காதல் 3
காதல் 3
மலர்கள் மேல் படிந்திருந்த மார்கழி மாதத்தின் பனித்துளிகளை தன் அக்னி கரம் கொண்டு துடைத்துக் கொண்டிருந்தான் சூரியன்.
ஷரவன் படித்துக் கொண்டிருக்கும் போதே! தன் தந்தை பிரதாப்பின் பிசினஸில் சில பொறுப்புகளை கவனித்துக்கொண்டிருந்தான். அதே சமயம் தன் சொந்த முயற்சியில் சிறிய பிசினஸ் ஒன்றை தொடங்கி அது இப்போது நல்ல முறையில் போய் கொண்டிருக்கிறது. அது விஷயமாக தான் ஊட்டி வந்திருந்தான். பிரதாப்பிற்கு ஊட்டியில் சொந்தமான சிறிய அளவிலான அழகிய இயற்கை எழில் சூழ்ந்த வீட்டில் தான் ஷரவன் தங்கியிருந்தான்.
ஷரவனுக்கு காலை வேளையில் பனி சூழ்ந்த புல்வெளி, மரங்கள், மலர்களை பார்த்து ரசிப்பது ரொம்ப பிடிக்கும். ஏனோ இன்று காலையில் இருந்து ஷரவனின் மனதில் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு சந்தோஷம். அதே மனநிலையில் காலையில் எழுந்தவுடன் தன் ஜெர்கினை போட்டுக்கொண்டு தன் ரூமை விட்டு வெளியே வந்தவன்.
அன்றைய பொழுதின் அழகிய இயற்கை காட்சிகளை கண்களில் பதித்தபடி வந்தவனின் கண்களில் விழுந்தால் மிருதுளா.
அழகிய பிங்க் நிற காட்டன் சல்வாரில் தண்ணீர் விட்டு வெளியே வந்த மீன் போல் துள்ளி குதித்து அங்கிருந்த மரத்தின் கிளையை ஏக்கி ஏக்கி பிடித்து இழுத்து கொண்டிருந்தாள். அவள் இழுத்ததில் மரத்தில் இருந்த பூக்கள் அந்த பூக்களின் ஒளிந்திருந்த பனித்துளிகள் அவள் மேல் மலர் மழையாய் பொழிய அதில் தன்னை மறந்து துள்ளி குதித்து சிறு குழந்தையென விளையாடிக் கொண்டிருந்தவளை விட்டு ஏனோ தெரியவில்லை ஷரவனால் கண்களை இம்மியளவும் அகற்ற முடியவில்லை.
அவள் முகம் சரியாக தெரியாத போதும் அவள் செய்கையில் தன்னை தொலைத்தவன், அவளின் முகம் பார்க்கும் ஆவலில் அவளை நோக்கி சென்றான்.
குமரியாய் இருந்தும் இன்னும் குழந்தை தனத்துடன் மிளிரும் முகம், கருப்பு வைரம் போன்ற கண்கள், துள்ளி குதிக்கும் போது அவளுடன் சேர்ந்து துள்ளிய அவளின் விரிந்த கூந்தல், அவளின் சிரிப்பு சத்தத்துடன் இணைந்து தாளம் போடும் கண்ணாடி வளையல்கள் என்று அவளின் அழகில் முழுவதும் தன்னை இழந்து விட்டிருந்தான் ஷரவன்.
அவனையும் அறியாமல் அவள் போகும் இடமெல்லாம் அவள் கால் தடத்தை பின் தொடர்ந்து இவன் வழி அமைய அவள் பின்னோடு அவள் நிழலுக்கு துணையாக அவளை பின் தொடர்ந்தான்.
பள்ளி விடுமுறைக்கு தன்யாவின் குடும்பம் ஊட்டிக்கு வந்தவர்கள் மிருதுளாவையும் உடன் அழைத்து வந்தனர். தனுவுடன் சேர்த்து மிருது செய்யும் அனைத்து சேட்டைகளையும், குறும்புகளையும் ரசித்து தான் இதயப்பையில் நிறைத்துக் கொண்டான் ஷரவன்.
