விழி வழி காதல் நுழைந்ததடி 23

விழி 23


முந்தைய நாள் குடித்ததின் போதை தெளியாமல் மதியம் ஒரு மணி வரை உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான் அவள் கணவன்.


"நீ வார்த்தையால் என்மேல இருக்கற காதலைச் சொல்லனும்னு தான்டி நான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணேன். பட், இப்படி ஒரு சிட்டுவேஷன்ல, உன்னை நீயே மறந்த நிலையில் வலியோட உன் காதலைச் சொல்லுவன்னு நான் நெனச்சுக் கூடப் பார்க்கல..‌. போதும் தன்வி, நீ பட்ட கஷ்டம் எல்லாம் போதும்… இனிமே எதையும் உன்கிட்ட மறைக்க எனக்கு விரும்பம் இல்ல, இன்னைக்கே எல்லா உண்மையும் உன்கிட்டச் சொல்லிடுறேன்‌. அதுக்குப் பிறகு என்ன செய்யணும்னு நீயே முடிவு பண்ணு" என்றவன் அவள் துயில் கலைவதற்காகக் காத்திருந்தான்.


அவன் நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் பின் அங்கு விதிக்கு என்ன வேலை?


கொஞ்ச நேரம் கழித்து தன்வியிடம் அசைவு தெரிந்தது.


உடனே எழுந்து அவள் அருகில் சென்றவன், "தன்வி… தன்வி" என்று அவள் முகத்தைக் கையில் தாங்கியவன், "ஆர் யூ ஓகே?" என்று தவிப்போடு கேட்க, அவளோ செருகும் கண்களைச் சிமிட்டி சிமிட்டி அவனைப் பார்த்திருந்தாள். 


"ஏய் தன்வி, உன்னைத் தான்டி கேக்குறேன்? எதுவும் ப்ராப்ளம் இல்லயே… நீ…நீ ஓகே தான?" என்று கேட்டவன் கண்களில் ஏதோ ஒருவிதப் பரபரப்பு.


ஒற்றைக் கையால் தன் தலையை அழுத்திப் பிடித்தபடி, "நான் நல்லாத்தான் இருக்கேன் தஷ். ஆனா, தலைதான் ரொம்ப வலிக்குது… ஏன்னே தெர்ல" என்று பாவமாகச் சொல்ல, ஆதர்ஷ் அவளைப் பார்த்து முறைத்தவன், "நைட் சரக்கடிச்சா மார்னிங் தலைவலி வராம எப்படி இருக்கும்?" என்று அதட்டலாகக் கேட்க, அவனை அதிர்ந்து பார்த்தவள், 


"எது சரக்கா? நானா?" என்று அதிர, "ஆமாடி, நீயே தான். நைட் தண்ணீன்னு நினைச்சு சரக்கடிச்சிட்டு நீ போட்ட ஆட்டம் இருக்கே" என்றவனுக்கு இரவு நடந்ததெல்லாம் நினைவு வர, மகிழ்ச்சியும் கவலையும் சேர்ந்தே வந்தது. 


"அய்யோ‌…! நிஜமாவா சொல்றீங்க தஷ். எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லயே." என்றவள், நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்து, "நான் எதுவும் தப்பாப் பேசி, இல்ல தப்பா பிஹேவ் பண்ணேனா?" என்றவளுக்கு அவன் முகத்தைப் பார்க்கவே கூச்சமாக இருந்தது.


அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தவன், "நைட் நடந்தது எதுவும் உனக்கு ஞாபகம் இல்லயா தன்வி?" என்று கேட்க, அவளோ இல்லை என்று தலையாட்டினாள்.


கண்களை இறுக்கி மூடி ஆழ்ந்து மூச்செடுத்த ஆதர்ஷ், நேற்று நடந்ததை அவளிடம் சொல்லிவிட்டு, அவனும் தன் மனதை அவளிடம் சொல்ல நினைத்த நேரம், அவன் அலைபேசி அதிர்ந்தது.


