விழி வழி காதல் நுழைந்ததடி 19

விழி 19


வீரராகவனும் ஆதர்ஷும் தன்விக்காகக் காத்திருக்க, படிகளில் இறங்கி வந்த தன்வியின் சிவந்திருந்த முகத்தைப் பார்த்தவுடன் வீரராகவனுக்குப் புரிந்து விட்டது அவள் எந்தளவுக்கு மனவேதனைப்பட்டு அழுதிருக்கிறாள் என்று‌.


தன்வி மெல்ல நிமிர்ந்து தாத்தாவின் முகம் பார்க்க, அவர் கண்களால் அவளை அருகில் அழைத்தார். வேகமாக அவர் அருகில் வந்தவள் அவர் தோளில் ஆதரவாகச் சாய்த்து கொண்டாள்.


அவள் தலையை மென்மையாகத் தடவிக் கொடுத்த தாத்தா, "யாரும் எதுவும் பேசினா திரும்ப மூஞ்சில அடிச்ச மாதிரி பதில் சொல்லிட்டு, அவங்க கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்றதை விட்டுட்டு நீ ஏம்மா இப்படி அழுதிட்டு இருக்க? இது உன் வீடு, நீ ஆதர்ஷனைக் கல்யாணம் செஞ்சாலும் இல்லாட்டியும் நீ இந்த வீட்டுப் பொண்ணு, இந்த வீரராகவன் பேத்தி, இந்த வீட்டோட வாரிசுமா… அதை முதல்ல நீ உன் மனசுல பதிய வை. இனி ஒருமுறை நீ இப்படி அடுத்தவங்க பேச்சைக் கேட்டுக் கலங்கி நிக்குறதை நான் பார்த்தேன்னு வை… அதுதான் நான் உன் முகத்தைப் பார்க்கும் கடைசி நாளா இருக்கும். அதுக்குப் பிறகு நான் உன் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டேன்." என்று ஒரு பெரிய இடியை அவள் தலையில் இறக்க, அது சரியாக வேலைச் செய்தது.


"அய்யோ தாத்தா, ப்ளீஸ்… இப்படி எல்லாம் பேசாதீங்க… நான் ஏதோ தெரியாம இப்படிப் பண்ணிட்டேன். இனிமே யார் என்ன சொன்னாலும் நான் அதுக்காகக் கவலைப்பட மாட்டேன் தாத்தா, அதோட ஆது சொன்ன மாதிரி அவங்க மூக்கை உடைக்கிற மாதிரி பதிலடி கொடுப்பேன்" என்று தைரியமாகச் சொன்னவளின் தோளைத் தட்டிய தாத்தா, 


"ம்ம்ம் அப்படிச் சொல்லு… இப்ப தான் நீ இந்த வீரராகவன் பேத்தி மாதிரிப் பேசுற…" என்று பொறுமையாகச் சொல்ல, இருவரையும் பார்த்துப் புன்னகைத்த ஆதர்ஷனுக்கு நிம்மதியாக இருந்தது‌.


"சரி சரி தாத்தா, எல்லாரும் வெய்ட் பண்றாங்க.‌.. வந்து சீக்கிரம் சொல்ல வேண்டியதைச் சொல்லுங்க" என்று ஆதர்ஷ் அவருக்கு நினைவுபடுத்த, "ஆமா ஆமா… தன்வியைப் பாத்ததும் எல்லாம் மறந்து போச்சு… வாங்க வாங்க, ரெண்டு பேரும் வாங்க" என்றபடி வீரராகவன் வேகமாகச் செல்ல, தன்வி போகும் அவரைப் புரியாமல் பார்த்தவள், "தாத்தா எங்க இவ்ளோ அவசரமாப் போறாரு?" என்று கேட்டாள்.


"ம்ம்ம்… ஒரு முக்கியமான அனவுன்ஸ்மென்ட் பண்ண வேண்டி இருக்கு, அதுக்குதான் போறாரு" என்றான் அவளைப் பார்த்துப் புன்னகைத்தபடி.


