விழி வழி காதல் நுழைந்ததடி 10
விழி 10
இருவரும் வீடு வந்து சேரும் போது நேரம் நள்ளிரவு மூன்று மணி ஆகிவிட்டது.
காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திய தன்வி, திரும்பி ஆதர்ஷனனைப் பார்க்க, அவன் இன்னும் கண்களை மூடியபடியே சீட்டில் சாய்ந்திருந்தான்.
"சார் வீடு வந்தாச்சு" என்று அவள் மெல்லிய குரலில் சொல்ல, அவனிடம் எந்த அசைவும் இல்லை. மீண்டும், "சார் வீட்டுக்கு வந்தாச்சு" என்று அவள் சற்றுச் சத்தமாகச் சொல்ல, மெல்லக் கண்களைத் திறந்து அவள் முகத்தைப் பார்த்தவன், "என்ன?" என்பது போல் புருவம் உயர்த்தி அவளைப் பார்க்க, "வீட்டுக்கு வந்துட்டோம் சார்" என்றாள் மறுபடியும்.
"ம்ம்ம்" என்றவன் வீட்டை ஒருமுறை பார்த்துவிட்டுக் கதவைத் திறந்து கீழே இறங்கினான்.
அவன் பின்னே காரில் இருந்து இறங்கிய தன்வி, அவன் உடமைகளை எடுக்கக் காரின் பின் பக்கக் கதவைத் திறந்தாள்.
அவளைப் புரியாமல் பார்த்த ஆதர்ஷ், "ஏய்… நீ ஏன் அதையெல்லாம் எடுக்குற? தோட்டக்கார அண்ணாவைக் கூப்பிடு" என்றான்.
"இந்த டைம்ல தோட்டக்கார அண்ணா தூங்கி இருப்பாரு சார், அதான்" என்றாள்.
"அதுக்காக நீ ஏன் இதெல்லாம் எடுக்கணும்?"என்றான் தோள்களைக் குலுக்கி.
"இதுல என்ன சார் இருக்கு…? அவரைப் போல நானும் இங்க வேலை செய்யற ஆள் தானே…" என்றவள் அவன் பெட்டியை எடுக்கக் கையை வைக்க, அவள் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவள் விழிகளைக் கூர்ந்து பார்த்த ஆதர்ஷ், "இப்ப என்ன சொன்ன நீ? திரும்பச் சொல்லு" என்று அடிக்குரலில் சீறியபடி கேட்டான்.
"நானும் இங்க வேலை செய்யற ஆள்னு சொன்னேன் சார்." என்றாள் அவன் முகத்தைப் பார்த்தபடி.
"நீ என்ன சொல்றேன்னு புரிஞ்சு தான் அந்த வார்த்தையைச் சொல்றியா?" என்றவனுக்குக் கோவத்தில் கண்கள் சிவந்து உடல் இறுகியது.
"இதுல புரிய என்ன சார் இருக்கு… அதுதானே உண்மை. நான் இங்க வேலை செய்யறேன் தான?" என்றது தான், "ஏய்" என்று அவளை அடிக்கக் கையை ஓங்கிய ஆதர்ஷ் அடுத்த நொடி, "ஷிட்" என்று காரின் மீது வேகமாகத் தன் கையைக் குத்தி தன் கோபத்தைத் தணித்தவன், "நீ ஒண்ணும் லக்கேஜ் எடுக்கத் தேவையில்லை. காலையில நானே எடுத்துக்குறேன்" என்றவன் விறுவிறு என்று வீட்டுக்குள் சென்றுவிட, தன்வி காரைப் பூட்டிச் சாவியை அதன் இடத்தில் வைத்தவள், அமைதியாக அங்கிருந்து சென்று விட்டாள்.
ஆதர்ஷ் நேராக தாத்தாவின் அறைக்குச் செல்ல, அவர் மாத்திரையின் உதவியில் நல்ல உறக்கத்தில் இருந்தார். அந்த நேரத்தில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் ஆதர்ஷ் அமைதியாகத் தன் அறைக்குச் சென்றுவிட்டான்.
வெகுதூரம் பயணம் செய்த களைப்பு ஆதர்ஷனை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தி இருந்தது.
காலைப் பத்து மணிவரை நன்றாகத் தூங்கி எழுந்தவன், தன் காலைக் கடன்களை முடித்துவிட்டு தன் அலைபேசியை எடுத்துப் பார்க்க, அதில் ஏகப்பட்ட தவறிய அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் குவிந்து கிடந்தது. அதைப் பார்த்தவன் இதழ் ஓரத்தில் கீறல் போல் சிறு புன்னகை.
