நிஜம் 18
நிஜம் 18
விக்ரம், லயாவின் காதல் நாளுக்கு நாள் பூமி பிளந்து சொல்லும் வேர் போல் வளர்ந்து கொண்டே செல்ல, த்வனி என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல் தவித்தாள். அவள் குழப்பத்திற்குக் கதிர் ஒருவனால் மட்டுமே சரியான வழியைச் சொல்லமுடியும் என்று கதிரை ஃபோனில் அழைத்தாள் த்வனி.
"என்ன த்வனி, என்னாச்சு? லயா குட்டி எப்படி இருக்க?"
"அவ நல்லா தான் இருக்கா. ஆனா, தான் இன்னும் கொஞ்ச நாள்ல லூசாகிடுவேன் போல இருக்கு கதிர்" என்றாள் கவலையாக.
"ஏன் த்வனி என்னாச்சு?"
"எனக்கு ரொம்பக் கஷ்டாம இருக்கு கதிர். ஒரு ஃப்ரண்ட இருந்து நா உயிரையே வச்சிருக்க என்னோட லயா காதலை பிரிக்க, நா எல்லா வழியிலயும் ட்ரை பண்றேன். அவ அப்பா, அம்மா… ஏன் உன்னவிட எனக்குத் தான் அவ மனசு பத்தி தெரியும். அவ அந்த வீணா போன விக்ரம் மேல உயிரையே வச்சிருக்க, அது நல்லா தெரிஞ்சும், நா அவ லவ்வை பிரிக்கச் சீரியல் வில்லி மாதிரி ட்ரை பண்றத நெருங்கும்போது எனக்கே என்ன நெனச்சு அசிங்கமா இருக்கு கதிர்" என்றவள் குரலில் இருந்தே அவள் மனது எந்தளவு கலங்கி இருக்கிறது என்று கதிருக்கு நன்றாகப் புரிந்தது.
"ஏய் த்வனி என்ன இது குழந்தை மாதிரி, நீ ஒன்னும் தப்பான எண்ணத்துல இப்டி செய்யலயே, நீ லயா நல்லா இருக்கணும்னு தான இப்டி பண்ணிட்டு இருக்கு, நீ ஒன்னும் வில்லி எல்லாம் இல்ல, சரி லயா உயிரா லவ் பண்ற சரி, அந்தப் பையன் அவன் பேரு என்ன… ஹான் வீணா போன விக்ரம், அவன் எப்டி?"
"ம்ம்ம் அவனும் ஒன்னு சும்மா இல்ல, லயா மேல அவனுக்கு இருக்குறது வெறும் காதல்னு சொல்ல முடியாது. அது ஒரு மாதிரி வெறி. எப்டி குழந்தைங்க தனக்குச் சொந்தமான பொம்மை மேல ரொம்பப் பொசசிவ்வ இருக்குமே அப்டி லயா மேல அவனுக்கு உயிர். இந்த பிரியமுடன் படத்துல வர்ர விஜய் மாதிரி அவன்."
"அப்றம் என்ன தவ்னி. அவன பத்தி நீயே இவ்ளோ சொல்ற... நம்ம லயாவ பேசாம அவனுக்கே கட்டி வச்சிட்ட என்ன?" என்றான் கதிர்.
"இல்ல கதிர் அது நடக்காது. நடக்கவும் நா விட மாட்டேன்."
"ஏன் த்வனி? சரியான காரணம் இல்லாம நீ இப்டி சொல்ல மாட்டியே? என்னாச்சு?" என்று த்வனியை நன்கு புரிந்தவனாகக் கதிர் கேட்டான்.
"விக்ரம் காதல் உண்மை தான். அவன் லயா மேல உயிரையே வச்சிக்கான் தான். விக்ரம் லவ் எவ்ளோ பெருசோ, அதே அளவு அவனோட பிரச்சனையும் பெருசு கதிர்."
"நீ சொல்றது எனக்குப் புரியல த்வனி?"
"விக்ரம் அம்மா சௌந்தர்யா என்னைப் பாக்க வந்தாங்க கதிர்" என்றவள் நேற்று சௌந்தர்யா சொன்னதைக் கதிருக்கு விளங்கினாள்.
