நிஜம்‌ 32

 





நிஜம் 32


நடுராத்திரியில் வயிற்றுக்குள் ஏதோ அசைவு தெரிய… தூக்கத்திலேயே இதழ் மலர்ந்து சிரித்த த்வனிக்கு, லேசாக விழிப்பு தட்ட, அரைகுறையாக இமைகளை திறந்தவள் பார்வை, எப்போதும் விக்ரம் படுத்து தூங்கும், அவள் கட்டிலுக்கு எதிரில் இருந்த பெரிய கௌச்சில் (couch) விழ, அது காலியாக இருந்தது.


'எங்க போச்சு இந்த வாலில்லாத கொரங்கு' என்றவள் கவனம் மீண்டும் அவள் வாயிற்குள் மெதுவாக அசைந்த குழந்தை மேல் குவிய, அவள் இதழ்களில் மெல்லிய புன்னகை. 


அப்போது விக்ரமின்‌ குரல் மெதுவாக கேட்க, நன்றாக கண்களை திறந்த த்வனி, லேசாக தலையை குனிந்து பார்க்க, தரையில் அமர்ந்தபடி, அவளின் பெரிய‌ வாயிற்றை, கலங்கிய விழிகளுடன் பார்த்து அழுதுகொண்டு இருந்தான் விக்ரம்.


'இது எதுக்கு இந்த நேரத்தில் இப்டி 

உக்கார்ந்து அழுதுட்டு இருக்கு? அதும் என் வாயித்த பாத்து அழுது… ஒருவேளை நம்மால இப்டி புள்ளைய சுமக்க முடியாம‌‌ போச்சேன்னு, பொறாமையில அழுகுறானே?... இருக்கும் இருக்கும். இந்த லூசு யோசிக்கிறது எல்லாம் இப்டி தான் பயங்கரமா இருக்கும்' என்று நினைத்த த்வனி, அவனை திட்ட வாயெடுக்க, 


"அன்னைக்கு ஹாஸ்பிடல்ல, நீதான ரென்யா சொன்ன… த்வனிக்கு என்னை தவிர யாரும்‌ இல்ல, இப்ப நானும் இல்லாம போய்ட்டேன். அதனால நீதான் அவளா நல்லா பாத்துக்கணும், எனக்காக இத செய்னு நீதானா சொன்ன… நீ சொன்ன மாதிரியே நானும் இந்த ராட்சசிய‌ என்னால முடிஞ்ச வரை நல்லா தான் பாத்துக்குறேன். ஆனா… ஆனா…" என்றவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பிக்க, த்வனி புருவங்கள் யோசனையில் சுருங்க, அவன் பேசுவதை நன்கு கவனிக்க ஆரம்பித்தாள்.


"எனக்கு பயமா இருக்கு ரென்யா, எங்க மறுபடியும் எதுவும் தப்ப‌ நடந்திடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு… மனசு படபடன்னு அடிச்சிக்குது. இந்த ராட்சசி, பார்க்கதான் அவுன்னு தடால் புடால்னு கெத்த திரியுறா. ஆனா, இவ உள்ளுக்குள் ரொம்ப வீக் தெரியுமா… இவ உடம்பு ரொம்ப மோசமா இருக்காம் ரென்யா. இவ கண்டிஷன் சரியல்ல… டெலிவரி ரொம்ப கஷ்டமா இருக்கும்னு டாக்டர் சொல்றாங்க, அத கேக்கும் போது எனக்கு உள்ள உயிரே இல்ல தெரியுமா. எங்க மறுபடியும் நான்" என்றவன் அதற்குமேல் பேச முடியாமல், எங்கு சத்தம் போட்டு அழுதால் த்வனியின் உறக்கம் கெட்டு விடுமே என்று வாய்பொத்தி அழ, அவன் அழுவதையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் த்வனி.


'அப்ப அன்னைக்கு டாக்டர் என்னை வெளிய‌ அனுப்பிட்டு, இத தான் இவன்ட்ட சொல்லிட்டு இருந்தாங்களா… அதான் ஒரு நிமிஷம் கூட என்னை தனிய விடாம, யாராச்சும் என் கூடவே இருக்க மாதிரி செஞ்சிருக்கான். இதுக்காக தான் என்னோட ஆபீஸ்க்கும் வந்து என் கூடவே ஒட்டிட்டு திரிஞ்ஜானா... ' என்று எண்ணும் போதே, அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.


