அர்ஜூன் & ஆத்யா 9
மெய் 9
பனியை துடைக்க பகலவன் வந்த வேளையில், இரவு முழுவதும் அர்ஜூன் தனக்குள்ளே ஏற்பட்டிருந்த புதிய மாற்றத்தை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவன், விடியும் நேரத்தில் உறங்கி இருந்தான்.
காலை பத்துமணிக்கு அவனை எழுப்பிய அபிராமி, "டேய் அர்ஜூன் மணி பத்தாகுது, சீக்கிரம் எந்திரிடா, கோவிலுக்கு போகணும்" என்று அவனை எழுப்பினர்.
"வியாழக்கிழமை என்ன கோயில் வேண்டி இருக்கு சித்து. அப்படின்னாலும் நீங்க போக வேண்டியது தானே என்னை ஏன் டிஸ்டப் பண்றீங்க" என்று மீண்டும் இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கப் போனான் அர்ஜூன்.
"டேய்... பிரியாவோட அண்ணி, பிரியா ஆத்ம சாந்திக்காக, அவங்க குலதெய்வம் கோயில்ல, ஏதோ பூஜை ஏற்பாடு பண்ணி இருக்காங்க, அவங்க எல்லாம் ஆத்யாவை கூட்டிட்டு காலையிலேயே போயிட்டாங்க, நீ நல்லா தூங்கிட்டு இருந்தனால, அத்து நீ எழுந்தது உன்னை கூட்டிட்டு வர சொல்லிட்டு அவங்க கூட போயிட்டா, அதோட அந்த கோயில்ல பூஜை பண்ண சீக்கிரம் கல்யாணம் ஆகும்னு பிரியாவோட அண்ணி சொன்னாங்க, அத்துக்கு, உனக்கு, அபிமன்யுக்கும் சீக்கிரம் கல்யாணம் ஆகனும்னு பூஜை பண்ணனும். சீக்கிரம் கிளம்புடா" என்றவர் அங்கிருந்து சொல்ல,
அர்ஜூனுக்கு ஐயோ என்றிருந்தது.
"எந்த நேரத்துல இந்த சித்தி கல்யாண பேச்சு எடுத்தாங்களோ, அதிலிருந்து நான் நானாவே இல்லை. எல்லா பொழுதும் குழப்பத்திலேயே போகுது. ம்ம்ம்" என்று சலித்துக் கொண்டே எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு கிளம்பினான்.
கோயிலுக்குள் நுழைந்தவன் கண்கள் ஆத்யா தேடி அலைய, அவள் அவன் கண்களுக்கு சிக்கவில்லை. அபிராமி பூஜை தட்டுகளை அபிமன்யு, அர்ஜுன் கையில் தந்து, "டேய் ரெண்டு பேரும் சீக்கிரம் நல்ல பொண்ணு கிடைச்சா உங்களுக்கும், அப்படியே நம்ம அத்துக்கு நல்ல பையன் கிடைச்சு, அவளுக்கும் சீக்கிரம் நல்லபடி கல்யாணம் நடக்கணும்னு வேண்டிக்கோங்க" என்றவர் கண்ணை மூடி கடவுளை வேண்டிக் கொள்ள, அர்ஜூன் சாமியிடம் புலம்பிக் கொண்டு இருந்தான்.
"ஆண்டவ வர வர நான் சரக்கடிச்ச கொரங்கு மாதிரி ஆயிட்டேன் பா. நான் என்ன நினைக்கிறேன்னு எனக்கே புரியல. ஒரே குஷ்டமா இருக்கு, என்னன்னு தெரியல இப்ப எல்லாம் மனசு இடியாப்பம் மாதிரி ஒரே சிக்கலா இருக்கு... தியாவ பாக்கும் போது மனசு ரொம்ப தடுமாறுது. இப்பயெல்லாம் அந்த தக்காளி முட்டை என் கண்ணுக்கு ரொம்ப அழகா தெரிஞ்சு தொலையுது, ஒரே குழப்பமா இருக்கு கடவுளே, இதுல இந்த சித்தி வேற நல்லா தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி கூட்டி வந்து பூஜை பண்ணு, பட்டைய போடு, மணியாட்டுன்னு கடுப்ப கெளப்புறாங்க, என்னமோ நான் கண்ண மூடி வேண்டிக்கிட்ட உடனே நான் கட்டிக்க போற என் பொண்டாட்டி, என் கண்ணு முன்னாடி வந்து நிக்க போற மாதிரி தான்" என்று புலம்பியபடி கண்களை திறந்தவன், விரித்த இமைகள் விரித்தபடி அப்படியே சிலையாக நின்று விட்டான்.