த்வனி தன் லேப்டாப்பில் அவள் பிராஜக்ட் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க, அவள் வீட்டுக் காலிங் பெல் அடித்தது. லயா அவள் தாய், தந்தையுடன் அவள் அத்தை வீட்டுக்குச் சென்றிருக்கு, இந்த நேரத்தில் வந்தது யாராக இருக்கும் என்ற யோசனையில் கதவை திறந்தவள் முன் நின்றிருந்தார் சௌந்தர்யா.
"நீ தானம்மா த்வனி?" என்று அவர் கேட்க, அவள் தலை ஆமாம் என்று மேலும் கீழும் ஆடியது.
"ஐம் சௌந்தர்யா. விக்ரமோட அம்மா" என்க, த்வனி ஒரு நிமிடம் 'இவங்க ஏன் இங்க வந்தாங்க என்று யோசித்தவள், என்ன இருந்தாலும் வீடு வரைக்கும் வந்தவரை வாசலில் நிற்க வைப்பது நன்றாக இருக்காது என்று சௌந்தர்யாவை வீட்டுக்குள் அழைத்தாள்.
"ம்ம்ம் சொல்லுங்க மேடம். நீங்க எதுக்கு என்ன பாக்க வந்தீங்க?" என்று த்வனி கேட்க, த்வனியை ஒரு நிமிடம் உற்று பார்த்தார் சௌந்தர்யா.
"என் பையன் வாழ்க்கைய விட்டு போய்டு, தேவையில்லாம அவன் லைஃப்ல வராத… உனக்கு எவ்ளோ பணம் வேணும்னாலும் கேளு தர்ரேன். பட், ஜஸ்ட் ஸ்டே அவுட் ஆஃப் ஹீம்" என்றவரை புரியாமல் பார்த்தாள் த்வனி.
"ஐ திங்க் யூர் மிஸ்டேகன் மேம், நீங்க யாரேன்னு நெனச்சு என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க, ஓஓஓ… ஒருவேள உங்க பையன லவ் பண்றது நான்னு நெனச்சு நீங்க டீல் பேச வந்திருந்தீங்கள… ஐம் சோ சாரி மேம், உங்க பையன லவ் பண்ற அந்த முட்டாள் நா இல்ல… அது வேற ஒரு லூசு" என்ற த்வனியை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்த சௌந்தர்யா.
"லாரண்யா… உனக்கு லயா, என் பையனுக்கு ரென்யா. அப்பா சங்கர், அம்மா பிரியா. அவளுக்கு நிச்சயம் பண்ணியிருக்கப் பையன் பேரு கதிர். அவன் ஒரு டாக்டர் யூ.எஸ் இருக்கான். லயாவும் நீயும் மோர் தென்ன ஃப்ரண்ஸ், நீ லயாக்கு கார்டியன் ஏஞ்சல் மாதிரி, அதனால தான் எம் பையன்கிட்ட இருந்து அவனோட ரென்யாவை எப்படியாது பிரிக்கணும் ஒவ்வொரு நிமிஷமும் ட்ரை பண்ணிட்டு இருக்க… ஐம் ஐ கரெக்ட் த்வனி" என்ற சௌந்தர்யா த்வனி ஆச்சரியப்படுவாள் என்று எதிர்பார்க்க அவளோ, "நீங்க பிஸ்னஸ் வுமன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க, சோ... வாட் நெக்ஸ்ட்" என்று சாதாரணமாகக் கேட்க, இப்போது சௌந்தர்யா தான் அசந்து போனார்.
"விக்ரம் லயா மேல உயிரையே வச்சிருக்கான். அவனுக்கு அவனோட லயா கிடைக்கணும். அவ ஒருத்திய நான் விக்ரமுக்கு குடுத்திட்ட, இதுவரை அவன் என்னால இழந்த எல்லாத்தையும் ஈடுகட்டுன மாதிரி. அவனுக்கு லயாவை கல்யாணம் பண்ணி வைக்கணும் நா நெனைக்கிறேன். ஆனா, நீ அதுக்குத் தடைய இருக்க, ப்ளீஸ் இனிமே நீ அவங்க ரெண்டு பேர் நடுவுல வராத த்வனி" என்க, அவர் தன்னிடம் இதைச் செய் என்று கேட்கிறாரா, இல்லை இதை தான் செய்யவேண்டும் என்று சொல்கிறாரா என்று புரியாமல் த்வனி குழம்பினாள்.
