காதல் 10
காதல் 10
அழகாக காலைப் பொழுதில் கண் விழித்த ஷரவனின் மனது இன்று மிகுந்த உற்சாகத்தில் துள்ளி குதித்தது. மித்துவுடன் இணைந்து ஆடப் போவதை நினைத்து நெஞ்சில் பட்டாம்பூச்சி பறக்க, சீக்கிரம் எழுந்து குளித்து ரெடியாகி காலேஜ் வந்தான். பாவம் அவன் கெட்ட நேரம் காலேஜ் வாசலில் நின்றது அவன் நண்பர்கள் உருவில்.
"டேய் விஷ்வா கொஞ்ச நாள் முந்தி இங்க ஷரவன்னு ஒரு மானஸ்தன் இருந்தானே! உனக்கு தெரியுமா? என்று நக்கலாக பரத் கேட்க,
"யாரு டா? ஓஓஓ... இங்க கெத்தா. நா எந்த பொண்ணுக்கிட்டையும் விழமாட்டேன். நான் மொரட்டு சிங்கிள்னு சொல்லிட்டு சுத்திட்டு இருந்தானே... அவனை தானே சொல்ற" என்று விஷ்வா அவன் பங்கிற்கு எடுத்துக் கொடுக்க,
" ஆமாடா, அவனே தான். பாவம் எப்படி இருந்தவன், இன்னைக்கு எப்படி ஆகிட்டான் தெரியுமா?" என்று ஷரவனை ஒரு குறும்பு பார்வை பார்த்தான்.
"ஏன்டா என்ன ஆச்சு?" என்று விஷ்வா அடுத்த பிட்டை போட,
பரத் "அத ஏன்டா கேக்குற, பாவம் நல்ல இருந்த புள்ள ஒரு அமுல்பேபி பார்த்த பார்வையிலேயே பொத்துனு விழுந்துட்டான். விழுந்த நாளா இருந்து பய எந்திரிக்கவே இல்ல. அந்த அமுல் பேபிக்கு வாட்ச்மேனாவே மாறிட்டான். கெத்தாக இருந்தவன் இப்ப வெத்தாகிட்டான்" என்று சிரிக்காமல் சொல்ல அங்கிருந்த நிலவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
"டேய் என்னங்கடா கொழுப்பா? மகனே வந்தேன்னு வை தூக்கி போட்டு மிதிக்கிற மிதியில இந்த ஜென்மத்துல உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமே பண்ண முடியாதபடி செஞ்சுடுவேன் ஜாக்கிரதை?" என்று ஷரவன் முறைத்தான்.
"டேய் நீ எங்களை எதுவும் பண்ண? நான் நேரா போய் என் பாசமலர் மொளகா தூள் கிட்ட உன்ன பத்தி வத்தி வச்சுடுவேன் பாத்துக்க" என்று விஷ்வா மிரட்ட,
"டேய் டேய் ஏன்டா இந்த கொலவெறி. குதூகலமா இல்லனாலும் ஏதோ குத்துமதிப்பா என் லவ்சு போயிட்டு இருக்கு, அதுல புகுந்து கும்மி அடிச்சிட்டு போயிடாத டா, உனக்கு புண்ணியமா போகும்" என்று ஷரவன் கையெடுத்து கும்பிட்டான்.
"அது! அந்த பயம் இருக்கட்டும், இனி என்கிட்ட ஏதாவது லந்து விட்டேன்னு வை... அடுத்த நிமிஷம் மிளகாத்தூள் தான் பேசும் " என்று விஷ்வா எச்சரிக்க,
‘மகனே இருடா… மித்து மட்டும் எனக்கு ஓகே சொல்லட்டும். அப்புறம் இருக்கு உனக்கு ரிவீட்டு. என் சிந்து குட்டி கிட்ட சொல்லி உன்ன சல்லி சல்லியா பிரிக்கல, என் பேரு ஷரவன் இல்லடா’ என்று மைண்ட் வாய்ஸ் போட,
"டேய் எரும அங்க என்னடா மைண்ட் வாய்ஸ் சா?" என்றான் விஷ்வா.
