அர்ஜூன் & ஆத்யா 3
மெய் 3
இவ்வளவு நேரம் நடந்த கூத்தை எல்லாம் வேடிக்கை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த அர்ஜூன், "என்ன சித்தி உங்களுக்கு ஆத்யாவை ரொம்பப் பிடிக்கும் போல? இங்க ஒருத்தன் இருக்குறதை கூடக் கவனிக்காம அவளுக்குச் சப்போர்ட் பண்ணி ஆன்ட்டியை திட்டிட்டு இருக்கீங்க" என்ற அர்ஜூன் குரலை கேட்ட அபிராமி,
"டேய் அர்ஜூன், நீ இங்க என்ன பண்ற?" என்றவர் அவன் கையில் இருந்த கட்டை பார்த்து, "டேய் என்னடா இது?? எப்டி அடிப்பட்டுச்சு?" என்று அவன் கையை பார்க்க, ஆத்யா சொன்ன பொய்யையே அர்ஜூன் அபிராமியிடம் சொல்ல, அபிராமி ஆத்யாவை சந்தேகமாக பார்க்க, அவள் கண்ணாலேயே "சாரி அத்த சாரி" என்று கெஞ்சினாள்.
"உனக்கு எதுவும் அடிபட்டுச்சா அத்துமா" என்று அபிராமிக்கு ஆத்யா "இல்லை" என்று தலையாட்டினாள்.
"ஏன்டா ?? அடிபட்டதும் நேர வீட்டுக்கு வரவேண்டியது தானே.? நான் டாக்டரை வர சொல்லியிருப்பேன் இல்ல?!"
"இல்ல சித்தி, ஆத்யா தான் என் வீடு பக்கத்துல தான் இருக்கு, அங்க போய் மருந்து போட்டுக்கலாம்னு சொன்னா, அதோட ரத்தம் வேற வந்தது, நம்ம வீட்டுக்கு வரதுக்குள்ள நிறைய ரத்தம் போய்டும்னு தான்" என்று அர்ஜூன் வாய்க்கு வந்ததை உளறி கொட்டினான்.
அபிராமி அர்ஜூனை பார்த்துப் பயங்கரமாக முறைக்க, ஆத்யா வயிற்றைப் பிடித்துக் கொண்டு அர்ஜூனை பார்த்து சிரித்தாள்.
"இப்ப எதுக்கு இந்தக் குட்டி பாப்பா இப்படி சிரிக்குது, சித்தி வேற தீயா முறைக்குறாங்க? என்னன்னு ஒன்னு புரியலயே" என்று முழித்த, அர்ஜூனு காதை பிடித்து திருகிய அபிராமி,
"ஏன்டா கழுத... இவ்ளோ தூரம் வரும்போது போகாத ரத்தம்? இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு நம்ம வீடு, அங்க வரதுக்குள்ள போய்டும்... அப்படி தானே?" என்று முறைக்க, அர்ஜூனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
"ஏது... பக்கத்து வீடா ஆஆஆ!!" என்று அதிர்ந்தான்.
ஆத்யா அழைத்ததும் ஆட்டுக்குட்டி போல் அவள் பின்னாடியே வந்தவன், ஆத்யா வீடு தன் சித்தி வீட்டுக்கு பக்கத்து வீடு தான் என்பதைக் கூட உணரவில்லை என்பது புரிய அசடு வழிந்தபடியே தலையை சொரிந்து கொண்டான்.
அர்ஜூன் பிரியா, ஆத்யாவுடன் சகஜமாகப் பேச தொடங்கி, ஆத்யா படிப்பை பற்றி கேட்டான்.
"நான் +2 படிக்கிறேன். பியூச்சர்ல பெரிய டாக்டர் ஆகப்போறேன் அஜ்ஜூ!!" என்று அவள் துள்ளாகச் சொல்ல, அவளின் 'அஜ்ஜூ' என்ற அழைப்பு அர்ஜூன் மனதில் ஜில் என்ற உணர்வை உண்டாக்கியது.