"அப்படி என்ன அனவுன்ஸ்மென்ட்? அதான் ஏற்கனவே நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணப் போறதைச் சொல்லிட்டாரே… அதுக்காகத் தான இந்தப் பார்ட்டியே வச்சீங்க, அதைத்தான் சொல்லியாச்சே… இப்ப என்ன சொல்லப் போறாரு?" என்றவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் புரியாமல்.


தன் நாக்கால் கன்னச் சதையை முட்டியபடியே, அவளைக் குறும்புப் பார்வை பார்த்தவன், "ம்ம்ம்… வர வர அவரோட செல்லப் பேத்தி தொட்டதுக்கு எல்லாம் அழறாளாம், ரொம்ப சேட்டை பண்றாளாம், அவர் சொல் பேச்சைக் கேக்கறதே இல்லயாம்… சும்மா சும்மா அவுட் ஹவுஸ்ல போய் உக்கார்ந்துக்குறாளாம்… சோ, அதெல்லாம் சரி பண்ண ஒரு ஆளையும், நாளையும் பார்த்திருக்காராம். ஆள்  யாருன்னு சொல்லிட்டாரு, இப்ப நாள் என்னன்னு சொல்லப் போறாரு, அதுக்குத்தான் இவ்ளோ அவசரமாப் போறாரு" என்றவன் பேசியதில் அவளுக்குப் பாதி புரிந்து பாதி புரியாத நிலை. ஆனால், அவன் தன்னைக் கிண்டல் செய்கிறான் என்பது மட்டும் அவளுக்குப் புரிய, கண்களைச் சுருக்கி, அவனை முறைத்துப் பார்த்தாள்.


அவளின் முறைப்பைப் பார்த்துச் சிரித்தவன், 'ஓ மை காட்… இந்தப் பாப்பா மூஞ்சை வச்சிட்டு இவ முறைக்குறதப் பார்த்தா சிரிப்பு தான் வருது, சிரிச்சா அதுக்கு வேற‌ முறைப்பா' என்று நினைத்தவன், "ஓய் குட்டிப் பாப்பா,  என்னை அப்புறம் முறைக்கலாம், வாழ்க்கை முழுக்க அதுக்கு டைம் இருக்கு. இப்ப டைம் ஆகுது, வா போகலாம்." என்றவன் அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றவன், வீரராகவனின் ஒரு பக்கத்தில் அவளை நிற்க வைத்துவிட்டு மறுபக்கம் வந்து இவன் நின்று கொண்டான்.


"ஹாய் பிரண்ட்ஸ், இந்தப் பார்ட்டியை இன்னும் ஒரு குட் நியூஸ் சொல்லி முடிக்கலாம்னு இருக்கேன்" என்று வீரராகவன் சொல்ல, வந்திருந்த அனைவர் கவனமும் வீரராகவன் மீது நிலைத்தது. 


ஆதர்ஷனுக்கு அவர் என்ன சொல்லப் போகிறார் என்று தெரியும் என்பதால் அவன் அமைதியாக இருக்க, தன்வியோ ஆர்வமாக அவர் என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருந்தாள்.


"நானும், ஆதர்ஷனும் இந்தக் கல்யாணத்தை ரொம்ப நாள் தள்ளிப் போடாமல் சீக்கிரம் செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். சோ வர்ற மாசம் முதல் முகூர்த்தத்தில் ரொம்ப சிம்பிளாக் கல்யாணத்தை முடிச்சிட்டு, அதுக்குப் பிறகு கொஞ்ச நாள் கழிச்சு எல்லாரையும் இன்வைட் பண்ணி கிராண்டா ரிசப்ஷன் வைச்சிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்" என்று தன் முடிவைச் சொல்ல, தன்வி இப்போது என்ன நடந்தது என்று புரியாத நிலையில் மலங்க மலங்க முழித்துக் கொண்டு இருக்க, அவளின் அந்த நிலையைத் தன்னை மறந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷ்.


அந்த நேரம் வீரராகவன் சொன்ன செய்தியைக் கேட்டு கைதட்டி அவர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்த சில நல்ல உள்ளங்கள் ஆதர்ஷன் கையைப் பிடித்து வாழ்த்துத் தெரிவிக்க அப்போதுதான் அவனுக்கு தான் இருக்கும் இடமே நினைவு வந்தது. மானசீகமாகத் தன் தலையில் தட்டிக் கொண்டவன், அவர்கள் வாழ்த்தை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்ள, அனைவரும் தன்வியையும் வாழ்த்தி விட்டுச் சென்றனர்.


