என் தீராத காதல் நீயே 1

 amazon link  :

என் தீராத காதல் நீயே 

        


காதல்  1


இரவில்  விளக்குகளின் ஒளியில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம். சென்னைக்கு கிளம்பும் விமானம் புறப்பட நேரமானதால், தன் தோழி தன்யாவுடன் வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தாள் மிருதுளா. 


பாஸ்போர்ட், போர்டிங், லக்கேஜ் என்று எல்லாம் முடித்து ஃப்ளைட்டில் அருகருகே அமர்ந்தனர் தோழிகள் இருவரும். 


தன்யாவும், மிருதுளாவும் அமெரிக்காவுக்கு வேலைக்கு வந்து மூன்றாண்டுகள் ஓடிவிட்டது. இதில் தன்யா இடையில் தன் சொந்த ஊருக்கு ஒரு முறை சென்று வந்திருக்கிறாள். தினமும் வீடியோ கால் செய்து அம்மா, அப்பாவுடன் பேசுவாள். ஆனால், மிருதுளா அமெரிக்கா  வந்ததிலிருந்து  வேலை விட்டால் வீடு, வீடு விட்டால் வேலை இதைத்தவிர எங்கும் சென்றதில்லை. அவள் வீட்டிற்கு கூட இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒரு முறை தான் ஃபோன் செய்து பேசுவாள். இடையே அவள் அம்மா கவிதா மிருதுளாவை அழைத்தால் அது பணம் கேட்பதற்கு மட்டுமே இருக்கும். மிருதுளா எப்படி இருக்கிறாள் என்று ஒரு அன்பான வார்த்தை பேருக்கு கூட கவிதாவிடம் இருக்காது. இதெல்லாம் மிருதுளாவுக்கு பழகிப் போனதால் அவள் அதை பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. இப்போது கூட வேலைக்காக மூன்று வருட ஒப்பந்தத்தில் இங்கு வந்தவள், ஒப்பந்தம் முடிந்து இன்று தான் சொந்த ஊருக்கு திரும்புகிறாள். 


இந்த மூன்று வருடத்தில் மிருதுளாவின் அழகிலும், குணத்திலும் காதல் கொண்டு அவளுடன் வேலை செய்பவர்கள் பலர் அவளை திருமணம் செய்ய விரும்பியும், யாருக்கும் மிருதுளா பிடி கொடுக்கவில்லை. அதனாலேயே மிருதுளாவுக்கு இங்கு இருக்க விருப்பமில்லை. ஆனால், மிருதுளாவின் தாய் கவிதாவிற்கு அவள் இந்தியா வருவதில் துளியும் இஷ்டமில்லை. மிருதுளாவை கான்ட்ராக்டை மேலும் மூன்று வருடம் நீட்டிக்க சொல்ல, மிருதுளாவுக்கு அமெரிக்க வாழ்க்கை சுத்தமாக வெறுத்து விட்டது. அதோடு வாழ்க்கையின் வெறுமையும் சேர்ந்துகொள்ள, பணத்தின் மீதும், தன்னை வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மட்டுமே பார்க்கும் தன் குடும்பத்தின் மீதும் அவளுக்கு வெறுப்பு வந்துவிட்டது. 


பிறந்ததில் இருந்து அன்பு, பாசம் என்று எதையும் பார்க்காத அந்த அப்பாவி ஜீவனுக்கு கடவுள் தந்த இரண்டு வாரங்கள் நட்பும், காதலும் தான். ஆனால், அவள் கெட்ட நேரம் வரமாக கிடைத்த காதலை சாபம் என்றெண்ணி தொலைத்து விட்டு, இன்று தனக்காக  யாருமில்லாமல் தனிமரமாய் நிற்கிறாள். 


தன்யாவும் அவள் தாய், தந்தையும் தான் மிருதுளாவின் ஒரே ஆதரவு.  சின்ன வயதில் இருந்தே மிருதுளாவின் உயிர் தோழி தன்யா. ஆனால், அவளுக்கே தெரியாமல் மிருதுளாவின் வாழ்வில் சில ரகசியங்கள் இருப்பதும், அது தன் தாய், தந்தைக்கு தெரியும் என்பதும் சமீபத்தில் தான் தன்யாவிற்கு தெரிந்தது. அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடு இந்தியா கிளம்பி இருந்தாள் தனு. அதோடு இன்னொரு முக்கியமான நபரையும் பார்த்து விட மாட்டோமா என்று நப்பாசையில் இந்தியாவை நோக்கி பயணித்தாள். 


