அர்ஜூன் ஆத்யா 12
அர்ஜூன் ஆத்யா
மெய் 12
"அத்த.. பாப்பாக்கு ஃபீவர் குறைஞ்சிடுச்சு, நல்லா தூங்குற, நா அவளுக்கு கஞ்சி ஊட்டி விட்டுட்டேன். நீங்க சாப்பிடிங்கள அத்த..??
"ம்ம்ம்… நா சாப்டேன் அத்து"
"சரி அத்த, நீங்களும் போய் மருந்து போட்டுட்டு தூங்குங்க, நா கெளம்புறேன்" என்றவளை நிறுத்திய அபிராமி.
"அத்தும்மா மணி ஒன்பது ஆச்சு இதுக்கு மேல நீ வண்டி ஓட்டிட்டு போக வேண்டாம். சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சு காலையில பேசலாம் இல்ல…" என்ற வரை பார்த்து மென்மையாக சிரித்தாள் ஆத்யா.
"எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல அத்த. சில நேரம் ஆபரேஷன் முடிச்சி நைட் ஒரு மணி ரெண்டு மணிக்கு கூட வீட்டுக்கு தனிய வண்டில போவேன். பாவம் கௌதம் தான் ஏன்டி இப்படி பண்ற, எனக்கு ஒரு ஃபோன் பண்ண வேண்டியது தான, நா வந்து கூட்டி வர மாட்டேனா.? நீ வீடு வந்து சேர்ர வரை எனக்கு பக்கு பக்குன்னு இருக்குன்னு புலம்புவான்" என்ற நேரம், மடியில் இருந்து கீழே வந்த அர்ஜூன் அவள் சொன்னதை கேட்டு முகம் வாடி விட திரும்பி சென்றுவிட்டான், அதை கவனித்த விட்டார் அபிராமி.
"அத்தும்மா, அர்ஜூன் காலையில இருந்து ஒன்னும் சாப்பிடல. அவனுக்கு நல்லா ஃபீவர் டா, சாப்பிட்டு மாத்திரை போட சொன்னா கேட்க மாட்டேங்கிறான். ப்ளீஸ் மா அவனா கொஞ்சம் சாப்பிட வைச்சிட்டு மருந்து கொடுடா. நீ சொன்னால் அவன் கேட்பான்" என்று கெஞ்சும் குரலில் கேட்ட, அதை மறுக்க முடியாமல்,
"சரி அத்த நீங்க போய் தூங்குங்க" என்றவள் அர்ஜூன் அறைக்கு சென்றாள்.
அர்ஜூன் குழந்தை அபி அருகில் கண்களை மூடி அமைதியாக படுத்திருந்தான்.
"அர்ஜூன்" என்று அவள் மெதுவாக அழைக்க, அர்ஜூன் கண்விழித்து திரும்பி அவளை பார்த்து, 'என்ன' என்று கண்களாலேயே கேட்க,
" சாப்பிட வா"
"எனக்கு பசிக்கல, சாப்பாடு வேண்டாம்" என்றவன் முகத்தை திருப்பிக் கொள்ள,
"எனக்கு ரொம்ப பசிக்குது" என்று ஆத்யா சொன்னது தான் தாமதம், "வா சாப்பிடலாம்" என்றவன் அவளுக்கு முன் டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தான்.
உணவை அவனுக்கு பரிமாறி விட்டு தனக்கும் வைத்துக் கொண்டு அமர்ந்தாள் ஆத்யா.
இருவரும் அமைதியாக உண்ண, "உங்க வைஃப் ப்ரீத்தி எப்படி இருக்காங்க? இங்க எப்ப வராங்க?" என்று கேட்டவளை நிமிர்ந்து ஆழமாக ஒரு பார்வை பார்த்தான் அர்ஜூன்.
"ம்ம்ம் நல்லா இருக்கா, அவளுக்கு இப்ப நாலு மாசம், அதான் வர்ல" என்று ஒற்றை வார்த்தையில் பதில் வர அதற்குமேல் ஆத்யா எதுவும் பேசவில்லை.
"கௌதம் எப்படி இருக்கான்? நீ லண்டனுக்கு எப்ப வந்தா?"
"நல்லா இருக்காரு, நாங்க இங்க வந்து நாலு வருஷம் ஆச்சு.." என்றவள் குரல் தளர்ந்திருக்க, அர்ஜூன் இயலாமையோடு அவளை பார்த்தவன், பாதி சாப்பாட்டில் எழுந்துவிட்டான்.