ஒருவழியாக அன்றைய கொண்டாட்டங்கள் இனிதே முடிய, தன்வி தான் எதுவும் புரியாத நிலையில் தவித்துக் கொண்டு இருந்தாள். 


வந்த விருந்தாளிகள் அனைவரும் சென்றுவிட, தாத்தாவும் கூட நிறைந்த மனதுடன் உறங்கச் சென்றிருந்தார்.


ஆதர்ஷ் தன் லேப்டாப் முன் அமர்ந்து ஆலனை வீடியோ காலில் அழைக்க, அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப் பட்டதும், திரையில் தெரிந்தனர் மூவரும். 


அவர்களிடம் இன்று வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டு, திருமண நாளையும் சொல்ல, எதிரில் இருந்தவர்கள் முகத்தில் தெரிந்த உணர்வுகளை அவதானித்தவனுக்கு மூவரின் மனநிலையும் தெளிவாகப் புரிந்தது.


"டோண்ட் வொரி..‌. எவ்ரி திங் வில் பீ ஆல்ரைட்‌. இதைத் தவிர எனக்கு வேற நல்ல ஆப்ஷன் தெரியல, ஆளாளுக்குப் பணக்காரன்னு தெரிஞ்சு ஆதர்ஷனை மயக்கிட்ட, அது இதுன்னு கண்டபடி பேசிட்டு இருக்காங்க. அதைக் கேட்டு இவ ரொம்ப அழறா… அதான் இந்த மாதிரிப் பண்ணேன்." என்றவன் ஆலனும் அவன் அருகில் இருந்தவர்களும் முறைத்துப் பார்க்க, அந்த முறைப்பின் பின்னால் மறைந்திருக்கும் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவனுக்கு அடுத்து என்ன பேசுவதென்று புரியாமல், "ஓகே, எனக்குத் தூக்கம் வருது. மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணதும் சொல்லறேன். பை பை" என்று அவசரமாகச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தவன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டான்.


இங்கு தன்வி அவள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக அந்த அறையின் நீள அகலத்தை அளந்து கொண்டு இருந்தாள்.


"பாவம் பாஸ்… ஏற்கனவே இந்தக் கல்யாணத்தில் அவருக்குச் சுத்தமா இஷ்டம் இல்ல. ஏதோ எனக்காக, தாத்தாவுக்காகச் சம்மதிச்சாரு… இப்ப என்னன்னா இந்தத் தாத்தா இவ்ளோ சீக்கிரம் மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாரு… அவருக்குக் கொஞ்சம் கூடத் தன்னை நிதானிச்சிக்க டைம் குடுக்காம இப்படிப் பண்ணிட்டாரே தாத்தா…" என்று வாய் விட்டுப் புலம்பியவளுக்குத் தெரியவில்லை, இதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவனே அவன் தான் என்று.


"அய்யோ.‌‌..! ஒரு வேளை, பாஸ் நான் தான் தாத்தாகிட்டச் சொல்லிக் கல்யாணத்தை சீக்கிரம் வைக்கச் சொன்னேன்னு நினைச்சிட்டா என்ன பண்றது‌.? கடவுளே…! ஏன் என்னை இப்படிப் போட்டு படுத்துற" என்று கடவுளைத் திட்டியவள், நேரத்தைக் கூடக் கவனிக்காமல் நேராக ஆதர்ஷ் அறைக்குச் சென்றாள்.


கதவு தட்டும் ஓசை வைத்தே வந்திருப்பது யார் என்று அறிந்து கொண்டவன், இதழ்களில் புன்முறுவலுடன் கதவைத் திறந்தான்.


"ஓய் குட்டிப் பாப்பா, என்ன இன்னும் தூக்கம் வரலியா?" என்று இயல்பாகக் கேட்டவன், அவள் கண்களைப் பார்க்க அதில் அத்தனை தவிப்பு.