"ச்சே ச்சே அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சி" என்று ஷரவன் சமாளிக்க,
"டேய் டேய் புழுகாதடா. நீ என்ன நினைச்சுருப்பேனு எனக்கு நல்ல தெரியும். என் சிந்து பேபி கிட்ட சொல்லி என்ன சல்லி சல்லியா பிரிக்கிறேன்னு தானே யோசிச்ச" என்று விஷ்வா கரெக்டாக சொன்னான்.
" அதெப்படி டா! அவ்வளவு கரெக்ட்டா ஒரு வார்த்த கூட மாறாம, அப்படியே நான் நினைச்சது சொல்ற? வாட் எ மிராக்கில். எப்படிடா?" என்று ஷாக் ஆனது போல் நடிக்க,
"ஆமா பெரிய சிதம்பர ரகசியம். மொச புடிக்கிற நாய் மூஞ்சிய பார்த்தா தெரியாது. நான் உன் ஆளை வச்சு மிரட்டுனா, நீ என் ஆள வச்சு தானா ரிவெஞ்ச் யோசிப்ப, இத என்னால கண்டுபிடிக்க முடியாது பாரு. போடா டேய் போடா. ஷாக்கை கொறச்சிட்டு காலேஜ் வந்த வேலையை போய் பாரு டா "என்க.
உடனே நிலவன், "ஆமா வாங்க வாங்க எல்லாரும் கிளாஸுக்கு போய் ஒழுங்கா படிப்போம்" என்று நல்ல பிள்ளைபோல் முஞ்சை வைத்துக் கொண்டு சொல்ல, விஷ்வா பதறி விட்டான்.
"எதுது... காலேஜ் வந்து படிக்கிறத?? என்ன அக்கிரமம் டா இது. அதெல்லாம் படிக்க இங்க வந்த பசங்களுக்கு, நமக்கு இல்ல. இன்னொரு முறை படிப்போம்னு சொல்லாதே. அபச்சாரம் அபச்சாரம் வாய்ல அடிச்சுக்கோ" என்று விஷ்வா பயபக்தியாக சொல்ல,
பரத், "டேய் படிக்க இல்லன்னா, அப்ப நாம எதுக்கு டா இங்க வந்தோம்?"
"ம்ம்ம்ம் நான் வந்தது என் சிந்து பேபியை சைட் அடிக்க. இதோ இருக்கானே... இந்த நல்லவன் அமுல்பேபிய கரெக்ட் பண்ண வந்தான். "
பரத், "அப்போ நிலவன்?"
"ம்ம்ம்ம் இந்த வருஷமாச்சு அவனோட சிங்கிள் ஸ்டேட்டஸ் கமிட்டடா மாத்த முடியுமானு பார்க்க வந்திருக்கான்."
அதெல்லாம் அவன் கமிட் ஆகி ரொம்ப நாள் ஆச்சு, பயபுள்ள ஒத்துக்க தான் மாட்டேங்குது. இருக்கட்டும் இந்த கல்சுரல்ஸ்ல இவன தனுகூட சேர்த்து வைக்கிறேன். அதுக்கு இவன் சரிப்பட்டு வரல. தனுவுக்கு வேற நல்ல பையனா பார்த்து கோர்த்து விடுறேன். பாவம் அந்த பிள்ளையும் எவ்வளவு நாள் தான் சிங்கிளாக சுத்தும். By விதி.
"ஓஓஓஓ அப்படியா. ஆமா மச்சி அப்ப நான் எதுக்குடா இங்க வந்திருப்பேன்?" என்று பரத் கேட்டான்.
"மூதேவி அத நீ தான் யோசிக்கணும், என்ன கேக்குற?"
"நானும் யோசிக்கிறேன். ஒன்னு வரமாட்டேங்குது நான் என்ன செய்ய" என்று பரத் பாவமாய் சொல்ல,
"அப்ப இதுக்கு ஒரே வழி தான் மச்சி இருக்கு'' என்ற விஷ்வாவை ஆர்வமாய் பார்த்தான் பரத்.
