விழி வழி காதல் நுழைந்ததடி 11
விழி 11
தன்வி சொல்லி விட்டுச் சென்ற வார்த்தையைக் கேட்டுத் திகைத்து நின்றவனுக்கு அவளிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் யாவும், அவன் ஒதுக்கத்தின் விளைவு என்று தெளிவாகப் புரிந்தது. அதே சமயம் அவனின் சிறு ஒதுக்கம் அவளை ஒரேயடியாக மாற்றியுள்ளதா? என்ற எண்ணமும் எழாமல் இல்லை.
எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பவளின் இதழ்கள், இன்று சிரிப்பை உதிர்த்து உலர்ந்து இருந்தது. சாக்லேட்டைப் பார்த்ததும் கண்கள் பளபளக்க, குழந்தை போல் துள்ளிக் குதிக்கும் தன்வி இன்று ஒரேயடியாகத் தொலைந்து போயிருந்தாள். மீண்டும் அந்தக் குழந்தைக் குமரியின் குறும்புப் புன்னகையைப் பார்க்க அவன் மனம் வெகுவாக ஏங்கியது.
தன்வி சென்றதும் தலையைப் பிடித்துக் கொண்டு திரும்பியவனின் பிம்பம் அங்கிருந்த கண்ணாடியில் விழ அதன் முன் வந்து நின்றவன், ‘ஓ மை காட்! ஆதர்ஷ், என்ன பண்ணி வச்சிருக்க நீ? அவ மனசு உடஞ்சு போயிருக்கா. எல்லாம் உன்னால, நீ செஞ்சது ரொம்பப் பெரியத் தப்பு, அட்லீஸ்ட் ஒரு முறையாவது அவகிட்டப் பேசி இருக்கணும். உன்னோட ஒதுக்கம் அவளை முழுசா உடைச்சிடுச்சு... அவ இப்ப உன்னோட பழைய குட்டிப் பாப்பா தன்வி இல்ல, மொத்தமா மாறி நிக்குறா… அவ மனசுல என்ன நினைக்கிறான்னு புரிஞ்சிக்கவே முடியல. அடுத்து என்ன பண்ணப் போறான்னு நினைக்கவே பயமா இருக்கு" என்றவன், "ஆஆஆஆ" என்று முடியைப் பிடித்துக் கொண்டு கத்தியவன், "இப்ப என்ன பண்ணி இவளைச் சரி பண்ணப் போறேன் நான்…" என்று கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு புலம்பியவனுக்கு அவளைப் பற்றி நினைக்கும் போதே நெஞ்சமெல்லாம் வலித்தது.
அடுத்த நாள் காலை சீக்கிரமே கிளம்பிக் கீழே வந்தவன் பார்வையில், அங்கு உணவு மேசையில் காலை உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த தன்வி விழுந்தாள்.
எப்போதும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் புடவை கட்டுபவள், ஏனோ இன்று புடவை கட்டி இருந்தாள். அந்த மெரூன் வண்ணச் சில்க் காட்டன் புடவை அவள் உடல் வளைவுகளில் அழகாகப் பொருந்தி இருக்க, நீளமான முடியை அழகாய் வாரி, மேலே மட்டும் கிளிப் போட்டு அடக்கி வைத்து, மீதி முடியைத் தோளில் தவழ விட்டிருந்தாள். வழக்கம் போல் முகத்தில் எந்தப் பெரிய ஒப்பனையும் இல்லை. வழக்கமாகப் போடும் காம்பேக்ட் பவுடர் மட்டும் போட்டு, நடு நெற்றியில் சிறிதாகச் சிவப்புப் பொட்டு வைத்திருந்தாள். உதட்டில் பிங்க் வண்ணத்தில் லிப் பாம் அவ்வளவு தான் அவளின் ஒப்பனை. அதிலேயே அழகாய் ஜொலித்தாள் பெண்ணவள்.
மெதுவாகப் படிகளில் இறங்கி வந்தவன் காலடி ஓசையில் அவன் வருவதை உணர்ந்து கொண்டவள், உணவை எடுத்து தட்டில் பறிமாற, அவன் சேரில் உட்கார்ந்து அவள் முகத்தை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவனுக்கு அவள் இதழ்கள் புன்னகை இல்லாமல் வெறுமையாக இருந்ததைப் பார்த்து லேசாக வலித்தது.
