விழி வழி காதல் நுழைந்ததடி 21
விழி 21
ஆதர்ஷ், தன்வி இருவரும் ஒரு தொழில் சார்ந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள ஒரு பீச் ரெசார்ட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது. திருமணம் முடிந்து இருவரும் எங்கும் இதுவரை தனியாகச் செல்லவில்லை என்பதால் வீரராகவன் தொழில் விவகாரம் முடிந்ததும் அங்கேயே ஒரு வாரம் தங்கிவிட்டு வரச் சொல்லி சொல்ல ஆதர்ஷனுக்கு முக்கியமாக செய்து முடிக்க வேண்டிய வேலைகள் சிலது இருந்ததால் தயங்கினான்.
அதைத் தவறாகப் புரிந்து கொண்டாள் தன்வி.
'நம்ம கூட வெளிய தங்குறது இவருக்குப் புடிக்கல போல… அதான் தாத்தா சொல்லியும் கேக்க மாட்டேங்குறாரு' என்று மனதில் நினைத்தவள், "இல்ல தாத்தா, அவர் சொல்றது சரிதான். இங்க நிறைய வேலை பெண்டிங்ல இருக்கு, அதையெல்லாம் முடிக்காமல் எப்படி எங்களால் போக முடியும்? அதெல்லாம் வேணாம் தாத்தா" என்றவளின் குரலே சொன்னது அவளின் மன உணர்வுகளை.
அதைப் புரிந்து கொண்ட ஆதர்ஷ், "பரவாயில்ல தன்வி… வேலை எப்பவும் இருக்கும் தான். அதெல்லாம் பார்த்தா நம்ம எப்ப தான் ஒண்ணா டைம் ஸ்பென்ட் பண்றது? தாத்தா சொன்னதும் கரெக்ட் தான். மார்னிங் மீட்டிங், இருக்கு, அடுத்த நாள் ஈவ்னிங் ஒரு பார்ட்டி இருக்கு… நம்ம மீட்டிங் முடிச்சிட்டுத் திரும்பி வரலாம்னு பிளான் பண்ணி இருந்தோம். இப்ப ஒரு நாள் எக்ஸ்டென்ட் பண்ணிடுவோம், மறுநாள் பார்ட்டியையும் அட்டென்ட் பண்ண மாதிரியும் இருக்கும். சேதுகிட்டச் சொல்லி ரூம் புக் பண்ணச் சொல்றேன்." என்றவன், "உனக்கு ஓகே தான தன்வி?" என்று அவள் விருப்பத்தைக் கேட்க, அவனோடு இருக்க அவளுக்குக் கசக்குமா என்ன? உடனே சரியென அவள் கண்கள் மின்னத் தலையாட்ட, அதில் ஆதர்ஷனின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை.
இருவரும் அந்த பீச் ரெசார்ட்டை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடர… விதி அதன் வேலையைப் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கி இருந்தது.
அங்கு அந்த மீட்டிங் வந்திருந்த அனைவரின் பார்வையும் புதுமணமக்கள் மேல் தான் இருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் ஆதர்ஷனைத் தெரிந்த அளவு தன்வியையும் தெரியும் என்பதால் வயதில் பெரியவர் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க, இளையவர் சிலர் இருவரையும் கிண்டல் செய்து ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தனர்.
இயல்பான கண்வன் மனைவி என்றால் அவர்கள் கிண்டலில் வெட்கத்தில் தன்வியின் கன்னங்கள் சிவந்திருக்கும், ஆனால் இவர்களின் நிலைதான் வேறாக இருந்ததே… அதன் விளைவு தன்விக்கு லேசாகக் கண்கள் கலங்கத் தொடங்க, தன் உணர்வுகளை அடக்கி முகத்தை இயல்பாக வைக்கப் படாத பாடு பட்டாள் பேதை அவள்.
அவளின் நிலையைப் புரிந்து கொண்ட ஆதர்ஷ், "ப்ளீஸ் கைஸ் (GUYS)… பாவம் தன்வி, டிராவல் பண்ணி ரொம்ப டயர்டா இருக்கா… இப்ப இந்தக் கிண்டல் கேலி எல்லாம் வேணாம். முதல்ல அவ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்" என்றவன் தங்களுக்காக முன்பதிவு செய்திருந்த அறைக்கு அவளைத் தோளோடு அணைத்து அழைத்துச் சென்றான்.
அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி ஆதர்ஷ், தன்வி இருவரின் கண்களும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.
