விழி வழி காதல் நுழைந்ததடி 13

விழி 13


அன்று இரவெல்லாம் பிரசன்னா, தன்வியைக் கல்யாணம் செய்யக் கேட்டது பற்றியே யோசித்துக் கொண்டிருந்த ஆதர்ஷனுக்கு அவன் சொன்னதை நினைத்து அத்தனைக் கோவம். 


"ஒரு நாள்! ஒரே ஒரு நாள் பாத்ததுல இவருக்குத் தன்வியைப் புடிச்சிப் போச்சாம்… கல்யாணம் பண்ணா அவளைத் தான் பண்ணுவேன்னு முடிவே பண்ணிட்டாராம்… இவன் யாரு முடிவு பண்ண? தன்வி விஷயத்தில் முடிவு செய்யும் உரிமையை இவனுக்கு யாரு கொடுத்தது, இடியட்!" என்று வாய் ஓயாமல் அவனைத் திட்டிக்கொண்டே இருந்தவன், விடியும் வேளையில் தான் தூங்கத் தொடங்கி இருந்தான். 


யாரோ கதவு தட்டும் ஓசை கேட்டு மெல்ல விழிகளைத் திறந்தவனுக்கு, சரியான தூக்கம் இல்லாததால் கண்கள் எல்லாம் எரிந்தது‌. கண்களைக் கசக்கியபடி நிமிர்ந்து நேரத்தைப் பார்த்தான். 


மணி எட்டு என்று சொன்னது கடிகாரம்.


'யாரு கதவு தட்றது‌.?" என்று யோசித்தவனுக்கு, 'ஒருவேளை தன்வியாக இருக்குமோ' என்ற எண்ணம் வந்த உடனே, 'இல்லயே… இன்னைக்கு கவர்ன்மென்ட் ஹாலிடேவாச்சே ஆஃபிஸ் லீவ் தான்… ஆஃபிஸ் லீவ் டைம்ல தன்வி இவ்ளோ சீக்கிரம் எழுப்ப மாட்டாளே!' என்று யோசித்தபடியே கதவைத் திறந்தவன் அங்கு நின்ற தன்வியைப் பார்த்து அப்படியே உறைந்து நின்றான்.


"தாத்தா ஊர்ல இருந்து வந்துட்டாரு சார்‌. உங்களை ரெப்ரெஷ் ஆகிட்டுக் கீழ வரச் சொன்னாரு" என்றவளின் வார்த்தைகளைக் கவனிக்காமல் அவள் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷ். 


காலையிலேயே தலைக்குக் குளித்து முடித்து, ஈரக்கூந்தலை வாரி இரு பக்கமும் கொஞ்சமாக முடியை எடுத்து மத்தியில் க்ளிப் போட்டிருந்தவள், நெருக்கமாகக் கோர்த்த மல்லிகைச் சரத்தைத் தலையில் சூடி இருந்தாள். அதில் ஒரு பூச்சரம் அவள் ஒரு பக்கத் தோளை வருடியபடி விழுந்து கிடக்க,  சில அடங்காத முடிகள் அவள் குண்டுக் கன்னத்தில் விழுந்து புரண்டு காற்றுக்குத் தக்கபடி அசைந்து விளையாடிக்கொண்டு இருந்தது. ஏனோ இன்று எப்போதும் போல் இல்லாமல் மெல்லிய கரை கொண்ட இளம் சிவப்பு நிறப் பட்டுப் புடவை கட்டி இருந்தாள் தன்வி. கழுத்தில் மெல்லிய செயின், அதில் ஆதர்ஷ் அவளுக்குப் பரிசாகக் கொடுத்த A என்ற எழுத்திலான டாலர், காதில் குட்டி ஜிமிக்கி, புருவங்கள் மத்தியில் சிறிய மெரூன் நிறப் பொட்டு வைத்திருந்து, அதற்கு மேல் சீறு கீற்றாக விபூதி வைத்திருந்தாள். கண்களில் லேசாக மையிட்டு, உதட்டில் பிங்க் வண்ணத்தில் லிப் பாம் போட்டிருந்தாள். எங்கோ வெளியே செல்லத் தயாராகி இருந்தாள் போல.‌‌ 


கதவைத் திறந்து எதுவும் பேசாமல் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷனையே அவள் யோசனையாகப் பார்த்தபடி இருக்க அவனோ, 


அவள் நெற்றியில் வழியத் தொடங்கிய வியர்வைத் துளி அவள் மூக்கின் மீது இறங்கி அப்படியே அவள் மேல் இதழில் இறங்கிக் கீழ் உதட்டில் உருண்டு, அப்படியே இறங்கிக் கழுத்தில் தவழ்ந்து, அவள் புடவை மாராப்பின் உள்ளே சென்று மறைவதை, இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை அவள் செவ்விதழில் மையமிட்டு இருந்தது.


