அர்ஜூன் ஆத்யா 19
அர்ஜூன் ஆத்யா
மெய் 19
இயற்கையின் அழகு, பால் மழைப்போல் கொட்டும் அருவி, மடியில் காலையில் மணம் முடித்த தன் புது மனைவி என்று நினைக்கும் போதே அர்ஜூன் மனது சிறகில்லாமல் பறந்தது.
"நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தியா. அதை வார்த்தையால சொல்ல முடியலடி, யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணது கஷ்டமா தான் இருக்கு. ஆனா, இனி உன்னை என்கிட்ட இருந்து யாரும் பிரிக்கமுடியாதுனு நினைக்கும் போது நிம்மதியா இருக்குடி" என்றவன் ஆத்யாவை இருக்கி அணைத்தான்.
"இப்ப வர சென்னையில என்ன ஆச்சுன்னு நீ ஒரு வார்த்தை கூட சொல்லல அஜ்ஜூ. ஆனா, உன்னோட முகத்த பாத்த நீ எதையே நினைச்சு பயந்திருக்கேன்னு மட்டும் எனக்கு நல்லா புரியுது. நான் எப்ப உன்னை என் மனசுல நெனச்சேனோ, மனசால அப்பவோ நான் உன்னை என் புருஷனா ஏத்துக்கிட்டேன். என்ன பொருத்தவரையில் அப்பவோ நமக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு, இன்னைக்கு நடந்தது ஜஸ்ட் அதுக்கு ஒரு அக்னாலேஜ்மென்ட் தான். அபி அண்ணா கல்யாணம் முடிஞ்சதும் நம்ம விஷயத்தை வீட்ல சொல்லாம் அஜ்ஜூ" என்றவள் அவன் கன்னத்தில் அவள் இதழ்களை பதிக்க, அவளை தன் மார்போடு சாய்த்துக் கொண்டான் அர்ஜூன்.
"எனக்கு வாழ்க்கையில ரெண்டே ஆசைகள் தான்டி, ஒன்னு உன்னை கல்யாணம் பண்ணி லைஃப் லாங் உன்கூட சந்தோஷமா இருக்கணும், இன்னொன்னு நமக்கு பொறக்கப்போற முதல் குழந்தை பொண்ணா இருக்கணும். அது என்னை பொருத்தவர நம்ம பொண்ணு இல்லடி, என்னோட பிரியா ஏஞ்சல்" என்றவனை விழிவிரிய பார்த்த ஆத்யாவை இடுப்பில் கைபோட்டு தன்னோடு இறுக்கி கொண்டான்.
"தியா நான் நம்ம பொண்ணுக்கு பேர் கூட வச்சிட்டேனே" என்று கண்கள் மின்ன சொன்னவனை நிமிர்ந்து பார்த்த ஆத்யா, "என்ன பேருடா?? என்று ஆர்வமாய் கேட்டாள்.
அர்ஜூன் அவள் காதருகே குனிந்தவன் மெதுவாக, "ரியா" என்று சொல்ல, ஆத்யா கண்கள் கலங்கவிட்டது.
" அப்போ உனக்கு உன்னோட பொண்ணு தான் முக்கியம். உன்னோட பொண்ணு வந்துட்டா, அவளை தான் கொஞ்சுவ, என்னை கண்டுக்க மாட்ட அப்படி தானா... போடா நான் உனக்கு பொண்ணெல்லாம் பெத்து தரமாட்டேன், போடா" என்று சின்ன பிள்ளை போல் கோபித்துக் கொண்டு நகர்ந்தவளை ஒரே இழுப்பில் இழுத்து தன் மார்போடு சேர்த்து அணைத்தான் அர்ஜூன்.
"அதெப்படி நீ பெத்து தரமா போயிடுவேன்னு நானும் பாக்குறேன்டி" என்றபடி தன் கைகளில் பூப்போல அவளை ஏந்தி அந்த அழகிய சின்ன வீட்டிற்குள் போனவன், அவளோடு தன் இல்லறத்தை இனிதே தொடங்கினான்.
மனம் நிறைந்த வாழ்க்கை கைச்சேர்ந்த நிம்மதியில் ஆத்யாவும், அர்ஜூனும் அந்த ஊர் மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு மறுநாள் பெங்களூரு நோக்கி (தங்கள் பிரிவை நோக்கி) கிளம்பினார்.
கல்யாணம் முடிந்த பிறகு நீ அந்த பிளாட்டில் தனிய இருக்க வேண்டாம் என்ற அர்ஜூன், ஆத்யா சொல்ல சொல்ல கேட்காமல் அவளை தன் பிளாட்டிற்கு தூக்கி சென்றுவிட்டான்.