அது ஒரு ஹனிமூன் சூட் என்பது பார்த்தவுடனே இருவருக்கும் புரிந்துவிட, இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்வோடு பார்த்துக் கொண்டனர்.
"இது யார் பார்த்த வேலைன்னு தெரியலயே?" என்று ஆதர்ஷன் சொல்ல, "ரூம் புக் பண்ணச் சொல்லி யார்கிட்டச் சொல்லி இருந்தீங்க?" என்று கேட்டாள் தன்வி.
"நம்ம எச்.ஆர் சேதுகிட்ட தான் சொல்லி இருந்தேன்" என்றான் அவன்.
"ம்ம்ம், அப்ப இது கண்டிப்பா தாத்தா வேலையா தான் இருக்கும்." என்றவளைப் பார்த்து ஆமாம் என்பது போல் தலையாட்டிய ஆதர்ஷ், "ம்ம்ம், அப்ப நேத்து சேதுகிட்டத் தாத்தா பேசிட்டிருந்தது இதுபத்தி தான் போல? அதான் அவன் என்னைப் பார்க்கும் போது ஒரு மாதிரி சிரிச்சிட்டு இருந்தானா? எல்லாத்தையும் முன்னயே பிளான் பண்ணித் தான் செஞ்சிருக்காரு… இருக்கட்டும், போய் தாத்தாவைப் பார்த்துக்குறேன்" என்று சிரிப்புடன் சொன்னவன், "சரி தன்வி, நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு… அவ்ளோ தூரம் டிரைவ் பண்ணிட்டு வந்தது டயர்டா இருக்கும். மீட்டிங் லன்ச்க்கு அப்புறம் தான்னு மெசேஜ் வந்திருக்கு… சோ நீ கொஞ்ச நேரம் தூங்கு" என்றான்.
நெடுந்தூரப் பயணம் என்பதால் இருவரும் மாற்றி மாற்றி வண்டி ஓட்டி இருந்தனர்.
"அப்ப நீங்க... நீங்களும் தான டிரைவ் பண்ணிங்க?? என்று வாஞ்சையாகக் கேட்டவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தவன், "நான் கொஞ்சம் மெயில் எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு தன்வி. ஹாஃபனவர்ல வேலை முடிஞ்சிடும். நானும் வந்து உன் பக்கத்தில் உன்னைக் கட்டிப் புடிச்சிட்டுத் தூங்குறேன் போதுமா…" என்று கண்ணடித்துச் சொல்ல, அதைக் கேட்ட தன்வி திகைத்துப் போய் நின்றாள்.
அவளின் அந்த அதிர்ந்து நிற்கும் கோலத்தை ரசித்துப் பார்த்தவன் அவள் முகத்திற்கு முன் சொடுக்கிட்டு, "ஏய் குட்டிப் பாப்பா… என்ன, கண்ணைத் திறந்துட்டே தூங்குறயா?" என்று குறும்பாகக் கேட்க, அதில் நிகழ்வுக்கு வந்தவள் அவனை முறைத்தபடி, "வர வர உங்கப் பேச்சு வழக்கு ஒண்ணும் சரியில்ல…" என்றபடி அங்கிருந்து நகர்ந்து கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.
"ஓய் பொண்டாட்டி, கட்டில்ல கொஞ்சம் எனக்கும் இடம் வைடி…" என்று மீண்டும் அவளை வம்பிழுத்தவன் தலையில் பறந்து வந்து மோதியது, அவன் மனைவி விட்டெறிந்த தலையணை.
அதைக் கையில் பிடித்துக் கொண்டு சத்தமாகச் சிரித்தவன், "கட்டுன புருஷன்னு கூடப் பார்க்காம என்னை அடிக்கிறயா நீ… இரு இரு, வீட்டுக்குப் போனதும் தாத்தாகிட்ட இப்படி ஒரு ரௌடிப் பேத்திய வளர்த்து அப்பாவியான என் தலையில் கட்டி வச்சிட்டீங்களேன்னு நியாயம் கேக்குறேன்" என்றவன் மீது இன்னொரு தலையணையையும் தூக்கி அடித்த தன்வி, "இங்க அப்பாவின்னா அது நான் மட்டும் தான்…" என்று உதட்டைச் சுளித்து ஒழுங்கு காட்டியவள், "போய் ஒழுங்கா வேலையைப் பாருங்க… சும்மா வெட்டிக் கதை பேசிட்டு இருக்கீங்க" என்றதும்,
"அடிங்கு... யாருடி வெட்டிக் கதை பேசுறது" என்றவன் அவளை நெருங்கிச் செல்ல, சட்டெனப் போர்வையை இழுத்து முகம் வரை போர்த்திக் கொண்டவள், "நான் தூங்கிட்டேன்" என்று சொல்ல, அதைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தவன், "இவளைத் திருத்தவே முடியாது" என்று இருபக்கமும் தலையாட்டி விட்டு, "இவ எல்லாம் என்ன டிசைன்னே தெர்லயே… சேட்ட சேட்ட, எப்பப் பாரு சேட்ட தான்" என்று முணுமுணுத்துக் கொண்டே தன் லேப்டாப்பைத் திறந்து வைத்து தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கினான்.