தன் குடும்பத்திற்கு தான் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளும் இந்த மூன்று ஆண்டுகளின் நிறைவாக, சற்று அதிகமாகவே மிருதுளா செய்திருந்தாள். தன்னுடைய தம்பி அஜய், தங்கை அனிதாவும் கல்யாணம் முடிந்து செட்டிலாகி விட்டனர். அவர்கள் கல்யாணத்தின் போது கூட மிருதுளாவின் கல்யாணத்தை பற்றி யோசிக்கவில்லை கவிதா.  அவளுக்கும் கல்யாணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. அந்த கல்யாணத்துக்கு கூட மிருதுளா செல்லவில்லை. ஏன் அவள் தந்தை மூர்த்தி மரணத்தை கூட அவர் இறந்து மூன்று நாட்களுக்கு பிறகு தான் அவளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. 


குடும்பம், வேலை, வாழ்க்கை என்று எல்லாம் வெறுத்து விட, இனியாவது தன் சொந்த ஊருக்கு சென்று அங்கேயே தனக்கென ஒரு வேலை தேடிக் கொண்டு அமைதியாக வாழ மிருதுளா நினைக்க, கவிதாவிற்கு அதில் விருப்பமில்லை. என்ன இருந்தாலும் அங்கு கிடைப்பது போல் இந்தியாவில் சம்பளம் கிடைக்காது. அதனால் நீ இங்கு வர வேண்டாம் என்று கவிதா சொல்லியும், மிருதுளா அதையெல்லாம் கேட்காமல் இந்தியா கிளம்பிவிட்டாள். 


இன்னும் சில மணி நேரத்தில் சென்னை வந்து அங்கிருந்து கோயம்புத்தூர் செல்ல வேண்டும். இப்போது கூட மிருதுளா அவள் வீட்டிற்கு சென்று தங்க போவதில்லை. தன்னை சொந்த மகளாக பார்க்கும் தன்யாவின் பெற்றோர் கூட தான் தாங்க போகிறாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் தான் சொந்த நாட்டில் இருப்போம் என்ற நினைவே அவள் மனதில் நிம்மதியை கொடுக்க, நிம்மதியை தேடி  தாய் மண்ணிற்கு வரும் மிருதுளாவுக்கு அவளை வரவேற்க இங்கு நொடிக்கு நொடி காத்திருக்கும் அதிர்ச்சிகள் பற்றி தெரியாமல் நிம்மதியாக பயணித்து கொண்டிருந்தாள். 


கண்கள் மூடி தன் கடந்த கால வாழ்க்கை, தன் குடும்பம் என்று அனைத்தையும் சிந்தித்தவள் மன கண் முன் தோன்றியது அந்த அழகிய முகம், அவளையும் அறியாமல் அவள் கண்களில் கண்ணீரை வர வைக்க, அப்படியே விழி மூடி தன் கடந்த காலத்தை அசை போட ஆரம்பித்தாள்.


அழகான காலை பொழுது. இரவு முழுவதும் மேகம் கொட்டிவிட்டுப் போன மழைத்துளிகளை, எங்கு சூரியன் வந்து கவர்ந்து சென்று விடுமோ என்ற பயத்தில் தன் இலைகளின் இடையில் ஒளித்து வைத்திருந்தான மரங்கள். காய்ந்த சருகுகளும், கிளையை விட்டு விடுதலை பெற்ற மலர்களும் சாலையில் கொட்டிக்கிடக்க, பூமிக்கு நோகாமல் கால்கள் தரையில் நடக்கிறதா? மிதக்கிறதா? என்று சொல்ல முடியாதபடி தன் தளிர் பதங்கள் சாலையில் கிடந்த மலர்களை மிதிக்காதவாறு பார்த்து நடந்து வந்து கொண்டிருந்தாள் மிருதுளா. தன் மேல் படிப்புக்கு வீட்டில் எப்படியாவது சம்மதிக்க வேண்டும் என்று கடவுளிடம் மனு கொடுக்க கோவிலுக்கு செல்கிறாள்.


அதற்கு முன் மிருதுளா பற்றி சின்ன அறிமுகம்.


