விழி வழி காதல் நுழைந்ததடி 28

 விழி 28


ஆதர்ஷ் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் தன்வி, தன் கணவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் முகத்தின் முன் சொடுக்கிட்ட ஆதர்ஷ், "பதில் சொல்லு தன்வி. நான் எடுத்த உன்னோட கல்யாண முடிவு சரியா? அவன் உன்னை நல்லாப் பார்த்துக்குறானா? என் மேலயோ அவன் மேலயே உனக்கு கோவம் வரலியா?" என்று கேட்டான் பதிலைத் தெரிந்து கொண்டே.


தன்வி தன்னவன் மீதிருந்து பார்வையைத் திருப்பாமலே, "0 % ரெக்ரெட்ஸ் பாஸ். என் புருஷன் என்னை அவ்ளோ நல்லாப் பார்த்துக்குறாரு…‌ வழக்கம் போல உங்க முடிவு இப்பவும் தப்பாப் போகல… அவரு என்னை ஏமாத்தினது மட்டும் தான் அவர் செஞ்ச தப்பு. மத்தபடி ஹீ இஸ் தி பெஸ்ட் ஹஸ்பெண்ட் இன் தி வேர்ல்ட்" என்று கரகரத்த குரலில் மனதில் இருந்து பதில் சொன்னவள் திரும்பி ஆதர்ஷனின் முகத்தைப் பார்த்தாள்.


அதில், ‘என்னை விடவா அவன் உன்னை அன்பாப் பார்த்துகிட்டான்?' என்ற கேள்வி இருக்க, "உங்களைவிட இல்ல தான், ஆனா உங்களைவிட எங்கயும் என் புருஷன் என்மேல வச்ச அன்பு குறைந்தது இல்ல. நீங்க என்மேல வச்ச அன்பு எப்படிப் புனிதமானதோ, அதே மாதிரி என்னோட தஷ் என் மேல வச்ச காதலும் மழைத்துளி மாதிரிப் பரிசுத்தமானது பாஸ்." என்று சொல்ல அதீஷனுக்கு உள்ளுக்குள் ஆயிரம் பூக்களைத் தன்மீது கொட்டியது போல் இருந்தது. 


அவனுக்கு நன்கு தெரியும், தன்வி வாழ்க்கையில் ஆதர்ஷனின் இடத்தை யாரும் நெருங்க முடியாது என்று. அப்படி இருக்க இன்று அவனுக்கு இணையாகத் தானும் தன்னவளின் மனதில் நிறைந்திருப்பதை நினைத்துப் பார்க்கவே அவனுக்குத் தித்தித்தது.


அவளின் வார்த்தையில் இருந்து அவளுக்கு அதீஷன் மீதிருக்கும் காதலின் ஆழத்தை உணர்ந்து கொண்ட ஆதர்ஷ், "அப்ப எல்லாம் தெரிஞ்ச பிறகு நீ அவனை வெறுக்க மாட்ட… அப்படித் தான?" என்று கேட்க, 


தன்வி திரும்பி அவள் கணவனைப் பார்த்தவள், "என்னை அவரு" என்றவள் நிறுத்தி, ஆதர்ஷனை அடிபட்ட பார்வை பார்த்தபடி, "என்னை நீங்க ரெண்டு பேருமே தான் ஏமாத்தி இருக்கீங்க, அதுக்காக உங்க ரெண்டு பேர் மேலயும் எனக்கு கோவம், வருத்தம் எல்லாம் நிறைய இருக்கு தான். ஆனா…" என்றவள் தொண்டை அடைக்க கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, 


"என்னால உங்க ரெண்டு பேர் மேலயும் கோவத்தைக் காட்ட முடியல பாஸ். முடியலங்கறதைவிட என் கோவத்தைக் காட்ட எனக்குத் தெரியல. உங்க ரெண்டு பேர் முகத்தைப் பார்க்கும்போது நான் ஏமாந்துட்டேன்னு வலிக்கல பாஸ், என்னை ஏமாத்தினது நீங்கன்ற வலி தான் அதிகமா இருக்கு…" என்றவள் எச்சிலை விழுங்கி துக்கத்தை மறைத்துக் கொண்டவள் மனதில் அத்தனை வலி. என்னதான் அவளின் வலியை அவர்களிடம் மறைக்க நினைத்தாலும் அவளின் வலி நிறைந்த குரலே அவளின் நிலையைச் சொல்லாமல் சொல்லிவிட, அங்கிருந்தவர்களுக்கு நன்கு புரிந்தது. தங்கள் மனது வேதனைப்படக் கூடாது என்று தன்வி இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள் என்று.