விக்ரம் நிமிர்ந்து த்வனியின் முகம்‌ பார்க்க, அவள் பட்டென்று கண்களை மூடிக்கொண்டாள்.


அவள் நன்றாக தூங்குகிறாள் என்று நினைத்த விக்ரம், அவள் புடவையை லேசாக விலக்கி அவள் வாயிற்றில் கைவைக்க, த்வனிக்கு தூக்கிவாரி போட்டது. உடனே அவனை திட்ட வாயெடுக்க நினைக்க, அவன் கைவைத்த அடுத்த நொடி, குழந்தை உள்ளே பலமாக எட்டி உதைத்தது.


'ஏன்டி குட்டி லயா, நான் இவனை திட்டக்கூடாதுனு என்னை எட்டி உதைகிறிய நீ' என்று மனதுக்குள் குழந்தையுடன் சண்டையிட்டவளுக்கு விக்ரம் அழுத முகத்தை பார்த்து திட்ட மனது வராமல், லேசாக திரும்பி படுப்பது போல் அசைய, விக்ரம் பட்டென தான் கையை எடுத்துக்கொண்டான்.


அவள் புடவையை சரி செய்து, அவளுக்கு வசதியாக இரண்டு தலையனைகளை அவளுக்கு அருகில் வைத்துவிட்டு, விலகி இருந்த போர்வையை அவளுக்கு போர்த்தி விட்டு, ஒரு நிமிடம் அமைதியாக உறங்கும் த்வனி முகத்தை ஆழந்து பார்த்தவன் என்ன நினைத்தனோ, மெல்ல அவள் நெற்றியில் மென்மையாக வருடி, மென்மையாக முத்தமிட்டான்.


"உனக்கு ஒன்னும் ஆகாதுடி ராட்சசி. இத சொல்றதுக்கு எனக்கு புடிக்கல தான். பட், உண்மை அதுதான். உனக்கு ரொம்ப நல்ல மனசுடி. சோ பாப்பாக்கும் உனக்கு எதுவும்‌‌ தப்ப‌ நடக்காதுனு நான் நம்புறேன்" என்றவன் அமைதியாக சென்று தன்னிடத்தில் படுத்துக்கொண்டான்.


அந்த வீட்டில் சௌந்தர்யாவின் கம்பீரமான குரல் கட்டளையாக ஒலிக்க, அவர் குரலுக்கு கட்டுப்பாடு அங்கிருந்த அனைவரும் பம்பரமாக சுற்றி வேலை செய்து கொண்டிருந்தார்.


இப்படி ஒரு விஷேசம் தான் வீட்டில் நடக்குமா என்ற பலவருட ஏக்கமும், எதிர்பார்ப்பும் இன்று அவர் கண்முன் நடக்க இருக்கிறது.


தன் மகனுக்கு திருமணம் என்ற ஒன்றே இல்லை என்று கலங்கி இருந்த சௌந்தர்யா இன்று தன் பேரப்பிள்ளையை வரவேற்பு ஆசையுடன் காத்திருக்கிறார். அதற்கு முதல் படியாக தன் மருமகளின் வளைகாப்பின் ஒவ்வொரு வேலையும் அவரே அருகில் நின்று கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்க, இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில், விக்ரம் வீட்டில் த்வனியின் வளைப்பூட்டு தொடங்க இருக்கிறது.


அனைத்து வேலைகளையும் சௌந்தர்யா பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட… வருண், "என் தங்கச்சியோட வளகாப்புல கண்டிப்பா என்னோட பங்கு இருந்தே தீரணும்" என்றவன் ஆபீஸூக்கு மட்டம் போட்டுவிட, மொத்த வேலையும் விக்ரம் தலையில் விழுந்தது. மாலை நான்கு மணி வரை வேலைகள் அவனை வைத்து செய்ய, அடித்து பிடித்து நாலரை மணிபோல் வீட்டில் வந்து விழுந்து விட்டான் விக்ரம். 


