விழி வழி காதல் நுழைந்ததடி 14
விழி 14
தன் வீட்டு வாசலில் வந்து நின்றவர்களைப் பார்த்த ஆதர்ஷனின் புருவங்கள் சுருங்கி விரிய, 'இவன் இங்க எதுக்கு வந்தான்?' என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், "வாங்க மிஸ்டர்.ஜனார்த்தன். உள்ள வாங்க, நீயும் வாப்பா" என்று ஜனார்த்தனையும் அவர் பின்னால் நின்ற பிரசன்னாவையும் வரவேற்றார் வீரராகவன்.
அவர் குரலில் தன் யோசனையில் இருந்து வெளிவந்த ஆதர்ஷ், "வாங்க சார், வாங்க பிரசன்னா" என்று அவனுக்ம் கடனே என்று மரியாதைக்காக வரவேற்றான்.
நால்வரும் வரவேற்பு அறையில் எதிரெதிரில் அமர்ந்திருக்க வீரராகவனோ, "தன்வி, கெஸ்ட் வந்திருக்காங்க பாரு, ரெண்டு காஃபி கொண்டு வாம்மா" என்று சொல்ல, அதைக் கேட்ட ஆதர்ஷனுக்கு ஏனோ தன்வி அங்கு வந்து பிரசன்னாவைப் பார்ப்பது அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
தன்வி என்ற பெயரைக் கேட்டதும் பிரசன்னாவின் விழிகள் ஆர்வமாக அங்கும் இங்கும் அவளைத் தேடி அலைபாய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்த ஆதர்ஷனுக்கு உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது.
"தாத்தா, தன்வி கோயிலுக்குப் போகனும்னு சொல்லிட்டு இருந்தா. அவளை டிஸ்டர்ப் பண்ண வேணாம், அவ கோயிலுக்குக் கிளம்பட்டும். நான் போய் கமலா அக்காவை காபி எடுத்திட்டு வரச் சொல்றேன்" என்று அவன் எழுந்து கொள்ளவும் தன்வி கையில் காபியோடு வரவும் சரியாக இருந்தது.
அவளைப் புடவையில் பார்த்ததும் பிரசன்னாவின் கண்களும் இதழ்களும் தாராளமாக விரிந்து கொள்ள, அதைக் கண்டு ஆதர்ஷின் கண்களும் முகமும் கோவத்தில் சுருங்கியது.
அவள் அவர்கள் இருவருக்கும் காபியைக் கொடுத்துவிட்டு நகர, ஜனார்த்தனின் பார்வை அவளை முழுதாக அளவெடுக்கத் தொடங்கியது.
'ம்ம்ம் என் பையனுக்கு ஏத்த பொண்ணுதான். என் வீட்டுக்கு மருமகளா வர முழுத் தகுதியும் இந்தப் பொண்ணுக்கு இருக்கு' என்று மகனின் தேர்வை மனதில் மெச்சிக் கொண்டார் அவர்.
"தன்வி ஒரு நிமிஷம் நில்லு மா" என்ற வீரராகவன் குரலில் அவள் நின்றாள்.
"இவர் பேர் ஜனார்த்தன், வி.வி குரூப் சேர்மன். அது அவரோட பையன் பிரசன்னா." என்று அறிமுகம் செய்து வைத்தார்.
அவள் அவர்கள் இருவரையும் பார்த்து கைகளைக் குவித்து "வணக்கம்" என்றாள் அமைதியாக.
வீரராகவன் திரும்பி ஜனார்தனனைப் பார்த்தவர், "இது என்னோட பேத்தி தன்வி." என்றவர் ஒரு நொடி நிறுத்தி, "உங்களுக்கு இவளை நான் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமே இல்லையில்ல ஜனார்த்தன்... இவ யாருன்னு உங்களுக்கு ஏற்கனவே நல்லாத் தெரிஞ்சிருக்குமே" என்று கேலிக் குரலில் சொல்ல, ஜனார்தனனுக்குப் புரிந்துவிட்டது அவர் எதைப்பற்றிப் பேசுகிறார் என்று.
