அர்ஜூன் ஆத்யா 17
அர்ஜூன் ஆத்யா 17
மெய் 17
ஆபரேஷன் தியேட்டர் வெளியே கவலையோடு இருந்த அர்ஜூன் தோளை ஆதரவாக தொட்டான் கௌதம்
"டோன் வெரி அர்ஜூன், ஆண்ட்டிக்கு ஒன்னு ஆகாது. ஆதுக்கு இதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல" என்று ஆறுதல் சொல்ல, அர்ஜூனுக்கு அந்த ஆறுதல் அந்த நேரம் தேவைப்பட்டது போல,
கௌதம் கையை இறுக்கி பிடித்துக் கொண்டான்.
"உன் மேல கொலை வெறியில் இருந்தேன் அர்ஜூன். ஆனா, எந்த சூழ்நிலையில் நீ அந்த கல்யாணத்த பண்ணிகிட்டன்னு ஆது சொன்னப்ப என்னால உன் மேல முழுசா கோபப்பட முடியல, அதே சமயம் ஆதுக்கு நீ செஞ்சது… அதை நினைக்கும்போது" என்றவன் கைமுஷ்டி இறுகியது.
"எனக்கு புரியுது கௌதம். ஆனா," என்று அவன் ஏதோ சொல்ல வர, "நோ அர்ஜூன் i don't want any explanation. நீ ஒரு சூழ்நிலை கைதி. உன்னோட இடத்துல வேற யார் இருந்தாலும் இதை தான் செஞ்சிருப்பாங்க. ஏன் அந்த சீட்டிவேஷன்ல ஆது இருந்திருந்தாலும் இந்த முடிவை தான் எடுத்திருப்ப" என்ற கௌதமை பார்த்து விரக்தியாக சிரித்தான் அர்ஜூன்.
சூழ்நிலை முன்னால கைகட்டி நிக்க அவ ஒன்னும் அர்ஜூன் இல்ல கௌதம். ஆத்யா… சூழ்நிலையை அவ முன்னால கைகட்டி நிக்க வப்பா. உலகமே அவளுக்கு எதிரா இருந்தாலும், அவ எடுத்த முடிவில் இருந்து இன்ச் கூட நகர மாட்டா கௌதம் அவ. அது தான் என்னோட தியா" என்றவனை வியப்பாக பார்த்தான் கௌதம்.
"அவ இப்ப உன்னோட தியா இல்ல அர்ஜூன்" என்று தீர்க்கமாக சொல்ல, கௌதமை திரும்பி பார்த்த அர்ஜூனிடம் ஒரு வறண்ட சிரிப்பு தான் பதிலாக வந்தது.
ஆபரேஷன் முடிந்து ஒரு வாரம் ஓடிவிட்டது அபிராமி ஹாஸ்பிடலில் இருந்த வேளையில் அபிநயா, ஆத்யா வீட்டில் இருந்து விட, அந்த வீட்டின் குழந்தையாகவே மாறி இருந்தாள் அபிநயா.
பூரணியிடமும் சங்கரிடமும் நன்றாக ஒட்டிக்கொண்டு பாட்டி, தாத்தா என்று அவர்களையே வட்டமடித்தார்கள் குழந்தைகள். கௌதமும் அபியின் மழலை பேச்சில் மயங்கி அவளிடம் ஒன்றிவிட்டான்.
அபி பாத்திரமாக ஆத்யா வீட்டில் இருந்ததால் அர்ஜூனும் சிவாவும் அபிராமியுடன் ஹாஸ்பிடலில் இருந்து அவரை கவனித்துக் கொண்டனர். அபியை ஹாஸ்பிடல் அழைத்து வரும்போது மட்டும் அவளை பார்க்கும் அர்ஜூன் ஒரு நாளும் அபியை பார்க்க ஆத்யா வீட்டிற்கு செல்லவில்லை.
அபிராமிக்கு ஒரளவு குணமாகி இருக்க, ஹாஸ்பிடல் இருக்க பிடிக்காமல் அடம்பிடித்து வீட்டிற்கு வந்து விட்டார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை லீவு என்பதால் காலை ஒன்பது மணிவரை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிய ஆத்யாவை கண்டு கடுப்பான கௌதம், "அடியேய் மணி ஒம்பது ஆகுது... எந்திரிடி சோம்பேறி" என்று அவளை எழுப்பினான்.