"நைட் ரொம்ப நேரமாச்சு. நீ இப்ப போக வேண்டாம். காலையில போ" என்றவன் அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்.
அர்ஜூன் மீண்டும் அபியிடம் வந்தவன் அவள் தலையைக் கோதியபடி அவள் அருகில் உட்கார்ந்துக் கொண்டான்.
"அர்ஜூன் இந்தா, இந்த மருந்தை போடு, உன்னோட ஃபீவர் குறையும்" என்று மாத்திரையை அவன் முன் நீட்டினாள் ஆத்யா.
"எனக்கு எதுவும் வேணாம், நீ போ.."
"உனக்கு ஃபீவர் அதிகமா இருக்கு, அடம்பிடிக்காம இதை போடு"
"அதான் வேண்டாம்னு சொல்றேனில்ல" என்றவன் தாடையை திருப்பி அவன் வாயை திறக்கும் படி அழுத்தி பிடித்து, மாத்திரையை அவன் வாயில் போட்டு தண்ணியையும் உற்றி விட்டவள், "போ… போய் நல்லா தூங்கு" என்று அங்கிருந்து நகர, "அத்தும்மா" என்ற அபி குரல் மெல்லியதாக கேட்டதும், ஆத்யா குழந்தை அருகில் வந்து அமர்ந்தாள்.
"ஒன்னு இல்ல டா, நீ தூங்கு என்று அவளை தன் மடியில் போட்டு தட்டிக்கொடுக்க, குழந்தை அமைதியாக உறங்கி விட்டாள்.
"நானும் உன் மடியில் படுத்துக் கட்ட தியா?" என்ற அர்ஜூன் வார்த்தையில் கோபம் கொண்ட ஆத்யா சட்டென திரும்பி பார்க்க, அவன் கண்களில் தாய்க்கு ஏங்கும் பிள்ளையின் ஏக்கத்தை பார்த்து, உள்ளுக்குள் உடைந்து போனாள்.
அவனை நோக்கி தன் கண்களை மெதுவாக அவள் மூடித்திறந்து "வா' என்றழைக்க, பலநாள் கழித்து தாய்மடி கிடைத்துபோல் உணர்ந்தவன், பட்டென தன் ஆறடி உடலை சுருக்கிக்கொண்டு ஆத்யா மடியில் தலை வைத்து படுத்த அடுத்த நொடி அமைதியாக உறங்கிவிட்டான்.
ஆத்யா தன் மடியில் தலை வைத்து படுத்திருந்த இரு குழந்தைகளையும் மெதுவாக தட்டி கொடுத்து தூங்க வைத்தாள்.
"தாரமென உன் மடி தலைசாய தவமிருந்தேன்"
"பிள்ளையென மடி சாயும் வரம் பெற்றேன்.."
"காலம் பல கடந்து பார்க்கிறோம். நான் கரையின் இந்தப்பக்கம், நீ அந்தப் பக்கம்..'' யார் மீது குற்றம் சொல்ல.. விதி மீதா? இல்லை விதிவழி சென்ற மதி மீதா?"
மறுநாள் வீட்டுக்கு வந்த ஆத்யா மனம் முழுவதும் அர்ஜூன் பற்றிய நினைவுகள் தான் நிறைந்திருந்தது.
எப்போதும் புன்னகை இருக்கும் அவன் உதட்டில் இப்போது அதற்கான அடையாளம் கூட இல்லை. அபிக்காக சிரிப்பு என்ற பெயரில் இதழை சுழிக்கிறான். அவன் சிரிப்பில் உயிர் இல்லை என்பதை ஆத்யா கண்டுபிடிக்க அவளுக்கு அதிக நேரம் தேவையில்லை, அவனை விட அவனை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருந்தவள் ஆயிற்றே, ப்ரீத்தி பற்றி கேட்ட போது அவன் முகம் போன போக்கைப் வைத்தே ஏதோ பிரச்சனை என்று அவளுக்கு புரிந்து விட்டது. ஆனால், அதை பற்றி அவனிடம் கேட்க தான் அவளால் முடியவில்லை.
ஆத்யா அபியை அக்கறையோடு பார்த்துக் கொண்டாள்.
