அர்ஜூன் ஆத்யா 21

 அர்ஜூன் ஆத்யா



மெய் 21

"அத்தைக்கு என்னை ரொம்ப பிடிக்கும் தான் மாமா, நான் ஒத்துக்குறேன். ஆனா, இப்ப அவங்க எங்கள சேத்து வைக்க நினைக்க ஒரே காரணம். என்னை தவிர யாரையும் அர்ஜூன் மனசுல நினைக்க மாட்டான். சோ அவனையும் என்னையும் சேத்து வச்சிட்டா, அவங்க அர்ஜூனோட வாழ்க்கை சரியாகிடும். அவங்க குற்றவுணர்வும் சரியாகிடும். இப்பவும் அவங்க அர்ஜூனோட வாழ்க்கை, அவங்க  நிம்மதின்னு சுயநலமா தான் யோசிக்கிறாங்க மாமா. ஒரு நிமிஷம், ஒரே ஒரே நிமிஷமச்சும் என்னை பத்தி யோசிச்சாங்கள மாமா? அர்ஜூன் தான் என்னோட உலகம்னு தெரிஞ்சும், என்னை அவன்டா இருந்து பிரிச்சாங்களே, அப்ப எனக்கு எப்படி வலிச்சிருக்கும். கல்யாணம் ஆகி ரெண்டே மாசத்துல என்னோட கல்யாண வாழ்க்கையே முடிஞ்சு போச்சே மாமா... வயித்துல குழந்தையோட பக்கத்துல புருஷன் இல்லாம நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன். நானும் அவங்களுக்கு பொண்ணு தான மாமா? ஏன் மாமா ஒரு நிமிஷம் கூட அவங்க என்னலை பத்தி யோசிக்கள?" என்றவள் தான் இத்தனை வருட மனக்குமுறல் களையும் மொத்தமாக கொட்டிவிட்ட, அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் கலங்கி நின்றனர். 

"நான்  பண்ணது பெரிய பாவம் தான் அத்தும்மா. முடிஞ்ச என்னை மன்னிச்சிடு" என்று அபிராமி, ஆத்யா முன் இரு கைகுப்பி நிற்க, ஆத்யா அவரை நெருங்கி அவர் கைகளை பிடித்து, "ப்ளீஸ் அத்த இப்படி செய்யாதீங்க. நானும் ஒரு குழந்தைக்கு அம்மா தான். என்னால உங்க உணர்வுகளை புரிஞ்சுக்க முடியுது. நான் ஏதோ மனவேதனையில் இப்படி பேசிட்டேன். உங்க உடம்பு நிலைமை தெரிஞ்சும், நான் இப்படி பேசுறது தப்பு தான். ஐம் சாரி அத்த, ப்ளீஸ் எல்லாத்தையும் மறந்துடுங்க, இனி இதை பத்தி யாரும் எதுவும் பேச வேண்டாம்."  என்று ஆத்யா உறுதியாக சொல்லி விட்டாள். 

அர்ஜூன் அவள் இந்த முடிவை  தான் எடுப்பாள் என்று தெரிந்து எதுவும் பேச முடியாது இருந்தான். 

கௌதம் தான் "ப்ளீஸ் ஆது நீ கொஞ்சம் யோசிடா, அட்லீஸ்ட் ரியா, அபிய நெனச்சவது" என்றவன் ஆத்யா முறைத்த முறையில் அமைதியாகிவிட… அர்ஜூன் மெதுவாக ஆத்யா அருகில் வந்தான்.

" நீ உன்னோட முடிவ சொல்லிட்டா தியா. ஓகே அதை நான் ஏத்துக்குறேன். ஆனா, எனக்கு என்னோட ரியா… இல்ல‌ இல்ல... என்னோட பிரியா ஏஞ்சல் எனக்கு வேணும். இனிமே அவ இல்லாம என்னால இருக்க முடியாது தியா. அதுக்கு நீ எதுவும் தடை சொல்ல மாட்டியே" என்று ஏக்கத்தோடு வந்த அர்ஜூன் குரலில் அவன் தியாவின் உயிரில் சென்று தாக்கியது.