பெங்களூர் வந்த கொஞ்ச நாளில் அபிமன்யு இறந்த செய்தி இடியாக இறங்க, அடுத்து ப்ரீத்தியுடன் அர்ஜூனுக்கு நடந்த கல்யாணம், அதற்குப் பின் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஆத்யா அர்ஜூனை இருவேறு எல்லையில் தூக்கி அடித்து விட்டது.
அர்ஜூன் நடந்த நிகழ்வுகளை நினைத்து மனம் வெதும்பி உட்கார்ந்து இருக்க, அவன் கையை ஆறுதலாக பற்றிக்கொண்டான் கௌதம்.
"உன்னை நெனச்ச எனக்கு ஒரு பக்கம் பாவமாவும் இருக்கு, பட், அட் த சேம் டைம் உன்னை கொல்ற அளவு கோவமும் வருது அர்ஜூன். உனக்கு வேணும்னு ஆதுவ கல்யாணம் பண்ணிட்டு, ரெண்டே மாசத்துல அவள விட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்ட, ஒரு நிமிஷம் ஆது பத்தி யோசிச்சு பாத்தியா நீ..?? ஒரு வார்த்த கூட சொல்லாம, அவளை அம்போன்னு விட்டு போயிட்டியே, இது உனக்கே நியாயமா..? நீயே சொல்லு அர்ஜூன்"என்று கோபமாக கேட்ட கௌதமை நிமிர்ந்து பார்க்க கூட அர்ஜூனுக்கு தெம்பு இல்லை.
"நான் கோழை தான் கௌதம். எனக்குன்னு தனியா தைரியம் எல்லாம் கிடையாது. என்னோட தைரியம் எல்லாம் என்னோட சித்தி, தியா, பிரியா ஆன்ட்டி இவங்க மூனு பேர் தான். பிரியா ஆன்ட்டி போனதுக்கு பிறகு சித்தியும், தியாவும் தான் என்னோட வாழ்க்கை. தியா எனக்கு உயிர் மாதிரின்னா, சித்தி தான் என்னோட உலகம் கௌதம். அப்படி பட்ட வாங்க என்னோட கால்ல விழுந்து கேக்கும்போது" என்றவன் அதற்கு மேல் வார்த்தை வராமல் அழுகை விம்மி வெடித்தது.
"தியா கிட்ட நான் சித்தி சொன்னதை சொல்லி இருந்தால், அவ கண்டிப்பா என்னையும், எங்க உறவையும் விட்டு கொடுத்திட்டு போயிருப்பா கௌதம், அது எனக்கும் நல்லாவே தெரியும். ஆனா, என்னோட தியா வலிக்க வலிக்க என்னை இன்னொருத்திக்கு விட்டு குடுத்துட்டு போறதை பார்க்கும் சக்தி எனக்கில்ல கௌதம். அப்படி ஒன்னு நடந்திருந்தால், அந்த நிமிஷமே நான் உயிர விட்டு இருப்பேன். அவள பிரியும் விலிய என்னால தாங்கிக்க முடிஞ்சிது. ஆனா, அவளே என்னை வேணாம்னு சொல்லி விட்டு விலகிப் போறத பாக்குற தைரியம் எனக்கு இல்ல கௌதம்" என்று கதறியவனை கௌதம் கலங்கிய விழிகளோடு பார்த்தான்.
"எனக்கு தெரியும் கௌதம், நான் பண்ணது தப்பு தான், இல்ல இல்ல நான் பண்ணது பெரிய பாவம். ஆனா, அப்ப நான் இருந்த சூழ்நிலை என்ன அந்த பாவத்தை துணிஞ்சு செய்ய வச்சிடுச்சு, என்னோட இந்த தப்புக்கு தியா என்னை மன்னிக்க மட்டான்னு எனக்கு நல்லா தெரியும். அவகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம நா இந்த மாதிரி செஞ்சத அவ ஒரு நாளும் மன்னிக்க மாட்டா, அதே சமயம் அவளால என்னை வெறுக்கவும் முடியாது. தியா நெனச்சிருந்த என்னை என்ன வேணும்னாலும் செஞ்சிருக்க முடியும். ஏன்? அவ இருக்கும்போது நான் இன்னொரு பொண்ணை கல்யாணம் செஞ்சதுக்கு என்னை ஜெயில்ல கூட போட்டிருக்க முடியும். ஆனா, அவ அதை செய்யல, செய்யவும் மாட்டா. ஏன்னா அவ அந்த அளவுக்கு என்னை நேசிக்கிறா, அவ என்கிட்ட வந்து ஏன்டா இப்படி செஞ்சேன்னு கேக்கனும்னு கூட அவசியம் இல்லை கௌதம். துரோகின்னு ஒரு பார்வை பார்த்திருந்தாலே அடுத்த நிமிஷமே நான் செத்திருப்பேன், அது அவளுக்கும் தெரியும், அதனால தான் அவ இப்ப வரை என்னை விட்டு ஒதுக்கி இருக்கா. என்னை பிரிஞ்சிருக்குறது, செய்யாத தப்புக்கு அவளுக்கு கொடச்ச தண்டனையின்னா, தெரிஞ்சே நானும், சித்தியும் தியா மனசை உடச்சிட்டோம், அதுக்கு அவளை பிரிந்து இருக்கிறது தான் எங்களுக்கான தண்டனை. நீங்க எல்லாரும் நினைக்கலாம் நானும், தியாவும் பிரிந்து இருக்கோம்னு.. ஆனா, அவ மனசுல நானும், என் மனசுல அவளும் இப்பவும், எப்பவும் வாழ்ந்துட்டு தான் இருக்கோம்" என்று உணர்ச்சி மிகுதியில் பேசிய அர்ஜூன் பார்த்து கௌதமுக்கும் கண்கள் கலங்கியது.