"என்ன வழிடா? என்ன வழி" என்று கேட்க,
“பேசாம செத்துடு மச்சி. கூடவே அந்த பிரேம் பரதேசியையும் கூட்டி போ பிரச்சினை ஓவர். நாங்களும் நிம்மதியா இருப்போம்."
"ஏன்டா பரதேசி நாயே! ஏன்டா உனக்கு இந்த நல்ல எண்ணம் எரும எரும."
"பின்ன காலேஜ் வந்து இத்தனை நாள் ஆச்சு நீயும் சரி அந்த பிரேம் பரதேசியும் சரி ஒரு பொண்ணையாச்சும் லவ் பண்ணீங்களா டா? இப்படி மொட்டையா சுத்திட்டு இருக்கீங்க, பேசாம ரெண்டு பேரும் தூக்கு போட்டு தொங்கிருங்க, சனியன் ஒழிஞ்சு துன்னு உங்க வீட்டிலயாவது நிம்மதியா இருப்பாங்க"
"டேய் நாங்க ரெண்டு பேரும் பொண்ண பாத்தா மண்ண பாத்து நடக்குற சங்கத்தை சேர்ந்த கட்டை பிரம்மச்சாரிகள்" என்று பரத் கெத்தாக சொல்ல,
"டேய் டேய்... எங்களுக்கே விபூதி அடிக்க பாக்குறியா நீ? நீங்க ரெண்டு பேரும் கட்ட பிரம்மச்சாரியாக? இல்ல கெட்ட பிரம்மச்சாரியான்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்டா, ஆல் டீடெயில்ஸ் ஐ னோ மேன்" என்றவனை பார்த்து அசடு வழிந்தான் பரத்.
"பப்ளிக் பப்ளிக்! ஐ அம் யூ பெஸ்ட் பிரெண்ட்" என்று சொல்ல,
"அடத்தூ" என்று பரத்தை காரிதுப்பிய விஷ்வா, ஷரவனிடம, “நீ ஏன்டா இன்னும் இங்க இருக்க? போய் நீ வந்த வேலையை பாரு போ மிளகா வெய்ட்டிங்" என்று சொல்லி முடிக்கும் முன் ஷரவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான் மித்துவை தேடி.
மிருதுளாவை க்ளாஸ் ரூமில் தேடியவன் அவள் அங்கு இல்லாமல் போக, 'இவ எங்க போய் இருப்பாள்?' என்று யோசிக்க அங்கு கேட்ட பேச்சு குரலில் மிருது என்ற பெயர் அடிபட ஷரவன் அதை கவனித்தான்.
"ஏய் மிருது இன்னைக்கு காலேஜ் லீவ் டி. இன்னைக்கு அவ வரமாட்டா, அவளோட நோட்ஸ் நீ தனுகிட்ட கொடுத்திடு" என்று ஒருத்தி சொல்ல, ஷரவனுக்கு மித்துவுக்கு உடம்பு என்னவோ, ஏதோ என்று உள்ளம் பதற, அதற்கு பின் அந்த பெண்கள் பேசியதை கேட்டவன் கோபத்தின் உச்சத்திற்கே சென்றான்.
"ஏன்டி மிருது வரமாட்டா உடம்புக்கு ஏதும் சரியில்லையா" என்று அடுத்தவள் கேட்க,
"ம்ம்ம்ம் கால்ல அடிப்பட்டிருக்குன்னு சொன்னா... ஆனா, அதெல்லாம் ஒன்னும் இருக்காது. நேத்து அந்த ஷரவன் வரப்போற நம்ம காலேஜ் கல்சுரல்ஸ்ல அவர் கூட சேர்ந்து ஆடனும்னு இவ கிட்ட சொல்லி இருக்காரு. அவர் கூட சேர்ந்து ஆட புடிக்காம தான் அவ கால்ல அடிபட்டு இருக்குன்னு பொய் சொல்லி லீவு போட்டுட்டு ஹாஸ்டல்ல இருக்கா போல" என்க,
அதுக்கு அடுத்தவள், "ஆமாடி அப்படியும் இருக்கும். பின்ன சும்மாவே அவன் மிருதுவை முழுங்குற மாதிரி பாப்பான். இதுல சேர்த்து ஆட சான்ஸ் கிடைச்சா சும்மாவா இருப்பான். ஒரு வழியாக்கிட மாட்டான். அதெல்லாம் மிருது யோச்சிருப்பா... அதான் உஷாரா காலேஜுக்கு கட் அடிச்சு எஸ்கேப் ஆகிட்டா போல" என்று சொல்லி சிரிக்க. அதை கேட்ட ஷரவன் உள்ளம் உலைகலன் போல் கொதிக்க அடுத்த நிமிடம் தன் காரில் ஏறி பறந்தான் மிருதுளாவை பார்க்க.
