அந்த நாட்களை தான் நினைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் நிலவனுக்குமான கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு முடிவுக்கு வந்து இருவரும் ஒரு அழகிய காதல் உறவில் இணைந்த காலம் அது.
அழகாக காதல், ஆழமான நட்பு என்று ஒரு பக்கம், மாணவர்களின் அடிதடி சண்டை, கலாட்டா ஒரு பக்கம் என்று காலேஜ் லைஃப் கலைகட்டியது.
ஷரவன் மிருதுளாவின் நிழல்போல், "மித்து மித்து" என்று சுற்றிக் கொண்டிருந்தாலும், அவனுடைய காதல் மிருதுளா படிப்பையும், தன் படிப்பையும் எந்த வகையிலும் பதிக்காமல் பார்த்துக் கொண்டான்.
மிருதுவும், தனுவும் ஹாஸ்டலில் இருந்ததை விட சிந்து வீட்டில் இருந்த நேரம் தான் அதிகம். முக்கியமாக எக்ஸாம் டைமில் முழு நேரமும் சிந்து வீடே கதி என்று இருப்பார். எப்போதும் எக்ஸாம் டைமில் ஷரவன் தான் சிந்துவிற்கு டீச்சர். இப்போது மித்துவும், தனுவும் அந்த லிஸ்டில் சேர்ந்து கொண்டனர்.
முதலில் ஷரவனிடம் படிக்க மிருதுளா தயங்கினாள். எங்கே ஷரவன் தான் சேட்டையை இங்கேயும் தொடர்வானோ என்று பயந்தாள். ஆனால், மற்ற நேரங்களில் மித்துவை பார்க்கும் ஷரவனுக்கும், படிப்பு சொல்லி தரும் போது இருக்கும் ஷரவனுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. எப்போது மிருதுளாவை கொஞ்சி, சீண்டி, சேட்டை செய்யும் அவன், படிக்கும் சமயங்களில் அவனின் பார்வையில் கூட தவறு இருக்காது.
ஷரவன் படிப்பில் செம ஷார்ப். ஸ்கூல் இருந்து காலேஜ் வரை படிப்பு, ஸ்போர்ட்ஸ் என்று அனைத்திலும் ஷரவன் தான் பஸ்ட் என்று தெரிய மிருதுளாவுக்கு பெரிய ஷாக். அவனின் இந்த முகம் அவளுக்கு மிகவும் புதிது.
தனு வந்ததும் கெமிக்கல் ரியாக்ஷன் நிலவனும் நல்ல பிள்ளை போல் இவர்களுடன் படிக்க வந்துவிட, (டேய் நீ படிக்க தான் அங்க வந்த... இத நாங்க நம்பணும். ம்ம்ம்ம் எல்லாம் காலக் கொடுமைடா சாமி)
விஷ்வாவும், பிரேம், பரத்தும் கூட இந்த குரூப் ஸ்டடியில் சேர்ந்து கொண்டனர். படிக்கும் நேரம் போக மத்த நேரத்தில் இவர்கள் செய்யும் சேட்டையில் வீடே அதகளப்படும். நிலவனின் அம்மாவும் இதை பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை.
ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அன்பு மட்டுமே ஆதாரம் என்று உருவான இவர்கள் உறவில் அவருக்கு பெருமை தான். இளையோர்களும் தங்கள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமல், அவர்களின் எல்லை புரிந்து நடந்து கொண்டனர்.
நாட்கள் வேகமாக நகர அந்த காலேஜின் கல்சுரல் நெருங்கி வந்தது. இதில் பல்வேறு கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்வதுண்டு. ஷரவன் வருஷ வருஷம் டான்ஸ் காம்பெடிஷனில் கலந்து கொள்வது வழக்கம்.
"டேய் மச்சி நம்ம காலேஜ் கல்சுரல் வருதுடா, வழக்கம்போல இந்த வருஷமும் நீ சோலோ டான்ஸ் பண்ணப்போறா தானே?' என்று நிலவன் கேட்க, அவனை மூக்கு முட்ட முறைத்தான் ஷரவன்.