அவன் அமைதியாக நிற்பதைப் பார்த்து, "சார்… சார்ர்ர்" என்று சத்தமாக அழைத்த தன்வியின் குரலில் தலையை உலுக்கி நிகழ்வுக்கு வந்தவனை விசித்திரமாகப் பார்த்தாள் தன்வி‌. 


தன்வியின் குரலில் நிகழ்வுக்கு வந்தவனுக்கு அவள் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை‌. உள்ளுக்குள் ஏதோ போல் ஒர் உணர்வு. அவனுக்கே அது புதிதாக இருந்தது. வேகமாக அவள் முகம் பார்க்காமல் அவளுக்கு முதுகைக் காட்டியபடித் திரும்பி நின்றவன், "நீ போ தன்வி, நான் வரேன்" என்றவன் குரலில் தடுமாற்றம். வேகமாகக் கதவை மூடிக் கொண்டான்.


தன்வி இதழ்களைப் பிதுக்கியபடி ஒன்றும் புரியாமல் அங்கிருந்து நகர்ந்தவள் மனதில், 'என்னாச்சு இவருக்கு? அந்தப் பார்வை, ப்பாஆஆஆ…! கடவுளே, என்ன பார்வை அது? இதுவரை நான் இவரை இப்படிப் பார்த்ததே இல்லயே' என்று தன்வி குழம்பிப் போக, இங்கு ஆதர்ஷனுக்கு இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது.


மூடிய கதவின் மேல் சாய்ந்து நின்றவன், ‘காட்…!‌ என்ன நடக்குது எனக்குள்ள? ஏன் நான் அவளை அப்படிப் பார்த்துட்டு இருந்தேன். அ…அவளை எப்படி நான்…? அவளை நான் எப்படி…? எனக்கு அவமேல எந்த ஃபீலிங்கும் இல்ல. வரவும் வராது, வரக் கூடாது" என்றவனுக்கு அவன் இந்தியா கிளம்பும் போது ஆலன் சொன்னது நினைவுக்கு வந்தது. 


"நீ பேபி ஏஞ்சலை மேரேஜ் பண்ணிக்க மேன்" என்ற ஆலனை அவன் முறைத்துப் பார்த்தான்.


"ஆர் யூ அவுட் ஆஃப் யூவர் மைண்ட் ஆலன். என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசிட்டு இருக்கியா நீ… நான் மேரேஜ் பத்தி எல்லாம் யோசிச்சது கூட இல்ல" என்றான் அழுத்தமாக. 


"இதுவரை இல்லாம இருக்கலாம், பட் இனிமே தோணலாம் இல்ல" என்றான் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அழுத்தமாக.


"நோ சான்ஸ் ஆலன். இப்ப நான் போறது அவளுக்கு ஒரு நல்ல லைஃப் அமைச்சுக் கொடுக்க தான், அதுக்கு மட்டும் தான்… அதுவும் எதுக்காகன்னு உனக்கு நல்லாத் தெரியும்" என்றான் முறைப்பாக.


"இது வரைக்கும் நீ ஏஞ்சலை அப்படி யோசிச்சது இல்ல தான், பட் இனிமே…" என்று இழுக்க, "இனிமேலும் அப்படித் தான். தேவையில்லாத உன் தாட்ஸ் எல்லாத்தையும் குப்பையில் போட்டுட்டு, போய் நான் சொன்னதைச் செய். நமக்கு டைம் அதிகம் இல்ல, சீக்கிரம் டிக்கெட்ஸ் போடு" என்று அன்று ஆலனுடன் மல்லுக்கு நின்றவனுக்கு இப்போது ஆலன் சொன்னதை நினைத்துப் பார்க்க உள்ளுக்குள் ஒரு தடுமாற்றம்‌.