"அவ உன்னோட பொண்ணு அஜ்… அர்ஜூன்… எனக்கு அவகிட்ட எந்த அளவு உரிமை இருக்கோ, அதே உரிமை உனக்கும் இருக்கு, அதுல தலையிட எனக்கு எந்த ரைட்ஸ்சும் இல்ல" என்றவள் கையை பிடித்து அர்ஜூன், சந்தோஷத்தில் அவள் கைகளில் முத்தம் வைக்க, அந்த நொடி அவன் கண்கள் கலங்கி இருந்தது. 

"எனக்கு தெரியும்டி, நீ இதை தான் சொல்வேன்னு எனக்கு நல்ல தெரியும்" என்றவன், திவ்யாவிடம் திரும்பி, "திவ்யா ப்ளீஸ்மா, குழந்தைகளை கொஞ்சம் கீழ கூட்டிடு வயேன்" என்றான்‌.

திவ்யா குழந்தைகள் மூவரையும் கீழே அழைத்து வர, கீழே வந்த ரியாவை தான் கைகளில் தூக்கிக் கொண்ட கௌதம், "லட்டு குட்டி, நீங்க god கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேட்டுட்டு இருந்தீங்க இல்ல, அதை  இன்னைக்கு god உனக்கு கொடுக்க போறாரு, அது என்னன்னு சொல்லு பாக்கலாம்.?" என்றதும், ரியா திரும்பி ஆத்யாவை பார்த்தாள்.

மெதுவாக கௌதம் காதருகில் குனிந்து, "டாடி… நா god  கிட்ட அப்பா சீக்கிதம் வதனும்னு  தான் கேத்டேன். பட் அம்மா, அப்பா பத்தி கேட்ட அழுவ இல்ல. சோ நா ரொம்ப சீக்ரெட்டா தான் god கிட்ட பிரே பண்ணுவேன்" என்றவள் மழலைக் குரல் அர்ஜூன் காதிலும் விழ, அவன் கண்கள் குளமானது.

கௌதம் ரியாவை தலையை மெதுவாக வருடியவன், "இல்லடா குட்டி, இனி உன்னோட அம்மா அழமாட்டா, ஏன்னா லட்டுவோட அப்பா லட்டுவையும், அம்மாவையும் பாக்க வந்துட்டாரு" என்று உற்சாகமாக சொல்ல, 

"டாடி நெஜமாவா!? லட்டுவோத அப்பா வந்தாச்ச?" என்றவள் கண்கள் ஜொலிக்க, ஆர்வமாக தன் மழலை மொழி கேட்டாள்.

"ஆமாடா லட்டு குட்டி, உன்னோட பெஸ்ட் ப்ரண்ட் அபியோட அப்பா தான் உனக்கும் அப்பா. உன் அஜ்ஜூ தான் இந்த ஏஞ்சலோட அப்பா" என்றதும் ரியா முதலில் மலங்க மலங்க விழித்தாள். கௌதம் கையில் இருந்து இறங்கி ஆத்யாவிடம் சென்று, "ம்மா, அஜ்ஜூ தா ஏ அப்பாவ ம்மா.?" என்று கேட்க, ஆத்யா ஒரு நிமிடம் கண்களை அழுத்தமாக மூடி தன்னை நிதானித்து, மெதுவாக ஆமாம் என்று தலையை ஆட்ட, "அப்ப நான் அப்பா கிட்ட போட்டா.? நீ அழ மாட்ட தானே.?" என்றவளை வார்த்தை ஆத்யா இதயத்தில் தேனாக இனிக்க, அவள் இதழ்களில் நிறைவான புன்னகை மலர்ந்தது.

" போடா லட்டு குட்டி, நீ அப்பா கிட்ட போ, அம்மா அழ மாட்டேன்" என்றது தான் தாமதம் ரியா, "ப்பா" என்று கத்தியபடி ஓடிச்சென்று அர்ஜூன் காலை கட்டிக்கொண்டாள்.

தன் உயிரில் இருந்து உதித்த. தன் மகளின் வாயில் இருந்து முதல் முறையாக அப்பா என்ற வார்த்தையை கேட்ட அர்ஜூன் மன ஆனந்த கூத்தாட, ரியாவை தான் இரு கைகளால் தூக்கி தன் மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்து, அவள் முகம் முழுவதிலும் தன் முத்ததை பதித்தான். 