மிருதுளா.  கவிதா, மூர்த்தி தம்பதியின் மூத்த மகள். கவிதாவுக்கும், மூர்த்திக்கும் விருப்பமில்லாமல் பெற்றவர்கள் கட்டாயத்தால் நடந்த கல்யாணம். இருவரும் கடமைக்கு ஒரு  வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க கவிதா கருவுற்றாள். கவிதாவிற்கு மூர்த்திக்கும் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசை இருக்க, பெண் பிள்ளையாய் மிருதுளா பிறந்தது பெரிய ஏமாற்றமாக போனது. மூர்த்தி மிருதுளாவை வெறுக்கவில்லை என்றாலும் அவளிடம் பாசத்தையும் காட்டியதில்லை. ஆனால், கவிதா தான் நினைத்து போல் கல்யாணமும் நடக்கவில்லை, ஆசைப்பட்ட குழந்தையும் பிறக்கவில்லை என்ற கோபமும், ஆத்திரமும் மிருதுளா மேல் திரும்பியது. எந்த பாவமும் அறியாத அந்த குழந்தையை வெறும் கடமைக்காக மட்டுமே வளர்த்தனர் கவிதாவும், மூர்த்தியும். மிருதுளா பிறந்த இரண்டு வருடம் கழித்து கவிதாவிற்கு ஒரே பிரசவத்தில் ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆண் குழந்தைக்கு அஜய் என்றும், பெண்ணுக்கு அனிதா என்றும் பெயர் வைத்தனார். ஏனோ ஆண் குழந்தையுடன் தன் பிறப்பை பகிர்ந்து கொண்டு பிறந்தால் அனிதாவிற்கு தாய், தந்தையின் பாசம் முழுதாக கிடைத்தது. சின்ன வயதில் இருந்து தாய், தந்தையோடு சேர்ந்து தம்பி, தங்கையும் மிருதுளாவிடம் ஒதுக்கத்தை காட்ட, அதை நினைத்து மிருதுளா முதலில் மனம் வருந்தினாலும் போக போக அதுவே அவளுக்கு பழகிவிட்டது. வீட்டில் அமைதியாக இருக்கும் மிருதுளா மிகவும் பயந்த சுபாவம் என்றாலும் ஸ்கூலுக்கு வந்துவிட்டால் ரெட்டை வாலு தான். ஃப்ரண்ட்ஸ் கூட சேர்த்து அவள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இருக்காது. தன்யா, மிருதுளாவும் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. இப்போது ஸ்கூல் படிப்பும் முடிந்துவிட இப்போது அந்த சந்தோஷமும் அவளுக்கு இல்லை. 


இப்போது பனிரெண்டாம் வகுப்பு விடுமுறை முடிந்து மிருதுளா காலேஜில் சேர வேண்டும். ஆனால், அவள் படிப்பிற்கு கவிதா பணம் கட்ட முடியாது என்று மறுத்து விட, கடவுளிடம் தனக்கு உதவி செய்ய வேண்டி பெட்டிஷன் போட கோயிலுக்கு வந்துவிட்டாள். 


"இதோ பாரு சாமி. நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல ஆமா.? ஏன் இப்படி பண்றீங்க? இதுவரை  ஸ்கூல் ஸ்காலர்ஷிப்ல எப்டியோ படிச்சிட்டேன். ஒரு பிரச்சனையும் இல்லாம இருந்தது. ஆன, இப்ப காலேஜில் சேர நிறைய பணம் தேவைப்படுது. எனக்கு எப்படி நான்  காலேஜ்ல சேரப்போறேன்னே தெரியல, நீதான் எப்படியாவது உன் பவரை யூஸ் பண்ணி என்னை எப்டியாவது காலேஜில் சேர வைக்கணும். இல்ல உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது சொல்லிட்டேன் ஆமா" என்று தன் எதிரே இருந்த பிள்ளையாரிடம் செல்லச் சண்டை போட்டுக் கொண்டிருந்த மிருதுளாவின் கண்களை மூடியது ஒரு கை. 


"தனு ப்ளீஸ்டி. டிஸ்டர்ப்  பண்ணாத. நா கோவமா பிள்ளையார் கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கேன். கையை எடு" என்று அவள் கண்களை மூடியிருந்த கைகளை விலக்க, அங்கே முகம் முழுவதும் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தாள் தன்யா.


"என்ன மிருது ரொம்ப பெரிய வேண்டுதல் போல. சாமிகிட்ட சண்டையெல்லாம் பலமா இருக்கு?"


"ஆமாடி, உனக்கு தான் தெரியுமே என் வீட்ட பத்தி, காலேஜ் சேர பணமெல்லாம் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க, எனக்கு என்ன செய்யுறதுனு தெரியல. அதான் பிள்ளையார் கிட்ட ஒரு பெட்டிஷன் போட்டு போலாம்னு வந்தேன்" என்று சொல்லும்போதே அவள் முகம் வடிவிட, மிருதுளாவின் கன்னத்தை பிடித்து ஆட்டிய தனு, 


"மை டியர் மிருது டார்லிங் உன்னோட பெட்டிஷனை பிள்ளையார் அக்செப்ட் பண்ணிட்டாரு. அடுத்த வாரம் நீயும் என் கூட நான் சேர போற அதே காலேஜில ஜாய்ன் பண்ண போற" என்று சொல்ல, மிருதுளாவிற்கு ஒன்னும் புரியவில்லை, குழப்பத்தோடு கேள்வியாக தனுவை பார்த்தாள்.