அவன் கடவுளிடம் வேண்டியது அவர் காதுகளில் கேட்டு விட்டது போலும். அர்ஜூன் விழி தொட்ட இடத்தில் வந்து கொண்டிருந்தாள் அவனின் உணர்வுகள் என்னும் குளத்தில் பார்வை என்னும் கல்லை வீசி அவன் மனதை அலைபாய வைத்து அவனின் அழகு ராட்சசி.
அவள் கால்கள் தரையைத் தொடுகிறத?? இல்லை காற்றில் மிதந்து வருகிறளா?? என்பது கூட தெரியாத படி அவள் கால்களை மறைத்தது தழைய தழைய அவள் கட்டியிருந்த மயில் கழுத்து நிற பட்டுப்புடவை. எப்போதும் கரைபுரண்ட காட்டாறு போல் அடங்காமல் திரியும் அவள் நீண்ட கூந்தலை இன்று அழகாக வாரிப் பின்னலிட்டு, தலைநிறைய மொட்டு மலராத மல்லிகை பூக்கள் சூடி, துளி கூட மேக்கப் இல்லாமல் வெறும் மெரூன் நிற சின்ன வட்ட பொட்டு மட்டும் வைத்து கோயிலின் அம்மன் சிலைக்கு தான் உயிர் வந்து நடந்து வருகிறதோ... என்று எண்ணுமளவு அழகு சிலை போல், தன்னை நோக்கி நடந்து வந்த ஆத்யா மேல் இருந்து கண்களை இன்ச் கூட அகற்ற முடியவில்லை அர்ஜூனால்.
ஆத்யாவை பார்த்தது பார்த்தபடி அர்ஜூன் தன்னை இழந்து நிற்க, ஆத்யா அருகில் வர அபிராமி அவள் கன்னம் தொட்டு நெட்டிமுறித்தார்.
"அழகா இருக்க அத்துமா. அப்படியே அம்மன் சிலையே நடந்து வந்த மாதிரி இருந்துது" என்றதும் ஆத்யா முகத்தில் சின்னதாக வெட்கம் பரவ, அதை பார்த்த அர்ஜூன் கிளீன் போல்ட் ஆகியிருந்தான்.
"பூரணி மாமி தான் அத்த கட்டி விட்டாங்க" என்றவள் விழிகள் அர்ஜூனை தொட அவன் தன்னை ரசனையாக பார்ப்பதை பார்த்தவள், மனது முதன் முறையாக உள்ளே ஏதோ ஒருவித குறுகுறுப்பை உணர்ந்தது.
"மாமி, மாமா கோயில் பின்னாடி இருக்காங்க அத்த, உங்களை கூட்டி வர சொன்னாங்க" என்றதும் அபிராமி நகர அபிமன்யு ஆத்யா அருகில் வந்து,
"அத்து, அங்க பாரு ஒருத்தன் கவனிக்காமல் விட்ட பழைய தலைவர்கள் செல மாதிரி நிக்குறான், அனேகமாக உன்னை சேலையில் பார்த்து தான் ஸ்டன் ஆகி நின்னுட்டான் போல? கொஞ்சம் வேப்பிலை அடிச்சு விடு, இழுத்துட்டு வா" என்று குறும்பாக சொன்னவன் அவர்களுக்கு தனிமை கொடுக்க விரும்பி விலகி சென்றான்.
இந்த கொஞ்ச நாளாக அபிமன்யுவும், அர்ஜூனின் மாற்றங்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். அர்ஜூன் மனதில் ஆத்யா மேல் காதல் இருக்குமோ என்று அவனுக்கு சந்தேகம் வந்தாலும் ரெண்டு பேரின் மனது தெரியாமல் தான் எதையும் பேசி குழப்ப வேண்டாம் என்று நினைத்தான்.
இன்று அர்ஜூன் ஆத்யாவை பார்த்த பார்வையில் அவனுக்கு ஏதோ தோன்ற, இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று நினைத்து அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகிச் சென்றான்.
"டேய் அஜ்ஜூ, குனிஞ்சு நெத்திய காட்டு" என்று ஆத்யா சொல்ல அர்ஜுனிடம் எந்த அசைவும் இல்லை.
"டேய் அஜ்ஜூ?"
"டேய்??" என்று அவன் முகம் முன் கைகளை ஆட்டி ஆட்டி பார்த்தவள், அப்போதும் அவன் அசையாமல் இருக்க, மெதுவாக அவன் காதருகில் சென்று, "அஜ்ஜூ" என்று சத்தமாக கத்த, அர்ஜூன் சட்டென ஓரடி பின்னால் நகர்ந்தவன், அமைதியாக தியாவை வியந்து பார்த்தபடி நின்றான்.