இதுவரை யாரும் அவனை செல்லமாக அழைத்தது இல்லை. அனைவரும் அவனை மரியாதையோடு தான் அழைப்பார்கள். அதற்குக் காரணம் அவன் தாய் அருந்ததி. அவர் மேல் மற்றவருக்கு இருக்கும் மரியாதையும், பயமும் தான் அர்ஜூனிடம் எல்லோரையும் ஒரு அடி தள்ளி நிற்க வைத்தது. அபிராமி கூட அர்ஜூன் என்று முழுப் பெயர் சொல்லி தான் அவனை அழைப்பார். அதனாலேயே அர்ஜூனுக்கு ஆத்யாவை இன்னும் இன்னும் அதிகமாகப் பிடித்தது.
நாட்கள் அழகாய் நடைபோட, ஆத்யா, அர்ஜூன் இடையே ஒரு அழகிய உறவு துளிர் விட்டது. ஆத்யா, அர்ஜூனுக்கு மட்டும் "தியா" ஆகிப் போனாள்.
ஒரே நாளில் பாதி நேரம் அபிராமி வீட்டில் இருக்கும் ஆத்யா அத்த, மாமா என்று அபிராமியையும், சிவாவையும் தான் சுற்றி சுற்றி வருபவள். அபிமன்யுவை அண்ணா, அண்ணா என்று சொல்லிக் கொண்டு அவன் பின்னாடியே திரியும் ஆத்யா, எப்போது அர்ஜூன் வந்தானோ, அப்போதில் இருந்து அர்ஜூன் கூடவே தான் திரிகிறாள். அபிமன்யு வேலை விஷயமாக வெளியூர் சென்று விட, தன் பகல் பொழுது முழுவதையும் அர்ஜூனுடனேயே கழித்தாள் ஆத்யா.
அர்ஜூனும் "தியா… தியா" என்று அவள் கூடவே இருந்தான். அவளுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அர்ஜூன் தன்னைப் புதிதாக உணர்ந்தான். தன் தொலைத்த தன் சின்ன வயது வாழ்க்கையை இப்போது ஆத்யாவுடன் சேர்த்து மூச்சு முட்ட அனுபவித்தான். காரிலேயே சுற்றித்திரியும் அர்ஜூன் இப்போதெல்லாம் ஆத்யாவோடு சைக்கிளில் வலம் வர ஆரம்பித்தான். ஊட்டி முழுவதையும் சைக்கிளிலேயே வலம் வந்தனர் இருவரும். இதுவரை பெரிய பெரிய ஹோட்டலிலேயே உணவு உண்டு பழகியவன், இன்று ஆத்யாவுடன் ரோட்டோரம் கிடைக்கும் உணவை வாங்கி உண்ணும் அளவு வந்துவிட்டான். பணத்திலேயே புரண்டவன், இன்று தான் மனிதர்களுடன் இணைத்துப் பயணிக்கிறான். அர்ஜூன் தொலைத்த அவன் சின்னச் சின்ன ஆசைகள் அனைத்தையும் அவளுக்கே தெரியாமல் நிறைவேற்றிக் கொண்டிருந்தாள் ஆத்யா.
அர்ஜூனுக்கு வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுத்தாள் அவள். ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கச் சொல்லிக் கொடுத்தாள். ஆத்யாவோடு இருக்கையில் அர்ஜூன் மனதில் ஒரு புதுவித நிம்மதி பரவியது. வெறும் ஐந்து நாட்களில் அர்ஜூன் வாழ்வில் ஆத்யா அசைக்கமுடியாத ஒரு இடத்தைப் பிடித்து விட்டாள்.
அபிராமிக்கும் அர்ஜூனின் இந்த மாற்றம் மன நிம்மதியை தந்தது. இப்போது தான் அர்ஜூன் சிரிப்பில் உயிர்ப்பையே பார்க்கிறார் அபிராமி. எத்தனை வருட வெறுமை... ஆனால், ஆத்யா அவன் வாழ்வில் வந்த வெறும் ஐந்தே நாளில் அர்ஜூன் வாழ்க்கையில் இருந்த மொத்த வெறுமையையும் அடித்து விரட்டி விட்டாள்.
அழகாய் நகர்ந்த நாட்கள் முடிவுக்கு வர, அர்ஜூன் தன் காலேஜ் லீவ் முடிந்ததால் இன்று மீண்டும் சென்னை கிளம்புகிறான்.