"ஏய் என்னடி? என்னாச்சு உனக்கு? எதுவும் பிராப்ளமா?" என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டவன், "நீ முதல்ல உள்ள வா" என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து தன் மெத்தையில் அமர வைத்தவன், தண்ணீர் எடுத்து அவள் கையில் கொடுத்து, "முதல்ல தண்ணியக் குடி" என்று சொல்ல, அந்த நேரம் அது அவளுக்குத் தேவையாக இருக்க, தண்ணீர் பாட்டிலை வாங்கி மடமடவெனக் குடித்தவளுக்கு, அவசரமாகத் தண்ணீர் குடித்ததால் இருமல் வந்துவிட, அவள் தலையில் மெல்லமாகத் தட்டிய ஆதர்ஷ், "மெதுவாகக் குடி" என்றவனின் கையைப் பிடித்துக் கொண்டாள் தன்வி.


"பாஸ், நான் எதுவும் பண்ணல… தாத்தா எதுக்கு இப்படிச் செய்தார்னு எனக்கு சத்தியமாத் தெரியாது. எனக்கே இது ஷாக் தான், அப்ப உங்களுக்கு எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியும். நான் தாத்தாகிட்டப் பேசுறேன்." என்று படபடவெனப் பேசியவளுக்கு அவன் தன்னைப் புரிந்து கொண்டால் மட்டும் போதும் என்று அத்தனை தவிப்பு. அந்தத் தவிப்போடு அவன் முகம் பார்க்க, அவனோ அவள் பேசியதில் ஒரு வார்த்தை கூடப் புரியாமல் போனதில் குழப்பமாக அவளைப் பார்த்தான்.


அவன் அமைதி அவளுக்கு உள்ளுக்குள் பயத்தை விதைக்க, "பாஸ், நான் இவ்ளோ சொல்றேன், என்னை நம்ப மாட்டீங்களா? நிஜமாகவே எனக்கு எதுவும் தெரியாது பிராமிஸ்" என்று தன் தலைமீது கை வைத்தவளைச் சலிப்பாகப் பார்த்த ஆதர்ஷ், "அடியேய், முதல்ல மேட்டர் என்னன்னு சொல்லுடி..‌. அதைவிட்டு என்னை நம்பலயா கோபால்னு பழைய ஹீரோயின் மாதிரிப் பேசிட்டு இருக்க" என்று முறைக்க, அப்போது தான் தன்விக்கே அது உறைத்தது.


"ச்சீ சாரி பாஸ்.‌‌.. பதட்டத்தில் லூசு மாதிரிப் பேசிட்டு இருக்கேன்" என்று சொல்ல, "லூசு மாதிரி எல்லாம் இல்ல, நீ லூசே தான்டி." என்று சத்தமாகச் சொன்னவன், 'என் செல்ல லூசு' என்று செல்லமாகத் தன் மனதோடு சொல்லிக் கொண்டான்.


தன்வி இருந்த நிலையில் அவன் சொன்னது அவள் காதில் விழுந்தாலும் கருத்தில் பதியாமல் போக, அவள் நினைத்தை அவனிடம் சொன்னவள், "நிஜமாத் தாத்தாகிட்ட நான் எதுவும் சொல்லல பாஸ், இது அவரே எடுத்த முடிவு. தீடிர்னு அவர் அப்படிச் சொன்னதும் எனக்கும் ரொம்ப ஷாக் தான். எனக்கே அப்படின்னா அப்ப உங்களுக்கு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும். அதான் நாளைக்குக் காலையில நான் தாத்தாகிட்டப் பேசி மேரேஜ் டேட் கொஞ்சம் தள்ளி வைக்கச் சொல்லறேன்." என்றவளை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தான் ஆதர்ஷ்.


"பாஸ், பாஸ்…" என்று அவள் உலுக்கவும் நிகழ்வுக்கு வந்தவன், "தாத்தா சொன்ன டேட்ல இந்த மேரேஜ் நடக்குறதில் உனக்கு எதுவும் பிராப்ளம் இருக்கா தன்வி?" என்று அழுத்தமாகக் கேட்க அவனைப் புரியாமல் பார்த்தவள், "எனக்கு என்ன பிரச்சனை? அப்படி எதுவும் இல்ல. நான் உங்களுக்காகத் தான் டேட் தள்ளி வைக்க நினைக்கிறேன்" என்று தனக்காக யோசிப்பவளை இன்னும் இன்னும் பிடித்துத் தொலைத்தது அவனுக்கு.