காரை ஒட்டிக்கொண்டு இருந்தவன் மனம் கொதித்துக் கொண்டிருந்தது.
'அவ எப்படி அப்படி நினைச்சா… டான்ஸ் சாக்கா வச்சு நா அவகிட்ட மிஸ் பிகேவ் பண்ணுவேன்னு நெனச்சிட்டாளா? என்னை அவ அவ்வளவு கேவலமாவா நினைச்சிட்டிருக்க மித்து. இவ்வளவு நாள் பழகியும் என்ன நீ புரிஞ்சிக்கவே இல்லயா?' என்று நினைக்கும் போதே ஷரவன் மனதில் அடிபட்டது போல் அப்படி ஒரு வலி. அந்த வலியின் வேகம் அவன் கைகளில் தெரிய மின்னல் வேகத்தில் பறந்த கார் மிருதுளாவின் ஹாஸ்டல் வாசலில் வந்து நின்றது.
இங்கு மித்து ஆனந்தமாக சேரில் உட்கார்ந்து கொண்டு கையில் வழிந்து கொண்டிருந்த dairy milk chocolate டை kiss me close ur eyes என்று பாடிக் கொண்டே ரசித்து சப்பு கொட்டி சாப்பிட்டு கொண்டிருந்ததில், ஷரவன் அறைக்குள் நுழைந்ததை கூட அவள் கவனிக்கவில்லை.
ஏற்கனவே கடும் கோபத்தில் வந்த ஷரவனுக்கு, மித்து இருந்த நிலையை பார்த்து எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல் ஆக, கோபத்தின் உச்சிக்கு சென்றவன், மிருதுளாவின் கையை பிடித்து இழுக்க, திடீரென நடந்த இந்த நிகழ்வில் மிரண்டு போன மிருதுளா கத்த ஆரம்பிக்கும் முன், ஷரவன் மித்துவை தன்னோடு சேர்த்து காற்று கூட நுழைய முடியாத படி இறுக்கி அணைத்தவன், தன் இதழ் கொண்டு அவள் இதழை மூடியிருந்தான்.''
மிருதுளாவுக்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியவில்லை. உலகமே நின்று விட்ட உணர்வு. ஷரவன் பலமுறை அவள் கன்னத்தில் முத்தமிட்டு இருக்கிறான். ஆனால், அப்போதெல்லாம் அந்த முத்தத்தில் ஒரு வித மென்மையையும், ஒரு மாதிரி தவிப்பையும் தான் மிருதுளா உணர்ந்திருக்கிறாளே தவிர, இதுபோல் வன்மையாக அவன் அவளை தீண்டியதில்லை. முதன் முதலில் ஒரு ஆணின் இதழ் தீண்டல், அதுவும் இத்தனை வன்மையாய் நிகழ, மிருதுளாவுக்கு கண்கள் இருண்டு விட்டது. இதயம் அதிவேகமாக துடிக்க, பயத்தில் மொத்த உடலும் அதிர கண்கள் படபடக்க கால்கள் தரையில் நிற்காமல் நடுங்கி கொண்டிருக்க, ஷரவனோ தன் மொத்த கோபத்தையும் அவளின் இதழில் காட்டிக் கொண்டிருந்தான்.