ஒரிடத்தில் மிருதுளா தெரியாமல் மிளகாயை கடித்து விட்டு காரம் தங்காமல் கண்களில் நீர் வர, "அய்யோ, அம்மா" என்று வானுக்கும் பூமிக்கும் குதித்து கை, கால்களை உதைத்துக் கொண்டு இதழ்களை பிதுக்கி முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்டு "அம்மா! எரியுதும்மா எரியுதும்மா." என்று தனுவின் அம்மா தங்கமணியை பார்த்து அழுதுகொண்டே கத்தினாள்.
தனு மிருது தலையில் கொட்டியவள், "அடியேய் ஒரு சின்ன மிளகா கடிச்சதுக்கு ஏன்டி இப்படி சீன் போடுற" என்று தனு மிருதுவின் மூக்கை பிடித்து கிள்ளிவைக்க,
தங்கமணி, " ஏய் தன்யா… சும்மா இருடி. பாவம் அவளே காரம் தாங்காம கத்திட்டு இருக்கா, இதுல நீ வேற, வாய மூடிட்டு இருடி." என்றவர், மிருதுளாவை சமாதானம் செய்ய ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்க, உடனே அழுகையை விட்டு ஐஸ்கிரீமை கையில் வாங்கிக் கொண்ட மிருதுளாவின் முகத்தில் மின்னலென வெட்டிய சிரிப்பை பார்த்த தனு,
"அடிப்பாவி! ஏன்டி பக்கி ஒரு ஐஸ்கிரீம்காடி இவ்வளவு அக்கப்போரு... எரும எரும." என்று தனு, மிருதுளாவின் முதுகில் தாளம் போட, மிருது தனுவிற்கு தன் முதுகை வாடகைக்கு தந்தவள், கையில் வழிந்த ஐஸ்கிரீமை ஒரு சொட்டு கூட விடாமல் கவனமாக நக்கிக் கொண்டிருக்க, அதை பாத்த ஷரவனுக்கு உள்ளுக்குள் அப்படியே மிருதுளாவை அள்ளி தன் இரு கைகளில் அணைத்துக் கொள்ளும் பேராவல் எழுந்தது. (ஆனா முடியாதே ஹா ஹா ஹா)
நேரம் போவதே தெரியாமல் ஷரவன் மிருதுளாவையே சுற்றிக்கொண்டு தன் மொபைலில் அவளின் அனைத்து சேட்டைகளையும் போட்டோ எடுத்துக் கொண்டான்.
நேரம் போனது தெரியாமல் மாலை வரை தன்னை மறந்து மிருதுளாவையே சுற்றிக் கொண்டிருந்த ஷரவனை அவன் போன் மணியடித்து, "டேய் வாடா இங்க" என்று நிகழ்வுலகிற்கு இழுத்து வர. காண்டோடு போனை பார்க்க அவன் தந்தை தான் அழைத்திருந்தார்.
அவரிடம் ஐந்து நிமிடம் பேசிவிட்டு திரும்பிவனுக்கு அங்கே மிருதுளா இல்லாத வெறுமை தான் காட்சி காத்திருந்தது. சுற்றும் முற்றும் மிருதுளாவை தேடி அலைந்தவன், எங்கும் அவள் கிடைக்காமல் போக ஷரவன் முகம் சார்ஜ் போன மொபைல் போல் ஆகிவிட்டது.
பெயர் கூட தெரியாதவளிடம் தான் மனதையும் தொலைத்து, காதலை வாங்கிக் கொண்டு திரும்பினான் ஷரவன்.
"ம்ம்ம்ம்! அப்போ அமுல்பேபிய பார்த்ததும் சார் விழுந்துட்டிங்க அப்படி தானே" என்று நிலவன் குறும்பாக கேட்க, ஷரவன் அழகாக தலையை மேலும் கீழும் ஆட்ட, நிலவன் சிவந்திருந்த ஷரவனின் கன்னத்தை பார்த்து சிரித்தான்.