ஒரு குறுஞ்செய்தியைத் திறந்து பார்க்க, "ஹவ் இஸ் மை பேபி ஏஞ்சல்?" என்று ஆலன் அனுப்பி இருந்த செய்தியைப் பார்த்தவனுக்கு நேற்று வாடிய மலராகப் பார்த்த தன்வியின் முகம் கண்முன் தோன்ற, "அவ நல்லா இல்ல ஆலன், சுத்தமா அவ நல்லா இல்ல…" என்று வாய்விட்டுப் புலம்பியவன், "நீ ரெண்டு நாள்ல இங்க வரப் போற தானே… அப்ப நீயே பார்த்துக்க…" என்று பதில் அனுப்பியவன், மற்ற அனைத்துக் குறுஞ்செய்திகளையும் திறந்து படித்தான்.
அத்தனையும் தன்வி பற்றியே இருந்தது. விரக்தியாக இழுத்து ஒரு பெருமூச்சு விட்டவன், உடனே அந்த எண்ணுக்கு அழைத்துச் சில நிமிடங்கள் பேசியவன், "இவளை எப்படி வழிக்குக் கொண்டு வரதுன்னு ஒண்ணுமே புரியல... அவளைப் பார்க்கும் போது மனசுக்குள்ள என்னவோ பண்ணுது. அவ கண்ணு ரெண்டும் வலியோடு என்னைப் பார்க்கும்போது எனக்குள் ஒரு மாதிரித் தவிப்பா இருக்கு… எங்க என் கன்ட்ரோலை மீறி, பாஞ்சு போய் அவ கண்ணைத் தொடச்சு… இறுக்கிக் கட்டிப்பனோன்னு பயமா இருக்கு… இதுல எப்படி நான் போய் அவகிட்ட இந்தக் கல்யாணம், டிராவல்… எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா… இது பத்தி எல்லாம் பேசுறது? எனக்கு ஒண்ணும் புரியல…” என்று சொல்ல, அந்தப் பக்கத்தில் பெறும் அமைதி.
"ஏய்…! ஆர் யூ ஓகே?" என்ற ஆதர்ஷன் கேள்விக்கு அந்த பக்கம், "ம்ம்ம்" என்று மட்டும் பதில் வர ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தியவன், "யூ டோன்ட் வொர்ரி, நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன். முடிஞ்ச வரை சீக்கிரம் அவளையும் தாத்தாவையும் கூட்டிட்டு அங்க வந்திடுவேன். அங்க வந்துட்டாப் போதும். எல்லாத்தையும் ஈசியா சமாளிக்க முடியும். நான் அடுத்து என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு உனக்குக் கால் பண்றேன்." என்று வார்த்தையால் சொன்னவனுக்கு அதை எப்படிச் செய்து முடிப்பது என்று நினைக்கவே மலைப்பாக இருந்தது.
தொழிலோடு சேர்த்து கால் வைத்த அனைத்துத் துறைகளிலும் வெற்றியை மட்டுமே பெற்றவன், தனக்கு இணை தானே என்று இன்று வரை நினைத்திருந்தவனுக்கு தன்வியை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தவனுக்கு, சுத்தமாக ஒரு வழியும் தெரியவில்லை.
பின்னே… மூன்று மாதம் பேசாமல், அவளைப் பார்க்காமல் அவளுக்கு ஆதர்ஷன் கொடுத்த மொத்த வலியையும் ஒரே வார்த்தையில் அவனுக்குத் திருப்பிக் கொடுத்து விட்டாளே பெண்ணவள்… அவளைச் சமாளிப்பது கொஞ்சம் அல்ல, ரொம்பவே கஷ்டம் என்று நன்கு புரிந்தது அவனுக்கு. கூடவே அவனின் விலகல் எந்த அளவுக்கு அவள் மனதைக் காயப்படுத்தி இருந்தால் அவள் இந்த அளவு உடைந்து போயிருப்பாள் என்பதையும் அவன் நன்கு உணர்ந்தான். முதலில் அவள் மனக் காயங்களை ஆற்ற வேண்டும். பின்பு தான் அனைத்தையும் அவளிடம் சொல்ல முடியும் என்று முடிவு செய்தவன் கீழே இறங்கி வந்தான்.