"டேய் என்னடா ஆச்சு உனக்கு.?? இந்நேரம் நான் உன் காதுல கத்துனதுக்கு வேப்பிலை எடுத்துட்டு ஆடுவேன்னு பார்த்த, நீயென்ன மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருக்க?? என்னாச்சு உனக்கு?" என்ற கேட்டபடியே, அவன் நெற்றியில் விபூதியை வைத்து, அது அவன் கண்ணில் விழாமல் இருக்க அவனை நெருங்கி வந்து தன் இதழ் குவித்து லேசாக ஊதிவிட, அவள் மென்மையாக ஊதிய காற்று அர்ஜூன் மனதை மிக வன்மையாக தாக்கியது.
தனக்கு மிக நெருக்கத்தில் நின்ற ஆத்யாவின் அழகிய மான் விழிகளில் தன் விழியை கலக்க விட்டவன், மனதில் ஏதோ ஒரு ரசாயன மாற்றம் நடக்க, இதயம் இயல்பு தாண்டி துடிக்க, அவள் விழிகளை பார்த்தபடியே சட்டென, "தியா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் டி…" என்றான்.
முதலில் அவன் சொன்னது புரியாமல் முழித்த ஆத்யா, பின் அவன் சொன்னதின் அர்த்தம் புரிய, விழி அகல அவனைப் பார்த்தாள்.
பின் தலையை இடவலமாக ஆட்டி தன்னை சுதாரித்து, "போடா டேய் போடா... சும்மா வெளயாடிட்டு… வர வர உனக்கு எதுல ஜோக் பண்றதுன்னு அறிவே இல்லாம போச்சு, லூசு" என்று திட்டியபடி அவனை தாண்டி செல்ல, அவள் கையை பிடித்து நிறுத்தினான் அர்ஜூன்.
"நான் விளையாடல தியா. உண்மையா தான் கேக்குறேன். நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்." என்றான் உறுதியாக.
"என்….!!"
"என்னால உன்னை விட்டு இருக்க முடியாது தியா... நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்ட, எப்பவும் நம்ம ஒன்னாவே இருக்கலாம் இல்ல" என்றவனை ஒரு மிரட்சியோடு பார்த்தாள் தியா.
"அஜ்…!!"
"அஜ்ஜூ…!!"
"என்ன பேசுற நீ..?? நம்ம எப்டிடா?" என்றவள் உதடுகளில் வார்த்தை வராமல் தந்தியடித்தது.
"ஏன்டி?? ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?? எனக்கென்னடி கொறச்சல்..?? என்னை விட யாரால உன்ன நல்லா பாத்துக்க முடியும்? நீயே சொல்லு… நீதான சொன்ன, நான் யாரை சொன்னாலும் கண்ணை மூடிட்டு கல்யாணம் கட்டிக்கிறேன்னு. இப்ப என்னை கல்யாணம் கட்டிக்க சொன்ன இப்படி முழிக்கிற.?? மரியாதையா என்னை கல்யாணம் பண்ணிக்கோ, அப்பதான் நான் எப்பவும் உன் கூடவே இருக்க முடியும். இல்லாட்டி சித்தி நாளைக்கே வேற எவனையாவது புடுச்சி உனக்கு கட்டி வைக்கப் பாப்பாங்க, கௌதம் வந்த இந்த நாளு நாளைக்கே எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு. எங்க நீ என்னை விட்டு போய்டுவியோன்னு மனசு துடிச்ச துடிப்பு இருக்கே... ஐ காண்ட் தியா.?! எப்படியோ அவன் தொல்லை ஒரு வழியா முடிஞ்சிது. மறுபடியும் இன்னொருத்தன் வந்தான்னு வையேன், அய்யோ சாமி என்னால முடியாது. அதனால தான் சொல்றேன், நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்." என்று மூச்சுவிடாமல் பேச,
ஆத்யா ஸ்லோமோஷனில் இமைகள் கொட்ட அவனை பார்த்து மிரண்டு போய் வாய்மூடி மௌனமாக நின்றாள்.
