விழி வழி காதல் நுழைந்ததடி. 33
விழி 33
அதீஷன் காட்டிய புகைப்படங்களைப் பார்த்து எச்சில் கூட்டி விழுங்கிய தன்வி, "இ..இது உங்களுக்கு எப்படிக் கிடைச்சிது…" என்று இழுத்தவள், "அப்..அப்ப என்னை நீங்க ஸ்பை பண்றீங்க இல்ல" என்று கோவமாகக் கேட்டாள்.
"என்னை வேற என்னடி செய்யச் சொல்லற? ஒரு வாரமா நீ என்கிட்டப் பேசல… ஆனா, நாள் முழுக்கவும் ஒன்னு ஃபோன் பேசிட்டு இருக்க, இல்ல எங்கயாவது வெறிச்சுப் பார்த்தபடி தீவிர யோசனையில் இருக்க… நான் உன் புருஷன்டி, உள்ளும் புறமும் உன்னை முழுசாய்ப் புரிஞ்சி வச்சிருக்க எனக்கு, அன்னைக்கு நீ சொன்ன உன்கிட்டப் பேச மாட்டேன்க்கு அர்த்தம் புரியாதுன்னு நினைக்கறயா?" என்றான் வலியோடு.
அவனின் கேள்வியில் அவளின் கண்கள் கலங்கிவிட, "எ..எனக்கு வேற என்ன பண்றதுன்னு தெரியல" என்றாள் அழுகையோடு.
"சரி, நான் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லு, தர்ஷன் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை… அவன் அப்படி இருக்கும் போது, நீ மட்டும் என்னோட சந்தோஷமாய் இருக்க உனக்குக் கஷ்டமா இருக்கு… சோ, அவன் வாழ்க்கை சரியாகும் வரை என்னைப் பிரிஞ்சு இருக்க நினைக்கிற, ஓகே… ஒருவேளை, தர்ஷன் காலம் முழுக்க இப்படியே இருந்துட்டா என்னடி பண்ணுவ? என்னை அப்படியே விட்டுப் போய்டுவியா நீ? என்னை விடுடி, நான் உன்மேல வச்ச காதலுக்கு சாட்சியா உனக்குள்ள வளர்ந்துட்டு இருக்கே நம்ம குழந்தை, அதை என்னடி செய்யப் போற? எனக்கு என் ஆது தான் முக்கியம். சோ, இந்தக் குழந்தை வேணாம்னு தூக்கிப் போட்டுற போறியா" என்று கேட்டு முடிக்கும் முன் அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள் தன்வி.
கண்ணீர் வழியும் கண்களோடு அவன் சட்டைக் காலரைப் பிடித்து உலுக்கியவள், "எவ்ளோ தைரியம் இருந்தா என் குழந்தையைப் பத்தி நீ இப்படிப் பேசுவ? என் குழந்தையைத் தூக்கிப் போட்டு போற அளவுக்கு என்னை என்ன ராட்சசின்னா நினைச்ச நீ…" என்று கத்தியவள்,
"அதென்ன உன் காதலுக்குச் சாட்சின்னு சொல்ற… அப்ப நான் மட்டும் உன்னை லவ் பண்ணலயா என்ன?" என்றவள் கண்ணீரைத் துடைத்தபடியே, "அதுசரி, நான் எப்ப உன்னையும் பாப்பாவையும் விட்டுப் போறேன்னு சொன்னேன். ஆதுக்கு ஒரு நல்ல லைஃப் கிடைக்கணும், அதுவரை நம்ம விலகி இருக்கலாம்னு தான் நினைச்சேன்" என்றவளிடம்,
"அப்படி ஒண்ணு நடக்காட்டி நீ என்ன பண்ணுவேன்னு சொல்லு?" என்று அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றாள்.