கண்ணீரைத் துடைத்து பேச்சைத் தொடந்த தன்வி, "ஆனாலும் என்னால என்னைக்கும் உங்க ரெண்டு பேரையும் வெறுக்க முடியாது பாஸ், அதுவும் தஷ்" என்றவள் கண்களில் அப்படி ஒரு தவிப்பு, "என்னால அவரை இந்த  ஜென்மத்தில் வெறுக்க முடியாது பாஸ். அவரு இல்லாட்டி உங்க தன்வியும் இருக்க மாட்டா. நீங்க என் உறவுன்னா, அவரு என்னோட உணர்வோட கலந்துட்டாரு" என்று சொல்ல, அதீஷன் ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டான்.


"சாரிடி… ரொம்ப சாரி…" என்று அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், அவளின் கைகளை எடுத்து தன் முகத்தில் வைத்துக் கொண்டு, "நான் உன்னை ஏமாத்த நினைக்கலடி. எங்க உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு பயந்து தான்டி எதுவும் சொல்லாம இருந்தேன். ஆனா, நீ அன்னைக்கு… உ..உன்னை அந்த நிலையில் பார்த்த அப்புறம்… என்ன ஆனாலும் பரவாயில்லை, உன் உயிர் தான் முக்கியம்னு தோணிச்சு, அதான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்" என்றான் அவள் தற்கொலைக்கு முயன்ற நிகழ்வை நினைத்துப் பார்த்து உடல் நடுங்க.


"தப்பு தான்டி… எல்லாம் எங்க" என்றவன் நிறுத்தி, "இல்ல என் தப்பு தான்… உன்னைப் புடிச்சிருக்குன்னு நான் முதல்லயே சொல்லி இருக்கணும்" என்றவன் அவள் முட்டியில் முகம் புதைத்துக் கொண்டு மன்னிப்பு வேண்ட, ஆதர்ஷனுக்குப் புரிந்துவிட்டது எதோ பெரிதாக நடந்திருக்கிறது என்று.


"இவ என்ன பண்ணா அதீ?" என்று ஆழ்ந்த குரலில் கேட்ட ஆதர்ஷனையும் தன்வியையும் அதீஷன் மாறி மாறிப் பார்க்க, தன்வியோ சொல்ல வேண்டாம் என்பதுபோல் கண்களால் கெஞ்ச,


அதைக் கவனித்த ஆதர்ஷ், "ஐ ஆம் ஆஸ்கிங்‌ யூ அதீ… வாட் ஹாப்பென்" என்று கர்ஜிக்க, வேறு வழி இல்லாமல் தன்வி தற்கொலை செய்து கொள்ள முயன்றதைச் சொன்ன அதீஷன், அதற்கான காரணத்தை மட்டும் மறைத்து விட்டான்.


அவன் சொல்லி முடித்த அடுத்த நொடி மூன்று பேர் கன்னத்தில் பளாரென்று அறை விழும் சத்தம் அந்த அறை எங்கும் எதிரொலித்தது.


தன்வி செய்ததைத் தாங்க முடியாமல் தன்னையும் மீறி ஆதர்ஷன் தன்வியை அறைந்தவன், "எதுக்காகடி அப்படிப் பண்ண?" என்று கத்த, அடுத்த நொடி "தர்ஷா" என்று அதட்டிய அமிர்தா, ஆதர்ஷன் மற்றும் அதீஷன் இருவர் கன்னத்திலும் தன் கைரேகை பதியும் அளவுக்கு ஓங்கி அறைந்திருந்தார்.


"பண்ற தப்பெல்லாம் நீங்க ரெண்டு பேரும் பண்ணிட்டு அவளை ஏன்டா அடிக்கிற நீ… எங்க இருந்து வந்தது இந்தப் பழக்கம். பொம்பளையைக் கை நீட்டி அடிக்கிறவன் எல்லாம் என்னைப் பொறுத்தவரை மனுஷனே இல்ல… அதுவும் வயித்துல புள்ளையை வச்சிட்டு இருக்க பொண்ணு மேல கை நீட்ற நீ…" என்று ஆதர்ஷனை அடித்தவர், "இதெல்லாம் உன்னால தான்டா" என்று அதீஷனையும் அடித்திருந்தவர் தொடர்ந்து,