"என்ன அதிசயமா இன்னைக்குப் புடவை எல்லாம் கட்டி, மேக் அப் எல்லாம் போட்டிருக்க? எப்பவும் ஃபிரைடே தான புடவை கட்டுவ?" என்றவன் ஒரு கணம் நிறுத்தி, "இன்னைக்கு எதுவும் இம்பார்ட்டண்ட் டே வா?" என்று கேட்க, தன்வி அவனுக்குக் குடிக்க டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைத்தபடி, "ஆமா சார், இன்னைக்கு ஆபீஸ்க்கு இன்வெஸ்டர்ஸ் சில பேர் வராங்க. உங்களுக்கு எல்லா டீடெயில்ஸும் மெயில் பண்ணி இருந்தேனே சார்…" என்று அவள் சொல்ல ஒரு நிமிடம் யோசித்த ஆதர்ஷ், "ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன். அது இன்னைக்கு தானா?" என்றான்.
"என்கிட்ட நீங்க பொய் சொல்ல எந்த அவசியமும் இல்ல சார். நீங்க மெயில் பார்க்கல தானே? என்கிட்ட இருந்து வந்ததால் நீங்க அதை ஓபன் கூடப் பண்ணி இருக்க மாட்டீங்க, எனக்குப் புரியுது சார். அதுக்காக ஆப்ட்ரால் உங்ககிட்ட வேலை பார்க்கும் என்கிட்டப் போய் பொய் சொல்ல வேண்டிய தேவை இல்ல சார்." என்றவளை அவன் நிமிர்ந்து பார்க்க, அவள் கண்களில் அத்தனை வெறுமை.
"அப்படி இல்ல தன்வி. நான் கொஞ்சம் பிஸி அதான்" என்று ஆரம்பிக்கும் போதே அவனைத் தடுத்தவள், "இட்ஸ் ஓகே சார், இன்னைக்கு நடக்கப் போகிறது ஜஸ்ட் ஒரு ஃபார்மாலிட்டி தான். ஆல்ரெடி தாத்தா எல்லாம் பேசிட்டாரு. அவங்க ஜஸ்ட் உங்களை ஃபார்மலா மீட் பண்ண நினைக்குறாங்க, அவ்ளோதான். சோ நீங்க எதுவும் பிரிப்பேர் பண்ண வேண்டிய தேவை இல்லை" என்றவள் வார்த்தைகளில் ஜீவனே இல்லை.
அவள் முகத்தையே இமைக்காமல் அழுத்தமாகப் பார்த்தவன், "ப்ளீஸ் தன்வி, டோண்ட் டூ திஸ் டூ மீ. நீ இப்படி யாரோ மாதிரி என்கிட்ட பிஹேவ் பண்றது எனக்கு ஒரு மாதிரி இருக்குடி…" என்றவன் குரல் கமர, அவள் கையின் மீது தன் கையை வைத்து அழுத்தியபடி அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான்.
ஆனால், அவளிடமோ எந்தவித அசைவும் இல்லை. மெதுவாக அவன் கையில் இருந்து தன் கையை உருவி எடுத்தவள், "இப்படி இருக்குறது தான் நல்லதுன்னு எனக்குத் தோணுது சார். கடந்த சில நாட்களில் சில விஷயங்கள் எனக்குப் பழகின மாதிரி, இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் உங்களுக்கும் பழகிடும். நீங்க நீங்களா இருங்க, என்னை நானா இருக்க விடுங்க" என்றவள் அங்கிருந்து கிளம்பி தான் இருக்கும் அவுட் ஹவுஸுக்கு வந்தவள் வேகமாகக் கதவை மூடிவிட்டு, அதிலேயே சாய்ந்து நின்று கண்களை இறுக்கி மூடிக் கொண்டவளுக்கு நெஞ்சம் விம்மியது.