"ம்ம்ம்" என்று பெருமூச்சு விட்டவன், "நீ தலையைக் குனிச்சு இருக்குற விதமே சொல்லுதேடி, நீ எடுத்திருக்கும் முடிவை" என்று விரக்தியாகச் சிரித்தவன்,
"அவனுக்கு நீ முக்கியம், உனக்கு அவன் முக்கியம். என்னைப்பத்தி… எனக்கும் ஒரு மனசு இருக்கும்னு எப்பவுமே நீங்க ரெண்டு பேரும் யோசிக்கவே மாட்டீங்க இல்ல…" என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தவள்,
"எனக்கு வேற வழி தெரியல தஷ்… ஆதுவை என் பேச்சைக் கேக்க வைக்க இது ஒண்ணு தான் வழி. கண்டிப்பா நானும், நீங்களும் பிரியுறோம்னு சொன்னா அவர் சம்மதிக்க மாட்டாரு… சோ, மேரேஜ் பண்ண ஒத்துக்குவாரு" என்றாள் தலையைக் குனிந்தபடியே.
அவளை அழுத்தமாகப் பார்த்தவன், "என்னோட காதல் உனக்கு பணையப் பொருளா ஆகிடுச்சு இல்லடி" என்றான் வலி நிறைந்த குரலில்.
அந்த வலி அவளையும் தாக்க, "எனக்கு என் ஆது நல்லா இருக்கணும். அதுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்று சொல்ல, அதீஷனுக்கு எதிலேயோ தோற்ற உணர்வு.
ஆழ்ந்து மூச்செடுத்து தன்னைச் சமாதானம் செய்து கொண்டவன், "உன் இஷ்டம்… என்ன வேண்டுமானாலும் செய், ஒருவேளை உனக்கு டிவோர்ஸ் வேணுமானாலும் கூடக் கேளு… அதையும் கொடுத்துட்டு ஒரேயடியாய் போயிடுறேன்" என்று முதுகைக் காட்டி நின்றவனை, "தஷ்" என்று கதறியபடி பாய்ந்து வந்து பின்புறமாக அவனைக் கட்டிக் கொண்டவளின் கண்ணிலிருந்து வழிந்து வந்த கண்ணீர்த் துளிகள் அவன் சட்டையின் பின்புறத்தை ஈரமாக்கியது.
"ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? எனக்கு வலிக்குது தஷ்…" என்றவள் கையைப் பிடித்து இழுத்து தன் முன் நிற்க வைத்தவன், அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி, "வேற எப்படிடி பேசச் சொல்ற, சொல்லுடி, வேற எப்படிப் பேசச் சொல்ற?" என்று கர்ஜிக்க, முதல் முறையாக அவன் கோவத்தைக் கண்டவளுக்கு நெஞ்சம் துடிக்க, தன் கைகளை எடுத்துத் தன் வயிற்றில் வைத்து அழுத்திக் கொண்டாள். அவளின் பயம் அவள் பிள்ளையைப் பாதிக்கக் கூடாது என்று.
அவள் செயலில் தன் தவறை உணர்ந்த அதீஷன், "சாரி…" என்றவன், "நான் தோத்துட்டேன் தன்வி… தர்ஷன்கிட்ட நான் தோத்துட்டேன். உனக்கு தர்ஷன் எவ்ளோ முக்கியமோ, அதே அளவு நானும் முக்கியம்னு ஒரு பிரம்மையில் இருந்துட்டேன். இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு, எப்பவும் உனக்கு உன்னோட ஆது தான் முக்கியம். நா..நானெல்லாம் விட்டுக் கொடுக்கும் இல்ல, விட்டுப்போற இடத்தில் தான் இருக்கேன்" என்றவன் குரல் உடைந்துவிட, அவனை சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தவள், அவன் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் அடுத்த வார்த்தை பேச முடியாதபடி அவன் இதழ்களைத் தன் இதழால் அழுத்தி மூடிவிட்டாள்.