"அவ செஞ்சது சரின்னு நான் சொல்லல… " என்றவர் தன்வியைப் பார்த்து, 


"நீ எதுக்காக அப்படி ஒரு முடிவெடுத்தேன்னு எனக்குத் தெரியாது‌. அதீ காரணத்தை சொல்லாம மறைக்கும் போதே தெரியுது, அது உங்க ரெண்டு பேரோட அந்தரங்கம்னு, சோ எனக்கு காரணம் தெரியத் தேவையில்லை… பட், எந்தக் காலத்திலும் தற்கொலை எந்தப் பிரச்சனைக்கும் சொல்யூஷன் இல்ல, புரிஞ்சுதா"  என்று அதட்டலாகக் கேட்க, தன்வியின் தலை மேலும் கீழும் ஆடியது‌‌.


"அதே மாதிரி நீங்களா ஒரு முடிவெடுத்து, அது அவளுக்குப் புடிக்குமா இல்லையான்னு யோசிக்காம, நீங்களா அவ நல்லா இருப்பான்னு நினைச்சு அந்த முடிவை அவ மேல திணிச்சிருக்கீங்க, அது பெரிய தப்பு தர்ஷா, அதுவும் எனக்குத் தெரியாம இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சிருக்கீங்க. நான் அத்தனை முறை அதீ ஏன் இந்தியா போறான்? தன்வி எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சான்னு பலமுறை கேட்டும் ரெண்டு பேரும் எல்லாத்தையும் மறச்சு வச்சு எங்க ரெண்டு பேரையுமே ஏமாத்திட்டு, இப்ப வந்து அவளை அடிக்கிறது கொஞ்சம் கூடச் சரியில்ல" என்று மகன்களை வசைபாடித் தீர்க்க, அவருக்கு பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து நின்றனர் இரு ஆண்களும்.


சில நொடிகள் இறுக்கமாகச் செல்ல, தன்வி விசும்பியபடி கண்களைத் துடைத்துக் கொண்டே, "சரி இப்ப சொல்லுங்க பாஸ்? என்னாச்சு? எப்ப இருந்து இந்த நாடகம்?" என்றவள் முகம் மீண்டும் இறுகிவிட்டது.


"எப்ப இருந்து இந்த நாடகம்னு கேட்ட நீ? ஏன் இந்த நாடகம்னு இதுவரை ஒரு வார்த்தை கூடக் கேக்கவே இல்லயே தன்வி?" என்று ஆதர்ஷன் கேட்க, அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த தன்வி, "அதை நீங்க சொல்லித்தான் நான் தெரிஞ்சிக்கணும்னு அவசியம் இல்ல. நீங்க என்னோட லைஃப் நல்லா இருக்கணும்னு தான் இப்படிப் பண்ணி இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்." என்றவளின் தன் மீதான நம்பிக்கையை நினைக்க நினைக்க ஆதர்ஷனுக்கு கர்வம் பெருக, தாயைத் திரும்பி ஒரு அர்த்தப் பார்வை பார்த்தான்.

 

"எஸ் தன்வி… உனக்காக, உன் வாழ்க்கைக்காக தான் இதெல்லாம் செஞ்சேன். ஆனா, இதுல என்னோட சுயநலம் கொஞ்சம் இருங்கு" என்றவன் பார்வை அதீஷன் மேல் பதிந்தது. அதைத் தன்வியும் கவனித்தாள்.


"எனக்குப் புரிலயல?" என்றாள்.


"புரியும்" என்ற ஆதர்ஷன் நடந்ததை சொல்லத் தொடங்கினான்.


"தாத்தா நம்ம கல்யாணம் பத்திப் பேசும்போது எனக்கு உள்ளுக்குள் அப்படி ஒரு பதட்டம் தன்வி‌. அதுக்குக் காரணம் என்னோட நிலையோ, ஆலனோ மட்டும் இல்ல தன்வி, நான் என்னைக்குமே உன்னை அப்படி ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தது இல்ல. நீ அப்பவும் இப்பவும் எப்பவும் எனக்கு குழந்தை தான். நீ என் கண்ணுக்கு அப்படி தான் தெரியுற, உன்னை பத்திரமா என் கைக்குள்ள வச்சுப் பார்த்துக்கணும்னு மட்டும் தான் எனக்குத் தோணுச்சே தவிர, வேற எந்த உணர்வும் உன் மேல எனக்கு வரவே இல்ல தன்வி" என்றவன் அவளை நிமிர்ந்து பார்த்து, "உனக்கும் அப்படித் தான்னு எனக்குத் தெரியும். எங்க, என்னைப்பத்தி தெரிஞ்சா தாத்தாக்கும், என்னோட கௌரவத்துக்கும் ஏதாவது பிரச்சனையோ அவமானமோ வந்திடுமோன்னு பயந்து தான, நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்ச?" என்று கேட்க தன்வியின் தலை ஆமாம் என்று ஆடியது.


"உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிட்டு, அப்புறம் தாத்தாகிட்ட நேரம் பாத்து உண்மையைச் சொல்லிட்டு நான் இங்க யூ.எஸ் லயே செட்டில் ஆகிடலாம்னு தான் தன்வி நினைச்சிட்டு இருந்தேன்‌. ஆனா, தாத்தா நமக்குக் கல்யாணம் நடந்தே ஆகணும் டெட் லைன் வச்சதும் எனக்கு என்ன பண்றதுன்னு புரியல. அந்த டைம் எனக்கு இருந்த ஒரு ஆறுதல் உனக்கு என்மேல எந்த விதமான ஃபீலிங்ஸ்சும் இல்லைன்றது மட்டும் தான்‌. சரி உனக்கு முதல்ல மேரேஜ் முடிச்சிடலாம்னு நினைச்சா நீ பாட்டுக்கு நான் கல்யாணம் பண்ண அப்புறம் தான் உன் கல்யாணம்னு முடிவாச் சொல்லி என்னை லாக் பண்ணிட்ட… எனக்கு அடுத்து என்னன்னு புரியாம அதீஷ்க்கு ஃபோன் பண்ணேன். அவன் தான் என்னையும் ஆலன் பத்தியும் உன்கிட்ட சொல்லச் சொன்னான்." என்க தன்வி திரும்பி தன்னவனைக் கனல் கக்கும் விழிகள் கொண்டு பார்த்தவள்,


 "அப்ப முதல்ல இருந்தே இந்த கேம்ல இவரு இருக்காரு… அப்படித் தானே?" என்று அழுத்தமாகக் கேட்க, அதீஷன் அவள் கேட்ட தோரணையில் எச்சில் கூட்டி விழுங்கியபடி, "ம்ம்ம்" என்று சொல்ல, ஊருக்கே அடங்காத தன் உடன்பிறப்பு இந்தக் குட்டிப் பெண்ணின் ஒற்றைப் பார்வைக்கு பெட்டிப் பாம்பாய் அடங்கி இருப்பதைப் பார்த்த ஆதர்ஷனுக்கு சிரிப்பு தான் வந்தது.


சிரித்தபடியே பேச்சைத் தொடர்ந்த ஆதர்ஷ், "எப்பவும் எனக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் முதல்ல நான் அதை ஷேர் பண்றது அதீஷ் கிட்ட தான். முதல் முதல்ல என்னையும் ஆலனையும் சரியாப் புரிஞ்சிகிட்டதும் இவன் தான். இவன் மட்டும் இல்லாட்டி நான் என்ன பண்ணி இருப்பேன்னு எனக்கே தெரியல" என்ற ஆதர்ஷன் தன் உடன்பிறப்பை நன்றியோடு பார்க்க, அவனோ கண்களை மூடித் திறந்து உனக்காக எப்பவும் நான் இருப்பேன் என்றான் கண்களால். 


"தாத்தா சொன்னது, நீ சொன்னது எல்லாம் யோசிச்சுப் பார்க்கும்போது அப்ப அதீஷ் சொன்னது எனக்கு சரின்னு தோணுச்சு. சோ, நான் என்னைப்பத்தி உன்கிட்ட சொன்னேன். ஆலன் பத்தித் தெரிஞ்சதும் நீ வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்குவேன்னு தான் நான் நெனச்சேன். ஆனா, நீ என்னடான்னா என்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என் தலையில் குண்டைத் தூக்கிப் போட்டுட்ட… நானும் உனக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் பார்த்தேன். ஆனா, நீ மாறவே இல்ல. கடைசியா நீ செத்துடுவேன்னு சொன்னதும் தான், நீ எடுத்த முடிவுல நீ எவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கேன்னு எனக்குப் புரிஞ்சிது. அந்த நிமிஷம் சத்தியமா நான் ரொம்ப உடஞ்சு போயிட்டேன் தன்வி. எங்க என் தன்வியோட வாழ்க்கை என்னால அழிஞ்சு போய்டுமோன்னு ரொம்பப் பயந்துட்டேன். அடுத்து என்ன பண்றதுன்னே எனக்குப் புரியல. அப்பவும் நான் போய் நின்னது அதீஷ் கிட்ட தான். அவன் தான் உனக்கு கொஞ்சம் டைம் கொடுக்கலாம்னு சொன்னான். ஆனா, எனக்குத் தெரியும் நீ உன் முடிவில் இருந்து மாற மாட்டேன்னு… அதனால நானே உனக்கும் சேர்த்து ஒரு முடிவெடுத்துட்டேன்" என்றான் தன்வி, அதீஷன் திருமண புகைப்படத்தில் பார்வையைப் பதித்தபடி.


