அர்ஜூன் & ஆத்யா 7
மெய் 7
ஆத்யா காலேஜில் படிக்கும் ஒரு மாணவன் ஆத்யாவை காதலிப்பதாக சொல்ல, அவளுக்கு அதில் விரும்பும் இல்லை என்று சொல்லியும் அவன் தொடர்ந்து அவளுக்கு தொல்லை கொடுத்தான். ஒரு நாள் அவன் எல்லை மீறி நடக்கப் பார்க்க ஆத்யா அவனை அடித்து தொம்சம் செய்துவிட விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை போய் விட்டது.
ஆத்யாவின் தோழிகள் அர்ஜூனுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்ல அர்ஜூன் உடனே அடித்து பிடித்து போலீஸ் ஸ்டேஷன் விரைந்தான்.
அர்ஜூன் போலீஸ் ஸ்டேஷன் உள்ளே நுழையும் போது உள்ளிருந்து சத்தமாக ஆத்யாவின் குரல் கேட்டது. அர்ஜூன் என்னமோ ஏதோ என்று பயந்து உள்ளே செல்ல, அங்கு அவன் கண்ட காட்சியில் இது உண்மையா, பொய்யா என்று முடிவெடுக்க முடியாது இமைகளை மூடி மூடி திறந்தான்.
அடிபட்ட அந்த பையனின் தந்தை பெரிய அரசியல் செல்வாக்கு மிக்க ஆள் என்று தெரிந்து பதறி அடித்து ஓடி வந்த அர்ஜூன் கண்ணில் கண்ட காட்சி போலீஸ்சும், அந்த அரசியல் பிரமுகரும் ஆத்யாவிடம் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.
ஆத்யா அவர்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தாள்.
"இங்க என்னடா நடக்குது?" என்று குழம்பிய அர்ஜூன் "தியா" என்று குரல் கொடுக்க, ஆத்யா திரும்பி அர்ஜூனை பார்த்தாள்.
"டேய் அஜ்ஜூ, நீ இங்க என்ன பண்ற? இந்நேரம் நீ ஆபீஸ்ல தானே இருக்கணும். போலீஸ் ஸ்டேஷனில் உனக்கென்ன வேலை?" என்று கேட்க.
'அடியேய் அதை நான் கேக்கணும்டி'என்று நினைத்தவனுக்கு எங்கேயாவது போய் முட்டிக்கலாம் போல இருந்தது.
"டேய் இங்க ஒருத்தி கேட்டுட்டு இருக்கேன். நீ வாயை மூடிட்டு இருந்தா என்ன அர்த்தம்? சரி சரி வந்தது வந்துட்ட கொஞ்சம் வெயிட் பண்ணு இதுங்களை ஒரு வழி பண்ணிட்டு வரேன். ரெண்டு பேரும் சேர்ந்தே வீட்டுக்கு போலாம்." என்றவள் திரும்பி அவர்களை பார்க்க, அந்த அரசியல்வாதியும், போலீஸ்சும் அவளிடம் இருந்து தப்பிக்க வழி தெரியாது முழித்துக் கொண்டிருந்தனர்.
அதை பார்த்து அர்ஜூன் பொறுமை இழந்தவன், "ஏய் தியா என்னடி இது?? இங்க என்ன நடக்குது??" என்று அவளை அதட்டினான்.
நடந்தது இதுதான். தன்னிடம் அந்த பையன் அவனை காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்ய, ஆத்யாவுக்கு ஏதோ தவறு நடக்க போகிறது என்று உள்ளுக்குள் மணி அடித்தது, உடனே அருகில் இருந்த தன் தோழிக்கு கண்களால் ஏதோ சைகை செய்ய அதை புரிந்து கொண்ட அவள் தோழியும் அங்கு நடப்பதை தன் ஃபோனில் ரெக்கார்ட் செய்ய தொடங்கினாள். அந்த மாணவன் எல்லைமீறி ஆத்யாவிடம் தவறாக நடக்க முயல அவனை அடித்து துவைத்தாள் ஆத்யா.
ஆத்யா அடித்த அடியில் கை, கால் உடைந்து, முகமெங்கும் அடிபட்டு இருந்த மகனை பார்த்த அவன் தந்தை போலீசில் ஆத்யா மீது கம்ப்ளைன்ட் கொடுத்து அவளை பழிவாங்க பார்க்க, இங்கு நிலைமை தலைகீழாக போனது.