"உண்மை தான் அர்ஜூன். எனக்கு லண்டனில வேல கெடச்சது. அதை சொல்லிட்டு, ஆது பாத்துட்டு போலாம்னு நான் இந்தியா வந்திருக்கும் போது தான் உன்னோட கல்யாண ஃபோட்டோவை பேப்பர்ல பார்த்தேன். எனக்கு அப்டியே தூக்கி வாரி போட்டுடுச்சு, உடனே ஆது வீட்டுக்கு போனேன்" என்றவன், அர்ஜூன் கல்யாணத்திற்கு பிறகு ஆத்யாவின் வாழ்வில் என்ன நடந்தது என்று சொல்லத் தொடங்கினான்.
கௌதம் ஆத்யா ப்ளாட்டிறுக்கு போக, அங்கு ஷாலினிக்கு கௌதம் யார் என்று தெரிந்ததும், ஆத்யா விடியக்காலையில் தான் மெடிக்கல் கேம்பில் இருந்து வந்ததையும், அவள் இங்க இல்ல, அர்ஜூன் பிளாட்டில் இருக்கிறாள் என்று சொல்ல கௌதம், "இவ ஏன் அர்ஜுன் பிளாட்ல இருக்கா?? அர்ஜூனுக்கு கல்யாணம் ஆன விஷயம் இவளுக்கு தெரியுமா, தெரியாத" என்று குழம்பிய படி அர்ஜூன் வீட்டு காலிங் பெல்லை அடிக்க, அசதியில் தூங்கி கொண்டிருந்த ஆத்யா, காலிங் பெல் சத்தம் கேட்டு எழுந்தாள்.
அர்ஜூன் சென்னைக்கு சென்ற நாளில் இருந்து அவளுக்கு ஃபோன் பண்ணவில்லை. அவன் ஃபோன்னு ஸ்விட்ச் ஆஃப் என்று வர அவனுக்கு என்ன ஆச்சு என்ற யோசனையில் இருந்தவள், காலிங் பெல் சத்தம் கேட்டு அர்ஜூன்தான் வந்திருப்பான் என்ற சந்தோஷத்தில் அரை தூக்கத்தில் ஓடி வந்து கதவை திறந்த அடுத்த நிமிடம் அது அர்ஜூன் இல்லை என்று முகம் வாடினாள்.
அடுத்த நொடி, "ஏய் கௌதம் நீ எப்ப வந்த? வாட் ஏ சர்ப்ரைஸ். வா கௌதம் உள்ள வா" என்று சிரித்த முகத்துடன் அவனை அழைக்க, இறுகிய முகத்துடன் வீட்டிற்குள் சென்றான் கௌதம்.
"நீ இங்க என்ன செய்ற ஆது?? அர்ஜூன் வீட்டுல உனக்கென்ன வேல?? ஏன் நீ இங்க வந்த" என்று கடுமையான குரலில் கேட்க, அவன் குரலில் அதிர்ந்த ஆத்யா பின் தன்னை சமாளித்துக் கொண்டு, "அது... அது வந்து கௌதம்" என்று தயங்கி தயங்கி நின்ற நேரம், சரியாக கௌதம் கண்ணில் பட்டது ஆத்யா கழுத்தில் இருந்த தாலி. அவள் கழுத்தில் ஆடைக்குள் மறைந்திருந்த தாலியை கௌதம் வெளியே எடுத்து பார்த்தவன், "என்ன ஆது இது? உனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு?" என்று உச்சகட்ட கொதிப்பில் கேட்டான்.
ஆத்யா எதையும் மறைக்காமல் நடந்த அனைத்தையும் கௌதமிடம் ஒப்பித்தாள்.
கௌதம் தலையில் கை வைத்து அருகில் இருந்த சோபாவில் பொத்தென விழுந்தவன், "ஏமாந்துட்ட ஆது, நீ நல்லா ஏமாந்துட்ட, அந்த அர்ஜூன் உன்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான்"என்று இயலாமையில் கத்தியவன், தன் கையில் இருந்த பேப்பரை ஆத்யாவிடம் தூக்கி வீசினான்.