ரியாவும் அஜ்ஜூவில் இருந்து அப்பாவாக மாறியவன் முகத்தில் இத்தனை நாள் தன் தந்தைக்காக சேர்த்து வைத்த தன் முத்தங்களை மொத்த கொட்டி தீர்த்தாள்.

"அஜ்ஜூ நா ரொம்ப ஹாப்பி அஜ்ஜூ, நீ தான் லட்டுவோட அப்பா, ஐம் சோ ஹாப்பி, நா இனிமே ஸ்கூலுக்கு உன் கூத தா வதுவேன், நீ தான் லட்டுக்கு ஹோம் ஒர்க் செஞ்சு ததனும், பார்க் க்கு நீ லட்டுவ  தலைக்கு மேல தூக்கி ஷோல்டர்ல உக்காத வச்சிட்டு போணும்" என்ற அவள் மனதில் இத்தனை நாள் தன் அப்பாவுக்கு ஏங்கிய ஏக்கத்தை எல்லாம் ஒன்று விடாமல் சொல்லிக் கொண்டிருக்க, ஆத்யாவுக்கு ஒரு கணம் இதயமே நின்றுவிட்டது.

"இவ்ளோ நாள் அவ அப்பாவை நெனச்சு இவ்வளவு ஏங்கி இருக்களா இவ!? நான் கஷ்டப்படுவேன் தான் அவ என் கிட்ட எதுவும் சொல்லலயா!?" என்று தன் மகளின் பாசத்தை நினைத்து அவள் மனம் பெருமையில் பூரித்து இருக்க, சற்று முன் அவள் எடுத்த முடிவில் சிறுது சிறிதாக கீறல் விழுத்தொடங்கி இருக்க, அங்கு  இன்னொரு மொட்டு கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தது.

ரியா, அர்ஜுனை அப்பா என்றழைத்ததும், அர்ஜூன் அவளை கொஞ்சுவதையும் பார்த்த அபி, தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்க, ஆத்யா பதறியபடி, ஓடி வந்து அபி முன்னால் முட்டி போட்டு உட்கார்ந்தாள்.

"ஏன்டா பட்டுக்குட்டி? எதுக்கு இப்படி அழுகுறீங்க?" என்றவள் தன் புடவை முந்தானையை எடுத்து குழந்தை கண்ணை துடைத்துவிட, அபி அழுது தேம்பி படியே, "அத்தும்மா அப்போ ரியா பாப்பாக்கு ம்மா, ப்பா ரெண்டு பேதும் இதுக்காங்க... ஆனா, அபி பாப்பாக்கு 'ப்பா' மத்தும் தான் இதுக்காங்க, அம்மா இல்ல" என்று மறுபடியும் அழ ஆரம்பிக்க, ஆத்யாவோடு சேர்த்து அங்கிருந்த அத்தனை பேரும் கலங்கிவிட்டனர். 

அர்ஜூன் வேதனை நிறைந்த விழிகளில் அபியை பார்த்தவன், திரும்பி ஆத்யாவை பார்க்க, அந்த பார்வை, 'இதுக்கு பதில் உன்கிட்ட தான் இருக்கு தியா' என்று சொல்வது போல் இருக்க, ஒரு நிமிடம் அழுத்தமாக இமை மூடித் திறந்த ஆத்யா, அபியை இழுத்து தன் கை வளைவில் வைத்துக்கொண்டாள்.

" யாரு சொன்னா என்னோட பட்டு குட்டிக்கு அம்மா இல்லன்னு, அவளுக்கு தான்  அம்மா நான் இருக்கேனே" என்று சிரித்துக்கொண்டே சொன்ன தன் அத்தும்மாவை விழிவிரிய பார்த்தாள் அபி.

ஆத்யா கன்னத்தில் தன் பிஞ்சுக் கரம் கொண்டு தாங்கிப் பிடித்த அபி, "நிஜமாவா அத்தும்மா? அபிக்கு நீங்க தா ம்மா வா? அப்போ ரியா பாப்பா மாதிரி நானு உங்கல ம்மான்னு கூப்டவா?" என்று ஆசையாக கேட்க, ஆத்யாவின் சந்தோஷம் தேங்கியிருந்த அவள் கண்களில்  மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிய, ஆம் என்று மேலும் கீழும் ஆத்யா வேகமாக தலையை ஆட்ட, "ம்மா" என்று சத்தமாக கத்தியபடி ஆத்யாவை இறுக்கி அணைத்து கொண்டாள் அபி. 