"எனக்குத் தன்வியைப் புடிக்கும் தான், இன்பேக்ட் ரொம்பப் புடிக்குது தான். பட் இந்த மேரேஜ் எல்லாம் வாய்ப்பே இல்ல, நான் எப்படி அவளைக் கட்டிக்க முடியும்? அதெல்லாம் நடக்கவே நடக்காது" என்று அழுத்தமாகச் சொன்னவன், மனக்கண் முன் தோன்றி தன்வியின் முகம் அவனைத் தடுமாற வைத்தது.


"நோ நோ நோ! இதெல்லாம் சரியில்ல, இத்தனை நாள் இல்லாமல் இப்ப என்ன திடீர்னு உனக்கு இந்த மாதிரி பீலிங்ஸ் எல்லாம் வருது. அதுவும் குட்டிப் பாப்பா மேல. இதெல்லாம் தப்பு… அவனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது அவ்ளோதான், எல்லாம் நாசமாப் போயிடும். அவளை அப்படிப் பார்க்கக் கூடாது. இல்ல, இல்ல… இனிமே அவளை நேராப் பார்க்கவே கூடாது. வெரி டேஞ்சரஸ் ஐஸ் அண்ட் லிப்ஸ்" என்று நினைத்தவன் தீர்மானம் எல்லாம் கீழே சென்ற சில நிமிடங்களில் நொறுங்கப் போகிறது என்று அறியாமல் குளித்து தயாராகிக் கீழே வந்தான்.


சாப்பாட்டு மேசையில் வீரராகவன் அமர்ந்திருக்க, அவருக்கு உணவைப் பறிமாறிக் கொண்டிருந்தாள் தன்வி.


ஆதர்ஷ் வருவதைப் பார்த்து புன்னகைத்த வீரராகவன், "வா ஆதர்ஷ், வா வா… உக்காரு" என்றார் சிரித்த முகத்துடன்.


ஆதர்ஷ் அவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவர் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். தவறியும் அவன் பார்வை தன்வியின் பக்கம் திரும்பவில்லை.


"சாரி ஆதர்ஷ், நீ ஊர்ல இருந்து வந்த அன்னைக்கு என்னால உன்னைப் பார்க்க முடியல, சரி காலையில் பார்க்கலாம்னு நினைச்சேன். பட்… எஸ்டேட்ல ஒரு பிரச்சனை உடனே போகவேண்டிய சூழ்நிலை… சாரி மை பாய்" என்று வருந்தியவரைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து, "இட்ஸ் ஓகே தாத்தா, ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட்" என்றவன் தன்வி பறிமாறிய உணவில் கவனத்தைத் திருப்பினான்.


"அப்புறம், நீ போன விஷயம் என்னாச்சு ஆதர்ஷ். நம்ம பிஸினஸ் எல்லாம் எப்படி இருக்கு? அங்க எல்லாம் ஓகே தான?" என்று ஒரு எதிர்பார்ப்போடு ஆர்வமாகக் கேட்க, அவரின் ஆர்வத்தின் உள்ளர்த்தம் புரிந்து மென்மையாகச் சிரித்தவன், "எல்லாம் நல்லா தான் தாத்தா போயிட்டு இருக்கு… கூடிய சீக்கிரம் நம்ம எல்லாரும் அங்க போயிடலாம், அதுக்குத் தேவையான எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் நடந்துட்டு இருக்கு" என்றவனின் பார்வை இப்போது தன்வி மீது படிய, அவளிடம் எந்தவித மாற்றமும் இல்லை.


"தன்வி நான் சொன்னது உனக்குக் கேட்டுச்சா? இல்லயா? ஒண்ணும் சொல்லாம இருக்க? எல்லாரும் அங்க போகப் போறோம். நீ என்ன சொல்ற?" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள், "நீங்க ஏதோ உங்க ஃபேமிலி மேட்டர் பேசிட்டு இருக்கீங்க சார், இதுல நான் சொல்ல என்ன இருக்கு?" என்று சொல்ல, அதைக் கேட்டு வீரராகவனுக்கு அதிர்ச்சி என்றால், ஆதர்ஷனுக்கு ஆத்திரம்.  


"ஏய்…! இப்ப நீ என்ன தான்டி சொல்ற…? இது எங்க ஃபேமிலி மேட்டர்னா, அப்ப நீ யாருடி எங்களுக்கு?" என்றான் கோவமாக.


