அர்ஜூன் & ஆத்யா 8

 


மெய் 8

அர்ஜூனை அவன் ரூமில் படுக்க வைத்து ஆத்யா நகர, அவள் கையை பிடித்த அர்ஜூன், அவள் முகத்தையே ஆழமாக பார்த்தான்.

"என்ன அஜ்ஜூ ஏதாவது வேணுமா??" என்று அவள் வாஞ்சையாக கேட்கவும், இல்லை என்று தலையாட்டி, "நா கொஞ்ச நேரம் உன் மடியில் படுத்துக் கட்ட தியா" என்று சிறு குழந்தை போல் கேட்டவனை செல்லமாக முறைத்தாள் ஆத்யா. 

கட்டிலில் அவன்‌ அருகில் உட்கார்ந்து அவன் தலையை எடுத்து அவள் மடியில் வைத்துக் கொண்டு இதமாக அவன் முடியை அவள் கோதி விட்டாள்.

"தியா...!"

"ம்ம்ம்...!"

"தியா...!"

"ம்ம்ம் சொல்லுடா...!"

"தியா…!"

"டேய் என்னடா உன் பிரச்சனை? தியா, தியான்னு‌… அதான் என்னன்னு கேக்குறேன் இல்ல, சொல்லி தொலையேன்" என்று அவன் தலையில் மெதுவாக அவள் கொட்ட,

"தியா உனக்கு எப்பவும் நான் தான முக்கியம், எனக்கு அப்புறம் தான கௌதம்" என்று அப்பாவியாக கேட்டவனின் முகம் பார்த்தவளுக்கு, முதலில் அவன் சொன்னது புரியாமல் குழம்பி, பின் அதன் அர்த்தம் புரிய இதழ் விரித்து அழகாக சிரித்தாள்.

"டேய் எரும என்ன கேள்விடா இது? இந்த உலகத்தில் எனக்கு ரொம்ப முக்கியமான ஒருத்தன் இருக்கான்னா அது நீ தான்டா. கௌதம் எனக்கு சொந்தம், அதோட நல்ல ப்ரண்ட்டும் கூட, அதனால எனக்கு அவனை பிடிக்கும். ஆனா, நீ அப்படி இல்லடா...

"நீ  எனக்கு..??" 

"நீ எனக்கு..??"

"ப்ச்ச்... எனக்கு சொல்ல தெரியல அஜ்ஜூ. ஆனா, எனக்கு உன்னைவிட யாரும் பெருசு இல்ல" என்று உறுதியாக சொன்னாள்.

அர்ஜூன் அவளின் அந்த வார்த்தையில் மனம் நிறைந்து, அமைதியாக அவள் மடியிலேயே உறங்கி விட, அவன் நெற்றியில் மென்மையாக முத்தம் வைத்து, அருகில் இருந்த தலையணையில் அவனை படுக்க வைத்து விட்டு ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்கு சென்றாள் ஆத்யா. 

தன்னவள் தந்த அரவணைப்பில் நிம்மதியாக தூங்கியவன் துயிலை விடியற்காலை பொழுதின் பனிக்காற்று தட்டி எழுப்ப, கண்விழித்து எழுந்த அர்ஜூன் மனதில் அடுத்த நொடி, நேற்று இரவு தன்னுள் ஏற்பட்ட மாற்றங்கள் தான் நினைவுக்கு வந்தது. அவன் மனக்கண் முன் கன்னக்குழி விழ சிரிக்கும் தியாவின் முகம் வந்து நிறைய அவனையும் அறியாமல் இமைகள் தாழ்ந்து மெல்லிய குறுநகை அவன் முகத்தில் பரவியது. 

பெண்களின் வெட்கம் அழகென்றால், ஆண்மை நிறைய ஒரு ஆடவன் வெட்கம் அதை விட அழகு தான்.

தன்னுள் என்ன நடக்கிறது, புதிதாக மனதில் ஏன் இந்த அலைக்கழிப்பு, இந்த உணர்வின் பெயர் என்ன என்று யோசித்த அர்ஜூன் மனம், உடனே தன்னவளை காண ஆவல் கொள்ள அவள் அறைக்கு நோக்கி விரைந்தான்.

சிறு குழந்தைபோல் கை, கால்களை சுருக்கிக் கொண்டு  தூங்கும் தன்னவளை விழி நிறைய பார்த்து, மெதுவாக அவள் கன்னம் வருடம் போன அர்ஜூன் கரங்கள் முதன் முறையாக நடுங்கியது.

ஓராயிரம் முறை உன்னை அனைத்திருக்கிறேன். நீ என் தோழி என்ற உரிமையில்… ஆனால், இன்று என்னவள் என்றாகிய உன் கன்னம் தீண்ட கைகள் நடுங்குதடி...

