அர்ஜூன் ஆத்யா 18

 அர்ஜூன் ஆத்யா


மெய்‌ 18


அபிராமி சர்ஜரியின் போது, கௌதம் அர்ஜூன் கூடவே தான் இருந்தான். 

ஆத்யா, அர்ஜூனை தனியே விடவேண்டாம் என்று சொன்னதாலும், அவனுக்கும் அர்ஜூனிடம் சில விஷயங்களை பேசி தெளிவு படுத்த வேண்டி  இருந்ததாலும், அவன் கூடவே இருந்தான். ஆபரேஷன் முடிந்து அபிராமி மயக்கத்தில் இருக்க, அர்ஜூன் கைகளை பிடித்த கௌதம், "எல்லா நல்லபடி முடிஞ்சிது அர்ஜூன். நீ ஆன்ட்டி பத்தி கவலை படவேண்டாம்" என்றவன் சற்று தயங்கி, "நா உன்கிட்ட பர்ஸ்னல்ல கொஞ்சம் பேசணும் அர்ஜூன்" என்ற கௌதமை ஆழமாக ஒரு பார்வை பார்த்தான் அர்ஜூன்.

"எனக்கும் உன் கிட்ட பேசவும், கேட்கவும் நிறைய இருக்கு கௌதம். சித்தி டிஸ்சார்ஜ் ஆகி  வீட்டுக்கு போனதுக்கு அடுத்த நாள் நான் உன் தேடி வருவேன்." என்றவன் கௌதம் தோளில் நட்பாக தன் கை வைத்து அழுத்தி, அமைதியான ஒரு சின்ன சிரிப்பு சிரித்துவிட்டு சென்றுவிட்டான்.

அபிராமி வீட்டுக்கு வந்த அடுத்த நாள் அர்ஜூன் வர சொன்ன இடத்தில் காத்திருந்த கௌதம் மனதில் பலவித குழப்பங்கள். தான் செய்ய போகும் காரியம் சரியாக வருமா? என்ற பயம். இது ஆதுவுக்கு தெரிஞ்ச என்னாகும்?  ஆது, ரியா ரெண்டுபேரோட எதிர்காலம் எப்டி இருக்கும் என்று பலவித சிந்தனையில் இருந்தவன் தோளை தொட்டான் அர்ஜூன்.  

"என்ன கௌதம் ரொம்ப பலமான யோசனை போல?? நான் வந்தது கூட தெரியாம யோச்சிட்டு இருக்க" என்றவன் கௌதம் எதிரில் இருந்த சேரில் அமர்ந்தான்.

"ஒன்னு இல்ல அர்ஜூன் சும்மா தான். ஜஸ்ட் லைக் தட், சரி நீ என்ன சாப்பிடுற அர்ஜூன்" என்றவன் இருவருக்கும் வேண்டியதை  ஆர்டர் செய்த கௌதம், எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று நெற்றியில் விரல் வைத்து தேய்த்து யோசிக்க, அர்ஜூன் அவனை பார்த்து சிரித்தான்.

"என்ன கௌதம்  என்ன ஆச்சு..??"

"அர்ஜூன் நான் ஆது பத்தியும், ரியா பத்தியும் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அதான் உன்னை இங்க வர சொன்னேன்."

"ம்ம்ம்ம் சொல்லு கௌதம் என் பொண்டாட்டி பத்தியும், என் பொண்ணு  பத்தியும் என்ன பேசணும், சொல்லு கௌதம் எனக்கும் ரியா பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு" என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தான் கௌதம். 

"அர்ஜூன் நீ என்ன சொல்ற? ரியா உன்னோட பொண்ணுன்னு உனக்கெப்படி தெரியும்!?"

"இதுல தெரிஞ்சுக்க என்ன இருக்கு கௌதம்?? தியா என்னோட வைஃப், அப்ப ரியா என்னோட பொண்ணு தானா" என்று கூலாக சொல்ல,

"அதெப்படி அர்ஜூன்? நீ எப்படி ஆதுவ விட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டியே, அதே மாதிரி ஆதுவும் வேற கல்யாணம் செஞ்சிருக்கலாம் இல்ல, அப்படி இருக்கும்போது, ரியா உன்னோட பொண்ணுதான்னு நீ எப்படி அவ்ளோ  கான்பிடன்ட்ட சொல்ற?" என்றவனை ஆழமாக பார்த்தான் அர்ஜூன்.