"டேய்! டேய்! என்னடா இது புதுசா இருக்கு? உனக்கு வெட்கப்பட கூட தெரியுமா! அய்யோ! அய்யோ! இப்ப பார்த்து சிந்துவும் விஷ்வாவும் இங்க இல்லாம போய்டாங்களே" என்று கலாய்க்க.
"டேய்! நீ இப்ப என்கிட்ட மீதி வாங்க போற பாரு மரியாதையா ஓடிப் போய்டு" என்று ஷரவன் நிலவனை செல்லமாக முறைத்தான்.
"சரி சரி போறேன்… ஆன, ஒன்னு டா எவ்வளவோ அழகான பொண்ணுங்க எல்லாம் உன் பின்னாடி சுத்தியும், அதெல்லாம் விட்டுட்டு. அந்த அப்பாவி அமுல் பேபிக்கு புருஷனா வாக்கப்பட போற நீ. ம்ம்ம்ம் எப்படியோ நல்லா இருந்தா சரிதான். நீ உன் வெட்கத்தை கன்டினியூ பண்ணு நா கிளம்புறேன்" என்று நிலவன் கிளம்ப,
ஷரவன், "டேய்!" என்று அதிகாரமாக நிலவனை கூப்பிட்டு, "நான் வெட்க பட்ட மேட்டர் நமக்குள் தான் இருக்கணும். இது கடுகளவு வெளிய கசிஞ்சலும் அவ்வளவு தான் சொல்லிட்டேன்" என்றவனை வில்லத்தனமாக பார்த்தான் நிலவன்.
"டூ பி ஹானஸ்ட்
இப்ப வரை எனக்கு அந்த ஐடியாவே இல்லடா. ஆன, நீ சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு அப்படித் தோணுது." என்று விஷமமாக சொல்ல,
ஷரவன், "டேய் வேணாம்டா... நீ அப்படி ஏதும் செஞ்ச, மகனே நீ காலி" என்று மிரட்ட,
"ஹலோ பாஸ். ஃபார் யுவர் இன்பர்மேஷன், நீங்க இப்ப என்கிட்ட கெஞ்சணும். அத மறந்துட்டு பேசிட்டு இருக்கீங்க மிஸ்டர். ஷரவன் பிரதாப்" என்று அலட்சியமாக சொன்னான் நிலவன்.
'ஐயோ கடவுளே போயும் போயும் இந்த பக்கி கிட்ட போய் மாட்டிக்கிட்டேனே. இந்த பக்கி வேற இப்ப பிளாக் மெயில் பண்ற மூடுல இருக்கான் போல? நல்ல தொக்கா சிக்கிட்டேன்' என்று கடுப்பானவன், "டேய் ப்ளீஸ்டா உன் திருவாயை மூடிட்டு கொஞ்சம் சும்மா இருடா! நான் உன்னை கெஞ்சி கேட்டு தொலைக்கிறேன்"
"டேய் உன் டயலாக் மட்டும் தான் கெஞ்சுற மாதிரி இருக்கு. ஆன, உன் குரலும் முகமும், டயலாக்குக்கு சிங்க் ஆகலயே அதுல ஆணவம் தெரியுதே" என்று தான் ஆள்காட்டி விரல் கொண்டு கன்னத்தை தேய்த்து. இது செல்லாது செல்லாது என்பது போல் தலையை இட வலமாக ஆட்ட கடுப்பான ஷரவன்,
"டேய் நீ ரொம்ப தான் பண்ற நீ. நாளைக்கு நீ லவ்வுல மாட்டி அவதி படுறப்போ, நான் முடியே போச்சுன்னு சும்மா இருந்துடுவேன் பாத்துக்க, மலையேற மச்சான் தயவு வேணும்மோ இல்லையே, லவ்வுக்கு நண்பன் தயவு வேணும்டா நல்ல யோசிக்க."