"வாங்க தம்பி, டிபன் ரெடியா இருக்கு. எடுத்து வைக்கவா?" என்று கேட்ட வேலைக்காரப் பெண் கமலாவைப் பார்த்து, "ம்ம்ம் எடுத்து வைங்க…" என்று டைனிங் டேபிளில் அமர்ந்தவன், "எங்க தாத்தாவைக் காணும்.?" என்று கேட்டான்.
"ஐயா வீட்ல இல்ல தம்பி… விடியக் காலையில் ஊட்டில இருந்து ஃபோன் வந்தது. எஸ்டேட்ல ஏதோ பிரச்சனையாம், அதான் ஐயா காலையிலேயே கிளம்பிப் போயிட்டாரு… நீங்க நல்லாத் தூங்கிட்டு இருந்தீங்க, எழுந்ததும் விஷயத்தைச் சொல்லச் சொன்னாரு… ரெண்டு மூணு நாள்ல வந்திடுவேன்னு சொன்னாரு தம்பி" என்றவர் தட்டில் உணவை எடுத்து வைத்தார்.
"ம்ம்ம்" என்றபடி தட்டில் கை வைத்தவன், "தன்வி எங்க? ரூம்ல இருக்காளா?" என்று கேட்க, கமலாவிடம் பதில் இல்லை.
"உங்ககிட்ட தான் கேட்டேன். தன்வி ரூம்ல இருக்காளா?” என்று நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்துக் கேட்க, கமலா கையைப் பிசைந்தபடி நின்றார்.
"என்னாச்சு உங்களுக்கு? நான் கேட்டுட்டே இருக்கேன் நீங்க வாயைத் திறக்காம அப்படியே நிக்குறீங்க… தன்வி எங்க?" என்றான் அதட்டலாக.
"அது... அது வந்து தம்பி… தன்விப் பாப்பா இப்ப இங்க தங்குறது இல்ல, நீங்க ஊருக்குப் போன கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் பழைய மாதிரி அவுட் ஹவுஸ்கே போயிடுச்சு தம்பி. ஐயா கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தாரு. ஆனா, தன்விப் பாப்பா அங்க இருக்குறது தான் மனசுக்கு நிம்மதியா இருக்குன்னு சொல்லி அழுது, அடம் புடிச்சு அங்கப் போய்டுச்சு தம்பி… முன்ன மாதிரியே காலையில் சீக்கிரம் வந்து ஐயாக்குத் தேவையான எல்லாத்தையும் செஞ்சு வச்சிட்டு ஆபீஸ் போய்டும். நைட் திரும்பி வந்ததும் ஐயாக்கு மருந்து, மாத்திரை கொடுத்துத் தூங்க வச்சிட்டு அவுட் ஹவுஸ் போய்டுது தம்பி. இப்பெல்லாம் என்னைக் கூட துணைக்கு இருக்க வேணாம்னு சொல்லிடுச்சு" என்று சொல்ல, அவர் சொன்னதைக் கேட்ட ஆதர்ஷின் கை நரம்புகள் கோபத்தில் இறுகியது.
"அவ்ளோ சொல்லியும் மறுபடியும் அங்க போயிருக்கான்னா அவளுக்கு எவ்ளோ திமிர் இருக்கணும்." என்றபடி சாப்பிடாமல் தட்டிலேயே கை கழுவிவிட்டு எழுந்தவன், "இப்ப எங்க அவ... ஆபீஸ் போயிருக்காளா? இல்ல இங்க இருக்காளா?" என்றவன் குரலில் அப்படி ஒரு கோவம்.
"இன்னைக்கு ஞாயித்துக் கிழமை தம்பி… வீட்ல தான் இருக்கும். காலையில வந்து உங்களுக்கு டிபன் எல்லாம் செஞ்சு வச்சிட்டுத் தான் போச்சு" என்று கமலா சொல்லி முடிக்கும் முன் அவுட் ஹவுஸ் நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினான் ஆதர்ஷ்.
தன் தாய், தந்தை புகைப்படத்தினைக் கலங்கிய விழிகளுடன் ஆழ்ந்து பார்த்தபடி நின்றிருந்த தன்வி, கதவு திறக்கும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்க்க, அங்கு சினம் கொதிக்க நின்றிருந்தான் ஆதர்ஷ்.