"போடா டேய், போய் ஆசிட் ஊத்தி வாய கழுவுடா. நான் ஏன்டா தனியா ஆடணும். கண்ணுக்கு அழகா, கைக்கு அடக்கமா, கொழு கொழுன்னு என் மித்து பேபி இருக்கும் போது தனியா ஆட நான் என்ன லூசா? இந்த வருஷம் நானும் என் மித்துகுட்டியும் சேர்ந்து ஆட போறோம். நாங்க ஆட போற ஆட்டத்தை பாத்து அத்தனை பேரும் தெறிச்சு ஓடப்போறாங்க பாரு என்று ஷரவன் கெத்தாக சொல்ல,
"ஏன்டா கூட்டத்துல பாம்பு எதும் விடப் போறியா என்ன? எல்லாரும் தெறிச்சு ஓட" என்று சொல்லி முடிக்கும் முன் ஷரவன் விட்ட உதையில் கீழே விழுந்து கிடந்தான் விஷ்வா.
"அய்யோ… அம்மா…' என்று இடுப்பை பிடித்துக்கொண்டே, "ஏன்டா எரும என்ன எத்துனா? என்று கடுப்பாக கேட்க,
ஷரவன் அவனை நக்கலாக பார்த்தவன், "ம்ம்ம்ம் வேண்டுதல், ஏன்டா பரதேசி நாயே, நா எவ்ளோ பீலிங்கா மித்து கூட ஆட போறேனு சந்தோஷமா சொல்லிட்டு இருக்கேன். நீ என்னென்ன கலாய்ச்சிட்டா இருக்க' என்று இன்னொரு மிதி மிதித்தான்.
"டேய் டேய் போதும்டா. அவனை விடு. நீ மிதிச்ச மிதியில அவன் இப்பவே பேரழகன் சூர்யா மாதிரி வளஞ்சிட்டான். மறுபடியும் மிதிச்ச அவ்ளோ தான். அப்புறம் சிந்து தான் இவனை கட்டிக்கிட்டு கஷ்டப்படனும்" என்று விஷ்வாவுக்கு கை கொடுத்து தூக்கி விட, "தேங்க் யூ டா மச்சான். மலையேற மச்சான் தயவு வேணும்னு சொல்லுவாங்க, அத நீ நிருபிச்சிட்ட, வாழ்க என் மச்சான்" என்று சொல்ல, அவன் தலையில் நங்கென கொட்டினான் நிலவன்.
"டேய் பேச்ச குறைடா முதல்ல. வாயா இது வாய்க்கால் அளவு நீளுது. வாய் மட்டும் இல்ல உன்ன எல்லாம் நாய் கவ்விட்டு போய்டும். மூடிட்டு போடா. மறுபடி அவன்ட்ட மிதி வாங்காத" என்றவன், ஷரவனிடம் திரும்பி,
"ஏன்டா நீ பாட்டுக்கு அமுல்பேபி கூட ஆட போறேன்னு சொல்லிட்டு இருக்க, அதுக்கு அவ ஒத்துக்கணுமில்ல, முதல்ல அவளுக்கு ஆட தெரியுமான்னு உனக்கு தெரியுமா"
"அதெல்லாம் அவளுக்கு நல்லாவே ஆடத் தெரியும். அவ ஸ்கூல்ல எந்த பங்ஷன்னாலும் இவளும் தனுவும் தான் ஆடுவாங்க! மித்துக்கு சூப்பரா ஆட வரும்"
" அது உனக்கு எப்படிடா தெரியும்? அமுல்பேபி சொல்லுச்சா"
"ம்க்கும் அவ சொல்லிட்டாலும்… அப்படியே மேகம் பொத்துக்கிட்டு ஊத்தி முப்போகம் வெளஞ்சிடும். அடா போடா, அவ ஒன்னும் சொல்லல தனு தான் சொல்லுச்சு"
"ஓஓஓ, சரிடா மிருதுக்கு ஆட தெரியும் ஓகே. ஆனா, அது உன் கூட ஆட ஒத்துக்கணுமே! அது தான் உன்ன பார்த்தாலே தெறிச்சு ஓடுமே, அப்புறம் எப்படி?"