"டேய் இன்னைக்கு சண்டே தானாடா. சீக்கிரம் எழுந்து நான் என்ன கொரானாக்கு மருந்த கண்டு பிடிக்க போறேன், போடா" என்றவள் மீண்டும் இழுத்து போர்த்திக்கொண்டாள்.
"அடி வாங்குவ ஆது... முதல்ல எந்திரிச்சு போய் குளிச்சிட்டு டைனிங் டேபிளுக்கு வா, அம்மாவும் அப்பாவும் உனக்காக வெயிட் பண்றாங்க. அதோட அபிய கூட்டிப்போக சிவா அங்கிள் வர்ரத சொன்னேனில்ல மறந்திட்டியா?" என்றதும் பட்டென எழுந்தவள், தலையில் குட்டிக்கொண்டு, "சாரி கௌதம் மறந்து போய்டேன். டூ மினிட்ஸ் டக்குன்னு ரெடியாகி வந்திடுறேன்" என்றவள் எழுந்து பாத்ரூமுக்கு ஓட கௌதம் ஒரு பெருமூச்சுடன் அவளை பார்த்தான்.
"இன்னைக்கு என்ன நடக்கப்போகுதோ ஆண்டவ... இந்த ராட்சசி கிட்ட இருந்து நீ தான் என்னை காப்பாத்தணும்" என்றவன் மனதில் திகில் பரவ, அரண்ட முகத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.
ஆத்யா குளித்து முடித்து, எந்த டிரஸ் போடலாம் என்று அவள் வாட்ரோப்பை பார்க்க, அவள் கண்ணில் பட்டது அர்ஜூனுக்கு பிடித்த அழகிய நீல வண்ண சில்க் காட்டன் சேலை. அதன் மீது மெல்ல கை வைத்து தடவிய பார்த்த ஆத்யா நினைவுகளில் அர்ஜூன் அவளை முதன் முதலில் கோவிலில் சேலையில் பார்த்தது, உடனே கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டது, அவர்களின் முதல் முத்தம், அதன் பின் ஒவ்வொரு நாளும் தங்கள் நேசம் வானளவு உயர்ந்து வளர்ந்தது, அவன் வம்படியாக அவன் ப்ளாட்டுக்கு இவளை தூக்கிச் சென்றது, அவனின் செல்ல சீண்டல்கள், சின்ன பிள்ளை போல இவளிடம் அடம் பிடித்து முத்தம் வாங்குவது, மடியில தான் தூங்குவேன் என்று அலுச்சாட்டியம் செய்து அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொள்வது, எக்ஸாம் சமயத்தில் இவளுடன் அவனும் விழித்திருந்து இரவெல்லாம் டீ போட்டு கொடுப்பது என்று அவனுடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் அவள் நினைவுகளில் தோன்ற முதலில் புன்னகை மலர்ந்த அவள் முகத்தில் அடுத்த நிமிடம் கோபம் வந்து ஒட்டிக்கொண்டது.
கண்களில் தேங்கி இருந்த நீரை இமைகளை அழுத்தி மூடி வெளியேற்றி விட்டு, சேலையை அழகாக தன் உடலின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றார் போல் உடுத்திக்கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு என்றும் இல்லாத நிறைவு மனதில். சின்ன மெரூன் நிற பொட்டை நெற்றியில் ஒட்டியவள், அருகில் இருந்த குங்குமத்தை எடுத்து நெற்றி உச்சியில் வைக்கும் போது அவள் கண்கள் நட்சத்திரம் போல் மின்னியது. கழுத்தில் இருந்த தாலியை வெளியே எடுத்து இமைக்காமல் பார்த்தவள், மீண்டும் அதை தான் புடவைக்குள் மறைத்துக் கொண்டாள்.