"பிகாஸ் என்னோட தியா நெருப்பு, அந்த நெருப்பை அர்ஜூனால மட்டும் தான் நெருங்க முடியும்" என்று உறுதியாக சொன்னவனை பார்த்த கௌதமுக்கு அத்தனை ஆச்சரியம். 

அபிமன்யு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த சமயம், ஆத்யா மும்பையில் மெடிக்கல் கான்ப்ரன்ஸ்ஸை முடித்துவிட்டு, அர்ஜூன் பெங்களூர் வர இன்னும் ஒரு வாரம் ஆகும் என்பதால், தன்னுடைய பிற டாக்டர் நண்பர்களுடன் தமிழகத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் நடக்கும் மெடிக்கல் கேம்புக்கு சென்றிருந்தாள். அர்ஜூன், அபிமன்யு கல்யாண வேலைகளை ஒரளவு முடித்தவன்,  இன்னும் ரெண்டு நாள் கழித்து பெங்களூர் போகலாம் என்ற எண்ணத்தில் இருக்க, அபிராமி சொன்ன செய்தி அவனை உடனே அவன் தியாவை தேடி ஓட வைத்தது.

காலையில் தன் ரூமில் தியாவுக்கு ஃபோன் போட்டு போட்டு பார்க்க, அது 'டேய் இம்சை புடிச்சவனே... அங்க சிக்னல் இல்லடா, சும்மா கீபோர்டை போட்டு நோண்டாதடா' என்று இவனை கடுப்பேத்த, வெறுப்பாக உட்கார்ந்து இருந்த அர்ஜூன் அருகில் வந்தார் அபிராமி. 

"டேய் அர்ஜூன்?? உங்க அம்மா உன் கிட்ட ஏதாவது பேசுனாலடா?"

"இல்லயே சித்தி, என்ன விஷயம்?" 

"அத்து பத்தி எதாவது உன்கிட்ட கேட்டால உங்கம்மா" என்று சற்று கலக்கமாக கேட்க,

"அவங்க எதுக்கு சித்தி தியா பத்தி கேக்கணும்? நீங்க ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க? என்னாச்சு சித்தி எதுவும் பிரச்சனையா?" என்று அர்ஜூன் பதறினான்.

"இல்லடா, ஆரூ நேத்து என்கிட்ட அத்து பத்தி கேட்ட, வயசு பொண்ணை ஏன் இன்னும் உங்க பாதுகாப்பில் வச்சிருக்கீங்க, சீக்கிரம் ஏதாவது பையனை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டியது தானேன்னு கேட்டா, அதுக்கு நானும், நாங்களும் மாப்பிள்ளை பாத்துட்டு தான் இருக்கோம், அத்து படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு சொல்லிடான்னு சொன்னேன். அதுக்கு உங்க அம்மா என்னை பாத்தலே ஒரு பார்வை அம்மாடி… எனக்கு என்னமோ உன்னையும் அத்துவையும் பத்தி அவளுக்கு எதுவும் தெரிஞ்சு இருக்குமோன்னு ஒரு டவுட்டு. அபிமன்யுவுக்கு கல்யாணம் முடிஞ்ச உடனே உனக்கு பெரிய இடத்துல பொண்ண பாத்து சீக்கிரம் கல்யாணம் செய்யணும்னு சொல்லிட்டு, என்னை ஒரு முறை மொறச்சிட்டு போனாடா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு அர்ஜூன். உங்கம்மா பத்தி உனக்கே தெரியும். அவ நெனச்சதை நடத்தி வைக்க எந்த எல்லைக்கும் போவா, ஜாக்கிரதை அர்ஜூன், அத்துவ பத்திரமா பாத்துக்கோ" என்றவர் அமைதியாக சென்றுவிட, அர்ஜூன் கொஞ்ச நேரம் என் செய்வது என்று தெரியாமல் யோசித்தவன், ஒரு முடிவோடு தன் லாக்கரை திறந்து தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு, உடனே தியா கடைசியாக ஃபோன் பேசிய போது அவள் தங்கி இருப்பதாக சொன்ன அந்த அழகிய கிராமத்திற்கு விரைந்தான்.