அதில் தெரிந்த எண்ணைப் பார்த்து இழுத்து மூச்சு விட்டவன், "ஒன் செகண்ட் தன்வி" என்றவன் தன்வியை விட்டுக் கொஞ்சம் தள்ளி வந்து அழைப்பை ஏற்று, "நானே கால் பண்ணனும்னு நினைச்சேன்" என்று சொல்லி முடிக்கும் முன், அவன் காதில் விழுந்த செய்தியில் நிலை குலைந்து போனான் அந்த ஆறடி ஆண்மகன்.


'அப்ப நேத்து இதைப்பத்திப் பேச தான் கால் பண்ணி இருந்தானா?' என்று நினைத்தவன்,  "நீ… நீ என்ன சொல்ற?" என்று கேட்டான் அவன் காதில் கேட்ட தகவலை நம்ப முடியாமல். தன் காதில் கேட்டது உண்மை தான் என்று உறுதியான அடுத்த நொடி, இதுவரை அழுது பழகாத அவன் கண்களில் கண்ணீர்த் துளிகள்.


"நான் உடனே தன்வியோட அங்க வரேன்" என்று இவன் சொல்ல, அந்தப் பக்கம் என்ன சொல்லப் பட்டதோ, "இந்த டைம்ல நான் அங்க உன் கூட இருக்கனும்… வேணும்னா தன்விய விட்டுட்டு நான் மட்டும் வரேன்" என்று சொல்ல, அந்தப் பக்கம் அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதில் இருந்தே இப்போது இவன் தன்வியை விட்டு அங்கு வரக்கூடாது என்ற கட்டளை இருக்க, கைகளால் முகத்தை மூடிக் கொண்டவன், இதழ்களுக்குள் "ஒரு பிரச்சனையை முடிக்க நெனச்சேன். இப்ப அதைவிடப் பெரிய பிரச்சனை முன்னாடி வந்து நிக்குது" என்று முணுமுணுத்துக் கொண்டே திரும்பிப் பார்க்க, தன்வி அவனையே பாவமாகப் பார்த்தபடி இருந்தாள்.


அந்த நேரம் அவன் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வர, அதை எடுத்துப் பார்த்தான்.


"இப்போதைக்குத் தன்விகிட்ட எதையும் சொல்ல வேணாம்" என்றிருக்க, அதைப் படித்தவனுக்கு மூச்சடைத்து. 


"ஒய்?" என்று இவன் கேட்க, "சொன்னதைச் செய்" என்று பதில் வந்தது.


வேறு வழி இல்லாமல் "ஒகே" என்று பதில் அனுப்பியவன், தன்னையே ஒரு குற்றவுணர்வோடு பார்த்துக் கொண்டிருந்த தன்வியின் கன்னத்தை அன்பாக வருடியவன், "நீ எதுவும் தப்பாப் பேசல.‌‌.‌. தப்பா நடக்கவும் இல்லம்மா…" என்றவன் மனசாட்சியே, 'இங்க நடந்த எல்லாத் தப்பும் என்னால தான் நடந்தது தன்வி. ஆனா, இப்ப எதையும் சொல்லற மனநிலையில் நான் இல்ல, ஐ ஆம் சாரி! தெரிஞ்சே மறுபடியும் நான் உனக்குத் துரோகம் பண்றேன்' என்று உள்ளுக்குள் புழுங்கியவன், "சீக்கிரம் போய்க் குளிச்சிட்டு வா, நம்ம கிளம்பனும்" என்றவன் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறிவிட, தன்விக்குத் தான் எதுவும் விளங்கவில்லை. 


ஒருவேளை அன்றே நடந்த அனைத்தையும் அவன் அவளிடம் சொல்லி இருந்தால் பின்னாளில் அது அவள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்காமல் இருந்திருக்கலாம்.