"ஆமா அத்து, நீ உனக்கு ஒரு பொண்ணு இருக்கான்னு சொன்னதோட சரி, குழந்தையை பத்தி வேற எதுவும் சொல்லல, பாப்பா பேரு என்ன, குணம் எப்படி உன்னை மாதிரியே சேட்டகாரிய? இல்ல சமந்தா?" என்று அபிராமி கேள்வி மேல் கேள்வி கேட்க,
ஆத்யா சொல்லப்போகும் பதிலுக்காக அபிராமியோடு சேர்த்து அப்போது தான் வெளியே சென்று வீடு திரும்பி அர்ஜூனும் வாசலில் ஆர்வமாக காத்திருந்தான்.
அர்ஜூன் வந்ததை கவனிக்காத ஆத்யா, "ஐய்யோ அத்த! அவ எனக்கு மேல… பயங்கர குறும்பு. செம்ம வாலு ஆனா, நான்னா அவளுக்கு உயிர். என்னோட அம்மாவே திரும்பி எனக்கு பொண்ண வந்து பொறந்திருக்காங்க அத்த. அவ அப்படி என்ன பாத்துக்குவா, எனக்கு உடம்பு சரியில்லைன்னா போதும். என் விட்டு அசைய கூட மாட்டா, பக்கத்துல உக்காந்து தலை தடவிட்டே இருப்பா, அவள முதன் முதல்ல என் கையில வாங்குன நொடி எனக்கு என்னோட பிரியாம்மாவே திரும்ப கிடச்ச மாதிரி இருந்தது அத்த" என்று முகம் மலர சொன்னவள் வார்த்தைகள் அர்ஜூன் மனதிலும் தேனை வார்த்தது.
என்னோட பிரியா ஏஞ்சல், என் தியாவுக்கே மகளா பொறந்திருக்காங்க, என்னோட ஏஞ்சல் திரும்பி வந்துட்டாங்க" என்றவன் மனது சிறகில்லாமல் பறந்தது. உடனே அந்த குட்டி ஏஞ்சலை பார்க்க அவன் உள்ளம் ஏங்கியது.
"பாப்பா பேர் என்ன அத்து, பாக்க பிரியா மாதிரி இருக்கான்னு பிரியனே பேர் வச்சிட்டியா என்ன?? என்று அபிராமி கேட்க, ஆத்யா மென்மையாக சிரித்தாள்.
"ம்ம்ம் அப்டியும் சொல்லலாம், அவ பேரு "ரியா" என்று சொல்ல, ஒரு நிமிடம் அர்ஜூன் இதயமே நின்று விட்டது. அப்படியே கால் மடக்கி வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.
காலம் யாருக்கும் நிற்காமல் ஓட , கௌதம் வரும் நாளும் வந்தது.
"இனி அபிய பாக்க முடியாது. நாளைக்கு கௌதம் வந்துடுவான். ஏற்கனவே அர்ஜூனை விட்டு தள்ளி இருன்னு, அவன் சொன்னதையும் மீறி, நா அர்ஜூன் வீட்டுக்கு போனது மட்டும் அவனுக்கு தெரிஞ்சுது. அவ்ளோ தான் சலங்கை கட்டிட்டு ஆடுவான். கூடவே இன்னும் ரெண்டு நாள்ல மாமா, மாமா வேற ஊர்ல இருந்து இங்க வந்துடுவாங்க. ம்ம்ம் இதுக்கு பிறகு அத்தை ஹாஸ்பிடல் வரும்போது தான் அபிய பாக்க முடியும்" என்றவள் மனது முழுவதும் அபியை சுற்றியே இருந்தது. அவளை பார்க்கும்போது அவளையும் அறியாமல் அவள் மனது குழந்தையிடம் செல்வதை அவளால் தடுக்க முடியவில்லை. ஏதோ ஒன்று அபியிடம் ஆத்யாவை கட்டிப்போட்டது. அவளின் "அத்தும்மா" என்ற அழைப்பில் அவளின் தாய்மை உணர்வு பூரிப்பதை அவளால் தடுக்க இயலவில்லை.
மறுநாள் அபியை பார்க்க வந்த ஆத்யா, அபியை பார்த்துவிட்டு, அத்த அபி இப்ப நார்மலா இருக்க. ஷி இஸ் ஆல் ரைட் அத்த" என்றவள் வீட்டை சுற்றி பார்த்துவிட்டு, அர்ஜூனும், சிவா மாமாவும் எங்க அத்த?? என்று கேட்டாள்.
