அர்ஜூன் ஆத்யா 13
அர்ஜூன் ஆத்யா
மெய் 13
இரண்டு நாட்களில் திருமணம் இருந்த நிலையில், நண்பனை பார்க்கச் சென்ற அபிமன்யுவின் கார் விபத்துக்குள்ளாகி அந்த இடத்திலேயே அவன் உயிர் அவனை விட்டுப் பிரிந்து விட்டது.
யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியாது எல்லோரும் கலங்கி இருக்க, ஆத்யா தான் சிவா, அர்ஜூனுக்கு ஆறுதலாய் இருந்தாள்.
அபிமன்யு சடலத்தையே வெறித்த அபிராமிக்கு அருகில் இருந்து அப்படி இப்படி கூட நகரவில்லை அவள். கண்ணின் இமைபோல் அபிராமி பக்கத்திலேயே இருந்தாள்.
ஒரு புறம் உணர்வற்று இருந்த அபிராமி, மறுபுறம் முழுதும் உடைந்து போயிருந்த அர்ஜூன், இருவரையும் தாயாகி தன் மடியில் தாங்கிக் கொண்டாள்.
இந்த சூழலிலும் அர்ஜூன், ஆத்யா நெருக்கத்தை இருவிழிகள் வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தது..
அனைத்து சடங்களும் முடிந்து ரெண்டு நாட்கள் ஓடிவிட்டது. அர்ஜூனின் அம்மா அருந்ததி அபிராமியை தன்னோட சென்னைக்கு அழைத்து செல்வதாக செல்ல, இப்போது அவருக்கு இந்த இடமாற்றம் தேவை என்று நினைத்த அர்ஜூனும் அதற்கு ஒத்துக் கொண்டான்.
அபிராமி கூடவே இருக்கிறேன் என்று அடம்பிடித்த ஆத்யாவை படிப்பை காரணம் காட்டி பெங்களூர் அனுப்பி வைத்தான் அர்ஜூன். அபிராமியை அழைத்துக்கொண்டு சென்னை கிளம்பினான்.
அபிமன்யு இறப்பு அர்ஜூன், ஆத்யா வாழ்க்கையின் ஒரு ஆழிப்பேரலையை உருவாக்க நேர் பார்த்து காத்திருந்தது.
அபிமன்யு இறந்து ஒரு மாதம் ஓடிவிட்டது. அபிராமியோடு சென்னை சென்ற அர்ஜூன், கொஞ்ச நாள் அவரோடு இருந்துவிட்டு தன் பிஸ்னஸை கவனிக்க பெங்களூர் வந்து விட்டான்.
அர்ஜூன் மனநிலை ஆத்யாவிற்கு நன்கு புரிந்தது. அபிமன்யூவை இழந்து அவளும் சுனங்கி தான் போயிருந்தாள். இருந்தாலும் அர்ஜூனை நார்மலாக மாற்ற அவளால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தாள்.
"தியா.."
"தியா.."
"இங்க கொஞ்சம் வாயேன்" என்ற அர்ஜூன் வார்த்தைகள் கிச்சன் வரை கேட்டது.
"என்ன அஜ்ஜூ?" என்று தன் முன் வந்து நின்ற ஆத்யாவை பார்த்தவனால் சிரிப்பை அடக்கமுடியாமல் போக விழுந்து விழுந்து சிரித்தான்.
வெகுநாட்கள் கழித்து தன்னை மறந்து சிரித்த அர்ஜுனை மனநிறைவோடு பார்த்தாள் ஆத்யா.
"டேய் எதுக்குடா இப்ப லூசு மாதிரி சிரிக்கிற.?" என்று இடுப்பில் கை வைத்து முறைத்த ஆத்யாவை இழுத்துக்கொண்டு போய் கண்ணாடி முன் நிறுத்தியவன், "பாருடி நல்லா பாரு, நான் எதுக்கு சிரிச்சேன்னு பாரு" என்று மீண்டும் சிரித்தான்.