"ஆதர்ஷ்… எதுக்கு இப்ப அவகிட்ட இவ்ளோ ஹார்ஷாப் பேசறே" என்று வீரராகவன் அதட்ட, "நீங்க சும்மா இருக்க தாத்தா… நானும் வந்த நாள்ல இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன். இவ என்னை ரொம்ப எரிச்சல் பண்ணிட்டு இருக்கா" என்றவன் மீண்டும் தன்வியிடம் திரும்பி, "சொல்லுடி, நீ யாரு எங்களுக்கு?" என்று கேட்டு அவளை அதிர வைக்க நினைக்க, "நான் உங்களுக்கு யாரும் இல்லதான் சார்" என்று சொல்லி அவனை அடியோடு அதிர வைத்து விட்டாள் அவள்.


"தன்வி என்ன பேச்சிது?" என்று வீரராகவன் அதட்ட, "சாரி தாத்தா… நான் அப்படிப் பேசினது தப்பு தான். ஆனா, அது தானே உண்மை." என்றவள் விழிகள் கலங்கியபடி சமையலறைக்குள் ஓடிவிட, ஆதர்ஷனைத் தீவிரமாக முறைத்தபடி இருந்தார் வீரராகவன்.


அவர் பார்வையின் தீவிரத்தை உணர்ந்த ஆதர்ஷ் மானசீகமாகத் தன் தலையில் அடித்துக் கொண்டவன், 'சரியான நேரம் பார்த்துக் கரெக்டா என்னைப் போட்டுக் குடுத்துட்டா… இனி இவரை வேற சமாளிக்கனும். ஓ காட்' என்று மனதிற்குள் புலம்பினான்.


"என்னடா பண்ண குழந்தைய?" என்று வீரராகவன் அடிக்குரலில் சீற, 'ம்க்கும்… அப்படியே பச்சக் கொழந்த, வாயில் விரல் வச்சாக் கூட கடிக்கத் தெரியாது பாரு' என்று மனதில் கவுண்டர் கொடுத்தவன், "நான் எதுவும் பண்ணல தாத்தா" என்றான் அப்பாவியாக.


"நீ எதுவும் செய்யாம, அவ ஏன்டா அப்படிப் பேசிட்டுப் போறா… கொழந்த குரலே சரியில்ல, நானும் கொஞ்ச நாளாப் பார்த்துட்டு தான் இருக்கேன். அவ முகமே சரியில்ல. சரியான சாப்பாடு இல்ல, தூக்கம் இல்ல, எப்பவும் ஏதோ மாதிரியே முகத்தை வச்சிட்டு இருக்கா… அவ சிரிச்சுப் பார்த்து எவ்வளவு நாளாச்சு தெரியுமாடா உனக்கு? ‌ஒழுங்கு மரியாதையாச் சொல்லு… என்னாச்சு அவளுக்கு? நீ அவ மனசு நோகுற மாதிரி எதுவும் சொன்னியா?" என்று குரலில் அனல் தெறிக்க கேட்க, இதற்கு மேல் உண்மையை  மறைக்க முடியாது என்று நினைத்த ஆதர்ஷ், நேற்று செல்வம் சொன்னதை மட்டும் சொல்லிவிட்டு அவனுக்கும் தன்விக்கும் இடையில் நடந்த அனைத்தையும் மறைத்து விட்டான்.


"டேமிட்… யாருடா என் தன்வியைப் பத்தி தப்பாப் பேசினது? எவ்ளோ தைரியம் இருந்தா இந்த வீரராகவன் பேத்தியைப் பத்தி தப்பு தப்பாப் பேசி இருப்பாங்க…" என்று ஆத்திரமாய் எழுந்தவர், "எம் பேத்திய தப்பாப் பேசின ஒருத்தரும் இருக்கக் கூடாது, எல்லாரையும் உடனே வேலைய விட்டுத் தூக்கிடு" என்று கொதிக்க, ஆதர்ஷ் ஜூஸ்சை குடித்தபடி "நேத்தே எல்லாரையும் தூக்கிட்டேன்" என்ற பிறகு தான் அமைதி ஆனார் வீரராகவன்.


"ச்சீ… என்ன ஜென்மங்கள் இதுங்க? அவ முகத்தைப் பார்த்த அப்புறமும் எப்படி இப்படி எல்லாம் பேச முடியுது? பாவம், அதைக்கேட்டு அவ எவ்ளோ துடிச்சுப் போயிருப்பா." என்று கண்கள் கலங்கியவர், "தன்வி இங்க வா" என்று சமையல் அறையைப் பார்த்து சத்தமாக அழைத்தார்.