தலையைப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் குளிக்க எழுந்த தன்வி போர்வையை விலக்கியபோது தான் அவளுக்குத் தான் அவனுடைய மேல் சட்டையை மட்டுமே அணிந்து கொண்டிருந்தது புத்தியில் உரைத்தது. 


"அய்யோ என் புடவை" என்று பேர்வை கொண்டு தன் உடலை மூடியபடியே தேட, அங்கு ஒரு ஓரமாகத் தரையில் கேட்பாரற்றுக் கிடந்தது அவள் புடவையும், மற்ற ஆடைகளும். வேகமாகச் சென்று அதைக் குனிந்து பார்த்தவளுக்கு முகம் சுருங்கிப் போனது. 


"அய்யோ…! நைட் குடிச்சிட்டு இப்படி வாந்தி எடுத்து வச்சிருக்கேனே… பாவம், அவரு எவ்ளோ கஷடப் பட்டாரோ? நைட் ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டோம் போல, எனக்கே நாத்தம் தாங்கல. அவர் எப்படி இதெல்லாம் கழற்றிப் போட்டாரோ" என்று நினைத்தவளுக்கு அப்போது தான், ஆதர்ஷ் அவள் ஆடைகளைக் கழற்றிவிட்டு, அவன் சட்டையைப் போட்டு விட்டிருக்கிறான் என்ற உண்மை விளங்க, அவள் கண்கள் வெளியே வந்து விழுந்து விடும் அளவு விரிந்து கொள்ள, "அய்யோ! போச்சு, போச்சு… எல்லாம் போச்சு… இனிமே எப்படி அவர் முகத்தை நான் நிமிந்து பார்ப்பேன்? கடவுளே! என் மானம் கப்பல் ஏறிடுச்சே…" என்று புலம்பியபடியே அந்தப் புடவையையும், மாற்றுடையையும் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் ஓடினாள் தன்வி.


அவள் குளித்து வந்தவள் அவனை ஏறிட்டுப் பார்க்கத் தயங்கி நிற்க, அது எதுவும் அவன் கருத்தில் பதியவில்லை. "வா போகலாம்" என்று அவன் முன்னே செல்ல, தன்வி குழப்பமாக அவனைப் பார்த்தபடியே அவன் பின்னால் சென்றாள்.


அனைவரிடமும் சொல்லிவிட்டு அடுத்த அரைமணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பிய இருவரும் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்க, இனி வரும் பாதை அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்பது தெரியாமலே வீடு வந்து சேர்ந்தனர். 


வீட்டுக்கு வந்தவுடனேயே வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்று விட்டான் ஆதர்ஷ். தன்வியும் தாத்தாவுடன் சிறிது நேரம் பேசிவிட்டுத் தன் அறைக்குச் சென்று விட்டாள்.


அன்றைய நாளுக்குப் பிறகு ஆதர்ஷன் வீட்டில் இருக்கும் நேரம் குறைந்தது. தன்விவுடன் பேசுவது வெகு அரிதாகிப் போனது. எப்போதும் எதையோ யோசித்தபடியே இருந்தான்‌. முகத்தில் பழைய சிரிப்பும், சந்தோஷமும் இல்லை‌. தன்வி இதையெல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள். 


ஒரு நாள் அவனிடமே, "உங்களுக்கு எதுவும் பிராப்ளமா தஷ்" என்று கேட்க, அவளைப் பார்த்து வலுக்கட்டாயமாகச் சிரித்தவன், "அப்படி எதுவும் இல்ல தன்வி, ஜஸ்ட் வொர்க் டென்ஷன்" என்றான் அவளும் அவனுடன் தான் பணியாற்றுகிறாள் என்பதை மறந்து‌. அதில் இருந்தே அவன் காரணத்தைத் தன்னிடம் கூற விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டவள், அதற்குப் பிறகு அவனிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால், பிரச்சனை பெரிது என்பதை மட்டும் புரிந்து கொண்டாள். அவனுக்கு அப்படி என்ன பிரச்சனை என்று யோசித்தவள் மனக்கண்ணில் ஆலன் வந்து நின்றான். 