"சப்பாத்திக்கு மாவு பிசையுறேனு இப்படி தலைமுடியில இருந்து முகம் பூராவும் மாவை பூசிக்கிட்டு வந்தா சிரிக்காம வேற என்னடி பண்றது" என்றவனை அசடு வழிய பார்த்த ஆத்யா, ஈஈ என பல்லை காட்டி, "ஏன்டா எரும அதான் மாவு பூசி இருக்குன்னு தெரியுதில்ல, ஒழுங்கா தொடச்சி விடாம என்ன கேக்கேபெக்கேன்னு சிரிப்பு வேண்டி கிடக்கு, தொடச்சி விடுடா" என்று முகத்தை அவன் முன் நீட்டினாள்.
"சரியான இம்சடி நீ" என்றவன், துணியை எடுத்து அவள் முகத்தை துடைத்தான்.
"தியா அம்மா ஃபோன் பண்ணாங்க, ஏதோ முக்கியமான விஷயமாம் உடனே வரச் சொன்னாங்க, நாளைக்கு காலையில நா சென்னை கிளம்புறேன். திரும்பி வர எப்படியும் ஒரு வாரம் ஆகும். நீ இங்க தனியா இருப்பியா??" என்றவனை அணைத்துக்கொண்ட ஆத்யா,
"கஷ்டம் தான். பட் இட்ஸ் ஓகே.. ஹாஸ்பிடல்ல மெடிக்கல் கேம்ப் அரேஜ் பண்ணி இருக்காங்க, என்னையும் கூப்பிட்டாங்க, நா தான் உன் விட்டு போக இஷ்டமில்லாம முடியாதுன்னு சொல்லிட்டேன். பேசாம நீ ஊருக்கு போய்ட்டு வர கேப்புல நா கேம்ப் அட்டென் பண்ணிட்டு வந்துடலான்னு பாக்குறேன் உனக்கு ஓகே வா அஜ்ஜூ"
"ம்ம்ம் அதுவும் நல்ல ஐடியாதான். நீ கேம்புக்கு போகும் போதெல்லாம் நமக்கு நல்லது தான் நடந்திருக்கு" என்று குறும்பாக சொல்ல, அவள் முகம் வெட்கத்தில் சிவந்துவிட, தலையை குனிந்து கொண்டாள்.
குனிந்திருந்த அவள் தாடையை பிடித்து தூக்கி அவன் ஆசையாக பார்க்க, அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவள், அவனை இறுக்கி கட்டிக்கொண்டாள்.
நிலவு தன் பயணத்தை முடித்து சூரிய கதிர் பூமி தொட்ட வேளையில் கிளம்பி தயாராகி வந்தனர் இருவரும். ஓகே தியா நா கெளம்புறேன். நீயும் பாத்து பத்திரமா போய்டு வா, ஒழுங்கா சாப்பிடு, அடிக்கடி ஃபோன் பண்ணு, ஓகே வா..!!"
"இல்லடா, நா போற இடம் ரிமோட் வில்லேஜ் சிக்னல் கிடைக்காதுன்னு நெனக்கிறேன். முடிஞ்ச வர கால் பண்ண ட்ரை பண்றேன்."
"சரி.. சரி.. வில்லேஜ் னு சொல்ற ஜாக்கிரதையா இரு, உடம்ப பாத்துக்கோ" என்று நூறு முறைக்கு மேல் சொன்னவன் ரெண்டடி எடுத்து வைக்க திரும்பி தன்னவளை பார்த்தவன், ஓடி வந்து அவளை மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டான்.
