அர்ஜூன் & ஆத்யா 5

 மெய் 5




மெய் 5

பிரியா இறந்து அனைத்து சடங்குகளும் முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ஆத்யா அவள் தாய் இறந்த அன்று அழுததோடு சரி,அதன் பின் அவள் தன்னை தானே தேற்றிக் கொண்டு நிதானமாகி விட்டாள். ஆனால், அர்ஜூன் நிலை தான் மோசமாக இருந்தது. கடவுள் தனக்காக  இரண்டாவது தாயாக பிரியாவை கொடுத்து அந்த பாசத்தை முழுதாக உணரும் முன்னரே பறித்து விட்டார் என்று வருந்தியவன் முழுவதும் செயலிழந்து இருந்தான். யார் ஆறுதல் சொல்லியும் ஒன்றும் பயனில்லை. அபிராமியும் அவனை மாற்ற முயன்று அது முடியாமல் போக, வேறு விழி இல்லாமல் ஆதித்யாவிடம் சென்றார். 


"அத்தும்மா, இந்த அர்ஜூன் என்ன சொல்லாலும் ‌கேக்க மாட்டேங்குறாம்மா, மூனு நாளா ஒன்னும் சாப்பிடாம, அழுதுகிட்டே இருக்கான், நீ கொஞ்சம் அவனைப் போய் பாருடா,  எப்படியாவது அவனை ரெண்டு வாய் சாப்பிடவை அத்து" என்றவர். சாப்பாட்டு தட்டை  ஆத்யாவின் கையில் கொடுத்து விட்டு சென்றார். 


ஆத்யா உணவுடன் அர்ஜூன் அறைக்கு சென்றாள்.


மூன்று நாளில் ஆள் பாதியாக இளைத்திருந்த அர்ஜூனை பார்க்கவே அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அதே சமயம் அவன் தன் தாய் மீது எந்த அளவு அன்பு வைத்திருந்திருக்கிறான் என்று நினைக்க அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. மெதுவாக அர்ஜூன் அருகில் வந்து அமர்ந்தவள் ஆதரவாக அவன் முடியை கோதிவிட, அர்ஜூன் நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, அவனின் கலங்கிய கண்கள் அவளை வாட்டியது.  


"என்ன அஜ்ஜூ இது?? நீ இப்படி அழுதிட்டு இருந்தா மட்டும் அம்மா திரும்பி வந்துடவா போறாங்க? அப்படி அவங்க திரும்பி வருவாங்கன சொல்லு, நான் என்னோட உடம்புல இருக்கிற மொத்த ரத்தத்தையும் கண்ணீரா மாத்தி அழுக தயாரா இருக்கேன்." என்றவளை அஜ்ஜூ வேதனையோடு பார்க்க... ஆதரவாக அவன் கன்னம் வருடினாள் ஆத்யா. 


"இங்க பாரு அஜ்ஜூ, இந்த உலகத்துல மாற்றமும்,

மரணமும் தான் நிஜம், எல்லார் வாழ்க்கையிலும் வரக்கூடிய ஒன்னு, நெனச்சு பாரு…  எந்த கஷ்டமும், வலி, வேதனை ன்னு எதுவும் இல்லாமல் தூக்கத்துலயே இருந்திருக்காங்க அம்மா, எவ்வளவு நிம்மதியான நல்ல மரணம் அவங்களுக்கு, நீ அவங்க நம்ம விட்டு போயிட்டாங்கன்னு இப்படி இருக்க... ஆன, உண்மையில் அவங்க நம்ம சுத்தி நமக்கு துணையா இங்க தான் நம்ம கூட இருப்பாங்க. நீ  இப்படி  அவங்களை நெனச்சு சாப்பிடாம அழுகுறதை பார்த்த உன் பிரியா ஏஞ்சல் மனசு நிச்சயம் கஷ்டப்படும் அஜ்ஜூ, அவங்க ஆத்மா சந்தோஷமா இருக்கணும்னு நீ நெனச்ச, இதை சாப்பிடு" என்று உணவு தட்டை அவன் முன் நீட்ட, மறுபேச்சின்றி உணவை வாங்கி உண்ணத் தொடங்கினான் அர்ஜூன். 


"எப்படி தியா?? எப்படி உன்… உன்னால... பிரியா ஆன்ட்டி மரணத்தை இவ்ளோ சீக்கிரம்'?" என்று தொடங்கியவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை, அவன் கேள்விக்கு ஆத்யா விரக்தியாக சிரித்தாள். 