தன் மாற்றத்தை எண்ணி தன்னுள்ளேயே சிரித்தவன், தன் உணர்வை மறைத்துக்கொண்டு ஆத்யாவை எழுப்பி அழைத்துக் கொண்டு வாக்கிங் கிளம்பினான். 

அர்ஜுனிடம் ஏற்பட்ட மாற்றம் எதையும் அறியாத ஆத்யா.  கையில் இருந்த டீயை  குளிருக்கு இதமாக கைகளில் இறுக்கி பிடித்து அதன் சூட்டை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தாள்.  

குளிரில் நடுங்கும் உதட்டிற்கு இதமாக டீயை ரசித்து குடிக்கும் அழகு சிலையாக, அன்றலர்ந்த மலர் போல் அழகாய் இருந்தவளை அர்ஜூன் தன்னை மறந்து இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, சூடாக கையில் ஏதோ பட "ஸ்ஸ்ஸ்ஆஆ" என்று கத்தி விட்டான். 

"ஏய் பிசாசு.?? இப்ப எதுக்குடி எனக்கு சூடு வச்ச?" என்று கத்தியபடி, டீ கிளாஸ் பட்டு எரிந்த தன் கைகளை "உஃப் உஃப்" என்று ஊதி கொண்டிருந்தான்.

"பின்ன என்னடா..?? நான் எவ்ளோ நேரமா அஜ்ஜூ அஜ்ஜூன்னு கத்திட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு ஏதோ காணாததை கண்ட மாதிரி என் மூஞ்ஜையே பார்த்துட்டு இருக்க, அப்படி என்னடா புதுசா தெரியுது என் மூஞ்சில" என்று அவனை முறைக்க,

"ஆமா டி.?? இது நாள் வரை இல்லாம இப்பயெல்லாம் நீ எனக்கு புதுசா, ரொம்ப புதுசா தான் தெரியுற. ஆனா, அதுக்கு என்ன அர்த்தமுன்னு தான் எனக்கு புரியல. ஆனா, உன்னை பார்த்துட்டே இருக்கணும்னு மட்டும் தோணுது" என்று அவன் மனம் மௌனமாக மொழிய வாய் மட்டும் "அப்படியெல்லாம் ஒன்னும் இல்லட. சும்மா தான்." என்று பொய்யுரைத்து. 

"தியா நீ என்ன முடிவு பண்ணி இருக்க??"

"எதை பத்தி கேக்குற அஜ்ஜூ, இப்படி தலையும் இல்லாம, வாலும் இல்லாம, என்ன முடிவு பண்ணி இருக்கேன்ன என்ன அர்த்தம்??" 

"கௌ…."

" கௌதம்…"

"கௌதம் அப்பா உங்க ரெண்டு பேர் கல்யாணம் பத்தி பேசினார் இல்ல, அதை பத்தி தான் கேக்குறேன். உனக்கு கௌதமை பிடிச்சிருக்கா, இந்த கல்யாணம் உனக்கு ஓகே வா" என்று கேட்கும் போது அர்ஜூன் குரல் கமறி விட,
அர்ஜூனை நிமிர்ந்து ஆழமாக ஒரு பார்வை பார்த்தாள் ஆத்யா.

  "எனக்கு கௌதமை பிடிச்சிருக்கு அஜ்ஜூ" என்று சிரித்த முகமாக சொல்ல, அர்ஜூன் மனதில் சொல்ல முடியாத ஒருவித வலி.

ஆத்யா கௌதமை பிடிச்சிருக்கு என்று சொல்லிய நொடி அர்ஜூன் மனதில், தனக்கு சொந்தமான ஒன்று தன் கையை விட்டு போவது போல உணர்ந்தான். வேதனை நிறைந்த விழியோடு ஆத்யாவை பார்க்க விரும்பாதவன் தலையை குனிந்து கொள்ள,

"ஏய் அஜ்ஜூ என்னடா? கௌதமை புடிச்சிருக்கான்னு கேட்ட? புடிச்சிருக்குன்னு சொன்னதும் வாயை மூடிக்கிட்ட, எதையே யோச்சிட்டு இருக்கப் போல? என்ன ஆச்சு உனக்கு?" என்று இரு புருவங்களையும் உயர்த்தி கேட்டாள்.

"அதான் நீ கௌதமை புடிச்சிருக்குன்னு சொல்லிட்டியே, அப்புறம் கேக்க என்ன இருக்கு. சித்தி கிட்ட சொல்லி மேல ஆக வேண்டியத பார்க்கனும் இல்ல, அத பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன் போதுமா… இப்ப சந்தோஷமா...?" என்று பல்லை கடித்துக்கொண்டு கோபமாக கத்த, 

"டேய் இப்ப நீ எதுக்கு இப்படி பல்ல கடிக்கிற? கோவமா வேற கத்துற, நா அப்படி என்ன சொல்லிட்டேன், நீ கேட்ட கேள்விக்கு தான பதில் சொன்னேன்" என்றவள் முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டாள்.