ஆத்யா ஃபோனில் இருந்த வீடியோவை காட்டி "உங்க பையன் என்கிட்ட தப்பா நடக்க பார்த்ததுக்கு இது ஒரு எவிடன்ஸ் போதும். இத மீடியா, டிவி, இன்டர்நெட்னு போட்டு உங்களையும், அந்த உதவாக்கரை உங்க பையனையும், என் மேல பொய் கேஸ் போட்ட இந்த போலீசையும் சந்தி சிரிக்க வைக்கல என் பேரு ஆத்யா இல்லை" என்று சவால் விட, போலீஸ், அரசியல்வாதி ரெண்டு பேரின் பேஸ்மெண்டும் ஆட்டம் கண்டு விட்டது.
"அம்மாடி ப்ளீஸ்மா இந்த வீடியோவை வெளிய விட்டுடாதாமா. அப்புறம் என் அரசியல் வாழ்க்கையே இருண்டு போய்டும். ப்ளீஸ்மா இனி என் பையன் எந்த பொண்ணுக்கிடடையும் இப்டி நடந்துக்க மாட்டான். ப்ளீஸ்மா ப்ளீஸ்" என்று ஆத்யாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொஞ்சிக் கொண்டிருக்க, ஆத்யா முடியவே முடியாது என்று கத்த, அந்த நேரம் தான் அர்ஜூன் அங்கு வந்தான்.
அர்ஜூன் ஆத்யாவை சமாதானம் செய்து, "ப்ளீஸ் தியா இதை இனி நான் பாத்துக்குறேன். நீ அமைதியா இரு" என்று அவளை சமாதானம் செய்து, ஆத்யா மீது அந்த அரசியல்வாதி கொடுத்த கேஸ்ஸை வாபஸ் வாங்க சொல்லிவிட்டான்.
"இனி உங்க பையனும், நீங்களும் என் தியா விஷயத்தில் தலையிட்ட அதுக்கு பிறகு உங்க தலை இருக்காது" என்று எச்சரித்து விட்டு ஆத்யாவை அழைத்துச் சென்றான். தன் நண்பன் ஒருவனுக்கு ஃபோன் போட்டு, "என் தியா கிட்ட தப்பா நடந்த அந்த நாய்க்கு இனி எந்த பொண்ணு மேலயும் கை வைக்கிற எண்ணம் கூட வரக்கூடாது. இன்னைக்கு நைட்டே எல்லாத்தையும் முடிச்சிடு" என்றவன் மேலும் சிலவற்றை சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்துவிட்டு ஆத்யாவுன் கிளம்பினான்.
இங்கு நடந்ததை கேள்விப்பட்ட அபிராமி உடனே ஆத்யாவை பார்க்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதே நேரம் ஆத்யாவுக்கும் கல்லூரி லீவு என்பதால் ஆத்யா ஊட்டிக்கு கிளம்பிவிட்டாள்.
அபிராமிக்கு ஆத்யாவின் எதிர்காலத்தை நினைத்து பயம் வர, அதற்காக அவர் ஒரு முடிவெடுத்து அனைவரிடமும் அதை சொல்ல, அர்ஜூனும், ஆத்யாவும் அதை கேட்டு அதிர்ந்து விட்டனர்.
"அய்யோ அத்த… எனக்கு இப்ப என்ன வயசாச்சு? எதுக்கு இப்ப எனக்கு கல்யாணம். நான் இன்னும் படிப்பை கூட முடிக்கல, அதுக்குள்ள கல்யாணமா?" என்று ஆத்யா கடுப்பாக,
"ஆமாடி நீ இப்படி தனியா இருக்குறதால தான் கண்ட நாயும் உன் கிட்ட வம்பு பண்ணுது. நீயும் அந்த நாய் கை, காலை உடைக்க வேண்டிய வருது. பேசாம உனக்கு ஒரு கல்யாணத்தை செஞ்சு வச்சிட்ட எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும் பாரு, நீ கல்யாணம் பண்ணிட்டு கூட மேல படிக்கலாம்" என்று அவர் பிடியில் அவர் உறுதியாக நிற்க, ஆத்யா அவரை எப்படி கரெக்ட் செய்வது என்று மண்டையை செறிந்து கொண்டிருந்தாள்.
"நீங்க சொல்றது சரி சித்தி. ஆனா, இந்த ராட்சசிய கட்டிக்க எந்த லூசு பையன் வருவான். உயிர் மேல ஆசை இருக்க ஒருத்தன் வரமாட்டான்" என்று அர்ஜூன் ஆத்யாவை வம்பிழுத்தான்.