"மிளகாத்தூள் ஆடாது, ஆட மாட்ட அது நடக்காது, நடக்க முடியாது, நடக்க வாய்ப்பே இல்ல" என்று நம்பியார் போல் கையை தேய்த்தபடி பேசிய விஷ்வா, ஷரவன் திரும்பி மிதிக்கும் முன் மின்னலாய் அங்கிருந்து ஓடி மறைந்தான்."
"பயபுள்ளைக்கு சேட்டையை பாத்தியாடா, கையில மாட்டுவ இல்ல, அப்ப கவனிச்சுக்கிறேன்" என்று ஷரவன் முறுக்கி இருந்த தன் சட்டை கையை இறக்கி விட்டான்.
"அவன் சொன்னதுல என்னடா தப்பிருக்கு? மிருது கண்டிப்பா உன் கூட ஆட ஒத்துக்க மாட்டா? அது உனக்கும் தெரியும் தானா"
"ம்ம்ம்ம் அதுவும் உண்மைதான். ஒழுங்கா சொன்னா அவ கேக்க மாட்டா, வழக்கம் போல உருட்டி மிரட்டி தான் அவளா ஒத்துக்க வைக்கனும்."
" ஏன்டா டேய்… எப்ப பாரு அந்த புள்ளைய மிரட்டிட்டு, கொஞ்சம் அன்பா தான் மூவ் பண்ணிப் பாரேன்"
"ஆமா அன்பா மூவ் பண்ணிட்டாலும்" என்று பெரு மூச்சு விட்ட ஷரவன், "நான் என்னதான் அன்பா நடந்துக்கிட்டாலும் அவளுக்கு அது புரியாதுடா"
"என்னடா? ஏன் அப்படி சொல்ற?" என்று கேட்ட நிலவனை வலியோடு பார்த்தான் ஷரவன்.
"ஆமாடா அது தான் உண்மை. உனக்கு மித்து பத்தி முழுசா தெரியாது, அவ ரொம்ப பாவம். அன்பு, பாசம்னா என்னனு தெரியாமயே வளர்ந்தவடா என் மித்து" என்று மிருதுளா பற்றி அவள் குடும்பத்தை பற்றி தான் தெரிந்து கொண்ட அனைத்தையும் நிலவனிடம் சொல்லிய ஷரவன், "பாவம்டா அவ. பெத்தவங்க, கூட பொறந்த வாங்கன்னு எல்லாரும் இருந்தும், அனாதை மாதிரி வளர்ந்து இருக்கா, அவளுக்கு இருக்க ஒரே ஆறுதல் தனுவும், அவ அம்மா, அப்பாவும் தான். பெத்தவங்க அன்பு இல்லாம வளர்ந்தாலயோ என்னமோ. அவளுக்கு அன்பு பாசம்னா என்னன்னே தெரியல, நான் அவகிட்ட காட்ற அன்பை கூட அவளால உணர முடியல, அவளுக்கு நான் காட்டும் பாசத்துக்கு அவ மேல நான் வச்சிருக்க காதல் மட்டும் தான் காரணம்னு நெனச்சிட்டீருக்கா" என்று சொல்லும் போதே ஷரவனின் குரல் கம்மி விட்டது.
அவனை தோளோடு சேர்த்து நிலவன் அணைத்து ஆறுதல் படுத்த, "பாவம்டா அவ, உண்மையான அன்பை கூட புரிஞ்சிக்க முடியாத அளவு அவ மனசு வறண்டு போயிருக்குடா" என்றவன் கண்கள் கலங்கிவிட நிலவனுக்கும் கூட மனம் கணத்துவிட்டது.