அதைக்கேட்டு சிரித்த ஜனார்த்தன், "எஸ் மிஸ்டர்.வீரராகவன். இந்தப் பொண்ணு பத்தி நல்லாத் தெரியும். நம்ம பிஸ்னஸ் பீல்ட்ல ஒருத்தரை ஒருத்தர் டாமினேட் பண்ணி அவங்களுக்குக் கிடைக்க வேண்டிய டீல், டெண்டர்ஸ் எல்லாம் புடிக்கிறது ரொம்பச் சாதாரணம். பட்" என்று தன்வியை ஆழ்ந்துப் பார்த்தவர், "உனக்கு நாலு கோடி தரேன், உன்னை நம்பின ஒருத்தனுக்கு துரோகம் பண்ணுன்னு என்கிட்டச் சொன்னால், அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் ஒருவேளை அந்தப் பணத்தை நான் வாங்கி இருப்பேனோ என்னவோ வீரராகவன். பட், இந்தப் பொண்ணு" என்று கண்களை விரித்து ஒரு மிரட்சிப் பெருமூச்சை விட்டவர், "நீங்க ரொம்ப லக்கி மிஸ்டர்.வீரராகவன். இந்த மாதிரி ஒரு பொண்ணு உங்களுக்குக் கிடைக்க. ரொம்ப நல்லாப் பொண்ணை வளர்த்திருக்கீங்க… உங்க குணம் அப்படியே இந்தப் பொண்ணுகிட்ட இருக்கு" என்று பெருமையாகச் சொல்ல, அதைக்கேட்டு கர்வமாக தன் மீசையை முறுக்கி விட்டுக்கொண்ட வீரராகவன், "அதுதான் என் பேத்தி… அவ சாதாரணப் பொண்ணு இல்ல, எங்க வீட்டோட கௌரவம்" என்றார் பெருமையாக.
"எஸ்… இந்தப் பொண்ணு கண்டிப்பா உங்க வீட்டு கௌரவம் தான் வீரராகவன். அந்தக் கௌரவம் எங்க வீட்டுக்கு வந்தால் அது எங்களுக்கும் பெருமையா இருக்கும். அதனால் தான் என் பையனுக்குத் தன்வியைப் பொண்ணு கேட்டு வந்திருக்கேன்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட, வீரராகவனும் ஆதர்ஷும் அதிர்ந்து நிற்க, தன்வியிடம் எந்தவித மாற்றமும் இல்லை. பிரசன்னா அவன் தந்தையோடு வந்தவுடனேயே அவளுக்குப் புரிந்துவிட்டது அவர்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறார்கள் என்று.
அவனுக்குச் சொல்ல வேண்டிய பதிலை அவள் ஏற்கனவே சொல்லிவிட்டாள். அப்படி இருந்தும் மறுபடியும் வீடு தேடி வந்தவனை நினைத்து அவளுக்கு எரிச்சல் தான் வந்தது. தன் முடிவை அவள் ஏற்கனவே தெளிவாகக் கூறி விட்டாள், இனி அவனுக்குத் தகுந்த பதிலைத் தாத்தா சொல்லி விடுவார் என்று நினைத்து அவள் நிதானமாக நின்றிருந்தாள். ஆனால், ஜனார்த்தனன் சொன்னதைக் கேட்ட பிறகு வீரராகவன் மனதிலோ வேறு எண்ணம் தோன்றியதை அவள் அறியவில்லை.
"நீங்க என்ன சொல்றீங்க ஜனார்தனன்?" என்று கேட்டார் வீரராகவன்.