தன்வி தலை குனிந்தபடி மெதுவாக நடந்து வந்து அவர் முன்னால் நின்றாள்.


"சோ, இதனால் தான் நீ மறுபடியும் அவுட் ஹவுஸ்க்கு போயிருக்க… ரைட்?" என்று கேட்க, தன்வி மெல்ல விழிகளை மட்டும் பக்கவாட்டில் திருப்பி ஆதர்ஷனனை ஒரு பார்வை பார்த்தவள், "ஆமாம்" என்று தலையாட்டினாள். ஆனால், அது உண்மை இல்லையென்று இருவருக்கும் தெரியும்.


அலுவலகத்தில் பேசிய பேச்சுக்கள் தன்வியைப் பாதித்தது உண்மை தான். ஆனால், அவள் வீட்டைவிட்டுச் செல்ல ஆதர்ஷனின் ஒதுக்கம் தான் காரணம் என்று இருவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், அதை வீரராகவனிடம் சொல்ல முடியாது என்பதால் தன்வி அமைதியாக இருந்தாள்.


"இங்க பாரு தன்வி… நீ என் பேத்தி, இந்த வீட்டில் என் சொத்தில் என் வாரிசுக்கு எவ்ளோ அதிகாரமும் உரிமையும் இருக்கோ, அதே அளவு அதிகாரமும் உரிமையும் உனக்கும் இருக்குமா… அதை முதல்ல நீ உன் மனசுல பதிய வை… இனிமே யாரும் உன்னைத் தப்பாப் பேசினா, அடுத்த நிமிஷம் அவங்க மூஞ்சில அடிச்ச மாதிரி நான் வீரராகவன் பேத்தி, எனக்கு அவர் சொத்து மேல மட்டும் இல்ல, அவர் மேலயும் முழு உரிமை இருக்குன்னு தைரியமாப் பதில் சொல்லு… அப்ப தான் நீ நான் வளர்த்த பொண்ணு. அதை விட்டுட்டு இப்படி அடுத்தவங்க பேச்சைக் கேட்டு நீ எங்களை விட்டு விலகிப் போற வேலை எல்லாம் வச்சிக்காத" என்றவர் திரும்பி ஆதர்ஷனைப் பார்த்தவர், "உனக்கும் தான் ஆதர்ஷ், நீ என் பேரன் தான். ஆனா, உன்னைவிட தன்விக்கு தான் இந்த வீட்டில் எல்லா அதிகாரமும் இருக்கு. சோ, நீயும் இனிமே அவகிட்ட எந்த வம்பும் செய்யக் கூடாது… புரிஞ்சிதா?" என்று கண்டிப்பான குரலில் சொல்ல, அவன் தன்வியின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "எஸ் தாத்தா, அவதான் இந்த வீட்டோட உயிர்நாடி. அவ சிரிப்பு தான் இவ்ளோ நாளா எல்லாரையும் உயிர்ப்போட வச்சிருக்கு. அது இல்லாமப் போனா என்னால அதைத் தாங்கவே முடியாது, அதை நான் நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன். அவ முகம் வாடினால் என்னால நிம்மதியா இருக்க முடியாது தாத்தா. இனி வாழ்க்கை பூரா அவ மனசு நோகாமல் நான் பார்த்துக்குறேன்." என்றான் உணர்ந்து.


தன்வி சட்டெனத் திரும்பி, ஒரு நிமிடம் ஆதர்ஷனன் முகத்தை உற்றுப் பார்த்தவள், அடுத்த நொடி எதையோ நினைத்துக் கசப்பாகச் சிரித்துக் கொண்டாள். அதை வீரராகவன் கவனிக்கவில்லை என்றாலும் ஆதர்ஷன் கண்ணிற்கு அது தப்பவில்லை. அவள் மனதின் காயம் அவ்வளவு சீக்கிரம் ஆறாது என்று அவனுக்கும் புரிந்தது.


வீரராகவன் ஏதோ பேச வர, அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. 


வீரராகவனும், ஆதர்ஷனும் எழுந்து வந்து யாரென்று பார்க்க, அங்கு நின்றவனைப் பார்த்து ஆதர்ஷனின் புருவம் இடுங்கி கண்கள் சுருங்கியது.