அன்று மதியம் போல் மீட்டிங் தொடங்கி நல்லபடியாய் முடிந்திருக்க, மாலை போல் தன்வியுடன் அந்த ரிசார்ட் பின்புறம் இருந்த கடற்கரைக்குச் சென்றான் ஆதர்ஷ்.
முகத்தில் கடல் காற்றின் ஸ்பரிசத்தையும், கால்களில் கடல் நீரின் குளுமையையும் கண்மூடி ரசித்துக் கொண்டு நின்ற தன்வியின் கூந்தலைக் காற்று கலைத்து விளையாடிக் கொண்டிருக்க, அந்தக் காட்சியைத் தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷ்.
'நீ அப்படி ஒண்ணும் பெரிய அழகி எல்லாம் இல்லடி, இப்பவரை வெள்ளைக்காரிங்க உட்பட உன்னைவிட அழகான பொண்ணுங்க ஆயிரம் பேரையாச்சும் நான் கடந்து வந்திருக்கேன்… ஆனா, ஒருமுறை கூட யாரையும் நின்னு ரசிச்சதோ, இல்ல மறுபடியும் பார்க்கணும்னு ஆசைப்பட்டதோ இல்லடி… ஆனா, உன்னைப் பார்த்த அப்புறம் எல்லாம் மொத்தமா மாறிப் போச்சு… இத்தனை வருஷம் இல்லாம தீடிர்னு எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுதுன்னு எனக்கே புரியல… உன்கிட்ட இப்படி மொத்தமா விழுவேன்னு நான் கனவுல கூட நினைச்சுப் பார்க்கலடி… ஆலன் சந்தேகப்பட்டுக் கேக்கும் போதெல்லாம் கூட அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல, எனக்கு உன்மேல இருக்கிறது வெறும் அக்கறை மட்டும் தான்னு சொல்லி இருக்கேன். ஆனா, உண்மையில் அப்பவே நீ என் மனசுக்குள்ள வந்துட்டடி… ஆனா, அதை ஏத்துக்க தான் என்னோட ஈகோ இடம் கொடுக்கல. ஆலன் இந்தக் கல்யாணம் பத்திக் கேக்கும்போது கூட உன் பிடிவாதத்தின் பேர்ல தான் இந்தக் கல்யாணம் நடக்குதுன்னு சொன்னனே தவிர உள்ளுக்குள்ள எக்காரணம் கொண்டும் உன்னை மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு ஒவ்வொரு நிமிஷமும் பயந்துட்டு இருந்தேன்டி… எப்போ, எப்படி உன் மேல காதல் வந்துச்சின்னு சத்தியமா எனக்குத் தெரியல… பட், இனி நீ இல்லாம என்னால வாழ முடியாதுன்ற ஸ்டேஜ்க்கு நான் வந்துட்டேன். இதுவரை எதுக்கும் நான் பயந்தது இல்ல… ஆனா, இப்ப்ப பயமா இருக்குடி, ரொம்பப் பயமா இருக்கு... எங்க உனக்கு உண்மை தெரிஞ்ச அப்புறம் என்னை வெறுத்திடுவியோன்னு ரொம்பப் பயமா இருக்கு. நீ என்மேல கோவப்படு, சண்ட போடு, என்ன தண்டனை வேணும்னாலும் கொடு, நான் தாங்கிப்பேன். ஆனா, என்னை வெறுக்க மட்டும் செய்யாதடி, அதைத் தாங்கிக்கும் சக்தி சத்தியமா எனக்கு இல்ல' என்று மனதிற்குள் புலம்பிவனுக்கு கண்கள் கலங்கிப் போனது .
தன்வி கண்களைத் திறந்து ஆதர்ஷனைப் பார்க்க, அவன் கலங்கிய கண்களுடன் இவள் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவள், "தஷ்… தஷ்" என்று அவன் தோளைத் தொட்டு உலுக்க, "ஹான்" என்றபடி நிகழ்வுக்கு வந்தான் ஆதர்ஷ்.