எவ்வளவு நேரம் அந்த முத்த யுத்தம் தொடர்ந்தது என்று இருவருக்கும் தெரியவில்லை. முதலில் சுயவுணர்வுக்கு வந்த அதீஷன், அவளைத் தன்னில் இருந்து பிரித்தெடுத்தவன், "போதும் விடுடி, உள்ள இருக்கு எம் புள்ளைக்கு மூச்சு முட்டும்" என்க, "அப்ப எனக்கு மூச்சு முட்டினால் பரவாயில்லயா உனக்கு" என்று அதற்கும் சண்டைக்கு வந்தாள்.
"நான் எப்படி அப்படிச் சொன்னேன். எனக்கு நீங்க ரெண்டு பேரும் முக்கியம் தான்" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள், "எனக்கும் அப்படித்தான் தஷ். எனக்கும் நீங்க, ஆது ரெண்டு பேரும் முக்கியம். ஆது என்னோட உலகம்னா, நீங்க என்னோட உயிரு தஷ். ஆது இல்லாட்டி என்னால இருக்க முடியும். ஆனா, நீங்க இல்லாமல் போனால் உங்க தன்வியும் இருக்க மாட்டா தஷ்… அப்புறம் எப்படி நீங்க தோத்ததாகும்? எப்படி நீங்க அப்படிச் சொல்லலாம். அவர் மேல நான் வச்சிருக்க அன்போடு எப்படி நான் உங்க மேல வச்சிருக்கும் காதலை நீங்க கம்பேர் பண்ணலாம்…" என்று கலங்கிய குரலில் கேட்க, அவள் பின்னந்தலையில் கைவைத்து அவள் முகத்தைத் தன்னை நோக்கி இழுத்தவன், தன் நெஞ்சோடு பொறுத்திக் கொண்டான்.
"சரிடி… ஏதோ ஒரு கோவத்தில் அப்படிச் சொல்லிட்டேன், சாரி…" என்றவன் நெஞ்சில் முகம் புதைத்தபடியே, "ஆதுக்கு ஒரு நல்ல லைஃப் அமையணுங்குறது எனக்கு முக்கியம் தான்… ஆனா, அதுக்காக நான் உங்களை விட்டுப் போய்டுவேன்னு அர்த்தம் இல்ல… இது சும்மா ஆதுவை மிரட்ட தான்." என்றாள் கெஞ்சலாக.
"ம்ம்ம் புரியுது… பட், நீ பண்றது சரின்னு உனக்குத் தோணுதா? ஐ மீன், தர்ஷன் பத்தித் தெரிஞ்சும் நீ இப்படிப் பண்றது சரியா? இது தர்ஷன் பத்தி மட்டும் இல்ல, அந்தப் பொண்ணையும் கொஞ்சம் நினைச்சுப் பாரு" என்றான் சராசரி மனிதனாக.
"நான் எல்லாத்தையும் யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தேன். இன்ஃபேக்ட், எனக்கு இந்த எண்ணம் ரொம்ப நாளாவே இருந்தது. இடையில் அந்த வெள்ளைப் பன்னியால குழம்பிட்டேன். இப்ப நான் தெளிவா இருக்கேன். அதுக்கு அவதான் கரெக்ட்… இதை நான் நடத்தி வச்சே தீருவேன்" என்றாள் உறுதியாக.
"அதைத் தான்டி நானும் சொல்றேன்… நீயா ஒரு முடிவெடுத்து அதை அவங்கமேல திணிக்கிறது சரியா?" என்று கேட்டான் அதீஷன்.
"பச்ச்… நான் அப்படிச் செய்வேன்னு நினைக்குறீங்களா? நானும் ஒரு பொண்ணுங்க… இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை எக்காரணம் கொண்டும் கெடுக்க நினைக்க மாட்டேன். அப்புறம் ஆது… அவரு விருப்பம் இல்லாம இங்க எதுவும் நடக்காது." என்ற தன்வி, "சரி… ஆதுக்காக இவ்ளோ பேசுறீங்க இல்ல, அப்ப அவருக்காக எதாவது செய்யுங்களேன்… நீங்க மட்டும் கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்தி இப்பப் புள்ளையும் பெத்துக்கப் போறீங்க இல்ல… அவருக்கும் இப்படி ஒரு லைஃப் வேணாமா?" என்றாள் முகத்தைச் சிரியஸாக வைத்துக் கொண்டு.