"ஏய் என்னடி சொல்ற? கனவெதும் கண்டு உளரியா என்ன? நா போய் எப்படி டி அவ்வளவு பெரிய காலேஜில்??" என்று நம்பமுடியாமல் தனுவை பார்க்க,


"ஆமாடி,   நீயே தான் அந்த காலேஜில் படிக்க போற" என்று தனு மகிழ்ச்சியாக சொல்ல, மிருதுவுக்கு ஆனந்த அதிர்ச்சி. 


"ஏய் தனு என்ன சொல்ற நீ? நிஜமா வா சொல்ற?"


" நா"


" நான்"


" உன் கூட நீ போற அதே காலேஜிக்கு வரபோறனா!?" என்று நம்ப முடியாமல் கேட்க,


"ஆமாடா செல்லம். அப்பா தெரிஞ்ச ஒருத்தர் கிட்ட உன்னோட படிப்புக்கு உதவி செய்ய சொல்லி கேட்டிருந்தாரு, அவரும் உன்னோட மார்க்ஸ் பார்த்துட்டு, உன்னோட படிப்பு செலவு முழுசையும் அவரே தரேன்னு சொல்லிட்டாரு, அதோட அவரே உனக்கு நான் படிக்கப்போற காலேஜில் சிட்டும் வாங்கிக் கொடுத்துட்டாரு" என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்க, மிருதுளாவிற்கு சந்தோஷத்தில் என்ன செய்வதென்று புரியாமல் தனுவை இறுக்கி கட்டிக்கொண்டு குதித்தாள்.


"ஏய் ஏய் கொரங்கு விடு, விடுடி என்னை.!! பிசாசு எப்டி இறுக்கி புடிக்குற, எரும மூச்சே நின்னுபோச்சு" என்று மிருதுளா தலையில் கொட்ட,


"தனு செல்லம் இன்னைக்கு நீ என்னை என்ன வேணும்னாலும் சொல்லு, எவ்ளோ வேணும்னாலும் கொட்டிக்கோ, நா ரொம்ப ஹாப்பி மூட்ல இருக்கேன். சோ நீ என்ன பண்ணாலும் ஐ டோன்ட் கேர்'' என்றவள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க. அவளின் முகத்தின் சிரிப்பு தோழியையும் தொற்றிக்கொள்ள இதுவரை இணைபிரியாமல் இந்த தோழிகள் இனியும் ஒரே கல்லூரியில் படிக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி கொண்டாள்.


மிருதுளா ஒரு நிமிடம் நிதானித்தவள், "ஏய் தனு எனக்கு உதவி செஞ்ச வரை நா பாத்து நன்றி சொல்லணும்டி, செல்வா அப்பாகிட்ட சொல்லி என்னை கூட்டிப்போக சொல்லுடி"


"இல்ல மிருது அவரு இந்த ஊர் இல்லையாம். அதோட அவரு உன்னோட படிப்பை நீ நல்லபடியா முடிச்சப் பிறகு அவரை வந்து பார்த்தா போதும்னு சொல்லிட்டாராம். சோ, இப்ப நீ அவரை பாக்க முடியாதுடி" என்றதும் மிருதுளா முகம் வாடி விட்டது. 


"ப்ச்ச்  ஏய் மிருது எதுக்கு இப்ப இந்த சோக மூஞ்சி? வெறும் மூனு வருஷம் தானடி. பட்டுனு படிப்பை முடிச்சிட்டு அவரை பாத்து நன்றி சொல்லிட்ட போச்சு. இதுக்கு போய் சோககீதம் வாசிச்சுட்டு. நான் எவ்வளவு பெரிய குட் நியூஸ் சொல்லியிருக்கேன் கொஞ்சம் சிரிடி" என்ற தனுவை பார்த்த மிருதுளா முகம் அப்போதும் வாடியிருந்தது. 


அவளுக்கு கனவிலும் நடக்குமா? என்று நினைத்த படிப்பை நிஜத்தில் அவளுக்கு கொடுத்த அந்த நல்ல மனிதரை பார்க்க முடியவில்லையே என்ற கவலை இருக்கும் தானே.