கேம்ப் இன்னும் இரண்டு நாளில் முடியப்போகிறது. ஆத்யாவும் அவளின் சில டாக்டர் ப்ரண்ட்ஸ் மட்டுமே அந்த கேம்பில் இருந்தனர். அந்திசாயும் வேளை ஆத்யா கேம்ப்புக்கு அருகில் இருந்த அருவிக்கரையில் உட்கார்ந்து அர்ஜூன் பற்றிய நினைவுகளில் முழ்கி இருக்க, அவள் அருகில் வந்த, அவள் தோழி ஷாலினி, "ஏய் அத்து என்னடி, தனியா உக்காந்து இருக்க, அர்ஜூன் அண்ணா ஞாபகம் வந்திடுச்சா" என்று குறும்பாக கேட்க, ஆத்யா வாடிய முகத்துடன், 

"ஆமா ஷாலு, என்னமோ தெரியல காலையிலிருந்து அவன் நினைப்பாவே இருக்கு. உடனே அவனை பாக்கணும் போல இருக்குடா, நா பேசாம நாளைக்கு கிளம்பி சென்னை போலாம்னு பாக்குறேன்" என்றவளை பார்க்கவே ஷாலினிக்கு பாவமாக இருந்தது. 

ஆத்யாவை நினைத்து வருத்தத்தில் இருந்த ஷாலினி முகம் உடனே லைட் போட்டது போல் பல்பு எரிய, "ஏய் அத்து நீ ஒன்னு சென்னை போக வேண்டாம். கொஞ்சம் திரும்பி பாரு அர்ஜூன் அண்ணாவே உன்னை பாக்க வந்துட்டு இருக்காரு" என்ற ஷாலினி வார்த்தையில் ஷாக் அடித்தது போல் எழுந்த ஆத்யா திரும்பி பார்க்க, ஆத்யாவை நோக்கி வேகமாக வந்த அர்ஜூன் இருவர் இடையில், காத்து கூட போக முடியாத படி அவளை இறுக்கி அணைத்த வேகமே சொல்லியது அவன் உள்ளத் தவிப்பை.


"ஏய் அஜ்ஜூ என்னடா இது?? வெக்கமே இல்லாம பப்ளிக் ப்ளேஸ்ல விடு அஜ்ஜூ" என்று அவனை தன்னை விட்டு பிரிக்க ஆத்யா முயல, அவன் பிடி சற்றும் தளரவில்லை. இன்னும் இன்னும் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கியவன், "தியா நம்ம கல்யாணம் செஞ்சுக்கலாம்டி, உடனே கல்யாணம் செஞ்சுக்கலாம்," என்ற அவன் வார்த்தையில் முதலில் புரியாமல் முழித்த தியா, பின் அவனை கஷ்டப்பட்டு தன்னிடம் இருந்து பிரிந்து, "என்ன ஆச்சு அஜ்ஜூ உனக்கு? என்ன திடீர்னு கல்யாணம்னு சொல்ற? என்ன வந்துது உனக்கு?. அபிமன்யு அண்ணா கல்யாணம் முடிஞ்சதும் நம்ம கல்யாணம் பத்தி வீட்டுல பேசலாம்னு தானா, நம்ம முடிவு பண்ணி இருந்தோம். இப்ப என்ன வந்துச்சு... உடனே கல்யாணம் பண்ணனும்னு சொல்ற" என்று கேட்டவள் அர்ஜூன் முகத்தை பார்க்க, கலங்கி இருந்த அவன் முகமே சொன்னது அவன் எதையோ நினைத்து வெகுவாக பயந்திருக்கிறான் என்று. 