தன் மனதில் இன்று மிருதுளாவினால் ஏற்பட்ட காயத்திற்கான மருந்தை அவள் இதழிலேயே தேடிக் கொண்டிருந்தான்.
நொடிகளில் தொடங்கிய இந்த இதழ் தீண்டல் நிமிடம் கடந்து செல்ல, மிருதுளா மூச்சுவிட சிரமப்பட்டு திணறி தவிக்க. ஷரவன் வேகமாக அவளை தன்னை விட்டு விலக்க, ஷரவன் கொடுத்த அதிர்ச்சியில் மிருதுளா கால்கள் நடுங்க, நிற்க முடியாமல் அப்படியே கால்களை மடக்கி தரையில் அமர்ந்தாள்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் கண்ணீரில் நனைந்து இருந்த கண்களால் ஷரவன் பயத்தோடு பார்க்க, ஷரவனின் முகம் கொதிக்கும் இரும்பைப்போல் கோபத்தில் சிவந்திருக்க பயத்தில் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டாள்.
ஷரவன் கோபமாக அவள் அருகில் சென்றவன், அவள் தாடையை பிடித்து உயர்த்தி தன் முகத்தை நேராக பார்க்கும் படி அவள் முகத்தை நிமிர்த்தியவன், "ஏன் டி?? ஏன்டி இப்படி பண்ண? என்னை எப்படி டி உன்னால அப்படி நினைக்க முடிஞ்சுது? இவ்வளவு நாள் பழக்கத்துல நீ என்னை கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே இல்லயா? நம்ம பழகுன இத்தனை நாள்ல என்னைக்காவது நான் உன்கிட்ட தப்பா நடந்திருக்கேனா டி? சொல்லு டி நடந்திருக்கேனா? அப்புறம் ஏன்டி… ஏன்டி இப்படி என்ன சாவடிக்கிற? நீ என்ன அவ்ளோ கேவலமாவா நெனச்சிட்டு இருக்க மித்து" என்று சொல்லும்போதே அவன் குரல் உடைந்து விட, மிருதுளா அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.
ஷரவன் அவளை விட்டு விலகியவன் கண்களை இறுக்கி மூடி தன் கோபத்தை அடக்க முயன்றவன், தலையை அழுத்தி கோதி, ஏதோ சொல்ல மிருதுளாவிடம் திரும்ப அப்போது தான் அங்கு தரையில் இருந்த இரத்த கறையை கவனித்தான். சட்டென திரும்பி மிருதுளாவை பார்க்க, அவள் காலில் போடப்பட்டிருந்த கட்டு விலகி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
ஷரவனுக்கு ஒரு நொடி இதயம் பதறி விட மிருதுளா அருகில் சென்றவன், "மித்து குட்டி என்னடா இது? என்ன ஆச்சு உனக்கு கால்ல ஏன் இவ்ளோ ரத்த வருது? "எப்புடி அடிபட்டிச்சு? ஏன்டி என் கிட்ட சொல்லல? என்று நொடிக்கு நூறு கேள்வி கேட்க,
'நீ எங்கடா என்ன பேச விட்ட... வந்ததும் வாயோட வாய் வச்சு மூடிட்டு, கேக்குறான் பாரு கேள்வி' என்று நினைத்த மிருதுளா அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை குனிந்தாள்.
"சாரி மித்துமா… என்னை மன்னிச்சிடு, நா வேற உன் நிலைமை தெரியாம… ச்சே" என்று தன் கையை சுவற்றில் ஓங்கி குத்தி தன் செயலை எண்ணி தன்னை தானே நொந்தவன். அடுத்த நொடி மிருதுளா தன் கைகளில் ஏந்தி அவளை காரில் பத்திரமாக உட்கார வைத்து சீட் பெல்ட் போட்டு விட்ட, அடுத்த ஐந்து நிமிடத்தில் ஹாஸ்பிடலில் இருந்தான்.
டாக்டர் மிருதுளாவின் காலில் மருந்து போட்டு கட்டு கட்டுவதற்குள் ஷரவன் தன் டாக்டர் ப்ரண்ட் ரவியை ஒரு வழியாக்கி விட்டான்.