'போடா டேய், உன் மொகரகட்டைக்கு ஒரு பொண்ணு கிடைக்கும்போது எனக்கு ஒரு இளிச்சவாயன் கிடைக்க மாட்டானா என்ன… அத்தே நீங்க சொல்றது ஓகே தான். ஆனா..." என்று அவள் இழுக்க, சிவா அவள் கன்னத்தை அன்பாக வருடினார்.
"நீ நெனக்குறது எனக்கு புரியுது அத்து. உன்னோட கல்யாணம் எங்களுக்கு முக்கியம் தான். அதுக்காக உனக்கு பிடிக்காத ஒன்னை நாங்க உன்மேல திணிக்க மாட்டேன். உனக்கு பிடிச்ச மட்டும் தான் கல்யாணம்." என்ற சிவாவை கட்டிக்கொண்ட ஆத்யா,
"தேங்க் யூ மாமா, தேங்க்யூ சோ மச். நீங்க மாப்பிள்ளை பாருங்க. ஆனா, ஒன்னு கல்யாணத்துக்கு அப்புறம் நான் என்னோட படிப்பை கன்டின்யூ பண்ணுவேன். அதுக்கு ஒத்துக்குற பையனா பாருங்க" என்றவள், அர்ஜூனுக்கு இதழை சுழித்து ஒழுங்கு காட்டிவிட்டு செல்ல, அர்ஜூன் அவள் குறும்பு தனத்தை எண்ணி சிரித்துக் கொண்டே நகர்ந்தான்.
அந்தி மாலை சூரியன் மறைந்து நிலவு பெண் உலவும் நேரம் அர்ஜூன் தன் அறையின் பால்கனியில் நின்று நீர்த்துளிகள் பனித்துளியாக மாறும் அழகை ரசித்துக் கொண்டிருக்க, அவன் அறைக்குள் சூடான பாலுடன் நுழைந்தார் அபிராமி.
"டேய் அர்ஜூன் இந்த இந்த பாலைக் குடி. நல்லா சூடா இருக்கு குளிருக்கு நல்லா இருக்கும். தூக்கம் நல்லா வரும்" என்று அவனிடம் பால் கிளாஸைக் கொடுக்க, அர்ஜூன் அதை வாங்கியவன, "சித்தி இப்ப நீங்க ஃப்ரீ தானே, கொஞ்சம் பேசணும்"
"என்னடா ஆத்யா கல்யாணம் பத்தி நான் சொன்னேனே, அதை பத்தி எதும் கேட்கணுமா" என்க அர்ஜூன் ஆமாம் என்று தலையாட்டினான்.
"நீங்க எடுத்த முடிவு நல்ல முடிவு தான் சித்தி. ஆனா," என்று அர்ஜூன் இழுக்க,
"என்னடா? என்னாச்சு? ஆத்யா கல்யாணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா" என்று அபிராமி அவனை கேள்வியாக பார்த்தார்.
"இல்ல சித்தி அவளுக்கு கல்யாணம் பண்றது நல்லா விஷயம் தான். தியாக்கும் கல்யாண வயசு தான். அவ கூட சண்டை போட ஒரு ஆள் கெடச்சா அவ வெளிய போய் யார் கை, காலையும் உடைக்க மாட்டா. அது நல்ல விஷயம் தான். ஆனா, அவ போலீஸ் ஸ்டேஷன் போனது, இப்ப இருக்க இந்த சூழ்நிலையில் அவளுக்கு கல்யாணம் தான் ஒரே பாதுகாப்புன்னு நெனச்சு நீங்க இந்த முடிவை எடுத்திருந்தா இது வேணா சித்தி. அவளை பாதுகாப்பா பார்த்துக்க நம்ம எல்லாரும் தான் இருக்கோமே,"
என்ற அர்ஜூனை அபிராமி புரியாமல் பார்க்க,
"தியாக்கு கல்யாணம் நடந்த எனக்கும் சந்தோஷம் தான் சித்தி, ஆனா, அது அவளுக்கு புடிச்சு, அவ விருப்பத்துடன் நடக்கணும்னு நா நெனைக்கிறேன் சித்தி. அதோட இந்த கல்யாணத்தால் தியா படிப்புக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. அவ டாக்டராகனும்றது பிரியா ஆன்ட்டியோட கனவு. அது இந்த கல்யாணத்தால் பாதிக்கப்பட கூடாது. அதான் எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு சித்தி. அவளுக்கு வர மாப்பிள்ளை அவளை நல்லா புரிஞ்சுகிட்டு, அவளா நல்லா பாத்துக்கணும் இல்லை" என்று தன் தியாவின் எதிர்கால வாழ்க்கையில் எந்த கஷ்டமும் வரக்கூடாது என்ற பயத்தில் அர்ஜூன் பேச, அபிராமி அவன் தலையை வாஞ்சையாக வருடினார்.