ரியா அர்ஜூன் தோளில் இருந்து இறங்கி அபி அருகில் வந்து, "அபி பாப்பா, நீ மக்கு பாப்பா. ஒ ப்பா எனக்கு அப்பா ன்னா, என்னோத அம்மா தான உனக்கு ம்மா... இது கூட உனக்கு தெதியலயே, சோ சேட். ப்பா அபி ஸ்கூல் வேஸ்ட் ப்பா. நீ அவள ஏ ஸ்கூல் அனுப்புப்பா" என்றவள் அபி கண்ணை தன் பிஞ்சு கரத்தால் துடைத்துவிட்டு, அவளை கட்டிக்கொள்ள, கௌதம் மகள் பூஜை, "நானு நானு" என்றா ஓடிவந்து அபி, ரியா‌ இருவரையும் ஒருசேர அணைத்துக் கொண்டாள்.

மூன்று குழந்தைகளின்‌ அன்மபை கண்ட அனைவர் மனமும் நிறைந்து போனது. 

மறைந்திருந்த அனைத்து உண்மைகளும் இன்று அனைவருக்கும் தெரிந்து ஒரு நிம்மதியான மனநிலை அனைவரிடமும் இருந்தாலும், ஆத்யா அவள் எடுத்த முடிவில் இருந்து மாறி அர்ஜூனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்தது

ரியாவும், அபியும் நாங்க ஒன்னா தான் இருப்போம் என்று அடம்பிடிக்க, பூரணி ஆத்யாவை அர்ஜூன் வீட்டுக்கு அனுப்ப வைக்க நினைக்க, அர்ஜூனோ மொத்தமாக அனைவரையும், தான் வீட்டிற்கு அழைத்து செல்வதாக அவன் எடுத்த முடிவை சொல்ல,    
கௌதமுக்கு அர்ஜூன் முடிவில் சிறு தயக்கம்.

"வேணாம்டா, அதெப்படி  நாங்க அங்க வரமுடியும். அது நல்ல இருக்காது அர்ஜூன், வேணாம்" என்று கௌதம் எவ்வளவோ சொல்ல,  அர்ஜூன் எதையும் காதில் வாங்குவதாக இல்லை.

"என்ன கௌதம் இது? அதுவும் நம்ம வீடு தான... அங்க வர உனக்கென்ன தயக்கம். அதோட பூஜா, தியாவை விட்டு இருக்க மாட்டான்னு உனக்கே நல்ல தெரியுமில்ல. தீடிர்னு தியா அவள விட்டு வந்துட்டா, பாவம் குழந்தை ஏங்கி போயிட மாட்ட? ரியா, அபி, பூஜா மூனுபேரும் ஒன்னா ஒரே வீட்ல வளரனும்னு நான் ஆசைப்படுறேன். உங்களை அங்க கூப்பிடுறதுல என்னோட சுயநலமும் இருக்கு கௌதம். என்னை மாதிரி என்னோட குழந்தைகளும் யாரோட அன்பும் இல்லாம தனியா வளர கூடாது. அவங்களுக்கு நல்ல டாடியா நீயும், மம்மியா திவ்யாவும், தாத்தா, பாட்டின்னு, சங்கர் அங்கிள், பூரணி ஆன்ட்டின்னு எல்லாரும் வேணும் கௌதம்" என்று தன் மனதில் இருந்ததை கௌதமிடம் சொல்ல, 
பூரணிக்கு அவன் சொல்வது சரியென்று பட்டது.

"ஆமா கௌதம். அட்லீஸ்ட் ஆத்யா அர்ஜூனோட சேர்த்து தன் வாழ்க்கையை தொடங்குற வரைக்குமாவது நம்ம ஒன்ன இருக்கலாம் கௌதம்" என்று சொல்ல, கௌதம் தன் மொத்த குடும்பத்தோடு அர்ஜூன் வீட்டுக்கு வந்து விட்டான்.

ஆத்யாவும் அபிக்காவும், இனியும் ரியாவை அவளின் அப்பாவிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என்று நினைத்து, அர்ஜூன் வீட்டுக்கு செல்ல சம்மதித்தாள்.