"டேய் என்னை என்ன உன்ன மாதிரி வீக் ஹார்ட்னு நெனைச்சிய? மீ வெறி ஸ்ட்ராங் டா, இந்த காதல் எல்லாம் நான் இருக்க திசை பக்கம் கூட வராது" என்று சட்டை காலரை தூக்கி விட்டவன் அங்கிருந்து கிளம்ப (பாவம் சாருக்கு தெரியாது, அவன் ஸ்ட்ராங் ஹார்ட் ஒரு வால்டியூப் கிட்ட வசமா மாட்டப் போதுன்னு. ஹா ஹா ஹா)
நிலவன் அங்கிருந்து சென்றதும், ஷரவனும் மிருதுளாவின் நினைவுகளில் முழ்கி உறங்கி போனான்.
மறுநாள் காலை புதிதாக விடிய மிருதுளாவை பார்க்கும் ஆர்வத்தில் ஷரவன் வேக வேகமாக காலேஜ் கிளம்ப, இங்கு மிருதுவும், தனுவும் ஏற்கனவே காலேஜ் வந்திருந்தனர்.
கிளாசுக்கு போகும் வழியில் சில சீனியர் மாணவர்கள் இரு பெண்களையும் பிடித்துக்கொண்டு வம்பு செய்ய, வழக்கம் போல் மிருது கண்களில் குத்தால அருவி ஸ்டார்ட் ஆகியது, தனுவும் அந்த மாணவர்களின் மோசமான பேச்சில் முகம் சுழிக்க, சரியான நேரத்தில் "இங்க என்னடா நடக்குது?" என்ற அதட்டல் குரல் வர, குரல் வந்த திசையில் வந்து கொண்டிருந்தனர் நிலவனும் அவன் நண்பர்களும்.
நிலவனை பார்த்ததும் மிருதுளா முகத்தில் நிம்மதி பரவ, தனுவுக்கோ, "ஐயோ கடவுளே!!! ஏற்கனவே இங்க பத்திட்டு எரியுது. இதுல பெட்ரோல் உத்த இந்த விசித்திர குரங்குங்க வேற வருதே, காலையிலேயே காலண்டர்ல போட்டிருந்தான், இன்னைக்கு சோதனை மேல் சோதனைன்னு இப்ப புரியுது அதுக்கு, என்ன அர்த்தம்னு" என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
பெண்கள் அருகில் வந்த நிலவன் அங்கிருந்த மாணவர்களிடம், "ஏன்டா இந்த பொண்ணுங்க கிட்ட வம்பு பண்றீங்க?" என்று கோபமாக கேட்டான்.
அவன் கோபத்தில் பயந்த அந்த மாணவர்கள், "இல்ல... இல்ல சீனியர்... சும்மா பேர் தான் கேட்டோம். அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்ல" என்று வார்த்தைகள் தந்தியடிக்க. அதை பார்த்த தனுவும், மிருதுவும் வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டு, "இது உலக நடிப்புடா சீனியர்ஸ்" என்று மைண்ட் வாய்ஸ் போட,
நிலவன், "இதோ பாருங்கடா இதுதான் லாஸ்ட், இனி இவங்க கிட்ட சும்மா பேசுறது இல்ல பார்த்தாலே கண்ணை நோண்டிடுவேன்." என்று மிரட்ட,
விஷ்வா, "டேய்! இனி அவங்க ரெண்டு பேர் இருக்க பக்கம் மறுபடி உங்களை பாத்தேன் அவ்ளோ தான், போங்கடா." என்று விரட்ட அந்த மாணவர்கள் விட்டால் போதுமென்று ஓடி விட்டனர்.