"ஏய்… என்னடி இப்படிக் கேக்குற? அவனுக்காக எதுவும் செய்ய நான் தயாராய் இருக்கேன். அவன் நல்லா இருந்தால் அதைப் பார்த்து, சந்தோஷப்படும் முதல் ஆள் நானாதான் இருப்பேன். கருவில் இருந்து என்னோட ஒண்ணா இருக்கவன்டி அவன். அவனுக்காக நான் எதுவும் செய்வேன். ஆனால், அவனுக்குப் புடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன்" என்றான்.
"லூசு தஷ்… நமக்குப் புடிச்சவங்களுக்கு எது புடிக்கும்னு பார்த்துப் பார்த்து செய்யறது எப்படி நம்ம அன்போட வெளிப்பாடோ, அதேமாதிரி அவங்களுக்கு கண்டிப்பா நல்லதுன்னு தெரியும் ஒரு விஷயத்தை அவங்க புரியாம வெறுத்தாலும், அதை அவங்களுக்குப் புரிய வச்சு ஏத்துக்க வைக்கணும். நமக்குப் புடிச்சவங்களை நேசிக்க மட்டும் இல்ல, தேவை ஏற்பட்டா அவங்க நல்லதுக்காக அவங்களைக் கட்டாயப் படுத்தவும் நமக்குத் தெரியனும்." என்றவளை ஓரப் பார்வை பார்த்த அதீஷன்,
"ஷார்ட்டா தர்ஷன் உனக்குப் பண்ணதை நீ அவனுக்குத் திரும்பச் செய்யப் போறேன்னு சொல்ல வேண்டியது தான? எதுக்கு இந்த விளக்கம், வெளக்கமாறு எல்லாம்…" என்றவன் தலையில் கொட்டினாள் தன்வி.
"ஆஆஆ" என்று தலையைத் தடவிக் கொண்டே, "ஏன்டி கொட்டுன?" என்று கேட்டான்.
"பின்ன? கொட்டாமல் கொஞ்சுவேன்னு நினைச்சிங்களாக்கும்… எதுக்கெடுத்தாலும் குதர்க்கமாய் பேசிட்டு… சரி இவ்ளோ வாய் கிழியப் பேசுறீங்க இல்ல… நான் வெளிப்படையாவே கேக்குறேன், உங்க மனசைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்க, ஆது ஒரு பொண்ணுகூட குடும்ப வாழ்க்கை நடத்தத் தகுதி இல்லாத ஆள்னு நீங்க நினைக்குறீங்கறா? ஐ மீன் மனசாலயும் உடம்பாலயும்" என்றவள், "டூ யூ பிலிவ் ஹீ இஸ் கே (Do you believe he is gay?)" என்று கேட்டுவிட, சட்டென்று அவள் வாயை மூடிய அதீஷன், இல்லை என்பது போல் இடவலமாகத் தலையாட்டினான்.
"இல்லடி இல்ல… அவன் கே (gay) இல்லடி…" என்றவனுக்கு உணர்ச்சி மிகுதியில் கண்கள் கலங்கி விட்டது.
தன் வாயில் இருந்து அவன் கையை விலக்கியவள், "எனக்குத் தெரியும் தஷ்… எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். என் ஆது ஒருத்தரை விரும்பினால் அதை அவர் பார்வையில் இருந்தே நான் கண்டு புடிச்சிடுவேன். அப்படி இருக்கும்போது ஆலன் மேல அவருக்கு இருந்தது காதல் இல்ல, வெறும் ஒரு பிடித்தம் மட்டும் தான்னு எனக்குத் தெரியாமல் போகுமா என்ன?" என்றாள் வெகு இயல்பாக.