"ஓஓஓ அப்ப நீ சிரிக்க மாட்ட அப்படி தானே. அப்ப ஓகே நானும் உனக்கு அந்த இன்னொரு குட் நியூஸ் சொல்ல மாட்டேன்" என்று தனு திரும்பி முதுகை காட்டி உட்கார்ந்து கொண்டாள். 


மிருதுளா தன்யாவின் அருகில் சென்றவள். "ஏய் அதென்னடி இன்னொரு குட் நியூஸ்?" என்று ஆர்வமாக கேட்க, 


தனு இதழை சுழித்து காட்டியவள், "நா சொன்ன நீ கேக்க மாட்ட, நான் மட்டும் நீ கேட்ட உடனே பதில் சொல்லணுமா? போடி"  என்று முகத்தை திருப்பிக்கொள்ள, மிருதுளாவுக்கு ஐயோ என்றிருந்தது. 


"ப்ளீஸ் தனு செல்லம். நீ என் டார்லிங் இல்ல"


"இல்ல" என்ற தனு முகத்தை திருப்பிக் கொள்ள,


"ஏய் என்னடி  பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட?" 


"அது அப்படி தான்" என்று மீண்டும் தனு முறுக்கிக்கொள்ள,


"ப்ளீஸ் டா தனு? அது என்ன குட் நியூஸ்னு சொல்லுடா. எனக்கு மண்டைக்குள்ள நண்டு பிரண்டுது. ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.


அவள் தலையில் செல்லமாக கொட்டிய தனு, "மை டியர் மிருது.  நீ காலேஜிக்கு உன் வீட்டுல இருந்து வரப்போறதில்ல. நீ என் கூட ஹாஸ்டலில் சேர்ந்து தான் படிக்கப் போற. அப்பா உன் வீட்டுல பேசிட்டாரு. உங்கம்மாவும் ஓகே சொல்லிட்டாங்க" என்று அடுத்த இன்ப அதிர்ச்சியை கொடுக்க. மிருதுளா முகத்தில் 1000 வாட்ஸ் பல்பு பளிச்சென்று எரிந்தது.


"ஏய் தனு நீ நிஜமாவா சொல்ற நீ?" என்று நம்பமுடியாமல் விழிகள் விரிய கேட்டாள்.


"ஆமாடி. உங்கம்மா ஓகே சொல்லிட்டாங்க. இப்ப நம்ம உன் வீட்டுக்கு போய் உன்னோட திங்ஸயெல்லாம் பேக் பண்ணிட்டு, என் வீட்டுக்கு கிளம்புறோம். அங்க ஒரு வாரம் இருந்துட்டு ஹாஸ்டல் போறோம்" என்ற வார்த்தையை கேட்டதும் மிருதுளா துள்ளி குதித்தாள். 


உடனே தனுவுடன் தன் வீட்டிற்கு சென்று தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தனு வீட்டிற்கு கிளம்பி விட்டாள். 


மிருதுளா முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். தனுவின் அம்மா தங்கமணியும், அப்பா செல்வகுமாரும் தன்யாவிற்கு இணையாக மிருதுளா மீதும் அன்பு காட்டினார். தன் குடும்பத்தில் தனக்கு கிடைக்காத அன்பும், பாசமும் தன்யாவின் தாய், தந்தையிடம் இருந்து அவளுக்கு கிடைத்தது. அப்படி இருக்க அவர்கள் வீட்டில் சென்று தங்குவதை நினைத்த மிருதுளாவுக்கு மனதில் சொல்ல முடியாத சந்தோஷம். 


தன்யா மிருதுளாவை அன்றைக்கே தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டாள். தன்யா வீட்டில் தங்கியிருந்த ஒரு வாரமும் இந்த ரெண்டு போட்ட ஆட்டத்தில் வீடே ரெண்டு பட்டது. ஷாப்பிங், சினிமா, மால் என்று ஒரு வாரம் முழுவதும் ஊர் சுற்றித்திரிந்த தோழிகளுக்கு இன்று கல்லூரியில் முதல் நாள். எல்லா ஃபார்மாலிட்டீஸையும் முடித்து ஹாஸ்டலில் சேர்ந்து விட்டு கல்லூரியின் வாசலில் அடியெடுத்து வைத்தனர் இருவரும். 


மிருதுளாவின் முழு வாழ்க்கையையும் புரட்டிப் போடப் போகும் புயலின் ஆரம்பப் புள்ளி இன்று, இங்கு தான் தொடங்கப் போகிறது என்று தெரியாமல் பல வண்ண கனவுகளை சுமந்து கொண்டு கல்லூரியில் நுழைந்தாள் மிருதுளா.