அர்ஜூன் & ஆத்யா 6

 


மெய் 6

ஆத்யாவுக்கு காலேஜில் லீவு கிடைக்க, அவள் அபிராமி மற்றும் சிவாவை பார்க்க ஊட்டிக்கு கிளம்ப, அர்ஜூனும் அவளுடன் இணைந்து கொண்டான்.

பிளைட் வேண்டாம் என்று ஆத்யா சொல்லி விட, அர்ஜூன் காரிலேயே ஊட்டிக்கு கிளம்பினர் இருவரும். 

அர்ஜூன் இந்த பயணத்தை வெகுவாக ரசித்தான். ஆத்யா போகும் வழியெல்லாம் பேசிக்கொண்டே வர, அர்ஜூன் அதை கேட்டுக்கொண்டே வந்தான். போகும் வழியில் சாலையோர கடைகள் ஒன்றை விடவில்லை ஆத்யா. 

"ஏய் எரும அது வயிறா இல்ல வேற எதுமாடி, ஒன்னையும் விடாம எல்லாத்தையும் வாங்கி திங்கற... பிசாசு பிசாசு" என்று திட்ட,

"போடா பன்னி நான் தின்ன உனக்கு என்ன? எனக்கு ஸ்ட்ராங்க் பாடி, எதை தின்னாலும் ஜீரணமாகும் உன்னை மாதிரியா" என்று பொருமியவள், வழியில் ஒரு இடத்தில் சின்ன பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க அதை பார்த்த ஆத்யா,

"அஜ்ஜூ, அஜ்ஜூ காரை நிறுத்து… நிறுத்து...  அஜ்ஜூ" என்று  குதிக்க அர்ஜூன் டக்கென்று பிரேக் போட்டு காரை நிறுத்தினான்.

"ஏய் என்னடி? என்ன ஆச்சு? வாந்தி எதுவும் வருதா? அதுக்கு தான் அப்பவே சொன்னேன், கண்டதை வாங்கித் தின்னாதன்னு கேட்டிய… பாக்குற எல்லாத்தையும் வாங்கி வாங்கி வயித்துக்குள்ள போட்ட இப்படி தான் வாந்தி வரும்"  

"டேய் டேய் அடங்குடா,  அரசியல்வாதி மாதிரி பேசிட்டே போற, இப்ப யாரு இங்க வாந்தி வருதுன்னு சொன்னா? நீயே கேள்வி கேட்டு நீயே பதில் சொல்லிக்கிற. லூசு... லூசு…" என்று அவனை முறைக்க, அர்ஜூன் கடுப்பானான்.

"அப்போ எதுக்குடி டயர்ல மாட்டுன எலி மாதிரி இப்ப காத்துன?" 

"ம்ம்ம் அங்க பாரு" என்று தன் இடது புறம் கை காட்டி, "அங்க குட்டி பசங்க கிரிக்கெட் விளையாடுறாங்க அஜ்ஜூ, வாடா நாமும் போய் விளையாடலாம். கிரிக்கெட் விளையாடி ரொம்ப நாள் ஆச்சு" என்று அவனை நச்சரிக்க,

"ஏய்  எரும, அவங்க ஏதோ சின்ன பசங்க விளையாடுறாங்க, உனக்கு ஏழு கழுத வயசாச்சு, அதுவும் வருங்கால டாக்டர் வேற, சின்ன பசங்க கூட போய் விளையாடனும்னு சொல்ற,  அறிவிருக்கா உனக்கு" என்று அவள் குழந்தை தனத்தை நினைத்து தலையில் அடித்துக் கொண்டான்.

"ஏன்டா? டாக்டர் கிரிக்கெட் விளையாடக் கூடாதா என்ன? நீ வராட்டி போடா, நான் போறேன்" என்றவள் காரைவிட்டு இறங்கி சின்ன பிள்ளைகளுடன் இணைந்து விளையாட தொடங்கினாள்.

ஜீன்ஸ் பேன்ட், டாப், அதற்கு மேல் சின்ன ஸ்டோல் போட்டிருந்தாள். 
ஸ்டோலை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, விரிந்து இருந்த கூந்தலை அள்ளி தலை உச்சியில் ஹய்பன் போட்டு, பேட்டை பிடித்து விளையாட தொடங்கி, இங்கும் அங்கும் மான் குட்டி போல் துள்ளி துள்ளி ஓடியவளை, அர்ஜூன் தள்ளி நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். 