அவள் மௌனமாக இருந்த ஒவ்வொரு நொடி அர்ஜூன் மனதிற்குள் ஒரு போராட்டமே நடந்தது. அந்த நேரம் அவன் மனதில் தோன்றியதை அவன் உடனே கேட்டுவிட்டான் தான். ஆனால், ஆத்யா அதை எப்படி எடுத்துக்கொள்வாள் என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. அவனை பொறுத்தவரை அவன் வாழ்நாள் முழுதும் அவனின் தியா அவனுடன் இருக்க வேண்டும். அதற்கு திருமணம் தான் சிறந்த வழி என்று நினைத்து, அதை அவளிடம் கேட்டும் விட்டான். ஆனால், ஆத்யா என்ன நினைக்கிறாள்?" என்று யோசிக்கும்போது அவன் இதயம் பயத்தில் துடித்தது.
"தியா நீ எனக்கு .??" என்று அர்ஜூன் ஏதோ சொல்ல வர, அந்த நேரம் அபிராமியும் மற்றவரும் அங்கு வந்துவிட அர்ஜூனால் எதுவும் பேச முடியவில்லை.
"அர்ஜூன், அத்து பூஜை முடிஞ்சிது, வாங்க கிளம்பலாம்" என்ற அபிராமியை தடுத்த ஆத்யாவின் மாமி பூரணி,
"அபிராமி இதோட திங்கட்கிழமை தான அத்து காலேஜ் போகணும். ஒரு ரெண்டு நாள் அவ எங்க கூட இருக்கட்டும, சன்டே நைட் அவளை கௌதமே பெங்களூர் கொண்டு விட்டுவான்" என்று கேட்க,
"இதென்ன கேள்வி பூரணி, அவ உங்க வீட்டு பொண்ணு. அவளை கூட்டி போக நீங்க என்கிட்ட பர்மிஷன் கேக்கணுமா என்ன?? அத்து நீ மாமி கூட கிளம்பு, போனதும் ஃபோன் பண்ணு, அர்ஜூன் பெங்களூர் வரும்போது உன்னோட திங்ஸ் எல்லாம் அவன்கிட்ட கொடுத்து விடுறேன்" என்றவர், ஆத்யாவை அவள் மாமா, மாமியுடன் அனுப்பி வைக்க, அர்ஜூன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.
"ப்ளீஸ் தியா என்னை விட்டு போகாதடி" என்று கண்களிலேயே அவளிடம் கெஞ்சியவனின் மனமோ, "அட்லீஸ்ட் என்னை நாலு வார்த்தை திட்டிட்டாது போடி… நீ இப்படி அமைதியா போறது எனக்கு மனசு பிசையுதுடி" என்று மனதிற்குள் புலம்ப அவன் மனதின் மொழியை அவன் கண்கள் பிரதிபலிக்க, அது ஆத்யாவுக்கு புரிந்ததோ என்னவோ அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
பூரணியுடன் செல்லும் போது திரும்பி திரும்பி அர்ஜுனை பார்த்தபடியே காரில் ஏறியவள், அர்ஜுனை பார்க்க, கண்ணில் சிறையிட்ட கண்ணீர் முத்துக்கள் அவள் கட்டுப்பாட்டையும் மீறி அவள் கன்னத்தில் உருண்டோடியது.
ஆத்யாவுக்கு அர்ஜூன் என்றால் உயிர். அவள் வாழ்க்கையில் பிரியாவுக்கு அடுத்த இடம் அர்ஜூனுடையது. முதலில் கௌதமுடன் கல்யாணத்திற்கு சம்மதித்த ஆத்யாவுக்கு, பின்பு தான் புரிந்தது திருமணமான பிறகு அர்ஜூனை விட்டு பிரிய வேண்டுமென்று, அந்த ஒரே காரணத்திற்காக தான் கௌதமுடன் கல்யாணம் வேண்டாம் என்றாள். அவளுக்கு எப்போதும் அர்ஜூனுடன் இருக்க வேண்டும். அது ஏன் என்று கேட்டாள் அவளிடம் அதற்கு பதில் இல்லை. ஆனால், அவனை விட்டு செல்ல அவளால் முடியாது. அப்படி இருக்க, இன்று அர்ஜூன் கேட்ட கேள்வி அவளை பெரிய குழப்பத்தில் கொண்டு விட்டு விட்டது. அவள் நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை. அவன் கேட்டதில் ஆத்யாவுக்கு துளி கூட வருத்தம் இல்லை. அவன் கேட்ட கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லையே என்பது தான் அவளை வதைத்தது. அந்த நொடி அவள் எப்படி உணர்ந்தாள் என்பது அவளுக்கே புரியாத போது அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல், அந்த நேரம் தனக்கு யோசிக்க தனிமை வேண்டும் என்று நினைத்து தான் பூரணி அழைத்தவுடன் அவர்களுடன் வந்துவிட்டாள்.