"ஏய்.!! ஏய்!! பிராடு நடிக்காதடி… உனக்கு நான் ஏன் இப்ப உன் மேல கோவமா இருக்கேன்னு நிஜமா தெரியாது?"  என்று முறைக்க,

"என்ன அஜ்ஜூ இது, என்னை போய் பிராடு அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்ற, மீ அப்பாவி யூ நோ. நிஜமா நீ என்ன சொல்றேன்னு எனக்கு புரியல, ப்ராமிஸ்" என்று அவள் தலையில் கை வைத்து சத்தியம் செய்ய, அர்ஜூன் சட்டென அவள் கையை எடுத்து தன் தலை மீது வைத்து,

"நீ இப்ப சொன்னியே! அதை அப்படி  இப்ப சொல்லுடி பார்ப்போம்" என்றதும் ஆத்யா சட்டென தன் கையை இழுத்துக் கொண்டாள்.

"முடியாது போடா, உன் தலையில கை வச்சு என்னால பொய் சொல்ல முடியாது" என்று முகத்தை பாவம் போல் வைத்துக் கொள்ள, 

"ம்ம்ம் அப்படி வாடி வழிக்கு எல்லா தெரிஞ்சிக்கிட்டு, ஏன் கோவமா இருக்கேன்னு வேற கேக்குற நீ? இதுல கௌதமை புடிச்சிருக்குன்னு எக்ஸ்ட்ரா மெசேஜ் வேற. போடி அந்தாண்ட" என்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

ஆத்யா அவன் அருகில் சென்று நறுக்கென்று அவன் தலையில் கொட்டி, "சரியான லூசுடா அஜ்ஜூ நீ, உன்னால எப்படி என்னை பிரிஞ்சு  இருக்க முடியாதோ, அப்படி தானடா எனக்கும். என்னால மட்டும் உங்களை பிரிஞ்சு கல்யாணம் பண்ணிட்டு அவ்ளோ தூரம் போக முடியுமா என்ன??"

"அதெல்லாம் ஒன்னு இல்ல, என்னால உன்னை பிரிஞ்சு இருக்க முடியும். நீ ஒன்னும் அவ்ளோ ஒர்த் எல்லாம் இல்ல. நீ இல்லனா நான் உக்கார்ந்து கவலைப்பட" என்று அவன் கெத்து காட்ட,

"ஓஓஓஓ அப்படிங்களா சார்...  அப்புறம் ஏன் சார் நேத்து நைட் என் மடியில படுத்துட்டு அந்த புலம்பு பொலம்புனீங்க? கண்ணெல்லாம் வேற கலங்கி இருந்துச்சு" என்று அவன் காலை வார, அர்ஜூன அவள் காதை பிடித்து திருகினான்.

"தெரியுதுல்ல? தெரியுது இல்லடி? நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு. அப்புறம் ஏன்டி நா கௌதமை புடிச்சிருக்கன்னு கேட்டதுக்கு புடிச்சிருக்குன்னு சொன்ன?" என்று அவள்‌ தலையில் கொட்டு வைக்க, வலி தாங்க முடியாமல் தலையை அழுத்தி தடவிய ஆத்யா,

"லூசு அஜ்ஜூ நீ கௌதமை புடிச்சிருக்கான்னு தான கேட்ட? அவனை எனக்கு புடிக்கும், சோ புடிச்சிருக்குன்னு சொன்னேன். நீ கௌதமை கல்யாணம் பண்ணிப்பியான்னு கேட்டிருந்த, நான் அதெல்லாம் என்னால முடியாது. என்னோட அத்த, மாமா, அபி அண்ணா, என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் விட்டு வரமுடியாது" எனும்போது அர்ஜூன் முகம் வாடி விட, ஆத்யா அவன் அருகில் அமர்ந்து அவன் தோளில் கை போட்டு, "அதோட இந்த அஜ்ஜூ எருமையை விட்டு என்னால வரவே முடியாது. அவனை விட்டு வர்ரது என்னோட உயிரையே இங்க விட்டு வர மாதிரி. சோ கௌதம் கூட எனக்கு 'நோ' கல்யாணம்னு சொல்லி இருப்பேன்" என்று சொல்லி அவள் கண்ணடிக்க, அவளை தன் தலைக்கு மேல் தூக்கி சுற்றினான் அர்ஜூன்‌.