அர்ஜூன் முகத்தை பார்த்து பதறிய ஆத்யா, "டேய்… என்னடா ஆச்சு?? ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு? சென்னையில் ஏதாவது ப்ராப்ளமா?" என்றவள் தன்னிரு கைகளில் அவன் கன்னத்தை தாங்கிப் பிடித்து, அவன் கண்களோடு தன் கண்களை கலக்கவிட்டு தவிப்போடு பார்க்க, ஆத்யா கைகளை பிடித்து இழுத்து மீண்டும் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

"இப்ப பேச நேரமில்லடி, உடனே நம்ம கல்யாணம் நடக்கணும். நாளைக்கு… இல்ல இல்ல முடிஞ்ச இன்னைக்கே" என்று பிடிவாதம் பிடித்தவனை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியாமல் தவித்த ஆத்யா.. அவனின் கவலை படிந்த முகத்தை வைத்து ஏதோ நடந்திருக்கிறது என்று யூகித்தவள், என்ன சொல்லியும் அவனை சமாதானம் செய்ய முடியாது என்று புரிய, "சரி அஜ்ஜூ எனக்கு ஓகே. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று தான் சம்மதத்தை சொல்ல, உடனே துள்ளி குதித்த அர்ஜூன், "என்னோட தியா பத்தி எனக்கு தெரியாதா… நீ ஒத்துக்குவேன்னு எனக்கு நல்லா தெரியும்டி. சரி வா உடனே பக்கத்துல இருக்க ஏதாவது கோவிலுக்கு போய் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று அவள் கையை பிடித்து இழுக்க, இதுவரை அங்கு நடந்ததை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஷாலினி, 

"ஹலோ ஹலோ அண்ணா கொஞ்சம் பொறுங்க‍ விடிஞ்ச கல்யாணம் புடி பாக்கு வெத்தலைன்னு இப்படி குதிக்கிறீங்க. கொஞ்சம் இருங்க, அத்து தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளே, அப்புறம் என்ன. கொஞ்சம் பொறுங்க, நம்ம போய் கேம்ப்ல இருக்க மத்த ப்ரண்ஸ் கிட்ட பேசுவோம். இது ஒன்னு எடுத்தோம் கவுத்தோம்னு முடிக்கிற காரியம் இல்ல. இந்த ஊர் பெரியவங்க கிட்ட போய் நிலமைய எடுத்து சொல்வோம்‌. யாரும் இல்லாம நீங்க ரெண்டு பேர் மட்டும் போய் கல்யாணம் செஞ்சுக்குவீங்களா" என்ன என்று கேட்டாள். 

அர்ஜூனுக்கு ஷாலினி சொல்வது சரி என்று பட, ஆத்யாவுடன் அவள் தங்கியிருந்த கேம்ப்புக்கு சென்றான்.

"னஅந்த ஊரின் பெரிய மனிதர் செல்வத்தின் உயிரை சரியான நேரத்தில் ஆத்யா தான் ட்ரீட்மென்ட் செய்து காப்பாற்றி இருந்தாள். அதற்கு நன்றி கடனாக அவளை பற்றியும், அர்ஜூன் பற்றியும் ஷாலினி சொன்னதை கேட்ட அந்த நல்ல மனிதர். கல்யாணம் ஏற்பாடு முழுவதையும் தானே முன்னிருந்து செய்வதாக சொல்லிவிட, மறுநாள் அந்த ஊர் கோவிலிலேயே ஆத்யா, அர்ஜூன் கல்யாணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

அந்த மெடிக்கல் கேம்ப்பினால் அந்த ஊரின் பல பேருக்கு நல்லது நடந்தால், அங்கிருந்த ஒரு டாக்டருக்கு கல்யாணம் என்றதும் அந்த ஊரில் பலர் அந்த கல்யாணத்தில் மகிழ்சியாக கலந்து கொண்டனர்.

சிகப்பு, மஞ்சள் கலந்த கட்டம் போட்ட கூறைப்பட்டு புடவையில், தலை முழுதும் மல்லிகை பூச்சூடி ஆத்யா மெதுவாக நடந்து வர, வெள்ளை வேட்டி, சட்டையில் கம்பீரமாக நின்றிருந்த அர்ஜூன் விழிகள் தரையில் கால் பதிக்காமல் மிதந்து வரும் தன்னவள் மேலேயே இருந்தது.  