"ஏய் அஜ்ஜூ என்னடா.?? என்ன ஆச்சு?" என்று ஆத்யா அவன் முதுகை தடவிக் கொடுக்க, "என்னமோ தெரியலடி மனசு ஒரு மாதிரி இருக்கு, இதயம் வேகமா துடிக்குது. இப்ப உன்னை விட்டு போக கூடாதுன்னு உள் மனசு சொல்லுது, எதோ தப்பு நடக்க போற மாதிரி ரொம்ப பயமா இருக்குடி" என்றவன் இன்னும் இன்னும் அவளை தன்னோடு இறுக்கி கொண்டான்.
என்ன சொல்வது, காலையிலிருந்து ஆத்யாவுக்கும் இதே நிலை தான். அவள் மனது ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. ஏதோ கெட்டது நடக்க போகிறது என்று அவள் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது. ஆனால், இப்போது அதை சொல்லி அர்ஜுனை குழப்ப அவள் விரும்பவில்லை.
"ரிலாக்ஸ் அஜ்ஜூ, அதெல்லாம் ஒன்னு இல்ல, நீ தேவையில்லாம பயப்படுற, ரிலாக்ஸ்..."
"இல்ல தியா எனக்கு மனசு ஒரு மாதிரி இருக்கு, நா சென்னை போகல" என்றவன் திரும்பி வீட்டுக்குள் நடக்க,
"என்ன அஜ்ஜூ இது.?? உன்னோட அம்மா ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு வர சொல்லி இருக்காங்க, நீ போகாம இருந்தா எப்படி டா. நீ தேவை இல்லாமல் யோசிக்குற, இந்த தண்ணிய குடிச்சிட்டு கிளம்பு" என்று அவனை விரட்டியவளுக்கு அப்போது தெரியாது. அவன் பயம் உண்மையாக போகிறதென்று. இன்று அர்ஜூன் வீட்டை விட்டு மட்டுமல்ல அவள் வாழ்க்கையை விட்டே போகப் போகிறான் என்று. தெரிந்திருந்தால் ஒருவேளை ஆத்யா அவனை செல்ல அனுமதித்திருக்கவே மாட்டாள். ஆனால் விதி யாரை விட்டது.
மனமே இல்லாமல் கிளம்பி அர்ஜூன், ஆத்யா இதழில் தன் இதழை அழுத்தமாக பதித்து, "பை தியா" என்று வறண்ட குரலில் சொல்லி விட்டு செல்ல ஆத்யா மனதில் வெறுமை குடிகொண்டது. இனி அந்த வெறுமை அவள் வாழ்க்கையில் நிரந்தரமாக இருக்கப்போகிறது என்று தெரியாமல் மெடிக்கல் கேம்ப்புக்கு புறப்பட்டு சென்றாள்.
வீட்டிற்கு வந்து அர்ஜூன் தலையில் இடி விழுந்தது போல் அமர்ந்திருந்தான். அபிராமி அவனை கொஞ்சிக் கொண்டிருந்தார்.
"சித்தி எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி பேசுறீங்களே. நானும் தியாவும் விரும்புறது தெரிஞ்சும், எப்படி சித்தி உங்களால இப்படி கேக்க முடிஞ்சுது. மூச்சுக்கு முன்னூறு தடவை, அத்து என்னோட பொண்ணு மாதிரின்னு சொல்லுவீங்களே, இப்படி அந்த அத்து வாழ்க்கையை நீங்களே நாசம் பண்ண பாக்குறீங்களே சித்தி" என்றவன் அபிராமி முன் மண்டியிட்டு அழ,
"எனக்கு வேற வழி தெரியலடா அர்ஜூன். இது முழுக்க முழுக்க என்னோட சுயநலம் தான். அது எனக்கு நல்லா புரியுது. ஆனா"
"என...??