"அவங்க ரெண்டு பேரும் இங்க பிசினஸ் ஆரம்பிக்க போறாங்க அத்து, அது விஷயமா வெளிய போயிருக்காங்க.."
"அத்த நா உங்க கிட்ட அர்ஜூன் பத்தி பேசணும்? பேசலாமா அத்த? என்ற ஆத்யாவை கேள்வியாக பார்த்தார் அபிராமி.
"இல்ல அத்த… நேத்து ப்ரீத்தி எப்ப இங்க வருவாங்கன்னு நான் அர்ஜூன் கிட்ட கேட்டப்போ, அர்ஜூன் அவங்க நாலு மாசம் ப்ரக்னெட் அதனால இங்க வரலைன்னு சொன்னான். ஆனா, அவன் ஒன்னை மறந்துட்டான் அத்த. நா டாக்டர் மட்டும் இல்ல, ஒரு குழந்தைக்கு அம்மாவும் கூட... வயித்துல இருக்க குழந்தை சேஃப்பா இருக்க டிராவல் பண்ணாத ப்ரீத்தி, அபியை சிவா மாமா கூட இவ்வளவு தூரம் தனியா அனுப்புனங்கன்னு சொன்னா, நா நம்புவேன்னு அவன் நினைச்சிட்டான். அவன் பேசும்போது அவனோட வார்த்தையை விட, நா அவன் கண்ணுல இருந்து தான் அத்த அவன் சொல்றதை கேப்பேன். நேத்து அந்த கண்ணு என்கிட்ட பொய் சொல்ல ட்ரை பண்ணுச்சு... அப்பவே புரிஞ்சிடுச்சு அவங்களுக்குள்ள ஏதோ சரியில்லன்னு, எப்ப அவன் என்கிட்ட பொய் சொல்ல ட்ரை பண்ணனோ... மறுபடி அவன் கிட்ட அத பத்தி கேட்ட, அதுக்கும் பொய் தான் சொல்லுவான். அதான் உங்க கிட்ட பேச வந்தேன்.
"ம்ம்ம்" என்று பெருமூச்சு விட்ட அபிராமி, அர்ஜூன் பத்தி இனி பேச என்ன இருக்கு அத்து. இப்ப அத பத்தி பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல. உனக்கு ஒன்னு தெரியுமா அத்து?? எனக்கு அபிமன்யு, அர்ஜூனை விட உன்னை தான் ரொம்ப பிடிக்கும். அப்படிப்பட்ட நீ உனக்கு கல்யாணம் முடிஞ்சி குழந்தை இருக்குன்னு சொல்லும் போது நியாயமா நான் சந்தோஷப் பட்டிருக்கணும். ஆனா, என்… என்னால சந்தோஷப்பட முடியல அத்தும்மா" என்று தலைகுனிந்தார்.
"சாரி அத்து, நா இப்படி பேசுறது சரிய தப்பான்னு எனக்கு தெரியல, மனசுல இருந்தது வாய்ல வந்துடுச்சு" என்றவரை தீர்க்கமாக பார்த்தாள் ஆத்யா.
"ப்ரீத்திக்கு என்ன ஆச்சு அத்த?"
"அவளுக்கென அவ நல்லா தான் இருக்க, எங்க எல்லார் நிம்மதி, சந்தோசத்தையும் கொன்னுட்டு, அவ சந்தோஷமா தான் இருக்கா... யார் செஞ்ச பாவமே?? அர்ஜூன் மாதிரி, அபிக்கும் தாய் பாசம் கெடைக்காமையே போய்டுச்சு."
"அத்த ப்ளீஸ் நீங்க சொல்றது சத்தியமா எனக்கு புரியல..?? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க…"
"ம்ம்ம்... என்னத்த சொல்ல அத்து, அர்ஜூன் வாழ்க்கையோடு சேர்த்து, உன்னோட வாழ்க்கையும் நாசமா போக நான் தான் காரணம்னு சொல்ல வா? நீயும் அர்ஜூனும் விரும்புறீங்க ன்னு தெரிஞ்சும், என்னோட சுயநலத்துக்காக உங்க ரெண்டு பேர் மனசையும் சாகடிச்சிட்டேனே, அத சொல்ல வா" என்றவர் கதறி அழுதார் அபிராமி.
"ப்ளீஸ் அத்த..?? அழாதீங்க உங்க உடம்புக்கு ஆகாது, ப்ளீஸ் அத்த கண்ட்ரோல் யுவர் செல்ப்."