"ஏன்டா சின்ன பையன் நீயே இவ்ளோ யோசிக்கும் போது. நானும் உங்க சித்தப்பாவும் இதையெல்லாம் யோசிக்காமய இருப்போம். அவளுக்கு வரப்போற மாப்பிள்ளை அவளுக்கு நல்ல துணையா இருப்பான். அதோட அவளோட படிப்புக்கும் துணையா இருப்பான்" என்று சந்தோஷமாக சொல்ல, அர்ஜூன் முதலில் அவர் சொல்வது புரியாமல் முழித்தான்.
பின் ஏதோ புரிய சித்தி, "அப்ப தியாக்கு நீங்க மாப்பிள்ளை பார்த்துட்டிங்களா?" என்று ஆச்சரியமாக கேட்க,
"அப்படி சொல்ல முடியாது. ஆனா, ஒரு பையனை யோசிச்சு வச்சிருக்கோம். அந்த பையனை அத்துவுக்கு கூட தெரியும்" என்றதும் அர்ஜூன் பொறுமை இழந்தான்.
"சித்தி அந்த பையனை தியாக்கு தெரியும்னா என்ன அர்த்தம்?"
"அப்போ…"
"அப்போ... தியா எனக்கு தெரியாம யாரையும் லவ் பண்றல என்ன?" என்று கோவமாக கேட்க,
"டேய் டேய்... அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா. அவ உனக்கு தெரியம ஒரு தும்மல் கூட போட மாட்டா, அப்புறம் எங்க இருந்து லவ் பண்றது. அந்த பையனை அத்துவோட அம்மா பிரியாவோட அண்ணா ஒருத்தர் இருக்காரே இல்ல, அவரோட பையன். சின்ன வயசுல இருந்து அந்த பையனை அத்துக்கு தெரியும். ரெண்டு பேரும் நல்ல ப்ரண்ட்ஸ். அவனும் டாக்டர் தான். இப்போ அமெரிக்கல வேல பாக்குறான்." என்று ஆத்யாவின் மாமன் மகன் கௌதம் பற்றி விபரங்களை அர்ஜூனிடம் சொல்லி,
"நாளைக்கு அவங்க அத்துவை பார்க்க இங்க வராங்க" என்ற தகவலையும் சொன்னார்.
"ஆமா சித்தி. எனக்கு கூட ஞாபகம் இருக்கு பிரியா ஆன்ட்டி சொல்லி இருக்காங்க. அவங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டதால, அவங்க அண்ணா, பிரியா ஆன்ட்டியை ஒதுக்கி வச்சிட்டாரு. ஆனா, அவங்க அண்ணாவோட மிஸஸ், அப்புறம் அவங்க பையன் மட்டும் அவருக்கு தெரியாம பிரியா ஆன்ட்டி, தியாவை அடிக்கடி வந்து பார்ப்பாங்கன்னு. அந்த பையன் கௌதமை கூட நான் நிறைய முறை பார்த்திருக்கேன். நல்ல பையன் தான், பார்க்க நல்லா அழகா தான் இருப்பான். ஆனா, சித்தி" என்று எதையோ யோசித்தவன்.