"எனக்கு…?? உன்னை விட்டா வேற கதி இல்லடா… அந்த கடவுளா பாத்து என்னோட புள்ளையை எனக்கு திருப்பி தந்திருக்காரு, அவனை மறுபடி இழக்க நான் தயாரா இல்ல அர்ஜூன். எனக்கு தெரியும் நீ அத்துவை உயிருக்கு உயிரா விரும்புறன்னு, எனக்கு நீங்க ரெண்டு பேரும் முக்கியம் தான். ஆனா, இப்ப எனக்கு என்னோட அபிமன்யுவோட உயிரை விட வேற எதுவும் பெருசில்ல அர்ஜூன்"
" அய்யோ? ப்ளீஸ் சித்தி புரிஞ்சுக்கோங்க, நெலம புரியாம பேசாதீங்க, நானும் தியாவும் இப்ப" என்று அர்ஜூன் ஏதோ பேசா ஆரம்பிக்கும் போதே, அபிராமி சட்டென அவன் காலில் விழுந்து, "நீ என்னை உன்னோட அம்மாவா நெனைக்கிறது உண்மைனா.? நா கேட்டத எனக்கு கொடு அர்ஜூன்" என்று கேட்க,
அர்ஜூன் அவரை தூக்கி விட்டு வெறுமையான பார்வை பார்த்து, "உங்க இஷ்டப்படியே எல்லாம் நடக்கட்டும் சித்தி. நான் உங்களை என்னோட அம்மாவா நெனச்சது உண்மைதான். நா மட்டுமில்ல தியாவும் அப்படி தான் நெனச்சிட்டு இருக்கா. ஆனா, எங்க ரெண்டு பேருக்கும் ஒரு விஷயம் இது வர புரியாம போச்சு சித்தி. என்ன தான் இருந்தாலும் நாங்க உங்க வயித்துல பொறந்த புள்ளைங்க இல்லைனு" என்று எங்கோ பார்த்து சொல்ல, அந்த ஒரு வார்த்தையில் அபிராமி உடைந்து சிதறி விட்டார்.
அபிராமி அருந்ததியிடம் வந்து, "அர்ஜூன் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்" என்று உணர்சியற்று சொல்ல,
"வெரி குட் அபிராமி" என்று அருந்ததி சந்தோஷமாக சொன்ன, அக்காவை உயிரற்ற பார்வை பார்த்த அபிராமி, "கடைசியில நான் உன் தங்கச்சின்னு நிருபிச்சிட்டேன் ஆரு. என்னோட சுயநலத்துக்காக அர்ஜூனை உயிரோடு கொன்னுட்டேன்" என்றவர் அங்கிருந்து சென்றார்.
தன் அறையில் படுத்திருந்த அபிராமி கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை
அபிமன்யுவிற்கு நிச்சயம் செய்திருந்த ப்ரீத்தியின் அப்பா மோகன். நேற்று அருந்ததி வீட்டிற்கு வந்து, தன் மகள் அபிமன்யுவின் குழந்தைக்கு தாயாகப் போகிறாள், இனி அவளுக்கு என்ன வழியென்று கேட்டு அந்த வீடே இடித்து விழும் அளவு கத்தி, "உங்க பையன் பாட்டுக்கு செத்துப் போயிட்டான். இனி என் பொண்ணோட வாழ்க்கை என்னம்மா ஆகுறது என்று உச்சகட்ட கோபத்தில் கத்த, அபிராமிக்கு ஒரு நிமிடம் உலகமே நின்று விட்டது. அருந்ததி தான் ப்ரீத்தியின் அப்பாவை சமாதானம் செய்து, "அபி இப்படி ஒரு காரியத்தை செய்வான்னு, நாங்க நினைச்சு கூட பாக்கல, என்ன செய்யறதுன்னு எங்களுக்கு ஒன்னுமே புரியல சார்...?? கொஞ்சம் பொறுமையா யோசிப்போம் சார்"
"இன்னும் யோசிக்க என்னம்மா இருக்கு, கல்யாணத்துக்கு முந்தியே வயித்துல குழந்தையோட நிக்குறாமா என் பொண்ணு, அவளுக்கு நீங்க என்ன பதில் சொல்றீங்க?" என்று மீண்டும் கத்த,
"என்ன செய்யுறதுன்னு எங்களுக்கும் புரியல, முடிவை நீங்களே சொல்லுங்க, நீங்க என்ன சொல்றீங்களோ அத நாங்க கேக்குறேன்" என்ற அருந்ததியை பார்த்த மோகன்.
