அர்ஜூன் & ஆத்யா 4
மெய் 4
அன்று அர்ஜூன் ஒரு நண்பனின் பர்த்டே பார்டிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்க, அந்த நேரம் அவன் ஃபோன் மணி அடித்தது. ஃபோனை எடுத்து அதில் தெரிந்த பெயரைப் பார்த்தவன் முகத்தில் புன்னகை மலர, ஃபோனை அட்டென் செய்து காதில் வைத்து,
"ஏய் குட்டி பிசாசு… மணி பத்தகுது இன்னும் தூங்காம என்னடி பண்ணிட்டிருக்க?"
"ம்ம்ம்…!! ஒரு ஓதவாக்கரை ஒன்னு, உருப்படாத பார்ட்டிக்கு போய் இருந்துச்சு, அது ஒழுங்கா வீடு போய்ச் சேந்துச்சா?, இல்லையான்னு தெரிஞ்சுக்க தான் இவ்வளவு நேரம் முழிச்சு இருக்கேன்" என்று ஆத்யா முறுக்கிக்கொள்ள, அர்ஜூன் அவள் அன்பில் மகிழ்ந்தான்.
"ஏன்டி குட்டி பிசாசு, நா என்ன உன்னை மாதிரி சின்ன புள்ளையா, வழி தெரியாம தொஞ்சு போக" என்று அர்ஜூன் வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க,
"டேய் லாம் போஸ்ட்... யாரடா சின்னப் புள்ளைன்னு சொல்ற? நா ஒன்னும் சின்னப்பொண்ணு இல்ல, நா டாக்டருக்கு படிக்கிறேன்னாக்கும். நான் பெரிய பொண்ணு ஞாபகம் வச்சுக்கோ" என்று கோபத்தில் வார்த்தைகளை கடித்துத் துப்ப, அர்ஜூன் சத்தம் போட்டு சிரித்தான்.
"ஓகே ஓகே... நீ கிழவி தான். நா ஒத்துக்குறேன்" என்றதில் ஆத்யா இன்னும் கடுப்பானாள்.
"போடா டேய் கொரங்கு... உனக்குப் போய் ஃபோன் பண்றேன் பாரு" என்று ஃபோனை கட் செய்ய, அர்ஜூன் காரை ரோட்டின் ஓரம் நிறுத்திவிட்டு ஃபோனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
"டேய் அதான் ஆத்யா காறித்துப்பி ஃபோனை கட் பண்ணிட்டாளே, அப்புறம் என்ன, காரை எடுக்க வேண்டியது தானே? என்ற பிரபுவை பார்த்து அலட்சியமாகச் சிரித்த அர்ஜூன், "டேய் டேய் அடங்குடா, என் தியா பத்தி எனக்குத் தான்டா தெரியும். நீ வேணும்னா பாரு, இன்னும் ஒரு நிமிஷத்துல அவ திரும்பி என்னைக் கூப்டுவ" என்று சொல்லி முடிக்கும் முன் தியாவிடமிருந்து கால் வந்திருந்தது.
ஃபோனை பிரபுவிடம் காட்டி, "எப்புடி?! எனக்குத் தெரியும்டா என் தியா பத்தி" என்று சட்டைக் காலரை தூக்கி விட்டவன், ஃபோனை அட்டன் செய்து, "யாரோ என் கூட பேச மாட்டேன்னு ரோஷமா போனாங்க… இப்ப மறுபடி அவங்களே கால் பண்ணி இருக்காங்க" என்று மீண்டும் அவளை வம்பிழுக்க,
"என்ன செய்ய எல்லாம் என் தலையெழுத்து, நீ ஒழுங்க வீடு போய்ச் சேந்தியான்னு தெரியாம எனக்கு மனசு பக்கு பக்குன்னு அடிச்சுக்குது. பார்ட்டியில நீ எதும் தண்ணி கிண்ணி அடிச்சிய? போதையில் வண்டி ஓட்டுறீயான்னு நெனைக்க, நெனைக்க, எனக்குப் பயமா இருக்குடா அஜ்ஜூ, ப்ளீஸ்டா... நீ ஒழுங்கா வீட்டுக்கு போய்டுவீய?" என்று அழாத குறையாக கேட்க, அர்ஜூன் கண்கள் கலங்கி விட்டது.