"எஸ் வீரராகவன்… என் மகனுக்கு தன்வியை ரொம்பப் புடிச்சிருக்கு. மேரேஜ் பண்ணா தன்வியைத்தான் பண்ணுவேன்னு முடிவாச் சொல்லிட்டான். புள்ளைங்க ஆசைப்படுறதைச் செய்யறது தானே பெத்தவங்களுக்கு அழகு. அவனும் ஒண்ணும் தகுதி இல்லாத யாரையும் செலக்ட் பண்ணலயே, அறிவு, குணம், அழகுன்னு எல்லாம் இருக்க ஒரு பொண்ணைத்தான் கல்யாணம் செய்ய நினைக்கிறான். அதுல தப்பு ஒண்ணும் இல்லயே? அதான் உடனே பொண்ணு கேட்டு வந்துட்டேன்." என்று அவர் வெளிப்படையாக அனைத்தையும் சொல்லிவிட, வீரராகவனுக்கு அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியவில்லை. அவருக்குத் தன்வியை ஆதர்ஷனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், பேரன் இன்னும் கல்யாண விஷயத்தில் பிடி கொடுக்காமல் இருக்க, அவரும் தான் என்ன செய்வார்? அவர் கொடுத்த மூன்று மாத கால அவகாசமும் முடிந்துவிட்டது. இன்னும் ஆதர்ஷிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதையெல்லாம் யோசித்துப் பார்த்தவருக்கு, தன்விக்கு வந்திருக்கும் இந்த நல்ல வாழ்க்கையை வேண்டாம் என்று மறுக்க மனம் வரவில்லை.
சில நொடிகள் அமைதியாக இருந்தவர் தொண்டையைச் செருமிக் கொண்டு, "நீங்க பொண்ணு கேட்டு வந்ததில் எனக்கு ரொம்பச் சந்தோஷம் ஜனார்த்தன். உங்கப் பையனைப் போல ஒரு நல்ல வரன் தன்விக்குத் தேடினாலும் கிடைக்காது." என்று பேச ஆரம்பித்த அடுத்த நொடி, ஆதர்ஷனுக்குப் புரிந்து விட்டது, தாத்தா என்ன சொல்ல வருகிறார் என்று. அதைப் புரிந்து கொண்டவன் நொடியும் தாமதிக்காமல் பேச்சின் இடைப் புகுந்து, "சாரி மிஸ்டர்.ஜனார்த்தன்… வீடு தேடி வந்த உங்ககிட்ட உண்மையைச் சொல்ல தாத்தா தயங்குறாரு… சோ, நானே சொல்லிடுறேன். ஆல்ரெடி எனக்கும் தன்விக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சு. கூடிய சீக்கிரம் இதை நாங்களே ஒரு பார்ட்டி மாதிரி அரேஞ்ச் பண்ணி எல்லாருக்கும் சொல்லலாம்னு இருந்தோம். பட்… அதுக்குள்ள நீங்க…" என்றவனை வீரராகவன் அதிர்ந்து பார்க்க, தன்வியிடம் அதே அமைதி. அவளிடம் அப்போதும் எந்தவித மாற்றமும் இல்லை.
"இதை ஏன் ஆதர்ஷ் நீங்க நேத்தே சொல்லல?" என்று கேட்ட பிரசன்னாவின் குரலில் அத்தனை ஏமாற்றம்.
"ஐ ஆம் சாரி பிரசன்னா, உங்க புரபோசலைத் தன்வி வேணாம்னு சொல்லிட்டான்னு நீங்களே சொன்னீங்க… சோ, நீங்க அதை அப்படியே விட்டிருவீங்கன்னு நெனச்சேன்… ஆனா, இப்படி நீங்க வீடு தேடிப் பொண்ணு கேட்டு வருவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல... ஐ ஆம் ரியலி சாரி" என்றவன் கேட்ட மன்னிப்பில் உண்மையில் துளிகூட வருத்தம் இல்லை. 'எவ்ளோ தைரியம் இருந்தா என் வீட்டுக்கு வந்து என்னோட தன்வியைப் பொண்ணு கேப்ப நீ' என்ற கோவம் தான் நிறைந்து இருந்தது.