"அர்ஜூன் மேல எந்த தப்பும் இல்ல அத்து, எல்லா என்னால தான். எனக்காக தான் அர்ஜூன்" என்றவர் கைகளால் வாயை மூடிக்கொண்டு அழ, "எனக்கு தெரியும் அத்த" என்று ஆத்யாவின் குரலில் அதிர்ந்தார் அபிராமி.
"உ… உனக்கு... எப்படி அத்து?"
"என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது அத்த. ஆனா, எப்போ அர்ஜூன் ப்ரீத்தியை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு தெரிஞ்சிதோ, அப்பவே இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு பெரிய காரணம் இருக்குன்னு தோனுச்சு, இப்ப தான் அது என்னன்னு எனக்கு புரியுது" என்று தன் மடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அபி பார்த்துக்கொண்டே சொன்ன ஆத்யாவின் வார்த்தைகள் அபிராமியை கத்தியின்றி அறுத்து போட்டது.
"நான்கு வருடங்களுக்கு முன்"
ஆத்யா தன் மருத்துவ மேற்படிப்பில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தாள். அர்ஜூனும் அவன் பிஸ்னஸில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருந்தான்.
ஆத்யா, அர்ஜூன் உறவு நாளுக்கு நாள் வளர்த்து கொண்டே போனது. ஈருடல் ஓருயிர் என்றாகி போகினார் இருவரும். ஆத்யா வீட்டில் அவளுடன் இருந்த தோழிகள் படிப்பு முடிந்து அவர்கள் ஊருக்கு சென்றுவிட, அர்ஜூன், ஆத்யா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடம்பிடித்து அவளை குண்டுகட்டாக தன் ப்ளாட்டிற்கு கூட்டி வந்து விட்டான். சின்ன சின்ன சீண்டல், செல்ல சண்டை, பார்வை தீண்டல் என்று அழகாக சென்றது அர்ஜூன், ஆத்யாவின் நாட்கள்.
"தியா"
"தியா"
"ஏய் ராட்சசி எத்தனை தடவ கூப்பிடுறது. சீக்கிரம் வாடி" என்று அர்ஜூன் கத்திக் கொண்டிருக்க,
"ஏன்டா எரும வீடே இடிஞ்சு போற மாதிரி கத்துற? இந்த வந்துட்டேன் இல்ல, எதுக்கு கூப்பிட்ட சொல்லி தொல, எனக்கு வேலை இருக்கு" என்று இடுப்பில் கை வைத்து அவனை முறைத்துக் கொண்டிருந்தவள் கையை அர்ஜூன் பிடித்து தன் புறம் இழுக்க, அவன்
மார்மீது போய் விழுந்தாள் ஆத்யா.
அவள் இடையில் தன் கைகளால் வீணை மீட்டியவன், "என்னடி வர வர உனக்கு வாய் ரொம்ப தான் நீளுது... நா யாருன்னு மறந்து போச்ச? மரியாதை ரொம்ப தேயுது. கொழுப்பு ரொம்ப ஏறி போச்சு போல" என்று அவளை இடையோடு இறுக்கி அணைத்தான்.
"ஆமா…!! இவன் எனக்கு வகை வகையா சமைச்சு போடுறான். அத தின்னு எனக்கு கொழுப்பு ஏறி போச்சு, போடா டேய்" என்றவள் அவன் பிடியில் இருந்து தப்பிக்க பார்க்க,
"ஆமாடி அது ஒன்னு தான் கொறச்சல். ஏற்கனவே நல்லா தின்னு தின்னு தக்காளி மூட்டை மாதிரி இருக்க, இப்பவே உன்னை முழுசா கட்டிப்புடிக்க கை எட்டமடிங்கு, இதுல உனக்கு நா சமச்சு வேற போடுறேன். கொஞ்ச நாள் உன் வாயை கவனிக்காம விட்டது, உனக்கு ரொம்ப குளிர்விட்டு போச்சுன்னு நினைக்கிறேன். அத கவனிச்ச எல்லாம் சரியாகிடும்" என்றவன் அவள் இதழை கவனிக்க தொடங்க, அவனின் இதழ் கவனிப்பிற்கு இசைந்து நின்றாள் கன்னி அவள்.
வெகு நேரம் தொடர்ந்த இதழ் தீண்டலை மனமே இல்லாமல் முடித்துக்கொண்ட அர்ஜூன்.