"ஏய் தியா குட்டி! உன் மேல சத்தியமா நான் குடிக்கலடி. நான் வீட்டுக்கு கிளம்பிட்டேன், கார்ல தான் இருக்கேன். பிரபு என் கூடத்தான் இருக்கான், எனக்கு ஒன்னு இல்லடா, நா பத்திரமா வீட்டுக்கு போய்டுவேன். சோ... நீ எத பத்தியும் கவல படாம தூங்கு, என் ஃபோன்ல சார்ஜ் அவுட் ஆகப்போகுது, நீ உன் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு மறுபடியும் எனக்கு ஃபோன் பண்ணிட்டு இருக்காத, நா சொல்றது புரியுதா? நீ போய் நிம்மதியா தூங்கு" என்றவன் ஃபோனை கட் செய்தான். அவன் ஃபோன் ஆனில் இருந்தால் அவள் மறுபடி மறுபடி ஃபோன் செய்து அவள் தூக்கம் கெடும் என்று, அவள் நிம்மதியாகத் தூங்கட்டும் என்று நினைத்து தன் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்து விட, அப்போது அவன் அறியவில்லை அவர்கள் இருவரின் நிம்மதியும் இன்றோடு அவர்களை விட்டு வெகு தூரம் செல்லப் போகிறதென்று.
ஆத்யாவிடம் பேசிவிட்டு ஃபோனை வைத்த அர்ஜூன் முகம் புன்னகையில் மலந்திருக்க, பிரபு மலர்ந்திருந்த அர்ஜூன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"டேய் பிரபு என்னடா?? என்ன ஆச்சு உனக்கு?? என்னமோ பிகரை பாக்குற மாதிரி என்ன அடிச்சுப் பார்த்துட்டு இருக்க? அப்படி பாக்காதடா, நா அந்த மாதிரி ஆள் இல்ல" என்றவனைத் தீயாக முறைத்த பிரபு,
"டேய்? என்ன கொழுப்பா..?? என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது??"
"ம்ம்ம் பக்க நல்லா கொழுகொழுன்னு தான் இருக்க, ஆனா என்ன செய்ய?? ஆணாப் பொறந்து வீணா போயிட்டியே…!! நீ மட்டும் பொண்ணா பொறந்திருந்தா நான் உன்ன தான்டா கல்யாணம் செஞ்சிருப்பேன். ம்ம்ம்ம்…!! ஜஸ்ட் மிஸ்" என்று பெருமூச்சுவிட்டான்.
"எரும!! எரும!! போய் வாய கழுவுடா சனியனே… என்னடா பயபுள்ள எப்பவும் பிலேபாய் மாதிரி சுத்திட்டு திரிஞ்சவன், இப்பயெல்லாம் நல்ல புள்ளையா இருக்கே? முந்தியெல்லாம் பார்ட்டிக்கு போன விடிய விடிய கூத்தடிக்கும் ஆளு, இப்ப என்னடான்னா? டான்னு பத்து மணி அடித்ததும் வீட்டுக்கு கிளம்பிட்ட? எல்லாம் அந்த ஊட்டி மலை உச்சி மாகாளி பண்ற வேல தானேன்னு பார்த்தேன்" என்று குறும்பாக சொல்ல, அர்ஜூன் அழகாகச் சிரித்தான்.