"பழகிப்போச்சு அஜ்ஜூ... சின்ன வயசுல எனக்கு தாத்தா, பாட்டின்னா ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் அவங்க என்ன விட்டு போயிட்டாங்க, அப்புறம் அப்பாவை ரொம்ப பிடிக்கும். ஆன, அவரும் என் வாழ்க்கையில் என் கூட வரல.. சீக்கிரமே அவரும் போய்ட்டாரு, அப்பா இறந்தப்போ  இனி அம்மாக்கு நான் மட்டும் தான் இருக்கேன். அவங்களை கடைசி வரை நல்லா பாத்துக்கணும், இனி எனக்கு அவங்க, அவங்களுக்கு நான்னு நெனச்சேன். ஆன, இப்ப பாரு... அவங்களும் இல்ல" என்றவள் குரலில் அப்படி ஒரு வலி.


"இப்ப எனக்கு யாரும் இல்ல, நான் தனி மனுஷி அஜ்ஜூ" என்றவளை அர்ஜூன் கோபமாக பார்க்க,


"முறைக்காத அஜ்ஜூ. அதுதான் உண்மை. இந்த உலகத்தில் எல்லாம் தனித்தனி தான். யாரும் யாருக்காகவும் பொறக்குறதும் இல்ல, நமக்கு பிடிச்சவங்க போய்டாங்கனு யாரும் அவங்க கூடவே போறதும் இல்ல, நம்ம லைஃப்ல அவங்க நேரம் முடிஞ்சதும் அவங்க போய்டுவாங்க. அவங்க இடத்துக்கு வேற ஒருத்தர் வருவாங்க, இது தான் நிதர்சனம். இத நம்ம புரிஞ்சுக்கிட்டாலே போதும், எதையும் கடந்து போய்டலாம். என் லைஃப்ல அம்மாவோட நேரம் முடிஞ்சு போச்சு, அவங்க போயிட்டாங்க. ஆன, அவங்க ஆசை, எனக்காக அவங்க கண்ட கனவு, என்னை ஒரு டாக்டரா ஆக்ணும்ன்ற அவங்க லட்சியம் இப்ப என் கண் முன்னால இருக்கு அஜ்ஜூ. அதுதான் இப்ப எனக்கு இருக்க ஒரே  நிஜம். அவங்க ஆசையை நிறைவேத்த நான் தைரியமா இருக்கணும். முன்ன விட இன்னும் தைரியமா இருக்கணும்." என்றவள் குரலில் இருந்த உறுதியில் அர்ஜூன் அவளை வியந்து பார்க்க, இவ்வளவு நேரம் ஆத்யா பேசியதை அறைக்கு வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த சிவாவும், அபிராமியும் கூட ஒரு நிமிடம் ஆத்யாவின் மன உறுதியை கண்டு வியந்து விட்டனர். இந்த சின்ன வயதில் அவளின் தெளிவான சிந்தனை, வாழ்க்கையை குறித்த தெளிவு இனி அவளை பற்றி கவலைப்பட தேவையில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தியது. 


ஆத்யா இப்போது அபிராமி வீட்டில் தான் இருக்கிறாள், அன்று காலையில் சிவாவிடம் வந்து, "மாமா நான் நாளைக்கு பெங்களூர் போறேன். காலேஜ் லீவ் முடிஞ்சு போச்சு. நீங்க எனக்கு ஒரு உதவி செய்றீங்களா??" என்று கேட்ட ஆத்யாவை முறைத்த சிவா, 


"என்ன அத்து இது புது பழக்கம்? உதவி அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு, நீ எப்பவும் என் பொண்ணு தான். அத மறந்துடாத, உனக்கு என்ன வேணும்னாலும் உரிமையோட என்கிட்ட கேளு" என்றவரை பார்த்து சின்னதாக சிரித்த ஆத்யா,


"எனக்கு தெரியும் மாமா நீங்களும், அத்தையும் என்னை பொண்ணு மாதிரி தான் பாத்துக்குறிங்க, அது எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, இனிமே அது வேணாம் மாமா." என்றவளை அனைவரும் வித்தியாசமாக, அதேசமயம் கேள்வியாய் பார்த்தனர்.


"ஆமா மாமா இனி என்னோட வாழ்க்கையை தைரியமா, தன்னம்பிக்கையுடன் தனிய நானே எதிர்த்து நின்னு பேஸ் பண்ணனும். உங்க யார் பின்னாடியும் ஒளிஞ்சிட்டு இந்த உலகத்தை பார்க்க எனக்கு விருப்பம் இல்ல" என்றவள் தன் முடிவை முடிவாக சொல்ல, அதை கேட்ட எல்லோருக்குமே அதிர்ச்சி தான்.


"என்ன அத்தும்மா இது? ஏன் திடீர்னு இப்படி ஒரு முடிவு?" என்று அபிராமி கேட்க,


"ஆமா அத்த, இனி அந்த வீடு எனக்கு வேணாம், இனிமே அங்க என்னால இருக்க முடியாது. அதோட என்னோட படிப்பு செலவுக்கு பணம் வேணும். அதான் அந்த வீட்டையும், மீதி இருக்கிற கொஞ்ச சொத்தையும் வித்துடலாம்னு நெனக்கிறேன்." என்றவளை இடைமறித்த சிவா. 


"உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்க அத்து. ஏன் உன்னை நான் படிக்க வைக்க மாட்டேன்னு நெனைக்குறிய?" என்று கோபமாக கேட்ட,


"நீங்க செய்வீங்க மாமா. எனக்கு நல்லா தெரியும். ஆனா, எனக்கு தான் அதில் விருப்பமில்லை"  


"என்ன தியா இது..??  எதுக்கு நீ இப்படி எல்லாம் பேசிடிருக்க? உனக்கு நாங்க இல்லையா... நான், சித்தி, சித்தப்பா, அபிமன்யு எல்லாம் என்ன செத்த போய்டோம்" என்று அர்ஜூன் கத்த, சிவாவும் ஏதோ சொல்ல வர, அவரை தடுத்த ஆத்யா,


"சாரி அர்ஜூன்,  இது தான் என் முடிவு" என்று திரும்பி சிவாவை பார்த்து, "மாமா நான் சொன்னது சொன்னது தான். இதுல எந்த மாற்றமும் இல்ல. நான் உங்க பொண்ணுன்ற உரிமையோட ஊட்டிக்கு உங்களை பார்க்க இனிமேலும் இங்க வந்து போகணும்னு நீங்க நெனச்ச? இத செய்ங்க, இல்ல நான் எங்க இருக்கேன்னு யாருக்கும் தெரியாத இடத்துக்கு போய்டுவேன்" என்றவளிடம் அதற்குமேல் யாரும் எதுவும் பேசவில்லை. 


அடுத்த ரெண்டு, மூணு நாளில் ஆத்யாவின் வீட்டையும், மற்ற சொத்துக்களையும் சிவாவே வாங்கிக்கொள்ள, ஆத்யாவிற்கு அதில் ரெட்டிப்பு சந்தோஷம். சிவா ஆத்யாவுக்கு தரவேண்டிய பணத்தில் ஒரு பகுதியை எடுத்து பெங்களூரில் அவள் பெயரில் ஒரு ப்ளாட்டை வாங்கியவர். மீதி பணத்தை அவள் பேங்க் அக்கவுண்டில் போட்டு அவள் படிப்புக்கு எந்தவித தடையும் வராதவாறு செய்திருந்தார். ஆத்யா தான் ஹாஸ்ட்டலை காலி செய்து விட்டு, தன் ஹாஸ்டல் தோழிகள் இருவருடன் சிவா அவளுக்காக வாங்கிக் கொடுத்த ப்ளாட்டிலேயே தங்கிக் கொண்டாள். தன் தாயின் மரணத்திற்கு பிறகு தன்னை தானே உறுதியாக மாற்றிக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற தொடங்கியிருந்தாள். சிவாவும், அபிராமியும் மாதம் ஒருமுறை பெங்களூர் வந்து அவளை பார்த்துவிட்டு செல்வர்கள். அர்ஜூனின் வார இறுதி நாட்களும் ஆத்யாவோடு தான் கழியும்.


நாட்கள் சக்கரம் கட்டிக்கொண்டு ஓட அர்ஜூன் தன் படிப்பை முடித்து தன் குடும்பத் தொழிலை பார்க்க விரும்பாமல், தன் சொந்த முயற்சியில் பெங்களூரில் ஒரு சிறு பிஸ்னஸை தொடங்கினான். இதில் அர்ஜூன் அம்மா அருந்ததிக்கு சற்றும் விரும்பம் இல்லை என்றாலும் மகனை தடுக்க அவரால் முடியவில்லை. 


அர்ஜூன் பெங்களூர் வந்ததில் ஆத்யாவுக்கு ஏக சந்தோஷம். ஆத்யா ப்ளாட்டின் எதிர் ப்ளாட்டை விலைக்கு வாங்கிய அர்ஜூன் அங்கேயே தங்கிக் கொண்டு தன் தொழிலை பார்த்துக் கொண்டான். ஆத்யாவின் படிப்பும் நல்ல முறையில் செல்ல இவர்கள் இருவரின் இடையே இருந்த பெயரிடப்படாத உறவும் மேலும் மேலும் வளர்ந்து வேர்விட்டு விருட்சமாக வளர்ந்தது. அர்ஜூன் ஆத்யாவின் நிழலாகிப்போக, ஆத்யா அர்ஜுனுக்கு எல்லாமாகி போனாள். 


இருவருக்கும் இடையே கலப்படம் இல்லாத அன்பு மட்டுமே ஆட்சி செய்ய, எந்தவித சலனமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் சென்று கொண்டிருந்த இவர்கள் உறவுக்கு ஒரு பெயரைக் கொடுக்க விழைந்த கடவுள் அதற்கான நாளையும் குறித்து, அதற்கு ஒரு ஆளையும் அனுப்பி வைத்தார்.