"டேய் இவ்ளோ பெரிய அடி பட்டிருக்கு, ரத்த வேற இவ்ளோ வந்திருக்கு. நம்ம பேசாம எக்ஸ்ரே.?? இல்ல இல்ல வேணாம் ஸ்கேன் எடுத்து பாத்துடுவோம்" என்று ரவியை பாடாய் படுத்தி எடுக்க ரவி வெறியாகி விட்டான்.
"டேய் நிறுத்துடா நானும் பாக்குறேன். பொண்டாட்டிய பிரசவத்துக்கு அனுப்பிவிட்டு தவிக்கும் புருஷன் மாதிரி இல்ல கிடந்து அலையுற, ஒரு சின்ன அடி அதுக்கு போய் எக்ஸ்ரேவாம், ஸ்கேனாம் ஏன்டா ஆபரேஷனை விட்டுட்ட அதையும் சொல்ல வேண்டியது தானே… ஒரு சின்ன காயம். நீயே டெட்டால் போட்டு கிளீன் பண்ணி ஆயின்மென்ட் போட்டிருந்தா ஈவினிங்குள்ள காயம் ஆறி இருக்கும். இல்ல வெளிய நர்ஸ் கிட்ட மருந்து போட சொல்லி இருந்தா அவங்க மருந்து போட்டிருப்பாங்க. அத விட்டு இவ்வளவு தூரம் தூக்கி வந்ததும் இல்லாம ஒரு ஃபேமஸ் ஹார்ட் சர்ஜனை இப்படி தம்மதுண்டு காயத்துக்கு மருந்து போட வச்சிட்டியேடா" என்று கொதிக்க, மிருதுளாவும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.
'ஒரு சின்ன காயம். அதுக்கு போய் ஏன் இந்த கடுவன்பூனை இப்படி குதிக்குது' என்று மனதில் நினைக்க அதை ஷரவனிடம் சொல்ல பயந்து வாயை மூடிக்கொண்டாள். ஆனால், அவளுக்கு தெரியவில்லை, அவள் காலில் பட்ட அந்த சின்ன காயம் ஷரவனின் இதயத்தையே குத்தி கிழித்ததென்று.
"இன்னும் ஒரு மணி நேரம் தான் உனக்கு டைம் அதுக்குள்ள மரியாதையா ஒழுங்கா ஹாஸ்பிடல் பீல்ல கட்டிட்டு இந்த பாப்பாவை கூட்டிட்டு ஓடிரு" என்று ஷரவனை மிரட்டிய ரவி மிருதுளாவிடம் திரும்பி, "சின்ன காயம் தான் மா. ஒன்னு ரெண்டு நாள்ல சரியாகிடும் மருந்த ஒழுங்க சாப்பிடு" என்றவன் ஷரவனை திரும்பி பார்க்க கலங்கிய கண்களும், வாடி இருந்த ஷரவனின் முகமுமே சொன்னது இங்கு காயம் கண்டிருப்பவள் தான் அவனின் உயிர் மூச்சென்று.
சிறுவயதில் இருந்து தைரியமாக, திமிரோடு கெத்தாக திரியும் ஷரவனையே பார்த்து பழக்கப்பட்ட ரவிக்கு, இன்று இந்த பொண்ணுக்கு பட்ட ஒரு சின்ன காயத்திற்கு இப்படி பயந்து துடிக்குமளவு அவனை மாற்றிய மிருதுளா மீதான அவன் காதலை நினைத்து வியந்தான். அவர்களுக்கு தனிமை கொடுக்க விரும்பி அந்த அறையை விட்டு வெளியேறினான்.