"ஏன் இப்படிப் பண்ணீங்க பாஸ். ஏன் இப்படி பண்ணீங்க? லைஃப்ல முதல் முறை எ…எனக்கு யாரும் இல்ல, நா…நான் ஒரு அனாதைனு உணர வச்சிட்டீங்களே பாஸ். அன்னைக்கு எனக்கு எவ்ளோ அழுகை வந்ததுன்னு தெரியுமா? நான் விளையாட்டுக்கு அழுதாக் கூட நீங்க தான் என்னைச் சமாதானம் செய்வீங்க… ஆனா, நான் மனசு நொந்து, கேக்கவும் ஆள் இல்லாம, சொல்லி அழவும் யாரும் இல்லாம தவிச்ச நேரம் என்னைத் தனியா விட்டுட்டீங்களே பாஸ்… ஏன் அப்படிச் செஞ்சிங்க? ஒரு தடவை ஒரே ஒரு தடவை என் ஃபோனை அட்டென்ட் பண்ணி இருக்கலாம் இல்ல பாஸ் நீங்க" என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டவள், "வலிக்குது பாஸ், ரொம்ப வலிக்குது" என்று வாய்விட்டுக் கதறி அழ, அவளை அழ வைத்தவன் அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்று தன் அடுத்த திட்டத்தைத் தீட்டிக்கொண்டு இருந்தான்.
ஆதர்ஷன் அவளைத் தன்னோடு காரில் வரும்படி அழைக்க அவளோ அதை மறுத்து, "தேவையில்ல சார், புதுப்பழக்கம் எல்லாம் எதுக்கு? எனக்கு என் வழி தெரியும், நான் போய்டுவேன்." என்றவள் வார்த்தைகள் சாதாரணமாக இருந்தாலும் ஏனோ ஆதர்ஷனுக்கு அவள் சொன்னதில் வேறு எதுவும் உள்ளர்த்தம் இருக்குமோ என்று உள்ளம் பதைக்கச் செய்தது.
’ஓஓஓ காட்! ஒருவேளை வீட்டைவிட்டுப் போலாம்னு எதுவும் யோசிச்சு வச்சிருக்காளா? அதைத் தான் சிம்பாலிக்கா சொல்லிட்டுப் போறாளா? நோ தன்வி, அப்படி மட்டும் எதுவும் செஞ்சிடாத… அப்புறம் லைஃப் லாங் உன் ஆதர்ஷ் அந்தக் குற்றவுணர்ச்சியிலேயே செத்திடுவான். அப்படி எதுவும் பண்ணிடாத’ என்று வாய்விட்டுப் புலம்பியவன் காரை எடுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே அலுவலகம் சென்றான்.
அவன் வரும் முன்பே இன்று நடக்கப் போகும் மீட்டிங்கில் அவனுக்கு எந்தவிதத் தடுமாற்றமும் வராதபடி அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடித்திருந்தாள் தன்வி.
மீட்டிங் நினைத்ததைவிட நல்லபடியாய் முடிந்திருக்க, ஆதர்ஷனுக்கு நிம்மதி. உடனே தன்வியைத் தன் அறைக்கு அழைத்தவன், "எல்லாம் பெர்பெக்டா முடிஞ்சது தன்வி… இந்த டீல் இந்த அளவு சக்சஸாக நீதான் காரணம்" என்றவன் தொடர்ந்து, "இன்னைக்கு ஈவினிங் இன்வெஸ்டர்ஸ் ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்காங்க தன்வி. ஈவனிங் ரெடியா இரு, நம்ம ரெண்டு பேரும் போகணும், ஓகே…" என்றவன் அவள் முகம் பார்க்க, அவள் தலை இடவலமாக இல்லை என்று ஆடியது.
அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்த ஆதர்ஷ், "புரியல" என்றான் அழுத்தக் குரலில்.
"சாரி சார், இது அன்அபிஷியல் பார்ட்டி… இதுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல, சோ என்னால் வரமுடியாது" என்றவளின் கண்களைக் கூர்ந்து பார்த்தபடியே எழுந்து அவள் அருகில் வந்தவன், "ஓஓஓ இந்தப் பார்ட்டிக்கும் உனக்கும் சம்பந்தம் இல்ல, அப்படித் தானே…ம்ம்ம்…" என்று இழுத்து மூச்சு விட்டவன், "இந்த ஆன்சர் பார்ட்டிக்கு மட்டுமா இல்ல எனக்கும் சேர்ந்து தானா?" என்றவனை அவள் புரியாமல் பார்க்க, அவளது கண்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே வலியோடு சிரித்த ஆதர்ஷ், "இல்ல, பார்ட்டி மாதிரியே எனக்கும் உனக்கும் கூட எந்தச் சம்பந்தமும் இல்லன்னு சொல்றியான்னு கேட்டேன்." என்றான் விரக்தியாக.