"தியா, அபிமன்யு அண்ணா மேரேஜ் இன்விடேஷன் வந்திருக்கு பாரு" என்று அவள் முகத்திற்கு முன் இன்விடேஷனை நீட்டினான்.
"ஏய் சூப்பர்டா, செம்மையா இருக்கு. அண்ணா நிச்சயதார்த்தத்துக்கு தான் என்னால வர முடியல, திடீர்னு மும்பையில மெடிக்கல் கான்ப்ரன்ஸ் வச்சிட்டாங்க, அண்ணா எங்கேஜ்மென்ட் போட்டோஸ் பாக்கும்போதெல்லாம் அதுல நா இல்லயேன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்டா அஜ்ஜூ. நீ வேணும்னா பாரு அண்ணா கல்யாணத்துல எல்லா போட்டேலயும் நா இருப்பேன்" என்றவளை இடையோடு சேர்த்து அணைத்தான் அர்ஜூன்.
"உன் பக்கத்தில் இந்த தேவதைக்கு ஜோடி நான் தான்னு சொல்ற மாதிரி உன் கூட நானும் இருப்பேன்" என்றவன் அவள் மூக்கை தன் மூக்கால் உரசிட அதில் மயங்கி நின்றாள் ஆத்யா.
''அஜ்ஜூ, அபிமன்யு அண்ணா கல்யாணம் முடிஞ்ச உடனே நம்ம பத்தி அத்த, மாமா கிட்ட சொல்லிடலாம். நம்ம ரெண்டு பேரும் ஒரே வீட்டுல இருக்குறது நமக்கு சரியா இருக்கலாம். ஆனா, அவங்களை பொறுத்தவரை இது பெரிய தப்பு. அத்தைக்கு தெரிஞ்சா, நம்ம வளர்த்த பசங்க இப்படி பண்ணிட்டாங்களேன்னு ரொம்ப வருத்தப்படுவாங்க டா.. அவங்களாக்ஷ நம்ம பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு முந்தி நம்மள சொல்லிடலாம் "என்று தவிக்கும் குரலில் சொல்ல,
"புரியுது தியா. சித்திக்கு ஏற்கனவே நம்ம ஒருத்தரை ஒருத்தர் விரும்பும் விஷயம் தெரியும். ஆனா! மத்த எதுவும் தெரியாது. நீ கவலப்படாம இரு. அண்ணா கல்யாணம் முடிஞ்சதும் நம்ம விஷயத்தை ஓபன் பண்ணிடுறேன், ஓகே வா." என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
"சரிடி நா இன்னைக்கே ஊருக்கு கிளம்புறேன். கல்யாண வேலை நிறைய இருக்கு, நா போய் தான் பாக்கணும். நீ ஓழுங்க டைமுக்கு சாப்பிடு, நைட்டெல்லாம் கண்ணு முழிச்சு படிக்காத, கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முந்தி வந்து சேரு" என்று சொல்லிவிட்டு சென்றவனுக்கு தெரியாது இது அவர்கள் இருவரின் பிரிவுக்கு கடவுள் பார்த்த ஒத்திகை என்று.
ஊருக்கு சென்ற அர்ஜூனிடம் இருந்து ஃபோன் வருமென்று எதிர்பார்த்து காத்திருந்த ஆத்யாவின் தலையில் இடியாய் வந்து விழுந்தது அந்த தகவல்.
கல்யாணத்திற்கு போட்டிருந்த பந்தல் பிரிக்கப்பட்டு, நட்டு வைத்த பந்தக்கால் வெறும் கட்டையென மூலையில் கிடக்க, இது கல்யாண வீடு என்ற அழகை இழந்து முழு சூன்யமாக இருந்தது அந்த வீடு.
அடித்து பிடித்து ஓடிவந்த ஆத்யா, உயிரற்ற உடலாய் கிடந்த அபிமன்யுவை பார்த்தவள், நிற்க கூட சக்தி இல்லாமல் கால் மடக்கி உட்கார்ந்து விட்டாள். சின்ன வயதில் இருந்து தன் கூடவே இருந்த விளையாட்டு தோழன், அன்பாக தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்கி அன்பு அண்ணன், தவறு செய்யும் போது காதை திருகி கண்டிக்கும் ஆசான் என்று ஆத்யாவின் வாழ்க்கையில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருந்த அபிமன்யு இன்று இந்த உலகத்தில் இல்லையென்பதை ஏற்க முடியாமல் "ஓஓஓஓவென" கதறி அழுதாள்.