ஒரு கட்டத்தில் ஆத்யா அவுட் ஆகி விட, அதை ஒத்துக் கொள்ளாமல், "நான் அவுட் இல்ல, நீங்க பொய் சொல்றீங்க, நான் பேட்டை கொடுக்க மாட்டேன்." என்று அந்த சின்ன பசங்களுடன் சரிக்கு சரியாக சண்டையிட, அர்ஜூன் அங்கு வந்து அவள் தலையில் கொட்டி,

"அடியேய் எரும, சின்ன பசங்க கூட போய் சரிக்கு சரியா சண்ட போட்டுட்டு லூசு... வாடி போலாம்" என்று அவளை இழுத்தான்.

"விடு அஜ்ஜூ இதெல்லாம் ஒரு ஜாலிக்கு தானே, இதை போய் பெருசா பேசிட்டு, நீயும் வா அஜ்ஜூ வெளையாடலாம்" என்று அவனையும் விளையாட்டில் இழுத்துவிட்டாள். 

அர்ஜூனும் ஆசையாய் அவர்களுடன் இணைந்து கொண்டான். ஒரு மணி நேரம் விளையாடிய பிறகு அர்ஜூன் அந்த சின்ன பிள்ளைகளை தன் காரில் ஏற்றிக் கொண்டு, அவர்கள் போதும் போதும் 
எனுமளவு ஐஸ்கிரீம், சாக்லேட், பொம்மைகள் என்று எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்து, அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு  ஆத்யாவுடன் கிளம்பினான். 

ஒரு வழியாக இருவரும் ஊட்டி வந்து சேர்ந்தனர். சிவா வெளியூர் சென்றிருக்க, அபிராமியும், அபிமன்யுவும் வீட்டு வாசலிலேயே இவர்களுக்காக காத்திருந்தனர். கார் வீட்டிற்குள் நுழைந்தது தான் தாமதம், அபிராமி ஓடி வந்து ஆத்யாவை கட்டிக்கொள்ள, அபிமன்யு, "ஏய் அத்துகுட்டி எப்டிடா இருக்க??" என்று அன்போடு கேட்டான்.

"நா நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க பிசினஸ் எப்படி போகுது? என்று ஆத்யா அடுக்கடுக்காக கேள்வி கேட்க,

"ஏய் ஏய் அத்து! என்ன இது? நா ஒரு கேள்வி தானே கேட்டேன். அதுக்கு பதிலுக்கு நீ கேள்வியாவே கேட்டுட்டு இருக்க? கொஞ்சம் மூச்சு விடு குட்டிம்மா. இங்க தானே இருக்க போற அப்புறமா, மெதுவா உன்னோட எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன். இப்ப நீ உள்ள வா" என்று ஆத்யாவை அழைத்தான்.

"ஹலோ ஹலோ என்ன இது? என்னை பார்த்த உங்களுக்கெல்லாம் எப்படி தெரியுது. அவ்ளோ தூரத்தில் இருந்து இந்த தக்காளி மூட்ட கொடுத்த எல்லா இம்சையையும் சகிச்சிட்டு இத பாத்திரமா ஓட்டிட்டு வந்திருக்கேன். என்கிட்ட ஒரு வார்த்தை பேசாம? எப்படி இருக்கேன்னு ஒரு வார்த்தை கூட கேட்காம, நீங்க பாட்டுக்கு ஏதோ டிரைவரை விட்டு போற மாதிரி போறீங்க? நா உங்க அர்ஜூன், உங்க அக்கா பையன். டேய் அண்ணா உன்னோட தம்பிய உனக்கு மறந்து போச்சா? உள்ள வான்னு கூட கூப்பிடாம நீங்க பாட்டுக்கு அந்த பிசாசை மட்டும் கூட்டிட்டு போறீங்க" என்று அர்ஜூன் கொதித்தான்‌.

"இப்ப என்னடா.? உன்னை உள்ள வான்னு கூப்டாட்டி நீயென்ன உள்ள வராமய போய்டுவ, இவ்ளோ தூரம் வந்த உனக்கு உள்ள வர வழி தெரியாத? சும்மா பேசிட்டு, உள்ள வந்து தொல" என்று அபிமன்யு கலாய்க்க, ஆத்யா அர்ஜூனை பார்த்து விழுந்து சிரித்தாள். 