ஷரவனின் கலங்கிய கண்கள் மிருதுளாவை என்னவோ செய்ய, அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஷரவன் அவள் படுத்திருந்த கட்டில் அருகில் வந்து அமர்ந்தவன், அவள் காலை எடுத்து தன் மடியில் வைத்து மெதுவாக அவள் காயத்தின் மீது போட்டிருந்த கட்டை தொட்டுப் பார்த்தவன், "ரொம்ப வலிக்குதா மித்துக்குட்டி?" என்று கேட்டவன் குரலில் அப்படி ஒரு வேதனை. ஏற்கனவே காயப்பட்டு இருந்தவளை தன் செயலால் மீண்டும் காயப்படுத்தி விட்டோம் என்ற வேதனை அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
மிருதுளாவுக்கு ஷரவனின் முகத்தை பார்க்கவே பாவமாக இருக்க, "இல்ல சீனியர் எனக்கு வலிக்கல. சுத்தாம வலிக்கவே இல்ல" என்று தன் மழலை குரலில் சொன்னவள், கொஞ்ச நேரம் முன் இவன் தான் தன் பெண்மையை அத்துமீறி தீண்டினான் என்பதையும் மறந்து அவனின் வாடிய முகத்தை பார்க்க முடியாமல் தன் வலியை மறைத்துக் கொண்டு சொல்ல, ஷரவன் முகத்தில் சற்று நிம்மதி வந்தது.
"சாரிடா மித்து, காலேஜில் ரெண்டு பொண்ணுங்க. நீ என்னோட டான்ஸ் ஆட இஷ்டம் இல்லாம தான் கால்ல அடிபட்டு இருக்குன்னு பொய் சொல்லி லீவ் போட்டு இருக்கேன்னு சொன்னாங்க" என்றவன் அந்த பெண்கள் பேசியதை சொல்லி, "அதை நானும் உண்மைனு நெனச்சு தான் நான் உ … உன் .... உன்கிட்ட அப்புடி நடந்துகிட்டேன்" என்று தயங்கி தயங்கி தலை குனிந்து கொண்டு சொல்ல,
அப்போது தான் மிருதுளாவுக்கு ஹாஸ்டலில் நடந்தது நினைவு வந்தது.
ஷரவன் தன்னை இருக்கி அணைத்து முத்தம் தந்தது கண் முன் தோன்ற, ஒரு பக்கம் கோபம் மறுபக்கம் சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளை தாக்க, அவள் முழு உடலும் குறுகுறுக்க, ஷரவனை நேருக்கு நேர் பார்க்க முடியாது தலையை குனிந்து கொண்டாள்.
ஷரவன் மெதுவாக அவள் காலை கட்டிலில் வைத்தவன். அவள் முகம் பார்த்து மெதுவாக, "மித்து" என்றழைக்க, அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க முடியாமல். "ம்ம்ம்ம்" என்று பதில் குரல் மட்டும் வந்தது அவளிடம்.
"மித்து உனக்கு இன்னைக்கு கால்ல அடிப்படாம இருந்திருந்த,
" நீ…"
"நீ…"
"இன்னைக்கு டான்ஸ் ரிகர்சலுக்கு வந்திருப்ப தானே... ஆமா தானா? சொல்லு மித்து" என்று கேட்டவன் குரலில் அவள் ஆமாம் என்று சொல்ல வேண்டும் என்று அப்படி ஒரு ஏக்கம்.
மிருதுளா மெதுவாக நிமிர்ந்து கேள்வியாய் அவனை பார்த்தவள் மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்
"இ... இல்ல…, அந்த பொண்ணுங்க சொன்ன மாதிரி நான் உன்கிட்ட மிஸ் பிகேவ் பண்ணுவேனு நீயும் நெனைக்கிறியா" என்று முழுவதும் கேட்டு முடிக்கும் முன்னே ஷரவன் கண்கள் கலங்கி விட்டது.
எங்கே மிருதுளா அந்த பெண்கள் சொன்னது போல் தன்னை தவறாக எண்ணி இருப்பாளோ' என்ற பயம் அவனை கொல்லாமல் கொல்ல, பாதி ஜீவனாக ஒலித்தது அவன் குரல்.