"என்ன தன்வி? எதுவும் வேணுமா?" என்று கேட்க, அவனை விசித்திரமாகப் பார்த்தவள், "எனக்கு ஒண்ணும் வேணாம், உங்களுக்கு என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? கண்ணு வேற கலங்கி இருக்கு?" என்று கேட்க, இழுத்து பெருமூச்சு விட்டபடி கண்களைத் துடைத்துக் கொண்டவன், "ஒண்ணும் இல்லடி, ஐ ஆம் ஓகே, கடல் காத்துக்கு கண்ணு கலங்கிடுச்சு போல" என்றவன், "கொஞ்ச தூரம் நடக்கலாமா?" என்று தன் கையை அவள் புறம் நீட்டியபடி ஆசையாகக் கேட்க,
அவளும் முகம் முழுவதும் புன்னகையுடன், "நடக்கலாமே" என்றபடி எழுந்து கொள்ள, அவள் கையோடு தன் கையைக் கோர்த்துக் கொண்டவன், "வா" என்றபடி அவளை அழைத்துச் சென்றான்.
அந்த அழகிய நேரத்தை இருவரும் மிகவும் ரசித்தனர். இந்த உலகில் தங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்று நினைத்தபடி ஒருவர் ஸ்பரிசத்தை அடுத்தவர் அனுபவித்தபடி கைகளைக் கோர்த்துக் கொண்டு நடந்தனர்.
லேசாக மழைத் தூறல் போடும் சமயம் இரவும் வந்துவிட இருவரும் அவர்கள் அறைக்கு வந்து விட்டார்கள்.
இரவு உணவை வரவழைத்து உண்டுவிட்டு கொஞ்ச நேரம் பேசி அரட்டை அடித்தவர்கள், ஒருவர் அணைப்பில் ஒருவர் நிம்மதியாக உறங்கி இருந்தனர்.
மறுநாள் காலை கண் விழித்த ஆதர்ஷனுக்குத் தன் நெஞ்சின் மீது தலை வைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன்னவளைப் பார்த்து இதழ்களில் புன்முறுவல் படர்ந்தது.
தன் அருகில் படுக்கவே யோசிப்பவள், இன்று தன் நெஞ்சில் தலை வைத்து, தன்னைக் கட்டியணைத்தபடி உறங்கும் அளவுக்கு வந்திருக்கிறாள் என்றால் அதற்கு ஒரே காரணம் அவளுக்குத் தன்மீது இருக்கும் காதல் என்று அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவள் காதல் அவனுக்குப் புரிந்தாலும், அதை அவள் வாய் திறந்து தன்னிடம் சொல்ல வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தவன், தன் காதலை மட்டும் அவளிடம் சொல்லும் நேரம் இன்னும் வரவில்லை என்று அவளிடம் சொல்லாமல் மறைத்து வைத்தான். அவன் அவளிடம் மறைத்த காதல், பின்னாளில் அவள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தால் அவன் காதலைச் சொல்லி இருப்பானோ என்னவோ?
மெல்ல அவள் தூக்கம் கலையாதபடி அவள் தலையை எடுத்துத் தலையணை மீது வைத்தவன், நிர்மலமாக இருந்தவள் வதனத்தைச் சில நொடிகள் ரசித்துப் பார்த்துவிட்டு அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்துவிட்டு எழுந்து குளிக்கச் சென்றான்.
அவன் குளியலறைக்குள் சென்று கதவடைத்த ஓசை கேட்டு மெதுவாகக் கண்களைத் திறந்தவள் விழியோரம் நீர்த் துளி உருண்டு ஓடியது.
'இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு எனக்குப் புரியல தஷ். சிலநேரம் நீங்க காட்டுற இந்த அன்பு, வெறும் அன்பு மட்டும் தானா? இல்ல என்னை மாதிரி நீங்களும் என்னைக் காதலிக்கறீங்களான்னு என்னை யோசிக்க வைக்கிது. ஆனா, அடுத்த நிமிஷமே ஆலன் அண்ணா கண் முன்னே வந்து அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, என் ஆஷை என்கிட்ட இருந்து பிரிச்சிடாதேன்னு சொல்லற மாதிரி இருக்கு தஷ்.' என்று மனதில் நினைத்தவள், 'எது எப்படி வேணும்னாலும் நடக்கட்டும். இந்த நிமிஷம் என்னோட தஷ் என் கூட இருக்காரு. எனக்காக மட்டும் இருக்காரு… அது போதும் எனக்கு' என்றவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
ஆதர்ஷ் குளித்து முடித்து வெளியே வர, கதவு திறக்கும் சத்தம் கேட்டு சட்டெனக் கண்களை மூடிக் கொண்டாள் தன்வி. குறும்பாகச் சிரித்தபடி அவள் அருகில் வந்து அவள் முகம் நோக்கிக் குனிந்தவன், தன் தலை சிலுப்ப, அவன் தலை முடியில் இருந்த நீர்த் துளிகள் சில்லென்று அவள் முகத்தில் சாரலாகத் தெறித்தது.