இழுத்து மூச்சை உள்ளிழுத்து வெளியே ஊதியவன், "தாத்தாகிட்டச் சீக்கிரம் மேரேஜ் வைக்கச் சொன்னதே நான் தான் தன்வி. உன்னைக் கேக்காம, நான் இந்த முடிவை எடுத்தது தப்பு தான். நீ எனக்காக இவ்ளோ யோசிச்சுப் பேசிட்டு இருக்க… ஆனாப் பாரு, இது உன்னோட கல்யாணம். இதுல முடிவெடுக்க உனக்கு எல்லா ரைட்ஸும் உண்டு, பட் அதுபத்தி எதுவும் யோசிக்காம உன்கிட்ட ஒரு வார்த்தை கூடக் கேக்காம நான் பாட்டுக்கு மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்." என்றவன் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்து, "சாரிடி, ரொம்ப சாரி… இனிமே இப்படி ஒரு மிஸ்டேக் நடக்காது. ஐ ஆம் ரியலி வெரி சாரி" என்று மனதில் இருந்து கேட்டவனை இப்போது தன்விக்கும் கூட கொஞ்சம் ரொம்பவே பிடித்துத் தான் தொலைத்தது.


"நீங்களா தாத்தாகிட்ட அப்படி சொல்லச் சொன்னீங்க?" என்று கண்களை உருட்டி உருட்டிக் கேட்க, அவள் கோலிக்குண்டு கண்களை ரசித்தபடியே, "ம்ம்ம்" என்றான் மென்மையாக.


"அப்பாடி, இப்ப தான் எனக்கு மூச்சே வருது. எங்க நீங்க என்னைத் தப்பா நினைச்சிட்டீங்களோன்னு பயந்துட்டு வந்தேன்‌. இப்ப தான் நிம்மதியா இருக்கு" என்று தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டவளை, ஒரு ஆழப் பார்வை பார்த்தவன், "உனக்கு நிஜமாகவே இந்தக் கல்யாணம் ஓகே தானாடி?" என்று ஒரு மாதிரிக் குரலில் கேட்க, அவன் குரல் மாற்றத்தை உணர்ந்தவள், அவனைப் பார்த்து மென் சிரிப்புடன் மெல்ல ஆம் என்று தலையாட்டினாள்.


"உன் லைஃப் போயிடும்டி" என்றான் அழுத்தமாக.


"லைஃப்ல காதல்‍, கல்யாணம், செக்ஸ், குழந்தைகளையும் தாண்டி ஒண்ணு இருக்கு பாஸ், அதுதான் மனநிம்மதி. நான் வேற யாரைக் கல்யாணம் பண்ணாலும் எனக்கு மேல சொன்ன நாலும் கிடைக்கலாம். பட்  மனநிம்மதி." என்றவள் இல்லை என்பதுபோல் இடவலமாகத் தலையை ஆட்டி, "உங்களைக் கல்யாணம் பண்ணா மட்டும் தான் அந்த நிம்மதி எனக்குக் கிடைக்கும் பாஸ். ஏன்னா அந்த அளவுக்கு நீங்க என்மேல அன்பு வச்சிருக்கீங்க. அது ஒண்ணு போதும் எனக்கு. வாழ்க்கை முழுக்க என்னால தனியா வாழ முடியும்" என்றவளைப் பார்க்கவே அவனுக்கு அத்தனை பிரம்மிப்பாக இருந்தது. 


இதுவரை எதை நினைத்தும் கண் கலங்காதவன் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர்த் துளிகள் உருண்டு விழ, அதைப் பார்த்துப் பதறிய தன்வி, "அச்சோ பாஸ் ஏன் அழறீங்க?" என்றபடி அவன் கண்ணீரைத் துடைக்க, 


அவள் கைகளைத் தன் கன்னத்தோடு அழுத்திக் கொண்டவன்‍, "எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணுவியா?" என்று கேட்டான் யாசிப்பாக.