மேலும், "ஒரு பொண்ணுக்குத் தன்னால் ஒரு கணவனா வாழ முடியாதுன்னு அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலை…" என்றவள் நிறுத்தி, "அவரால் என்னை வேற மாதிரிப் பார்க்க முடியாது… அவரைப் பொறுத்தவரை நான் அவருக்கு இன்னமும் குழந்தை தான். உண்மையில் நான் அவரோட லிட்டில் பிரின்சஸ், அதனால்தான் அவரு என்னைக் கல்யாணம் பண்ண ஒத்துக்கவே இல்ல." என்றாள் கர்வமாக.
"உண்மைதான் தன்வி, அவன் உன்னை அவன் பொண்ணாதான் பார்க்குறான்." என்றவன் தொடர்ந்து, "சரி ஆது கே இல்ல… சோ அவனுக்கு கல்யாணம் செய்யலாம் ஓகே… பட் ஒய் தர்ஷினி?" என்று தன் கையில் இருந்த புகைப்படத்தைக் காட்டிக் கேட்டான்.
"பிகாஸ், ஷீ லவ்ஸ் ஹிம்… கண் மூடித்தனமா அவ ஆதுவை விரும்புறா, இந்த ஜென்மத்தில் அவ வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா… அதுதான் காரணம்" என்றாள் திடமாக.
"ம்ம்ம்… எனக்கும் அப்படிதான் தோணுது. இல்லாட்டி எட்டு வருஷம் கழிச்சும், இவ்ளோ பெரிய ஜாப்ல இருந்தும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கணும்." என்றவன், "ரொம்ப அதிகமாய் தர்ஷனை லவ் பண்ணிட்டாங்க போல, அதான் அவனை மறக்க முடியாமல், பொம்பளை தேவதாஸ் மாதிரி நாடு நாடாய்ச் சுத்திட்டு இருக்காங்க" என்றான் இந்த ஒரு வாரத்தில் தர்ஷினி பற்றித் திரட்டிய தகவல்களை வைத்து.
"ம்ம்ம் ஆமா தஷ்… அவங்க ஆதுவை ரொம்ப விரும்பினாங்க… இன்ஃபேக்ட், இது ஆதுக்கும் தெரியும். அவங்க வாயைத் திறந்து சொல்லாமலேயே, ஆது அவங்க கண்ணைப் பார்த்தே கண்டு புடிச்சிட்டாரு…" என்று சொல்ல, "வாவ், அப்புறம் என்ன ஆச்சு?" என்று கேட்டான் அதீஷன் ஆவலாக.
"ம்க்கும், அங்க இருந்தது தஷ் இல்லயே உடனே விழுந்திட, ஆதுவாச்சே… வேற என்ன ஆகும்? புட்டுக்கிச்சு" என்றாள் கணவன் காலை வாரியபடி.
"ஏய்… ஏய்! ரொம்ப வாராதடி… நான் ஒண்ணும் அப்படி எல்லாம் இல்ல" என்று கெத்தாகச் சொல்ல, அவன் தாடையைப் பிடித்து இப்படியும் அப்படியும் ஆட்டி ஆட்டி அவன் முகம் பார்த்தாள்.
"என்னடி பார்க்குற?" என்று கேட்டான் ஆதிஷன்.
"இல்ல… இந்த வாய் தான ஒரு வாரம் முன்ன, தன்வி இல்லாமப் போனா, நான் இருந்தும் இறந்தது மாதிரின்னு டையலாக் விட்டுச்சுன்னு பார்க்குறேன்" என்றாள் குறும்பாக.
"ம்ம்ம், அதுவேற வாய்…" என்றான் வடிவேலு ஸ்டைலில்.
"அப்ப என்ன? இது நாறவாயா?" என்று அவள் கிண்டலடிக்க, அவளை முறைத்துப் பார்த்தவன், "ஆமாடி… பாரு இப்ப உன் வாயையும் அப்படியே ஆக்குறேன்" என்றவன் அவள் எதிர்பாராத நேரத்தில் சட்டென அவளைப் பிடித்து இழுத்தணைத்தவன், அவள் இதழ்களை அழுத்தி மூடியிருந்தான்.