"இவரு இந்த அளவுக்கு வாடி இருக்காருன்னா கண்டிப்பா அதுக்கு ஆலன் தான் காரணமா இருக்க முடியும்." என்று யோசித்தவள், "ஆமா… இப்பக் கொஞ்ச நாளா ஆலன் அண்ணா இவருக்குக் கால் பண்றதே இல்லயே… இவரும் அவருக்குக் கால் பண்ற மாதிரித் தெரியலயே… ஒருவேளை ரெண்டு பேருக்கும் எதுவும் சண்டையா இருக்குமோ?" என்று அவன் மாற்றத்திற்குச் சரியாக காரணம் யூகித்தவளுக்கு மனம் அந்தக் காரணத்தில் கசந்து தான் போனது. 


கண் மூடித் திறக்கும் முன் ஒன்றரை மாதங்கள் ஓடி இருந்தது.


ஆதர்ஷின் ஒதுக்கம் தன்வியை ரொம்பவே பாதித்தது. திருமணத்திற்குப் பிறகு எப்போதும் அவனுடன் சேர்ந்தே சாப்பிட்டுப் பழகியவளுக்கு இப்போது தனியே சாப்பிடப் பிடிக்காமல் பாதி நாட்கள் பட்டினியாகக் கிடந்தாள். இரவில் அவன் கையணப்பில் உறங்கும் பழக்கத்தை அவளுக்கு ஏற்படுத்தியவன் இப்போதெல்லாம் அவள் பக்கமே திரும்பாமல் தள்ளிப் படுத்துக் கொள்ள அவளுக்குத் தூக்கமே கனவாகிப் போனது. 


சரியாக உண்ணாமல் உறங்காமல் இருந்தவளுக்குத் தன்னுடலே பாரமாகிப் போக… உடல் சோர்வோடு ஆதர்ஷனின் விலகலும் சேர்ந்து வெகுவாகத் தாக்க ஓய்ந்து தான் போனாள் பெண்ணவள். 


அன்று காலையில் சாப்பிட அமர்ந்தவள் ஆதர்ஷனையும் அழைக்க, "எனக்கு முக்கியமான வேலை இருக்கு, நான் வெளிய சாப்பிட்டுக்குறேன்" என்றவன் அவசர அவசரமாக செல்லப் போக, "நீங்க என்ன நினைக்குறீங்கன்னு எனக்குப் புரியுது தஷ். உங்களுக்கு ஆலன் அண்ணாவை விட்டு இருக்க முடியல, அதனால திரும்ப யூ.எஸ் போகலாம்னு நினைக்குறீங்க… அதை என்கிட்டச் சொல்ல முடியாம தான் நீங்க என்னைவிட்டு விலகிப் போறீங்க" என்றவள் கண்ணீர் நிறைந்த கண்களோடு அவனைப் பார்த்து, "இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் நான் உங்களை மேரேஜ் பண்ணேன். சோ, எனக்கு உங்க மேல எந்த உரிமையும் இல்ல. நீங்க என்ன நினைக்குறீங்களோ அதைச் செய்யுங்க" என்றவளின் வார்த்தைகளுக்கு ஆதர்ஷன் எந்தப் பதிலும் கூறவில்லை என்றாலும் அவள் முகத்தையே ஒரு அழுத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்‌.


"உன்னால என்னை விட்டுக் கொடுக்க முடியாமா தன்வி? வேற ஒரு ஆள் கூட என்னைச் சேர்த்து உன்னால பார்க்க முடியுமா?" என்று அடங்கிய கோபத்துடன் கேட்க, "இதுல நான் விட்டுக் கொடுக்க என்ன இருக்கு தஷ்… இதுல எனக்கு தான் எந்த உரிமையும் இல்லயே… அப்புறம் நான் என்ன செய்ய முடியும்?" என்றவளுக்கு வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொண்டது.