"டேய் அண்ணா திஸ் இஸ் டூ மச் டா, அந்த சில்வண்டு முன்னாடி உன் தம்பியை, உன் உடன்பிறப்பை, இரத்தத்தின் இரத்தத்தை இப்டி அசிங்கப்படுத்திட்டியே?? சித்தி பாருங்க சித்தி, அண்ணா என்னை எவ்ளோ இன்சல்ட் பண்றான், இதையெல்லாம் நீங்க கேக்க மாட்டீங்களா" என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

"போங்கடா போக்கத்த பசங்களா... நீ வா அத்தும்மா, அத்த உனக்கு லட்டு புடிச்சு வச்சிருக்கேன் வாடா தங்கம்" என்று அபிராமி ஆத்யாவை அழைத்து செல்ல,

"வேதனை, அவமானம், பெருத்த அவமானம்" என்று அர்ஜூன் கையை மடக்கி நெற்றியில் இடித்துக் கொள்ள, ஆத்யா திரும்பி அவனுக்கு நாக்கை துருத்தி ஒழுங்கு காட்டி விட்டு அபிராமியுடன் செல்ல, உள்ளே வரமாட்டேன் என்று அடம்பிடித்த அர்ஜூனை அபிமன்யு இழுத்து சென்றான். 

ஆத்யா குளித்து முடித்து வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, டிவி பார்த்துக்கொண்டிருக்க,

"ஏய் எரும வந்ததும் நல்ல மூக்கு முட்ட தின்னுட்டு, இப்ப டிவி பார்த்துட்டு உட்கார்ந்துட்டு இருக்கியா" என்று அவள் காதை திருகினான்.

"ஏய் ஏய்... விடுடா காது வலிக்குது அஜ்ஜூ, வர வர நீ பிரியாம்மா மாதிரியே ஆயிட்டு வர்ற, அம்மாவும் இப்படி தான் எப்பவும் காதை பிடிச்சி திருகுவாங்க" என்று ஆரம்பித்தவள் முகம் அவள் அம்மாவின் நியாபகம் வர உடனே வாடி விட்டது. அர்ஜூனுக்கும் கூட பிரியாவின் நினைவு வர கண்கள் லேசாக கலங்கியது. 

"தியா என்னோட வா" என்று அவள் கையை பிடித்து இழுக்க, எங்க என்பது போல்  ஆத்யா பார்க்க, "எல்லாம் உன்னோட வீட்டுக்கு தான் போறோம் வா" என்று
அவளை பிரியா வாழ்ந்த வீட்டுக்கு கூட்டிச் சென்றான். 

சிவா அந்த வீட்டை விலைக்கு வாங்கி இருந்தாலும் அங்கே எந்த மாற்றமும் செய்யாமல், ஆட்களை வைத்து சுத்தமாக பராமரித்து இருந்தார். ஆத்யாவுக்கு திருமணம் செய்யும்போது அந்த வீட்டை அவளுக்கு திருமணம் பரிசாக தர அவர் விரும்பியதால் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வைத்திருந்தார் சிவா. ஆத்யாவுக்கு அந்த வீட்டிற்குள் சென்றதும், பழைய நினைவுகள் அவளை ஆட்கொள்ள. அவள் எப்போதும் அவள் அம்மா மடியில் படுக்கும் சோபாவில் படுத்துக்கொள்ள. அவள் நிலை புரிந்த அர்ஜூன், அவள் தலையை எடுத்து அவன் மடியில் வைத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்து அவள் நெற்றியில் அன்பாக முத்தம் வைத்து, மெதுவாக அவள் தலைகோத, ஆத்யாவுக்கு அவள் அம்மா மடியில் படுத்திருப்பது போல் ஒரு உணர்வு, அதில் சற்று இறுக்கம் குறைந்து மனசு லேசானது.