ஷாலினி ஆத்யாவை அழைத்து வந்து அர்ஜூன் முன் நிற்க வைக்க, அங்கிருந்த பாட்டி ஒருவர் இருவர் கைகளிலும் மல்லிகை பூக்கள் கொண்டு கட்டிய மாலையை கொடுத்து மாற்றிக்கொள்ள சொன்னார்.

அர்ஜூன் டக்கென்று மாலையை ஆத்யா கழுத்தில் போட்டுவிட, அவன் அவசரத்தை பார்த்த, கூடியிருந்த கூட்டம் மொத்தமும் சத்தம் போட்டு சிரித்து விட்டது. 

ஷாலினி, "அச்சோ அண்ணா, என்னன்னா இது. அத்து உங்களுக்கு தான், அவ எங்கையும் ஓடிப்போய்ட மாட்டா, கொஞ்சம் பொறுமையா இருங்க, ஊரே பார்த்து சிரிக்கிது பாருங்க" என்று கிண்டல் செய்ய, அசடு வழிய நின்ற அர்ஜூனை செல்லமாக முறைத்தபடியே மெதுவாக அவன் கழுத்தில் தன் கைகளில் இருந்த மாலையை போட்டாள்.

நல்ல நேரம் வரவும் ஊர் பெரியவர் தாலி கட்ட சொல்ல, அர்ஜூன் தான் கையில் இருந்த அவன் தந்தை சேகரின் தாய், அர்ஜூனின் பாட்டி அவன் கல்யாணத்திற்காக எடுத்து வைத்திருந்த அவர்கள் பரம்பரை தாலியை எடுத்து மாலை மாற்ற சொன்ன பாட்டியின் கையில் கொடுக்க, அந்த பாட்டி மாங்கல்யத்தை சாமியின் பதத்தில் வைத்து, இருவரின் வாழ்க்கையும் என்று இனிதே இருக்க வேண்டும் என்று அனைவரும் மனதார வேண்டிக்கொண்டனர். 

தன்னவளை ஆயுள் முழுவதும் தனதாக்கி கொண்டுவிட்ட நிறைவோடு அர்ஜூன் திருமாங்கல்யத்தை எடுத்து தன்னவள் கழுத்தில் பூட்டினான். அனைவரும் கையில் இருந்த மஞ்சள் கலந்த அரிசியோடு பூக்களையும் சேர்த்து மணமக்கள் மீது தூவி ஆசிர்வாதிக்க,  அர்ஜூன் சாமி குங்குமத்தை எடுத்து ஆத்யா நெற்றியிலும், அவள் உச்சி வகிட்டிலும் வைத்து, அவள் கழுத்தில் தொங்கிய தாலிக்கொடியிலும் குங்குமத்தை வைத்துவிட்டான்.

இந்த நிமிடம் முதல் இந்த ஜென்மம் முழுதும் என் மனசும், உடலும், உயிரும் உன் ஒருத்திக்கு மட்டும் தான்டி சொந்தம் என்று வாக்கை கொடுத்து அவளை தன் வாழ்வில் சரிபாதியாக இணைத்துக்கொண்டான் அர்ஜூன். 

அவன் கைகளால் தாலி வாங்கி நொடி ஆத்யா விழிகளில் தான் எத்தனை மகிழ்ச்சி, உலகத்தையே தன் வசப்படுத்தி விட்ட பெருமிதம் அவள் முகத்தில், இனி இவன் என்னவன், எனக்கு மட்டுமே சொந்தமானவன், இனி இவன் இன்ப, துன்பம் அனைத்திலும் இவனுக்கு துணைவியாக தோள் கொடுக்கும் தோழியாக இருப்பேன்." என்ற முடிவோடு தன் வாழ்வின் முழுமையாக அர்ஜூனை ஏற்றுக்கொண்டாள் ஆத்யா.

திருமணம் முடிந்து மணமக்களை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார் ஊர் பெரியவர். வந்தவர்கள் அனைவருக்கும் அர்ஜூன் தன் செலவில் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தான். அனைத்தும் நல்ல படி முடிய மாலைப்பொழுதில் ஆத்யாவும், அர்ஜூனும் அருவிக்கரை ஓரம்  இருந்த ஊர் பெரியவர்க்கு சொந்தமான ஒரு அழகிய சின்ன ஓட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.