"டேய் என்னடா இது. மணி என்ன ஆகுது. ஆடி அசஞ்சு இப்ப‌ வர்ர… வரவர உனக்கு பொறுப்பே இல்லாம போச்சு விக்ரம்" என்ற‌ வருணை விக்ரம் கண்கள் சுருக்கி முறைக்க, வருண் கேவலமாக சிரித்தவன்,


"சரி சரி போடா. டைம் ஆகுது. ரூம்ல அம்மா உனக்கு ட்ரஸ் எடுத்து வச்சிருக்காங்க, போய் மாத்திட்டுவா. ஃபங்ஷன் தொடங்க நேரமாச்சு" என்ற வருண் இதற்கு மேல் அங்கு நின்றால் விக்ரம் உதைக்கும் உதையில்‌ இடுப்பு‌ எலும்பு முறிந்து விடும் என்று தெரிந்து தெறித்து ஓடி இருந்தான்.


விக்ரம் குளித்து முடித்து பட்டு வேட்டி சட்டையில் வெளியே வர, அவனை பார்த்த சௌந்தர்யா முகத்தில் ஒரு நிறைவான புன்னகை. இதுவரை அவர் விக்ரமை வேட்டி சட்டையில் பார்த்ததே இல்லை. அதற்க்காகவே சௌந்தர்யா அவனுக்காக பட்டு வேட்டி சட்டை வாங்கி வைத்தார். ஆனால், அதை விக்ரம் உடுத்துவானா, இல்லையா என்று அவர் அவன் ரூம்‌ கதவையே‌ பார்த்தபடி இருந்தவர் கண்கள், அவனை பார்த்தும் மகிழ்ச்சியில் நிறைந்தது.


விக்ரம் லேசாக அவரை நிமிர்ந்து பார்த்தவன், "டேய் வருண் எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸூம் ஓகே தானா?" என்று கேட்டபடியே வந்து, ஒரு நிமிடம் சௌந்தர்யா முன், அவன் உடை தெரியும்படி அந்த பக்கமும், இந்த பக்கமும் திரும்பி எதையோ தேடுவது போல் சுற்றி சுற்றி நடித்தவன் அங்கிருந்து சென்றான். 


அதற்குள் நல்ல நேரம் வந்துவிட, சௌந்தர்யா த்வனியை அழைத்துவர செல்ல, வருண் விக்ரமை பார்த்து முறைத்தான்.


"ஏன்டா இன்னும் அம்மாகிட்ட இப்டி ஃப்ஹெவ் பண்ற?" என்ற வருணை அமைதியாக பார்த்த விக்ரம்.


"அவங்க மேல தப்பு இல்லன்னு எனக்கு புரிஞ்சிடிச்சு தான். பட், அதனால நான் இழந்தது எல்லாம் சரின்னு ஆகிடாது இல்ல வருண். எனக்கு ரொம்ப முக்கியம தேவைப்பட்ட எந்த ஒரு சமயத்திலும் அவங்க என்கூட இல்லயே. அட்லீஸ்ட் அவங்க ஒன்னு ரெண்டு முறையாது எனக்கு அம்மா மட்டும் என்னோட இருந்திருந்தால் என்னோட லைஃப் வேற மாதிரி இருந்திருக்குமேன்ற ஒரு எண்ணம் என்னோட மூளையில ஓடிட்டே இருக்குடா. அப்டி இருக்க எங்க நான் அவங்ககிட்ட நெருங்கிப்போனா, ஒரு நேரம் இல்லாட்டி ஒரு நேரம், என்னையும் அறியாம அவங்களை காயப்படுத்திடுவேனோனு பயமா இருக்கு. அதான் நான் அவங்களை விட்டு வெலகியே இருக்கேன்‌. ஏற்கனவே நான் அவங்களை ரொம்ப காயப்படுத்திட்டேன். மறுபடியும் அப்டி எதுவும் நடக்குறதை நான் விரும்பல" என்றவன் அங்கிருந்து செல்ல, வருணுக்கு விக்ரமின் மனநிலை நன்றாக புரிந்தது.