"அவ வயித்துல வளர்றது உங்க வீட்டு வாரிசு. அதுக்கு இந்த உலகத்துல ஒரு அங்கீகாரம் வேணும். அதனால உங்க பையன் அர்ஜூனுக்கும் என் பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணிவைங்க" என்று குண்டை தூக்கிப் போட்டார்.
அர்ஜுனையும், ஆத்யாவையும் எப்படி பிரிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த அருந்ததிக்கு, மோகன் சொன்னது நல்ல வாய்ப்பாக தோன்றியது.
மோகன் சமூகத்தில் தனக்கு நிகராக அந்தஸ்தில் இருப்பவர். அதோடு ப்ரீத்தியும் நன்கு படித்த பெண். எல்லா வகையிலும் இது அருந்ததிக்கு சாதகமாக அமைய அவர் இதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால், அபிராமி தான் பாவம் அரண்டு விட்டார்.
"ஒன்னு உங்க பையன் அர்ஜுனுக்கும் என் பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கணும். இல்லன்னா என் பொண்ணோட வயித்துல இருக்க கருவை கலைச்சிட்டு அவளுக்கு வேற கல்யாணம் பண்ணி வைப்பேன்" என்று மோகன் உறுதியாக சொல்ல,
அபிராமி, "அய்யோ..!! அப்படி எதுவும் செஞ்சுடாதீங்க... அது என் பையனோட உயிர். அவனோட கடைசி நியாபகம். என்னோட அபியோட குழந்தை, அத சாகடிச்சிடதீங்க" என்று அவரிடம் கெஞ்ச,
"அப்போ அர்ஜூன், ப்ரீத்தி கல்யாணம் நடக்கணும்" என்று மோகன் விடாப்பிடியாக நின்றார்.
"அந்த நொடி அர்ஜூன், ஆத்யாவை மறந்த அபிராமி. தன் மகனின் உயிருக்கு முன் வேறு எதுவும் பெரிதில்லை என்று நினைத்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிவிட்டார். இன்று தன் பாசத்தை ஆயுதமாக வைத்து அர்ஜூனையும் சாய்த்து விட்டார்.
அபிமன்யு இறந்து கொஞ்ச நாள் தான் ஆகி இருந்ததாலும், என்னோட கை தாலின்னு ஒன்னு கட்டுன அது என்னோட தியா கழுத்துல மட்டும் தான் கட்டுவேன். வேற யாருக்கும் அந்த உரிமை இல்லை என்று அர்ஜூன் உறுதியாகச் சொல்லிவிட, சில சொந்தங்களை மட்டும் வைத்து வீட்டோடு அர்ஜூன், ப்ரீத்தியின் ரிஜிஸ்டர் மேரேஜை முடித்து விட்டனர்.
"என்ன மன்னிச்சிடு அத்து, என்னோட சுயநலத்துக்காகவும், அபிமன்யு குழந்தையை எனக்கு கிடைக்கணும்னு, உங்க ரெண்டு பேர் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன் அத்தும்மா, என்னை மன்னிச்சிடு" என்று தன் மடியில் படுத்திருந்த அபியையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ஆத்யா, கையை பிடித்து அபிராமி கதற, அவரை ஆறுதல் படுத்தும் நிலையில் ஆத்யா இல்லை.