இத்தனையும் நடக்க தன்வி அமைதியாகவே இருந்தது ஜனார்தனனை உறுத்த, "என்னம்மா தன்வி, எல்லாரும் இங்க உன்னைப்பத்தி, உன் மேரேஜ் பத்திப் பேசிட்டு இருக்கோம். ஆனா, சம்பந்தப்பட்ட நீ ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அமைதியாவே இருக்கியே." என்று புருவம் உயர்த்தியவர், "ஏன் ஆதர்ஷனை மேரேஜ் பண்ணிக்க உனக்கு விருப்பம் இல்லயா... உன் தாத்தாவுக்காகச் சம்மதிச்சியா?" என்று சிரித்துக்கொண்டே விளையாட்டாகக் கேட்பது போல் கேட்ட ஜனார்த்தன் குரலில் அத்தனை எதிர்பார்ப்பு.
வந்ததில் இருந்து அமைதியாக இருந்த தன்வியைப் பார்த்தவருக்கு, எங்கு வளர்ந்த பாசத்தை காட்டி, பிடிக்காத திருமணத்திற்குத் தாத்தாவும் பேரனும் அவளைக் கட்டாயப் படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் ஜனார்த்தனுக்கு. அப்படி எதுவும் இருந்தால் அதைப் பயன்படுத்தி தன் மகனுக்குத் தன்வியை திருமணம் முடித்து விடலாம் என்ற எண்ணத்தில் அவர் கேட்க, அவர் கேட்டதின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட ஆதர்ஷன் வந்த கோவத்தைப் பல்லைக் கடித்து அடக்கிக் கொள்ளப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான்.
வீரராகவனுக்கும் அவர் கேட்ட கேள்வியில் உள்ளுக்குள் எரிச்சல் தான். ஆனால், இதற்குப் பதில் சொல்ல வேண்டியவள் தன்வி தான் என்பதால் அவர் அமைதியாக இருந்தார்.
இதுவரை அமைதியாக இருந்த தன்வி, அவர் வீரராகவனைத் தாழ்த்திப் பேசியதும் பொங்கி விட்டாள்.
"என் விருப்பம் இல்லாமல் இந்த வீட்டுல ஒரு சின்ன துரும்பு கூட அசையாது சார். இந்த வீட்டைப் பொறுத்தவரை மட்டும் இல்ல, இவங்க ரெண்டு பேரைப் பொறுத்த வரையிலுமே இங்க நான் வச்சது தான் சட்டம். என்னை மீறி இங்க ஒண்ணும் நடக்காது. அந்த அளவுக்கு என்னோட விருப்பு, வெறுப்புக்கு மரியாதை கொடுக்கிறவங்க இவங்க ரெண்டு பேரும். அப்படி இருக்கும்போது கல்யாணம் மாதிரி வாழ்க்கையின் ஒரு முக்கியமான முடிவில் இவங்க என்னோட விருப்பத்தைக் கேக்காமல் செய்வாங்கன்னு நீங்க நினைக்குறீங்களா சார்? நான் இவ்ளோ நேரம் அமைதியா இருந்ததுக்குக் காரணம், நான் புடிக்கலன்னு சொன்ன பிறகும், இப்படி உங்களையும் கூட்டிட்டு வீடு தேடி வந்து பொண்ணு கேட்டுட்டு இருக்காரே உங்க பையன்" என்று பிரசன்னாவைச் சுட்டிக் காட்டியவள், "இவரு செஞ்ச வேலையால் தான், உண்மை தெரிஞ்சால் உங்க மனசு கஷ்டப் படுமேன்னு நினைச்சு தான் நான் அமைதியா இருந்தேன்" என்றவள் வார்த்தையில் இருந்த பணிவு அவள் குரலில் துளியும் இல்லை. தன் தாத்தாவைத் தவறாகப் பேசியவருக்கு இந்த மரியாதை போதும் என்று நினைத்து விட்டாள் அவள்.