அவன் வார்த்தையில் வெடுக்கென்று திரும்பி அவன் முகம் பார்த்தவள், கஷ்டப்பட்டு தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "அதெப்படி சார் சம்பந்தம் இல்லாமப் போகும்" என்று அவள் சொன்னதும் அவன் இதயம் பனியாகக் குளிர்ந்துவிட, அடுத்த நொடி அவள் சொன்ன, "நான் உங்ககிட்ட வேலை பார்க்குறேன் சார்… முதலாளி, தொழிலாளி சம்பந்தம் நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கு சார்" என்று அவன் குளிர்ந்த நெஞ்சில் கூடை நிறைய நெருப்பை அள்ளிக் கொட்டினாள் அவள் அலுங்காமல்.
அவள் வார்த்தையில் திகைத்து அவள் முகம் பார்த்தவன், "நான் உன்னை ஒரு முறை கொன்னேன், நீ என்னை ஒவ்வொரு முறையும் கொன்னுட்டு இருக்க" என்றவன் குரலில் அவன் உள்ளத்தின் வலி அப்பட்டமாகத் தெரிய, "ஏதே பேச வந்தவளைப் போதும் என்பது போல் கைகாட்டி நிறுத்தியவன், "யூ மே கோ" என்றான் வெறுமையான குரலில்.
வெகு நேரம் தன் சேரில் சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்தவன், "மே ஐ கம் இன்?" என்ற குரலில் கண் திறந்தவன், "எஸ்" என்றான் தன் கம்பீரமான குரலில்.
வந்திருந்தது ஆதர்ஷின் அப்பா காலத்தில் இருந்து அங்கு வேலை செய்யும் செல்வம் தான்.
"எப்படி இருக்கீங்க தம்பி" என்றபடி அவர் உள்ளே வர, அவரைப் பார்த்து மரியாதைக்காக எழுந்து நின்ற ஆதர்ஷ், "நல்லா இருக்கேன் சார்… உக்காருங்க" என்று இருக்கையைக் காட்டினான்.
அவர் ஆதர்ஷ் இல்லாத நேரத்தில் நடந்த பிசினஸ் டீலிங் பற்றி அவனுக்கு எடுத்துரைத்தவர், "நீங்க இல்லாத குறை தெரியாம தன்வி எல்லாத்தையும் நல்ல பொறுப்போட பார்த்துக்கிச்சு தம்பி… எந்த வேலையும் நிக்காம நீங்க இருந்தா எப்படி நடக்குமோ அதே வேகத்தில் செஞ்சு முடிச்சிடுச்சு தம்பி அந்தப் பொண்ணு… ரொம்பப் புத்திசாலி, நல்ல சுறுசுறுப்பு, கூடவே நல்ல குணமும் இருக்கு" என்று அவர் தன்வியைப் புகழ்ந்து தள்ள, ஆதர்ஷனுக்கு உள்ளுக்குள் அத்தனை மகிழ்ச்சி.
"எனக்குத் தெரியும் சார், அவளால மட்டும் தான் என் இடத்தை ரீப்ளேஸ் பண்ண முடியும்னு… அதான் அவ பொறுப்பில் எல்லாத்தையும் விட்டுட்டுப் போனேன்" என்றவன் குரலில் அத்தனை கர்வம். அவளைப் அவர் புகழ்ந்தது ஏனோ அவனுக்கு அவர் அவனையே புகழ்ந்தது போல ஒரு கர்வத்தைக் கொடுத்தது.