(நிலவன், ஷரவன் மிருதுளாவை பற்றி சொல்லிய அனைத்தையும் விஷ்வா, பிரேம், பரத்திடம் நேற்று இரவே சொல்லி விட அவர்களுக்கு மிருதுளா மீதிருந்த அன்பு இன்னு கூடிடுச்சு)
மிருதுளாவை திரும்பி பார்த்த நிலவன், "இங்க பாரு அமுல்பேபி, இனி யாராவது உன் கிட்ட வம்பு பண்ண என்கிட்ட சொல்லு நாங்க பாத்துக்குறோம்" என்றதும் மிருது, தனு இருவரும் வேகமாக தலையாட்ட,
"ஏய் வால்டியூப் நா அமுல் பேபிக்கு தான் சொன்னேன், உனக்கு இல்ல, நீ ஏன் தலையை இப்புடி ஆட்டுற, உன்கிட்ட எல்லாம் இந்த பசங்க வம்பு பண்ண மாட்டாங்க, நீ தைரியமா இருக்கலாம்"
"அது எப்படிடா? அவ்வளவு கன்ஃபார்ம்மா சொல்றே?" என்று பரத் சந்தேகமாக கேட்க,
நிலவன் தனுவின் கன்னத்தை பிடித்து இடவலம் ஆட்டியவன், "நம்ம பசங்களுக்கு ஒரு டேஸ்ட் இருக்குமில்லடா. இந்த ஐஸ் குச்சியை எவனும் கண்டுக்க மாட்டான்" என்று விளையாட்டாக சொல்ல, தன் கன்னத்தை பிடித்திருந்த நிலவன் கையை தட்டி விட்ட தனுவின் கண்களில் நீர் திரண்டு விட, வாடிய முகத்துடன் அங்கிருந்து ஓடி விட, அவள் முகவாட்டம் நிலவன் மனதை வெகுவாக தாக்கியது.
"ஏய் தனு தனு நில்லுடி!" என்று கத்திய மிருதுளா, திரும்பி நிலவனுக்கு தங்களை காப்பாற்றியதற்கு, "தேங்க்ஸ் அண்ணா!" என்றவள் தனு பின்னாடி ஓடிவிட,
இங்கு விஷ்வா நிலவனை ஒரு மாதிரி பார்த்தான்.
"டேய் என்னடா? ஏன் இப்படி ஃபிகர பாக்குற மாதிரி என்ன லுக்கு விடுற? என்னடா?"
"இல்ல நிலவா, இது நீதானன்னு பாக்குறேன். நீ இதுவரை இப்படி எந்த பொண்ணையும் கிண்டல், கேலி பண்ணி நாங்க பாத்ததே இல்ல. நாங்க சைட் அடிச்ச கூட நீ ஒரு அடி தள்ளி தான் நிப்ப, இப்ப என்னடான்னா அந்த தனியாத்தூள் கிட்ட ஓவரா சீண்டி விளையாடுற மாதிரி தெரியுது" என்று சந்தேகமாக பார்க்க,
நிலவனுக்கும் அதே குழப்பம் தான். இதுவரை நிலவன் எந்த பொண்ணிடமும் இப்படி விளையாடியது இல்ல. அவனுக்கு எப்போதும் பெண்கள் மேல் ஒரு மரியாதை இருக்கும். சிறுவயதில் இருந்து பெண்களை மதித்து, மரியாதையுடன் நடத்த வேண்டும், என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்டதால் நிலவன் எப்போதும் பெண்களை மதித்து நடப்பான். ஆனால், ஏனோ தன்யாவுடன் மட்டும் அப்படி இருக்க முடியவில்லை. தனுவை வெறுப்பேத்தி அவளின் முறைக்கும் கண்களையும், கோபத்தில் சிவக்கும் அவள் கன்னத்தையும் வேடிக்கை பார்ப்பது நிலவனுக்குள் ஜூல் என்ற உணர்வை ஏற்படுத்துவது அவனுக்கே வியப்பாக இருந்தது. இதுவரை தோன்றாத புது வித உணர்வுகள். தனுவை நினைக்கும் போது அவனுள் வருவதை உணர்ந்தவன். ஒரே நாளில் அவனுள் ஏற்பட்டிருந்த இந்த மாற்றம் அவனையும் அறியாமல் அவன் முகத்தில் ஒரு அழகிய புன்னகை மலர செய்தது.