இவ்வளவு ஏன்டா... உன் பார்த்தவுடன் அவ அண்ணா அண்ணான்னு உன்கிட்ட ஒட்டிக்கிட்டதுக்கு காரணம் கூட, அவ தம்பி, தங்கச்சி கிட்ட அவ எதிர்பார்த்த, "உனக்கு நான் இருக்கேன்" என்ற உணர்வை உன்கிட்ட பார்த்தால்தான். அவ உன்ன பார்த்த முதல் நாளே நீ அவளுக்கு அது கொடுத்திருக்க" என்ற ஷரவனின் வார்த்தை நிலவனை குழப்ப, ஷரவன் மென்மையாக சிரித்தவன்,
" நீ அவளை முதல்ல பார்த்த அன்னைக்கு அவ லேசா முகம் வடினாதும், அதை தாங்க முடியாமல் அவளை சமாதானப்படுத்தி அனுப்பி விட்டியே... அது தான்டா. அந்த அக்கறை தான் அவ உன்கிட்ட இவ்வளவு பாசமா இருக்க காரணம். அவ மனசு அன்புக்கு ஏங்குது. ஆனா, என்னனு தெரியல என்னோட அன்பையும், காதலையும் மட்டும் புரிஞ்சிக்க விடாமல் ஏதோ ஒன்னு அவளை தடுக்குது, அது ஏன்னு எனக்கு தெரியல" என்று தன்னிலை நினைத்து வருந்தினான்.
"விடுடா சீக்கிரம் எல்லாம் சரியாகிடும், மிருது சீக்கிரம் உன்னை புரிஞ்சுக்குவ" என்ற நிலவன் வார்த்தை பலிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஷரவன் செல்ல நிலவனும் அங்கிருந்து கிளம்பினான்.
மறுநாள் மிருதுளாவிடம் டான்ஸ் பத்தி பேச ஷரவனும், நிலவனும் மிருது கிளாஸ் ரூமுக்கு வர, அங்கே மிருது, சிந்து, தனு மற்றும் இன்னும் இரு ப்ரண்ட்ஸ்யுடன் சேர்த்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
"ஷரவன்" என்ற தன் பேர் அங்கு அடிபடவும் கிளாஸ் ரூம் வாசலிலேயே நின்று அவர்கள் பேசுவதை கவனித்தனர் ஷரவனும், நிலவனும்.
சிந்து அவள் ஸ்கூல் படிக்கும் போது தன்னிடம் வம்பு பண்ண ஒரு பையனை நடுரோட்டில் புரட்டி எடுத்ததை பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க, தனுவும் தன் பங்கிற்கு அவள் ஸ்கூல் லைஃப் பத்தி சொன்னவள், "ஒரு முறை எங்க ப்ரண்ட்டு ஒருத்திய பக்கத்து கிளாஸ் பையன் கிண்டல் பண்ணான். நானும் மிருதுவும் அவன் க்ளாஸ்சுக்கே போய் அவனை உண்டு இல்லன்னு பண்ணிட்டு வந்துட்டோம். அன்னைக்கு இருந்து நாங்க ரெண்டு பேர் இருக்கும் திசை பக்கம் கூட ஒரு பையா வரமாட்டான். எங்களை பாத்தாலே தெறிச்சு ஒடுவங்க" என்று கெத்தாக சொல்ல,
இங்கு நிலவன், "இங்க பாருடா! இந்த அப்ராணி புள்ளை கூட ஒரு காலத்தில் டான்ஆஆஆ... இருந்திருக்கும் போல, ம்ம்ம்ம்... இந்த புள்ளைகுள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்டா" ஆச்சரியப்படுவது போல் நடித்தவன், "ஷரவன் எதுக்கும் நீ கொஞ்சம் உஷாரா இரு, ஏன்னா நீ காதலிக்கிறது ஒரு லேடி டானை" என்று ஷரவனை ஓட்ட,
"ஏன்டா நீ வேற... அவளை போய் டான் அது இதுன்னிட்டு, அவ நம்ம வடிவேலு சொல்வாரே நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான்னு. என் மித்து அந்த மாதிரிடா. இதுக்கு நீ தனுவை சொன்னாலும் தகும். சரியான சண்டகோழி. அவளுக்கு வாய் மட்டும் காது வரை இருக்கு. அவளுக்கு வரப்போறவன நெனச்ச தான் நெஞ்சு பதறுது பாவம் அந்த அப்பாவி ஜீவன்" என்று சொல்ல, நிலவன் பார்வை தனு மேல் விழ, அவன் மனசாட்சியும் அதையே தான் சொன்னது, 'பாவம் இந்த நிலவன், அப்பாவி ஜீவன்'
நிலவா உன் எதிர்காலம் உஉஊஊஊ…
தனு சொன்னதை கேட்ட சிந்து, "யாரு இவ... இவ... இவளுக்கு… பயந்து பசங்க ஓடுனங்க…" என்று வாய்விட்டு சிரித்தாள்.