"சித்தி இப்ப கொஞ்ச வருஷமா அவங்க இங்க வர்ரதே இல்லையே. ஏன் பிரியா ஆன்ட்டி இறந்தப்போ கூட அவங்க யாரும் வரல. அப்படி இருக்க தியா மாமா எப்படி அவர் பையனுக்கு நம்ம தியாவை கல்யாணம் பண்ணி வைப்பாரு?" என்று சந்தேகமாக கேட்க,
"ஆமாடா பிரியா அண்ணா, அவ மேல கோவமா இருந்தது உண்மை தான். ஆனா, பிரியா இறந்ததை கேட்டு மனுஷன் கலங்கிட்டாரு. பிரியா இறந்த சமயம் அவங்க யாரும் இந்தியால இல்ல. நாலு வருஷம் முந்தியே அவங்க அமெரிக்க போய்டாங்க. பிரியா இறந்த விஷயமே, இப்ப ஒரு வாரம் முந்தி பிரியாவோட அண்ணி அவளை பார்க்க இங்க ஊட்டி வந்தப்போ தான் அவங்களுக்கு தெரியும். பாவம் கடைசியா ஒரு முறை பிரியா முகத்தை கூட பார்க்க முடியலன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. பிரியாவோட அண்ணா கூட கலங்கி போய்ட்டாரு. அப்புறம் ஆத்யா பத்தி எல்லா விவரமும் கேட்டாங்க. அப்புறம் தான் இந்த கல்யாண யோசனையே எங்களுக்கு வந்தது. ஆத்யாக்கு, கௌதமுக்கும் பொருத்தமா இருக்கும்னு தான் நாங்களும் ஒத்துக்கிட்டோம். ஆனா, ஒன்னு அத்துக்கு விருப்பம் இல்லாட்டி, அவங்களும் சரி, நம்மளும் சரி அவளை கட்டாயப்படுத்த போறதில்லை. அவ விருப்பம் தான் இதுல முக்கியம். சோ நீ எதைப் பத்தியும் கவலை படாம நிம்மதியா தூங்கு" என்றவர் அங்கிருந்து செல்ல, அப்போது தான் அர்ஜூனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
மறுநாள் காலை சீக்கிரமே ஆத்யாவை எழுப்பி அபிராமி அவளின் மாமாவும், மாமியும் வருவதை சொன்னவர் கூடவே கௌதம்மை அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க அவர்கள் ஆசைப்படுவைதையும் சொல்ல, "என்ன அத்த இது? நேத்து தான் கல்யாணம் பத்தி பேசிறீங்க... இன்னைக்கு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி மாப்பிள்ளை ரெடி பாக்கவராங்கன்னு குண்ட தூக்கி போடுறீங்க? என்னதிது? நான் பாவமில்ல. எனக்கும் கொஞ்சம் டைம் வேணுமில்லை" என்று முஞ்சை பாவமாக வைத்து கெஞ்ச,
"அய்யோ என் மக்கு அத்து. நாங்க என்ன நாளைக்கேவா உன்னை கல்யாணம் செஞ்சு குடுத்துற போறோம். அவங்க அவங்க வீட்டுப் பொண்ணை ஜஸ்ட் பார்க்க வராங்க அவ்ளோ தான். நீ சும்மா கேஷ்வல இருந்த போதும். ஓகே வா. இப்ப சீக்கிரம் எழுந்து போ குளி. அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. நீ சீக்கிரம் போய் குளிச்சுட்டு ரெடியாகு" என்று அவளை பாத்ரூமுக்கு விரட்டியவர். வீட்டில் இருந்த எல்லாரையும் சீக்கிரம் ரெடியாக சொல்லிவிட்டு சமையலை கவனிக்க சென்றார்.
பனிரெண்டு மணிவாக்கில் கௌதம், அவன் அப்பா, அம்மாவும் அபிராமி வீட்டிற்கு வந்தார்கள். ஆத்யாவை பார்த்ததும் கௌதம் அம்மா பூரணிக்கு மனது தாங்கவில்லை. அவளை இறுக்கி கட்டிக்கொண்டு, "கடைசியா பிரியா முகத்தை கூட பார்க்க எங்களுக்கு குடுத்து வைக்கலியே" என்று கதற. அவர் கணவர் சங்கர் ஆத்யா அருகில் வந்து, "என்ன மன்னிச்சுடு ஆத்யா. நான் மட்டும் என்னோட பிடிவாதத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்த பிரியாவுக்கு இந்த நிலை வந்திருக்காதோ என்னமோ... என்னை மன்னிச்சிடும்மா" என்று அவள் கைகளை பிடித்துக் கொண்டு அழுதார்.
"இல்ல மாமா உங்க மேல எந்த தப்பும் இல்ல. எல்லாம் விதி. அவங்க நேரம் முடிஞ்சு போச்சு, போய்ட்டாங்க. அதுக்கு நீங்க என்ன பண்ணமுடியும்" என்று அவள் ஆறுதல் சொல்ல. நிலைமை சகஜமானது.
பின் அவளின் படிப்பை பற்றி கௌதம் கேட்க, ஆத்யாவும் அவள் படிப்பை பற்றி ஆர்வமாக சொன்னாள். ஆத்யா, கௌதமுடன் சகஜமாக பேசிக் கொண்டு இருந்தாள். அவர்கள் இருவரின் இந்த சகஜமாக நிலை அனைவருக்கும் மனதில் ஒருவித நிம்மதியை தந்தது.