தன்வி பேசிய விதமே அவளின் மனதைத் தெளிவாகச் சொல்ல, சட்டென்று எழுந்து கொண்ட ஜனார்த்தன், "ஐ ஆம் சாரி வீரராகவன். விஷயம் தெரியாமல் வந்துட்டோம். இட்ஸ் மை ஃபால்ட். உங்கிட்டப் பேசிட்டு வந்திருக்கணும்." என்று இழுத்து மூச்சு விட்டவர், "இவங்க ரெண்டு பேர் மேரேஜ்க்கு கண்டிப்பா நீங்க என்னை அழைக்கணும், மறந்துடாதீங்க வீரராகவன்" என்றார் கம்பீரமாக.
"கண்டிப்பா ஜனார்த்தன், நீங்க நிச்சயம் கல்யாணத்துக்கு வரணும்" என்று வீரராகவன் சொல்ல, "அப்ப நாங்க கிளம்புறோம்" என்று மூவரிடமும் சொல்லிவிட்டுச் செல்ல, பிரசன்னா திரும்பி தன்வியைப் பார்த்தவன், "விஷ் யு ஹாப்பி மேரீட் லைஃப்" என்றுவிட்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்.
அவர்கள் சென்ற அடுத்த நொடி, "ஆதர்ஷ், உங்ககிட்டப் பேசணும் உள்ள வாங்க" என்றவர் வேகமாக உள்ளே சென்றுவிட, அவர் என்ன கேட்கப் போகிறார் என்று ஆதர்ஷனுக்குத் தெரியும். அதற்கு என்ன பதில் சொல்வதென்று தான் புரியவில்லை அவனுக்கு. எங்கே பிரசன்னா, தன்வி திருமணத்திற்குத் தாத்தா சரியென்று சொல்லி விடுவாரோ என்ற பதட்டத்தில் தான் தன்னையும் மறந்து சட்டென ஆதர்ஷ் தனக்கும் தன்விக்கும் திருமணம் என்று சொல்லி விட்டான். இப்போது வரை அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்று அவனுக்கே விளங்கவில்லை. அந்த நேரத்தில் வாய்க்கு வந்ததைப் பேசி வைத்தான் என்றும் அவனால் நினைக்க முடியவில்லை. இதைவிடப் பெரிய பெரிய பிரச்சனைகளைச் சமாளித்தவனுக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்லையே. அப்படி இருக்க, தாத்தா முன்னிலையில் அவன் தன்வியுடனான திருமணத்திற்குச் சம்மதம் என்பது போல் சொல்லி விட்டானே...
மனதில் இல்லாமல் அப்படி ஒரு வார்த்தை அவனிடம் இருந்து வந்திருக்காது என்று மட்டும் அவனுக்குப் புரிந்தது. ஆழ்ந்து மூச்செடுத்துத் தன்னை நிதானித்தவன் உள்ளே சென்று தாத்தாவின் எதிரில் அமர்ந்தான்.
வீரராகவன் அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவர், "தன்வி நீயும் உக்காரு" என்றதும் அவளும் ஆதர்ஷ் அருகில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.
"ஆதர்ஷ் விஷயம் இருக்கட்டும், முதல்ல நான் கேக்குற கேள்விக்கு நீ பதில் சொல்லு தன்வி" என்றவர் என்ன கேட்கப் போகிறார் என்று அறிந்த தன்வி, "அந்தப் பிரசன்னா என்கிட்டப் ப்ரபோஸ் பண்ணது உண்மை தான் தாத்தா, நான் எனக்கு விருப்பம் இல்லைனு அன்னைக்கே தெளிவாச் சொல்லிட்டேன். இன்னைக்கு அவரும், அவர் அப்பாவும் இங்க வந்திலும் பேசினதிலும் எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்ல தாத்தா." என்றாள் தெளிவாக.
"எனக்குத் தெரியும் தன்வி, அப்படி அவங்க வருவது உனக்குத் தெரிஞ்சிருந்தால் அதை நீ கண்டிப்பா எனக்குச் சொல்லி இருப்ப… அதுபத்தி எனக்கு எந்தக் கேள்வியோ வருத்தமோ இல்ல, நான் கேக்க வருவது ஜனார்த்தன் கேட்டதைப் பத்தி தான். அதில் உன்னோட அபிப்ராயம் என்னன்னு எனக்குத் தெரியணும்" என்றார்.