அவன் கேட்ட கேள்வியில் பட்டென்று நிமிர்ந்து ஷரவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்த மிருதுளா வேக வேகமாக இல்லை என்பது போல் தலையாட்டியவள், "இல்ல சீனியர் அப்படியெல்லாம் ஒன்னு இல்ல. நான் உங்களை அப்படி தப்பா நெனைக்க மாட்டேன் சீனியர். எப்பவும் அப்படி நினைக்க மாட்டேன்" என்று சொல்லவும் தான் ஷரவனுக்கு போன உயிர் திரும்பி வந்தது.
ஆம் இன்று வரை ஷரவன் பலமுறை மிருதுளா சீண்டி விளையாடி இருக்கிறான் தான். ஆனால், அதில் துளியும் காமம் இருந்ததில்லை, அவன் செயல் அனைத்தும் தனக்கு பிடித்த குழந்தையை நாம் எப்படி கொஞ்சி விளையாடுவோமே! அப்படி தான் இருக்கும். மிருதுளா ஷரவனின் காதலையும், அன்பையும் தான் உணரவில்லையே தவிர அவன் மீது அவளுக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. அது ஏனென்று கேட்டால் அவளுக்கே அது புரியாத புதிர் தான்.
மிருதுளாவின் பதில் ஷரவனின் மனதை லேசாக்க, அவன் முகத்தில் நிம்மதி புன்னகை படர்ந்தது. மிருதுளாவின் தலையை வருடி நெற்றியில் முத்தமிட, அந்த முத்தம் மிருதுளாவை உயிர் வரை சென்று தீண்டியது.
"ஆமா எப்படி மித்து உன் கால்ல அடி பட்டுச்சு, பெரிய கிளாஸ் பீஸ் குத்தி இருக்குனு ரவி சொன்னான். அப்படி என்ன பண்ண நீ?" என்று ஷரவன் கேட்க,
மிருதுளா தன் கருப்பு திராட்சை கண்ணை உருட்டி திரு திருவென்று முழிக்க, ஷரவனுக்கு புரிந்து விட்டது.
'ம்ம்ம் இவ ஏதோ வால்தனம் செஞ்சிருக்கா. அதான் இப்படி முட்ட கண்ண உருட்டி உருட்டி முழிக்கிற' என்று தனக்குள்ளே சிரித்தவன், "ஏய் குட்டி பிசாசு? மரியாதையா சொல்லிடு? என்ன பிராடு வேலை செஞ்ச? எப்படி அடிபட்டிச்சு?" என்று சின்ன சிரிப்போடு கேட்டான்.
" அது… அது… அது வந்து சீனியர்" என்று அவள் ராகம் இழுக்க,
"ஏய் ராகம் இழுத்து டியூன் போடாம விஷயத்தை சொல்லு டி."
"அது சீனியர்" என்று ஆரம்பிக்க. "ஏய் முதல்ல சீனியர், சீனியர்னு கூப்பிட்டு கழுத்தறுக்குறத நிறுத்துடி. காது வலிக்குது" என்ற ஷரவனை, மிருதுளா சோகமாக பார்க்க, "அதில் பின்ன நான் எப்படி தான் கூப்பிடுறதாம்?? என்ற கேள்வி இருக்க,
அதை உணர்ந்தவன், "உனக்கு எப்ப என்னை மாமானு சொல்ல தோனுதோ அப்ப நீ அப்படி கூப்பிடு. அதுவரை நீ என்ன ஷரவன்னு பேர் சொல்லியாவது கூப்புட்டு தொல. சீனியர்னு கூப்பிட்டு உயிரை வாங்காத" என்றதற்கு மிருதுளா சரி என்று தலையை ஆட்ட,
"சரி இப்ப சொல்லு எப்படி காயம் பட்டுச்சு"
"அது வந்து சீனியர்" என்று ஆரம்பிக்க ஷரவன் அவளை முறைக்கவும், "ஷ.. ஷரவன்" என்று திக்கி திக்கி அவள் சொல்ல. முதன் முதலில் அவள் தேனூறும் இதழ் வழி தன் பெயரை அவள் சொல்ல கேட்ட ஷரவன் மனது. அந்த தேனை விட அதிகமாக இனித்தது. அதையெல்லாம் உணராத மிருதுளா தன் பேச்சை தொடர்ந்தாள்.