"லிசன் மேம், எனக்கு உங்கள பத்தி தெரியாது. உங்க பையன் பத்தி எல்லாம்... எனக்குத் தேவையே இல்ல. எனக்கு முக்கியம் என்னோட லயா தான், லயா மட்டும் தான்" என்று பிடிவாதமாகச் சொல்ல,
"ஏம்மா உனக்கு நான் சொல்றது புரியலயா…? அவங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க, விக்ரமுக்கு அந்தப் பொண்ணு தான் எல்லாம், அந்த அளவுக்கு அந்தப் பொண்ணு எம் பையன் மனசுல இடம் புடிச்சிருக்கா… புரிஞ்சிக்க" என்று கிட்டத்தட்ட சௌந்தர்யா கத்தி சொல்ல, த்வனி அவரை உற்று பார்த்தாள்.
"என்னம்மா பெரிய இடம்… என்ன உங்களுக்கு அடுத்த இடமா. அம்மா எனக்கு அடுத்து லயாவ தான் என் பையன் நேசிக்கிறன்னு சொல்றீங்கள?" என்று த்வனி நக்கலாகக் கேட்டாள்.
அவள் கேள்வியில் கண் கலங்கிய சௌந்தர்யா, "அவன் லைஃப்ல எனக்குன்னு எந்த இடமும் இல்லம்மா" என்றவர் குரலில் அப்படி ஒரு வலி.
அவர் கண்களில் அருவி போல் கண்ணீர் வழிந்ததை பார்த்து த்வனிக்கு ஒருமாதிரி ஆகிவிட, "ஆன்ட்டி ப்ளீஸ் அழாதீங்க" என்று ஓடிப்போய் ஒரு கிளாசில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
"எல்லாம் என் தப்பு தான். எம்புள்ள இப்டி இருக்க நான் தான் காரணம்" என்று உடைந்து அழுதார் சௌந்தர்யா.
"அவனுக்கு மூணு வயசு இருக்கும்போது அவனோட அப்பா தவறிட்டாரு, பிஸ்னஸ் லாஸ், அவர் சாவு, சுத்தி கடன், சொந்தங்களே முதுகுல குத்தின வலின்னு எல்லாம் ஒரே நேரத்தில் என்னை அடிச்சு தொறத்துச்சு… மறஞ்சு மறஞ்சு ஓடிட்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் நின்னு திரும்பி பாத்தேன் அங்க விக்ரம் இருந்தான். அவனுக்காக, அவனோட எதிர்காலம் நல்லா இருக்கணும்னு எல்லாத்தையும் எதிர்த்து நின்னேன். என்னைத் துரத்தி அடிச்ச எல்லாரையும் நா திரும்பி அடிக்க ஆரம்பிச்சேன், வெறித்தனமா ஒழச்சேன். இழந்ததைவிடப் பத்து மடங்கு சம்பதிச்சேன். ஆனா…" என்றவர் பார்வை எங்கோ வெறிக்க, " விக்ரம்காக நா பணம், பவர் எல்லாத்தையும் சேர்த்து வச்சேன். ஆனா, அவனோட உண்மையான தேவை என்னன்னு நா தெரிஞ்சிக்காம இருந்துட்டேன். அந்த வயசில் அவனுக்குப் பணம், பவர், சொத்து, பத்து எவும் தேவையில்ல, அவனுக்கு அவனோட அம்மா மட்டும் தான் தேவைனு நா உணராம போய்டேன். அதை நான் உணர்ந்த நேரம் எல்லாம் என் கையவிட்டு போய்டுச்சு… அதோட விளைவு " என்றவரை த்வனி கண்கள் விரிய ஒருவித பயத்தோடு பார்க்க, "எஸ்… அவனுக்கு மனநோய். சின்ன வயசுல இருந்து தனிமையில் இருந்து இருந்து அவன் அந்தத் தனிமையில தன்னையே அவன் தொலச்சிட்டான். எந்த அம்மா பாசமும் அரவணைப்பும் இல்லாம அவன் இப்டி ஆனானோ, அதை நா அவனுக்குக் கொடுக்கும் போது அவன் அதை எத்துக்கல… எதுக்கிற நிலையில அவன் இல்ல, என்னையே அந்நியமா பாக்க ஆரம்பிச்சிட்டான்."