இங்க வருண், "ஏய் ஷாலு, ஆரு… இன்னும் எவ்ளோ நேரம். டைம் ஆச்சு சீக்கிரம் த்வனி கூட்டிட்டு வாங்க" என்று கத்திக்கொண்டு இருக்க, 


"ஹலோ ஷாலு புருஷா... கொஞ்சம் பெருமைய இருங்க… பொண்ணை அலங்காரம் பண்றதுன்னா கொஞ்சம் முன்ன‌ பின்ன தான் ஆகும். அதுக்கு போய் இப்டி காட்டு கத்து கத்றீங்க. இப்பவே இப்டி அதிகாரம் பண்றீங்களே, உங்கள நம்பி எப்டி நாங்க எங்க பொண்ணைக் குடுக்குறது. ம்ம் யோசிக்கணும் யோசிக்கணும்" என்று ஆஷா வருணை வம்புக்கு இழுக்க, 


"அதானே… நீங்க சரிய சொன்னீங்க அண்ணி‌‌. இப்பவே இவரு என்ன இப்டி மெரட்டுறாரு. அப்ப கல்யாணம் முடிஞ்ச… கடவுளே என் நெலம என்னாக்குறது. அச்சோ அவசரப்பட்டு வீட்ல வேற‌ இவரு பத்தி சொல்லிட்டேன். அவங்களும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்களே… இப்ப‌ நான் என்ன பண்ணுவேன்" என்று ஷாலினி பொய்யாக சிணுங்க, ஆஷா அவள்‌ காதைப் பிடித்து திருகி,


"ஏய்‌ ஏய் ரொம்ப ஓவரா பேசாத… வருணை விட நல்ல பையன் உனக்கு வேற எங்கடி கிடைக்கும். அதெல்லாம் வருண் தம்பி தங்கக் கம்பி" என்று ஆஷா சேம் சைடு கோல் போட, 


"அண்ணி… என்ன வார்த்தை சொல்லிட்டீங்க" என்று அலறிய ஷாலினி, "சட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடிஞ்சிடலாம்.....!!!

நெஞ்சம் கிழிஞ்சிடுச்சி எங்கே முறையிடலாம்.....????" என்று‌ பாடியே நெஞ்சைபிடித்துக் கொள்ள, த்வனி வாயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான்.



"அப்டி சொல்லுங்க சிஸ்டர். என்னை விட்ட வேற‌ எந்த இளிச்சவாயன் இவளை காட்டுவான். " 


"ஹலோ ஹலோ. அதெல்லாம் ஒன்னு இல்ல. எங்க புள்ளைய அமெரிக்கல கேட்டாங்க, ஜப்பான்ல கேட்டாங்க, ஏன்‌ ரஷ்யால கூட கேட்டாங்க. நாங்க தான் அங்க இப்ப சண்ட‌ நடக்குதுன்னு வேணாம்னு சொல்லிட்டோம். அந்த கேப்ல அதிஷ்டம் உங்களுக்கு அடிக்க, எங்க ஷாலு உங்கள லவ் பண்ணிட்ட" என்று ஆஷா நன்றாக நீட்டி முழக்க,


"என்ன ஆஷூ டார்லிங் இன்னைக்கு செம்ம ஃபாம்ல இருக்கீங்கப் போல..., ஷாலு, வருண் ரெண்டு பேரையும் வச்சு செய்றீங்க" என்ற த்வனியின் முகம் சிரிப்பில் நிலவு போல் ஜொலித்தது.