"னஆத்யா தன்னிலை மறந்திருந்தாள், அவளால் அபிராமி செய்ததை தவறென்று சொல்ல முடியவில்லை, அதே சமயம் அர்ஜூனை அவளிடம் இருந்து பிரித்ததையும் மன்னிக்க முடியவில்லை. ஆத்யா, அபிராமியை பிரியா இடத்தில் வைத்து தான் பார்த்தாள்.. அவளின் அத்தை, அவளின் அன்பு அத்தை தான் அவளின் அர்ஜூனை, அவள் இழக்க காரணம் என்று நினைக்க, அவள் இதயம் சுக்கு நூறாக உடைந்தது.
"அர்ஜூனை, ப்ரீத்திக்கு கல்யாணம் பண்ணி வச்சு பெரிய தப்பு பண்ணிட்டேன் எனக்கு புரியும் போது தான் எனக்கு தெரிஞ்சது, அதுக்கு முந்தியே அத விட பெரிய தப்பு ஒன்னு நாங்க பண்ணி இருக்கேன்னு" என்று விரக்தியாக சொன்ன அபிராமியை ஆத்யா கேள்வியாக பார்க்க,
"ஆமா அத்து... ப்ரீத்தி அப்பா வந்து பேசும்போது வேற எது பத்தியும் யோசிக்காம முடிவெடுத்த மாதிரி, அபிமன்யு வந்து ப்ரீத்திய காதலிக்கிறேன்னு சொன்னப்போ அந்த பொண்ணை பத்தி எதுவும் விசாரிக்காம உடனே கல்யாணத்துக்கு ஓகே சொல்லி பெரிய தப்பு பண்ணிட்டேன். அந்த பொண்ணுக்கும் அவ அப்பாவுக்கும் நாம் சொத்து மேல தான்டா கண்ணு. நம்ம வசதியை பார்த்து தான் அந்த பொண்ணு அபிமன்யுவ காதிலிச்சிருக்கு, ஆனா, எதிர்பாராம நம்ம அபி செத்து போய்டாவே அவங்க எண்ணம் நிறைவேறல, அப்புறம் அவங்க பார்வை அர்ஜூன் மேல விழுந்திருக்கு, அப்ப தான் அந்த பொண்ணு கர்ப்பமா இருக்குன்னு அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சு, அத யூஸ் பண்ண நெனச்சு எனக்கு அபிமன்யு மேல இருந்த பாசத்தை வைச்சு" என்றவருக்கு அதற்கு மேல் பேச வாய் வரவில்லை.
ஆத்யா அவர் தோளை தொட்டு, "உங்க உடம்பு இருக்க கன்டிஷன்ல இப்ப நீங்க அழக்கூடாது ப்ளீஸ் கம் டவுன்"
"ம்ஹீம்..!! இதுக்கு மேல என் உடம்புக்கு என்ன கேடு வந்துட போகுது. அர்ஜூனுக்கும் உனக்கும் பண்ண துரோகத்துக்கு, நா ஏற்கனவே பாதி செத்துட்டேன். இனி என்ன இருக்கு அத்தும்மா, எப்ப அந்த ப்ரீத்தி நம்ம வீட்டுல காலடி எடுத்து வச்சாளோ… அன்னைக்கே எங்க நிம்மதி, சந்தோஷம் எல்லாம் பேச்சு, அர்ஜூன் என்கிட்ட பேசுறதயே நிறுத்திட்டான். கல்யாணம் முடிஞ்சு ரெண்டாவது நாளே அர்ஜூன் பெங்களூர் போய்ட்டான். எப்பயாவது தான் சென்னை வருவான். அர்ஜூன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ப்ரீத்தி அவன் கிட்ட நெருங்க எவ்வளவோ ட்ரை பண்ண. ஆனா, அர்ஜூன் நிழலை கூட அவளால நெருங்க முடியல.." அர்ஜூன் என்னோட தியா தவிர யாருக்கு என் வாழ்க்கையில இடம் இல்லன்னு முடிவா சொல்லிட்டான். அதுக்கு அப்புறம் அவ, அத வச்சே சண்ட போட ஆரம்பிச்சிட்டா,"
ப்ரீத்தி, "எவளையோ மனசுல வச்சிட்டு, நீ ஏன்டா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட, நீ தான் அவளையே நெனச்சிட்டு இருக்க? நீ என்னை கட்டிக்கிட்ட மாதிரி அவ இந்நேரம் எவனை கட்டிக்கிட்டாளோ, இல்ல நீ போனதும் இப்ப வேற எவன் கூட இருக்காளோ யாருக்கு தெரியும்" என்றவள் வாய் அதற்கு மேல் ஒரு வார்த்தை பேச முடியாமல் அவள் கழுத்தை நெறித்திருந்தான் அர்ஜூன்.