"அவன் மனசு ரொம்பவே பாதிச்சிடுச்சு… அவன் என்ன நெனச்சது அது நடக்கணும். ஒருவேள நடக்காம போனா… அவனைக் கன்ட்ரோல் பண்ணவே முடியாது. வெறிபுடிச்ச மாதிரி நடந்துக்குவான். யோசிக்கும் சக்தியையே அவன் இழந்துடுவான். எதிர்ல யார் இருக்கான்னு கூட பாக்க மாட்டான். கண்ணு மண்ணு தெரியாம அடிக்க ஆரம்பிச்சிடுவான். அப்டிபட்டவன் கிட்ட இப்ப கொஞ்ச நாளா நெறய மாற்றம் தெரியுது. அதுக்கு காரணம் லயா தான். லயாவை சந்திச்ச அப்றம் தான் அவன் நார்மல்ல மாறி இருக்கான். அவன் மனசில் லயாவும் இருக்க இல்ல த்வனி, லயா தான் அவன் மனசாவே இருக்க… லயா தான் அவனோட உலகம். அவனோட டாக்டர் கூட லயா அவனோட இருந்த கொஞ்ச நாள்ல விக்ரம் முழுசா சரியாகிடுவான்னு சொன்னாரு" என்றது தான் த்வனிக்கு எங்கிருந்து அவ்வளவு கோவம் வந்ததோ, "வெளிய போங்க" என்று கத்தியே விட்டாள்.
"எம்மா நீங்களும் ஒரு பொண்ணு தான? எப்டி உங்களால இப்டி பேசமுடியுது. உங்க பையன் சரியாக என் லயாவ நான் பலி குடுக்கணுமா… எங்களுக்கு என்ன தலையெழுத்த பூ மாதிரி பொண்ணை வளத்து உங்க பையன் கிட்ட கொடுக்க, அதெப்படி உங்ளால இப்டி ஒரு கேவலமான விஷயத்தை வாய் கூசாம கேக்க முடியுது. இதுவரைக்கும் அப்பா, அம்மா, கதிர்காகத் தான் நான் லயா விக்ரமை மறக்கணும்னு நெனச்சேன். எப்ப விக்ரம் பத்தி தெரிஞ்சிதோ, இப்ப சொல்றேன் என் உயிரோ போனாலும் என் லயாவை உங்க பையன் கூடச் சேர விடமாட்டேன்" என்று உறுதியாகச் சொல்ல, சௌந்தர்யா எழுந்து த்வனி அருகில் வந்தார்.
"நீ இத விட்டு ஒதுங்கி போகாம இருந்த நீ கடைசிய சொன்ன பாரு, உன் உயிர் போகும்னு அது கண்டிப்பா நடக்கும். அதோட சாம்பிள் தான் உன் கையில இருக்க இந்தத் தீக்காயம்" என்ற சௌந்தர்யாவை த்வனி அதிர்ந்து பார்க்க,
"உனக்காக லயா, விக்ரம்கிட்ட சண்ட போட்டிருக்கா, அதுல எனக்கு உன்னவிட த்வனி தான் முக்கியம்னு அவ சொல்லியிருக்கா, அதுக்காக விக்ரம் உனக்குக் குடுத்த தண்டனை தான் அன்னைக்கு உனக்கு லேப் நடந்த ஆக்சிடென்ட். ஒரு சின்னச் சண்டைக்கே இந்த அளவு உன்னைக் காயப்படுத்தி இருக்க விக்ரம். லயா அவனுக்குக் கிடைக்காம போனா, அதுக்கு காரணம் நீயா இருந்தால் என்ன செய்வான்னு யோசிச்சு பாரு" என்றவர் அங்கிருந்து செல்ல, த்வனி பிரம்பை பிடித்தது போல் நின்றாள்.
த்வனி கதிரிடம் நடந்ததைச் சொல்லி, "இப்ப சொல்லு கதிர்… எப்டி என்னால அந்த விக்ரம் கையில லயாவை குடுக்க முடியும்." என்று கேட்க, கதரிடம் பதில் இல்லை.
"என்ன ஆனாலும் சரி கதிர், இத நான் நடக்க விடமாட்டேன். இதுல என் உயிரோ போனாலும் சரி, இல்ல அந்த விக்ரம் உயிரை எடுக்க வேண்டி வந்தாலும் சரி" என்றாள் உறுதியாக.