ஆஷா அவள் கன்னத்தை தடவி நெட்டிமுறித்து, "ஆமா த்வனி… நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சொல்லுவாங்களே தலகால் புரியாத சந்தோஷம்னு இப்ப நான் அப்டி தான் இருக்கேன். உன்னை இப்டி சிரிச்ச மொகத்தோட, பூத்து மலர்ந்து நிறைஞ்சு நிக்குற‌ உன்னை பாக்கும்போது எனக்கு உள்ள அப்டி ஒரு நிம்மதிடி. அத என்னால வார்தையில சொல்லமுடியல… உன் வாழ்க்கையில் இப்டி ஒருநாள் வரணும்னு நான் வேண்டாத நாள் இல்ல தெரியுமா... அது இப்ப நடக்கும் போது எனக்கு எப்டி இருக்கு தெரியுமா… இதே மாதிரி உனக்கு நல்லபடிய புள்ள பொறக்கணும். நீயும் விக்ரமுக்கு எல்லாத்தையும் மறந்து ஒன்னா சந்தோஷமா இப்ப இருக்க மாதிரியே ஒருத்தர் கிட்ட ஒருத்தர் சண்ட போட்டாலும், எப்டி ஒருத்தர் மனசு புரிஞ்சு ஒருத்தர் நடந்துக்குறீங்களே, அதோ மாதிரி எப்பவும் புரிஞ்ச நல்லா அடிதடிய, ஆர்ப்பாட்டமா வாழணும்டி" என்ற ஆஷாவின் கண்கள் கலங்கியது.


"என்ன‌ அண்ணி...அடிதடிய குடும்பம் நடத்தணும்னு சொல்றீங்க?"


"ஆமாடி ஆரு. நீ கவன்சியா இல்லயா எனக்கு தெரியல. ஆனா, எனக்கு இவங்க ரெண்டு பேர் சண்டைய‌ பாக்கும் போது டாம் அண்ட் ஜெர்ரி தான் நெனப்புக்கு வரும். அவங்க எப்டி எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருந்தாலும், ஒருத்தரை விட்டு ஒருத்தர் இல்லயோ… அதே மாதிரி தான் இவங்களும். அதான் அப்டி சொன்னேன்."


"கரெக்ட் சிஸ்டர். இவங்க ரெண்டு பேரும் டாம் ஆன்ட் ஜெர்ரி தான். என்ன இதுல டாம் யாரு ஜெர்ரி யாருங்குறது தான் இன்னும் முடிவகல…" என்று வருண் கிண்டல் செய்ய…


"இப்ப எல்லாரும் என்கிட்ட வாங்கப்போறீங்க பாருங்க… முதல்ல உன்னை தான் நல்லா உதைக்கணும் ஆஷூ..‌. தேவையில்லாம பேசிட்ட, ஓய் வருண்… நீ டைமாச்சுனு என்னை கூப்ட தான வந்து அப்றம் என்ன‌ வெட்டிப் பேச்சு… போ முதல்ல வெளிய‌ போ… நான் வரேன்‌" என்றவள் வருணை காதை பிடித்து ரூமிற்கு வெளியே தள்ளிவிட்டாள்.


"சரி சரி சீக்கிரம் வா. டைமாச்சு" என்று வலிக்கும் காதை தடவியபடி சென்றான் வருண்.


விக்ரம் யாரிடமோ ஃபோனில் பேசியபடி எதேச்சையாக திரும்பிப் பார்த்தவன் விழிகள் அப்படியே அந்த காட்சியில் உறைந்த நின்றது.


ராயல் ப்ளூ கலர் பட்டுப்புடவை, அதற்கு பொருத்தமாக ராணி பிங்க் நிற ரவிக்கை, கழுத்துக்கு கொஞ்சம் கீழ் இருந்த கூந்தலை அழகாக கொண்டையாக போட்டிருக்க, அதை சுற்றி அடர்த்தியாக கோர்த்த மல்லிகைப்பூ சுற்றி இருந்தது. 


அவள் நெற்றி உச்சியில் வைத்திருந்த குங்குமம் தெளிவாக ‌தெரியாதபடி மறைத்திருந்த சின்ன நெத்திச்சுட்டி, அதற்கு கீழ் அளவான மெரூன் நிற வட்டப் பொட்டு, உதட்டில் பிங்க் நிறத்தில் லிப் கிளாஸ், அழகான அளவான நகைகள் போட்டிருந்தவள்‌ முகத்தில் விலைமதிப்பற்ற புன்னகையும் சேர்ந்து அலங்கரித்து இருக்க, தாய்மைக்கோ உண்டான தேஜஸ் அவள் முகத்தில் தங்கமாய் மிளிர, மதிய நேர இளம் வெயில் சூரியன் போல் அழகாக ஜொலித்தாள் த்வனி.