"என் தியாவை பத்தி பேச உனக்கு என்னடி தகுதி இருக்க? "ஹான்…. என்ன தகுதி இருக்கு, எங்க அண்ணனை பணத்துக்காக லவ் பண்ணிட்டு, அவன் செத்த சுவடு கூட மாறல அதுக்குள்ள என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டவா நீ... நீ என் தியாவை பத்தி பேசுறியா..?. அவ ஒன்னும் உன்ன மாதிரி இல்லடி, ஒருத்தன் இல்லன்னா இன்னொருத்தன்னு போக, அவ நெருப்பு. ஒருவேளை அவ வாழ்க்கையில மூவ்-ஆன் ஆகி கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அது கூட எனக்காக தான்டி இருக்கும்" என்றவன் அவள் மூச்சுவிட கஷ்டப்படுவதை பார்த்து அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஒன்றும் ஆகி விடக்கூடாது என்று அவள் கழுத்தில் இருந்து தன் கையை எடுத்தான்.
வெகு நேரம் மூச்சு விட முடியாமல் தவித்த ப்ரீத்தி நெஞ்சை பிடித்துக்கொண்டு இருமியவள், "அவள இந்த அளவுக்கு விரும்பி இருந்தா... என்னை ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்ட, பேசாம அவகிட்டயே போக வேண்டியது தானே" என்று கோபமாக கத்த,
அவளை வெறுப்பாக பார்த்த அர்ஜூன், "நான் தியாவை விரும்புறேன்னு தெரிஞ்சும், நீ ஏன்டி என்ன கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டா" என்று கேட்க, ப்ரீத்திக்கு திக்கென்று ஆகிவிட்டது.
"என்ன சொல்ற நீ.?? என.. !! எனக்கு அத பத்தி எல்லாம் ஒன்னு தெரியாது" என்று சமாளிக்க, "ம்ஹீம்" என்று அசட்டையாக சிரித்த அர்ஜூன்,
"உனக்கும், உன் அப்பாவுக்கும் எல்லா விஷயமும் தெரியும்னு எனக்கு நல்லா தெரியும். எல்லாம் தெரிஞ்சு தான் இந்த குழந்தையை வச்சு சித்தியை பிளாக்மெயில் பண்ணி, என்னை கல்யாணம் பண்ணீங்கன்னும் எனக்கு தெரியும் ன. இதுக்கு பின்னாடி என்னோட அம்மா உங்களுக்கு சப்போட்டுனும் தெரியும். எல்லா தெரிஞ்சு தான் இந்த குழந்தைக்காக நா அமைதியா இருக்கேன். சோ உன்னோட இந்த டிராமாவை என்கிட்ட காட்டாத, உனக்கு தேவை இந்த பணம், பிசினஸ், ஸ்டேட்டஸ், கார் இதெல்லாம் தானா. அது தான் உனக்கு கிடைச்சிருச்சே… அதோட நிறுத்திக்கோ. நீ எப்பவும் இந்த அர்ஜூனுக்கு பொண்டாட்டியா ஆகவே முடியாது. இந்த உலகத்தில் அந்த இடம் ஒரே ஒருத்திக்கு தான்" என்றவன் அங்கிருந்து கோபமாக சென்று விட இதையெல்லாம் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த அபிராமியின் இதயமே நின்றுவிட்டது.