அர்ஜூனுக்கு தியாவை விட்டுப் பிரியப் போகிறோம் என்ற கவலை அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிய, அது அவன் கண்களில் நீராக வெளிவந்தது.
ஆத்யா அவன் கண்ணைத் துடைத்து, "என்ன இது அஜ்ஜூ? கிளம்பும் போது மூஞ்ச உம்முன்னு வச்சிட்டு, அழுதுட்டு இருந்த நல்லாவ இருக்கு…? அப்புறம் எனக்கு உன்ன நினைக்கும் போதெல்லாம், உன்னோட சோக மூஞ்சி தான் கண்ணு முன்னாடி வரும். ப்ளீஸ் அஜ்ஜூ கொஞ்சம் சிரிடா. நா உனக்கு தினமும் வீடியோ கால் பண்றேன், நம்ம தினமும் பேசலாம், அடுத்து உனக்கு காலேஜ் லீவு விட்ட உடனே நீ இங்க வந்துடு, நம்ம ஜாலியா ஊர் சுத்தலாம்" என்று ஒரு வழியாக அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த ஆத்யா, அவன் காரில் ஏறிச் சென்ற அடுத்த நிமிடம் தன் தாயைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
ஆத்யா அழுவதைப் பார்த்த பிரியாவுக்கு சற்று அதிர்ச்சி தான். கடைசியாக நான்கு வருடத்திற்கு முன் அவள் தந்தை ரகு இறந்த போது அழுதாள். அதன் பின் தன் தாய்க்கு இருக்கும் ஒரே ஆதரவு நாம் தான், அவரை இனி தான் தான் நல்ல படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த, இயல்பிலேயே தைரியசாலியான ஆத்யா தன் கண்ணீரை அழுத்தி துடைத்தவள், அதன் பின் எதற்கும் அழுதாதே இல்லை.
அப்படிப்பட்டவள் அன்று அர்ஜுனுக்கு அடி பட்ட போது தன்னையும் அறியாமல் கண் கலங்கினாள், இன்று அவன் பிரிந்து செல்கிறான் என்றதும் உடைந்து தன் தாயை கட்டிக்கொண்டு அழுகிறாள். பிரியாவும் மகளின் நிலை புரிய அவளை மார்போடு அணைத்துக் கொண்டார்.
காலம் யாருக்கும் காத்திருக்காது என்பது போல் வேகமாக நகர, ஆத்யா +2 முடித்து பெங்களூர் மெடிக்கல் காலேஜில் சேர்ந்து விட்டாள். அர்ஜுனும் தன் இளங்கலை படிப்பை முடிந்து எம்.பி.ஏ யில் சேர்ந்து இருந்தான். வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் அர்ஜூன், ஆத்யா இடையே இருந்த அன்பு மட்டும் குறையவில்லை.
ஹாஸ்பிடலில் இருக்கும் ஆத்யா தினமும் இரவு அர்ஜூனை அழைத்து அன்று முழுவதும் நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லாமல் அவளுக்குத் தூக்கம் வராது. அதேபோல் அவள் குரல் கேட்காது அர்ஜூனுக்கும் உறக்கம் வராது. இருவரும் பேச வேண்டியதை பேசிவிட்டு கான்பரன்ஸ் காலில் அபிராமி, பிரியாவை அழைத்துச் சிறிது நேரம் பேசினால் தான் அவர்கள் அன்றைய பொழுது முழுமையடையும். அர்ஜூன் பிரியாவை தன் தாய்க்கு ஒரு படி மேல் நினைத்திருந்தான். பிரியாவும் அர்ஜூன் நிலை புரிந்து அவனுக்கு ஒரு நல்ல தாயாகவே மாறியிருந்தார். விடுமுறை நாட்களில் அர்ஜூன், ஆத்யா இருவரும் ஊட்டியில் ஆஜராகி விடுவார்கள். அன்பால் இணைந்த இவர்கள் உறவு அருமையாகச் செல்ல...
அனைத்தும் நல்லபடி நடந்தால் விதிக்கு என்ன வேலை என்பதுபோல் வந்தது அந்த நாள்.