"யாரைக் கேட்டு நீ இங்க வந்த? உன்னை வீட்ல தான இருக்கச் சொன்னேன். நான் அவ்ளோ சொல்லியும் நீ மறுபடியும் இங்க வந்து உக்காந்திருகேன்னா அதுக்கு என்னடி அர்த்தம்." என்று கத்தியவன், "ஓஓஓ! ஒருவேள அமெரிக்கா போனவன் அப்படியே ஒரேயடியாப் போய்டுவான். இவன் பேச்ச நம்ம எதுக்கு மதிக்கணும்னு நெனச்சிட்டியா" என்றவன் வார்த்தையில் உள்ளம் பதறியவள், "காலங்கார்த்தால இப்படித் தப்பு தப்பாப் பேசாதீங்க பாஸ்" என்று சொல்ல வந்தவள் நிறுத்தி, "பேசாதீங்க சார்" என்று முடிக்க, அதில் இன்னும் எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்த்தது போல் ஆகிவிட, "நான் அப்படித் தான்டி பேசுவேன்… ஏன்னா அதுதான் நிஜம். நீ அப்படி நெனச்சிதான இங்க வந்திருக்க…? அந்த வயசான மனுஷனை உன்னை நம்பி விட்டுப் போனதுக்கு நல்ல மரியாதை செஞ்சிட்டடி நீ…" என்று அவளை வார்த்தையால் சுட்டவன், "அதான் இங்க வந்துட்ட இல்ல, அப்புறம் என்ன வெண்ணைக்கு மார்னிங் எனக்கு பிரேக் பாஸ்ட் செஞ்சு வச்சிருக்க, என்ன? நீ இல்லாம என்னால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லாம சொல்றியா? இல்ல, நீ எனக்கு தப்பே பண்ணாலும் நான் எல்லாத்தையும் சரியாச் செய்வேன்னு உன்னைப் புரூப் பண்ண டிரை பண்றியா? சொல்லு, எதை புரூப் பண்ண டிரை பண்ற நீ… அப்ப நீ நல்லவ, நான் கெட்டவன் அப்படித் தானே?" என்று அவன் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்ல, கண்களை இறுக்கி மூடித் திறந்த தன்வி,
"உங்க ரிவர்ஸ் சைக்காலஜி இனிமே என்கிட்ட வொர்க் அவுட் ஆகாது சார். எனக்கு நல்லாப் புரியுது. நீங்க எதுக்காக இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்கன்னு… இப்படிப் பேசினா, நான் உடனே அப்படி ஒண்ணும் இல்ல, நான் அங்கேயே திரும்பி வந்துடுறேன்னு சொல்லுவேன்னு நீங்க நினைக்குறீங்க. பட் நோ சார், நீங்க உங்க இடத்தில் இருங்க... என்னை என்னோட லிமிட்ல விட்ருங்க" என்றாள் அமைதியாக அதே சமயம் உறுதியாக.
அவளின் பேச்சில் ஒருநிமிடம் மிரண்டு நின்ற ஆதர்ஷ்,
அவளை நெருங்கி வந்து அவள் தோளைத் தொட்டு உலுக்கி, "நீ வருவடி… நான் உன்னை அங்க வர வைப்பேன். இட்ஸ் ஏ சேலஞ்ச்" என்றவன் அங்கிருந்து வெளியேற, தன்வி கண்களை மூடி ஆழ்ந்து மூச்செடுத்தவள், தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
வண்டியை எடுத்துக் கொண்டு அவள் வீட்டின் முன் புறம் வர, அங்கே கைகளை கட்டிக் கொண்டு அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் ஆதர்ஷ்.
"சன்டே, லீவ் நாளும் அதுவுமா மேடம் எங்க போறீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்று நக்கலாகக் கேட்க,
அவனை நிமிர்ந்து பார்த்த தன்வி, "அதான் நீங்களே சொல்லிட்டீங்களே சார், இன்னைக்கு லீவ் நாள்னு... சோ, நான் இப்ப உங்க ஸ்டாஃப் இல்ல. சோ, உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை எனக்கில்ல" என்றவள் வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட, போகும் அவளை முதுகைத் துளைக்கும் பார்வை பார்த்தவனின் சினத்தின் உஷ்ணத்தைத் தன்வியால் நன்கு உணர முடிந்தது. ஆனால், அதற்காக அவள் கவலைப்படவில்லை. வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.