"ஆத்யா எனக்கு சுத்தி வளச்சு பேச வராது. நான் உன்னை எம்புள்ள கௌதமுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க நெனைக்குறேன். என் தங்கச்சி பிரியாவை தள்ளி வச்ச பாவத்துக்கு, உன்னை நல்லபடியா பார்த்துக்கறது தான் நான் செய்யும் சரியான பரிகாரம். எங்க எல்லாருக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் தான். ஆனா, இதுல உன்னோட முடிவு தான் ஆத்யா பைனல். உனக்கு கௌதமை பிடிச்சிருந்தா நீ எனக்கு மருமகள இருப்ப, இல்ல நீ எப்பவும் எங்களுக்கு மகள இருப்ப, முடிவு உன் கையில் தான். நல்லா யோசிச்சு முடிவு பண்ணு, நீ ஓகே சொல்லிட்டா அடுத்த முகூர்த்தம் உங்க கல்யாணத்தை முடிச்சுட்டு கையோடு உன்னை அமெரிக்க கூட்டிட்டு போய்டுவோம். அங்க போய் உன்னோட படிப்பை கன்டின்யூ பண்ணிக்கலாம்" என்றவர் முடிவை அவள் கையில் விட்டுவிட, அதுவரை சங்கர் பேசியதை கேட்டு சந்தோஷத்தில் புன்னகை மலர்ந்திருந்த அர்ஜூனின் முகம் கடைசியாக அவர் தியாவை அமெரிக்க கூட்டி செல்வதாக சொன்ன வார்த்தையை கேட்டது தான் தாமதம் அவன் முகத்தின் சிரிப்பு தொலைந்து போனது.
அபிராமி வந்தவர்களை அவர்கள் வீட்டில் தங்கும்படி கண்டிப்பாக சொல்லிவிட, அனைவரும் இரவு உணவு முடித்து ஓய்வெடுக்க சென்றார்.
இங்கு அர்ஜூன் சங்கர் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தான்.
"இந்த கல்யாணம் நடந்தால் என்னோட தியா என்ன விட்டு ரொம்ப தூரம் போய்டுவ" என்று மனம் கலங்கி அர்ஜூன் தோட்டத்தில் அமர்ந்திருக்க, ஆத்யா அவன் அருகில் வந்ததை கூட அவன் கவனிக்கவில்லை.
நங்கென தலையில் விழுந்த கொட்டி உணர்வு வந்து திரும்பி ஆத்யாவை பார்த்தவன், "ஏய் பிசாசு எதுக்குடி இப்ப நீ என்னை கொட்டுன?" என்று தலையை தடவியபடி கேட்க, ஆத்யா ரெண்டு கையையும் இடுப்பில் வைத்து அவனை முறைத்தாள்.
"ஏன்டா நா எவ்ளோ நேரமா அஜ்ஜூ, அஜ்ஜூன்னு கத்திட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு வானத்த பாத்துட்டு இருக்க... அப்படி என்னடா தெரியுது அங்க.?? ஒருவேள அங்க வடை சுடுற பாட்டிய சைட் அடிச்சிட்டு இருக்கிய என்ன?" என்று வழக்கமான குறும்புடன் கேட்க. அர்ஜூன் ஏற்கனவே சங்கர் சொன்ன செய்தியில் கடுப்பில் இருந்தவனை ஆத்யாவின் கேலி இன்னும் கடுப்பாக்க,
"ஆமாடி அந்த பாட்டியை தான் சைட் அடிச்சிட்டு இருக்கேன். இப்ப என்ன அதுக்கு?? இங்க சைட் அடிக்கிற மாதிரி எந்த பொண்ணும் இல்லயே. இங்க இருக்க ஒரே பொண்ணு நீதான். பட் மை பேட் லக் நீ என்ன பாக்க பொண்ணு மாதிரியா இருக்க? நல்லா தின்னு தின்னு பிப்பாய் மாதிரி குண்டு குண்டுனு இருக்க, நான் வேற என்னதான் செய்றது" என்று ஆத்யா காலை வாரிவிட ஆத்யா அர்ஜூனை தீயாய் முறைத்தாள்.
"ஏன்?? என்னோட ஆதுக்கு என்ன குறைச்சல் அர்ஜூன்??" என்று வந்த குரலில் இருவரும் திரும்பி பார்க்க, அங்கு தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கை வைத்துக் கொண்டு ஸ்டைலாக இவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் கௌதம்.