"ஏன்டி சும்மா காமெடி பண்ணிட்டு" என்று திரும்பி தனுவை பார்த்தவள், "நீ உன்னை சொல்லு ஓகே நான் ஒத்துக்குறேன். உன்ன பார்த்த எங்கண்ணனே ஒரு நிமிஷம் ஜெர்க்கவான். நீ ஒரு ராவான ரவுடின்னு நான் ஒத்துக்குறேன். ஆனா, மிருதுவுக்கு இவ்வளவு பில்டப் ஆகாதுடி, இவ ஒரு காமெடி பீஸ்டி" என்று சொல்லி சத்தமாக சிரிக்க,
மிருதுளா மூக்கில் புகை வரும் அளவு சிந்துவை முறைத்தவள், "ஏய் யாரா பார்த்து காமெடி பீஸ்னு சொன்னா?" என்று கத்த,
"ஏன் டி காது ரெண்டும் ஆவுட்டா? உன்ன தான்டி சொன்னேன்."
"ஏய் வேணாம்டி என் கோபத்தை கிளறாதே. அப்புறம் நீ என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி வரும்" என்று மிருதுளா பல்லை கடிக்க, சிந்து நக்கலாக அவளை பார்திதவள்,
"எங்க அந்த இன்னொரு முகத்தை கொஞ்சம் காட்டு, அந்த முகமச்சு பயப்படுற மாதிரி இருக்கான்னு பாப்போம்" என்று மீண்டும் அவள் காலை வார, மிருதுளா கொலைவெறியுடன் சிந்துவை முறைதாள்.
"ஹலோ என்னடி முறைப்பு. இல்ல என்ன முறைப்புண்ணு கேக்குறேன். சரிடி நீ தைரியசாலின்னு நான் ஒத்துக்குறேன். நீ பெண் புலி தான். ஆனா, இந்த பெண் புலி என்னோட ஷரவன் மாம்ஸ் பக்கத்துல வரும்போது மட்டும் மியாவ் மியாவ்னு மாறிடுதே அதென்ன மேட்டர்" என்று மிருதுவின் வீக் பய்ன்ட்டில் அடித்தாள்.
"ச்சே? பயபுள்ள கரெக்டா நம்ம வீக் பாய்ண்ட் பாத்து அடிக்குதே... எல்லாம் அந்த கடுவம்பூணையால வந்தது. ச்சே" என்று சலித்துக் கொண்டவள், 'மிருது இவளுங்க முன்னாடி கெத்த விடாத… சமாளி சமாளி' என்று தனக்கு தானே சொல்லிக்க கொண்டவள், "ஏய் யாரு உன் மாம்ஸை பார்த்து பயந்தது. நானெல்லாம் யாரை பார்த்தும் பயப்பட மாட்டேன். என்ன பத்தி உனக்கு தெரியாது. நீ வேணும்னா பாரு இன்னொரு முறை உன்ற மாமன். என்கிட்ட ஏதாவது சேட்டை பண்ணட்டும் அப்ப இருக்கு அந்த கடுவம்பூணைக்கு... சில்லு சில்ல பிரிச்சுடுவேன்" என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்க ஷரவன் மெதுவாக கிளாஸ் ரூம் உள்ளே வர தனுவும், சிந்துவும் அவனை பார்த்து விட்டனர்.
ஷரவன் வாய் மேல் கை வைத்து அமைதியாக இருக்கும்படி செய்கை செய்ய இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாகிவிட, மிருதுளா அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்து இருந்ததால் அவளுக்கு ஷரவன் வந்தது தெரியவில்லை. அவள் பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி ஷரவன் தீட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள்.