"இதுல அவ சொல்லித் தெரிய என்ன தாத்தா இருக்கு. அவதான் பிரசன்னா கேட்டதுமே வேணாம்னு சொல்லிட்டாளே…" என்ற ஆதர்ஷனைப் பார்த்து நிறுத்து என்பது போல் கைகாட்டியவர், "இதுக்கான பதிலை நான் தன்விகிட்ட இருந்து எதிர் பார்க்கிறேன் ஆதர்ஷ். சோ, நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு" என்றவர் திரும்பி தன்வியைப் பார்த்து, "சொல்லு தன்வி, நீ அந்தப் பையனை வேணாம்னு சொல்லக் காரணம் என்ன? அவனைப் புடிக்காம வேணாம்னு சொன்னியா? இல்ல, என்னோட ஆசைக்காக நீ இந்த முடிவுக்கு வந்தியா?" என்று நேரடியாகக் கேட்டுவிட, அவரைக் கேள்வியாகப் பார்த்தாள் தன்வி.
"இல்ல தன்வி, நான் கேக்குறது நான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்ய ஆசைப்பட்டதுனால நீ அந்தப் பையனை வேணாம்னு சொல்றியா இல்ல, உண்மையில் அந்தப் பையனை உனக்குப் பிடிக்கலியான்னு கேக்குறேன். ஒருவேளை அதுதான் காரணமா இருந்தா உடைச்சு உண்மையைச் சொல்லிடு தன்வி… என் ஆசைக்காக உன்னோட வாழ்க்கையை நீ தியாகம் பண்ணக் கூடாது. சோ, உன் மனசுல என்ன இருக்குன்னு உடைச்சு சொல்லிடு" என்றார் வீரராகவன்.
ஒரு நிமிடம் தாத்தாவையும் ஆதர்ஷனையும் மாறிமாறிப் பார்த்தவள், "நான் அன்னைக்குச் சொன்னதைத் தான் இன்றைக்கும் சொல்றேன் தாத்தா. எனக்குன்னு தனியாக எந்த முடிவும் இல்லை, நீங்க எடுக்கிறது தான் என்னோட முடிவும்." என்றாள் உறுதியாக.
"அப்ப நான் அந்தப் பிரசன்னாவைக் கல்யாணம் செஞ்சுக்கச் சொன்னா நீ அதுக்குச் சம்மதிப்பியா?" என்று தாத்தா ஒரு பெரும் இடியை இறக்க, அதைக் கேட்ட ஆதர்ஷன் இதயமோ தாளம் தப்பித் துடிக்கத் தொடங்கிவிட, தன்வியிடமோ அதே அமைதி தான்.
"சொல்லு தன்வி, கல்யாணம் செஞ்சுப்பியா?" என்று மீண்டும் கேட்க, அவரைப் பார்த்து மென்மையாகச் சிரித்தவள், "உங்க முடிவு தான் என் முடிவு, அதுல எந்த மாற்றமும் இல்ல. அதே மாதிரி என்னோட தாத்தா எனக்குப் பிடிக்காத, விரும்பாத எந்த ஒரு விஷயத்தையும் என்மேல திணிக்க மாட்டாருங்கிறது என்னோட நம்பிக்கை, அதுலயும் எந்த மாற்றமும் இல்ல" என்று தன் மனதை அழகாகச் சொன்னவளைத் தாத்தா புன்னகையுடன் பார்க்க, ஆதர்ஷனோ ஒரு நிம்மதியோடு அவளைப் பார்த்தான். ஒரு நிமிடம் எங்கு அவள் தாத்தாவின் முடிவுக்குச் சம்மதம் சொல்லி விடுவாளோ என்று அவன் உள்ளம் துடித்த துடிப்பை அவன் தானே அறிவான். அவன் பயத்தை ஒரு வார்த்தையில் காணாமல் போகச் செய்திருந்தாள் பெண்ணவள்.