தன்னை நிலைப்படுத்த தன் தலைமுடியை அழுத்தி கோதியவன், தன் புன்னகையும், முகத்தில் அவன் அனுமதி இல்லாமல் வந்த வெட்கத்தை நண்பர்களுக்கு தெரியாமல் மறைக்க அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.
ஷரவன் மிருதுளாவை அவள் கிளாஸ் ரூமுக்கு வெளியே நின்று பார்த்து ரசித்து ஜொள்ளு விட்டு விட்டு தான் நண்பர்கள் இருக்குமிடம் வந்தான்.
"குட் மார்னிங் கைய்ஸ்!" என்றவனை, நிலவனை தவிர மற்ற மூனும் ஒரு மாதிரி பார்வை பார்க்க, ஷரவனுக்கு புரிந்து விட்டது இது நிலவன் வேலை தான் என்று, திரும்பி நிலவனை முறைக்க, அந்த சிட்டிவேஷனுக்கு கரெக்டாக நிலவனின் ஃபோனில், "நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும்" என்ற மெர்சல் பட டயலாக் ரிங்டோனாய் ஒலிக்க, நிலவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஷரவனுக்கும் இனி இங்கு என்ன நடக்கும் என்று தெரிய நண்பர்களின் அடியைத் தாங்க தான் நெஞ்சை இரும்பாக்கி கொண்டான். அந்த நாலு குரங்கும் சேர்ந்து ஷரவனை உண்டு இல்லை என்று வச்சு செய்தனர்.
"டேய் முடியலடா, கொஞ்சம் கேப் விட்டு தெளிய வச்சு தெளிய வச்சு அடிங்கடா... என்னால முடியல." என்று கதறியவன், "இப்ப என்னடா உங்களுக்கு பார்ட்டி வேணும் அவ்ளோ தானா... அதுக்கு தானே இவ்வளவு சீனு.. இன்னைக்கே தந்து தொலையுறேன்" என்று ஷரவன் சரண்டர் ஆனான்.
"அப்படி வாடா மகனே வழிக்கு" என்ற விஷ்வா, *கைய்ஸ் பிளான் சக்சஸ்.. மிஷன் கம்ப்ளீட்டாட். கெட் ரெடி பார்த்த பார்ட்டி, யா யா யா" என்று நால்வரும் கத்த,
"டேய் எருமைகளா... நீங்க சும்மா பார்ட்டி வேணுன்னு கேட்டிருந்தாலே நான் ஓகே சொல்லி இருப்பேனேடா, ஏன்டா இப்படி என்ன வச்சு செஞ்சீங்க? ஏன்டா இந்த கொலைவெறி பன்னிகளா… வலி உசுரு போகுது."
விஷ்வா, "பேசாதடா நீயி... நீ அமுல்பேபி பத்தி எங்ககிட்ட சொல்லாம விட்டதுக்கு உனக்கு நாங்க பெரிய ஆப்பு வச்சிருக்கனும். ஏதோ பார்ட்டி தரேன்னு சொன்னியேன்னு இத்தோட விடுறோம்"
பரத், "அதென்னடா... பார்த்த உடனே அமுல்பேபி மேல அப்படி ஒரு லவ்சு சாருக்கு?அதுவும் கல்யாணம் கட்ற அளவுக்கு?" என்று குறும்பாக கேட்க, ஷரவன் முகத்தில் மெல்லிதாக வெட்கம் பரவியது.
" டேய்! டேய்!! இங்க வாங்கடா... நிலவன் சொன்னது உண்மை தான். ஷரவன் வெட்கப்படுறான்டா." என்று கத்த,
"யாருடா இங்க வெட்கம், மானம்ன்னு பேசுறது. உங்க ஐஞ்சு பேருக்கும் தான் அதெல்லாம் இல்லையே" என்று வந்த கம்பீர குரலிலேயே அது யாரென்று தெரிய, ஐஞ்சு பேரும் திரும்பி பார்க்க அங்கு இடுப்பில் கை வைத்து இவர்களை முறைத்தபடி வந்து கொண்டிருந்தாள் சிந்து.