தனு மிருதுளாவை உஷார் படுத்த எவ்வளவு முயன்றும் மிருது அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தவள், முன் வந்த ஷரவன், கைகட்டி புருவத்தை உயர்த்தி ஒரு மாதிரி மிருதுளாவை கூர்ந்து பார்த்துக் கொண்டு நிற்க, மிருதுளாவின் திறந்த வாய் மூடவில்லை. ஆனால், கண் இமைகள் மட்டும் நொடிக்கு நூறு முறை துடித்துக் கொண்டிருந்தது.
ஸ்டைலாக கைகட்டி, அனைவரையும் காந்தம் போல் ஈர்க்கும் தான் விழிகள் இரண்டையும் மிருதுளா மேல் மையமிட்டு நங்கூரம் போட்டு நிறுத்தியவன், மூடிய இதழ்களில் கூட புன்னகை தவழ, விழி இமைக்காமல் நடுங்கும் அவளின் இதழ்களையும், தப்பு செய்து மாட்டிக் கொண்ட குழந்தையின் பயத்தை அவள் கண்களிலும் கண்டவன். மீண்டும் ஒரு முறை தன்னை முழுவதும் அவளிடம் தொலைத்தான்
சிந்து தோழிகளை பார்த்து சிக்னல் செய்ய, அவர்களும் மிருதுளாவை தனியாக விட்டு எஸ்ஸாகினர்.
இங்கு மிருதுளாவுக்கு இதயம் மேலே ஏறி வாய்வழியாக வந்துவிடும் போல் இருந்தது.
"ஐயோ கடவுளே... இவரு எப்ப இங்க வந்தாரு? நாம பேசினது எல்லாம் கேட்டிருக்குமோ? ஐயோ இப்ப என்ன பண்றது?" என்று எதிரே பார்க்க தனுவும், சிந்துவும் அங்கு மிஸ்சிங்.
"அடிப்பாவிகளா கூட தானே இருந்ததுங்க? திடீர்னு எங்க மறஞ்சு போச்சுங்க... ஐயோ போனது போச்சுங்க, என்னையும் இழுத்துட்டு போய் இருக்க கூடாது. இப்படி சோலோவா விட்டு போய்டுச்சிங்களே... இப்ப நான் என்ன செய்ய, கடவுளே காலையிலையே தனு சொன்ன இன்னைக்கு உனக்கு சந்திராஷ்டமம். உன் நாக்கை பூட்டு போட்டு பூட்டி வைன்னு, நா கேட்டனா... அதுக்கு தான் இப்ப அனுபவிக்கிறேன்" என்று புலம்பியவள் அங்கிருந்து ஓட பார்க்க அவளால் முடியவில்லை.
அவளின் வாழைத்தண்டு கை ஷரவனின் இரும்பு பிடியில் சிக்கி இருந்தது. ஷரவன் மிருதுளா கையை இழுக்க, அந்த இழுப்பில் தடுமாறியவள் அவன் மார்பின் மீது மோதி தஞ்சம் புகுந்தாள்.
அந்த நிமிடம் ஷரவன் நெஞ்சுக்குள் லட்சம் பட்டாம்பூச்சிகள் ரெக்கை விரித்து பறந்தது. இதுவரை அவளிடம் செல்ல சேட்டைகள், சின்ன சின்ன சீண்டல்கள் செய்திருக்கிறானே தவிர... ஒருமுறை கூட மிருதுளாவிடம் ஷரவன் அத்துமீறி நடந்ததில்லை. இருவரும் தனியாக இருக்கும் நேரத்தில் கூட அவன் அன்பை மட்டும் தான் அவளிடம் பொழிவன். அன்பு , காதல் தாண்டி அவன் கண்களில் ஒரு சதவீதம் காமம் கூட இதுவரை இருந்ததில்லை. ஒரு குழந்தையை போல் தான் மிருதுளாவை தாங்குவான். ஆனால், இன்று மலர்கொத்தாய் தன் மீது மோதி நிற்கும் தன்
கண்ணுக்கினியாளை பார்த்தவன் கண்களில் காதலையும் தாண்டி வேறொரு உணர்வு…
ஒரு ஆணுக்கு அவன் மனதிற்கு பிடித்த பெண்ணிடம் மட்டுமே தோன்றும் இயல்பான உணர்வு. அந்த நிமிடம் ஷரவன் அந்த உணர்வுக்கு கட்டுபட்டு மிருதுளாவை இடையோடு சேர்த்து இறுக்கி காற்று கூட நுழைய முடியாத படி அணைத்துக் கொண்டான்.
மிருதுளாவுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரியவே சில நிமிடங்கள் ஆனது. ஷரவனின் அணைப்பு மேலும் மேலும் இறுக, பெண்ணவளின் தேகம் அந்த அணைப்பில் வலி தாங்காமல் நெளிய, அவள் இதயம் வேகமாக துடிப்பது ஷரவனுக்கு நன்றாக கேட்டது.
மெதுவாக தன் பிடியை தளர்த்தியவன். அவள் காதருகில் சென்று, "மனுஷனை கொல்றடி…" என்று ஹஸ்கி வாய்ஸில் கிசுகிசுக, அவன் மூச்சு காற்று அவள் கன்னத்தில் மோத மிருதுளா ஒருவிதமான மோன நிலையில் உருகி நின்றாள்.
"இந்த வருஷ கல்சுரல்ஸ்ல, நீ என்னோட டான்ஸ் பண்ற, நாளைக்கு காலையில ரிகர்சலுக்கு வந்துடு" என்றவன் குரல் அவள் ஸ்பரிசம் தந்த மயக்கத்தில் கிறங்கி குழைந்திருக்க, அவனுக்கே அந்த குரல் கேட்டிருக்குமா என்பது டவுட்டு தான்.
'இதுக்கு மேல இங்க இருந்த சரிபட்டு வராது ஷரவன், கிளம்பு முதல்ல' என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டே வெளியே நகர்ந்தவன், ஒரு நிமிடம் திரும்பி மிருதுளாவை பார்த்து, "நீ எப்ப டி என்னை மாமான்னு கூப்பிடுவ?" என்று ஏக்கமாக கேட்க,
அத்தனை நேரம் அவன் அணைப்பில் தன்னை மறந்திருந்தவள் அந்த வார்த்தையில் உணர்வு வந்து ஷரவனை நிமிர்ந்து பார்க்க, அவன் கண்களில் இதுநாள் வரை பார்க்காத ஏதோ ஒன்று அவளை தாக்க, பட்டென தலை குனிந்து கொண்டாள்.
"ம்ம்ம்ம் தலையை தொங்க போட்டுட்டா இனி ஒன்னும் வேலைக்காகாது" என்று நொந்து கொண்டவன், அவள் அசந்த நேரம் பார்த்து அவள் பட்டு கன்னத்தில் தன் முத்தத்தை பதித்து விட்டு வெளியே சென்று விட்டான்.
ஷரவன் கொடுத்த அதிர்ச்சியில் மிருதுளா பொத்தென இருக்கையில் அமர்ந்து விட்டாள். ஷரவனோடு பழகிய இத்தனை நாட்களில் ஒரு நாளும் அவன் இப்படி நடந்ததில்லை. அதோடு ஷரவன் எப்போதும் "என்னை மாமானு கூப்பிடு டி" என்று மிருதுளாவிடம் வம்பிழுப்பது வழக்கம் தான். ஆனால், மிருதுளா "முடியவே முடியாது, சொல்ல மாட்டேன்" என்று ஒரே ஓட்டமாக ஓடி விடுவாள். ஆனால், இன்று, "அவன் எப்ப டி என்னை மாமான்னு கூப்பிடவ?" என்று கேட்டபோது, இதுவரை போல் இல்லாமல் இன்று அந்த வார்த்தைகள் அவளுக்குள் என்னவோ செய்தது.
அது அவன் கண்ணில் தெரிந்த ஏக்கமா? இல்லை கூழாங்கலை உரசி வரும் தென்றல் போல் மென்மையாக வந்த அவன் குரலா? இல்லை அவன் ஸ்பரிசம் தந்த குறுகுறுப்பா? இல்லை அவன் தந்த முதல் முத்தமா? எது என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால், அவளை உள்ளுக்குள் ஏதோ செய்தது.