ஆத்யா என்ன ஏதென்று புரியாமல் பேப்பரை பிரித்து பார்த்தவள் மொத்தமாக சிலையாகி நின்றாள்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. கௌதம் அவளை உலுக்கவும் உணர்வு பெற்றவள், கௌதமை பார்க்க அவள் கண்களில் துளியும் கண்ணீர் இல்லை.
" நீ கெளம்பு ஆது" என்று கௌதம் அவளை எழுப்பினான்.
"எங்க கௌதம்??"
"நம்ம இப்பவே சென்னைக்கு போறோம். சட்டப்படி பஸ்ட் வைஃப் நீ இருக்கும் போது அர்ஜூன் இன்னொரு பொண்ணை கல்யாணம் செஞ்சது செல்லாது. நம்ம போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணுவோம். அர்ஜுனுக்கு சரியான தண்டனை வாங்கி தருவோம் வா ஆது" என்று அவளை இழுக்க, ஆத்யா வெறுமையாக சிரித்தாள்.
"அர்ஜூனுக்கு ஏற்கனவே கடவுள் பெரிய தண்டனையை தந்திட்டார் கௌதம். என்னை அவன் வாழ்க்கையில இருந்து பிரித்து அவன ஏற்கனவே கடவுள் பாதி சாகடிச்சிட்டாரு. இப்ப நான் போய் மீதி இருக்க உயிரையும் வாங்கனுமா?? அவன நான் எதுவும் கேக்க வேண்டியதில்ல கௌதம், ஏன்டா இப்படி செஞ்சேன்னு ஒரு பார்வை பார்த்த போது, அந்த நிமிஷமே என் அஜ்ஜூ செத்துடுவான். அவனா அப்படி பாக்குற தைரியம் எனக்கில்ல கௌதம் ப்ளீஸ்."
"லூசு மாதிரி பேசாத ஆது, அந்த அளவு உன்னை விரும்புறவன், ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்யணும். அதுவும் நீங்க ரெண்டு பேர் விரும்பி மட்டும் இருந்த மட்டும் கூட பரவாயில்லை, ஒரு ஊரையே கூட்டி வச்சு உன் கழுத்துல தாலியை கட்டிட்டு, இப்ப இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கான்னா, இதுக்கு என்ன அர்த்தம் ஆது. நீயே சொல்லு" என்றவன் கோபத்தில் குதித்தான்.
"அர்ஜூன் கல்யாணம் பண்ணி இருக்கிறது அபிமன்யு அண்ணாக்கு பாத்திருந்த பொண்ணை தான் கௌதம். அந்த பொண்ணை அஜ்ஜூ கல்யாணம் பண்ணி இருக்கான்னா, கண்டிப்பாக இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு பெரிய காரணம் இருக்கும். நான் நெனைக்கிறது சரியின்னா?? அந்த காரணம் அபிராமி அத்தையா தான் இருக்கணும். இந்த உலகத்தில் எனக்கு அடுத்து அர்ஜூன் அதிகமா நேசிக்கிறது அத்தையா மட்டும் தான். கண்டிப்பா இதுக்கு பின்னாடி அபிராமி அத்தை தான் இருக்கணும்" என்று அவள் உறுதியாக சொல்ல,
"அது எந்த ஏழவ வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். இப்ப நீ என்ன பண்ண போற… உன்னோட வாழ்க்கை இல்ல இப்ப பிரச்சனையில் இருக்கு, இப்ப அதுக்கு என்ன பண்றது. சரி ஆது நம்ம அங்க போக வேணாம். நீ அர்ஜூனுக்கு ஃபோன் பண்ணி அவனை இங்க வரச்சொல்லு அடுத்து என்ன செய்யுறதுன்னு அவன்கிட்டயே கேப்போம்.
ஆத்யா இடவலமாக தன் தலையை ஆட்டியவள், "இன்னொருத்திக்கு புருஷனா இருக்க அர்ஜூனுக்கு அவனோட தியா முன்னாடி வர்ற தைரியம் இருக்காது கௌதம்."
"ஏன்டி?? ஏன் இப்படி பண்ற..? எது சொன்னாலும் இப்படி மறுத்து பேசினா, நான் என்ன தான்டி பண்றது. என்னவிடு இப்ப நீ என்ன செய்யப்போற, உன்னோட எதிர்காலம் இல்ல இப்ப கேள்விக்குறியா இருக்கு" என்றவன் அப்படியே உட்கார்ந்து விட, அங்கு அமைதி மட்டுமே அதன் பின் பேசியது.
கௌதம் சொன்னதை கேட்டு அர்ஜூனின் இதயம் விம்மி வெடிக்க கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.