அவளின் இன்றைய செயல்கள் அனைத்தும் அவளுக்கே சற்று வினோதமாக இருந்தது. ஏனோ காலையில் எழுந்ததில் இருந்து அவள் மனதில் இனம்புரியாத சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்திருந்ததது. மனநிறைவோடு தயாராக வெளியே வந்தவள் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த பூரணி, சங்கரையும் பார்த்து, "குட் மார்னிங் மாமா, மார்னிங் மாமி, சாரி மாமா நல்லா தூங்கிட்டேன்" என்று காதைப் பிடித்து கெஞ்சும் குரலில் சாரி சொல்ல,
"பரவாயில்லடா. இட்ஸ் ஓகே. கொஞ்சம் நேரத்துல சிவா வீட்டுல இருந்து எல்லாரும் இங்க வராங்க. அதான் கௌதம் உன்னை எழுப்பினான்" என்றவர் திரும்பி பூரணியை பார்க்க அவரும் ஆத்யாவை பார்த்து ஒரு நிமிடம் இமைமூடி திறந்து, கணவனின் கையை பிடித்து, "எல்லாம் நல்லபடி நடக்கும்' என்று கண்களாலேயே ஆறுதல் படுத்தினார்.
ஆத்யா புருவங்களை சுருக்கி எதையே யோசித்து, "எல்லாருமா... எதுக்கு மாமா? சிவா மாமா மட்டும் வர்ரத தான கௌதம் சொன்னான்" என்றவள் திரும்பி கௌதமை பார்க்க, அவன் இவள் பார்க்கவும் தலை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.
ஆத்யாவுக்கு கௌதம் ப்ளான் புரிந்து விட, வேகமாக எழுந்து கௌதம் அருகில் சென்று, "நீ சிவா மாமா மட்டும் தான அபிய கூட்டிப்போக வர்ரத சொன்ன? இப்ப எதுக்கு எல்லாரும் இங்க வராங்க" என்று முறைத்தபடி கேட்க,
"எ….."
"எனக்கென்ன தெரியும். திடீர்னு ஃபோன் பண்ணி அபிராமி ஆன்ட்டி தான், நம்ம எல்லாரையும் பாக்க அவங்க எல்லாரும் வர்ரத சொன்னாங்க, வரேன்றவங்கள வராதீங்கன்னு சொல்லவா முடியும். அது நம்ம தமிழ் பண்பாட்டுக்கு அழுக்கு... ச்சே இழுக்கு இல்ல."
"ஆ ஆ… "
"அதான் ஓகே சொல்லிட்டேன்" என்று கண்டபடி உளறிக்கொட்டி, ஆத்யா அவனை இன்னும் இன்னும் முறைத்தாள்.
"அப்ப உனக்கு ஒன்னு தெரியாது, அப்படி தான கௌதம்?" என்று கடுங் கோவத்தில் கேட்டாள்.
"ஆ... ஆமா" என்றவன் அங்கிருந்து நழுவ பார்க்க,
"நீ அர்ஜுனை பாத்திய கௌதம்?" என்று நேருக்கு நேர் கேட்டவள் அவனை தன் விழிகளால் கூர்ந்து பார்க்க, அதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் கௌதம் திருட்டு முழி முழிக்க, அவனை காப்பாற்ற அடித்து வீட்டின் காலிங்பெல்.
கௌதம் விட்டால் போதுமென்று கதவை நோக்கி ஓடி கதவை திறந்தவன், "வாங்க ஆன்ட்டி, உள்ள வாங்க அங்கிள்" என்றவன் பின்னால் இருந்த அர்ஜூனை பார்த்ததும் திரும்பி ஆத்யாவை பயத்தோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு, "உள்ளவா அர்ஜூன்" என்றவுடன் ஆத்யா மனதில் புயல் அடிக்க தொடங்கி விட்டது.
ஆத்யா ஓரளவு இங்க என்ன நடக்கப்போகிறது என்று யூகித்தவள் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு, "ம்ம்ம் என்ன ஆனாலும் சமாளிச்சு தான் ஆகணும். இன்னைக்கு இல்லன்னாலும் இன்னொரு நாள் கண்டிப்பாக எல்லாருக்கும் எல்லாமும் தெரிய தான வேணும்." என்றவள் அமைதியாக விட, கௌதம் எல்லாரையும் வரவேற்று சோஃபாவில் உட்கார வைத்து விட்டு ஆத்யாவை பார்க்க, அவள் கௌதமை தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த ரியாவும் அபியும் அர்ஜூனை ஓடிச்சென்று கட்டிக் கொண்டனர்.