கௌதம் சொன்னதை கேட்ட ஆத்யா முகத்தில் 1000 வால்ட் பல்பு எரிய, "அப்படி சொல்லு கௌதம். இந்த அஜ்ஜூ எப்ப பாரு என்னை குண்டு குண்டு சொல்றான். நான் என்ன அவ்ளோ குண்டாவ இருக்கேன்." என்றவள் முகத்தை பாவமாக வைத்துக்கொள்ள,
"என்ன அர்ஜூன் இது?? ஆது எங்க குண்ட இருக்கா? என்ன கொஞ்சம் கொழு கொழுன்னு இருக்க, ஆனாலும் அதுவும் அவளுக்கு அழகா தான் இருக்கு" என்றபடியே ஆத்யா தோளில் கையை போட, ஆத்யா கௌதம் கையை பிடித்துக் கொண்டாள்.
ஏனோ முதல் முறையாக அர்ஜூனுக்கு தியாவின் இந்த செயல் எரிச்சலை தர, அதோடு கௌதம் ஆத்யா தோள் மீது கை போட்டது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
'இவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா? என் முன்னாடியே என் தியா தோள் மேல கை போடுவான். அதோட என்னோட ஆதுன்னு வேற சொல்றான். இவனுக்கு எவ்ளோ கொழுப்பு" என்று எரிச்சல் வர, முதன் முறையாக அவன் மனதில் பொறாமை தீ பற்றிக்கொள்ள, அது அவனுக்கே புதிதாக இருந்தது.
அர்ஜுனுக்கு நன்கு தெரியும் ஆத்யா, கௌதம் இடையே இருக்கும் நட்பை பற்றி, ஆத்யாவின் வாழ்க்கையில் அர்ஜூன் வருவதற்கு முன்னே ஆத்யாவின் நட்பையும், நம்பிக்கையையும் பெற்றவன் கௌதம். சிறு வயதில் கூட பிரியா அவளை அடித்தோ, திட்டியே இருந்தால் கௌதமிடம் தான் புகார் செய்வாள். கௌதம் ஆத்யாவை சமாதானம் செய்து அன்பாக கட்டிப்பிடிப்பதை அர்ஜூனே நிறைய முறை பார்த்திருக்கிறான் தான். அதோடு கௌதமுக்கும் ஆத்யா என்றாள் எவ்வளவு பிரியம் என்றும் அவனுக்கு நன்றாக தெரியும். ஆனாலும், இன்று ஆத்யா தன்னிடம் கோபித்துக் கொண்டு கௌதமுக்கு முக்கியத்துவம் தந்தது அர்ஜூனுக்கு எரிச்சலை கிளப்பியது.
"அவ என்னோட தியா...!! நான் என்னவேணும்னாலும் சொல்லுவேன், எனக்கு அதுக்கு உரிமை இருக்கு, அத கேட்க இவன் யாரு?" என்று மூக்கின் கோபம் வர, அதை மறைத்துக் கொண்டு, "இல்ல கௌதம் நீ அவ சொந்தக்காரன், அவளோட மாமா பையன். சோ, அவ மனசு கஷ்டப்பட கூடாதுன்னு பொய் சொல்ற, என்னால அப்படி எல்லாம் பொய் சொல்ல முடியாது கௌதம்" என்று கடுப்பை மறைத்துக் கொண்டு ஆத்யாவை பார்த்து கிண்டலாக நமுட்டு சிரிப்பு சிரித்தான்.
ஆத்யா அவனின் சிரிப்பில் கடுப்பாகி அவனை முறைக்க,
கௌதமோ, "திஸ் இஸ் டூ மச் அர்ஜூன். நா எதுக்கு பொய் சொல்லணும். அண்ட் இதுல பொய் சொல்ல என்ன இருக்கு. நீயே பாரு, ஆது எவ்ளோ அழகா இருக்கா...! தண்ணில துள்ளி குதிக்கிற மீன் மாதிரி ரெண்டு கண்ணு, அழகா ட்ரிம் பண்ண புருவம், ஷார்ப் நோஸ், கீயூட் ரோஸ் கலர் லிட்டில் லிப்ஸ், புசு புசு கன்னம், அளவான ஹைட், அதுக்கேத்த வெயிட் ன்னு பாக்க இவ்ளோ அழகா இருக்கா... அவளா போய் இப்படி சொல்லிட்டியே... சோ சேட்" என்று கௌதம் உச்சு கொட்ட, அர்ஜூனிடம் எந்த பதிலும் இல்லை. அவன் தான் கௌதம் ஆத்யாவை வர்ணிக்க ஆரம்பித்த போது அவள் முகத்தை பார்க்க ஆரம்பித்தவன், கண்ணை கூட இமைக்காமல் அவள் முகத்தையே தான் பார்த்திருந்தான்.