இருவரும் ஒருவர் ஆதிக்கத்தில் ஒருவர் அடங்கி நிற்க, மூச்சுத் திணறல் வந்து அவர்கள் முத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து முடித்து வைத்தது.
அவனை விட்டு விலகியவள், "ப்ராடு ப்ராடு… இப்ப மட்டும் பாப்பாக்கு மூச்சு முட்டாதா?" என்று செல்லமாகச் சிணுங்க, "அதெல்லாம் என் புள்ளைக்கு ஒண்ணும் ஆகாது. என் பாப்பா என்னை மாதிரி ஸ்ட்ராங்" என்று கைகளை மடக்கி, சுண்டெலி போல் இருந்த ஆர்ம்ஸைக் காட்டிவன், "நான் ஒண்ணு கேட்டால் உண்மையைச் சொல்லுவியாடி?" என்றான் அவளை அழுத்தமாய் பார்த்துக் கொண்டே.
அவன் பார்வையில் மாற்றத்தை உணர்ந்தவள், "என்ன?" என்று கேட்டாள்.
"உனக்கு நிஜமாவே என்மேல சந்தேகம் வரலியா? நான் தர்ஷன் இல்ல, வேற ஆள்னு நிஜமா உனக்கு டவுட் வரலயா?" என்று புருவத்தை நெளித்தபடி அழுத்தமாகக் கேட்டான்.
அதைக் கேட்ட நொடி தன்வி ஒரு அதிர்வோடு அவனைப் பார்த்தவள், சட்டெனத் தன் முகபாவனை மாற்றிக் கொண்டு, "இல்லயே!" என்றபடி அவனுக்கு முதுகைக் காட்டி நின்று கொண்டவளுக்கு தன்னைக் கண்டு கொண்டானே என்ற பரபரப்பில் இமைகள் படபடக்க, இதயம் வேகமாகத் துடித்தது.
திரும்பி நின்றவளை இழுத்துத் தன் முன் நிறுத்தி, அவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க வைத்தவன், "இப்பச் சொல்லுடி... என் முகத்தைப் பார்த்துச் சொல்லு… உனக்கு துளிக்கூட சந்தேகம் வரலன்னு சொல்லுடி?" என்று கேட்க, அவன் விழிகளைப் பார்க்க முடியாமல் தலை குணிந்தவள் கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு, தவறு செய்த பிள்ளை போல் திருதிருவென விழித்தபடி இருந்தாள்.
"எப்படித் தெரியும்?" என்று கேட்டான் அதீஷன்.
"நம்ம கல்யாணம் வரைக்கும் அடிக்கடி உங்க நடவடிக்கைகள் பார்த்து நீங்க மாறிட்டீங்கன்னு தான் தோணும்... அப்ப அதை நான் பெருசாய் எடுத்துக்கல. ஆனால், அன்னைக்குத் தாத்தா பிறந்தநாள் பார்ட்டில சிலர் என்னைத் தப்பாய் பேசினாங்கன்னு நான் அழுதுட்டு இருக்கும்போது, நீங்க என்னை இறுக்கிக் கட்டிப் புடிச்சுகிட்டிங்க நினைவு இருக்கா?" என்று கேட்டாள்.
அதற்கு அவன் ஆமாம் என்று தலையாட்ட, "அப்பதான் நீங்க ஆது தானான்னு எனக்கு டவுட் வந்துச்சு… பிகாஸ், அன்னைக்கு உங்க இடத்தில் ஆது இருந்திருந்தால் கண்டிப்பாய் என்னை ஹக் பண்ணி இருக்க மாட்டாரு, அதுவும் அவ்ளோ டைட்டா" என்றாள் குறும்பாக.
"ம்ம்ம்... மேல சொல்லு" என்றான் அதீஷன் வெட்கத்தோடு.