"ஆமா டா… தியா என்னோட வாழ்க்கையில வந்த பிறகு தான்டா, நான் என் வாழ்க்கையை ரசிச்சு, உணர்ந்து வாழவே கத்துக்கிட்டேன். நான் இத்தனை வருஷம் இழத்த எல்லாத்தையும் அவ தான்டா எனக்குத் திருப்பித் தந்த, தியா என் லைஃப்ல வந்தனால தான் பிரியா ஆன்ட்டி எனக்குக் கிடைச்சாங்க, தியா எனக்குக் குட்டி ஏஞ்சல் மாதிரின்னா, பிரியா ஆன்ட்டி எனக்குக் கார்டியன் ஏஞ்சல் டா. காலையில் நான் பார்ட்டிக்கு போறேன்னு சொன்னதும் தியா எக்காரணம் கொண்டும் தண்ணி அடிக்கக் கூடாது. தண்ணியடிச்சிட்டு கார் டிரைவ் பண்ண கூடாதுனு ஆர்டர் போட்டுட்டா, பிரியா ஆன்ட்டியும், சித்தியும் வேற, நைட் ரொம்ப நேரம் கண்ணுமுழிகாம சீக்கிரம் வீட்டுக்கு போன்னு சொல்லிட்டாங்கடா, அவங்க பேச்சை என்னால மீற முடியாது. இன்பேக்ட் நா இத்தனை வருஷம் ஏக்கினதும் இந்த அக்கறை, பாசத்துக்கு தானடா" என்றவன் முகம் புன்னகையில் நிறைய , பிரபுக்கும் அவன் சிரிப்பைப் பார்த்து மனம் நிறைந்தது.
ஒரு நல்ல நண்பனாக தியாவை அர்ஜூன் வாழ்க்கையில் தந்த கடவுளுக்கு மனதார நன்றி சொன்னான் பிரபு.
மறுநாள் காலை எட்டு மணிக்கு அர்ஜூன் தூக்கம் கலைந்து எழுந்து, கட்டில் அருகில் இருந்த தன் ஃபோனை ஸ்விட்ச் ஆன் செய்த அடுத்த நிமிடமே அது அலறியது. அரைத் தூக்கத்தில் ஃபோனை எடுத்து காதில் வைத்தவன், அந்தப் பக்கம் சொன்ன செய்தியை கேட்டு அப்படியே உடலில் எந்த அசைவும் இல்லாமல் உறைந்து நின்றவன் கண்களில் மட்டும் கண்ணீர் அருவியாக கொட்டிக் கொண்டிருந்தது.
ஃபோன் சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து எழுந்த பிரபு, அர்ஜூன் நின்ற நிலையை பார்த்து,
"டேய் என்னடா?? என்னாச்சு?? ஏன் இப்படி அழுதுட்டு இருக்க?" என்று பதறிப்போய் கேட்க. அர்ஜூனிடம் எந்தப் பதிலும் இல்லை. அவன் கையில் இருந்து நழுவி கீழே விழுந்து கிடந்த ஃபோன் பார்த்தவன், அதை எடுத்துக் காதில் வைக்க, அதில் வந்த செய்தியை கேட்டு அவனுக்கும் பேரதிர்ச்சி தான்.
பிரபு ஒரு நிமிடம் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி நின்றான். பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அர்ஜூனை இழுத்துக் கொண்டு உடனே காரில் ஏர்போர்ட் கிளம்பினான். ஏர்போர்ட் சென்றவன் கோயம்புத்தூர் செல்லும் விமானத்தில் அர்ஜூனுடன் வந்தான். கோயம்புத்தூர் வந்ததும் ஒரு காரை ஏற்பாடு செய்து கொண்டு அர்ஜூனுடன் ஊட்டிக்கு விரைந்தான். போகும் வழியெங்கும் அர்ஜூன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சாவி கொடுத்த பொம்மை போல், பிரபு இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றான். ஆனால், அவன் கண்கள் மட்டும் அழுவதை நிறுத்தவில்லை.