அவர் மற்ற விவரங்கள் அனைத்தையும் பேசி முடித்துக் கொண்டு எழுந்தவர், "தம்பி, அப்புறம் ஒரு விஷயம்" என்று தயங்கித் தயங்கி நிற்க, ஆதர்ஷ் அவரைக் கேள்வியாகப் பார்த்தவன், "என்ன சார், என்ன விஷயம்? தயங்காமல் சொல்லுங்க" என்றான்.
"அது இல்ல தம்பி, இதை நான் சொன்னால், அதை நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு எனக்குத் தெரியல" என்றார் தயக்கமாக.
"நீங்க என்னோட அப்பா காலத்தில் இருந்து இங்க வொர்க் பண்றீங்க, அதோட நீங்க என் அப்பாவோட பிரண்டும் கூட, நான் உங்களை என்னோட வெல் விஷரா தான் பார்க்குறேன். தயங்காமச் சொல்லுங்க சார்" என்றான் ஆதர்ஷ்.
அவன் பேச்சில் தைரியம் கொண்டவர், "அது ஒண்ணும் இல்ல தம்பி, வீரராகவன் சார் உங்களுக்கும் தன்விக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுறதாவும், நீங்க அதுல விருப்பம் இல்லைனு சொன்னதாவும் நம்ம ஆடிட்டர்கிட்டச் சொல்லி வருத்தப் பட்டிருக்காரு" என்றதுமே ஆதர்ஷன் புருவங்கள் சுருங்கி கண்கள் கூர்மையாக, செல்வம் சொல்ல வந்ததைக் கூர்ந்து கவனித்தான்.
செல்வம் தொடர்ந்து, "அந்த விஷயத்தை ஆடிட்டர் யார் யார்கிட்டச் சொன்னாருன்னு தெரியல… அது அவர்கிட்ட இருந்து அப்படியே பரவிப் பரவி நம்ம ஆபீஸ் வரைக்கும் பரவிடுச்சு… அது தெரிஞ்சதிலிருந்து நம்ம ஆபீஸ்ல சிலர் தன்வி பத்தி ரொம்பத் தப்பு தப்பாப் பேசுறாங்க தம்பி" என்றதும் அவன் கண்கள் சிவந்து கை நரம்பு கோவத்தில் புடைத்துக்கொண்டு ஏழ, "யார் என்ன சொன்னாங்க சார்" என்று கேட்டான் அடக்கப்பட்ட கோவத்துடன்.
"அன்னைக்கு டைனிங் ஹால்ல ரெண்டு பேர் பேசிகிட்டது என் காதுல விழுந்தது தம்பி. அதுல தன்வி பிளான் பண்ணி தான் உங்களை வளைச்சிப் போட்டதா பேசிக்கிட்டாங்க, சின்ன வயசில் இருந்து கூட வளர்ந்ததை யூஸ் பண்ணி அந்தப் பொண்ணு உங்க பணத்துக்காக உங்க தாத்தாவைக் கைக்குள்ள போட்டுகிட்டு உங்களைக் கல்யாணம் செய்யப் பிளான் பண்ணதாகவும், அதுக்கு நீங்க சம்மதிக்காமப் போக, உங்களுக்கும் உங்க தாத்தாவுக்கும் சண்டை நடந்து அதுல கோவிச்சிக்கிட்டு தான் நீங்க அமெரிக்கா போனிங்கன்னும் சொல்றாங்க. அதோட தன்வி பத்தி ரொம்பத் தப்பு தப்பாப் பேசுறாங்க" என்றவருக்கு அதற்கு மேல் அவர்கள் பேசியதைச் சொல்ல வார்த்தைகள் வராமல் தலையைக் குனிந்து கொள்ள, ஆதர்ஷனின் மனது கோவத்தில் எரிமலைக் குழம்பாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
"என்னால இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியல தம்பி… அதைக் கேட்டு எனக்கே மனசு ஒரு மாதிரி ஆகிடுச்சு, பாவம் தன்வி மனசு என்ன பாடு பட்டிருக்கும்" என்றவரை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தவன், "தன்விக்கு இந்த விஷயம் தெரியுமா?” என்று கேட்க, "ஆமா தம்பி, அன்னைக்கு அவங்க பேசினதைத் தன்வியும் கேட்டுட்டுத் தான் இருந்துச்சு. பாவம், அதைக் கேட்ட பிறகு அப்படியே அமைதியா அங்கிருந்து போய்டுச்சு. அதுக்கு அப்புறம் அந்தப் பொண்ணு இங்க யார் கிட்டயும் பேசுறதே இல்ல தம்பி... எப்பவும் கலகலன்னு இருக்குற பொண்ணு அப்படியே மாறிடுச்சு. ஆபீஸ் வரும், வேலையை பார்க்கும், அமைதியாக் கிளம்பிப் போயிடும். அந்தப் பொண்ணு சிரிச்சுப் பார்த்து எவ்ளோ நாளாகிடுச்சு தெரியுமா தம்பி" என்று வருத்தமாகச் சொல்ல ஆதர்ஷனுக்கு ஒரு நிமிடம் உயிர் துடித்து அடங்கியது.