"ஆதுவும் நானும் சின்ன வயசில் இருந்து ஒண்ணா வளர்ந்தவங்க தான். ஆனால், அவர் அவரோட லிமிட் தாண்டி என்னைத் தொட்டது இல்ல. தப்புப் பண்ணா தலையில் கொட்டுறது, காதைப் புடிச்சு திருகுறது, சோகமாவோ இல்ல அழுதுட்டோ இருந்தால் மெல்லத் தலையை வருடி விடுவாரு... அவ்ளோதான். இதுவரை அவர் பார்வை என் கண்ணைத் தாண்டிக் கீழ போனது இல்ல. ஆனா நீங்க?" என்றபடி அதீஷனை முறைத்தாள்.
"ஏய்… ஏய்! நானும் தர்ஷன் மாதிரி டீசன்ட் பாய் தான். அன்னைக்கு நீ கொஞ்சம் அப்செட்டா இருந்த… அதான் சும்மா ஒரு மென்டல் சப்போற்ட்டுக்கு லேசா ஹக் பண்ணேன்…"
"எது லேசாவாஆ? அன்னைக்கு நீங்க கட்டிப் புடிச்சதில் நைட் பூராவும் எனக்கு உடம்பு எப்படி வலிச்சுது தெரியுமா?"
"சரி, அது ஏதோ அன்றைக்கு சிட்டுவேஷன் அப்படி ஆகிடுச்சு... ஆனா, நான் கூட கல்யாணத்துக்கு முன்ன உன் கண்ணைத் தவிர வேற எங்கேயும் பார்த்தது இல்லடி." என்றான் அப்பாவியாக.
"யாரு நீங்க? ப்ராடு ப்ராடு, அன்றைக்கு கோவில் போகணும்னு நான் புடவை கட்டி இருந்தப்போ நீங்க என்னை எப்படிப் பார்த்தீங்க தெரியுமா? அப்பாடி, அதை நினைச்சா இப்பவும் எனக்கு ஒருமாதிரி ஆகுது" என்றவள் உடல் சிலிர்த்துக் கொள்ள, அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், "எப்படி கன்பார்ம் பண்ண?" என்று கேட்டான்.
"நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு நீங்க ஆது இல்ல வேற ஆள்னு மனசு சொல்லிட்டே இருக்கும்… நம்ம கல்யாணம் அன்னைக்கு நீங்க என் கண்ணை நேருக்கு நேராய்ப் பார்த்து என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு ஓகேவான்னு கேட்ட அந்த நிமிஷம் என் மனசு சொல்லுச்சு, நீங்க யாராய் இருந்தாலும் பரவாயில்ல… இன்னைக்கு இருந்து நீங்கதான் எனக்கு எல்லாம்னு" என்றவள் கண்கள் கலங்கிவிட மெல்ல அவள் விழி நீரைத் துடைத்தான் அதீஷன்.
"அப்ப எல்லாம் சந்தேகம் தான் இருந்துச்சு… ஆனா, என்னைக்கு ஆது, பாஸ்ன்னு இல்லாமல் எனக்கே எனக்கான பேர் சொல்லி என்னைக் கூப்பிடுன்னு நீங்க சொன்னீங்களோ அப்பத் தோணுச்சு, நீங்க ஆதுவா இருக்க வாய்ப்பு இல்லன்னு…" என்றாள் நிம்மதியின் நிறைவில் கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தபடி.
"அப்பவே கேட்டு இருக்கலாமேடி" என்றான் குரல் கமர…
"இதையே நான் திருப்பிக் கேட்டால் நீங்க என்ன பதில் சொல்லுவீங்க தஷ். நீங்க சொல்லி இருக்கலாம் இல்ல. நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு, அட்லீஸ்ட் நமக்குள்ள அன்றைக்கு நடந்த?" என்றவளுக்குப் பேச்சு வராமல் போக அதீஷனாலும் மேலே பேச முடியாது போனது.