மூன்று மணி நேரம் கழித்துக் கார் ஆத்யா வீட்டின் முன் நிற்க, பிரபு கைதாங்கலாக அர்ஜூனை காரில் இருந்து வெளியே இறக்கிவிட்டான். மெதுவாக அவனை வீட்டுக்குள் அழைத்துச் செல்ல, எங்கிருந்தோ ஓடி வந்த அபிராமி அர்ஜூனை கட்டிக் கொண்டவர்,
"டேய் அர்ஜூன்?? போச்சுடா?. எல்லாம் போச்சுடா?? நம்ம பிரியா நம்ம விட்டு போயிட்டா டா" என்று அர்ஜூனை கட்டிக் கொண்டு கதற, பாவம் அவருக்குப் புரியவில்லை அபிராமிக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் அவன் இல்லையென்று. பிரியா மாரடைப்பில் இறந்த செய்தியை கேட்ட நொடியே அர்ஜூன் முழுவதும் உடைந்து விட்டான். அவனுக்குப் பிரியாவின் முகத்தைத் தவிர வேறு எதுவும் ஞாபகத்தில் இல்லை. கொஞ்ச காலம் என்றாலும் தனக்கு ஒரு தாயாகவே இருந்த பிரியாவின் இழப்பு அவனை மொத்தமாக புரட்டிப் போட்டிருந்தது. எதுவும் பேசும் நிலையில் அவன் அப்போது இல்லை. பிரபு மெதுவாக அவனைப் பிரியாவை படுக்க வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல, பிரியாவை அந்த நிலையில் பார்த்த அர்ஜூன் தன்னிலை இழந்து பிரியாவின் காலைக் கட்டிக்கொண்டு கதறி கதறி அழுக, அவன் சித்தப்பா சிவாவும் அவனை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அர்ஜூன் அழுவதை நிறுத்தவே இல்லை.
தன் கண்களின் மொத்த கண்ணீரும் கரையும் வரை அழுது தீர்த்தவனுக்குத் திடீரெனத் தியாவின் நினைவு வர, சட்டென எழுந்து அவசரமாக தியாவை தேட, வீட்டில் ஒரு ஓரமாக, அபிமன்யு அவள் தலை தடவி கொண்டிருக்க, அவன் மடியில் தலை வைத்து படுத்திருந்தாள் ஆத்யா. கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. எதையே வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தாள்.
அபிராமி, அர்ஜூன் அருகில் வந்து, "டேய் அர்ஜூன் அவ இப்பவரை ஒரு சொட்டு கூட அழவே இல்லடா.. வந்ததுல இருந்து கல்லு மாதிரி உக்காந்திருக்காடா, எனக்குப் பயமா இருக்கு, நீ போய் அவளைக் கொஞ்சம் பாரேன்." என்றதும் அர்ஜூன் அவள் அருகில் சென்று,"தியா" என்று கலங்கி குரலில் அழைக்க, தியா தலையைத் திருப்பிப் பார்த்தவள், கண்களில் அர்ஜூன் உருவம் தெரிந்த அடுத்த நிமிடம் பாய்ந்து வந்து அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.
"அஜ்ஜூ…"
"அஜ்ஜூ…"
"அம்மா..?? அம்மா என்ன விட்டு போயிட்டாங்க அஜ்ஜூ, எனக்கு யாரும் இல்லன்னு தெரிஞ்சும் என்ன தனிய விட்டு போயிட்டாங்க அஜ்ஜூ" என்று கதறியவள்,
"அம்மாவை திரும்ப வர சொல்லு அஜ்ஜூ…!! திரும்பி வர சொல்லு.!! இனிமே நான் நல்ல பொண்ணா இருப்பேன் அஜ்ஜூ, குறும்பு செய்ய மாட்டேன், அம்மா சொல்பேச்சு கேட்டு நடப்பேன் அஜ்ஜூ, அம்மாவை திரும்பி வர சொல்லு, எனக்கு அம்மா வேணும், எனக்கு அம்மா வேணும்" என்று அர்ஜூனை கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதவளை பார்த்த அனைவருக்குமே உள்மனது கலங்கியது.