"அதீஷ்கிட்ட பேசிட்டு, அவன் சொன்ன மாதிரி வேலை விஷயமா யூ.எஸ் போறேன்னு சொல்லிட்டு இங்க வந்துட்டேன். அந்தப் பிரிவு உன்கிட்ட ஏதாவது மாற்றத்தையும் ஏற்படுத்தும்னு நினைச்சு வந்துட்டேன்." என்று தளர்ந்த குரலில் சொன்னவன் நினைவுகள் அன்றைய நாளை நோக்கிச் சென்றது.


அன்று தன்வியின் முகத்தைக் கூடப் பார்க்காமல் ஏர்போர்ட்டில் இருந்து சென்றவனை முறைத்தபடியே இருந்தான் ஆலன்.


"நீ பண்றது கொஞ்சம் கூடச் சரியில்ல ஆஷ். அவ சின்னப் பொண்ணு. அவ மனசை இப்படிக் காயப்படுத்துறது சரியில்ல" என்றான் கோவமாக.


"ப்ளீஸ் ஆலன்… நான் செய்யறது எல்லாமே அவ நல்லா இருக்கணும்னு தான் செய்றேன். அது உனக்கும் தெரியும். அப்புறம் எதுக்காக இப்படிப் பேசுற?" என்றான் ஆதங்கமாக‌.


"நீ சொல்றது எனக்குப் புரியுது ஆஷ். பட்… ஏஞ்சல் பாவம்" என்றவனை இயலாமையோடு பார்த்தவன், "பாவம் தான்… அதுக்காக இப்ப என்னால என்ன செய்ய முடியும்னு நீயே சொல்லு…" என்றவன் தொடர்ந்து, "என்ன? அவ சொல்ற மாதிரி என்னை அவளை மேரேஜ் பண்ணிக்கச் சொல்றியா?" என்று கேட்க, "வொய் நாட்?" என்ற ஆலனின் பதிலில் அதிர்ந்துதான் போனான் ஆதர்ஷ்.


"வாட் ஆர் யூ டாக்கிங் ஆலன்? ஆர் யூ அவுட் ஆப் யூர் மைண்ட்" என்றான் கோவமாக.


"நோ ஆஷ்… நான் சரியாதான் பேசுறேன். ஐ நோ அபௌட் யூ வெரி வெல். இன்கேஸ் நான் உன் லைஃப்ல வராமப் போயிருந்தால் நீ ஏஞ்சலை மேரேஜ் பண்ணி இருப்பியோன்னு எனக்குத் தோணுது ஆஷ்" என்றவன் கன்னத்தில் அறைந்திருந்தான் ஆதர்ஷ்.


"ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் ஆலன்… இதுவே நீ என்னையும் தன்வியையும் சேர்த்து வச்சுப் பேசுறது லாஸ்ட்டா இருக்கட்டும். இன்னொரு முறை நீ இப்படிப் பேசினா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்." என்று கடுங்குரலில் சொல்ல அதன் பிறகு இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை.


இருவரையும் அழைத்துச் செல்ல ஏர்போர்ட் வந்திருந்த அதீஷன் வெகு நாட்கள் கழித்துப் பார்த்த தன் உடன்பிறப்பை ஆசையாகக் கட்டிக் கொள்ள, ஆதர்ஷனும் அவனை அணைத்துக் கொண்டான். 


"ஹாய் ஆலன்…" என்று ஆலனிடம் கை நீட்டிய அதீஷன் கையைப் பிடித்துக் குலுக்கிய ஆலன், "பைன் அதீ" என்றான் எந்த உணர்வும் இல்லாமல். இருவரின் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டவன், மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருவரையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.