மெல்ல அவள் அருகில் வந்த ஆதர்ஷ், குனிந்திருந்த அவள் தாடையைப் பிடித்து உயர்த்தி தன் முகத்துக்கு நேரே கொண்டு வந்தவன், "உன்னால உன் ஆது பாஸை வேற ஆள் கூடப் பார்க்க முடியும், ம்ம்ம் ஓகே…" என்று அவள் நெஞ்சில் கை வைத்தவன், "இங்க… உன் மனசுல இருக்கற உன்னோட  தஷ்ஷை உன்னால விட்டுக் கொடுக்க முடியுமா? இல்ல, வேற ஆள் கூட சேர்த்து வச்சுப் பார்க்க முடியுமா?" என்று ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கேட்க விலுக்கென்று நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள், கண்களில் அவள் கட்டுப்பாட்டையும் மீறிக் கண்ணீர் வழிய அவனைத் தள்ளி விட்டவள், வேகமாக அவள் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.


மூடிய கதவையே பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷின் கண்களும் கலங்கிப் போயிருக்க, "இதெல்லாத்துக்கும் இன்றைக்கே ஒரு முடிவு கட்டறேன்" என்றவனுக்குத் தெரியவில்லை, அவனவள் அவனை வேரோடு பதற வைக்கும் வேறு ஒரு முடிவை எடுக்கப் போகிறாள் என்று. 


ஆஃபிஸ் சென்றவன் எண்ணம் முழுவதும் காலையில் தன்வி பேசிய வார்த்தைகளிலேயே வட்டமடித்தது. "என்னோட சுயநலத்துக்காக பாவம் ஒண்ணும் தெரியாத அந்த அப்பாவிப் பொண்ணை இன்னும் எத்தனை நாள் சித்தரவதை பண்றது? என்னை அவ உயிரா விரும்புறான்னு தெரிஞ்சும், என்னோட நடவடிக்கை அவளைக் காயப்படுத்தும்னு தெரிஞ்சும், என்னால எதுவும் செய்ய முடியலயே? சும்மா இருந்தவளை என்னைக் காதலிக்க வச்சது‍, இப்படி உயிரோட வதைக்கத் தானா? ஒருவேளை, அவ வேற யாரையும் கல்யாணம் பண்ணி இருந்தால் இந்தக் கஷ்டம் எதுவும் இல்லாம நிம்மதியா இருந்திருப்பாளோ.‌.." என்றவனுக்கு அந்த எண்ணம் வந்த அடுத்த நொடி, "இல்ல… இல்ல, அவ என்னோட தன்வி… அவ எனக்கு மட்டும் தான் சொந்தம்." என்று அவன் நெஞ்சம் பதற, அதற்கு மேல் ஒரு நொடி கூட அவனால் அங்கு இருக்க முடியவில்லை. 


"என்ன நடந்தாலும் பரவாயில்லை, இன்னைக்கு எல்லா உண்மைகளையும் அவகிட்டச் சொல்லத்தான் போறேன்" என்றவன், தன் பி.ஏ வுக்கு அழைத்து அடுத்த விமானத்தில் அமெரிக்காவுக்கு மூன்று டிக்கெட்டுகளைப் போடச் சொல்லிவிட்டு உடனே தன்வியைப் பார்க்க வீட்டுக்குப் புறப்பட, அங்கு அவன் மனையாளோ, உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவோடு பால்கனியின் கைப்பிடிச் சுவரில் குதிக்கத் தயாராக நின்றுக் கொண்டிருந்தாள்.


வேகமாக உள்ளே வந்த ஆதர்ஷ் கதவைத் திறந்து உள்ளே வரவும் அவள் குதிக்கவும் சரியாக இருக்க, "தன்வி" என்று அவன் கத்திய சத்தத்தில் அந்த அறையே அதிர்ந்தது.