ஆத்யாவோட பழக ஆரம்பித்த இத்தனை வருடத்தில் அவளின் கண்களை தாண்டி அர்ஜூன் பார்வை வேறு எங்கும் சென்றதில்லை. ஆனால், இன்று அது அப்படியே மாறி இருந்தது. கோபமாக அவனை முறைக்கும், முதன் முதலில் அவனை சாய்ந்த அவள் அழகிய கண்கள், சீரான மூக்கு, தேனூறும் இதழ்கள், பனிக்காலத்தின் குளுமை நிறைந்த காற்று ஆசையாக கலைத்து விளையாடும் அவள் தலைமுடி, அதில் இருந்து ஒற்றை கீற்றாக சில முடிகள் மட்டும் அவள் பட்டு கன்னத்தை தொட்டு விளையாட அதை அழகாய் ஒதுக்கி அவளின் சின்ன தாமரை போன்று மலர்ந்திருந்த காதின் பின்னால் தள்ளிய அவள் பிஞ்சு விரல்கள் என்று அவளின் அழகு கொட்டிக்கிடக்கும் முகத்தில் அர்ஜூன் இன்று தன்னை முழுதும் தொலைத்திருந்தான்.
"இவ என்னோட தியா தானா.? இத்தன வருஷம் என் பக்கத்துல இருந்த என்னோட தியா இவ தானா.?? இவ்ளோ நாள் இல்லாம இன்னைக்கு மட்டும் ஏன் இவ என் கண்ணுக்கு இவ்ளோ அழகாவும், புதுசாவும் தெரிஞ்சு தொலையிற?" என்று அவன் மனம் அலைபாய அவனுக்கு இந்த உணர்வு விசித்திரமாக இருந்தது.
இது எதையும் அறியாத ஆத்யா. "அப்படி சொல்லு கௌதம். இந்த அர்ஜூனுக்கு ரசனையே இல்ல.. நான் இவன் கூடவே இருக்கனால இவனுக்கு என்னோட அருமை தெரியல, நாளைக்கு நான் கல்யாணம் முடிஞ்சு இவனை விட்டு போன பின்னாடி தான் இந்த எருமைக்கு என்னோட அருமை புரியும். அப்ப என்னை மிஸ் பண்றேன்னு புலம்பிட்டு திரிய தான் போறான் பாரு" என்ற ஆத்யா, "நீ வா கௌதம் நம்ம போலாம்" என்று அவனோடு கை கோர்த்துக் கொண்டு செல்ல, அர்ஜூன் போகும் அவர்களையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஏனோ இன்று அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. இத்தனை வருஷம் தன் அருகிலேயே இருந்தவள் ஏன் இன்று தன் கண்ணுக்கு புதிதாக, அழகாக தெரிகிறாள் என்று அவனுக்கு விளங்கவில்லை. அதோடு கல்யாணம் முடிந்து அவள் அவனை விட்டு போய்டுவேன் என்று சொல்லியது வேறு இன்னும் அவனை வதைக்க போகும் தியாவையே வெறித்து அவன் விழிகள். (ரொம்ப நாள் பழகிய போது ஒருவர் மேல் வராத உணர்வு. ஒரு பார்வை, ஒரு வார்த்தை, ஒரு சின்ன தீண்டால், மெல்லிய ஸ்பரிசத்தில் ஆழிப்பேரலை போல் மனதை புரட்டி போட்டு விடும். அது தான் இப்போது அர்ஜூனுக்கு நடக்கிறது. ஆனால், இந்த மாற்றம் அர்ஜூனுக்கு தான் புரியவில்லை)
கௌதமுடன் வீட்டு வாசல் வரை சென்ற தியா திரும்பி அர்ஜூனிடம் ஓடி வந்து, "டேய் எரும பனி பெய்து எழுந்து உள்ள வா. பனியில இருந்தா உனக்கு ஒத்துக்காது தலைவலி வரும் சீக்கிரம் உள்ள வாடா" என்றவள் அவன் கையை பிடித்து இழுக்க, அவளை முகத்தை நிமிர்ந்து பார்த்தவன் பார்வை இப்போது வேறாக மாறியிருந்தது.
கௌதமை விட்டு தன்னை பற்றி யோசித்து தன்னிடம் திரும்பி ஓடி வந்தவளை நினைத்து மனது குத்தாட்டம் போட.!! அமைதியாக எழுந்து அவளுடன் சென்றான்.