"அச்சோ" என்று வேகமாகப் படுக்கையில் இருந்து எழுந்தவள் தன் முன் நக்கலாகச் சிரித்தபடி இருந்த ஆதர்ஷனைப் பார்த்து கண்கள் சுருக்கி முறைத்தவள், "காலங்காத்தால என்ன விளையாட்டு இது…?" என்றபடி புடவை முந்தானையால் முகத்தைத் துடைத்தபடி கேட்டாள்.
"ம்ம்ம், மார்னிங் வேக் அப் விளையாட்டு… டைம் என்ன ஆகுது பாருடி? நானே குளிச்சு ரெடியாகிட்டேன். நீ என்னடி இப்படித் தூங்கிட்டு இருக்க?" என்றவனை மேலும் முறைத்தவள், "இப்பத் தூங்கினா என்னவாம்? இப்ப தான் ஒரு வேலையும் இல்லியே, பார்ட்டி கூட ஈவ்னிங் தானே." என்றாள் முறைப்பாக.
"பார்ட்டி ஈவினிங் தான்… அதுக்குன்னு லேட்டா எழும்பனுமா என்ன?" என்றான் மீண்டும் அவளை வம்பிழுக்கும் நோக்கத்துடன்.
"ஐய்யோ… வர வர உங்க இம்சை தாங்க முடியல…" என்று புலம்பியவள், "சரி எழுப்பனும்னா தட்டி எழுப்ப வேண்டியது தானே, அதென்ன மூஞ்சில ஸ்ப்ரே (spray) பண்றீங்க? மனசுல என்ன பெரிய ரோஜா படம் அரவிந்த் சாமின்னு நினைப்போ?" என்று அவளும் பதிலுக்குப் பதில் வாயடிக்க,
"ம்ம்ம் ஆமாடி நான் அரவிந்த்சாமி தான்…” என்று அவள் கன்னங்களைப் பிடித்தவன், "இந்த மதுபாலாக்கு நான் தான் அரவிந்த் சாமி" என்று அவள் கண்ணைப் பார்த்துக் காதலாகச் சொல்ல, அவன் விழிகளில் காதல் கொண்ட அந்தக் கன்னியின் மனம் தடுமாறித் தத்தளித்தது.
வெகுநேரம் அப்படியே ஒருவர் விழிகளை ஒருவர் ஊடுருவியபடியே இருக்க, இருவர் இதழ்களுக்கிடையில் இருந்த இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இளைப்பாற நெருங்கி வந்த நேரம், அந்த அழகிய சங்கமத்தைத் தடுக்கும் வகையில் ஓசை எழுப்பியது ஆதர்ஷன் கைப்பேசி.
அதன் சத்தத்தில் இருவரும் உணர்வுக்கு வந்து விலகிக் கொள்ள, ஆதர்ஷ் அழுத்தி தலை கோதி தன்னை நிலைப்படுத்த, தன்வி அவனைப் பார்க்கத் தயங்கி, வேகமாகக் குளியலறைக்குள் ஓடிவிட்டாள்.
ஆதர்ஷ் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவன், "தேங்க்யூ… டிரைவர் வேணாம். நானே டிரைவ் பண்ணிக்குவேன்" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் குளியலறை அருகில் சென்று கதவைத் தட்டி, "நம்ம அரேஞ்ச் பண்ண கார் வந்திடுச்சு தன்வி, சீக்கிரம் ரெடியாகிட்டு ரிசர்ட் லாபிக்கு வந்திடு…" என்றவன் தன் உடைகளை அணிந்து கொண்டு வெளியே சென்றுவிட, அப்போது தான் தன்விக்கு மூச்சே வந்தது.
குளித்து முடித்துத் தயாராகி அவளும் வந்துவிட, அந்த ரிசார்ட்டைச் சுற்றி இருந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர் இருவரும்.