"சமத்து குட்டி. என்னோட செல்லக்குட்டி, என்னோட தியான்னா தியாதான்" என்று துள்ளி குதித்தான். 

"டேய் டேய் ..?? என்னடா இது..??  எரும.!!  கீழ இறக்கி விடுடா" என்று ஆத்யா அலற, அர்ஜூன் அவளை இறக்கி விட்டு, "எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு தியா. எங்க நீ கௌதமை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிடிவியேன்னு, இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு" என்று அவன் சந்தோஷத்தில் குதிக்க,

அவன் கன்னத்தை பிடித்து தன் புறம் திரும்பிய ஆத்யா, "அதெப்பிடி  நான் உன்னை தனியா விட்டு போவேன்." என்று பீலிங்காக சொல்ல, அர்ஜூன் அவளை ஆசையாக பார்த்து, "நிஜமாவாடி சொல்ற? உன்னால என்னை விட்டு போக முடியாது தான" என்று அவன் ஆர்வமாக கேட்க,

"ஆமாடா, பின்ன நான் உன்னை விட்டு போய்ட்டா…" 

" நீ…"

"நீ….!!" என்று இழுத்து

"நீ ரொம்ப நிம்மதியா, சந்தோஷமா இருப்பியே, அதை எப்படி என்னால் அனுமதிக்க முடியும். நோ சான்ஸ்… கடைசி வரை நான் உன் கூடவே இருந்து உன்னை இம்சை பண்ணிட்டே இருக்கணும்" என்று இதழ் விரித்து சத்தமாக சிரிக்க,

இங்கு அர்ஜூன் மனமோ, "நீ சொன்னது நடக்கணும்டி. என்னமோ தெரியல இப்ப எல்லாம் நீ எனக்கு ரொம்ப வித்தியாசமா தெரியுற, கௌதமையும், உன்னையும் பார்க்கும்போது புதுசா எனக்குள் பொறாமை எல்லாம் எட்டி பாக்குதுடி. என்னோட கடைசி நிமிஷம் வரை நீ என் கூடவே இருக்கணும். இந்த உலகத்தை விட்டு போகும் போது நா கடைசிய பாக்குற முகம் என்னோட தியா முகம தான் இருக்கணுன்னு மனசு ஏங்குதுடி" என்று அவன் மனம் புலம்பித் தவித்தது. 

"தியா!! அப்ப உடனே நம்ம வீட்டுக்கு போய், உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு சொல்லிடலாம். பாவம் கௌதம் அவன் பாட்டுக்கு மனசுல ஏதும் ஆசைய வளத்துக்கப்போறான்" என்று அர்ஜூன் அவசரமாக ஆத்யா கையை பிடித்து இழுக்க, 

"அதெல்லாம் நேத்தே கௌதம் கிட்ட சொல்லிட்டேன். எனக்கு இந்த ஊர விட்டுட்டு, இந்த அஜ்ஜூ எருமையை விட்டுட்டு யூ.எஸ் எல்லாம் வரமுடியாது. சோ நீ வேற நல்ல பொண்ணை பாத்துக்கன்னு" என்று தோளை குலுக்க, அர்ஜூன் மனம் வானில் பறந்து ஆனந்த கூத்தாடா, அடுத்து ஆத்யா சொன்ன வார்த்தையில் பொத்தென தரையில் விழுந்தான்.

"டேய் அஜ்ஜூ, நா கௌதமை கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொன்னவுடனே, அத்த அடுத்த மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சுடுவாங்க, சோ அதுக்கு முந்தி நீயே எனக்கு நல்ல பையன பாரு,  நீ யாரா சொல்றியோ அவனை நான் கண்ணமுடிட்டு கல்யாணம் பண்ணிக்குறேன். பட், ஒன் கண்டிஷன், நான் கடைசி வரை உன்னோட, அத்த, மாமா, அபி அண்ணா கூட, பக்கத்துலயே தான் இருக்கணும். அதுக்கு தகுந்த பையன பாரு" என்றவள் அங்கிருந்து நகர, அர்ஜூன் தலையில் கை வைத்துக் கொண்டான்.

"அடிப்பாவி சண்டாளி, இங்க ஒருத்தன் எங்க இவ வேற யாரையாவது கல்யாணம் கட்டிக்கிட்டு என்னை விட்டு போய்டுவளோன்னு தவிச்சுட்டு இருக்கேன், இவ என்னென்ன என்னையே இவளுக்கு நல்ல பையன பாக்க சொல்றாளே, இவளா என்ன பண்ண தகும், இவ லூசா இல்ல, என்ன லூசாக்க இப்படி பண்றாள" என்று மனதில் அவளை வறுத்தெடுத்தபடி, அவள் பின்னாலேயே சென்றான்.