இதுவரை கம்பீரமாகப் பார்த்த தன் ஆதுவை முதன் முதலில் இப்படி ஒரு தவிப்பான மனநிலையில் பார்க்கிறாள். அது ஏனோ அவளது மனதைப் பிசைய இந்த நொடி அவன், தனது உயிரைக் கேட்டால் கூடத் தரும் மனநிலையில் இருந்தவள், ஆம் என்று தலையை ஆட்டி வைத்தாள்.


"அப்பப் ப்ராமிஸ் பண்ணு. நான் சாகும் வரை எதுக்காகவும், என்ன நடந்தாலும், யார் சொன்னாலும், நீ என்னை விட்டுப் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு. என்ன நடந்தாலும், எது எப்படி மாறினாலும், நீ என்னோட இருப்பேன்னு சத்தியம் பண்ணு" என்றவன் அவள் கையை எடுத்துத் தன் தலைமீது வைத்துக் கொள்ள, அவன் செயல்களில் அவளுக்கு லேசாகப் பயம் வந்தாலும், எதைப் பற்றியும் யோசிக்காமல், "நீங்களா சொல்லாம, என் கடைசி மூச்சு இருக்கும் வரை நானா உங்களை விட்டு எங்கயும் போக மாட்டேன்..‌. இது நான் உயிரா மதிக்கும் என் தாத்தா மேல சத்தியம்" என்று உறுதியாகச் சொல்ல, ஆதர்ஷனுக்கு அந்த ஒரு வார்த்தையே போதுமானதாக இருந்தது.


அந்த நேரம், நேரம் பனிரெண்டு என்று கடிகாரம் மணியடித்துச் சொல்ல, "சாரிடி ரொம்ப லேட் நைட் ஆகிடுச்சு. நீ போ, போய்த் தூங்கு" என்றவனைப் பார்த்து முடியாது என்று தலையை ஆட்டியவள், "இன்னைக்கு என்னமோ நீங்க சரியில்ல, நீங்க தூங்குங்க. அப்பதான் நான் போவேன், இல்லன்னா இந்த ரூம் விட்டு நான் போகமாட்டேன்." என்றவளைப் பார்த்துச் சிரித்தவன், 


"அடியேய், மேரேஜ் முன்னாடி நம்ம இப்படி ஒரே ரூம்ல இருந்தா அது தப்புடி… தாத்தா பாத்தாரு அவ்ளோதான், நீ முதல்ல கிளம்பு" என்று அவளை விரட்டினான்.


"அதெல்லாம் முடியாது, நீங்க தூங்குங்க. நான் போறேன்." என்று அவள் பிடிவாதமாக இருக்க, அவளின் அக்கறையில் அவன் மனம் சர்க்கரையாக இனித்தது‌.


"ம்ம்ம்… அப்ப நான் தூங்காமல் மேடம் இங்க இருந்து போக மாட்டீங்க அப்படித்தான?" என்று கேட்க, அவளும் வீம்பாக, "எஸ்" என்றாள்.


"ம்ம்ம்..‌. அப்ப நீ இங்க தான இருக்கப் போற, அப்…அப்போ…" என்று அவன் இழுக்க மூக்கைச் சுருக்கி அவனை முறைத்தவள், "என்ன அப்போ அப்போ?" என்றாள் சற்றுக் கோவமாக‌.


"நான் உன் மடியில் தலை வச்சுப் படுத்துக்கவாடி" என்று ஏக்கமாகக் கேட்க, தன்விக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவன் ஏதோ தன்னை வெறுப்பேற்றும்படி எதுவும் கேட்பான் என்று அவள் நினைத்திருக்க, அவன் கேட்ட கேள்வியில் அவளுக்கு உள்ளம் உருகி விட்டது.


மெல்ல அவன் அருகில் நகர்ந்தவள், அவன் தலையைப் பிடித்து தன் மடியில் வைத்துக் கொள்ள, ஆதர்ஷன் கண்கள் மெல்ல மூடிக் கொண்டது.


வெகு நேரம் உறங்கும் அவன் நெஞ்சில் தட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தவள், அவளையும் அறியாமல் அமர்ந்த வாக்கிலேயே அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.