இழுத்துப் பெருமூச்சு விட்ட அதீஷன், "நான் உன்னைப் புரிஞ்சு வச்சிருக்கிறது உண்மைனா, நம்ம யூ.எஸ் வரும் முன்னையே நீ ஒரளவு எல்லாத்தையும் கெஸ் பண்ணி இருப்ப... அப்பவும் எதுவும் சொல்லல. சோ, நாங்க செஞ்சதால் உனக்கு ஏற்பட்ட வலியை எங்களுக்குத் திருப்பிக் கொடுக்க நினைச்சு, ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்து லாஸ்ட் மினிட் வரை எங்க ரெண்டு பேரையும் பயத்தில் நடுங்க வச்சிருக்க, ரைட்?" என்று கேக்க, அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த தன்வி, "வாவ்!" என்று அவன் கன்னத்தில் முத்தம் பதித்தவள், "நான் ரொம்ப லக்கி தஷ்... என்னை இவ்ளோ நல்லாப் புரிஞ்சு வச்சிருக்க புருஷன் கிடைக்க" என்று சொல்லிச் சிரிக்க,
"அடிங்கு… எங்க ரெண்டு பேரையும் போட்டுப் படுத்தி எடுத்திட்டு சிரிக்கிற நீ?" என்று அவள் தலையில் நறுக்கென்று கொட்ட, "ஆஆஆ வலிக்குதுடா" என்று கத்தினாள் தன்வி.
"வலிக்கட்டும் நல்லா வலிக்கட்டும்... நானும் தர்ஷனும் எப்படி பயந்துட்டு இருந்தோம் தெரியுமா? அவன் கூடப் பரவாயில்ல… எனக்கு எங்க நீ உண்மை தெரிஞ்ச அப்புறம் என்னைவிட்டுப் போயிடுவியோன்னு ஒவ்வொரு நிமிஷமும் நெருப்புல நிக்குற மாதிரி இருந்துச்சுடி" என்றான் ஆதங்கமாக.
அவன் தலையை மெல்ல வருடியவள், "எனக்குத் தெரியும் தஷ்." என்றவள், அவன் கன்னத்தைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு "சாரி" என்றாள் அவன் கண்ணைப் பார்த்து.
"எனக்கு நீங்க ஆது இல்லைன்னு புரிஞ்சுது உண்மை தான். ஆனா, அதுதான் உண்மைன்னு அப்ப எனக்குத் தெரியாதே?” என்று பாவமாகச் சொன்னவள், "அது மட்டும் தான் நான் ஓரளவு கெஸ் பண்ண விஷயம். மத்தபடி நீங்க ஆதுவோட டுவின் ப்ரதர்ன்றது, அமிர்தாம்மா எல்லாம் எனக்குப் பெரிய அதிர்ச்சி தான்" என்றாள்.
"ம்ம்ம்" என்ற அதீஷன், "அவ்ளோ தானா?" என்று கேட்டான் புருவத்தை உயர்த்தி.
அதில் தன்னவன் தன்னை எந்தளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறான் என்று கர்வமாக உணர்ந்தவள், "இல்ல… ஆது என்னை ஏமாத்தினது எனக்குப் பெரிய வலிதான். அதுல அவர் மேல் எனக்குக் கொஞ்சம் கோவம் தான், அதுகூட அந்த வெள்ளைப் பன்னி பத்தித் தெரிஞ்சதும் போய்டுச்சு..." என்றாள் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு.
"அப்புறம் எதுக்கு அன்னைக்கு அப்படி பர்பாமென்ஸ் பண்ண?" என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி.
"நான் அப்படி பர்பாம் பண்ணனால தானே, ஆது நான் என்ன கேட்டாலும் செய்யறேன்று ப்ராமிஸ் பண்ணாரு… நாளைக்கு தர்ஷினி விஷயத்தில் எதாவது முரண்டு புடிச்சா அந்தப் ப்ராமிஸ் வச்சு அவரைக் கார்னர் பண்ணிடுவேன் இல்ல" என்று இல்லாத காலரைத் தூக்கிவிட அதீஷன் கண்கள் விரிய, "அடிப்பாவி!" என்று வாயில் கைவைத்துக் கொண்டான்.