"அப்றம் என்னாச்சு வருண்? என்ற ஆஷாவின் குரலில் பழைய நிமிடத்தில் இருந்து மீண்ட வருண்,
"இது தான் ஆச்சு" என்று அங்கு சுவற்றில் மாட்டி இருந்து லயாவும் கதிரும் சிரித்தபடி இருந்த அவர்கள் கல்யாண ஃபோட்டைவை கட்டினான்.
"என்ன வருண் சொல்றீங்க, லயா உயிருக்கு உயிரா லவ் பண்ணிட்டு எப்டி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சாங்க?"
"சிம்பிள் ஷாலினி. நான் தான் சொன்னேனே, த்வனி தான் லயாவுக்கு எல்லாத்தையும் விட முக்கியம்னு, அது தெரிஞ்சும் இந்த விக்ரம், த்வனி கையை எரிச்சிருக்கான். சரி அதோட வாயமூடிட்டு சும்மா இருந்து தொலய வேண்டியது தானா, ஏதோ சண்டையில, அன்னைக்கு அவ கைய எரிச்சதோட விட்டீருக்கக் கூடாது, அவளயே மொத்த எரிச்சிருக்கணும்னு, எங்கப்பன் குதிருக்குள் இல்லன்ற மாதிரி இவனே உளற தொலய, லயாக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு… அதுக்குப் பின்ன கேக்கணுமா, த்வனி அப்பவே சொன்னா, நீ சரியான சடிஸ்ட்னு நான் தான் கேக்கல, உனக்கு எவ்ளோ தைரியம் இருந்து என் த்வனி கை எரிச்சிருப்பேன்னு… விக்ரம் கன்னம் பழுக்குற மாதிரி நல்லா நாலு அறைவுட்டுட்டு, இனி உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு சொல்லிட்டு போய்டுச்சு…"
"அப்ப லயா விக்ரமை பிரேக்கப் பண்ணிட்டாங்கள!?" என்று ஆருஷி ஆர்வமாகக் கேட்க, ஆஷா அவள் தலையில் நங்கெனக் கொட்டு வைத்தாள்.
"உனக்கென்னடி அதுல இவ்ளோ ஆர்வம். பாவம் விக்ரம் லயா அப்டி சொல்லும்போது அவனுக்கு எவ்ளோ கஷ்டம இருந்திருக்கும். அதை யோசிக்காம கதை கேக்குற மாதிரி கேக்குற, ஒழுங்க வாய மூடிட்டு இரு" என்றாள் ஆஷா.
"ஏன் அண்ணி என்ன திட்றீங்க… விக்ரம்காகப் பேசுறீங்க, அப்ப அவன் நம்ம த்வனி கைய எரிச்சது மட்டும் நியாயமா?" என்ற ஆருஷி ஆஷா கொட்டிய இடத்தில் தோய்ந்து கொள்ள, "கரெக்ட் தான். ஆனா விக்ரமும் பாவம் தானா ஆரு" என்ற ஆஷா, "அப்றம் என்னாச்சு வருண். அதுக்குப் பிறகு ரெண்டு பேரும் பேசிக்கலயா? நீங்க யாரும் அங்களைக் கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணலயா?"
"அட நீங்க வேறங்க… ஒரு ரெண்டு நாள் அப்டியே விட்டிருந்த அந்தப் பொண்ணே வந்து இவன்கிட்ட பேசி இருக்கும். அதுக்கு அவளோ லவ் இவன் மேல... ஆனா நம்ம பய சரியில்லயே… சண்ட நடந்துச்சு தான், சரி அதுக்கு அப்புறம் கொஞ்ச நேரமாச்சு இந்த விக்ரம் சும்மா இருந்திருக்கணும். இருந்தானா… இல்லயே… ஃபுல்லா தண்ணிய போட்டுட்டு, உடனே லயாவை பாத்தே ஆகணும்னு அடம்புடிச்சி, லயாவ பாக்க கெளம்பிட்டான். விக்ரமுக்கு அன்னைக்குக் கெட்ட நேரம் போல, அன்னைக்கு எங்க காலேஜ் லாஸ்ட் டே. லயா, த்வனி அவங்க ஹாஸ்டல் ஃப்ரண்ஸ் கூட ஹாஸ்டல்ல தங்கி இருந்தாங்க, அது தெரிஞ்சு இவன் நேர அங்க போய்ட்டான்.