"உனக்கு தெரியுமா அஜ்ஜூ, அம்மாவுக்கு என்ன விட உன்னை தான் ரொம்ப பிடிக்கும். நீ எப்போ ஊருக்கு வந்தாலும் உனக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும்னு பாத்து பாத்து சமைப்பாங்க தெரியுமா?? இதால எனக்கும் அம்மாவுக்கும் சண்டை கூட வரும். உனக்கு என்னை விட அஜ்ஜூ தான் பெருசா போய்ட்டானான்னு அடிக்கடி சண்டை போடுவேன். அப்போ எல்லாம் அம்மா என்ன சொல்வாங்க தெரியுமா… அஜ்ஜூ? இல்ல அத்தும்மா, அர்ஜூன் பாவம். அவங்க அம்மா பிசினஸ்ல ரொம்ப பிஸியா இருக்கனால, அவனை அவங்களால சரியா கவனிக்க முடியல, அதான் அம்மா அவனை கொஞ்சம் அதிகமா கவனிக்கிறேன். நாளைக்கு நான் இல்லையினாலும் நீ அவனை என்னோட இடத்துல இருந்து நல்லா பாத்துக்கணும். அவனுக்கு ஒரு நல்ல தோழியா அவனுக்கு எப்பவும் சப்போர்ட்டிவா இருக்கணும். இதை நீ அம்மாக்காக செய்யணும்" என்று அவர் சாவதற்கு கொஞ்ச நாள் முந்தி ஆத்யாவிடம் சொன்னதை சொல்லும் போது, ஆத்யா கன்னத்தில் நீர் துளிகள் பட்டு தெறித்தது. 

ஆத்யா தன் கன்னத்தை தடவியபடி திரும்பி பார்க்க, அர்ஜூன் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. 

"ஏய் அஜ்ஜூ? என்ன இது சின்னப்புள்ள மாதிரி அழுதுட்டு" என்று அவன் கண்ணீரை அழுத்தி துடைத்தாள்.

"ஸாரி அஜ்ஜூ. ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்ததும் அம்மா நியாபகம் வந்திடுச்சு. அதான் என்னை மறந்து பேசிட்டேன். சாரிடா. நீ இவ்ளோ ஃபீல் பண்ணுவேன்னு தெரியாது. சாரி எல்லாம் என்னோட தப்பு" என்று தன்னை நொந்து கொள்ள, 

"இல்ல தியா, நீ ஃபீல் பண்ணத. நான் பிரியா ஆன்ட்டிய மறந்த தானே நீ ஞாபகப்படுத்த. அவங்க எப்பவும் என் மனசுல தான் இருக்காங்க. அவங்க என்னோட ஏஞ்சல் டி. உனக்கு தெரியுமா தியா? முதல் முதல்ல நீ என்னை வீட்டுக்கு கூட்டிப்போனியே உனக்கு ஞாபகம் இருக்க? அன்னைக்கு நான் ஆன்ட்டிகிட்ட கேட்டேன். ஏன் ஆன்ட்டி உங்களுக்கு நான் யாருன்னே தெரியாது. முன்ன பின்ன என்னை பார்த்தது கூட இல்லை. அப்படி இருக்க, எந்த நம்பிக்கையில் என்னை நடு வீட்ல உட்கார வச்சு மருந்து போட்டுட்டு இருக்கீங்கன்னு, என்  சந்தேகத்தை கேட்டேன். அதுக்கு ஆன்ட்டி என்ன சொன்னாங்க தெரியாமா?

"சிம்பிள் பா. முதல்ல நான் ஒரு அம்மா. என் கண்ணு முன்னாடி அடிபட்டு இரத்த வழிய ஒரு ஜீவன் நிக்கும் போது அவன் நல்லவனா, கெட்டவனான்னு எல்லாம் பார்க்க எனக்கு தோனாது. நெக்ஸ்ட் உன்னை வீட்டுக்கு கூட்டி வந்தது என்னோட பொண்ணு. அவ ஒருத்தரை வீட்டுக்கு அழைச்சிட்டுவரன்னா, கண்டிப்பா அவன் தப்பானவனா இருக்க முடியாது. என் அத்து எப்பவும் தப்பானவங்க கூட பழகமாட்டா, நா அவ மேல வச்சிருக்க நம்பிக்கை தான். உன்னை வீட்டுக்குள் உட்கார வச்சு பேசிட்டிருக்க காரணம்னு ஆன்ட்டி சொல்லும் போது எனக்கு சத்தியமா உன் மேல ரொம்ப பொறாமைய இருந்தது தியா." என்றவனை பார்த்து ஆத்யா புன்னகைக்க, பிரியாவை பற்றி பேசிக்கொண்டே அர்ஜூன் ஆத்யா மடியில் தலை வைத்து படுத்துக் கொள்ள, இப்போது அவனை சமாதானம் செய்வது ஆத்யா முறையானது. 