அவள் சென்ற கொஞ்ச நேரத்தில் ஆதர்ஷனும் வெளியே கிளம்பி விட்டான். அவன் நல்ல நேரத்திற்குத் தாத்தா ஊரில் இல்லாதது அவனுக்கு வசதியாகப் போனது. தாத்தா இல்லாத இந்த ரெண்டு, மூணு நாளில் அவன் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் அவன் முடித்தாக வேண்டும். அப்போது தான் அவனால் தன்வி விஷயத்தில் முழுதாகத் தன் கவனத்தைச் செலுத்த முடியும். அதனால் முடிந்தவரை அவன் திட்டத்தைச் சீக்கிரம் செயல்படுத்தத் தொடங்கி இருந்தான்.
காலையில் வெளியே சென்ற தன்வி மாலை ஏழு மணிக்குத் தான் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். வந்தவள் நேராக வீட்டுக்குள் சென்று ஆதர்ஷ் மதிய உணவைச் சாப்பிட்டானா? என்று கமலாவைக் கேட்க, அவரோ, "மதியம் மட்டும் இல்ல, காலையில் கூட தம்பி ஒண்ணும் சாப்பிடவே இல்ல… நானும் ரெண்டு, மூணு தடவை கூப்பிட்டுப் பார்த்தேன். நீ வந்திட்டியான்னு கேட்டாரு… இல்லைனு சொல்லவும், எனக்குப் பசிக்கல, சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டாரு" என்று சோகமாகச் சொல்ல, தன்விக்கு அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்துவிட்டது. அழுத்தமாகக் கண்களை மூடித் திறந்தவள், "நான் பார்த்துக்குறேன், நீங்க கிளம்புங்க…" என்றவள் அவனுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்து முடித்து, அதை எல்லாம் எடுத்துக் கொண்டு நேராக ஆதர்ஷ் அறைக்குச் சென்று கதவைத் தட்டினாள்.
கதவு தட்டும் ஓசை கேட்டது, "கம் இன்" என்று உள்ளிருந்து குரல் மட்டும் வர, கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள் தன்வி.
தன் எதிரில் நின்றவளைத் தன் கூர்மையான பார்வையால் அளந்து கொண்டிருந்தான் அவன்.
"வாட் யூ வான்ட்?" என்றான் அதட்டலாக.
உணவைத் தூக்கிக் காட்டி "சாப்பாடு" என்றாள் அவளும் நக்கல் குரலில்.
"நோ நீட்... எனக்குப் பசிக்கல, நீ போலாம்." என்றவன் முன் உணவுப் பாத்திரங்களை வைத்தவள், அங்கிருந்த ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தவள், "எனக்குப் பசிக்கிது. நானும் மார்னிங்ல இருந்து எதுவும் சாப்பிடாமல் தான் இருக்கேன். சோ, ப்ளீஸ் வந்து உக்காருங்க… எனக்குப் பசி காதடைக்கிது." என்றவளை விசித்திரமாகப் பார்த்தான் அவன்.
"உனக்குப் பசிச்சா நீ சாப்பிடு, என்னை ஏன் டிஸ்டர்ப் பண்ற? முதல்ல இந்த" என்று ஆள்காட்டி விரலை நீட்டி உணவுப் பாத்திரங்களை காட்டி, "இது எல்லாத்தையும் எடுத்திட்டு இங்கிருந்து கிளம்பு" என்றவன் அங்கிருந்து நகரப் பார்க்க அவன் கையை எட்டி பிடித்த தன்வி, "என்னால தனியா சாப்பிட முடியாது. நீங்களும் வந்தால் சேர்ந்து சாப்டலாம், அதர்வைஸ்" என்றவள் எழப்போக அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன், "ரெண்டு பிளேட்லயும் புட் எடுத்து வை" என்றான் அவள் முகம் பார்க்காமல்.
அதைக் கேட்டு தன்வியின் இதழ்கள் லேசாக வளைய, அதை ஓரக்கண்ணால் பார்த்தவன், இதழ்களும் கண்ணுக்குத் தெரியாமல் புன்னகைத்துக் கொண்டது.
உணவைத் தனக்குக் கொஞ்சமாக வைத்துக் கொண்டு மீதி இருந்த அனைத்தையும் அவனுக்குப் பறிமாறினாள் அவள்.
அதைக்கூட கவனிக்காமல் உண்பதிலேயே குறியாக இருந்தவன், அவள் கை சமையலில் தன்னை மறந்து வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
'இவ்ளோ பசியை வச்சிட்டு எதுக்கு இந்த வீம்பு' என்று மனதிற்குள் புலம்பியபடியே மீதி உணவையும் அவனுக்கு எடுத்து வைத்தாள்.