அபி அர்ஜூனின் ஒரு தொடையில் அமர்ந்து கொள்ள, ரியா மறு தொடையில் உட்கார்ந்து கொண்டாள்.
அர்ஜூன் தியாவை புடவையில் பார்க்கவும், அவன் முதன் முதலில் ஆத்யாவை கோவிலில் புடவையில் பார்த்ததும், அதன் பின் நடந்த இனிமையான நிகழ்வுகளும் நியாபகம் வர மடியில் இருந்த குழந்தைகளை அணைத்தபடி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையின் விச்சை கவனித்த ஆத்யா அதை தாங்க முடியாமல் உள்ளே சென்றவள், ஜூஸ் எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுத்து விட்டு அபிராமியை பார்த்து, "இப்ப உடம்பு எப்புடி இருக்கு அத்த? சர்ஜரி முடிஞ்சு கொஞ்ச நாள் தான் ஆகுது. எதுக்கு இந்த அலச்சல்" என்று ஒரு டாக்டராக அக்கறை பட,
"நான் நல்லா தான் இருக்கேன் அத்து. வீட்ல இருந்து இருந்து போரடிக்குது. எங்கயாது வெளிய போலான்னு நினைக்கும் போது தான் கௌதம் தம்பி ஃபோன் பண்ணி எங்க எல்லாரையும் வீட்டுக்கு இன்வைட் பண்ணுச்சு" என்றவர் கௌதமை பார்த்து புன்னகைக்க, கௌதமுக்கு புரையேற வாயில் வைத்திருந்த ஜூஸ் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
"லொக் லொக்" என்று இருபியவன், "அய்யோ ஆன்ட்டி உங்களுக்கு நல்லது பண்ண நெனச்ச என்னை இப்படி மாட்டி விட்டிங்களே" என்று திரும்பி ஆத்யாவை பார்க்க, அவளின் முகம் முழுவதும் கோபத்தில் சிவந்து இருந்தது.
" போச்சு போச்சு இன்னைக்கு நா செத்தேன்" என்று நினைத்தவன். "ஈஈஈ" யென அவளை பார்த்து இளிக்க, இருவரையும் பார்த்த அர்ஜூனுக்கு விஷயம் புரிய, கௌதமை பார்த்து 'பாவம்டா கௌதம் நீ' என்று நினைத்தவன் மீண்டும் ஆத்யாவை சைட் அடிக்க திருப்பிக் கொண்டான்.
ஆத்யா கௌதம் அருகில் வந்து, அவங்க தீடீர்னு வந்தாங்க இல்ல கௌதம்... உனக்கு அவங்க வர்ரதே தெரியாது அப்படி தான" என்று கண்களை சுருக்கி அவள் வலக்கை கொண்டு தன் இடக்கை மணிக்கட்டை திருகியபடி, "மகனே இருடி... என்கிட்ட தனியா மாட்டுவ இல்ல, அப்படி இருக்குடி உனக்கு வானவேடிக்கை" என்று சத்தம் வராமல் உதடுகளை மட்டும் அசைக்க,
கௌதம், "நோ ஆது மீ பாவம்" கண்களால் கெஞ்ச, அவள் அவனை நெருங்க, மறுபடியும் கௌதமை காப்பாற்ற அடித்தது காலிங்பெல்.
கௌதம் ஓடிப்போய் போய் கதவை திறந்தவன், மலர்ந்த முகத்துடன், ஏய்…! பட்டு குட்டி வந்துட்டீங்களா?" என்றவன் பூக்குவியல் போல் இருந்த அழகிய பெண் குழந்தையை கையில் ஏந்தியபடி வீட்டிற்குள் வர, குழந்தை பின்னால் ஆத்யா வயதுடைய ஒரு பெண் வீட்டிற்குள் வந்தாள்.