எப்போதும் போல் சூரியன் தன் நடைப்பயணத்தை வானவீதியில் தொடங்க, ஆத்யா நன்கு உறங்கிக் கொண்டு இருந்தாள். அர்ஜூன் அவள் அறைக்குள் வந்து, ஒரு நிமிடம் அவள் முத்தையே உற்று பார்த்துவிட்டு, "எப்படி தூங்குற பாரு ராட்சசி?! சித்தி சொல்வாங்க ஒருத்தர் தூங்கும் போது தான் அவங்க உண்மையான முகம் தெரியும்னு. அது உண்மை தான்டி. நீ தூங்கும் போது அப்படியே இன்னைக்கு பொறந்த குட்டி பாப்பா மாதிரி கியூட்டா இருக்க. கியூட்ட ஒரு டெடிபியர் மாதிரி" என்றவன் அவள் மூக்கை அழுத்தி கிள்ள, 

"ஸ்ஸ்ஆஆஆ" என்று அரை தூக்கத்தில் மெதுவாக கண்ணை திறந்து எதிரில் இந்த அர்ஜூன் முகத்தை பார்த்த ஆத்யா,  "குட் மார்னிங்டி ராட்சசி" என்க, ஆத்யா மெதுவாக எழுந்து அர்ஜூன் கையை பிடித்து இழுக்க, அவன் அப்படியே கட்டிலில் விழுந்தான்.

விழுந்த அர்ஜூன் மடிமீது தலை வைத்து படுத்துக்கொண்டு, "குட் நைட் டா எரும" என்று விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொள்ள. அர்ஜூன் அவள் தலையில் செல்லமாக கொட்டி,

"அடியேய் எழுந்துடி, எழுந்து மூஞ்சி கழுவிட்டு வா. வெளிய கிளைமேட் நல்லா இருக்கு அப்படியே ஒரு வாக் போயிட்டு வரலாம். எந்திரிடி" என்றவன் அவளை தூக்கிக்கொண்டு போய் பாத்ரூமில் விட‍, அர்ஜூனை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே பல் விலக்கி, முகத்தை கழுவிக் கொண்டு வந்தவளை அர்ஜூன் வாக்கிங் அழைத்து, இல்ல இல்ல இழுத்துக் கொண்டு போனான். 

இருவரும் பேசிக்கொண்டே ரொம்ப தூரம் நடந்து செல்ல, வழியில் தெரிந்த ஒரு சின்ன டீ  கடையை பார்த்த ஆத்யா, "டேய் அஜ்ஜூ, வாடா அங்க ஒரு டீ கடை தெரியுது போய் சூடாக டீ குடிப்போம். இந்த குளிருக்கு நல்லா இருக்கும்" என்றவள் அர்ஜூனை இழுத்து சென்றாள். 

இருவரும் எதிர் எதிரில் உட்கார்ந்திருக்க. ஆத்யா டீயை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள்.

அந்த இளம் காலைப் பொழுதில், பழைய டி-சார்ட், டிரக் பேண்ட் போட்டு, கலைந்த தலை முடியை அள்ளி கொண்டை போட்டிருந்த ஆத்யா. அர்ஜூன் கண்ணுக்கு இப்போதுதான் வானில் இருந்து இறங்கி வந்த தேவதை போல் தெரிந்தாள். ஓரளவு விவரம் தெரிந்த வயதில் தன் அர்ஜூன், ஆத்யா நட்பு தொடங்கியது. எதிர்பாராமல் தொடங்கிய இவர்கள் உறவு இன்று ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லையென்ற அளவு உறுதியாக வளர்ந்திருந்தது. இன்றுவரை அர்ஜூனும் சரி ஆத்யாவும் சரி அன்பு என்ற வேலியை தாண்டி சென்று காதல் என்ற எல்லையை தொட்டதில்லை. ஏன் இதுவரை அந்த மாதிரி ஒரு சின்ன நினைப்பு கூட அவர்கள் இருவர் மனதில் வந்ததில்லை. ஆனால், இப்போதெல்லாம் அர்ஜூன் ஆத்யாவை பார்க்கும் பார்வையில் சிறு மாற்றம் இருந்தது. அது என்ன?? ஏது என்று?? அவனுக்கே புரியவில்லை. அதைப்பற்றி யோசித்தவன் மனது இந்த மாற்றம் அவனுக்குள் வந்த நாளை யோசிக்கத் தொடங்கியது.