தன்‌ இரு கைகளை தன் பெரிய‌ வயிற்றின் ‌இரண்டு‌ பக்கம் அரண் போல் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு அடியையும் மெதுவாக எடுத்து வைத்து நடந்து வந்தவள் முகத்திலேயே விக்ரமின் பார்வை வேரூன்றி இருந்தது.


"என்ன இன்னேரம் அந்த கொரங்கு, ஓடி வந்து என்னை தோளைப்பிடிச்சிருக்கணுமே… எங்க ஆளைக் காணும்" என்று முனங்கிய, த்வனியின் கண்கள் சுழற்றி அவனை தேடிப் பார்க்க, அங்கு இவளையே ஒரு மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த விக்ரம் தெரிந்தான்.


அவனின் பார்வையில் கோவத்தில் புருவம் சுறுக்கிய த்வனி, பின் என்ன நினைத்தாலே அமைதியாக சென்று பூவால் அலங்காரம் செய்திருந்த சேரில் அமர்ந்தாள்.


த்வனியின் பார்வை அடிக்கடி விக்ரம் மீது படிய, விக்ரமோ இமைக்க கூட மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


'இவ அழகு தான், சொல்லப்போன காலேஜில இவ பின்னாடி சுத்தாத ஆளே இல்ல. என்னோட‌ ஃப்ரண்ஸ் எத்தனை பேர் ரென்யாகிட்ட‌ அவங்களுக்காக தூது போகச் சொல்லி கொஞ்சி என்கிட்ட தர்மா‌‌ அடி வாங்கி இருக்காங்க… அப்ப எல்லாம் உங்களுக்கு வேற‌ நல்ல மூஞ்சு கிடைக்கலயாடா லவ் பண்ணன்னு நானே கிண்டல் பண்ணி இருக்கேன். அப்ப எல்லாம் இவ எனக்கு அழக இல்ல, சுமாரான பொண்ண, ஏன் ஒரு பொண்ணக் கூட இவ என் கண்ணுக்கு தெரிஞ்சது இல்லயே. ஆனா, இப்ப‌ ஏன் இவ என் கண்ணுக்கு புதுசா தெரியுறா… அப்ப எப்டி இருந்தாலோ இப்பவும் இவ அப்டியே தான் இருக்க… ஆனா, எனக்கு மட்டும் ஏன் இன்னைக்கு இவள பாக்கும் போது மனசு ஒரு‌‌ மாதிரி பண்ணுது. மூச்சு கூட‌ சரியா‌ விடமுடியலயே. ஏன் இப்டி எல்லாம் நடக்குது. என்னாச்சு எனக்கு' என்று யோசித்தவன், குழம்பிப் போனாலும் அவன்‌ பார்வை‌‌ மட்டும் அவனை விட்டு‌ இம்மியும் அகலவில்லை.


பாதி நாள் அவளை எதிரியாகவும், பாதி நாள் அவன் வாழ்க்கையை கெடுத்த துரோகியாகவும், உண்மை தெரிந்த நாளில் இருந்து தன் உயிருக்கு உயிரான உயிரை சுமக்கும் தாயாக அவன் கண்களுக்கு தெரிந்த பெண் அவள்… 


ஆனால், இன்று, இந்த நொடி அவன் கண்களுக்கு தெரிந்த அவள் மட்டுமே… 


அவள் வெறும்‌ த்வனி. 


த்வனி… த்வனி… த்வனி மட்டுமே‌ அங்கு விக்ரம் கண்களுக்குத் தெரிந்தாள். 


தன்னுள் ஏற்படும் மாற்றங்கள் ஏன் என்று மட்டும் அல்ல, என்ன என்று கூட விக்ரமுக்கு விளங்கவில்லை. எதையும் யோசிக்க முடியாதபடி ‌அவன் சிந்தனை முழுவதிலும்‌ த்வனி மட்டுமே‌ நிறைந்திருந்தாள்.


அவன்‌ பாதி நாளின் பழியை மறந்து, மீதி நாட்களில் அவனின் சரிபாதியாக இருக்க த்வனி சம்மதிப்பாளா???


அவள் சம்மதித்தாலும் விக்ரம் அதை ஏற்பானா???