’கடவுளே! இதை எப்படி அவ தாங்கினா? அவ பணத்துக்கு ஆசைப்பட்டுக் கல்யாணம் பண்ணப் பிளான் பண்ணாளா? ம்ம்ம்’ என்று விரக்தியாகச் சிரித்தவன், 'இந்தக் கல்யாணம் அவ வாழ்க்கையையே வேரோட அழிச்சிடும்னு தெரிஞ்சும், தான் வளர்ந்த குடும்பத்துக் கௌரவத்தைக் காப்பாத்த தன்னோட வாழ்க்கையையே தியாகம் பண்ண நெனச்சவ அவ… அவளைப்போய் இப்படிப் பேசிட்டாங்களே… இதக் கேட்டு பொம்முக் குட்டி மனசு எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கும்' என்று நினைத்தவனுக்கு நெஞ்சம் விம்மியது.
கோபத்தோடு நிமிர்ந்து செல்வத்தைப் பார்த்தவன், "யார் யார் தன்வியைப் பத்தி தப்பாப் பேசினாங்களோ அவங்க எல்லாரையும் வேலையை விட்டுத் தூக்கிடுங்க, ரைட் நவ்" என்று கர்ஜித்தவன், இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள, "தம்பி ஒரு நிமிஷம்" என்றதும் நின்று அவரைத் திரும்பிப் பார்த்தவன், "என்ன சார்?" என்று கேட்க,
"அவங்க தப்பாப் பேசின அடுத்த நாள், நீங்க தன்விக்குக் கொடுத்த அந்த 25% ஷேர் எல்லாத்தையும் உங்க பேருக்கு மாத்திடுச்சு தம்பி" என்று சொல்ல ஆதர்ஷன் இறுக்கி கண்களை மூடிக் கொண்டவன், "ஓகே நீங்க போங்க சார்" என்றவனுக்குத் தன்வியின் இப்போதைய மாற்றத்திற்கான காரணம் தெளிவாகப் புரிந்தது. ஏன் அவனைவிட்டு ஓரடி தள்ளி நிற்கிறாள் என்றும் புரிந்தது. அவர்கள் பேசிய பேச்சில் மனமுடைந்தவள், தன்னுடன் பேச அழைத்திருப்பாள், அவள் மீதுள்ள கோவத்தில் தான் அந்த அழைப்பை ஏற்காமல் போனது அவளை ரொம்பவே பாதித்து இருக்கிறது. சின்ன வயதில் இருந்து நல்லதோ கெட்டதோ அனைத்திற்கும் ஆதர்ஷ் வேண்டும் அவளுக்கு. அப்படி இருக்க அவளுக்கு அவன் அருகாமை அவசியம் தேவைப்பட்ட நிலையில் அவன் அவளை ஒதுக்கி வைத்து அவளை வதைத்து விட்டான்.
நடந்ததை நினைத்து இழுத்து மூச்செடுத்தவன், இதற்கெல்லாம் சீக்கிரம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று யோசித்தபடியே வீட்டுக்குச் சென்றான்.
மரியாதைக்காகவாது அன்று நடக்கும் பார்ட்டியில் அவன் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் மனதே இல்லாமல் அந்தப் பார்ட்டிக்குக் கிளம்பியவனுக்கு அப்போது தெரியாது, அந்தப் பார்ட்டி அவன் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு இழுத்துச் செல்லக் கயிரோடு காத்திருப்பது.