அப்போது தான் அவள் உண்ணாமல் இருப்பதைப் பார்த்தவன், "ஏய், நீ சாப்பிடல?" என்று கேட்க, "எனக்கு அவ்ளோ ஒண்ணும் பசி இல்ல, நீங்க சாப்பிடுங்க" என்றவளை முறைத்தவன், "இப்ப தான காலையில் இருந்து சாப்பிடல, பசி காதடைக்கிதுனு சொன்ன, அப்ப பொய் சொன்னியா?" என்று சீறியவனைப் பார்த்து பயத்தில் அவள் இமைகள் வேகமாகத் துடிக்க, அதைப் பார்த்து சலிப்பாகக் கண்களை மூடித் திறந்தவன், "ஏய் பொம்முக்குட்டி... இப்ப எதுக்கு இப்படி பயந்து என்னைப் பார்க்குற? சாப்டியான்னு தான கேட்டேன். அதுக்கு ஏன் இப்படி முழிச்சு முழிச்சுப் பார்க்குற?" என்றான் கனிந்த குரலில்.
அந்தக் குரலில் லேசாக பயம் தெளிந்தவள், "எனக்குக் கீழ சாப்பாடு இருக்கு சார், நான் கீழ போய் சாப்பிட்டுக்குவேன்" என்றவளையும் அவள் சாப்பிடாமல் வைத்திருந்த தட்டையும் மாறி மாறிப் பார்த்தவன், "அப்ப உனக்கு இப்பப் பசிக்கல, கீழ போய் சாப்பிட்டுக்குவ தான?" என்று அழுத்தமாகக் கேட்க, அவள் வேக வேகமாக ஆம் என்று தலையை ஆட்டினாள்.
அவள் அப்படிச் சொன்னதும், உடனே அவள் தட்டில் இருந்த மொத்த உணவையும் எடுத்துத் தன் தட்டில் கொட்டிக் கொண்டவன், "நீ மொத்தமாக் கீழயே போய் சாப்பிட்டுக்க" என்று சொல்ல, தன்விக்கு அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து சிரிப்பு வந்துவிட, கலகலவென்று கண் கொட்டிச் சிரித்தவளின் சிரிப்பைப் பார்த்தவன் கண்கள் முதல் முறையாக அவள் சிரிப்பைத் தாண்டி.. ஒரு நொடி…! ஒரே ஒரு நொடி அவளை ரசித்துப் பார்த்தது. அவன் எண்ணம் போகும் திசையை உணர்ந்து தலையைச் சிலுப்பி அந்த நினைவை ஒதுக்கியவன், "எனக்குப் போதும்… நீ போய் சாப்பிடு" என்று சொல்ல அவளும் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு கிளம்பும் நேரம், "ஏய் பொம்முக்குட்டி, ஒன் மினிட்" என்றவனை அவள் திரும்பி என்ன என்பது போல் பார்க்க, "இந்தா" என்றவன் கைகளில் அவளுக்குப் பிடித்தமான சாக்லேட்டுகள் இருந்தது.
அதைப் பார்த்தவள் முகத்தில் அதுவரை இருந்த சிரிப்பு எங்கோ தொலைந்து விட கலங்கிய விழிகளுடன், "எனக்கு வேணாம் சார்" என்றாள் அடைக்கும் குரலில்.
புருவம் சுருக்கி அவளைப் பார்த்தவன், "ஏன் வேணாம்? இது உனக்கு ரொம்பப் புடிச்ச சாக்லேட் தான?" என்று கேட்க, அவனைப் பார்க்காமல் தலையைத் தாழ்த்திக் கொண்டவள், "முன்ன புடிச்சிது சார், இப்பப் புடிக்கல" என்றாள் அமைதியாக.
"ஏன்?" என்றான் அவன் அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடி.
"சாக்லேட் மட்டும் இல்ல சார், நான் ஸ்வீட் சாப்பிடுறதையே விட்டுட்டேன். வாங்கித் தர ஆள் இருந்தப்ப புடிச்சிது. இப்ப யாரும் இல்லன்ற உண்மை புரிஞ்சதும் புடிக்கல சார்" என்றவள் அதற்குப் பின் ஒரு நிமிடம் கூட அங்கு நிற்கவில்லை.
அவள் நாவுக்கு மட்டும் அல்ல, அவள் வாழ்விலும் இனிப்புக்கும், தனக்கும் இனி இடம் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லிச் சென்றிருந்தாள் பெண்ணவள்.