கௌதம் கையிலிருந்து திமிரி கீழே இறங்கிய அந்த குழந்தை "ம்மா" என்று தன் மழலை குரலில் கத்தியபடி, ஆத்யாவை நோக்கி தன் கைகளை தூக்கிக்கொண்டு ஓட, குழந்தையை வாரி அணைத்துக் கொண்ட ஆத்யா, குழந்தை கன்னத்தில் தன் முத்தங்களை பதித்தாள்.
என் பட்டு குட்டி அம்மாவ பார்க்க வந்துட்டீங்களா, அம்மா பாப்பாவ ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா" என்று குழந்தையை கட்டிக்கொள்ள, "நானு கூத ம்மாவ ரொம்ப மிஸ் பண்ணேன்" என்ற குழந்தை ஆத்யா இதழில் தன் மலர் உதட்டை பதித்தாள்.
அபிராமி ஆத்யாவையும், அவள் கையில் இருந்த குழந்தையையும் பார்த்துக் கொண்டிருந்தவர், "அத்தும்மா யாரு மா இந்த பாப்ப? உன்னை அம்மான்னு சொல்ற? என்று புரியாமல் கேட்க, அர்ஜூன் தன் மடியில் இருந்த குழந்தைகளை கீழே இறக்கி விட்டவன் ஆத்யா அருகில் வந்தான்.
"அர்ஜூன், ஆத்யா கையில் இருந்த குழந்தையை தன் கையில் வாங்கியவன் அதன் கன்னத்தில் முத்தம் வைத்து, "இது பூஜா சித்தி, கௌதம் பொண்ணு, அதோ அங்க கௌதம் பக்கத்துல இருக்காங்களே அவங்க தான் திவ்யா. கௌதம் வைஃப். ரியா, பூஜா ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க" என்று அங்கிருந்த பொண்ணை அறிமுகப்படுத்த, அங்கிருந்த அனைவருக்கும் எல்லாம் தெரியும் என்பதால் அமைதியாக இருக்க, அபிராமிக்கும், சிவாவுக்கும் தான் பேரதிர்ச்சி.
"என்ன உளர்ர அர்ஜூன் நீ…? அப்… அப்ப ஆத்யா? ஆத்யாவும் கௌதமும்.. ?? அப்போ ரியா யாரு?" என்றவர் உச்சகட்ட அதிர்ச்சியில் கேட்க,
அர்ஜூன் திரும்பி ஆத்யாவை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவன், "ரியா என்னோட பொண்ணு சித்தி. எனக்கும் என் பொண்டாட்டி ஆத்யா அர்ஜூனுக்கும் பொறந்த பொண்ணு, எங்க பொண்ணு" என்றவன் திரும்பி ஆத்யாவை பார்க்க, அவள் கண்களில் நீர் திரையிட்டு இருந்தது.
அபிராமிக்கும் சிவாவுக்கும் ஒன்னும் புரியவில்லை. பயங்கர குழப்பத்தில் இருந்தவர், "ஆனா, அரஜூன், அன்னைக்கு அத்து ஹாஸ்பிடல்ல நான் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு கேட்டப்ப…" என்றவர் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் தலையை பிடித்துக் கொள்ள, அவர் கைகளை பிடித்து அமைதிப்படுத்திய அர்ஜூன்.
"சித்தி நல்லா யோசிச்சு பாருங்க, அன்னைக்கு தியா அவளுக்கு ஒரு பொண்ணு இருக்கான்னு மட்டும் தான் சொன்னா, வேற எதுவும் சொல்லல" என்று நினைவுப்படுத்த, அபிராமி "ஆமாம்" என்று தலையாட்டினார்.
"எனக்கு ஒன்னு புரியல அர்ஜூன். நீயும் அத்துவும்? எப்படிடா?? எப்போ உங்களுக்கு கல்யாணம் ஆச்சு அர்ஜூன்?" என்று கேட்க, அர்ஜூன் ஆழ்ந்து மூச்செடுத்து, கௌதமையும் ஆத்யாவையும் பார்த்தான்.
கௌதமுக்கு அன்று அர்ஜூனை ஹாஸ்பிடலில் சந்தித்தது, அதன் பின் நடந்த நிகழ்வுகளும் நினைவுக்கு வந்தது.